Advertisement

உப்புக் காற்று 


அத்தியாயம் 17 


ரோஜாவின் மனநிலை கருதி திருமணத்திற்குப் பிறகு வரவேற்பு போல எல்லாம் நிற்கவில்லை. சர்ச்சில் திருமணம் முடிந்து, அங்கே மட்டும் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, மதிய உணவை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டனர். 

ரோஜாவும் அவள் அப்பாவை நினைத்துக் கண்கள் கலங்கியபடி தான் இருந்தாள். 

“உன்னை நான் ரொம்பக் கஷ்ட்டபடுத்துறேன் இல்ல… எனக்கு வேற வழி இல்லை ரோஜா புரிஞ்சிக்கோ….” அருள் சொன்ன போது, “நான் இப்ப ஒன்னும் சொல்லலையே… நீங்க ஏன் வீணா கஷ்ட்டப்படுத்திகிறீங்க? நான் நல்லத்தான் இருக்கேன்.” என்றாள் பதிலுக்கு. 

இருவரும் அருள் வீட்டில் இருந்தனர். இரவு உணவு எடுத்து வருகிறேன் என்ற ஸ்டெல்லாவிடம் மறுத்து இருந்தனர். 

மதிய திருமண விருந்தே மிஞ்சி இருந்தது. ஆனால் அருள் அதை மற்றவர்களைப் பகிர்ந்து எடுத்துக்கொள்ளச் சொல்லி இருந்தான். அங்கிருந்தவர்களும் சந்தோஷமாக எடுத்துக் கொண்டு சென்றிருந்தனர். 

தங்கை திருமணத்தில் கவனித்து இருந்தான். விதவிதமாக அத்தனை விதமான இனிப்பு மட்டும் கார வகைகள் இலையில் வைக்க… ஆனால் நிறையப் பேர் அப்படியே வைத்து வீணாக்கிவிட்டுச் செல்வதைத்தான் பார்த்தான்.
 
வேண்டாம் என்றால் முதலிலேயே சொல்லிவிட வேண்டும். அவர்கள் இலையில வைத்து வீணாக்குவதைப் பார்க்க, மனதிற்குக் கஷ்ட்டமாக இருந்தது. 

நிறையப் பேருக்கு இந்த அலட்சியம் உண்டு. திருமணத்தில் என்றாலும் சரி, வெளியே ஹோட்டலுக்குச் சென்றாலும் சரி, உணவை மிச்சம் வைப்பது ஒரு விஷயமே இல்லை அவர்களுக்கு. ஒருவேளை உணவுக்குக் கூட வழியில்லாமல் இன்னும் எத்தனையோ பேர் இருக்க… உணவை வீணாக்குவதும் குற்றமே. 

உணவின் அருமையை உணர ஏழையாக இருக்க வேண்டும் என்றில்லை… ஒரு புயலோ… நில நடுக்கமோ போதும். பெரிய மாளிகையில் இருப்பவனும் அப்போது உணவுக்காக வரிசையில்தான் நிற்க வேண்டியது வரும். அந்த நேரம் உணவின் அருமை, பசியின் கொடுமை எல்லாம் புரியும். 

இயற்கைக்கு முன்னால் மனிதர்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை…. இயற்கை நம்மை விட்டு வைக்கும் வரை தான் இந்த ஆட்டம் எல்லாம். இந்த உலகில் எவனும் நிரந்தரப் பணக்காரனும் இல்லை, ஏழையும் இல்லை. இதைப் புரிந்து கொண்டவர்களும் இருக்கிறார்கள். 

இந்த எளிமையான திருமணமே ரோஜாவுக்குப் பெரிய கனவுதான். அதைத் தன் தந்தை இருந்து பார்க்கவில்லையே என்ற வருத்தம் அவள் நெஞ்சு நிறைய இருந்தது. அவருடைய சம்மதத்துக்காகத்தானே வெகுநாட்கள் காத்திருந்தனர். 

ரோஜா மனம் சரியில்லாமல் இருப்பதைப் பார்த்த அருள், அவன் சமைக்கச் செல்ல.. அவனைத் தடுத்தவள், அவளே சமைக்க… இருவரும் சீக்கிரமே உண்டு, உறங்கியும் விட்டனர். வெகு நாட்கள் கழித்து நல்ல உறக்கம் இருவருக்கும். மனதிற்குள் ஆயிரம் வருத்தங்கள் இருந்தாலும், அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டது என்பதே பெரிய அறுதல்… மற்றவரின் அருகாமை தந்த நிம்மதியில்.. இருவருமே உறங்கி விட்டனர். 

அருள் காலையே எழுந்து கடற்கரைக்கு வந்திருந்தான். தன் திருமணத்தைப் பற்றி எப்படி வீட்டினருக்கு சொல்வது என அவன் யோசித்துக் கொண்டு இருக்க…. அவனின் தாத்தா சாரதியே கைப்பேசியில் அழைத்து விட்டார். 

“பாட்டிக்கு உடம்பு சரியில்லை. உன்னைத் தேடுறா….. சீக்கிரம் வந்திடேன்.” என்றார் நயமாக. 

இப்படியெல்லாம் வரும் என அருள் அறியவதவன் அல்ல…. அவனிடத்தில் ஒரு கசப்பான புன்னகை தோன்றியது. 

“தாத்தா, இங்க ஏற்கனவே நிச்சயமான பெண்ணோட, நேத்து எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு.” என்றான் மறையாது. 

அருள் சொன்னதைக் கேட்டதும் சாரதிக்கு அப்படியொரு அதிர்ச்சி. அன்று தாங்கள் சொன்ன போது… அருள் அமைதியாக இருந்ததே அவருக்குச் சந்தேகமாகத்தான் இருந்தது. ஆனால் அவன் இவ்வளவு வேகமாகத் திருமணமே முடிப்பான் என அவர் எதிர்ப்பார்க்கவில்லை. 

“ஏன் பரத் இப்படிப் பண்ண?” 

“நீங்க எல்லாம் என்னைப் பரத்தா மட்டும் தான் பார்க்கிறீங்க. நான் அருளா இருந்ததை மறந்துடீங்க.” 

“நீங்க எங்களைப் பிரிச்சிடுவீங்களோன்னு பயத்தில நான் இப்படி அவசரமா கல்யாணம் பண்ணலை…” 

“என்னை யாரும் அப்படிப் பணிய வைக்கவும் முடியாது.” 

“இந்தக் கல்யாணத்தைப் பத்தி நான் பேசி, நீங்க மறுத்து, அது நமக்குள்ள விரிசலைத் தான் அதிகமாகும். நான் கல்யாணத்துக்குக் கேட்டு நீங்க சம்மதிக்கலைன்னா, அது எனக்கு வருத்தம். நான் உங்க பேச்சை மீறி கல்யாணம் பண்ணா, அது உங்களுக்கு வருத்தம். அதுதான் நான் யார்கிட்டையும் சொல்லலை… பவித்ரா கிட்ட கூடச் சொல்லலை.” 

“நான்தான் விரும்பி ரோஜாவை பெண் கேட்டேன். இப்ப நான் அவளையே கல்யாணம் பண்ணிகிட்டேன்.” 

“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை…..” சாரதி சொல்ல… 

“எனக்கு உங்க நிலைமை புரியுது தாத்தா. என்னைப் பத்தி கவலைப்படாதீங்க. பவித்ராவை எப்பவும் போலப் பார்த்துக்கோங்க. நான் அங்க இருந்து எதுவும் எதிர்பார்கலை…” என்றான் அருள். 

அருளோடு பேசி வைத்துவிட்டு வைத்த சாரதி யோசனையில் இருந்தார். தங்களால் அவனது திருமணத்தைக் கண்டிப்பாகச் செய்து வைத்திருக்க முடியாது. ஆனால் இனி அவனைத் தங்கள் குடும்பத்தோடு இணைப்பது பெரும் சிக்கலாக இருக்கும் எனத் தோன்றியது. தன் காலம் இருக்கும் போதே, அவனை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என நினைத்து இருந்தார். 

இப்போது எதுவும் உடனே ஆகப்போவது இல்லை. சில நாட்கள் ஆறப்போடுவோம் என நினைத்துக் கொண்டார். ஆனால் வீட்டினரிடம் உடனே சொல்லிவிட்டார். 

கலை கவலையாக இருக்க.. செல்வம் தான் தாம் தூம் எனக் குதித்தார். 

“அவன் என்னவோ பண்ணட்டும் எனக்கு அதைப் பத்தி அக்கறை இல்லை. நீங்க உங்க பேரனுக்கு என்ன வேணா செஞ்சுக்கோங்க. ஆனா அவன் என் கம்பெனிகுள்ள வரக் கூடாது.” 

கணவருக்குத் தேவியும் ஒத்து ஊதினர். “நாங்க எங்க பிள்ளைகளுக்கு எப்படிப் பெரிய இடத்தில மாப்பிள்ளை பார்க்கிறது. சம்பந்தம் பண்ற இடத்தில… எங்களைத் தானே மட்டமா பார்ப்பாங்க.” என்றார். 

அங்கே பவித்ராவின் புகுந்த வீட்டினருக்கும் தேவி உடனே அழைத்துச் சொல்லி விட… எல்லோருக்குமே அதிர்ச்சி. ஆனால் மாதவன் சாரதியை அழைத்து நடந்ததைக் கேட்டுக் கொண்டான். 

“பார்த்தியா உன் அண்ணன் மகன் செஞ்ச காரியத்தை. அவனை நீங்க எல்லாம் எவ்வளவு உசத்தியா பார்த்தீங்க. ஆனா அவன் என்ன காரியம் பண்ணி இருக்கான்.” என்றார் ஸ்ரீனி. 

அண்ணன் மகன் இப்படிச் செய்வான் எனப் புவனாவும் நினைக்கவில்லை. மகள் மனதில் வேறு ஆசை வளர்த்துவிட்டோமே எனத் தவித்துப் போனார். 

ரேஷ்மாவோ கொதித்துப் போய் இருந்தாள். அவன் எதோ தான் பேசியதால் தான் திருமணதிற்கு மறுக்கிறான் என நினைத்துக் கொண்டிருந்தாள். இன்னொருத்தியை காதலித்தவனிடம் தான் மனதை பறிகொடுத்தோம் என்பதே அவளுக்குக் கேவலமாக இருந்தது. 

அதுவும் அந்தக் குப்பத்து பெண்ணிற்காகத் தன்னைத் தூக்கி எறிவதற்கு அவனுக்கு எவ்வளவு திமிர் என நினைத்தவளுக்கு, தான் எதிலோ தோற்று போன உணர்வு. ஆனால் அதை வெளிக்காட்டினால், தான் அல்லவா மற்றவர்களின் கேலி பார்வைக்கு ஆளாவோம் என நினைத்தவள்,
“அந்தக் குப்பத்து புத்தி அவனுக்குப் போகலை…உங்களுக்காகத்தான் அவனைக் கல்யாணம் பண்ண சரின்னு சொன்னேன். நல்லவேளை நான் தப்பிச்சேன்.” என்றாள். 

பவித்ராவுக்குத்தான் மிகுந்த வருத்தம், அதோடு தன்னை இந்த நிலையில் நிறுத்திய அண்ணன் மீது மிகுந்த கோபமும் கூட… 

“இனி அவனுக்கும் நம்ம குடும்பத்துக்கும் எந்தச் சம்பந்ததும் இல்லை.” என ரேஷ்மா சொல்ல.. அதை ஸ்ரீநிவாஸ் ஆமோதிக்க… பவித்ரா பயந்து போனாள். ஆனால் மாதவன் அப்படி விடவில்லை. 

“பரத் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னனா… நீங்களா அவனைக் கேட்காம முடிவு பண்ணி, நிச்சயம் வரை போனீங்க, அப்பவும் அவன் வேண்டாம்ன்னு விலகி போனானா இல்லையா?” 

“இத்தனை நாள் அவன் தனியா இருந்திருக்கான், எல்லாத்தையும் தனியா தான் சமாளிச்சு வந்திருக்கான். அவன் விஷயத்துல முடிவு எடுக்க நீங்க எல்லாம் முதல்ல யாரு?” 

“நீ சொல்றது எல்லாம் சரி டா… ஆனா நம்மகிட்ட முன்னாடியே சொல்லி இருக்கலாம் இல்ல…” புவனா சொல்ல… 

“அண்ணன் சொன்னாங்க.” என்ற பவித்ரா…அன்று பாட்டி தாத்தாவை வைத்துக் கொண்டு, அருள் பேசியதை சொன்னாள். 

“பார்த்தீங்களா…” என்ற மாதவன், ரேஷ்மாவை விட்டு விளசினான். 

“உனக்கு அருளை எத்தனை நாள் தெரியும்? ஆறு மாசமா தெரியுமா… அதுக்குள்ள இந்தக் குதி குதிக்கிற.. இத்தனைக்கும் அவன் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு எதுவும் சொல்லலை…” 

“அதே அவன் இடத்தில இருந்து யோசிச்சு பாரு. மூன்னு வருஷமா இந்தப் பெண் தான் மனைவின்னு இருந்தவன்கிட்ட போய் எல்லாத்தையும் விட்டுடு… அந்தப் பெண்ணுக்குப் பணம் கொடுக்கலாம் சொன்னா… அவன் வேற என்ன பண்ணுவான்?” 

“அவன் இந்த முடிவு எடுக்க நீங்க எல்லாம் தான் காரணம்.” 

“ரேஷ்மா, உனக்குப் பரத்தோட பேச விருப்பம் இல்லையா பேசாத… மத்தவங்க என்ன பண்ணனும்ன்னு எல்லாம் நீ சொல்லக் கூடாது. அவன் என் பொண்டாட்டிக்கு அண்ணன். நான் அந்த மரியாதையை அவனுக்கு எப்பவும் கொடுப்பேன்.” என்றவன், மனைவியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.
பவித்ரா அன்று முழுவதும் அழுதபடி இருந்தாள். அருள் அவளை அழைத்த போதெல்லாம் கைபேசியை எடுக்காமல் இருந்தாள். 

“பவித்ரா, உங்க அண்ணன் உன்கிட்ட கூடச் சொல்லாம கல்யாணம் பண்ற அளவுக்கு நீயும் அவரைத் தள்ளி இருக்க.” என்ற கணவனைப் பார்த்தவள், 

“எனக்கு வேற வழி இருக்கா… எங்க அப்பா அம்மா இல்லை. நான் இத்தனை நாள் அவங்களை அண்டித் தான் வாழ்ந்திருக்கேன். நான் அவங்களை எப்படிப் பகைச்சுக்க முடியும்? அப்படிப் பண்ணா நான் நன்றி இல்லாதவளா ஆகிட மாட்டேனா…” என்றாள்.

“எங்க அண்ணா அங்க பிறக்கலை… சந்தர்ப்ப சூழ்நிலையால தான் அங்க இருந்தார். அதோட எங்க அண்ணாகிட்ட படிப்பு இல்லை, நல்ல வேலையும் இல்லை. நான் அவர்கிட்ட இருந்து எதுவும் எதிர்பார்க்கலை… ஆனா அவர் எதிர்காலம் நல்லா இருக்கனும்ன்னு நினைச்சேன்.” 

“தாத்தா, சித்தப்பாவோட இருந்தா… அண்ணன் எப்படியும் முன்னுக்கு வந்திடுவார். இப்ப இதுதான் சாக்குன்னு எங்க அண்ணனை எல்லோரும் விலக்கி தானே வைப்பாங்க.” 

“எங்க அண்ணன் நல்லா இருக்கனும்ன்னு நினைச்சு தான், நான் அவருக்குச் சப்போர்ட் பண்ணலை… இப்ப சொல்லுங்க நான் பண்ணது தப்பா?” 

மாதவனுக்குப் பவித்ராவின் நிலையும் புரிந்தது. அவள் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. 

“பவித்ரா, நடந்தது நடந்திடுச்சு. யார் வேணா அவரை விலக்கி வைக்கட்டும். ஆனா நாம அப்படி இருக்க வேண்டாம். நாம அவருக்குச் சப்போர்ட் பண்ணுவோம்.” 

“நீ உங்க அண்ணனை விட்டுக் கொடுக்கக் கூடாது பவி. நாம நாளைக்குப் போய் உங்க அண்ணனை பார்த்திட்டு வரலாம்.” 

அண்ணனை நாளைக்குச் சென்று பார்க்கலாம் என்றது பவித்ராவுக்கும் ஆறுதலாக இருக்க… அதனால் சரி என்றாள். அவன் எப்படியும் போகட்டும் என அவளால் விடவும் முடியாது. 

மறுநாள் மாதவனும் பவித்ராவும் காரில் கிளம்பினர். ஞாயிற்றுக் கிழமை என்பதால் வாகன நெரிசல் இல்லை. ஐந்து மணி நேரத்தில் வந்துவிட்டனர். அக்கரைபேட்டை வந்ததும், மாதவன் அருளை அழைத்து விவரம் சொல்ல… அதுவரை பவித்ரா பேசவில்லை எனத் தவிப்பில் இருந்தவன், அவள் வந்திருக்கிறாள் எனத் தெரிந்ததும் நிம்மதி ஆனான். 

“ரோஜா, பவித்ராவும் மாப்பிள்ளையும் வந்திருக்காங்க. நான் போய்ப் பார்த்து கூடிட்டு வரேன்.” 

“அப்படியா சரி…” என்றவள், பவித்ரா இங்கே உன்ன யோசிப்பாள் எனத் தெரியும். அதனால் “இப்ப சாப்பிடுற நேரம் ஆச்சே… நீங்க நல்ல ஹோட்டலா பார்த்து, அவங்களைச் சாப்பிட வச்சு கூடிட்டு வாங்க. அப்படியே மினரல் வாட்டர் வாங்கிட்டு வந்திடுங்க.” என்றாள். 

அருள் சரி என்றவன், வேகமாக உடையை மாற்றிக் கொண்டு, நண்பனின் வண்டியை எடுத்துக் கொண்டு சென்றான். மெயின் ரோட்டில் நின்றிருந்தனர்.
மாதவன் தான் அருளைப் பார்த்ததும் நலம் விசாரித்தான். பவித்ரா பேசவே இல்லை. 

“வாங்க…சாப்டிட்டே பேசுவோம்.” என அருள் அழைக்க… 

“நாங்க ஒன்னும் இங்க சாப்பிட வரலை…” என்றாள் பவித்ரா கோபமாக. 

“சரி… இங்க ரோட்ல வச்சு பேச முடியாது. வீட்டுக்கு போகலாமா…” என்றதும், பவித்ரா அங்கிருந்த உணவகத்தை நோக்கி செல்ல.. அருளும் மாதவனும் அவளைப் பின் தொடர்ந்தனர். 

மூவரும் ஓரமாக இருந்த இருக்கையில் உட்கார… அருள் தன் தங்கையையே பார்த்துக் கொண்டு இருக்க… அவள் சிறிது நேரம் பேசவே இல்லை.
மாதவன், “பவி, உங்க அண்ணனை பார்க்கத்தானே வந்த… அப்புறம் என்ன? பேசு…” என்றதும், 

“நீயா இப்படிப் பண்ண? என்னால நம்பவே முடியலை…உனக்கு என்கிட்டே சொல்லனும்ன்னு கூடத் தோணலையா அண்ணா.” எனப் பவித்ரா ஆதங்கப்பட…. 

“எனக்கு இருக்கிறது நீ மட்டும் தான் பவி. நீ இல்லாம கல்யாணம் பண்ண எனக்கு எவ்வளவு கஷ்ட்டமா இருந்திருக்கும். நான் வேற யாரும் வரணும்ன்னு நினைக்கலை… நீ மட்டும் இருந்தா போதும்ன்னு தான் இருந்தேன். ஆனா நீ எனக்குச் சப்போர்ட் பண்ணி இருப்பியா?” 

“நான் உன் காதலுக்கு எதிரி இல்லை அண்ணா…ஆனா அதே சமயம் நீ கஷ்ட்டப்படுறது என்னால பார்க்க முடியாது.” 

“என்கிட்டே பணம் மட்டும் தான் பவி இல்லை. பணம் மட்டுமே வாழ்க்கை ஆகிட முடியாது.” 

“உனக்கு நான் இப்ப என்ன சொன்னாலும் தப்பத்தான் தெரியும்.” 

“இல்லை… நீ என் நல்லதுக்குத்தான் சொல்றன்னு எனக்குப் புரியாம இல்லை. என் மேல நம்பிக்கை வை பவி…. ஒருநாள் உங்க அண்ணனும் பெரிய ஆளா வருவான்னு நம்பிக்கை வை… நான் இப்படியே இருந்திட மாட்டேன் என்னை நம்பு.” 

“போ அண்ணா, கையில கிடைச்ச வாழ்க்கையைத் தட்டி விட்டுட்ட… நீ நல்லா வந்த பிறகு கல்யாணம் பண்ணி இருந்தா கூடப் பரவாயில்லை.. எதுக்கு இந்த அவசரக் கல்யாணம்?” 

“ரோஜாவோட அப்பா போனா மாசம் இறந்திட்டார். அவளுக்கு வேற யாரும் இல்லை. இனியும் என்னால அவளைத் தனியா விட முடியாது. உங்க சம்மதத்திற்காகக் காத்திருக்கும் அவகாசம் எனக்கு இல்லை.” 

“யாரும் இல்லாம தனியா நின்ன கஷ்ட்டம் எனக்கும் தெரியும், உனக்கும் அது புரியும் பவித்ரா.” 

“நீ சொல்ற காரணம் எல்லாம் சரிதான். ஆனா இனி என்ன பண்ணுவ? இங்கயே இருக்கப் போறியா?” 

“தெரியலை… இனிதான் யோசிக்கணும். ரோஜா அப்பாவுக்கு நான் கடலுக்குப் போறது இஷ்ட்டம் இல்லை. எதாவது பிஸ்னஸ் பண்ணலாம்ன்னு பார்கிறேன்.” 

“நான் வேணா தாத்தாகிட்ட பணம் கேட்கவா?” 

“அப்படி எல்லாம் பண்ணிடாத…. நான் அவங்க கொடுத்தாலும் வாங்க மாட்டேன்.” 

“உனக்குச் சேர வேண்டிய பணம் தான்.” 

“நான் பணத்துக்காக இத்தனை நாள் அங்க இருக்கலை.. உனக்காகத்தான் இருந்தேன். உனக்கு என்ன நான் முன்னேறனும் அவ்வளவு தானே… அதை நானே பார்த்துகிறேன்.” 

மாதவனுக்குத் தெரியும், தான் பணம் கொடுத்தாலும், அருள் வாங்க மாட்டான் என, அதனால் அவன் கேட்கவே இல்லை. 

“அவருக்கு டைம் கொடு மா…” என்று மட்டும் சொன்னான். 

அருள் மாதவனுக்கும் பவித்ராவுக்கும் உணவு வாங்கிக் கொடுக்க… இருவரும் உண்டனர். வீட்டில் ரோஜா சமைத்திருப்பாள் எனச் சொல்லி, அருள் டீ மட்டும் குடித்தான். 

அவர்கள் சாப்பிட்டதும் அருள் அவர்களைத் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். பவித்ராவுக்கு இஷ்ட்டம் இல்லைதான். ஆனாலும் அண்ணனுக்காகச் சென்றாள். அண்ணன் இப்படிக் கஷ்ட்டப்படக் காரணம், அந்தப் பெண் தானே என்ற கோபம் ரோஜாவின் மீது இருந்தது. 

அருள் வீடு இருக்கும் தெரு, சற்று பெரிதானது தான் என்பதால்… கார் அதுவரையே சென்றது. ரோஜா வாசலுக்கே வந்து இருவரையும் வரவேற்றாள். ரோஜாவைப் பார்த்ததும் அன்று ஏன் அண்ணன் அவளைத் தன்னிடம் விட்டுச் சென்றான் என இப்போது புரிந்தது. ‘ச்ச நமக்குதான் தெரியலை .’என நினைத்துக் கொண்டாள். 

ரோஜா வீட்டை விட அருள் வீடு சற்று வசதியானது தான். ரோஜாவிற்காக அவன் முன்பே சில சாமான்கள் சேர்த்து வைத்திருந்தான். 

இருந்த ஒரு இருக்கையில் மாதவன் உட்கார, பவித்ரா கட்டிலில் அமர்ந்தாள், சற்று இடைவெளி விட்டு அருள் உட்கார்ந்து கொள்ள… ரோஜா ஹாலுக்கும் சமையல் அறைக்கும் இடையில் நின்றாள். 

“எப்படி இருக்கீங்க?” மாதவன் ரோஜாவிடம் கேட்க, 

“நல்லா இருக்கேன்.” என்றாள். 

“எங்களை எல்லாம் உங்க கல்யாணத்துக்குக் கூப்பிடவேயில்லை.” மாதவன் சொன்னதும், ரோஜா அருளைப் பார்க்க… “அவளுக்கே முன்னாடி நாள்தான் தெரியும்.” என்றான் அவன். 

பவித்ராவுக்கு மாதவன் மீது காதல் எல்லாம் இல்லை. வீட்டில் சொன்னார்கள் என்றுதான் திருமணம் செய்து கொண்டாள். இதே வேறு யாரையாவது சொல்லி இருந்தாலும், சரி என்றுதான் சொல்லி இருப்பாள். 

அவள் வளர்ந்த நிலை அப்படித்தான். உனக்கு இது பிடிக்கிறதா என யாரும் அவளைக் கேட்டது இல்லை. கூட வைத்து பார்த்துக்கொள்வதே பெரிய விஷயம். அதனால் அவர்கள் கொடுப்பதை அவள் வாங்கிக் கொள்ள வேண்டும் என்றுதான் நினைத்தனர். அதனால் அருள் ரோஜாவை பார்க்கும் போது, அப்படி என்ன பெரிய தெய்வீக காதல் எனக் கோபம் கூட வந்தது.


தன் அண்ணன் இப்படி எல்லாவற்றையும் விட்டு வருமளவுக்கு, இந்தப் பெண்ணிடம் என்ன இருக்கிறது என்றுதான் இப்போதும் பவித்ராவின் எண்ணம். 

ஆள் பார்க்க நன்றாக இருக்கிறாள், அது தவிர வேறு ஒன்றும் இல்லையே… அண்ணன் இருக்கும் வீட்டைப் பார்த்ததும் இன்னும் வருத்தம்தான். இவளால் தானே அண்ணன் மீண்டும் இங்கு வந்துவிட்டான் எனக் கோபம். 

வாழ்க்கை எப்போது எப்படி மாறும் என்றெல்லாம் யாரும் சொல்ல முடியாது.

Advertisement