Advertisement

உப்புக் காற்று 


அத்தியாயம் 14 


அருளின் கூர்மையான பார்வை தடுமாறச் செய்ய, “நான் யாரையும் லவ் பண்ணலையே…” என்றாள் மலர் பதட்டமாக. 

அவள் பதட்டமே இன்னும் சந்தேகத்தைக் கிளப்ப… “அப்ப ஏன் அப்படிக் கேட்ட?” என்றான். 

“இல்லை… அன்னைக்கும் பாட்டி உங்க கல்யாணத்துக்குப் பொண்ணு பார்க்கிறாங்கன்னு தெரிஞ்சதும் டென்ஷன் ஆனீங்க. இப்ப ரேஷ்மாவோட கல்யாணம் சொன்னா அதுக்கும் டென்ஷன் ஆனீங்க அதுதான் கேட்டேன்.” 

“நான் கல்யாணம் வேண்டாம்ன்னு சொன்னா, நான் வேற யாரையோ லவ் பண்றேன்னு அர்த்தமா?” அருள் கேட்டதற்கு மலர் ஆமாம் என்பது போலத் தலையசைக்க… 

“இதெல்லாம் எப்படி உனக்குத் தெரியுது? நீ யாரையோ லவ் பண்ற தான?” என அருள் சொன்னதும், 

“போங்க அண்ணா, நான் உங்களைக் கேட்டா, நீங்க என் மேல போடுறீங்க. நான் போறேன்.” எனச் சொல்லிவிட்டு மலர் ஓடிவிட்டாள். அருளும் ஆமாம் என ஒத்துக்கொள்ளவில்லை… மலரும் காதலிக்கிறேன் எனச் சொல்லவில்லை. இருவரும் ஒரே மாதிரி. எதோ பேசி மற்றவரை குழப்பி விடுவதிலும் ஒரே மாதிரி தான். 

பவித்ரா தனது மனத்தாங்கலை மாதவனிடம் சொன்ன போது, “பரத்துக்கு விருப்பம் இல்லைனா விட வேண்டியது தானே… ஏன் கட்டாயப்படுத்துறீங்க?” 

“ரேஷ்மாவை கல்யாணம் பண்ணிக்க அவருக்கு விருப்பம் இருக்கணும். கட்டாயபடுத்தி எல்லாம் கல்யாணத்திற்குச் சம்மதிக்க வச்சு… நாளைக்கு அவங்களுக்குள்ள ஒத்துப் போகலைனா, அப்ப உட்கார்ந்து அழுவீங்களா?” 

“அருள் செட்டில் ஆக டைம் கொடுங்க. அப்புறம் கல்யாணத்தைப் பத்தி யோசிக்கலாம்.” என மாதவன் சொன்னதும், பவித்ராவும் அண்ணன் மேலிருந்த வருத்தத்தைக் கைவிட்டாள். 

நாட்கள் எப்போதும் போலச் சென்றது. அருள் மலரை அவளுக்குத் தெரியாமல் கவனிக்க ஆரம்பித்தான். ஆனால் அவள் யாரையும் விரும்புவது போலத் தெரியவில்லை. ஒருவேளை எதார்த்தமாகத்தான் கேட்டிருப்பாளோ என நினைத்துக் கொண்டான். 

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால்…. எல்லோரும் ஒரே இடத்தில் இருந்தனர். 

சாரதி எதோ அவர்கள் கம்பனி பற்றிக் கேட்க, அருள் அவருக்கு விளக்கிக் கொண்டு இருந்தான். செல்வத்திற்குக் கூட இந்த அளவுக்குத் தெரியாது. அப்போது ரேஷ்மாவும் அங்கு இருந்தாள். 

அருளின் தெளிவான பேச்சு கேட்டு அவளும் அவனை வியப்பாகத்தான் பார்த்தாள். அவன் உடனே திருமணத்திற்குச் சம்மதித்து இருந்தால்… அவனை உண்மையில் மதித்துக் கூட இருக்க மாட்டாள். 

அவன் வேண்டாம் என மறுத்ததும்தான், அவனை இன்னும் நன்றாகக் கவனிக்க ஆரம்பித்தாள். எந்த வேலையானாலும் அதில் அவன் முழுமையாக இறங்கி செய்வது, அவனின் பேச்சு, நடத்தை, அதுவும் அவன் தங்கையை நடத்தும் பாங்கு என எல்லாமே அவளை ஈர்க்க ஆரம்பித்தது. 

ரேஷ்மா இப்போது எல்லாம் இங்கே பாட்டி தாத்தா வீட்டிற்கு அடிக்கடி வர ஆரம்பித்தாள். சில நேரம் அலுவலகத்தில் இருந்து கூட நேராக இங்கு வந்து, இரவு இங்கயே தங்கி மறுநாள் இங்கிருந்தே அலுவலகம் செல்வாள். ஆனால் அவள் எந்த அளவு நெருங்கி வந்தாளோ… அதே அளவுக்கு அருள் விலகி இருந்து கொண்டான். 

அதுவும் ஒருமுறை ரேஷ்மா வருவதைக் கவனிக்காமல், அருள் அவள் மீது மோதி விட… ரேஷ்மா தடுமாறி விழப் போக, அப்போது அவள் கையைப் பிடிக்க அவன் செல்ல… ரேஷ்மா கையைத் தூக்கி விட்டதால்… அவள் இடையைப் பற்றி இருந்தான். 

ஒருநொடி தான், ஆனால் அதற்கே அருள் பெரிய தவறு செய்து விட்டது போல, குற்ற உணர்வில் தவித்துப் போனான். அவன் விலகி ஓடிவதை பார்த்த ரேஷ்மாவுக்கு ஒரே சிரிப்பு… அவன் தூரத்தில் வருவதைப் பார்த்துவிட்டு, வேண்டுமென்றே தான் திடிரென்று வருவது போல வந்திருந்தாள். 

அதன் பிறகு தான் அருள் இன்னும் விலக ஆரம்பித்தான். ரேஷ்மாவோ அப்படி எங்கே போய் விடப் போகிறான் என மிதப்பில் இருந்தாள். வீட்டினருக்கு ரேஷ்மா இங்கே வருவதற்கான காரணம் புரிந்தே இருந்தது. சில நாட்கள் சென்றால்… அருள் மனது மாறுவான் என நினைத்தனர். 

சாரதி அவனுக்குத் தனியாக ஒரு யூனிட் போட்டுக் கொடுத்து விடலாம் என நினைத்தார். ஆனால் அதற்குள் அவன் நன்றாக வேலையைப் பழகிக் கொள்ளட்டும் என இருந்தார். 

அருள் ஜோசப் மூலம் ரோஜாவுக்குச் செல் வாங்கிக் கொடுத்து இருந்தான். ஆனால் அதில் அவளாக அழைக்க மாட்டாள். அருள் அழைத்தால் மட்டுமே பேசுவது என்று இருந்தாள். 

“ஏன் டி, நீயா போன் செஞ்சா குறைஞ்சு போயிடுவியா?” 

“நீங்க என்ன வேலையா இருப்பீங்கன்னு எனக்கு எப்படித் தெரியும்? நீங்களே ப்ரீயா இருக்கும் போது கூப்பிடுங்க.” 

“நேத்துதான் குல தெய்வ கோவிலுக்குப் போய்ப் பத்திரிகை வச்சிட்டு வந்தோம். உங்க எல்லோருக்கும் அனுப்புறேன். நேர்ல வந்து வைக்கலைன்னு நினைக்காத ரோஜா.” 

“நீங்க நேர்ல வந்து பத்திரிகை வச்சா மட்டும், நாங்க கல்யாணத்துக்கு வரப் போறோமா என்ன?” 

“ஏன் வந்தா என்ன? நான் ஜோசப் கிட்ட சொல்றேன், நீ உங்க அப்பா ஸ்டெல்லா எல்லாம் கல்யாணத்துக்கு வாங்க.” 

“அதெல்லாம் வேண்டாம். நீங்க எங்களைக் கவனிப்பீங்களா… கல்யாண வேலை பார்பீங்களா… நீங்க உங்க தங்கச்சி கல்யாணத்தை நல்லபடியா முடிங்க போதும்.” 

“நான் ஜோசப்கிட்ட பேசுறேன்.” என அருள் சொல்ல… என்னவோ பண்ணுங்க என்றாள். 

இரண்டு நாளில் அருள் அனுப்பிய பத்திரிகை வந்துவிட…. பத்திரிக்கையைப் பார்த்தே ரோஜா அசந்து விட்டாள். 

“எவ்வளவு பெரிய பத்திரிகை?” என வியந்தவள், அதைத் தந்தையிடமும் காட்டினாள். 

மரியதாசும் மகிழ்ச்சியுடன் வாங்கிப் பார்த்தார். ஆனால் எதையோ நினைத்து ரோஜா முகம் வாடினாள். 

“என்ன மா?” 

“பத்திரிக்கையே இவ்வளவு பெரிசா இருக்கே… அப்ப கல்யாண மண்டபமும் பெரிசா தானே பிடிச்சு இருப்பாங்க. அங்க போய் நம்மை வர சொல்லி கூப்பிடுறாரு. நாம அவங்களுக்கு மத்தியில வித்தியாசமா தெரிய மாட்டோம்.” என்றாள். 

“என்ன வித்தியாசம்? அவங்களும் மனுஷங்க நாமளும் மனுஷங்க தானே…” 

“அதுக்காக நாமும் அவங்களும் ஒன்னாகிடுவோமா…” என்றவள், “அவங்க வீட்ல எங்க கல்யாணத்துக்கு ஒத்துப்பாங்களா பா… பெரிய இடமா இருக்காங்களே…” என இத்தனை நேரம் மனதிற்குள் இருந்த சந்தேகத்தை வாய்விட்டே கேட்டாள். 

“எனக்கு அவங்க வீட்டு ஆளுங்களைப் பத்தி எல்லாம் தெரியாது. ஆனா அருள் கண்டிப்பா உனக்காக வருவான்.” என மரியதாஸ் உறுதியாகச் சொல்ல… எப்படி என ரோஜா ஆச்சர்யமாகப் பார்த்தாள். 

“அன்னைக்கு ஜோசப் கல்யாணத்துக்கு அருள் வந்த போது, நான் கூட வீட்ல இருந்தேனே… நீ கூடக் கடலுக்குப் போன்னு விரட்டினியே, அன்னைக்கு அருள் வந்து என்னைப் பார்த்து பேசினான்.” என்றார். 

அன்று மகள் விரட்டியதும், மனமில்லாமல் கிளம்பி சென்ற மரியதாஸ் வழக்கமான கடையில் டீ குடிக்க… அருள் அவரை நோக்கி வந்தவன், “நான் ரோஜாவைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன். நான் கண்டிப்பா அவளுக்காக வருவேன். என்னை நம்புங்க.” எனச் சொல்லிவிட்டு திரும்ப, 

மரியதாஸ் அவனுக்கும் டீ வாங்கிக் கொடுத்து, அவனுடன் வெகு நேரம் பேசிவிட்டே, கடலுக்குச் சென்றார். 

தந்தை சொன்னதைக் கேட்டு ரோஜாவுக்குப் பெரும் வியப்பு. “கோபக்காரனா இருந்தாலும், அவன் நல்ல பையன்.” எனத் தந்தை சொல்ல… இப்பத்தான் தெரிகிறதா என்பது போலப் பார்த்தவள், தந்தைக்கு இரவு உணவு எடுத்து வைக்க, அவர் சாப்பிட்டு உடனே படுக்கச் செல்ல… 

“அப்பா, சாப்பிட்டதும் படுக்காதீங்க. கொஞ்ச நேரம் நடந்திட்டு படுங்க.” எனச் சொல்லிவிட்டுப் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள். 

மகள் சொல்வது காதில் விழுந்தாலும், மனதில் மகள் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்ற மகிழ்ச்சியில், அப்போதே படுத்து நன்றாக உறங்கிவிட்டார். 

கதவை சாற்றிவிட்டு கைபேசியை எடுத்த ரோஜா, அன்றுதான் முதல்முறையாக அருளை அவளாக அழைத்தாள். 

“என்ன சொல்லு?” என்றான் அந்தப் பக்கம் அருள் மொட்டையாக. 

“என்ன பண்றீங்க?” 

“சாப்பிடுறேன்.” 

“ஓ… மாமனாரும் மருமகனும் ராசி ஆகிடீங்க போல… எனக்குச் சொல்லவே இல்லை.” ரோஜா சொல்ல… அருளின் முகம் புன்னகையில் விரிந்தது. 

“உனக்கு ஏன் சொல்லணும்?” என்றான் கேலியாக. 

“சரி சொல்லாதீங்க…” என ரோஜா முறுகிக்கொள்ள…
அப்போது வீட்டில் மற்றவர்களும் இருந்ததால்… “நான் பிறகு பேசுறேன்.” என வைத்துவிட்டான். 

அண்ணன் யாரோடு பேசுகிறான் என்பது போலப் பவித்ரா பார்க்க… நம்மைத் தவிர எல்லார்கிட்டயும் சிரிச்சுப் பேசுவான் போல… என ரேஷ்மா நினைத்தாள். 

அருள் யாரிடமும் ஒன்றும் சொல்லாது சாப்பிட… மற்றவர்களும் சாப்பிடுவதில் கவனம் செலுத்தினர். 

சொன்னது போலத் தனியாக மாடிக்கு சென்று, ரோஜாவை அழைத்து வெகு நேரம் பேசிக் கொண்டு இருந்தான். தங்கையின் திருமணம் குறித்தும் பகிர்ந்து கொண்டான். ரோஜாவை கண்டிப்பாகத் திருமணதிற்கு வர சொல்லி வற்புறுத்தினான். 

திருமண நாள் நெருங்குவதால்… இனி வேலை அதிகம் இருக்கும். அதனால் அடிக்கடி பேச முடியாது எனச் சொல்லி வைத்துவிட்டான். ரோஜா மகிழ்ச்சியுடனே படுக்கச் சென்றாள். அந்த மகிழ்ச்சி காலை வரை கூட நீடிக்கப் போவது இல்லை எனத் தெரியாமல், நன்றாக உறங்கினாள். 

காலையில் வீட்டிற்குள் பரவிய வெளிச்சம் பார்த்தே திடுக்கிட்டு விழித்தவள், வேகமாக எழுந்து சென்று கதவை திறக்க.. அங்கே திண்ணையில் இன்னும் மரியதாஸ் உறங்கிக் கொண்டு இருந்தார். 

தந்தை இன்னமும் உறங்குவதை ஆச்சர்யமாகப் பார்த்தவள், கூந்தலை கொண்டையாக முடிந்து கொண்டு, வாசல் கூட்டிவிட்டு வந்து, “அப்பா, விடிஞ்சு ரொம்ப நேரம் ஆச்சு, கடலுக்குப் போகலையா?” எனக் குரல் கொடுத்தபடி வாசல் தெளித்தாள். 

வாசல் தெளித்துவிட்டு வந்த பிறகும், தந்தை இன்னும் எழுந்துகொள்ளாமல் இருப்பதைப் பார்த்து, அவரைத் தொட்டு எழுப்ப… உடல் குளிர்ந்து போய் இருந்தது. பிறகே அவளுக்கு அது உரைக்க…. “வனஜா அக்கா இங்க கொஞ்சம் வாங்களேன்.” எனப் பதட்டத்துடன் குரல் கொடுத்துவிட்டு, தண்ணீர் எடுத்து வந்து தந்தையின் முகத்தில் தெளித்தாள். 

அவளின் குரலில் இருந்த பதட்டமே, அக்கம் பக்கம் இருப்போரை அங்கே வேகமாக வர வைத்தது. 

எல்லோருக்கும் நிலைமை புரிந்திருந்தாலும், ரோஜாவின் ஆசைக்காக மருத்துவரை அழைத்து வந்தனர். அவர் வந்து எப்போதோ இறந்துவிட்டார் என்று சொல்ல.. ரோஜா நம்ப முடியாத அதிர்ச்சியில் இருந்தாள். 

அப்படியொரு அதிர்ச்சி, இதோடு எல்லாம் முடிந்தது போல… இனி உலகம் என்பதே இல்லை என்பது போல… ஒரு ஓரமாக உட்கார்ந்தவள் தான். அழ கூட இல்லை. 

ஜோசப், ஸ்டெல்லா, மோசஸ் என எல்லோரும் பதறிக் கொண்டு ஓடி வர…. அவர்களிடம் எல்லாம் புலம்பினாளே தவிர, கண்களில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வரவில்லை. 

அவள் அம்மா உடல் நலமில்லாமல் இருந்துதான் இறந்தார். அதனால் அம்மாவை பார்த்தோம் எனத் திருப்தியாவது இருந்தது. ஆனால் தந்தை திடிரென்று மறைந்தது, பெரிய அதிர்ச்சியாக இருந்தது. 

“கொஞ்சம் அழுதா ஆறுதலா இருக்கும். அழுமா…” எனச் சுற்றி இருந்தவர்கள் சொல்ல… 

“நான் அழுதா எங்க அப்பா மனசு கஷ்ட்டப்படும். நான் அழ மாட்டேன்.” என்றாள் வைராக்கியமாக. 

ரோஜாவை தனியாக அழைத்துச் சென்று ஜோசப்பும், மோசஸ்சும் பேசினர். 
“அருளுக்குச் சொல்லணும், ஆனா தங்கை கல்யாணத்துக்குப் பத்திரிகை அடித்த பிறகு வருவானா தெரியாது. அவன் வீட்டினர் வர விடமாட்டார்கள்.” என்றனர். 

“வேண்டாம் சொல்லாதீங்க. அவங்க வந்து என்ன பண்ணப் போறாங்க. கேட்டுட்டு வரலைனா அவங்களுக்கும் கஷ்ட்டமா இருக்கும். சொல்ல வேண்டாம்.” என்றாள் ரோஜா. 

இந்த நிலையில் கூட அருளுக்காக அவள் யோசிப்பது எல்லோருக்கும் ஆச்சர்யமே. அருளிடம் சொல்ல வேண்டாம் என எல்லோரும் ஒருமனதாக முடிவெடுத்தனர். 

அவளிடம் பணம் இருக்கிறதா இல்லையா என்று கூட யாரும் கேட்கவில்லை. ஆளாளுக்கு ஒரு தொகை போட்டு, இறுதி காரியங்களை நிறைவாகவே செய்தனர். 

ரோஜாவை தனியாக விடாமல் ஸ்டெல்லாவும், அவள் அம்மாவும் இங்கேயே இருந்தனர். ரோஜா இரவு உறங்க முடியாமல் மிகவும் தவித்தாள். முன் தின இரவுக்கும் இன்றைய இரவுக்கும் எவ்வளவு வித்யாசம். அதற்குள் வாழ்க்கை எப்படிப் புரட்டி போட்டது போல ஆனது என ஒன்றும் புரியவில்லை. 

வாழ்க்கையில் தனக்கு இனி யார் இருக்கிறார்கள் எனத் தோன்ற, அருள் இருக்கிறான் தான். ஆனால் அவன்தான் இங்கே இல்லையே எனவும் தோன்றியது.  

ஒருபக்கம் அருளை அழைத்துச் சொல்லி விடலாமா என இருந்தது. அப்படி அவனை அழைத்தால், தான் அவனை இங்கே வந்துவிடச் சொல்லிவிடுவோமோ என்ற அச்சத்திலேயே அழைக்காமல் இருந்தாள். 

அவளது செல்லும் சார்ஜ் இல்லாமல் அணைந்து போய்க் கிடந்தது. அருள் அழைத்துப் பார்த்தான், பிறகு வேலையில் அவனும் அழைக்கவில்லை. 

நான்கு நாட்கள் சென்று ஜோசப்பை அழைத்த அருள், “ரோஜா போன் என்ன ஆச்சு? ஸ்டெல்லாவை போய்ப் பார்க்க சொல்லு.” எனச் சொல்ல… 

“டேய் அருள், உன்கிட்ட ஒன்னும் சொல்லணும்.” என்ற ஜோசப் ரோஜாவின் தந்தையைப் பற்றிச் சொல்ல… அருளுக்கு அப்படி ஒரு அதிர்ச்சி. 

“என்ன டா சொல்ற உண்மையா?” 

“ஆமாம் அருள். நாலு நாள் ஆச்சு. உன்கிட்ட சொல்ல வேண்டாம்ன்னு தான் சொல்லை.” என்றதும், அருள் இருந்த மனநிலையில் கெட்ட வார்த்தையால் திட்டினான். 

“டேய், உன் தங்கச்சி கல்யாணத்தை வச்சிட்டு நீ எப்படி டா வருவ?” 

“அது என் பாடு. எல்லோருமா சேர்ந்து என்னைப் பெரிய பாவம் பண்ண வச்சிருக்கீங்க டா… நான் வந்து ரோஜா பக்கத்தில நின்னிருந்தா போதும், அந்த மனஷன் நிம்மதியா போய் இருப்பார். நான் அது கூடப் பண்ணலை.” 

“ஏன் டா இப்படிப் போனார். அவர் பொண்ணு கல்யாணத்து வரைக்குமாவது இருந்திருக்கலாம் இல்ல… அந்த ஆளுக்கு என்ன டா அவசரம்.” என்றான் அழுகையில். அவனுக்கு மனம் ஆறவே இல்லை. 

“அதைதான் டா ஊரே பேசுச்சு. உங்க கல்யாணத்தைப் பார்த்திட்டு போய் இருக்கலாம் இல்ல…” 

“சரி ரோஜா எப்படி இருக்கா… ரொம்ப அழுகிறாளா?” 

“அவ அழவே மாட்டேங்கிறா அதுதான் பயமா இருக்கு. மனசுல வச்சிட்டு வைராக்கியமா இருக்கா.” 

“நான் எப்படி டா அவளைப் பார்ப்பேன்.” அருள் உடைந்து போய் அழுதான். 

“நீயே இப்படி இருந்தா, ரோஜாவை யாரு தேத்துவா? நீ அவகிட்ட பேசு.” 

“இப்ப முடியாது, நான் அப்புறமா பேசுறேன்.” என்றான் அருள்.
இப்போது அவன் இருக்கும் நிலையில், அவன் எப்படி ரோஜாவுக்கு அறுதல் சொல்ல முடியும். 

ஏன் இப்படி ஆனது என்று நினைத்தே தவித்துப் போனான். கம்பெனிக்குப் பின்புறம் யாரும் இல்லாத இடத்தில் உட்கார்ந்து வெகு நேரம் அழுதான். தனக்குத்தான் பெற்றோர் இல்லாமல் போனார்கள், ஏன் ரோஜாவுக்கும் இப்படி ஆக வேண்டும் என மனம் கிடந்து தவித்தது. 

வீட்டிற்கு அழுது சிவந்த கண்களுடன் வந்த அண்ணனைப் பார்த்துப் பவித்ரா துடித்துப் போனாள். 

“என்ன அண்ணா ஆச்சு?” என்றவள், வேகமாகச் சென்று பாட்டியை அழைத்து வர… அவர் வந்து காரணம் கேட்க, அருள் அவரிடம் மரியதாஸ் இறந்ததைப் பற்றிச் சொன்னான். 

“ரொம்பத் தெரிஞ்சவராப்பா?” என்றதற்கு ஆமாம் எனத் தலையை  மட்டும் அசைத்தான். 

“நான் ஊருக்கு போகணும்.” என அவன் சொன்னதற்கு, 

“கல்யாண வீடு இல்லையாப்பா.. இப்ப துக்கம் கேட்க போகக் கூடாது. கல்யாணம் முடிஞ்சதும் ஊருக்கு போயிட்டு வா…” என்றார் கலை. 

திடிரென்று மரியதாஸ் இறந்தது, ரோஜாவின் நிலை… அருகில் இருக்கும் பவித்ராவின் திருமணம் என அருளுக்கு எல்லாம் மனதில் அழுத்த… அப்படி ஒரு தலைவலி வந்தது. 

அவன் தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட… எங்கே முன்பு மாதிரி எல்லாவற்றையும் மறந்து விடுவானோ என மொத்த வீடும் பதறியது. 

வீட்டுக்கே மருத்துவரை அழைத்து வர… அவன் உறங்கி எழுந்தால் சரி ஆகும் என அவனுக்கு வலிக்கும், உறங்குவதற்கும் மாத்திரை கொடுக்க… அருள் நன்றாக உறங்கி விட்டான். 

ஜோசப் வந்து சொன்னதால்… அருள் எப்போது வேண்டுமானாலும் அழைப்பான் என ரோஜா அங்கே காத்திருந்தாள். இங்கே அவன் இருக்கும் நிலை, அவளுக்கு எப்படி தெரியும்?















Advertisement