Advertisement

உப்புக் காற்று 


அத்தியாயம் 20 

அருள் குளித்துவிட்டு வருவதற்குள் ரோஜா சமைத்து முடித்திருந்தாள். அவளும் அவன் வருவதற்கு முன் எங்கே சமைக்கும் மன நிலையில் இருந்தாள். 

குளித்து விட்டு வந்தவன் சாப்பிட உட்காராமல், அவனது புவனா அத்தையை அழைத்தான். 

“ஹலோ அத்தை எப்படி இருக்கீங்க?” 

“என்ன டா அத்தை மேல திடீர் பாசம். சொல்லாம கல்யாணம் பண்ணிட்டு போனவன் தானே நீ…” என்ற புவனாவின் குரலில் கேலியே இருக்க… 

“ம்ம்… வேற வழி, உங்ககிட்ட இருந்து தப்பிக்கத்தான்.” என்றான் அருளும் கிண்டலாக. 

“இப்ப என்ன உன் தங்கச்சி உன்கிட்ட பேச மாட்டேன்னு சொல்லிட்டாளா… அதனால தான எனக்குப் போன் பண்ணி இருக்க.” 

“தெரியுது இல்ல… உங்களை மாதிரியே வாய் அவளுக்கு.” 

“டேய்… எங்க ரெண்டு பேருக்கும் பிறந்த வீட்டுப் பாசம் அதிகம் டா… என்னை மாதிரியே என் மருமகள். என் மருமகளை நீதான் டா பாடு படுத்திற… ஒழுங்கா உன் பொண்டாட்டியோட இங்க வந்து சேரும் வழியை பாரு.” 

“சரி… அவ சாப்பிட்டாளா?” 

“இல்லை… நேத்து நைட் சாப்பிட்டது.” 

“அவளை எப்படியாவது சாப்பிட வைங்க.” 

“அது எனக்குத் தெரியும், நீ முதல்ல இங்க கிளம்பி வரப் பாரு.” 

“சரி… வச்சிடுறேன்.” என்றவன், சாப்பிட உட்கார… ரோஜா அவனுக்கு உணவு பரிமாறினாள். 

நேற்றிலிருந்து அவளும் ஒன்றும் சாப்பிட்டிருக்க மாட்டாள் எனத் தெரியும், “நீயும் சாப்பிடு.” என்றவன், அவளோடு சேர்ந்து தான் உண்டான்.
அங்கே பவித்ராவை சாப்பிட வா என்றால் வர மாட்டாள் எனத் தெரியும். 
“காலையில இருந்து நானே எவ்வளவு வேலைப் பார்க்கிறது. பவித்ரா உங்க மாமா சாப்பிட வந்திட்டார். வந்து பரிமாறு.” எனக் குரல் கொடுத்தவர், என்னங்க உங்க மருமகளைச் சாப்பிட வைக்கிறது, உங்க பாடு எனச் சொல்லிவிட்டு சென்றார். 

பவித்ரா ஸ்ரீநிவாஸ்க்கு உணவு பரிமாற, “நீயும் சாப்பிடு மா.” என்றார். அவர் சொல்லைத் தட்ட முடியாது சாப்பிட உட்கார்ந்தாள். 

“நீ ஏன் உங்க அண்ணனை கெஞ்சிட்டு இருக்க… அப்படியே விட்டுடு, அவனுக்கு எல்லாம் பட்டத்தான் புத்தி வரும்.” என்றார். 
இதே இவர் பிள்ளைகளா இருந்தா, எப்படியும் போன்னு நினைப்பாரா என நினைத்தாலும், மாமனார் வேறு ஆயிற்ற, அதனால் பவித்ரா எதுவும் சொல்ல முடியாது அமைதியாக உண்டாள். 

தேவி தன் கணவரிடம் பவித்ரா வந்து சண்டை போட்டு விட்டு, சென்ற காரணத்தைச் சொல்ல… “பரத் கம்பெனிக்கு வர்றதுல உங்களுக்கு என்ன பிரச்சனை? அவன் இருக்கும் போது, நீங்க எவ்வளவு ப்ரீயா இருந்தீங்க. பிசினஸ் வளர்ந்திட்டே தான் போகுது. உங்களால தனியா எவ்வளவு நாள் பார்க்க முடியும்?” 

“அவன் எங்க அண்ணன் மாதிரி, நல்ல ஆளுமை இருக்கு. ஒரு உரையில ரெண்டு கத்தி இருக்க முடியமா?” 

“உங்க அண்ணன் இருக்கும்போது எப்படி இருந்தீங்க?” 

“அவர்தான் பார்த்தார்.” 

“இப்ப இவ்வளவு நாள் நீங்க பார்த்தீங்க. இனி அவன் பார்க்கட்டுமே…”
 
“இன்னைக்குப் பவித்ரா கேட்டதை, பரத் கேட்க எவ்வளவு நாள் ஆகும்? ஆனா பரத் கேட்கலை… விட்டு விலகி தான் இருக்கான். ஆனா நாளைக்கு அவனுக்கு எதாவது ஆச்சுன்னா…பழி நம்ம மேலத்தான் வரும்.” 

“நமக்கு ஏன் அந்தப் பாவம்?” 

“பரத்துக்கும் ராஜீவுக்கும் நல்லா ஒத்துப் போகுது. உங்களுக்கு முடியுற வர நீங்களும் பரத்தும் பாருங்க. பிறகு அவங்க ரெண்டு பேரும் பார்க்கட்டும்.”
“எத்தனை நாள் எல்லாம் நீங்களே தூக்கி சுமப்பீங்க. இத்தனை நாள் நாம என்ன அனுபவிச்சோம். மலரை கல்யாணம் பண்ணி கொடுத்திட்டா, நாமலும் நாலு இடம் போய் வரலாம். பரத் கம்பனியை பார்த்துப்பான், அந்தக் கவலையும் இல்லை.” 

“சரி… நீயே பரத்கிட்ட போன் செஞ்சு, அவனை இங்க வர சொல்லிடு.” 

“சரி நானே சொல்றேன்.” என்ற தேவி, சொன்னது போல அருளை அழைத்து, “நாங்க உன்னை இங்க இருந்து போகச் சொல்லையே பரத், நீயாத் தான் போன. ஆனா உன் தங்கை வந்து அந்தப் பேச்சு பேசுறா… நாங்க எதோ உன்னை ஏமாத்துற மாதிரி.”

“கம்பெனியில உனக்கும் பங்கு இருக்கு. அதை நாங்க இல்லைன்னு சொல்லலை.. ஒன்னாவே பார்த்துகிறதா, தனித்தனியா பிரிச்சிக்கலாமான்னு தான் யோசிச்சிட்டு இருந்தோம்.” 

“இப்ப சேர்ந்தே இருக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டோம். நீ வந்து பார்த்துக்கோ… உன் சித்தப்பா தான் சொல்ல சொன்னார் பா, நான் உன்கிட்ட சொல்லிட்டேன்.” 

“உன் மேல எனக்கு எந்தக் கோபமும் இல்லை. ஆனா உன் தங்கை மேல எனக்குப் பயங்கிற கோபம் தான். இத்தனை நாள் வளர்த்த எங்களைத் தூக்கி எரிஞ்சு பேசிட்டா…” என வேறு அவர் சொல்ல… அருளுக்குச் சங்கடமாக் போய்விட்டது. 

“அவ சின்னப் பொண்ணு தானே சித்தி, தெரியாம பேசிட்டா… நீங்க மனசுல வச்சுக்காதீங்க.” என்றான். 

“உடனே கோபம் போகுமா… பார்க்கலாம்.” என்றார். 

அடுத்து அருளை அழைத்த மாதவன், அவன் நலத்தை விசாரித்துவிட்டு, “உங்க தங்கை உடனே டிக்கெட் போடுன்னு நிக்கிறா… நான் டிக்கெட் பார்கிறேன்னு சொல்லி வச்சிருக்கேன். நீங்க அவகிட்ட பேசினீங்களா?” எனக் கேட்க,

“பேசினேன், ரொம்பக் கோபமா இருக்கா… இனிமே பேச மாட்டேன்னு சொல்லிட்டா…” எனச் சொல்ல…

“அவ அப்பா அம்மாவை இழந்தது போல… எங்கே உங்களையும் இழந்திடுவோமோன்னு ஒரு பயம் அவளுக்கு இருக்கு.”

“எனக்குப் புரியுது மாதவன். இப்பதான் கல்யாணம் ஆச்சு, நானும் என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டு தான் இருந்தேன்.”


“உங்க அளவுக்குப் பவித்ராவுக்குப் பொறுமை இல்லை. அவ எல்லோரையும் பேசிட்டா… அதனால்தான் அங்கே இருக்க முடியாது சொல்றா…”

“என் தங்கச்சி எனக்காகத் தானே பேசினா.. நான் அவ சார்பா மன்னிப்புக் கேட்கிறேன்.”

“இனி உங்க பாடு உங்க தங்கச்சி பாடு. ரெண்டு பேரும் பேசிட்டு, நான் எப்ப டிக்கெட் போடுறதுன்னு சொல்லுங்க.”

“சரி…”

அவன் வந்து விட்டது தெரிந்து, சாரதியும் கலையும் வேறு பதறிப் போய் அழைத்தனர். அருள் எல்லோரிடமும் பேசி முடித்த போது, மாலையாகி இருந்தது. இப்போது ரோஜா என்ன சொல்வாளோ என இருந்தது. 

ரோஜா ஹாலில் சுவற்றில் சாய்ந்து குத்துக்காலிட்டு உட்கார்ந்து இருந்தாள். அவள் எதிரே தரையில் மண்டியிட்டு அமர்ந்த அருள், “ரோஜா, நான் கடலுக்கே போகக் கூடாதுன்னு பவித்ரா சொல்லுறா. ஆனா உனக்கோ இங்க இருந்து வர விருப்பம் இல்லை. உங்க ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தருக்கு தான் நல்லவனா இருக்க முடியும். நான் யாருக்கு இருக்கட்டும் நீயே சொல்லு.” என்றான். 

“பவித்ரா ஏற்கனவே சொல்லிட்டா… இனிமே அவளுக்கும் எனக்கும் ஒன்னும் இல்லைன்னு. அவ அப்படிச் சொன்னாலும், என்னைப் பத்திய கவலை அவளுக்கு எப்பவுமே இருக்கும்.” 

“பவித்ரா சொல்றதுக்காக மட்டும் இல்லை. உன் அப்பாவோட விருப்பமும் அதுதான்.” 

“இன்னொரு காரணமும் இருக்கு. இதுக்கு முன்னாடி நான் ஒண்டிக் கட்டை. கடல் எனக்குப் பயத்தைத் தந்ததே இல்லை. எதாவது பிரச்சனை வந்தாக் கூடப் படகை நல்லபடியா கரை சேர்க்கணுமேன்னு தான் இருக்கும். ஆனா இந்த முறை அப்படி இல்லை. நாம எப்ப கரை சேருவோம்ன்னு இருந்தது. எனக்குப் பவித்ரா பத்தி கூடக் கவலை இல்லை. அவளுக்கு என்னைத் தவிர நிறையப் பேர் இருக்காங்க. ஆனா உன்னை நினைத்து தான் கவலை. நீதான் தனியா இருப்பியேன்னு கவலையா இருந்தது.” 

“அப்படியே நாம இங்க இருந்தாலும், நாம ரொம்பச் சிக்கனமா இருந்தா… ஐந்து வருஷத்தில ஒரு படகு வாங்கலாம். அப்பவும் இதே வாழ்க்கை, இதே போராட்டம் தான்.” 

“இனி நான் என்ன பண்ணனும் அப்படிங்கிறதை நீதான் சொல்லணும்.”

அருள் கேட்டு விட்டு ரோஜாவின் முகம் பார்க்க… ஏற்கனவே மதியத்தில் இருந்து அவன் போன் பேசியதை வைத்து, இதுதான் விஷயம் என அவளுக்குத் தெரியும். அதனால் முன்பே யோசித்து வைத்து இருந்தாள். 

“நான் உங்களை விரும்பும் போது, நீங்க மட்டும் தான் இருந்தீங்க. இப்ப அப்படியில்லை உங்களுக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு, தங்கை இருக்காங்க. நான் என்னுடைய விருப்பத்தை மட்டும் பார்க்க முடியாது. அவங்களுக்கும் உங்ககிட்ட உரிமை இருக்கு. நானே உங்களை முழுசா சொந்தம் கொண்டாட முடியாது.” 

“அதோட எனக்கும் நீங்கதான் முக்கியம், என்னோட விருப்பம் உங்களுக்கு ஆபத்தா முடிஞ்சா, என்னால என்னையே எப்பவும் மன்னிக்க முடியாது. அதனால நீங்க என்னைப் பத்தி யோசிக்காம, உங்களுக்கு என்ன விருப்பமோ அதைப் பண்ணுங்க. எனக்கு உங்களை விட எதுவுமே முக்கியம் இல்லை.” என்றாள் ரோஜா தெளிவாக. 

“நீ நிஜமாத்தான் சொல்றியா?” 

“ஆமாம். ஆனா உங்க வீட்டு ஆளுங்க என்னை ஏத்துக்குவாங்களா?” 

“நீ இல்லாம நான் அங்க வர மாட்டேன்னு அவங்களுக்குத் தெரியும். ஆனா உன்னோட நல்லா பேச கொஞ்ச நாட்கள் ஆகலாம். அதுவரை நாம பொருத்து தான் போகணும்.” 

“சண்டை போட ரொம்ப நேரம் ஆகாது. ஆனா அவங்க தான் பவித்ராவை இத்தனை நாள் பார்த்திட்டு இருந்திருக்காங்க. எனக்கு அந்த நன்றி உணர்ச்சி எப்பவுமே இருக்கும். ஏற்கனவே பவித்ரா ரொம்பப் பேசிட்டா… அதனால நீ எதுனாலும் என்கிட்டே சொல்லு, அவங்ககிட்ட சண்டை எதுவும் வேண்டாம். நான் பார்த்துகிறேன்.” 

“சரி… ஆனா உங்க தங்கை என்ன பேசினாங்க?” எனக் கேட்டதற்கு, அருள் நடந்ததைச் சொல்ல… அவள் அண்ணனுக்காகத்தானே இந்தப் பெண் எல்லோரையும் பகைத்துக் கொள்கிறாள் என நினைத்தாள்.  அவள் தன்னிடமும் அப்படி பேசவில்லை என்றால்.. தான் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்க மாட்டோம் என தோன்றியது. 

அருள் பவித்ராவை அழைக்க… அவள் எடுக்கவில்லை. சரி நேரில் போய்ச் சமாதானம் செய்து கொள்வோம் என நினைத்தவன், சாரதியை அழைத்துச் சொல்ல… 

“நான் கார் அனுப்புறேன். நீயும் உன் பொண்டாட்டியும், நாளைக்குக் காலையில தேவையான சாமான்களை எடுத்திட்டு வந்திடுங்க.” என்றார். 

அதன் பிறகு வேறு எதற்கும் நேரம் இல்லை. வீட்டு உரிமையாளரிடம் சொல்லி, நண்பர்களிடம் மனமே இல்லாமல் விடைபெற்று, தேவையான சாமான்களை மட்டும் எடுத்துக் கொண்டு, மிச்சத்தை ரோஜாவின் வீட்டில் வைத்துவிட்டு, இருவரும் படுக்கும் போது, நேரம் நள்ளிரவுக்கும் மேல்… 

ரோஜா உறங்காமல் விழித்துக் கொண்டு இருக்க, அவளை இதமாக அணைத்த அருள், “நான் இருக்கேன் உனக்கு. அதை மட்டும் மனசில வச்சுக்கோ.” என்றவன், அவளை அணைத்தபடி உறங்கிப் போனான். 

இருவரும் ரோஜாவின் வீட்டில் தான் இருந்தனர். சின்ன வயதில் இருந்து இருக்கும் இடத்தை விட்டு செல்வது எளிதானது அல்ல… ஆனால் காலம் காலமாகப் பெண்களின் நிலை அதுதான். நீ மட்டும் என்ன விதிவிலக்கா என அவளே அவளுக்குச் சொல்லிக் கொண்டாள். 

ஏழை எனத் தன்னை அலட்சியப்படுத்துவார்களா? அங்கே போய்த் தான் எப்படி இருக்கப் போகிறோம் என ஒரே குழப்பம். சென்ற முறை பவித்ரா வந்திருந்தபோது, ரோஜாவை மதித்துப் பேசவே இல்லை. மற்றவர்களும் அப்படி அலட்சியத்தை காட்டினால்… தன்னால் அங்கே இருக்க முடியுமா என மனதிற்குள் ரோஜாவிற்கு நிறையக் குழப்பம். 

எப்போது உறங்கினாள் என அவளுக்குத் தெரியாது. காலையில் சாரதி அனுப்பிய கார் வந்திருக்க… சாமான்களை எடுத்துக் கொண்டு சென்னையை நோக்கி பயணமானார்கள். 

வழியில் காலை உணவை முடித்துக் கொண்டு, பன்னிரண்டு மணி போல வீடு போய்ச் சேர்ந்தனர். இவர்கள் வருவதைப் பார்த்த ராஜீவ், சாவி கொண்டு வந்து கொடுக்க… அருள் ரோஜாவோடு தங்கள் வீட்டுக்குச் சென்றான். 

இவர்கள் வந்த சிறிது நேரத்திற்கு எல்லாம் சாரதியும் கலையும் வந்தனர். உடன் தேவியும் வந்தார். சம்ப்ரதாயதிற்கு நலம் விசாரித்து விட்டுத் தேவி சென்று விட… “வீடு எல்லாம் காலையில சுத்த படுத்தி வச்சாச்சு. மளிகை சாமான் எல்லாம் வாங்கி வைப்போம்ன்னு நினைச்சேன். ஆனா செல்வத்துக்கு உடம்பு முடியலை… அதுதான் கம்பெனிக்கு போயிட்டேன்.” என்றார் சாரதி. 

“பரவாயில்லை தாத்தா, நான் வாங்கிக்கிறேன். சித்தப்பாவுக்கு என்ன?” 

“நேத்துல இருந்து காய்ச்சல். வீட்ல ரெஸ்ட் எடுக்கிறான். நீங்க வர்றீங்கன்னு தான் கம்பெனியில இருந்து வந்தேன். அங்க கொஞ்சம் வேலை இருக்கு நான் போகணும்.” 

“நீங்க இருங்க தாத்தா. நான் வேணா போயிட்டு வரேன்.” என்ற அருள் ரோஜாவிடம் சொல்லிக் கொண்டு ,அவன் கம்பனிக்கு கிளம்ப… சாரதியும், கலையும் கதவை பூட்டிக்கோ மா என ரோஜாவிடம் சொல்லிவிட்டு அவர்கள் வீட்டிற்குச் சென்று விட்டனர். 

ரோஜாவுக்குச் செய்ய ஒன்றும் இல்லை. அதனால் அறையில் சென்று படுத்துக் கொண்டாள். 

மதியம் இரண்டு மணி ஆகியும் அருள் வரவில்லை. ரோஜா வேறு உணவு அருந்தாமல் இருக்கிறாளே எனக் கலைக்குக் கவலையாக இருக்க… தேவி ரோஜாவை அழைக்க மாட்டார் என உணர்ந்து, அவரே சென்று ரோஜாவை உணவு உன்ன அழைக்க… 

“இருக்கட்டும் பாட்டி, அவர் வரட்டும்.” என்றாள் ரோஜா.
கலைக்குத் தவிப்பாக இருக்க, புவனாவை அழைத்தவர், “அருள் வந்ததும் கம்பனிக்கு போயிட்டான். அந்தப் பெண் ரோஜா இன்னும் சாப்பிடலை… இந்தப் பவித்ரா இங்க வந்திருக்கக் கூடாது. வந்தா ஒத்தாசையா இருக்கும்.” எனச் சொல்ல… புவனா சென்று பவித்ராவிடம் சொல்ல… அவள் அசையவே இல்லை. 

இங்கே ரோஜா ஒரு பக்கம், அங்கே பவித்ரா ஒரு பக்கம் படுத்து தான் இருந்தனர். 

களைப்பின் காரணமாகச் சாரதி உறங்கி விட, அருள் எப்போது வருவான் என்பது போலக் கலை பார்த்துக் கொண்டு இருந்தார். 

Advertisement