Advertisement

உப்புக் காற்று 

அத்தியாயம் 10 

இரவு தாமதமாக உறங்கி, காலையில் அருள் விழித்த போது, பொழுது நன்றாக விடிந்திருந்தது. இன்னும் விழிகளில் உறக்கம் மிச்சம் இருக்க… படுக்கையை விட்டு எழுந்திருக்க மனம் இல்லாமல் அப்படியே படுத்துக் கிடந்தான்.
உள்ளே அறையில் பவித்ரா யாருடனோ செல்போனில் பேசிக்கொண்டு இருந்தாள். 

“இப்ப நான் சரின்னு சொன்னதுக்கு வருத்தப்படுறேன்.” 
“…..” 
“நீங்க எல்லாம் ஈஸியா பேசுவீங்க. என்னோட நிலைமை என்னன்னு உங்களுக்குப் புரியாது.” 
“….” 
“இப்ப இப்படிச் சொல்லிட்டு நாளைக்குப் பேச்சை மாத்தினீங்க அவ்வளவுதான்.” 
“…..” 
“சரி நான் போகணும், அண்ணன் என்ன பண்றாருன்னு பார்க்கணும்.”
பவித்ரா பேசுவது காதில் கேட்டபடியே அருள் சென்று பல் துலக்கி முகம் கழுவி வந்தான். 
“இருங்க… நான் போய்க் காபி எடுத்திட்டு வரேன்.” எனப் பவித்ரா சொல்ல… 
“நானும் அங்க வரேன். தாத்தா சித்தப்பாகிட்ட எல்லாம் பேசின மாதிரி இருக்கும்.” என்றவன், தங்கையோடு பக்கத்தில் இருந்த சித்தப்பாவின் வீட்டிற்குச் சென்றான். 
சித்தப்பாவின் பிள்ளைகள் பள்ளிக்கும் கல்லூரிக்கும் கிளம்பிக் கொண்டு இருக்க…. சாரதியும், செல்வமும் ஹாலில் உட்கார்ந்து பேப்பர் பார்த்துக் கொண்டு இருந்தனர். 
பவித்ரா சமையல் அறைக்குச் சென்று இருவருக்கும் குடிக்கக் காபி கொண்டு வந்து கொடுத்தாள். 
“நீ இன்னைக்குக் காலேஜ் போகலையா?” கலை கேட்க, 
“நாளைக்குப் போறேன் பாட்டி.” என்றாள். 
பவித்ரா இன்ஜினியரிங் இறுதி ஆண்டில் இருக்கிறாள். காலை உணவுக்குப் பிறகு செல்வம் தங்கள் கார்மென்ட் கம்பனிக்கு கிளம்பி விட…. அருள் குளித்துவிட்டு வந்ததும், கலை அவனுக்குக் காலை உணவு பரிமாறினார். 
பவித்ரா அண்ணனுக்குப் பூரி கொண்டு வந்து வைக்க… “உனக்குச் சமைக்கத் தெரியுமா பவி.” அருள் கேட்க, 
“இன்னும் ஆறு மாசத்தில கல்யாணம் ஆகப்போற பொண்ணு சமைக்கத் தெரியுமான்னு கேட்கிற.” எனக் கலை பேச்சுவாக்கில் சொல்லிவிட…. பவித்ரா முகம் வாடுவதை அருள் கவனித்துவிட்டான். 
“கல்யாணமா அதுக்குள்ளையா?” அருள் ஆச்சர்யப்பட… 
“உன் தங்கச்சி என்ன இன்னும் சின்னப் பெண்ணா? அதோட எங்களுக்கும் வயசாகுதே… காலாகாலத்தில இவளுக்கு ஒரு கல்யாணம் பண்ணாத்தானே, போற காலத்தில எங்களுக்கு நிம்மதியா இருக்கும்.” என்றார். 
தங்கள் இருக்கும் போதே பவித்ராவுக்குத் திருமணம் செய்து, அவளை நல்லவன் ஒருவன் கையில் பிடித்துக் கொடுத்துவிட வேண்டும் என்றுதானே பெரியவர்கள் நினைப்பார்கள், அதுவும் அருள் இருப்பது இப்போது தானே அவர்களுக்குத் தெரியும். 
“நீங்க சொல்றது சரிதான் பாட்டி.” என்ற அருள் மாப்பிள்ளை யார் என்று கேட்க, அவர்களின் அத்தை மகன் மாதவன் என்றதும், அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியே. 
“நானே புவனா அத்தை பத்தி கேட்கணும்ன்னு நினைச்சேன். அத்தை எப்படி இருக்காங்க பாட்டி?” 
“நல்லா இருக்கா… அவளுக்கும் நேத்துதான் உன்னைப் பத்தி சொன்னோம். இன்னைக்கு இங்க வரேன்னு சொல்லி இருக்கா….” 
அருளுக்கு அவனுடைய புவனா அத்தையை மிகவும் பிடிக்கும். அத்தை வருவதற்குள் பவித்ராவிடம் பேசிவிட வேண்டும் என நினைத்தான். 
“பவி, கொஞ்சம் கடை வரை போயிட்டு வரலாம் வரியா? எனக்கு இங்க எதுவும் தெரியாது.” என அவன் பவித்ராவை அழைக்க…இருவரும் வீட்டில் சொல்லிவிட்டு வெளியே சென்றனர். 
“எந்த மாதிரி கடைக்குப் போகணும்? பெரிய கடைக்குப் போவோமா?” 
“இல்லை வீட்ல போடுற மாதிரி ட்ரெஸ் தான் எடுக்கணும், சின்னக் கடைக்கே போவோம்.” 
அருள் தனக்கு வீட்டில் போட எளிமையான டி ஷர்ட், ட்ராக் பான்ட் மற்றும் தேவைப்பட்ட சில உடைகள் வாங்கிக் கொண்டான். 
“உனக்கு எதாவது பார்க்கிறியா பவி?” 
“இல்லைனா… இப்ப எதுவும் வாங்க வேண்டாம்.” 
“சரி வா எதாவது சாப்பிட்டு போகலாம்.” என்றவன், அவளைப் பக்கத்தில் இருந்த ஐஸ்கிரீம் கடைக்கு அழைத்துச் சென்றான். 
வேண்டியதை சொல்லிவிட்டுக் காத்திருந்த வேளையில், “பவி நான் கேட்கப்போற கேள்விக்கு நீ உண்மையை மட்டும் தான் சொல்லணும்.” என்றான். 
“என்ன அண்ணா கேளுங்க.” 
“உனக்கு மாதவனைக் கல்யாணம் பண்ணிக்க விருப்பமா… இல்லைனா நீ யாருக்காகவும் யோசிக்காத… என்ன பிரச்சனை இதனால வந்தாலும் நான் பார்த்துகிறேன். உனக்கு விருப்பமா இல்லையான்னு மட்டும் சொல்லு.” 
“எனக்கு மாதவன் அத்தானை பிடிக்கும் அண்ணா. ஆனா அவங்க வெளிநாட்டில் வேலை பார்க்கிறாங்க. நீங்க இப்பத்தான் எனக்கு ரொம்ப வருஷம் கழிச்சு கிடைச்சிருக்கீங்க. உங்களை விட்டு வெளிநாடு போகக் கஷ்ட்டமா இருக்கு. அதுதான் காலையில கூட அவர்கிட்ட சண்டை போட்டேன்.” 
“ஒரு மூன்னு வருஷம் தான் அப்புறம் இங்கயே வந்திடலாம்ன்னு சொல்றார்.”
பவித்ரா சொன்ன விளக்கத்தைக் கேட்டதும் தான் அருளுக்கு நிம்மதி ஆனது. 
“ஓ… இது தானா… வேற ஒன்னும் இல்லையே… உனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் தானே…” 
“ம்ம்…” 
“இத்தனை வருஷம் பிரிஞ்சு இருந்துட்டோம். இனி அப்படி இல்லை… மூன்னு வருஷம் தானே சீக்கிரம் போயிடும். நீ கவலைப்படாதே…” 
“போங்க அண்ணா…அவரும் இப்படித்தான் ஈஸியா சொல்றார்.” 
“அப்ப மாதவனை வேண்டாம்ன்னு வீட்ல சொல்லிடலாமா…” அருள் வாய்க்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்க, பவித்ரா முகம் வாடினாள். 
“முடியாது இல்ல… ஒழுங்கா கல்யாணம் பண்ணிக்கோ…” அருள் சொல்ல.. பவித்ரா சரி என்றாள். 
“சித்தி எப்படிப் பவித்ரா உன்னை நல்லா பார்த்துபாங்களா?” 
“நல்லா தான் அண்ணா இருப்பாங்க. ஆனா ஒரு விலகல் இருக்கும். அவங்க குடும்பம் அவங்கன்னு மட்டும் இருக்கனும்ன்னு நினைப்பாங்க. பாட்டிக்கு அது புரியும். பாட்டி என்னை அவங்களோட ரொம்ப விட மாட்டாங்க. லீவுக்கு அத்தை வீட்டுக்கு போய்டுவேன். அத்தையும் மாமாவும் என்னை நல்லா பார்த்துப்பாங்க.” 
“அத்தை அடக்கடி உன்னைப் பத்தி புலம்புவாங்க. உன்னைப் பார்த்தா ரொம்பச் சந்தோஷ படுவாங்க.” 
“மாதவனுக்கு ஒரு தங்கச்சி இருப்பாளே… பேரு என்ன மறந்திட்டேன்.” 
“ரேஷ்மா… இப்ப இன்ஜினியரிங் படிக்கிறா, செம அழகா இருப்பா… இன்னைக்கு அவளும் வருவா பாரு.” 
பேசிக்கொண்டே இருவரும் ஐஸ்கிரீம் சாப்பிட்டு முடித்து இருந்தனர். “சரி வா போகலாம்.” என்றவன், வீட்டிற்கும் கொஞ்சம் ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டான். 
அருளுக்கு நான்கு வருடங்களுக்குப் பவித்ரா இளையவள், அருள் அந்த வீட்டை விட்டு விட்டு பிரிந்த போது, அவளுக்கு ஏழு வயது. மாதவன் அருளை விட இரண்டு வயது மூத்தவன், ரேஷ்மா அருளுக்கு இரண்டு வயது இளையவள், செல்வத்திற்கு அப்போது ஒரு மகள் மட்டும் இருந்தாள். அவள் பெயர் மது மலர். 
அண்ணனும் தங்கையும் வீட்டிற்குச் சென்ற போது, புவானா ஏற்கனவே வந்து இருந்தார். அருளைப் பார்த்ததும் சந்தோஷப்பட்டவர், “பரத், எப்படி டா இருக்க? இந்த அத்தையை நினைவு இருக்கா?” எனக் கேட்க, அருள் நினைவு இருப்பதாகத் தலையசைத்தான். 
“நீ சின்னதுல இருக்கிற மாதிரி தான் டா இப்பவும் இருக்க.. அப்பவும் ரொம்பப் பேச மாட்ட, இப்பவும் ரொம்பப் பேச மாட்டேங்கிற.” 
“நீ அவனைப் பேச விட்டாத்தானே…” எனப் பதில் சொன்னது புவனாவின் கணவர் ஸ்ரீனி. 
“இவருக்கு என்னைக் குறை சொல்லலைனா பொழுதே போகாது.” எனச் சலித்த புவனா, “என்ன டி மருமகளே உங்க அண்ணனை பார்த்ததும், என் பையன்கிட்ட சண்டை போட்டியாமே….” எனக் கேட்க, 
“அதுக்குள்ள உளறிடுச்சா அந்த லூசு.” என நினைத்த பவித்ரா, “சண்டை எல்லாம் போடலை அத்தை, அண்ணனை விட்டு எப்படி வர்றதுன்னு கேட்டேன்.” என்றாள் மெலிந்த குரலில். 
“இங்க நாங்க எல்லாம் இருக்கோமே உன் அண்ணனை பத்திரமா பார்த்துக்கிறோம். அங்க என் பையன் மட்டும் தான் இருக்கான். நீ அவனை நல்லா பார்த்துக்கோ…” 
“சரி அத்தை.” 
“என்ன இவ சுரத்தே இல்லாம பதில் சொல்றா?” புவனா சொல்ல… 
“அதெல்லாம் சும்மா நடிப்பு அத்தை. நீங்க நாளைக்கே கல்யாணம் வச்சாலும் சரின்னு சொல்வா…” என அருள் சொல்ல… அங்கே ஒரு சிரிப்பு அலை எழுந்தது.
இவர்கள் எல்லாம் பேச… ரேஷ்மா ஓரமாக உட்கார்ந்து பார்த்துக் கொண்டு இருந்தாள். 
“ஹே இது ரேஷ்மா இல்ல…. எவ்வளவு பெரிசா வளர்ந்திட்டா…. நல்லா இருக்கியா ரேஷ்மா…” அருள் கேட்க, 
“பார்த்தா எப்படித் தெரியுது.” எனப் பதில் இடக்காக வந்தது. 
“அவளை ஆபீஸ்கு லீவ் போட வச்சு கூடிட்டு வந்திட்டேன்னு அவளுக்குக் கோபம். நீ ஒன்னும் நினைச்சுக்காத… அவ அப்படித்தான்.” எனப் புவனா சமாதானம் சொல்ல…அருள் ஒன்றும் நினைக்கவில்லை. 
அருள் வருவதற்கு முன்பே அருளைப் பற்றிக் கலையிடம் புவனா கேட்டு தெரிந்து கொண்டு இருந்தார். அருளிடம் அதையெல்லாம் கேட்டு அவன் கஷ்ட்டப்பட வேண்டாம் என நினைத்து, அருளிடம் அவர் சாதாரணமாகப் பேசிக் கொண்டு இருந்தார். 
மதிய உணவு உண்டு விட்டு எல்லோரும் ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருக்க… அருள் வாங்கி வந்திருந்த ஐஸ்கிரீமை பவித்ரா எல்லோருக்கும் தனித்தனி தட்டில் வைக்க.. அருள் எடுத்து சென்று எல்லோருக்கும் கொடுத்தான். 
அப்படி ரேஷ்மாவுக்குக் கொடுக்கும்போது, அவன் கையைப் பார்த்து முகம் சுளித்தவள், “எனக்கு வேண்டாம் ஏன் உங்க கை இப்படி இருக்கு?” என்றாள். 
உடனே அங்கே வந்த பவித்ரா அண்ணனின் கையை இழுத்து பார்க்க… கையில் முழுவதும் வரிவரியாக அறுத்து இருந்தது. அதோடு கையே காய்த்துப் போய்த் தான் இருந்தது. 
“என்ன அண்ணா இப்படி இருக்கு?” என்ற பவித்ராவுக்கு அழுகையே வந்து விட… 
“அது வலை போட்டு இழுக்கிறோம் இல்ல.. அப்ப காயம் ஆகிடும். வேற ஒன்னும் இல்லை. எண்ணெய் போட்டா சரி ஆகிடும்.” என அருள் சமாளித்தான். 
புவனா சென்று வேசலின் எடுத்து வந்து அவன் கையில் போட்டு விட…. 
“என் பிள்ளையை சரியா தேடாம இப்படி எல்லாம் கஷ்டப்பட விட்டுட்டோமே…” எனக் கலை கண்ணீர் சிந்தினார். 
ரேஷ்மா முகத்தைச் சுளித்தபடி தான் பார்த்துக் கொண்டு இருந்தாள். “எனக்கு இந்த மீன் மார்க்கெட் உள்ள போனாலே குமட்டிட்டு வரும். நீங்க எப்படி அங்க இருந்தீங்க?” என அவள் அருளிடம் கேட்க, 
“அங்க இருக்கனும்ன்னு வேண்டுதல்.” என நக்கலாகச் சொல்லிவிட்டு, நேற்று இருந்த அவர்கள் வீட்டிற்கு அருள் சென்றுவிட்டான். 
மாலை கிளம்புவதற்கு முன் அவனிடம் வந்த புவனா, “பரத், அத்தை வீட்டுக்கு வரனும்.” எனச் சொல்லிவிட்டு சென்றார். 
அன்று இரவு உணவு அருந்தும் போது அருள், “பாட்டி, நானும் பவியும் இனி அப்பா அம்மா இருந்த வீட்ல இருந்துக்கிறோம். நாங்களே சமைச்சுகிறோம்.” என்றதும், பெரியவர்கள் இருவரும் ஒத்துக்கொள்ளவில்லை. 
“இத்தனை நாள் தனித்தனியா இருந்திட்டோம், பவி கல்யாணம் பண்ணி போற கொஞ்ச நாளாவது சேர்ந்து இருக்கோம்.” 
“உண்மையா சொல்லனும்னா, நான் ஒரு பத்து நாள் உங்களோட எல்லாம் இருந்திட்டு, திரும்பப் போயடனும்ன்னு தான் வந்தேன். ஆனா பவித்ரா இருக்கான்னு தெரிஞ்ச பிறகு போக மனசு வரலை.” 
“அவ இங்க இருக்க வரையாவது நான் இங்க இருக்கணும். என்னால யாருக்கும் சிரமம் இருக்கக் கூடாது. அப்பத்தான் என்னால இங்க இருக்க முடியும்.” அருள் தன் பக்கத்தை விளக்க… 
“அது என்ன இப்படிச் சொல்ற… நீ எப்பவும் எங்களோட தான் இருக்கணும். உனக்கு உங்க அப்பா அம்மா வீட்ல தனியா இருக்கனுமா இரு. அதுக்காகத் திரும்பப் போறேன்னு எல்லாம் சொல்லாத.” என்றார் கலை. 
“ஆமாம் பா… உனக்கு எப்படி இருக்க விருப்பமோ அப்படி இரு.” என்றார் சாரதியும். 
“எனக்கு ஒரு வேலை வேணும் தாத்தா.” அருள் சொல்ல… 
“நீ வெளிய எல்லாம் வேலைக்குப் போக வேண்டாம். நம்ம கம்பனிக்கு வா… நீ இப்பத்தான் வந்திருக்க, ரெண்டு நாள் ஓய்வா இருக்கட்டுமேன்னு தான் கூப்பிடலை. நாளையில இருந்து நம்ம கம்பெனிக்கு வா.” 
அவர்களுக்குச் சொந்தமாகக் கார்மெண்ட்ஸ் கம்பெனி இருக்கிறது. அவன் அப்பா இருந்த போது, அவரும் அதைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தார். அவன் அப்பாவோடு அடிக்கடி விடுமுறை நாட்களில் அங்கே சென்றிருக்கிறான். 
அடுத்த நான்கு நாட்கள் கம்பெனிக்கு செல்வதிலும், அவர்கள் வீட்டில் தேவையான பொருட்களை அடுக்குவதிலும் சென்றது. அவன் அம்மா உபயோகித்த பாத்திரங்களே இருந்தது. அதை எல்லாம் சுத்தம் செய்து அடுக்கினர். 
ஐந்தாம் நாள் அண்ணனும் தங்கையும் தனிக் குடித்தனம் சென்றனர்.  பவித்ரா கல்லூரி சென்றுவிட, காலையில் அவளும் தானுமாகச் செய்த உணவை மதியம் அருள் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
காலையில் தங்கை தன்னிடம் பேசியதை நினைத்துப் பார்த்தான். 
“கடலுக்குள்ள இருக்கும் போது மட்டும் தான் சமைப்பீங்களா.. அப்ப வீட்ல இருக்க நாள்ல என்ன பண்ணுவீங்க?” எனக் கேட்டு இருந்தாள். அவளிடம் எதோ சொல்லி சமாளித்து இருந்தான். 
ரோஜா அவன் வாழ்கையில் வருவதற்கு முன்பு பாதி நேரம் அவன் சமையல் தான். அதன் பிறகே எங்கே அவள் தான் எதாவது செய்து கொடுத்து விடுவாளே… அதனால் அவ்வளவாகச் சமைத்தது இல்லை. 
ரோஜாவின் நினைவு வந்ததும், அதற்கு மேல் உணவு இறங்கவில்லை. அவள் கையால் பழையது உண்டாலும், அது கூடச் சுவையாக இருக்கும். அவள் கை சமையலுக்கு மனம் ஏங்கியது. உடனே கைகழுவி எழுந்தவன், வனஜாவின் எண்ணிற்கு அழைத்து, ரோஜாவிடம் கொடுக்கச் சொன்னான். 
அவர் அவனிடம் நலம் விசாரித்து விட்டு ரோஜாவிடம் போன்னை கொடுக்க… 
“எப்படி இருக்கீங்க?” என்ற ரோஜாவின் குரலில் பதட்டம் தென்பட… 
“நல்லா இருக்கேன் ரோஜா.” என்றான் அருள். 
அடுத்தக் கேள்வியே எப்ப வருவீங்க என்றுதான் வந்தது. அருளுக்கு மிகவும் கஷ்ட்டமாகப் போய் விட… தான் இப்போது வர இயலாது என்றவன் காரணமும் சொல்ல… 
பவித்ரா பற்றித் தெரிந்ததும், அதுவும் அருளுக்கு அவளைப் பார்த்ததும், கடந்த காலம் நினைவு வந்தது அறிந்ததும், அவனுக்கு அவன் தங்கை எந்த அளவுக்கு முக்கியம் என ரோஜா உணர்ந்து கொண்டாள். 
“அவங்க கல்யாணம் வரை தானே… நீங்க இருந்திட்டு வாங்க.” என்றாலும் அவள் அழுவதை மறைக்க முடியவில்லை. 
“வந்துடுவேன் ரோஜா…” என்ற அருளுக்கும் குரல் தழுதழுக்க… அதை உணர்ந்தவள், “இல்லையில்லை நீங்க அங்கயே நல்லா இருந்தா போதும்.” என்றாள் அவசரமாக. 
மேலும் சிறுது நேரம் பேசிவிட்டு, “நல்லா சாப்பிடு சரியா, எந்நேரம்னாலும் நீ எனக்குக் கூப்பிடலாம்.” எனச் சொல்லிவிட்டு அருள் வைத்தான். 
அவன் கடலுக்குப் போனால், போன நாளில் இருந்து, அவன் திரும்பி வரும் நாள் வரை, நாளையும் நேரத்தையும் கணகெடுத்த படி இருப்பாள். மாத கணக்கில் அவனைப் பார்க்க முடுயாது என்பது அவளால தாங்க முடியவில்லை. அவனோடு பேசிவிட்டு வைத்த பிறகு அழுதபடி தான் இருந்தாள். 
மாலை வீட்டிற்கு வந்த மரியதாஸ், மகளின் அழுது வீங்கிய முகம் கண்டு, ஸ்டெல்லாவிடம் சொல்லி ரோஜாவிடம் விசாரிக்கச் சொன்னார். அருளை நினைத்துதான் அழுகிறாள் எனத் தெரியும். 
ரோஜா அருள் சொன்னதைப் பற்றிச் சொல்ல… “அருள் அண்ணனை பார்க்காம ரொம்பக் கஷ்ட்டமா இருக்கா ரோஜா?” என அவள் கேட்க, 
“அவங்க கடலுக்குப் போனா திரும்ப வர்றவரை பயந்திட்டே இருப்பேன். இப்ப அப்படி இல்லை. அவங்க தள்ளி இருந்தாலும், நல்லா இருக்காங்க இல்ல அதே போதும். ஆனா பார்க்க முடியலை, அதுதான் கஷ்ட்டமா இருக்கு. வேற ஒன்னும் இல்லை.” என்றாள்.

“விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
கடல் அலை கரையைக் கடந்திடுமா
காதலை உலகம் அறிந்திடுமா
நினைப்பது எல்லாம் நடந்திடுமா…”

 

Advertisement