Advertisement

உப்புக் காற்று 


அத்தியாயம் 1

“கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா
என் கட்டுமரம் இன்னைக்குக் கரை எட்டுமா

அவ உச்சி பாற ஓரமா… ஓரமா… ஓரமா…

நான் தண்ணிக்குள்ளே தூரமா… தூரமா… தூரமா

நான் ரெண்டு கண்ணில் உப்புக் காச்சி
உள்ளங்க்கையில் கஞ்சி காச்சி
வச்சிருக்கேன் ரொம்ப நேரமா…
நீயும் வந்து சேரும் யோகம் வருமா

கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா
என் கட்டுமரம் இன்னைக்குக் கரை எட்டுமா

என்னை சுத்தி என்னை சுத்தி தண்ணி இருக்கு
நாக்கு மட்டும் வத்தி விட்டதே

ஓடம்பத்தான் கட்டி வசேன் உயிர் கயிரில்
இப்ப ரொம்ப இத்து விட்டதே

என்னைக் கொன்னாலும் மீனு திண்ணாலும்
நெஞ்சு வேகாது கண்ணம்மா

உன்னைக் காணாம உயிர் சேராம
என் கண்ணீரு தீருமா

கண்ணீரு கடலுக்குள் விழுந்தால் கடலுக்குச் சொந்தமடி

கண்ணீரு முத்தா விளைஞ்சா எடுத்துக்க நல்லபடி

கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா
என் கட்டுமரம் இன்னைக்குக் கரை எட்டுமா

தூது விட்ட அலை அது எந்த அலையோ
என்னை வந்து சேரலையே

தூது வந்த அலை எல்லாம் உன்னைக் கண்டதும்
சோகப்பட்டு ஒடஞ்சிருச்சே

வலி வந்தாலும் மொழி சொல்லாம
நான் நின்னேனே ஊமையா

நீ பெண்ணல்ல ஒரு தெய்வம்தான்
இந்தக் கண்ணீரு தேவையா

கடல் தண்ணீர் அடிக்கிற அலையில கரையே மூழ்கிடுமோ 

உன் கண்ணீர் அடிக்கிற அலையில கடலே மூழ்கிடுமோ

கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா
என் கட்டுமரம் இன்னைக்குக் கரை எட்டுமா”
 
தலைக்கு மேல் இருந்த கைபேசியில் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க… எந்த வித சலனமும் இல்லாமல், ஒருவன் படுத்துக் கொண்டிருந்தான். 

அவன் அப்படியே இருந்தாலும், மழை விடுவதாக இல்லை… சிறு தூரல்களின் சிதறலில் கூட எழும்ப மனமில்லாமல் கிடந்தவன், “மழை வந்திடுச்சு அருளண்ணே.” எனக் குரல் கொடுத்தபடி வெளியே வந்த பாண்டியின் குரல் கேட்டு, இனியும் படுத்திருக்க முடியாது என எழுந்து நின்றான். 

ஆறு அடியில் சமுத்திரத்தின் நடுவில் கிரேக்க சிலை போல நின்றான். பின்னே அவர்கள் இருப்பது நடுக்கடலில் அல்லவா… அவர்களின் விசைப்படகு ஒரே சீராகச் சென்று கொண்டிருக்க… மழை வலுக்க ஆரம்பித்தது. 

பாண்டி ஒரு வாலியை கொண்டு வந்து வைத்து, மழை நீரை சேகரித்தான். மற்றவர்களும் வெளியே வந்து நின்று மழையை வேடிக்கை பார்த்தனர். 

அருள் அணிந்திருந்த மேலாடையைக் கழட்டிவிட்டு, மழையில் சுகமாக நனைந்தான். உடலில் தங்கி இருந்த இத்தனை நாள் உப்பும் கரைந்து கொண்டிருக்க… கைகளால் உடலை தேய்த்துக் கழுவினான். 

“இன்னைக்குத்தான் புயல் சின்னம் இருக்கிறதா தகவல் வந்தது. புயல் வர்றதுக்குள்ள ஊர் போய்ச் சேரலாம்ன்னு பார்த்தா… மழை வேற பெய்ய ஆரம்பிச்சிடுச்சு. எப்படி ஊர் போய்ச் சேரப் போறோம்ன்னு நினைச்சு, ஒரே கவலையா இருக்கு. ஆனா நீ என்னவோ இப்பத்தான் தேச்சு குளிச்சிட்டு இருக்க.” ஜோசப் சொல்ல,
 
“கவலைப்பட்டா மட்டும் என்ன ஆகும்?  என்ன நடக்குமோ அதுதான் நடக்கும்.” என தலையை  துவட்டியபடி சொன்ன அருள்.. உள்ளே இருந்த அறைக்குள் சென்றுவிட்டான். 

“நாம ஊர் போய்ச் சேர்வோமா… இல்லைனா இப்படியே எங்காவது போவோமா தெரியலையே…” என்றான் பாண்டி. 

காற்றும் வலுக்க ஆரம்பிக்க… காற்றின் வேகத்திற்கு ஏற்ப படகு அசைந்தது. 

உடைமாற்றி வந்த அருள், படகை செலுத்திக் கொண்டு இருந்த பீட்டரை நகர்ந்துகொள்ளச் சொல்லிவிட்டு, அவன் படகை செலுத்த ஆரம்பித்தான். 

காற்றின் வேகம் ஒருபுறம் என்றால்…அலையின் சீற்றம் ஒருபுறம் என்று இருக்க… அருள் நிதானம் இழக்காமல் படகை செலுத்த ஆரம்பித்தான். 

ரோந்து கப்பலுக்குத் தகவலும் கொடுத்து இருந்தனர். ஆனால் அவர்கள் எப்போது வருவார்களோ தெரியாது. அதுவரை இங்கேயே நிற்கவும் முடியாது. அருளின் சிந்தனை எல்லாம், படகை சேதாரமில்லாமல்… அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்பதுதான். 

ராட்சஸ அலைகளில் படகு கவிழாமல் கொண்டு செல்வது எளிதான காரியம் அல்ல… ஆனால் அருள் பதட்டப்படவே இல்லை. 

அவனுக்கும் சேர்த்துப் பதட்டப்படத் தான் ஒருத்தி இருக்கிறாளே… இந்நேரம் கரையில் அவள் எப்படித் துடித்தபடி நின்று கொண்டிருப்பாள் என அருள் அறியாதவனும் அல்ல… சொல்லப்போனால் அந்த ஒரு நினைவே, அவனைச் செலுத்திக் கொண்டு இருந்தது. தன்னைப் பார்த்ததும் அவள் முகத்தில் ஒரு உயிர்ப்பு வருமே… அதைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே நல்லபடியாக கரை சேர வேண்டும் என நினைத்தான்.  

நாகை மாவட்டத்தில் அக்கரைபேட்டை என்னும் கடற்கரை கிராமமே சோகத்தில் மூழ்கி இருந்தது. 

பதினைத்து நாட்களுக்கு முன்பு கடலுக்குச் சென்றவர்கள் இன்னும் கரை திரும்பாத நிலையில், திடிரென்று முன்தினம் விடுக்கப்பட்ட புயல் சின்ன எச்சரிக்கையில், எல்லோரும் மிரண்டு போயே இருந்தனர். 

புயம் சின்னம் தெரிந்தவுடன் கடலுக்குச் செல்ல விருந்தவர்கள் நின்று விட்டாலும், ஏற்கனவே சென்றவர்களின் நிலைமை… அவர்கள் பத்திரமாகக் கரை சேர வேண்டுமே…எல்லோரின் பிராத்தனையும் அதுவாக இருக்க, கடற்கரையை ஒட்டி இருந்த மாதா கோவிலின் உச்சியில் நின்று, ஒருத்தி பரிதவிப்புடன் கடலையே பார்த்துக் கொண்டு இருந்தாள். 

பெரிய காற்றும், சின்னத் தூறலும் அவளைச் சற்றும் அசைக்கவில்லை. தன் மனம் கவர்ந்தவனின் படகு… எங்காவது கண்ணில் தட்டுப்பட்டு விடாதா என்ற ஏக்கத்தில்… அந்தப் பரந்து விரிந்த சமுத்திரத்தையே… விழிகள் அங்கும் இங்கும் அலையபாய… தேடிக் கொண்டு இருந்தாள். 

“ஏய் ரோஜா, நீ இங்க கால்கடுக்க நின்னு பார்த்திட்டு இருந்தா மட்டும், அருளு அண்ணன் பறந்து வந்திடுமா… அது வரும் போது தான் வரும்.” 

“இந்தப் புயலும் மழையும் நமக்கு என்னவோ புதுசு போல…தவிச்சிட்டு இருக்க. அதெல்லாம் அருளு அண்ணன் நல்லபடியா வந்திடும். உன் அப்பாரு உன்னைய எதிர்பார்த்திட்டு திண்ணையிலேயே உட்கார்ந்து இருக்காரு போய்ப் பாரு.”  என்றவள், ரோஜாவின் தோழி ஸ்டெல்லா.

“அருளு வராம நான் வர மாட்டேன்னு அவருக்குத் தெரியும். நீ போறதுன்னா போ… நான் அவுக வராம வர மாட்டேன்.” 

“உன்னை எங்க தனியா விட்டுட்டுப் போறது. எனக்கு இங்க குளிருது, நான் கோவிலுக்குள்ள இருக்கேன்.” என்ற ஸ்டெல்லா கோவிலுக்குள் சென்று விட… அங்கிருந்த கல்லில் உட்கார்ந்து கொண்டு, ரோஜா மீண்டும் பார்வையால் கடலை அலச ஆரம்பித்தாள். 

மாலை மங்கும் வேளையில், இடி மின்னலுக்கு இடையில், தூரத்தில் சில படகுகள் வருவது தெரிய. வேகமாக எழுந்தவள், அதில் அருளின் படகும் இருக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் தவிப்பாகப் பார்த்துக் கொண்டு நின்றாள். 

தூரத்தில் புள்ளிகளாகத் தெரிந்த படகுகள் அருகில் வர வர… அதில் ஒன்று அருளின் படகு என அடையாளம் தெரிய…. சந்தோஷத்தில் துள்ளியவள், “ஸ்டெல்லா அவுக வந்திட்டாங்க.” எனச் சத்தமாகக் குரல் கொடுத்தாள். 

அருளின் பார்வையும் கூர்மையுடன் இவள் இருக்கும் திசையை நோக்கித்தான் இருந்தது. அவள் பார்வைக்குக் கிடைத்ததும், அதுவரை இருந்த இறுக்கம் மறைந்து, முகம் மென்மையாக மாறியது. 

விசைப்படுகளின் வரிசையில் படகை கொண்டு நிறுத்தியவன், படகில் இருந்து இறங்கி வருவதற்குள், ரோஜாவும் அடித்துப் பிடித்து, அவள் இருந்த குன்றில் இருந்து இறங்கி ஓடி வந்திருந்தாள். 

படகின் உரிமையாளர் ஜான், “நல்லபடியா கரைக்கு வந்து சேர்ந்திட்ட பா… என்ன ஆகுமோன்னு மனசு படப்படத்து போய்டுச்சு.” என்றார். “புயல் வேற பக்கம் திரும்பிடுச்சு அண்ணே. இல்லேன்னா சிக்கல் ஆகி இருக்கும். இவ்வளவு சீக்கிரம் வந்திருக்க முடியாது.” என்றவன், ஸ்டெல்லாவோடு தள்ளி நின்று கொண்டிருந்த ரோஜாவை ஆராய்ந்தான். 

அவள் கண்ணீரை மழை அழித்துச் சென்று இருக்க.. ஆனால் அதன் சுவடு இன்னும் அவள் கண்களில் மிச்சம் இருந்தது. அது தனக்காக என்றானதில்,  அவனுக்கு சிறு கர்வம் உண்டானது.
‘இப்படித்தான் என்னை பயப்படுத்துவியா?’ என்பது போல ரோஜாவின் பார்வை இருக்க… 

‘ஏன் பயப்படனும்? வராம எங்க போகப் போறாங்க?’ என்பது போல அவளைப் பார்த்தவன், “என்ன ஸ்டெல்லா, உன் பிரெண்டுக்கு மீன் வேணுமா? மீன் வாங்க வந்தீங்களா?” எனக் கேட்டான். 

“பிடிச்சு நாளான மீன் எல்லாம் எங்களுக்கு வேண்டாம். எங்க அப்பாரு தினமும் கடலுக்குப் போய்ப் புதுசா கொண்டு வருவாரு… இவரோட நாறிப் போன மீன் வேண்டாம்ன்னு சொல்லு ஸ்டெல்லா…” என ரோஜா பதில் கொடுக்க… 

“பிறகு இங்க என்ன வேலை?” என அருள் முறைக்க… பதிலுக்கு அவனை முறைத்தவள், “வா ஸ்டெலா போகலாம்.” எனத் தோழியை இழுத்துக் கொண்டு நடந்தாள்.
செல்லும் தன்னவளை பார்த்த அருளின் முகம் புன்னகையில் பெரிதாக விரிய… ரோஜா கண்ணை விட்டு மறைந்ததும், அவன் பார்வையைத் திருப்ப… எதிரில் மரியதாஸ் வந்து கொண்டிருந்தார். 

அவரைப் பார்த்ததும் புன்னகை மறைய…. திமிராகப் பார்த்தவன், அவரைப் பார்த்து கிண்டலான சிரிப்புடன் கடந்து சென்றான். அவரும் அவனைப் பார்த்தும், பார்க்காதது போலச் சென்றார். அவர்தான் ரோஜாவின் அப்பா.

பதபடுத்திக் கொண்டு வந்த மீன்களை… அதற்கு உண்டான விற்பனை ஆட்களிடம் ஒப்படைத்துவிட்டுக் காசை வாங்கியவன், பாதியை படகு முதலாளியிடம் கொடுத்தான். மீதி இருந்ததில் தன் உடன் வந்த நண்பர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்துவிட்டு, மிஞ்சியதை தனக்கு எடுத்துக் கொண்டு வீடு வர, மேலும் ஒரு மணி நேரம் ஆகி இருந்தது. 

இந்தத் தடவை பரவாயில்லை, நிறைய மீன்கள் கிடைத்திருந்தது. சில நேரம் வெகு தொலைவு சென்றும் கூடச் சரியான அளவு மீன் கிடைக்காமல் திரும்பி இருக்கின்றனர். 

மேலே திண்டில் இருந்த சாவியை எடுத்து கதவை திறக்க.. வீடு சுத்தமாக இருந்தது. சமையல் அறையில் உணவு தயாராக இருக்க…கொண்டு வந்த பணத்தைப் பத்திரபடுத்தியவன், குளித்து விட்டு வர எண்ணி, அலமாரியில் இருந்து துண்டை எடுத்துக் கொண்டு சென்றான். 

வெளியில் தனியாகக் குளியல் அறை இருக்க… உள்ளே வாலியில் தயாராக வெந்நீர் இருந்தது. உடம்புக்கு இதமாக வெந்நீரில் குளித்தவன், உடைமாற்றிச் சாப்பிட அமர்ந்தான். 

சூடாகச் சோறும், கோழிக் குழம்பும் இருக்க… இருந்த பசிக்கு, மொத்தமாக இலையில் கொட்டி, வேகமாக உண்டான். அவனுக்கு உணவு சூடாக இருந்தால் தான் பிடிக்கும். இத்தனை நாள் கொண்டு போன காய்கறியும் , கடல் மீனையும் வைத்து தான் சமைத்து உண்டனர். அதனால் இப்போது உணவை ஒரு பிடி பிடித்தான்.

சாப்பிட்டுப் பாத்திரத்தை கழுவும் இடத்தில் கொண்டு போட்டவன், கைகழுவிக்கொண்டு வீட்டை பூட்டிவிட்டு வெளியில் நடந்தான். 

வரிசையாக சில பல ஓட்டு வீடுகள். இரண்டு தெரு தள்ளி ரோஜாவின் வீடு இருக்கும் பக்கம் வந்தவன், அங்கே திர்னையில் உட்கார்ந்து மரியதாஸ் சாப்பிடுவதைப் பார்த்து, அங்குச் சென்றான். மரியதாஸ் உண்ண, அவருக்கு ரோஜா பரிமாறிக் கொண்டு இருந்தாள். 

“என்ன பிள்ள… எனக்குக் கறி சோறு ஆக்கி வச்சிட்டு, உங்க அப்பாவுக்கு வெறும் கீரையும் பருப்பும் வச்சு போடுற.” என அவன் போலி அக்கறை  காட்டி விசாரிக்க…மரியதாஸ் மகளை முறைக்க… ரோஜா அருளை முறைத்தாள். 

“ஓ… உங்க அப்பாவுக்கு வயசு ஆகிடுச்சு இல்ல… இப்படித்தான் உப்பில்லாம போடணும்.” என அவன் மேலும் வம்புக்கு இழுக்க…எழுந்து உள்ளே சென்ற ரோஜா, அவனுக்கு மட்டும் தெரியும்படி நின்று… “தயவு செய்து போ…” எனக் கையெடுத்து கும்பிட்டு கேட்க, 

பொழச்சு போ… என்பது போலப் பார்த்தவன், “சரி நான் வரேன்.” எனத் திரும்பி நடந்தான். 

“யாரு இந்த அனாதைப் பயலை இப்ப கூப்பிட்டாங்கலாம்.” என மரியதாஸ் வாய் விட… 

“ யாரைப் பார்த்து அனாதை சொல்றீங்க?” என அருள் சண்டைக்கு வர…
“உன்னைத் தான்டா.” என மரியதாசும் கையை உதறியபடி எழுந்து நின்றார்.

“ரெண்டு பேரும் திரும்ப உங்க சண்டையை ஆரம்பிச்சுடீங்களா?” என்றபடி ரோஜா இருவருக்கும் நடுவில் வர.

“யாரு ஆரம்பிச்சா? நானா உங்க அப்பாவா?” என்றான் அருள். 

“அனாதையை அனாதைன்னு சொல்லாம, வேற எப்படிச் சொல்வாங்களாம்?” மரியதாஸ் வேண்டும் என்றே அவனை வம்புக்கு இழுக்க.

அருள் கோபத்தில் அவரை அடிக்கச் செல்ல… குறுக்கே சென்ற ரோஜா… “என்ன அவரை அடிக்கப் போறீங்களா? அவரு அதுக்குத்தான் அப்படிப் பேசுறார். அப்புறம் உங்க இஷ்ட்டம்.” எனச் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள். 

ஒரு நிமிடம் ஆத்திரத்தில் அறிவை இழக்க இருந்தவன், சுதரித்துக் கொண்டான். 

“மாமா, உன் பெண்ணைக் கட்டிக் கொடுத்தா, நான் ஏன்யா அனாதையா இருக்கப் போறேன்?” எனப் புன்னகைக்க… 

“உன்னை மாதிரி அனாதை பயலுக்கு என் பெண் கேட்குதா?” என்றார் மரியதாசும் திமிராகவே. 

“ம்ம்.. பாரு ,உன் பெண்ணைக் கட்டிக்கிட்டு, உன்னை அனாதையா தெருவுல நிக்க விடுறேன்.” எனச் சவால் விட்டு அருள் திரும்பி சென்றான். 

அவன் சொன்னதைக் கேட்டு ஒரு நொடி பயந்தாலும், மகள் தன்னை விட்டுக் கொடுக்க மாட்டாள் என்ற தைரியத்தில் மீண்டும் சாப்பிட அமர்ந்தார். 

ரோஜா தண்ணீர் எடுத்துக் கொண்டு வர… “எல்லாம் நீ கொடுக்கிற இடம்தான். போயும் போயும் இந்த அனாதை பயல் தான் உனக்கு வேணுமா?” என அவர் கோபத்தை அவளிடம் காட்ட… 

“ஓ… அப்படினா, நீங்க வேற எதுவும் ராஜகுமாரனை எனக்குப் பார்த்து வச்சிருக்கீங்களா? இருந்தா காட்டுங்க, அவனையே கட்டிக்கிறேன்.” என இடக்காகக் கேட்ட ரோஜா, மேலும் தொடர்ந்தாள். 

“நீங்க பார்க்கிற ராஜகுமாரன் ஒண்ணுமே வாங்காம என்னைக் கட்டிட்டு போய்டுவானா…” 

“இதோ கழுத்தில காதுல போட்டிருக்கிறது எல்லாம் பித்தளை… இதுல என்னவோ என்னை சீர் வரிசை செஞ்சு கட்டிக் கொடுக்கிற மாதிரி பேச்சைப் பாரு.” 

“உன் அழகுக்கு உன்னைச் சும்மாவே கட்டிட்டு போவான் பாரு.” மரியதாஸ் நம்பிக்கையாகச் சொல்ல… 

“வந்தவனை வேண்டாம்ன்னு விரட்டிட்டு… இவரு எந்த ராஜகுமாரனுக்குக் காத்திருக்காரோ…” என நினைத்தவள், “சீக்கிரம் சாப்பிட்டு முடிச்சா தூங்கலாம். எனக்குத் தூக்கம் வருது.” என்றாள். 

மரியதாஸ் உண்டதும், பாத்திரங்களை உள்ளே எடுத்து சென்று உண்டவள், மீதம் இருந்த சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்து விட்டு உறங்கினாள். 

அருள் கடலுக்குச் சென்ற இந்தப் பதினைந்து நாட்களில் இல்லாத உறக்கம்… இன்று அவளைச் சுகமாக ஆட்கொள்ள… நிம்மதியாக உறங்கிப் போனாள்.

அங்கே ஒருவன் உறங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.






Advertisement