Advertisement

உப்புக் காற்று


அத்தியாயம் 4

“நான் தான் ஆரம்பத்திலேயே அருளுக்கு உன்னைக் கொடுக்க மாட்டேன்னு சொன்னேன் இல்ல… அப்புறம் நீங்க ரெண்டு பேரும் என் இப்படிப் பண்றீங்க?” 

“அவங்களுக்கு என்ன பா குறை?” 

“குறைன்னு நான் சொன்னேனா? உங்க அண்ணனை இந்தக் கடல்ல தான் பறிக்கொடுத்தேன். இதே மாதிரி அருளுக்கும் எதாவது ஆனா அப்புறம் உன்னோட நிலைமை.” 

“உங்க அண்ணிக்கு வந்த நிலை உனக்கும் வரணுமா… உன்னை அந்த நிலையில என்னால பார்க்க முடியாது.” என்றவர், வெளியே திண்ணையில் சென்று உட்கார்ந்து கொள்ள.. அவர் மறக்க விரும்பிய சம்பவம் அவர் மனக் கண் முன் அலைமோதியது. 

மரியதாசிற்கு இரண்டு பிள்ளைகள். ஆண் ஒன்று, பெண் ஒன்று. வரும் வருமானம் பெரிதாக இல்லை என்றாலும், அந்தச் சின்னக் குடும்பம் சந்தோஷமாகவே இருந்தது. 

திடிரென்று ஏற்பட உடல்நலக் குறைவால் மரியதாசின் மனைவி இறந்து விட… வீட்டை பார்த்துக் கொள்ளவும், ரோஜாவுக்குத் துணை என்றும் நினைத்து, இருபத்திரண்டு வயதேயான மகன் ஸ்டீபனுக்கு மரியதாஸ் திருமணம் செய்து வைத்தார். 

பக்கத்துக் கிராமத்தை சேர்ந்த நிர்மலாவோடு ஸ்டீபெனின் திருமணம் நடந்தது. இருந்ததோ, ஒரே அறை கொண்ட வீடு அல்லவா… அதனால் பக்கத்தில் தனியாக வசித்த முதட்டியின் வீட்டில், இரவு மட்டும் சென்று ரோஜா படுத்துக் கொள்ள… மரியதாஸ் வழக்கம் போல… திண்ணையில் தான். 

திருமணம் ஆன புதிது என்பதால்… ஸ்டீபன் கடலுக்குச் செல்லாமல் இருந்தான். அவனும் விசைப்படகில் தான் மீன் பிடிக்கச் சென்று வருவான். 
ரோஜாவை விட நிர்மலாவுக்கு இரண்டு வயது தான் அதிகம். அதனால் தோழிகள் போல இருவரும் பழகினர். வீட்டு வேலையும் பகிர்ந்து கொண்டு செய்தனர். 

“இந்த வீடே பெரிசு தான். நடுவுல ஒரு தடுப்புப் போட்டா போதும். எனக்கு ரோஜா வேற வீட்ல போய்ப் படுக்கிறது பிடிக்கலை.” என நிர்மலா சொன்னதற்கு, 

“இரு இந்தத் தடவை கடலுக்குப் போயிட்டு வந்ததும் போட்டுடலாம்.” என ஸ்டீபன் சொல்லி இருந்தான்.

திருமணம் முடிந்து ஒரு மாதம் சென்று ஸ்டீபன் கடலுக்குக் கிளம்ப, நிர்மலா கண்ணீருடன் வழியனுப்பி வைத்தாள். பதினைந்து நாட்கள் கணவன் இல்லாமல் இருக்க வேண்டுமே. ஆனால் அவளுக்குத் தனிமை தெரியாமல் ரோஜா பார்த்துக் கொண்டாள். 

சமுத்திரம் பரந்து விரிந்து கிடந்தாலும், எல்லோருக்கும் பொதுவானது இல்லை. கண்ணுக்கு தெரியாத எல்லைகள் அதற்கும் உண்டு. நம்முடைய எல்லைக் கோட்டுக்குள் தான் மீன் பிடிக்க வேண்டும். 

அந்தத் தடவை சோதனைக்கு என்று மீன்கள் சரியான அளவில் கிடைக்காமல் போக… இருந்த பண நெருக்கடியில், இலங்கையின் எல்லையைத் தாண்டி ஸ்டீபனின் படகு சென்றது. 

இலங்கையின் ரோந்து படகிற்கு அவர்கள் மீனவர்கள் எனத் தெரியாமல் இல்லை. ஆனாலும் தங்கள் வீரத்தை காண்பிக்க… மீனவர்களின் உயிர் தானே, போனால் போகிறது என்று இவர்கள் படகை நோக்கி சுட ஆரம்பித்தனர். அதில் குண்டடி பட்டு ஸ்டீபன் இறந்து போனான். 

அவனைத் தீவிரவாதி என முத்திரை குத்த முயன்ற இலங்கை அரசுடன் போராடி, அவனை மீனவன் என நிருப்பித்துக், அவன் உடலை கொண்டு வர… மீனவர்கள் அனைவரும் சேர்ந்து போராடினார்கள். அதில் அருளும் ஒருவன். 

காரியம் எல்லாம் முடிந்து, நிர்மலாவின் பெற்றோர் அவளைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு சென்று விட்டனர். மறுவருடம் வேறு ஒருவனுக்குத் திருமணமும் செய்து கொடுத்து விட்டனர். 

திருமணதிற்கு மரியதாசும், ரோஜாவும் சென்று இருந்தனர். நிர்மலாவுக்கு அந்தத் திருமணத்தில் விருப்பமே இல்லை. பெற்றோரின் வற்புறுத்தலுக்காகச் சம்மதித்து இருந்தாள். இவர்களைப் பார்த்ததும் இறந்து போன ஸ்டீபனை நினைத்து, அப்படி ஒரு அழுகை அழுதாள். 

என்னையும் உங்களோடு அழைத்துப் போங்கள். இந்தத் திருமணம் வேண்டாம் என அவள் கதறியது, இப்போதும் மரியதாஸின் மனதை கசக்கி பிழிவதாய் உணர்கிறார். 

ஒரு மாதம் என்றாலும், ஸ்டீபனும் நிர்மலாவும் வாழ்ந்த வாழ்க்கை அப்படி, திடிரென்று அது கலைக்கப்பட்டு மீண்டும் இன்னொருவரை திருமணம் செய்து வாழ்வதென்பது, அவ்வளவு எளிதான விஷயம் அல்ல… அந்தப் பெண் மனம் பட்ட பாடு இவருக்கு நன்றாகவே புரிந்தது. இந்த நிலை மகளுக்கும் வேண்டாம் என்றுதான் அவர் ரோஜாவை அருளுக்குத் திருமணம் செய்து வைக்க மாட்டேன் என அவ்வளவு முரண்டு பிடிப்பது. 

மகள் தன்னைப் புரிந்து கொள்ள மாட்டாளா… வேறு ஒருவன் அவளைத் திருமணம் செய்துகொள்ள வந்து விட மாட்டானா என நம்பிக்கையில் காத்திருக்கிறார். ஆனால் ரோஜா மனதளவில் அருளை கணவனாகவே நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என அவருக்குத் தான் இன்னும் புரியவில்லை. 

காதலனாக நினைத்துக் கொண்டிருந்தால் கூட மறப்பது எளிதானது அல்ல… இங்கே கணவனாகவே நினைத்துக் கொண்டிருப்பவள் மாறுவாளா? 

ஸ்டெலா வேலை பார்க்கும் ரெசார்டில் காலை எட்டு மணிக்கு சென்றால், மாலை எட்டு மணிக்குத்தான் வீடு திரும்ப முடியும். ரெசார்டின் வாயில் முன்பக்கம் சாலையில் இருந்தாலும், பின்பக்கம் வாயில் கடற்கரையை ஒட்டி இருக்கும். அந்த வழியாக வந்தால்… வீட்டிற்குச் செல்வது சுலபம் என்று ஸ்டெல்லா அந்த வழியாகத்தான் செல்வது. 

அன்றும் அது போல அவள் பின் வாயில் வழியாக வெளியே வர… அந்த ஹோட்டலின் முதலாளி ரமேஷ் அங்கே நின்று ஊழியர்களுடன் பேசிக் கொண்டு இருந்தான். 

ஸ்டெல்லாவை பார்த்ததும் அவளை நோக்கி வந்தவன், “இந்தப் பக்கம் எங்க போறீங்க?” என்றான். 

“எங்க வீடு இந்தப் பக்கம் தான் சார். இப்படிப் போனா ஈஸியா இருக்கும்.” 

“ஆனா அதுக்காகத் தனியா இந்த நேரத்தில இப்படிப் போறது பாதுகாப்பு இல்லை.” 

“நம்ம ரெசார்ட் தாண்டினா… அடுத்து இருக்கிறது எங்க கிராமம் தான். பயப்பட அவசியம் இல்லை. ஒரு குரல் கொடுத்தா, எங்க ஆளுங்க ஓடி வந்திடுவாங்க.” என அவள் நம்பிக்கையாகப் புன்னகைக்க, அந்த நம்பிக்கை ரமேஷுக்கு இல்லாததால்… அவளோடு இணைந்து நடந்தான். 

கடற்கரையை ஒட்டி இருவரும் மெதுவாக நடந்தனர்.  ரெசார்டின் எல்லை வந்ததும், அடுத்து அந்தக் கடற்கரை கிராமம் தான் இருந்தது. அதுவரை உடன் வந்தவன், அங்கேயே நின்றுகொள்ள… ஸ்டெல்லா அவனிடம் விடைபெற்றுத் தங்கள் வீட்டை நோக்கி நடந்தாள். 

முதல் வரிசையில் நிறையக் குடிசை வீடுகள் இருக்க… உள்ளே சற்று தள்ளி அடுத்து ஒட்டு வீடுகள் என வரிசையாக இருக்கும். அதில் ஸ்டெல்லாவின் வீடும் ஒன்று.

மறுநாள் ஸ்டெல்லா வீட்டிற்குச் செல்லும் போது ரமேஷ் உடன் செல்லவில்லை. ஆனால் அங்கிருந்த காவலாளியை எல்லை வரை சென்று விட்டு வர சொன்னான். 

ஒரு வாரம் சென்று மீண்டும் ஒருநாள் ரமேஷ் அவளுடன் இணைந்து கொண்டான். 

“உங்க அப்பாவும் மீனவரா?” 

“முன்னாடி கடலுக்குப் போயிட்டு இருந்தாங்க. இப்ப கமிஷன் ஏஜென்டா இருக்காங்க. கடலுக்குப் போயிட்டு வந்தவங்ககிட்ட இருந்து மீனை வாங்கி ஏலம் விடுவாங்க.” 

“ஓ…ஓகே…. உன்னோட கூடப் பிறந்தவங்க எத்தனை பேர்?” 

“ஒரு அக்கா இருக்கா, அவளுக்குக் கல்யாணம் ஆகி வேற ஊருக்கு போயிட்டா.” 

“ஓகே… அப்ப அடுத்து உங்களுக்குத்தான் கல்யாணமா?” 

“இப்போதைக்கு இல்லை… கொஞ்ச நாள் ஆகும்.” என்றாள். 

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டு வருவதை மரியதாஸ் பார்த்துக் கொண்டிருந்தார். ரமேஷ் அவளை எல்லையில் விட்டுவிட்டு திரும்ப, ஸ்டெல்லா அருகே வந்ததும் யாரு என்று விசாரித்தார். 

“அவரு எங்க முதலாளி. தனியா வரேன்னு துணைக்கு வந்தார்.” என்றார். அப்படியா எனக் கேட்ட மரியதாஸ் பிறகு வேறு ஒன்றும் கேட்கவில்லை. ஸ்டெல்லாவும் அவரிடம் சொல்லிக் கொண்டு வீட்டை நோக்கி சென்றாள். 

ஸ்டெல்லா பார்க்கும் வேலைக்கு ரமேஷை தினமும் பார்க்கும் வாய்ப்பு இல்லை. ஆனால் சில நேரம் ரெசார்டின் உள்ளே வேலையாகச் செல்லும்போது, மேர்ப்பார்வையிட அவனும் வந்தால்… எதிரே பார்ப்பது தான். அப்போது அறிமுகமான புன்னகை ஒன்றை சிந்துவிட்டு செல்வான். 

ஸ்டெல்லாவின் உடன் வேலை செல்லும் பெண்களுக்கு ரமேஷ் ஸ்டெல்லாவிடம் தனி அக்கறை காட்டுவதாகத் தெரிந்தது. அதனால் இருவரையும் சேர்த்து வைத்து பேச ஆரம்பித்தனர். அது ஸ்டெல்லாவுக்கு மட்டும் தான் தெரியும். 

ஸ்டெல்லா வேலைக்குச் செல்வதால்… வீட்டில் வந்து எந்த வேலையும் இருக்காது. சாப்பிட்டுக் கையில் கதை புத்தக்கத்துடன் உட்கார்ந்து விடுவாள். 

எப்போதோ ஒருமுறை தான் ரமேஷ் உடன்வருவது, முக்கால்வாசி நாட்கள் காவலாளி தான் உடன் வருவார். சில நாட்களில் ஸ்டெல்லாவுக்கு ரமேஷ் மீது ஒரு ஈர்ப்பு உண்டானது. அவளும் தன்னைப் பார்க்கவே உடன்வருகிறான் என நினைத்துக் கொண்டாள். ஸ்டெல்லா நல்ல அழகியும் கூட. அதனால் கூட அவன் தன்னை விரும்பக் கூடும் என நினைத்தாள்.

ரமேஷ் முதல் நாள் அக்கரையில் தான் வந்தான். அடுத்து அவன் உடன் வருவதற்குக் காரணம், ரெசார்டின் எல்லையில் பெரிதான தடுப்பு சுவர் இருக்கும். அதற்கு அடுத்து இருக்கும் மீனவ கிராமத்தில் இருந்து, கடற்கரையின் வழியாக ரெசார்ட் உள்ளே வர முடியும். சுவற்றிக்கு இந்தப்புறம் காவலாளிகள் இருப்பார்கள், அவர்கள் ஒழுங்காக வேலைப் பார்கிறார்களா எனப் பார்க்கவே வருவான். 

முதல்நாள் அப்படி வரும் போது, அங்கிருந்த காவலாளி அந்த மீனவ ஆட்களிடம் நன்றாகப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டான். இவன் அவர்களுக்கு எதாவது சலுகை தரக் கூடுமோ என்ற எண்ணத்தில், தமிழ் தெரியாத ஒரு வட இந்தியனை அங்கே காவலுக்கு மாற்றி விட்டான். அதனால் அந்தப் பக்கம் செல்லும்போது, அவர்கள் எல்லையைக் கண்காணிப்பது வழக்கம். 

அதைத் தன் மீது உள்ள ஆர்வத்தால் வருவதாக ஸ்டெல்லா நினைத்துக் கொண்டாள். உடன் தூபம் போட்ட தோழிகளின் பேச்சும் சேர்ந்துகொள்ள.. மனதில் தேவையல்லாத ஆசையை வளர்த்துக் கொண்டாள். 

ரமேஷ் ஸ்டெல்லாவுடன் உடன் வருவதைக் கவனித்த சிலர், இருவரும்  விரும்புவதாகவே நினைத்து விட்டனர். அதற்குக் கண் காத்து மூக்கு எல்லாம் வைத்து அவர்கள் பேச… உடன் இருந்த மரியதாஸ், ஸ்டெல்லாவுக்குப் பெரிய அதிர்ஷ்ட்டம் அடித்திருப்பதாக நம்பினார். 

ரோஜா ஸ்டெல்லாவை விட அழகானவள், இந்தப் பெண் அங்கே வேலைக்குச் சென்றிருந்தால்… அந்த அதிர்ஷ்ட்டம் ரோஜாவுக்கு அடித்திருக்குமோ என அவருக்கு எண்ணம் வேறு… 

பதினைத்து நாட்கள் கழித்து ஊர் திரும்பிய அருள் தனியாக வரவில்லை. அவனோடு பெண் ஒருத்தியும் வந்தாள். 

விசைப் படகில் பெண்களை அழைத்துக் கொண்டு செல்லக் கூடாது என விதியே இருக்கிறது. அப்படியிருக்க இந்தப் பெண் எங்கிருந்து வந்திருக்கிறாள் எனப் புரியாத நிலை. 

படகு கரைக்கு வரும் முன்னரே ரோஜா படகு துறைக்குச் சென்று காத்திருந்தாள். அருள் ஒரு பெண்ணுடன் நின்று சிரித்துப் பேசியபடி வருவதை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தாள். 

என்னோட மட்டும் சண்டை போட்டுட்டுப் போகத் தெரியுது. இப்ப அவகிட்ட மட்டும் பல்லைக் காட்டுவதைப் பார் என மனதிற்குள் கரித்துக் கொட்டியவள், வெளியே காட்டிக் கொள்ளாமல் திமிராகவே நின்றாள். 

அவளைப் பார்த்ததும் அருள் அந்தப் பெண்ணுடன் பேச மறந்து, இவளை பார்வையால் வருட…. ரோஜாவின் எரிச்சல் மறைந்து, முகம் மலர, அவனைப் பார்த்துக் கை அசைத்தாள். அவனும் பதிலுக்கு அவளைப் பார்த்துப் பெரிதாகப் புன்னகைக்க, அது ஒன்றே போதும் என நினைத்தவள், அங்கிருந்து சென்று விட்டாள். 

படகு கரையைச் சேர்ந்ததும், “ நாம அப்புறம் பார்க்கலாம்.” என அந்தப் பெண்ணிடம் சொன்ன அருள், “டேய்… நான் இப்ப கொஞ்ச நேரத்தில வரேன்.” என நண்பர்களிடம் சொல்லிவிட்டு, படகில் இருந்து தாவி குதித்து வெளியே சென்றான். 

அவன் சென்ற நாட்களின் கணக்கை கொண்டு நேற்றே வீடு எல்லாம் சுத்தம் செய்து வைத்து இருந்தாள். இப்போது நேராக அவன் வீட்டுக்கு வந்தவள், அடுப்பில் உலையை வைத்து விட்டு, அரிசியைக் கழுவ ஆரம்பித்தாள். 

திடிரென்று கேட்ட காலடி சத்தத்தில், கையில் இருந்ததை வைத்துவிட்டு, அவள் பார்க்கும் போதே, உள்ள வந்த அருள், வந்த வேகத்தில் அவளை நேராகச் சென்று அனைத்து இருந்தான். முதலில் திகைத்து போனாலும், அவளும் அவனை அனைத்துக் கொண்டாள். 

“இனிமே உன்கிட்ட சண்டை போட்டுட்டு கடலுக்குப் போகவே மாட்டேன் ரோஜா… என்னால அங்க போய் நிம்மதியாவே இருக்க முடியலை. எப்ப உன்னைப் பார்ப்பேன்னு ஆகிடுச்சு.” என்றான் மனதை மறையாது. 

ரோஜாவிடம் இருந்து பதிலே இல்லை. விலகி அவள் முகம் பார்த்தவன், அவள் கண்கள் கலங்கி இருக்கவும், இன்னும் உருகி போனான்.

அவள் இரண்டு கன்னத்திலும் அழுத்தி முத்தமிட்டவன், அவள் இதழை நெருங்கும் நேரம், வெளியே இருந்து, “ரோஜா…” என மரியதாஸின் குரல் கேட்க, அவன் எரிச்சலாக உணர, ரோஜா பதறி விலகியவள், அவனைத் தள்ளி விட்டு வெளியே சென்றாள். 

அவளைப் பார்த்ததும் “வா வீட்டுக்கு.” என உறுமிவிட்டு மரியதாஸ் வீட்டுக்கு செல்ல… ரோஜா அவர் பின்னே சென்றாள். 

உலை கொதித்து இருக்க.. அதில் அரிசியைப் போட்டவன், மாற்று உடை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றான். 

ரோஜா தன் வீட்டிற்குத் தான் செல்வாள் என்று தெரியும், அதனால் அவளைப் பார்க்கும் அவளில் அப்படியே ஓடி வந்திருந்தான். 

குளித்துவிட்டு மீண்டும் படகிற்குச் சென்றுவிட்டான். இன்னும் படகில் இருந்து மீன்களை இறக்கி இருக்க மாட்டார்கள். அது தவிர மற்ற வேலைகள் இருந்தது. 

வீட்டிற்கு வந்த ரோஜாவுக்கு மரியதாஸிடம் இருந்து நிறையத் திட்டுக்கள் கிடைத்தது. இனி அவன் வீட்டுப் பக்கம் போனால், அவ்வளவுதான் என மிரட்டி இருந்தார். 

ஏற்கனவே அருள் மீது அவருக்குக் கோபம் தான். இப்போது ஸ்டெல்லா போல, ரோஜாவுக்குக் கிடைக்க வேண்டிய நல்ல வாழ்க்கையை அவன் கெடுத்து விட்டதாக நினைத்தார். அதனால் இப்போது இன்னும் அதிகக் கோபமாக இருந்தார். 

ஆசைப்பட எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால் அதற்கும் ஒரு எல்லை வேண்டும். பணக்காரன் ஏழை பெண்ணை மணமுடிப்பது எல்லாம் கதைகளில் தான். எதார்த்த வாழ்வில் அல்ல. 






 

Advertisement