Advertisement

சோபாவில் படுத்து அருள் சீக்கிரமே உறங்கிவிட்டான். விடியலில் எழுந்தவன், வேகமாகக் குளித்துக் கிளம்பினான். 

“நீ மெதுவா எழுந்து குளிச்சுக் கிளம்பு. நான் போய் என் ப்ரண்ட்ஸ் பார்த்து சொல்லிட்டு வந்திடுறேன்.” எனப் பவித்ராவிடம் சொல்லிவிட்டு, அறைக்கு வெளியே அவர்கள் டிரைவரை காவலுக்கு வைத்துவிட்டு தான் சென்றான். 

அருள் நேராக ரோஜா வீட்டிற்குத் தான் சென்றான். நைட்டி அணிந்து கூந்தலை கொண்டையாக முடிந்திருந்தவள், வாசல் தெளித்துக் கோலம் போட்டுக் கொண்டு இருந்தாள். 

எப்போது அருள் வந்தாலும், அவனிடம் சண்டை பிடிக்கும் மரியதாஸ், இன்று அப்படி இல்லாமல், அவர் வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தார். 

“வாங்க உட்காருங்க.” எனத் திண்ணையைக் காட்டிய ரோஜா… அவளும் வாசலில் அமர்ந்தாள். 

மரியதாசிற்கு மனதில் இருந்ததை அருளிடம் கேட்டு விடுவோமா என இருந்தது. அதை உணர்ந்த ரோஜா, “நீங்க கடலுக்குப் போகலை…. கிளம்புங்க.” என்றாள் பார்வையில் எச்சரிக்கையுடன். 

மரியதாஸ் தன்னையே நொந்தபடி அங்கிருந்து கிளம்பி சென்றார். 

“ஏன் உங்க அப்பாவை இப்படி விரட்டுற?” அருள் கேட்க, 

“எங்ககிட்ட இருக்கிறதே மானம் மரியாதை மட்டும் தான், அதுவும் போயிட கூடாது இல்லை. அதுதான்.” என்றாள் நக்கலாக. 

“என்ன பேசுற நீ, புரியிற மாதிரி பேச மாட்டியா?” 

“கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்றார் எங்க அப்பா, வேற ஒன்னும் இல்லை….” 

முதலில் புரியவில்லை… பிறகு அவள் என்ன சொல்ல வருகிறாள் எனப் புரிந்து விட… 

“ஓ… உங்க அப்பா நம்ம கல்யாணத்தைப் பத்தி பேச வந்தாரா… அதுக்குதான் நீ விரட்டினியா?” என்றான்.  

“ஆமாம், வேற என்ன பண்ணுவாங்க? எங்க அப்பா மட்டும் நம்ம கல்யாணத்தைப் பத்தி பேசி இருந்தா… வசதி வந்ததும் ஒட்டிகிறியான்னு நீங்க கேவலமா தான பார்ப்பீங்க. ஏற்கனவே எங்க அப்பாவை தெருவுல நிற்க வைக்கிறேன்னு சொன்ன ஆளு தான நீங்க.” என்றாள் ரோஜா ஆத்திரத்துடன். 

“அது அப்ப ஒரு கோபத்தில சொன்னேன்.” அருள் சமாளிக்க… 

“நீங்க எப்ப எப்படிப் பேசுவீங்க தெரியாது சாமி. எதுக்குக் கேட்டு அசிங்கப்பட..” என்றாள் ரோஜா. 

“இதுல அசிங்கப்பட என்ன இருக்கு? ஏன் நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு நினைக்கிறியா?” 

“எனக்குத் தெரியாது. ஆனா தகுதிக்கு மீறி ஆசைப்படக் கூடாதுன்னு மட்டும் தெரியுது.” 

“நீ என்னை நம்பலையா ரோஜா?” 

“நம்பிக்கை இல்லாம இல்லை… ஆனா உங்க வசதி எல்லாம் பார்த்தா பயமா இருக்கு.” 

“இப்ப நீ என்ன சொல்ல வர… என்னை இங்கயே இருக்கச் சொல்றியா?” 

“அப்படியெல்லாம் சொல்லலை… உங்க தங்கச்சி அவங்களை நீங்க பார்க்காம யாரு பார்ப்பா?” 

“புரியுது இல்ல… அவ கல்யாணம் முடியட்டும் நான் வீட்ல பேசுறேன்.” 

“சரி…” 

ரோஜா அருளுக்காகத்தான் அப்படிச் சொன்னாள். ஆனால் அருள் வீட்டில் தங்கள் திருமணத்திற்கு ஒத்துக்கொள்வார்கள் என்றெல்லாம் அவளுக்கு நம்பிக்கை இல்லை. இருந்த கொஞ்ச நம்பிக்கையும் பவித்ராவை பார்த்ததும் போய் இருந்தது. 

“சாப்பிடுறீங்களா?” 

“முன்னாடி கடலுக்குப் போகும் போது, காலையில எழுந்துக்கும் போதே பசிக்கும், இப்ப அப்படி ஒன்னும் பெரிசா வேலை இல்லை. பசிக்கவே மாட்டேங்குது.” 

“நான் போய் மத்தவங்களைப் பார்த்திட்டு வந்து சாப்பிடுறேன்.” எனச் சொல்லிவிட்டு அருள் வெளியே விரைந்தான். 
எதுக்கு இப்படி ஓடுறாங்க என நினைத்தபடி, எழுந்து சென்று உடைகளை எடுத்துக் கொண்டு குளிக்க சென்றாள்.

அருள் மீண்டும் வந்த போது ஒன்பது மணி. “சீக்கிரம் எடுத்து வை…சாப்பிட்டிட்டு ஊருக்கு கிளம்பனும்.” என அவன் கைகழுவி விட்டு வந்து சாப்பிட உட்கார… 

முன் தினம் அவனுக்காக வைத்திருந்த மீன் குழம்பையும், பழைய சோற்றையும் எடுத்து வந்து வைத்தாள். 

“நேத்தே வருவீங்கன்னு சூடா சோறு ஆக்கி வச்சா, வரக் காணோம். இன்னைக்குப் பழையது தான்.” என்றவள், சோற்றைப் பிழிந்து இலையில் வைத்து, அதன் மேல் தயிரை விட்டு, ஓரத்தில் பெரிய துண்டாக மீனை எடுத்து வைத்தாள். 

அருள் சோற்றைப் பிசைந்து மீன்னோட சேர்த்து எடுத்து சாப்பிட்டவன், “நம்ம ஊரு மீனு போல வேற எங்கையும் ருசி இல்லை தெரியுமா… சென்னையிலும் தான் மீன் குழம்பு வைக்கிறாங்க. ஆனா இந்த ருசி இல்லை.” என்றான் ரசித்து உண்டபடி. 

“ம்ம்.. பழைய மீனா இருந்திருக்கும். நீங்க மட்டும் அப்ப பிடிச்ச மீனா கொண்டு வந்தீங்க. பிடிச்சு பத்து நாள் மீனைத் தானே ஐஸ்ல வச்சுக் கொண்டு வருவீங்க. அது மாதிரி இருந்திருக்கும். இது எங்க அப்பா காலையில பிடிச்சு, மதியம் குழம்பு வைக்கக் கொண்டு வந்த மீனு. அது தான் ருசியா இருக்கு.” 

ரோஜா பேசப் பேச அருளின் முகம் புன்னகையில் விரிய… “ஏன் டி நாங்க போற தூரத்துக்கு, பிடிச்சதும் எப்படி மீனை கொண்டு வர முடியும்.” அருள் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, பவித்ரா கைபேசியில் அருளை அழைத்து விட்டாள். 

“நீ எல்லாம் எடுத்து வை, இப்ப வந்திடுறேன்.” எனச் சொல்லிவிட்டு அருள் போன்னை வைக்க, ரோஜாவின் முகம் வாடியது. 

வேகமாக உண்டு கைகழுவி எழுந்தவன், “சாயந்திரத்துக்குள்ள வீட்டுக்கு வந்திட சொல்லி தாத்தாவும் பாட்டியும் சொல்லி அனுப்பினாங்க. இப்ப கிளம்பினாத்தான் சரியா இருக்கும். நான் கிளம்பட்டுமா?” என்றான். ரோஜா அமைதியாக இருக்க… 

“நான் வருவேன் டி நம்பு.” என்றான். 

“நீங்க வராம அங்கயே இருந்தாலும், எனக்குச் சந்தோசம் தான்.” ரோஜா வெடுக்கென சொல்ல… 

“என்கிட்டே அடி வாங்கப் போற… கிளம்பும் போது ஏன் டி இப்படி மனுஷனை சாவடிக்கிற” அருள் கடுப்பாக… 

ரோஜாவிற்கு பேச முடியாமல் தொண்டை அடைக்க, கதவின் பக்கம் நின்றவள், அவன் சட்டையை பிடித்து இழுத்தாள். அருள் அருகில் வந்ததும், அவனை அப்படியே இறுக அனைத்துக் கொண்டாள். 
அந்த அணைப்பில் அவள் காதல், தவிப்பு,  பயம் எல்லாமே தெரிந்தது. வார்த்தையில் சொல்ல முடியாதது, செய்கையில் உணர்த்தினாள். 
அருளுக்கு அவளை விட்டு போகவும் மனமில்லை… இருக்கவும் முடியாத நிலை, அவனும் என்ன செய்வான்? 
அவளை தானும் ஒருமுறை இறுக அணைத்தவன்,
“பத்திரமா இரு… நான் வந்திடுறேன்.” எனச் சொல்லிவிட்டுச் சென்றான். 

வெளியே அவன் நண்பர்கள் அவனுக்காகக் காத்திருந்தனர். அவர்களும் அவனுடன் செல்ல… ரோஜா கண்ணீர் நிறைந்த விழிகளுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள். 

“என்ன டா புது மாப்பிள்ளை.. நீ இங்க இருக்க… தங்கச்சி என்னைத் திட்ட போகுது.” 

“அவதான் டா என்னை அனுப்பி வச்சா… எப்ப ரோஜாவை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு கேட்டுட்டு வர சொன்னா?” என ஜோசப் அருளின் முகத்தை ஆராய்ந்தான். 

“தங்கச்சி கல்யாணம் முடியட்டும் டா…” 

“ம்ம்… ஆனா மகனே நீ மட்டும் அப்புறம் பேச்சை மாத்தினேன்னு வை…. ப்ரண்ட்ன்னு எல்லாம் பார்க்க மாட்டேன். முதல் வெட்டு என்னுதா தான் இருக்கும். அந்தப் பிள்ளை மனசுல ஆசையை வளர்த்தது நீ தான் பார்த்துக்கோ…” என ஜோசப் எச்சரிக்கை விடுக்க… 

“நீயும் என்னை நம்ப மாட்டியா டா…” என்ற அருள் வேதனையில் நொந்தே போனான். 

“அப்படி இல்லை மாப்பிள்ளை… நீ இப்ப இருக்க இடம் அப்படி. அதனால் சொன்னேன்.” என்றான் ஜோசப். 
“நீ இங்க திரும்ப வரலைனாலும் பரவாயில்லை டா… ஆனா ரோஜாவை மட்டும் விட்டுடாத… அவளை கல்யாணம் பண்ணி கூடிட்டு போயிடு.”
“ம்ம்… சரி பார்க்கலாம்.”

அருளுக்குக் கிளம்ப மனமே இல்லை. அவன் மட்டும் வந்திருந்தால்… ஒருநாள் அதிகம் இருந்திருக்கலாம். பவித்ராவும் வந்திருப்பதால் உடனே கிளம்ப வேண்டிய நிலை. ரெசார்ட் வரை வந்து நண்பர்கள் அவனை விட்டுவிட்டு சென்றனர். 

காரில் ஏறியதும் அருள் பவித்ராவிடம், “வேளாங்கண்ணி போய்ட்டு போவோமா?” எனக் கேட்க, 

“வேண்டாம் அண்ணா… அந்த இடத்தைப் பார்த்தா எனக்குக் கஷ்ட்டமா இருக்கும்.” என்றாள். 

“என்னை மட்டும் வீட்ல விட்டுட்டு போயிட்டு, அப்பா அம்மா திரும்ப வரவே இல்லை… இப்ப நீங்களும் வந்திட்டு திரும்ப வரலைனா. அந்தப் பயத்தில் தான் நான் உங்களோட வந்தேன். இல்லைனா நான் இங்க வந்திருக்கவே மாட்டேன்.” பவித்ரா சொல்ல… 

பாசமான இரண்டு பெண்களுக்கு இடையே அருள் போராட ஆரம்பித்தான். 

அவனுக்கு மற்றவர்கள் சம்மதம் பற்றி எல்லாம் ஒன்றும் இல்லை. தங்கை மட்டும் துணை இருந்தால் போதும். பவித்ராவிடம் ரோஜாவை பற்றிச் சீக்கிரம் சொல்லிவிட வேண்டும் என நினைத்துக் கொண்டான். ஆனால் காலம் என்ன வைத்திருக்கிறதோ, அதை யார் அறிவார். 


 

Advertisement