Advertisement

உப்புக் காற்று 


அத்தியாயம் 19 


பவித்ராவுக்கு விசா கிடைக்கத் தாமதம் ஆனதால், மாதவன் மட்டும் முதலில் வெளிநாடு சென்று விட்டான். அங்கே சென்றதும், அவனை வேறு இடத்துக்குச் சில நாட்கள் வேலையின் காரணமாகச் செல்ல வேண்டும் எனச் சொல்ல.. பவித்ரா இங்கே வந்தாலும், அவள் தனியாக இருக்க நேரிடும் என நினைத்த மாதவன், அவளை அவன் வந்த பிறகே அமெரிக்கா வர சொன்னான். அதனால் பவித்ரா திருமணமாகி இரண்டு மாதங்கள் ஆனாபிறகும், இன்னும் வெளிநாடு செல்லவில்லை. 

அருள் இன்னும் சற்று பெரிய வீட்டிற்கு, நல்ல பகுதியில் குடி பெயர்ந்தான். அங்கே இருப்பவர்கள் சற்று மத்திய தர வகுப்பினர் என்பதால்… ரோஜா தைத்து கொடுக்கும் துணிக்கும் நல்ல பணம் கிடைத்தது. 

அன்று அருள் வெளியே செல்ல கிளம்ப, “கதவை சாத்திட்டு போங்க.” எனச் சொல்லிவிட்டு ரோஜா குளிக்கச் சென்றாள். குளியல் அறை வீட்டிற்குள்ளே இருந்ததால்…. ரோஜா குளித்துவிட்டு அறைக்குள் வந்துதான் உடை மாற்றுவாள். 

அன்றும் அப்படிக் குளித்து விட்டு அரைகுறையாகப் புடவையைச் சுற்றிக் கொண்டு வந்தவள், அருள் இன்னும் வெளியே செல்லாமல் இருப்பதைப் பார்த்து, திரும்பக் குளியல் அறைக்கே செல்ல… அவளைப் பார்த்துவிட்ட அருள், அவளைத் தடுத்து திரும்ப உள்ளேயே இழுத்து வந்தான். 

“நீங்க அப்பவே போறேன்னு சொன்னீங்க, இன்னும் போகலையா…” ரோஜா கேட்க, அருள் பதில் சொல்லாமல் அவளைப் பார்வையால் அளந்து கொண்டிருந்தான். 

கூந்தள் நீரில் நனைந்து விடக் கூடாது என்று தூக்கி கொண்டையாக முடிந்திருந்தாள். இருந்தாலும், முகத்தை ஒட்டியிருந்த கேசம் நீரால் நனைந்து இருக்க… சரியாகத் துவட்டாமலே உடை அணிந்து இருந்தால்… அணிந்திருந்த ரவிக்கையும் பாவடையும், அவள் உடலோடு ஒட்டி இருக்க… பட்டும் படாமல் அவள் சுற்றி இருந்த புடவையும் அவள் அங்க அழகை மறைக்க முடியாமல் காட்ட, அதிலேயே அருள் பாதி மயங்கி இருந்தான். 

கணவனின் பார்வை தந்த நாணத்தில், ரோஜாவின் முகம் சிவக்க, அதைக் கவனித்த கணவனோ, அங்கே மறுப்பு இல்லை என்றதும், மனைவியின் முக வடிவை விரலால் தீண்டியவன், இதழில் வந்து இளைப்பாற… அதன் பிறகு விரல்கள் செய்த வேலையை, அவன் இதழ்கள் செய்ய…  அது காலை வேளை என்பதெல்லாம் இருவருக்கும் நினைவு இல்லை. 
எதோ முத்தமிட போகிறான் என ரோஜா நினைத்திருக்க, இத்தனை நாள் காத்திருப்புக்கும் சேர்த்து மொத்தமாக அவளையே எடுத்துக் கொண்டான். 
எதிலோ ஆரம்பித்து எங்கோ முடிக்க.. முடிவில் எல்லாம் சுகமே… புது அனுபவம் தந்த மயக்கம், இன்னும் இன்னும் தேடலை அதிகரிக்க செய்ததே அன்றி குறையவே இல்லை. 

அன்று மட்டும் அல்ல அடுத்த மூன்று நாட்களும் அருள் கடலுக்கு செல்லவில்லை. 

“நீங்க என்ன ஒரே மாசத்தில பிள்ளை வர வச்சிட்டு தான் வெளியே போறதா இருக்கீங்களா…” ரோஜா கேட்க, 

“இந்நேரம் வந்திருக்காது…” என்ற அருளின் கேள்வியில், இன்னும் சிவந்து போனாள். 

வாழ்க்கை சிக்கல் இல்லாமல், இருவருக்கும் மகிழ்ச்சியாகச் சென்றது. 

“பவித்ரா, ஊருக்கு போற வரை இங்க வந்து இருக்கலாம் இல்ல… இப்ப இருக்க வீடு கூடப் பெரிசு தான்.” என அருள் அழைத்தும், பவித்ரா வருவதில் ஆர்வம் காட்டவில்லை. எது எப்படியோ தினமும் இரவு அண்ணனும் தங்கையும் பேசி விடுவார்கள். 

அருளை அங்கே வர வேண்டாம் என்று எல்லாம் யாரும் சொல்லவில்லை. சாரதியும், கலையும் அவனோடு பேசிக் கொண்டு தான் இருந்தனர். 

“உன் அப்பா அம்மா வீடு இருக்கு. உன்னை இங்க வர கூடாதுன்னு எல்லாம் யாரும் சொல்ல முடியாது. நீ எப்ப வேணா வரலாம்.” என்றுதான் சொல்லி இருந்தனர். 

சில நாட்கள் சென்று செல்வத்திடம் பேசிப்பார்க்கலாம் எனச் சாரதி இருந்தார். அவர் ஒத்து வரவில்லை என்றால்… அருளுக்குச் சொத்துக்களை விற்றோ அல்லது வேறு சொத்துக்களாகவோ தான் கொடுக்க வேண்டும் என நினைத்து இருந்தார். 

நாம் சென்று பவித்ராவை பார்த்து வரலாம் என்றால் ரோஜாவுக்கு இஷ்ட்டம் இல்லை. அருள் தன்னைத் திருமணம் செய்தது, அவன் வீட்டினருக்கு தான் பிடிக்கவில்லையே. அதனால் தான் ஏன் அங்குப் போக வேண்டும் என ரோஜா நினைத்தாள். 

“நீங்க மட்டும் வேணா போயிட்டு வாங்க…” என அவள் சொல்ல… அவளை விட்டு செல்ல மனமில்லாமல் அருளும் செல்லவில்லை. 

அன்று அருள் எப்போதும் அழைக்கும் நேரத்திற்கு அழைக்கவில்லை என்றதும், பவித்ரா அவனை அழைத்துப் பார்க்க, தொடர்ப்பு எல்லைக்கு வெளியே இருப்பதாகவே ஒவ்வொரு தடவையும் வர, அப்போது அழைத்த மாதவனிடம், பவித்ரா அதைச் சொல்லி புலம்ப, 

“அந்தப் பக்கம் திடிர்ன்னு புயல்னு நியூஸ்ல சொன்னாங்களே…” என மாதவன் சொல்ல… பவித்ரா உடனே செய்தி சேனலில் வைத்தாள்.
வேறு எங்கோ வரவேண்டிய புயல், நாகை பக்கம் திரும்பி இருக்க… மீனவர்களைக் கடலுக்குப் போக வேண்டாம் என எச்சரிக்கை செய்திருப்பதாகத் தெரிந்தது. 

பவித்ராவிடம் ரோஜாவின் எண் இருக்க, மனம் கேட்காமல் முதல் தடவையாக அவளை அழைத்தாள். 

“ஹலோ நான் பவித்ரா பேசுறேன்.” 

“சொல்லுங்க அண்ணி.” 

“அண்ணன் போன் லைன் போகலை. அங்க புயல்ன்னு சொன்னாங்களே, அண்ணன் எங்க இருக்கார்?” பவித்ரா பதட்டமாகக் கேட்க, பதில் சொல்வதற்குள் ரோஜாவுக்கு நாக்கு உலர்ந்து விட்டது. 

“கடலுக்குத் தான் போய் இருக்கிறார்.” என்றதும், 

“என்னது கடலுக்கா? இந்தப் புயல்லையா?” 

“அவர் காலையில போகும் போது புயல் இல்லை.” 

“என் அண்ணனுக்கு மட்டும் எதாவது ஆச்சுன்னா… அதுக்கு முதல் காரணம் நீதான் ரோஜா… நீதான் என் அண்ணனை திரும்ப இந்த வாழ்க்கைக்குத் தள்ளிட்ட….” 

“அவர் எங்களோட இருந்திருந்தா பத்திரமா, பாதுக்காப்பா இருந்திருப்பார். இப்ப அவர் இப்படிக் கஷ்ட்டபட நீதான் காரணம்.” என அழுகையின் ஊடே சொல்லிவிட்டு, பவித்ரா போன்னை வைத்து விட… ரோஜாவுக்கு இன்னும் கலக்கம் அதிகரித்தது. அருள் நல்லபடியாக வந்துவிட்டால் போதும் என்றானது. 

பவித்ரா சொல்வதில் தவறேதும் இல்லை. தானும் கொஞ்சம் விட்டுக் கொடுத்திருக்கலாம் என இப்போது தோன்றியது. அங்கே அவன் வீட்டுக்கு போக வர இருந்திருந்தால் கூட எல்லாம் மாறி இருக்கலாம். 

பவித்ரா வந்து சென்ற அன்று தான் அப்படிப் பேசியதில் இருந்துதான், அருளும் இங்கேயே இருக்கும் முடிவை எடுத்தான் என அவள் அறிவாள். 

அருள் விடியும் வரை வரவில்லை என்றதும், பவித்ராவுக்கு அதற்கு மேல் முடியவில்லை. தங்கள் வீட்டுக்கு கிளம்பி சென்றாள். 

காலையிலேயே வந்து நின்ற பவித்ராவை கலை ஆச்சர்யமாகப் பார்க்க…
“அவர் விருப்பத்துக்குக் கல்யாணம் பண்ணாருன்னு, நீங்க என் அண்ணனை இப்படியே விட்டுடுவீங்களா தாத்தா.” எனக் கேட்டவள், 

“நீங்க யாரு என் அண்ணனை கம்பெனிக்குள்ள வரக் கூடாதுன்னு சொல்ல? எங்க அப்பாவும் இந்தக் கம்பெனியில தான் இருந்தார். அப்ப எங்க அண்ணனுக்கு மட்டும் வர உரிமை இல்லையா?” எனத் தன் சித்தப்பா செல்வத்தைப் பார்த்துக் கேட்டவள், 

“இருங்க உங்க மேல எல்லாம் கேஸ் போடுறேன்.” என மிரட்டி விட்டு அவள் அங்கிருந்து செல்ல… தேவி இதைப் புவனாவுக்கு அழைத்துச் சொல்லி அழுதார். 

பவித்ரா வந்ததும் புவானா, “ நீ ஏன் இப்படிப் பேசின? கேட்க வேண்டிய உங்க அண்ணனே சும்மா இருக்கான். நீ ஏன் பேசிட்டு கெட்ட பேர் வாங்கிக்கிற?” 

“உன் சித்தி இத்தனை நாள் நாங்கதான் வளர்த்தோம், எங்க மேலையே கேஸ் போடுவேன் சொல்றா…” எனச் சொன்னதாகப் புவனா சொல்ல… 

“என் அண்ணனுக்காக நான் கேட்டேன் இதுல என்ன தப்பு?” எனப் பவித்ரா கேட்க, 

“ஆமாம் பெரிய அண்ணன், தங்கைக்குச் சொல்லாம கூடக் கல்யாணம் பண்ண அண்ணனுக்குத்தான் இவ வக்காலத்து வாங்கிறா?” என ரேஷ்மா கேலி செய்ய… 

ஏற்கனவே இருந்த கோபம், இப்போது ரேஷ்மா நக்கல் செய்ததும் இன்னும் அதிகமாக, “நீயும் தான் எங்க அண்ணன் அப்படி அவசரமா கல்யாணம் பண்ண காரணம். நீ வேற மனசுல ஆசையை வளர்த்துகிறன்னு தான், எங்க அண்ணன் அப்படி அவசரமா கல்யாணம் பண்ணார்.” எனப் பவித்ரா சொல்லியே விட… 

“ஏன் பேச மாட்ட? யாரும் இல்லையேன்னு போனா போகுதுன்னு உன்னை என் அண்ணனுக்குக் கல்யாணம் செய்ய எங்க அம்மா நினைச்சாங்க இல்ல… நீ இதுவும் பேசுவ, இன்னனும் பேசுவ.” என ரேஷ்மா சொல்ல… 

“ரேஷ்மா நீ உள்ளப் போ…” எனப் புவனா அவளை அதட்ட… 

“என்னது பாவம் பார்த்துக் கல்யாணம் பண்ணீங்களா?” பவித்ரா கேட்க, 

“அவ கிடக்கிறா… அப்படியெல்லாம் நினைச்சுக் கல்யாணம் பண்ணலை. நீ என் அண்ணன் பொண்ணு டா, என் அண்ணன் பொண்ணு என் வீட்டுக்கு மருமகளா வரணும்ன்னு தான் நான் நினைச்சேன்.” எனப் புவானா சொன்ன சமாதானம் எல்லாம் பவித்ராவிடம் எடுபடவில்லை. 

அறைக்குள் வந்து மாதவனை அழைத்தவள், அவனிடம் எல்லாவற்றையும் சொல்லி ஒரே அழுகை, “போனாப் போகுதுன்னு பாவம் பார்த்து என்னைக் கல்யாணம் பண்ணீங்களா?” என அவள் கேட்க, 

“அதுக்காக எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியுமா பவி. எனக்கு உன்னைப் பிடிச்சதுனாலதான் இந்தக் கல்யாணம் நடந்தது.” என்றான். 

“இன்னும் அண்ணன் வரலை… எனக்கு அதுதான் ரொம்ப டென்ஷன்னா இருக்கு.” எனப் பவித்ரா சொல்ல… மாதவன் புவனாவை அழைத்து, “பரத் எங்கன்னு தெரியலை மா… கடலுக்குப் போனவன் இன்னும் திரும்பலை.. அது தான் பவித்ரா டென்ஷனா இருக்கா.. ரேஷ்மாகிட்ட தயவு செஞ்சு எதுவும் பேச வேண்டாம்ன்னு சொல்லுங்க.” என்றதும்,
புவனா ரேஷ்மாவை அடக்கிவிட்டு, தேவியை அழைத்துப் பவித்ரா பேசியதற்குக் காரணம் சொன்னவர், “நீங்களா பார்த்து பண்ணுவீங்கன்னு தான் நானும் இத்தனை நாள் பேசலை… பரத்துக்கும் கம்பெனியில பங்கு இருக்கு இல்லையா… அது எப்படி நீங்க இல்லைன்னு சொல்வீங்க? பங்கு கொடுக்கலைனா… அவனுக்கு உரிய பங்கை வேற விதமா கொடுக்கணும் இல்ல…” 

“இதுக்கு முன்னாடி பவித்ரா இப்படிப் பேசி இருக்காளா? அவ அண்ணன் கடலுக்குப் போக, நீங்க எல்லாம் காரணம்ன்னு தான் பவித்ராவுக்கு உங்க மேல கோபம். அவனுக்குன்னு ஒரு தொழில் இருந்தா… கடலுக்குப் போக மாட்டான் இல்லையா…” 

“நான் இவர்கிட்ட சொல்றேன் அண்ணி.” 

“சரி சீக்கிரம் பார்த்து பண்ணுங்க.” எனப் புவானா வைத்தவர், பிறகு தனது பெற்றோரையும் அழைத்துப் பேசினார். 

அருள் வர மதியமாகி விட்டது. “புயல் எங்களை வேற பக்கம் தள்ளிட்டு போயிடுச்சு. காலையில தான் திரும்பி வர முடிஞ்சது.” என்றவன், மனைவியின் முகத்தைப் பார்த்து விட்டு, “ரொம்பப் பயந்திட்டியா?” என்றான். 

“என்னை விடுங்க, எனக்கு இதெல்லாம் பழகி போன விஷயம். உங்க தங்கச்சி தான் போன்ல அழுத மாதிரி இருந்தது.” எனவும், அருள் உடனே பவித்ராவை அழைத்தான். 

“நான் வந்துட்டேன் பவி.” 

“ரொம்பச் சந்தோஷம். நீ திரும்பக் கடலுக்குப் போ… இப்படி எதாவது ஆகும். நான் பயந்திட்டே இருக்கேன்.” 

“ஹே அதுதான் நான் வந்துட்டேன் இல்ல…” 

“உனக்குக் கொஞ்சம் கூட என்னோட மனசு படுற பாடு புரியவே இல்லை.” 

“ஆறு வயசில  நீ, அப்பா, அம்மா எல்லாம் என்னை விட்டுப் போனப்போ… இன்னைக்கு வந்திடுவீங்க நாளைக்கு வந்திடுவீங்கன்னு, வாசலை வாசலைப் பார்த்து ஏமாந்து போன வலி எனக்குத்தான் தெரியும்.” 

“நீ இருக்கிறது தெரியாம இருந்திருந்தா கூட… நான் நிம்மதியா இருந்திருப்பேன்.” 

“உனக்கு என்ன ஆகுமோன்னு பயந்திட்டே இருக்கிறதுக்கு அது பரவாயில்லை. நான் எப்பவும் போலத் தனியாவே இருந்திருக்கலாம்.” 

“உனக்கு என்னைப் பத்தி எல்லாம் ஒன்னும் இல்லை. உன் பொண்டாட்டிதான் தான் முக்கியம். அவளுக்காகத்தானே நீ திரும்ப அங்க போன…நானும் நீ இன்னைக்கு வந்திடுவ, நாளைக்கு வந்திடுவன்னு பார்த்து ஏமாந்து போனேன்.”
“அப்படி இல்லைடா… எனக்கு இந்தத் தொழில் தவிர வேற ஒன்னும் தெரியாது. புதுசா தொழில் ஆரம்பிக்க பணம் சேர்த்திட்டு பண்ணலாம்ன்னு இருந்தேன்.”
“வேற வழியே இல்லைனா, நீ சொல்றது சரின்னு சொல்லலாம். ஆனா உனக்கு அப்படி இல்லை. உனக்கு சொந்தமா கம்பெனி இருக்கு. அதுல உனக்கு எல்லா உரிமையும் இருக்கு.” 

“எனக்கு அதெல்லாம் தெரியும் பவி. என்னால கேட்க முடியாம இல்லை. ஆனா அவங்க உன்னை வளர்த்தவங்க, அவங்க சம்மதம் கேட்காம கல்யாணம் தான் பண்ணிகிட்டேன். அவங்ககிட்ட சொத்தும் கேட்டுக் கஷ்ட்டப்படுத்த விரும்பலை.” 

“அவங்க யாரும் கெட்டவங்களும் இல்லை. கண்டிப்பா எனக்குச் சேர வேண்டியது கொடுப்பாங்கன்னு எனக்குத் தெரியும்.” 
 “ஓ… நீ எல்லோருக்கும் நல்லவனா இருக்கனும்ன்னு நினைக்கிற. ஆனா  உனக்காக நான் இங்க எல்லார்கிட்டயும் சண்டை போட்டுட்டேன்.” 

“பவித்ரா நன்றி கெட்டவ ஆகிட்டா… நான் கெட்டவளாவே இருந்திட்டு போறேன். நீ நல்லவனா இரு.”
பவித்ரா பேசப்பேச.. அருளின் கண்கள் கண்ணீரை சிந்த, அது ரோஜாவுக்கு தெரியாமல் திரும்பி நின்று, பெரு விரலால் துடைத்தபடி தான் இருந்தான்.
“என் அண்ணன் ஏழையா இருக்கிறது எனக்குப் பிரச்சனையே இல்லை. ஆனா நல்லபடியா இருக்கனும்ன்னு நினைச்சேன். அது தப்பா?” 

“அன்னைக்கு அந்தக் கல்யாணத்துல எனக்கு அப்படி வெளிய சாப்பிட்டுப் பழக்கம் இல்லை. அதனாலதான் நான் சாப்பிடலை… உன் வீட்டுக்கு வந்த போது, சாப்பிட மாட்டேன்னு எதாவது சொன்னேனா…” 

“நான் உன்கிட்ட தள்ளி இருந்ததுக்குக் காரணமே… நீ அங்கயே இருந்திட கூடாதுன்னு தான்.” 

அருளுக்குத் தங்கையின் பேச்சு மனதை அடைக்க… “பவித்ரா ப்ளீஸ், நீ இவ்வளவு எல்லாம் விளக்க வேண்டாம் டா… அது எனக்குத் தெரியும். என் வசதி இல்லை. என் வேலைதான் உனக்குப் பதட்டத்தைக் கொடுக்குதுன்னு எனக்குத் தெரியும்.” என்றான். 

“தெரிஞ்சும் நீ என்ன பண்ண? உனக்கு என் மேல அவ்வளவு தான் பாசம்.” 

“விடு, இனி உன்னை மாதிரியே நானும் இருக்கேன்.” 

“நான் நாளைக்கு அமெரிக்கா போய்டுவேன். நீ சந்தோஷமா இரு.” 

“பவி, பவி மா, ஏன் டா இப்படிப் பேசுற? அண்ணனை பார்க்காம போவியா நீ?” 
 “என்னை இன்னும் மோசமா பேச வைக்காத. என்னைத் தயவு செஞ்சு இப்படியே விட்டுடு. எனக்கு இனிமே உன்னைப் பத்தி எதுவுமே தெரிய வேண்டாம்.” 

“நீ உன் பொண்டாட்டி போதும்ன்னு நினைக்கிறது போல… நானும் என் புருஷன் போதும்ன்னு இருந்துக்கிறேன்… சரியா…” என்றவள், போன்னை வைத்த பிறகும் வெகு நேரம் அழுதாள். 

கண்கள் சிவந்து கலங்கி போய் நின்ற கணவனை ரோஜா கவலையாகப் பார்த்தாள். 

“நான் குளிச்சிட்டு வரேன்.” என அருள் செல்ல,  
“என்ன சொன்னாங்க உங்க தங்கச்சி.” என ரோஜாவே கேட்க, 
“ரொம்ப பயந்திட்டா போல…” என்றான் சமாளிக்கும் விதமாக.
தன்னையே அப்படி காய்ச்சியவள், அவள் அண்ணனை சும்மாவா விட்டிருப்பாள் என ரோஜாவுக்கா புரியாது. ஆனால் அவன் தங்கையை விட்டுக் கொடுத்தும் பேச மாட்டான் என தெரியும். அதனால் வேறு எதுவும் கேட்காமல் வேலையை பார்க்க சென்றாள்.
 

Advertisement