Advertisement

உப்புக் காற்று 


அத்தியாயம் 15 


அருளுக்குக் காலையில் சீக்கிரமே விழுப்பு வர… நேரத்தை பார்க்க அதிகாலை நான்கு மணி. தலை இன்னமும் பாரமாக இருக்க… ஆனால் நேற்று போல வலி இல்லை. முகம் கழுவி சமையல் அறைக்குச் சென்று காபி போட்டுக் குடித்தவன், செல்லை எடுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றான். 

அருள் ரோஜாவை கைப்பேசியில் அழைக்க… அழைப்பு வந்த நொடியிலேயே அதை எடுத்தவள், பக்கத்தில் ஸ்டெல்லா உறங்கிக் கொண்டு இருந்ததால்… வெளியே வந்து தான் பேசினாள். 

“சொல்லுங்க.” 

“என்ன சொல்றது? எவ்வளவு பெரிய விஷயத்தை என்கிட்டே இருந்து மறைச்சிருக்க. நான் வர மாட்டேன்னு நீயாவே முடிவு பண்ணிட்டியா?” 

“நீங்க வந்து மட்டும் என்ன ஆகப்போகுது?” 

“யாருமில்லாம உன்னை விட்டுட்டு போயிட்டோமேன்னு உன் அப்பா மனசு அந்த நேரத்திலேயும் தவிச்சு தான இருக்கும்.” 

“அப்படி எல்லாம் இல்லை. அவர் சந்தோஷமாத்தான் போனார். நீங்க கண்டிப்பா வருவீங்கன்னு அவருக்கு அவ்வளவு நம்பிக்கை. அதனால நீங்க அதெல்லாம் நினைச்சு வருத்தப்படாதீங்க.” 

அருள் ரோஜாவிற்கு ஆறுதல் சொல்வதற்குப் பதில், அவள்தான் அவனுக்குச் சொல்லிக்கொண்டு இருந்தாள். 

“நான் அங்க வரேன் ரோஜா?” 

“வீட்ல கல்யாணத்தை வச்சிக்கிட்டு இங்கெல்லாம் வரக் கூடாது.” 

“எனக்கு ஒரு தடவை வந்து உன்னைப் பார்த்தா தான் நிம்மதியா இருக்கும்.” 

“எனக்கு ஒன்னும் இல்லை, நான் நல்லத்தான் இருக்கேன்.” 

“பரவாயில்லை நான் வரேன்.” 

“நீங்க இங்க வந்தா, நான் திரும்பி போக விட மாட்டேன். பரவாயில்லையா….” 

“ரோஜா…” 

“உங்களால இங்க இருக்க முடியாது இல்ல… அப்ப நான் சொல்றது கேளுங்க. உங்க கடமையை முடிசிட்டு வாங்க. நான் எங்கையும் போக மாட்டேன். இங்க தான் இருப்பேன்.” 

“சரி நான் அப்பவே வரேன். ஆனா அதுக்கு அப்புறம் இங்க திரும்ப வர்றதுனாலும், இல்லை அங்கயே இருக்கிறதுனாலும், நாம சேர்ந்துதான் இருக்கோம்… சரியா…” 

“உங்க வீட்ல ஒத்துப்பாங்களா?” 

“அதைப் பத்தி உனக்கு என்ன? நான் சொன்னதுக்குப் பதிலை சொல்லு?” 

“சரி… நீங்க சொல்றபடி தான்.” 

“ம்ம்… நீ தனியா இருக்க வேணாம். நான் வர்ற வரை ஸ்டெல்லா வீட்ல இரு.” 

“பகல்ல நான் இங்க இருந்துக்கிறேன். நைட் வேணா அங்க போறேன்.” 

“நான் ஜோசப்க்குப் பணம் அனுப்புறேன். யாரார் செலவு செஞ்சாங்களோ, நீ அவங்களுக்கு எல்லாம் திருப்பிக் கொடுத்திடு. மிச்சத்தை உன் செலவுக்கு வச்சுக்கோ.” 

“சரி…” 

“எப்ப எதுனாலும் எனக்குப் போன் பண்ணு.” என்றவன், “நீ பண்ண மாட்ட டி… உன் அப்பா செத்ததையே சொல்லாதவத் தான நீ…. ஆத்திரமா வருது, வை போன்னை.” என வைத்துவிட்டான். 

அதுவரை இருந்த வைராக்கியம் எல்லாம் அருள் போன்னை வைத்த நொடி, ரோஜாவிடம் காணாமல் போய் இருந்தது. தன் தந்தையை நினைத்து, அவர் எப்போதும் படுக்கும் திண்ணையில் உட்கார்ந்து வெகு நேரம் அழுதாள். 

ஸ்டெல்லாவும் அவள் அம்மாவும் சத்தம் கேட்டு வந்தாலும், அவளைத் தடுக்கவில்லை… அழுதால் தான் அவள் மனதில் இருக்கும் பாரம் குறையும் என உள்ளேயே இருந்தனர். 

அருள் வெகுநேரம் கழித்து மாடியில் இருந்து வருவதை ரேஷ்மா பார்த்துக் கொண்டு தான் இருந்தாள். எங்கே அண்ணனுக்குப் பழையபடி எல்லாம் மறந்துவிடுமோ என நேற்று பவித்ரா பயப்பட.. அவள் உடன் ரேஷ்மாவும் இங்கயே தங்கி இருந்தாள். 

விடியற்காலை அருள் எழுந்த சத்தம் கேட்டு, ரேஷ்மா வந்து பார்த்த போது, அருள் மாடி ஏறிக் கொண்டு இருந்தான். எதற்கு இந்நேரம் அங்கே போகிறான் என இவளும் பின்னே சென்று பார்க்க… அருள் கதவை அந்தப் பக்கம் தாளிட்டு இருந்ததால்…. இவளால் மேலே போக முடியவில்லை. ஆனால் யாரிடமோ மெல்லிய குரலில் அவன் பேசுவது ரேஷ்மாவுக்குத் தெரிந்தது. ஆனால் என்ன பேசுகிறான் என எதுவும் கேட்கவில்லை. 

கீழே வந்தவள் அருள் வருவதற்காகக் காத்திருந்தாள். வெகு நேரம் கழித்து வந்தவன், ரேஷ்மா ஹாலில் இருப்பதைப் பார்த்தாலும், கண்டுகொள்ளாமல் அவன் பயன்படுத்தும் இன்னொரு அறைக்குள் சென்றுவிட்டான். 

இந்த நேரத்தில் இவ்வளவு நேரம் யாரோடு பேசினான் என ரேஷ்மாவுக்கு மண்டை காய்ந்தது. 

ஜோசப் வந்து பணம் கொடுத்தவன், “நானே மத்தவங்களுக்குக் கொடுத்திட்டேன் ரோஜா… அது போக இது மீதி பணம். நான் நாளைக்குக் கடலுக்குப் போறேன். நீயும் ஸ்டெல்லாவும் அவ அம்மா வீட்ல இருங்க. அருள் இங்க வரும் போது, நானும் இங்க இருப்பேன்.” எனச் சொல்லிவிட்டுச் சென்றான். 

ஸ்டெல்லா வீட்டினர் அங்கேயே இருக்கச் சொல்லியும், காலை எழுந்ததும் வீட்டிற்கு வந்து விடுவாள். ஆனால் எதுவும் செய்யப் பிடிக்காமல் படுத்து தான் கிடப்பாள். இத்தனை நாட்கள் அவள் தந்தையை வைத்து தான் அவளது நாளே இயங்கும். 

தந்தை கடலுக்குச் செல்வதற்குள் வாசல் தெளிக்க வேண்டும், அவர் மதியம் வருவதற்குள் மதிய உணவு செய்ய வேண்டும், அப்பா இன்று வரும் போது என்ன வாங்கி வருவார். இப்படித்தான் அவளது நாள் செல்லும். இப்போது அவர் இல்லாமல் எதுவும் செய்யப் பிடிக்கவில்லை. 

ஒன்பது மணிக்கு இட்லி எடுத்துக் கொண்டு சரோஜாவே வந்தார். “ரோஜா, அருள் போன் பண்ணி இட்லி கொடுக்கச் சொல்லுச்சு எந்திரிச்சு சாப்பிடு.” என அவர் அங்கயே இருந்ததால்… வேறு வழியில்லாமல் இரண்டு இட்லி வைத்து உண்டாள். 

தினமும் அதே வாடிக்கை ஆனது. சரோஜா காலையில் கொடுத்து விடும் இட்லியையே மதியத்துக்கும் வைத்து பொழுதுகளைக் கழித்துக் கொண்டு இருந்தாள். இரவு ஸ்டெல்லா வீட்டில் சாப்பிட்டு, அங்கேயே படுத்துக் கொண்டாள். 

அருளுக்கு ரோஜாவை இந்த நிலையில் இன்னொருவர் பொறுப்பில் விட்டுவிட்டு இருப்பதே… மனதிற்குச் சங்கடமாக இருக்க…தங்கை திருமணம் என்ற உற்சாகமும் அவனிடத்தில் இல்லை. 

தங்களின் கார்மெண்ட்ஸ் கம்பெனியில் தான் முழு நேரமும் இருந்தான். அவன் கம்பனியை பொறுப்பாகப் பார்த்துக்கொள்ள… சாரதியும், செல்வமும் பத்திரிகை வைக்கும் வேலைகளைப் பார்த்துக் கொண்டு இருந்தனர். தேவியும் அவர்களோடு பத்திரிகை வைக்கச் செல்ல, பவித்ரா தான் இரண்டு வீட்டுக்கும் பொதுவாகச் சமைத்துக் கொண்டு இருந்தாள். கலையும் மலரும் அவளுக்கு உதவுவார்கள். 

திருமணதிற்குப் பத்து நாட்கள் இருக்கும்போது, அருள் இரவு வீட்டிற்கு வந்தவன், அமைதியாக இருக்க…அன்று ரேஷ்மாவும் அங்கு இருந்தாள். 

“உங்க அண்ணன் போடுற சீன் தாங்க முடியலை…. எதோ இவர் சொந்தக்காரன் செத்துப் போனது போல… ஏன் இப்படி ஒரேடியா சோகமா இருக்காருன்னு தெரியலை…” என ரேஷ்மா அருளை வம்பிழுக்க… எப்போதும் அமைதியாகப் போய் விடுபவன், இன்று நின்று பேசினான். 

“ஹே… உனக்கு அவர் எனக்குச் சொந்தம் இல்லைன்னு தெரியுமா… சும்மா எதாவது பேசினேன்னு வை… அவ்வளவுதான். உன் திமிரை எல்லாம் வேற யார்கிட்டையாவது காட்டு. என்கிட்டே வேண்டாம்.” 

“உனக்குப் பரத்தை தான் தெரியும், அருளைத் தெரியாது. எனக்கு அவ்வளவு பொறுமை எல்லாம் இல்லை. பார்த்து பேசு…” எனச் சொல்லிவிட்டு அவன் அவர்கள் பகுதிக்கு சென்றுவிட… மொத்த வீடுமே அவன் கோபத்தில் ஆடித்தான் போய் இருந்தது. ரேஷ்மா முகம் கருத்து போனாள். 

“இத்தனை நாள் அவன் இருந்த இடம், பழகின மனுஷங்க, அவங்களுக்கு ஒண்ணுன்னா அவனுக்குக் கஷ்ட்டமா இருக்காதா… நீயும் அப்படிப் பேசி இருக்கக் கூடாது.” என்றார் கலை. 

“நீங்க உங்க பேரனையே தலையில தூக்கி வச்சிட்டு ஆடுங்க. நான் எங்க வீட்டுக்கு போறேன்.” என ரேஷ்மா கோபித்துக் கொண்டு கிளம்பி விட… 

“இந்நேரம் தனியா போகக்கூடாது. நாளைக்குப் போகலாம்.” எனக் கலையின் பேச்சைக் கேட்காமல்… ரேஷ்மா அவளின் கைபையை எடுத்துக் கொண்டு கிளம்ப… கலை சொல்லி பவித்ரா சென்று அருளை அழைத்துக் கொண்டு வந்தாள். 

“ரேஷ்மா கோவிச்சிக்கிட்டு போறாப்பா… கொஞ்சம் போய்ப் பாரு…” எனப் பாட்டி சொல்ல… அவர் பேச்சை தட்ட முடியாமல் அருள் சென்றான். 

ரேஷ்மா தெருவில் தனியாக நடந்து போய்க் கொண்டிருந்தாள். அவளருகில் சென்று வண்டியை நிறுத்தியவன், “ஹே… உனக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்கா…” 

“என் மேல் தான கோபம். அதை என்கிட்டே காட்டு… ஏன் வயசான காலத்தில பாட்டியை டென்ஷன் பண்ற? உனக்கு இப்ப வீட்டுக்கு போனோம் அவ்வளவுதான, நான் கேப் புக் பண்றேன் போ…” என அவன் செல்லை எடுக்க… 

“ரொம்பத் தான் அக்கறை, அதை எனக்குப் பண்ண தெரியாதா?” என ரேஷ்மா கேட்க, 

“இது ரோடு இங்க நின்னு கத்தாத. வீட்ல இருந்தே புக் பண்ணிட்டு போக வேண்டியது தான…” என்றான். ரேஷ்மா பதில் சொல்லாமல் இருக்க… 

“இப்ப என்ன பண்ணனும் சொல்லு? நீ புக் பண்றியா இல்லை நான் பண்ணவா?” 

“ஒன்னும் வேண்டாம்.” என்றவள், வண்டியில் அவன் பின்னே ஏறி அமர…. அருள் வண்டியை வீட்டுக்குத் திருப்பினான். 

இருவரும் சேர்ந்து வருவதைப் பார்த்ததும், கலை நிம்மதியானார். 

“என்ன திரும்ப வந்துட்ட கோபம் போச்சா?” பவித்ரா கேட்க, 

“உங்க அண்ணன் கெஞ்சி கேட்டார்.” என ரேஷ்மா வேண்டுமென்றே சொல்ல… 

“நான் உன் மிரட்டுளுக்கு எல்லாம் பயப்பட மாட்டேன். பாட்டிக்காக வந்தேன், இனியொரு தரம் இப்படிப் பண்ணன்னு வை, எப்படியும் போன்னு விட்டுடுவேன்.” என்றவன், தங்கள் வீட்டுக்கு செல்ல… 

“அண்ணா சாப்பிட்டு போ…” என்ற பவித்ரா கத்துவதைப் பொருட்படுத்தாமல் சென்றான். 

“நீ ஆனாலும் எங்க அண்ணனை ரொம்ப டென்ஷன் பண்ற.” எனப் பவித்ரா ரேஷ்மாவின் அருகே வந்து உட்கார. 

“யாரோ இறந்து போனதுக்கு உங்க அண்ணன் ஏன் இத்தனை நாளா இப்படி இருக்கணும்? நம்ம எல்லாரையும் விட உங்க அண்ணனுக்கு அவங்க எல்லோரும் முக்கியமா?” 

“உன் அண்ணன் திரும்ப அங்க போனார்ன்னு வை… அப்புறம் உன் அண்ணன் உனக்கு இல்லை. நான் அவ்வளவுதான் சொல்லுவேன். உன் அண்ணன் உனக்கு வேணுமுன்னு நினைச்சா, நீதான் உங்க அண்ணன் அங்க போகாம பார்த்துக்கணும்.” 

“உங்க அண்ணன் திரும்ப அந்தக் குப்பத்துக்குப் போனா பரவயில்லைனா… எனக்கு ஒன்னும் இல்லை.” என்ற ரேஷ்மா, “நான் சாப்பிட போறேன்.” என எழுந்து சென்றுவிட… பவித்ரா யோசிக்க ஆரம்பித்தாள். 

தன்னால் கொஞ்ச நேரமே அங்கே இருக்க முடியவில்லை. அண்ணன் அங்கே திரும்பச் சென்றால்… தானும் வெளிநாடு சென்றுவிடும் நிலையில், வீட்டினர் யாருடனும், அண்ணனுக்கு ஒட்டுதல் இல்லாமல் போய் விடும் எனப் பயந்தாள். 

மறுநாள் மாதவன் வந்துவிட்டதால்… வேறு எதுவும் யோசிக்க முடியாத நிலை… மாதவன் வந்த பிறகு அவனுக்கு உடைகள் வாங்க, திருமணத்திற்கு முந்தைய புகைப்படங்கள் எடுக்க… என நேரம் சென்றது. 

அருள் தான் அவர்கள் இருவரையும் காரில் அழைத்துக் கொண்டு வெளியே சென்று வந்தான். உடன் ரேஷ்மாவும் இருந்தாள். அருள் அவளுடனும் நல்ல விதமாகவே பழக. எப்படியாவது இவர்கள் திருமணத்தை முடித்து, அண்ணனை இங்கயே இருக்கச் செய்து விட வேண்டும் என்பதே பவித்ராவின் எண்ணமாக இருந்தது. 

திருமண வேளையில் தங்கை மனம் வருந்த கூடாது என்றே பொருத்துப் போகிறான் என அவளுக்குத் தெரியவில்லை. 

பவித்ரா திருமணம் ஊரே மெச்சும்படி, மிகவும் சிறப்பாக நடந்தது. திருமணத்தின் போதுதான் நிறைய உறவினர்களுக்கு அருள் யாரென்றே தெரியும். எல்லோரும் ஆச்சர்யமாக அவனைப் பற்றித் தான் வியந்து பேசிக் கொண்டு சென்றனர். 

அருள் மாதவனுக்கு இடையே ஒரு நல்ல புரிதல் இருந்தது. முதல் இரண்டு நாட்கள் மணமக்கள் இங்கே தான் இருந்தனர். பவித்ரா புகுந்த வீட்டிற்குக் கிளம்பும் முன், தன் அண்ணனோடு பேசிக் கொண்டு இருந்தாள். உடன் சாரதியும் கலையும் இருந்தனர். 

“அண்ணா நாங்க வெளிநாடு போறதுக்கு முன்னாடியே, உனக்கும் ரேஷ்மாவுக்குன் நிச்சயம் பண்ணிடலாமா…” எனப் பவித்ரா அண்ணனை ஆவலாகப் பார்க்க… அருள் மெலிதாகப் புன்னகைத்தான். 

“எனக்கு ரேஷ்மாவை பிடிக்க வேண்டாமா பவி.” அவன் சொல்ல… 

“உங்களுக்கு ரேஷ்மாவை பிடிக்கலையா? ஏன் அவ நல்லத்தானே இருக்கா?” என்றாள். 

“அவளை விடு… அவ எப்படி இருந்தாலும் எனக்கு ஒன்னும் இல்லை. ஆனா என் மனசில வேற ஒரு பெண் இருக்கா…” என சொல்லியே விட்டான்.

“தாத்தா நானே உங்கக்கிட்ட பேசனும்ன்னு இருந்தேன். எனக்கு நீங்க வரதுக்கு முன்னாடியே அங்க ஒரு பெண்ணோட கல்யாணம் பேசி முடிவாகி இருந்தது.” என்றவன், பொதுவான விவரம் தவிர ரோஜாவை பற்றி முழு விவரம் எதுவும் அவன் சொல்லவில்லை. 

“என்னப்பா இப்படிச் சொல்ற? நீ அங்க இருக்கப் பெண்ணைக் கல்யாணம் பண்ணா… நம்ம சொந்தகாரங்க எல்லாம் யாரும் நம்மை மதிக்க மாட்டாங்க. அதோட நம்ம வீட்டோட சம்பந்தம் செய்யவும் யோசிப்பாங்க. உன் சித்தப்பா பிள்ளைகளுக்கு எப்படி கல்யாணம் பண்றது?” எனக் கலை சொல்ல… 

“அந்தப் பெண்ணுக்கு வேணா பணம் எதாவது கொடுத்திடலாமா? அவ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கட்டும்.” என்றார் சாரதி அவர் பங்குக்கு.
அவர்கள் பேச்சில் அருள் முகம் இறுகி கொண்டே செல்ல… அவன் பவித்ராவின் பதிலுக்கு மட்டுமே காத்திருந்தான். 

“அண்ணா இதெல்லாம் வெளியே யாருக்கும் தெரிய வேண்டாம். அத்தை வீட்டுக்கு தெரிஞ்சா, நம்மைத்தான் கேவலமா பார்ப்பாங்க.” எனப் பவித்ரா சொன்ன போது, அருள் ஒரு முடிவுக்கு வந்திருந்தான். 

“சரி பார்த்துக்கலாம் விடு.” என்றான். 

“வேண்டாம் அண்ணா, ப்ளீஸ் விட்டுடு…” என் பவித்ரா மீண்டும் சொல்ல… 

“நீ அத்தை வீட்டுக்கு போயிட்டு வா… நாம அப்புறம் இதைப் பத்தி பேசுவோம்.” என்றான். 

தங்கள் நிச்சயம் குறித்துத் தான் பவித்ரா அருளிடம் பேச போகிறாள் என ரேஷ்மாவுக்குத் தெரியும். அதனால் அவர்கள் அறைக்குள் இருந்து வெளியே வந்த போது, இருவரின் முகத்தையும் ஆவலாகவே பார்த்து இருந்தாள்.

பவித்ரா சற்று பதற்றமாகவும், அருள் இறுகி போயும் தெரிந்தான். “இவன் பெரிய மகாராஜன், இவனுக்காக நான் எவ்வளவு நான் காத்திருப்பது.” என அவளுக்கு எரிச்சலாக இருந்தது. 

“இருக்கட்டும் இதற்குச் சீக்கிரம் ஒரு முடிவு எடுக்கிறேன்.” என நினைத்துக் கொண்டு சென்றாள். 

பவித்ரா புகுந்த வீட்டிற்குக் கிளம்பும் போது, ஒரே அழுகை. அவளை சமாதானம் செய்த அருள், “நீங்க இருக்கும் போது, எனக்கு என் தங்கையை நினைச்சு கவலை இல்லை… நீங்க அவளை நல்லா பார்த்துபீங்கன்னு  தெரியும்.” என்றான் மாதவனிடம். 

அதே சொன்னது, நான் வேறு யாரையும் நம்பி என் தங்கையை அனுப்பவில்லை. உன்னை மட்டுமே நம்பி அனுப்புகிறேன் என்று…. மாதவனுக்கு அது நன்றாகவே புரிய… ஒரு அர்த்தமான பார்வையை அருளிடம் செலுத்திவிட்டுச் சென்றான். 

அவர்கள் கிளம்பியதும் சாரதியும், கலையும் அருளிடம் வெகு நேரம் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது சொன்னதைத் தான் மீண்டும் சொல்லிக் கொண்டு இருந்தனர். 

அருள் எல்லாவற்றிற்கும் சரி சரி எனக் கேட்டுக் கொண்டான். அவன் எதிர்த்து எதுவும் பேசவில்லை. பேசினாலும் பயன் இருக்காது என அவனுக்கு நன்றாக தெரியும். 



Advertisement