Advertisement

உப்புக் காற்று 


அத்தியாயம் 11 


இரண்டு மாதங்கள் சென்று இருக்க… அருள் வீட்டிலும், கம்பெனியிலும்  நன்றாகப் பொருந்தி போனான். பத்தாவது வரை படித்து இருக்கிறான் அல்லவா… கணக்கு வழக்கெல்லாம் நன்றாகவே பார்க்க தெரிந்தது. சாரதி எல்லாவற்றையும் அவனுக்குப் பொறுமையாகச் சொல்லிக் கொடுத்தார். 

நேரடியாக முதலாளி இருக்கையில் உட்காராமல்… வேலை நடக்கும் இடத்தில் மேற்பார்வை செயவ்வதில் இருந்து எல்லாமே கற்றுக் கொண்டான். 

இத்தனை நாள் தனியாகச் செய்து வந்த தொழில்… சாரதிக்கும் வயதாகி விட்டதால்.. செல்வத்திடம் தான் முழுப் பொறுப்பும் இருந்தது. இப்போது அருள் வந்ததும், செல்வத்திற்குத் தொழிலில் அவனுக்குப் பங்கு கொடுப்பதில் விருப்பம் இல்லை. அதனால் அவர் அருளிடம் இருந்து தள்ளியே இருந்தார். 

அவர்தான் அப்படி இருந்தார். ஆனால் அவர் மனைவி மக்கள் அருளிடம் பாசமாகத்தான் இருந்தனர். அதுவும் அவர்களின் மகன் ராஜீவுக்கு அருளை மிகவும் பிடிக்கும். அருளிடம் அவன் மீன் பிடிக்கப் போன போது, நடந்த சுவாரசியமான விஷயங்களைக் கேட்டு ரசிப்பான். 

இங்கே வேலையில் கவனமாக இருந்தாலும், அருளின் மனம் அக்கரைபேட்டையில் தான் இருந்தது. அதை நினைத்தால்… சில நேரம் இங்கும் கடற்கரைக்குச் சென்று விடுவான். 

பொது மக்கள் இருக்கும் பகுதிக்குச் செல்லாமல்…. மீனவர்கள் இருக்கும் பகுதிக்கு சென்று பார்ப்பது தான் அவனுக்கு விருப்பம். அப்படி அங்கே அடிக்கடி செல்லும்போது, ஒருமுறை கடலுக்குள் செலுத்த படகை தள்ளிக் கொண்டு இருந்தனர். அருள் சென்று அவர்களுக்கு உதவினான். பிறகு அங்கிருப்பவர்களுடன் நண்பனாகவும் ஆகிவிட்டான். 

செல்வத்தின் மகன் ராஜீவ் அருளை நச்சரித்துக் கொண்டே இருந்தான். ஒருமுறை படகில் கடலுக்குச் செல்ல வேண்டுமென்று. அருளும் இப்போது பழக்கமான மீனவர்களிடம் ஒரு விசைப்படகை, சில மணி நேரங்களுக்கு வாடகைக்குப் பேசி அழைத்துச் சென்றான். 

செல்வத்தைத் தவிர மற்ற அனைவரும் சென்றனர். அதே போலப் புவனாவும், ரேஷ்மாவும் வந்தனர். 

சிறிது தூரம் அருளே படகை ஓட்டி வந்தான். வெகுநாட்கள் கழித்துப் படகை ஓட்டுவது அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. சிறிது நேரம் சென்று வந்தவன், ராஜீவிடம் மீன் பிடிப்போமா எனக் கேட்க, “இன்னும் அந்த மீன்கார புத்தி போகலை…” என ரேஷ்ம முகத்தைச் சுளிக்க… 

“திருடுறது கொள்ளை அடிக்கிறதுதான் கேவலம், மீன் பிடிக்கிறது இல்லை. நான் எப்பவுமே பெருமையா சொல்லிப்பேன், நான் ஒரு மீனவன்னு. இந்தக் கடலுக்குள்ள போயிட்டு வரவும் ஒரு தில்லு வேணும் தெரியுமா…. எல்லாராலையும் போக முடியாது.” என்றான் சற்று கர்வமாகவே. 

எப்போதும் ரேஷ்மா அருளை மட்டம் தட்டி பேசுவது வழக்கம் தான் . அருள் அதைப் பெரிது படுத்த மாட்டான். இன்றுதான் அதுவும் அவனுக்கு மீன் பிடிக்கும் தொழிலை கேவலமாகப் பேசியதும் கோபம் வந்துவிட்டது.
“ஆமாம் இவர் பார்த்தது கவர்னர் வேலை. இதுல பெருமை வேற…” என ரேஷ்மா அவனுக்கு ஒழுங்கு காட்டிவிட்டு சென்றாள். புவனா மகளை கண்டித்தார்.

வேறு யாரோ விரித்திருந்த வலை, படகின் எந்திரத்தில் மாட்டிக் கொள்ள…. அந்தப் படகில் இவர்களுடன் வந்த ஒருவன் வெகு நேரம் முயன்ரும் எடுக்க முடியவில்லை. 

“நாம இங்கயே தான் இருப்போமா… ஐயோ எனக்குப் பயமா இருக்கே… நான் இதுக்குத்தான் வரலைன்னு சொன்னேன்.” என ரேஷ்மா பதட்டப்பட…அருள் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டுக் கடலில் இறங்கினான். 

அது ஆழமான இடம் வேறு. படகில் இருந்த கையிற்றை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, முகத்தில் அடிக்கும் கடல்நீரில் சமாளித்து நின்றபடி, படகின் விசையில் மாட்டி இருந்த கையிற்றை அறுத்து எடுத்தான். 

அவன் மேலேரியதும், படகு வேகம் எடுக்க… ஒரு வட்டம் அடித்து மீண்டும் கரைக்குத் திரும்பினர். அதற்குப் பிறகுதான் ரேஷ்மாவுக்கு மூச்சே வந்தது. அவளுக்கு எப்போதுமே படகில் செல்வது என்றால் பயம். சுற்றுலா சென்றால் கூடப் படகில் செல்வதைத் தவிர்த்து விடுவாள். இங்கே வரும் வரை அவளுக்குப் படகில் செல்லப்போவது பற்றித் தெரியாது. 

ரேஷ்மா எப்படி இருந்தாலும் புவனாவும் அவர் கணவரும் அருளிடம் மிகவும் பாசமாக இருப்பார்கள். அதே போல அருளும் புவனாவிடம் ஒட்டுதலாக இருப்பான். வார இறுதியில் அருளும் பவித்ராவும் அத்தை வீட்டிற்குச் சென்று வருவார்கள். 

நாளுக்கு நாள் அண்ணன் மகனின் திறமையும், கனிவான பேச்சையும் கண்டு, அருளை ரேஷ்மாவுக்குத் திருமணம் செய்யும் ஆவல் புவனாவுக்கு அதிகரித்தது. அதை அவர் தன் கணவரிடமும் பகிர்ந்து கொண்டார். 

“அருள் மட்டும் படிச்சு இருந்தா… ரேஷ்மாவை அவனுக்கே கல்யாணம் பண்ணி வச்சிடலாம்.” எனத் தனது ஆசையை அவர் வெளியிட… 

“திறமை இருந்தா போதும், சில பேருக்குப் பட்டம் பேருக்கு பின்னாடி போடத்தான். ஆனா உன் பொண்ணு அப்படி நினைக்க மாட்டா…” 

“தெரியுமே… ஏற்கனவே உங்க பொண்ணுக்கு அருளை கண்டா ஆகாது. இதுல நாம இப்படிப் பேசினது தெரிஞ்சாலே என்னைக் கொன்னுடுவா…” எனப் புவனா சொல்ல… 

“பொண்ணுகிட்ட அவ்வளவு பயம்.” என அவரது கணவர் கேலி செய்தார். 

“உங்க பொண்ணுக்கு நல்லதை பார்க்க தெரியாது. வந்த நிமிஷத்துல தேவிக்குப் பவித்ரா மேல அவ்வளவு ஒட்டுதல் இல்லைன்னு புரிஞ்சிட்டு, தங்கையைத் தனியா கூடிட்டு போயிட்டானே…” 

“அதுவும் அவளை வேலை செய்ய விடாம, இவனே தான் எல்லா வேலையும் இழுத்து போட்டுட்டுச் செய்றான். ஏன் டா இப்படிப் பண்றேன்னு கேட்டா, அவங்க அம்மா இருந்தா தங்கை அப்படித்தான் இருந்திருப்பாளாம். அவளுக்கு அந்த ஏக்கம் இருக்கக் கூடாதாம்.” 

“எப்படி யோசிக்கிறான் பாருங்க. தங்கையையே இப்படிக் கவனிக்கிறான். நாளைக்கு வரப் போற பொண்டாட்டியை என்ன தாங்கு தாங்குவான். அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும்.” எனப் புவனா பெரு மூச்சு விட்டார். 

அவர் சொல்வது உண்மை தான். அருள் பவித்ராவுக்காக யோசிக்கும்போது ரோஜாவிற்காக யோசிக்க மாட்டானா. பவித்ராவுக்காக என்ன வாங்கினாலும் அதே போல… ரோஜாவுக்கும் ஒன்று வாங்கி அவன் அலமாரியில் பத்திரப்படுத்தி வைத்து இருந்தான். 

தையல் இயந்திரம் ஒன்றும் வாங்கி ரோஜாவுக்கு அனுப்பி வைத்தான். ரோஜா அதில் தான் இப்போது அக்கம் பக்கம் இருப்போருக்கு உடைகள் தைத்துக் கொடுத்து, நேரத்தையும், உழைப்பையும் பணமாக்கிக் கொண்டு இருந்தாள். 

அருள் அன்று காலையில் இருந்தே பரபரப்பாக இருந்தான். ஜோசப் தனது திருமணத்திற்காகப் பத்திரிக்கை வைக்க.வருவதாகச் சொல்லி இருந்தான், அவனோடு பீட்டர், பாண்டியும் வருவதாக இருந்தது. 

காலையில் வந்த நண்பர்களைப் பார்த்ததும் அருளுக்கு மிகவும் மகிழ்ச்சி. அவர்கள் குளித்துக் கிளம்பியதும், அவர்களைத் தனது தாத்தா மற்றும் சித்தப்பாவிடம் அறிமுகம் செய்து வைத்தான். 

அவர்கள் சென்றதும் செல்வம், “இன்னும் இந்தச் சவகாசம் எல்லாம் எதுக்கு? இருக்கிற இடத்துக்குத் தகுந்த மாதிரி பரத்தை இருக்கச் சொல்லுங்க.” எனத் தனது பெற்றோரிடம் சொல்லிவிட்டு சென்றார். 

அன்று முழுவதும் அருள் நண்பர்களுடன் சென்னையைச் சுற்றி வந்தான். 
பெரிய கடைக்கு அழைத்துச் சென்று, அவனுக்கும் சேர்த்து நண்பர்கள் நால்வருக்கும் ஒரே மாதிரி உடை வாங்கினான். பிறகு பெரிய ஹோட்டலில் சென்று சாப்பிட்டு விட்டு, திரையரங்கத்தில் படம் பார்த்து விட்டு, இரவு நண்பர்களைப் பஸ் ஏற்றிவிட்டுத்தான் வீட்டிற்கு வந்தான். 

செல்வம் சொன்னதை அருளிடம் சொன்னால் வீணாக மனஸ்தாபம் தான் வரும் எனப் பெரியவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. இத்தனை நாள் துணையாக இருந்தவர்களை விட்டு விடச் சொல்வதும் எளிதாக இல்லை. காலம் எல்லாவற்றையும் மாற்றும் என நினைத்து அமைதியாக இருந்தனர். 

மரியதாஸ் மோசஸ் வீட்டிற்குச் சென்று மறுவாரம் நடக்கவிருந்த ஸ்டெல்லா திருமணம் குறித்துப் பேசிக்கொண்டு இருக்கும்போது, ஜோசப் அங்கே வந்தவன், தான் அருளுக்குச் சென்று பத்திரிகை கொடுத்தது. அங்கே தன் நண்பன் வாழும் பெரிய இடத்து வாழ்க்கை என எல்லாவற்றையும் பற்றிப் பெருமையாகச் சொல்லி… அருளோடு சேர்ந்து எடுத்த படங்களையும் காட்டினான். மரியதாசும் அந்தப் படங்களை வாங்கிப் பார்த்தார். 

“இப்படி ராஜாவாட்டம் இருக்கிற பையனை போய் விட்டுட்டியே யா… அவனுக்கு மட்டும் ரோஜாவை கட்டி வச்சிருந்தா… இந்நேரம் ராணி போல உன் பொண்ணு வாழ்ந்திருப்பாளே.. நீயே எல்லாத்தையும் மண்ணாக்கிட்ட…” என மோசஸ் தனது ஆதங்கத்தைக் கொட்ட…. 

அருள் இப்போதும் ரோஜாவை நினைத்துக் கொண்டு தான் இருக்கிறான் என ஜோசப் அவரிடம் சொல்லவில்லை. 

ஒரு காலத்தில் அருளை எவ்வளவு கேவலமாகப் பேசினார். இப்போது படட்டும் எனப் பார்த்துக் கொண்டு இருந்தான். 

மரியதாஸ் வீட்டிற்கு வந்த போது, ரோஜா அருள் திருமணதிற்கு வருவான் என்ற மகிழ்ச்சியில் இருந்தாள். அவன் வரும் நாளை எண்ணி இப்போதே கனவில் மிதந்து கொண்டு இருந்தாள். 

மகளின் உற்சாகம் எதற்கு என மரியதாசிற்குப் புரியாமல் இல்லை. ஆனால் அருள் இனி ரோஜாவை திருமணம் செய்து கொள்ள மாட்டானோ எனப் பயம் வந்திருந்தது. 

“என்னப்பா ஒரு மாதிரி இருக்கீங்க?” 

“நானே உன் வாழ்க்கையைக் கெடுத்திட்டேன் இல்லமா… நான் மட்டும் குறுக்க வரலைனா… உனக்கும் அருளுக்கும் எப்பவோ கல்யாணம் ஆகி இருக்கும் இல்லையா…” 

மரியதாஸ் சொன்னதைக் கேட்டு ரோஜா புன்னகைத்தாள். 

“இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகலை… அவங்க என்னைத் தான் கல்யாணம் கட்டுவாங்க பா…” என்றாள் நம்பிக்கையாக. 

“அவன் நினைச்சாலும் அவங்க வீட்ல இருக்கிறவங்க ஒத்துக்குவாங்களா? பெரிய இடமா இருப்பாங்க போலவே… நம்ம குடும்பத்தில் செய்வாங்களா…அவங்க கவுரவத்துக்கு ஏத்த மாதிரி தான பார்ப்பாங்க.” என அவர் பேசப் பேச ரோஜா முகம் வாடினாள். 

இதுவரை இப்படி எல்லாம் யோசித்துப் பார்க்கவே இல்லை. அருள் இனி கஷ்ட்டப்பட மாட்டான் என நினைத்தாளே தவிர…இப்படி ஒன்று இருக்கிறது என யோசிக்க மறந்தாள். 

மரியதசிற்கு அவன் பணக்காரனா ஏழையா என்பது எல்லாம் பிரச்சனை இல்லை. கடலுக்குப் போகக் கூடாது, வேறு வேலை பார்க்க வேண்டும் என்றுதான் நினைத்தார். ஆனால் அவர் எதிர்ப்பர்த்ததுக்கும் மேல், அருளின் வசதி வாய்ப்பு, இப்போது அவரை மிரட்டியது. 

மகள் நல்ல வாழ்க்கையை இழக்க தானே காரணம் ஆகிவிட்டோம் என நினைத்து இப்போது வருந்தினார். 

அருளின் படங்களைக் காட்ட, மறுநாள் ஸ்டெல்லா ரோஜா வீட்டிற்கு வந்திருந்தாள். 

கடல் தண்ணீருக்கும், உப்புக் காற்றுக்கும் கருத்து போய் இருந்தவன், இப்போது இருக்கும் வாழ்க்கை தரத்தில், நிறம் கூடி, மெருகேறித் தெரிந்தான். ஏற்கனவே கலையான முகம், இப்போது இன்னும் வசீகரமான தோற்றத்தில் இருந்தான். 

“எப்படி இருக்காரு எங்க அண்ணன்?” 

“அவருக்கு என்ன நல்லாத்தான் இருக்காரு? நல்லா இருந்தா சந்தோஷம் தான்.” என்ற ரோஜாவின் பட்டும் படாத குரலில் குழப்பமடைந்த ஸ்டெல்லா… 

“என்ன ரோஜா நீ சந்தோஷப்படுவேன்னு நினைச்சேன். ஆனா இப்படிச் சோகமா இருக்க.” 

“பயமா இருக்கு ஸ்டெல்லா… நாங்க இனிமே சேராம போய்டுவோமோன்னு பயமா இருக்கு.” 

“ஏன்?” 

“உனக்குச் சொன்னது தான எனக்கும். உன் அருள் அண்ணன் தான சொன்னார். எட்டாத கனிக்கு ஆசைப்படாதேன்னு… அது எனக்கும் தான.” 

“என்னோடது வேற, உன்னோடது வேற… அருள் அண்ணாவும் உன்னை விரும்புறாங்க ரோஜா…” 

“அவர் விரும்பினாலும் அவங்க வீட்ல ஒத்துக்கணும் இல்லை… இந்தச் சாதாரணக் குப்பத்துப் பெண்ணை அவங்க ஏத்துப்பாங்களா?” 

“அதெல்லாம் அருள் அண்ணன் பார்த்துப்பாங்க.” என ரோஜாவிடம் சொல்லிவிட்டு வந்துவிட்டாலும், ஸ்டெல்லாவுக்கும் அந்தப் பயம் தொற்றிக்கொண்டது. அவள் அதை ஜோசபிடம் சொல்ல… 

“ஆமாம் அவங்க வீட்ல ரோஜாவை ஏத்துகிறது கஷ்ட்டம் தான்.” என்றான். 

“என்னங்க நானே பயந்து போய் இருக்கேன். நீங்களும் இப்படிப் பேசுறீங்க.” 

“தெரியலை ஸ்டெல்லா…. நாங்க வந்தது அவங்க சித்தப்பாவுக்குப் பிடிக்கலை. அவர் முகமே காட்டிக் கொடுத்தது. அருள் மாறலை… அவன் அப்படியேத்தான் இருக்கான். ஆனா அவங்க வீட்டு ஆளுங்க ரோஜா அந்த வீட்டுக்கு மருமகளா வர சம்மதிக்கிறது கஷ்ட்டம் தான்.” 

“என்ன நடக்குதுன்னு பார்ப்போம். அருள் கண்டிப்பா நம்ம கல்யாணத்துக்கு வரேன்னு சொல்லி இருக்கான். அப்ப அவன்கிட்ட நான் பேசுறேன்.” 

“நீங்க என்ன பண்ணுவீங்கன்னு தெரியாது. அருள் அண்ணன் ரோஜாவை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கனும்.” 

“ம்ம்… பார்ப்போம்.” 

அங்கே அருள் ரோஜாவை பார்க்க போகிறோம் என்ற மகிழ்ச்சியில் இருந்தான். இங்கே ரோஜாவோ, இனி தான் அருளோடு சேர்வது வெறும் கனவு தானோ என அவனை நினைத்தே மருகினாள். 

“நான் வேணா அருள் இங்க வரும்போது, உங்க கல்யாணம் பத்தி பேசுட்டுமா?” மரியதாஸ் கேட்க, 

“அப்படிக் கேட்க நாமும் அவங்களுக்குச் சம அந்தஸ்த்துல இருக்கணும் பா…” 

“அவரா என்னைக் கல்யாணம் பண்ணிகிட்டா பண்ணிக்கட்டும். ஆனா நீங்க அவர்கிட்ட கல்யாணத்தைப் பத்தி கேட்க கூடாது சொல்லிட்டேன்.” 

“நீங்க இப்ப போய்க் கேட்டா, அவர் வசதியை பார்த்துக் கேட்கிறதா தான் நினைப்பாங்க.” என ரோஜா திட்டவட்டமாகச் சொல்லிவிட… 

இப்படியெல்லாம் நடக்கும் என நினைத்திடாத மரியதாஸ் தனது விதியை எண்ணி நொந்தார்.
 

Advertisement