Advertisement

உப்புக் காற்று 


அத்தியாயம் 2 


விடியலில் திண்ணையில் படுத்திருந்த மரியதாஸ் எழுந்து முகம் கைகால் கழுவிக்கொண்டு வந்து கதவை தட்ட… ரோஜா வந்து கதவை திறந்தவள், தந்தை கடலுக்குச் செல்ல தயாராக இருப்பதைப் பார்த்து, “இன்னைக்குப் போகணுமா பா…” எனக் கேட்டாள். 

“புயல் கரையைக் கடந்தாச்சு.. மழையும் இல்லை. வீட்ல இருந்து என்ன செய்யப்போறேன்.” 

“ம்ம் சரி… நேத்தோட அரிசி காலி ஆகிடுச்சு. ரவை, கேப்பை எதுவும் இல்லை.” எனச் சொல்லிக் கொண்டே, பாத்திரத்தில் இருந்த பழைய சோறை பிழிந்து தூக்கு வாலியில் போட்டவள், அதில் கொஞ்சம் தயிரை ஊற்றி பிசைந்து, முன் தினம் வறுத்து வைத்திருந்த கருவாடு துண்டுகளை மேலே வைத்து, மூடி தந்தையிடம் கொடுத்தாள். 

“நான் வரும் போது அரிசி வாங்கிட்டு வரேன்.” என்றவர், உணவு பாத்திரத்தை வாங்கிக் கொண்டு சென்றார். 

மரியதாஸ் வழியில் ஒரு டீ குடித்துவிட்டு கடலுக்குச் செல்ல… இவருடைய கூட்டாளிகள் நாட்டுப் படகை கடலுக்குள் வண்டி வைத்து தள்ளிக் கொண்டு இருந்தனர். 

அதில் சென்று ஏறியவர், தூக்கு வாலியை ஓரமாக வைத்துவிட்டுத் துடுப்பை கையில எடுத்தார். இன்னொருவரும் சேர்ந்து துடுப்பு போட… நிறையத் தண்ணீர் இருக்குமிடம் வந்ததும், துடுப்பு போடுவதை நிறுத்திவிட்டு, மோட்டாரை போட்டு விட்டனர். 

சிறிய என்ஜின் கொண்ட மோட்டார் தான். அதனால் அதிக வேகம் இல்லாமல் மிதமான வேகத்தில் சென்றது. குறிப்பிட்ட இடம் வந்ததும், படகை நிறுத்திவிட்டு வலையைப் போட்டனர். பிறகு தூண்டிலும் போட்டுச் சின்னச் சின்ன மீன்களைப் பிடித்தனர். 

மரியதாஸ் சென்றதும் மீண்டும் படுத்து உறங்கிவிட்ட ரோஜா, சற்று தாமதமாகவே எழுந்து குளித்து நைட்டி அணிந்து வந்தவள், தந்தைக்குக் கொடுத்துவிட்டது போக, எஞ்சி இருந்த நீராகாரத்தில் உப்பு போட்டு குடித்தாள். வேறு ஒன்றும் சாப்பிடுவதற்கு இல்லை. 

கழுவதற்கு இருந்த பாத்திரங்களை, எடுத்துக் கொண்டு வெளியில் சென்று உட்கார்ந்து அவள் கழுவ… பக்கத்து வீட்டுப் பெண் வனஜா அவளிடம் பேச்சுக் கொடுத்தார். 

“உங்க அப்பா கடலுக்குப் போயிட்டாரா?” 

“ஆமாம் கா…” 

“இன்னைக்கு என்ன உங்க அப்பா பிடிச்சிட்டு வர மீன்னை வச்சு குழம்பா?” 

“சோறே அவர் வந்த பிறகு தான் ஆக்கணும். அரிசி இல்லை.” 

“என்கிட்டே இருக்கு ரோஜா… வேணா எடுத்துக்கோ…” 

“இல்லை கா, அப்பா வரும் போது வாங்கிட்டு வரேன்னு சொல்லி இருக்கார்.” என்றவள், கழுவிய பாத்திரங்களை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள். 

அவர்கள் பேசுவதைக் கேட்டபடி அருள் வந்தான், வந்தவன் ரோஜா வீட்டின் திண்ணையில் உட்கார்ந்து கொள்ள… 

“என்ன அருளு, நேத்து கரை ஏற ரொம்பச் சிரம பட்டியோ?” வனஜா கேட்க, 

“ஆமாம் கா…இது என்ன புதுசா.” என்றான். 

“அதைச் சொல்லு…” என்றவர், வீட்டிற்குள் சென்று விட…
அவன் குரலை கேட்ட ரோஜா, கொடியில் இருந்த துப்பட்டாவை எடுத்து மேலே போட்டுக் கொண்டு வெளியே வந்தாள். 

“உங்க அப்பா எங்க கடலுக்குப் போயிட்டாரா?” 

“தெரிஞ்சு தான வந்திருக்கீக. அப்புறம் என்ன கேள்வி?” 

“ரொம்ப வாய் ஆகிடுச்சு உனக்கு. சாப்பிட்டியா?” 

“ம்ம்…” என்று அவன் முகம் பார்க்காமல் சொன்னதிலேயே, அவள் சாப்பிட்ட லட்ச்சணம் அவனுக்குத் தெரிந்தது. 

செல்லை எடுத்து யாரையோ அழைத்தவன், “அக்கா, நான் ரோஜா வீட்ல இருக்கேன். பத்து இட்லி கொடுத்துவிடு.” என்றான். 

“சரி அருளு, உனக்குச் சூடா இருந்தா தான பிடிக்கும். இப்ப ஊத்திட்டு கொடுத்து விடுறேன்.” என்றார், இட்லி கடை வைத்திருக்கும் புவனா.   

அருள் தலைக்குப் பின்னால் கையைக் கொடுத்து அங்கேயே படுத்துக் கொண்டான். சாப்பிட தட்டுத் தண்ணீர் எல்லாம் கொண்டு வந்து வைத்த ரோஜா, “இங்க பக்கத்தில ஒரு ரெசார்ட் திறந்து இருக்காங்க இல்ல… அங்க ஸ்டெல்லா வேலைக்குப் போறாளாம். என்னையும் வரியான்னு கேட்கிறா, நான் போகட்டா?” 

“நீ எதோ உங்க அப்பா சம்மதம் இல்லாம கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னதுனால… நானும் அவரு சம்மதிக்கடும்ன்னு பொறுமையா இருக்கேன்.” 

“நீ இப்படி எல்லாம் பேசினேன்னு வை… எவனைப் பத்தியும் கவலை இல்லாம, தாலியை கட்டிட்டு போயிட்டே இருப்பேன்.” அருள் சொல்ல, ரோஜாவுக்குக் கோபமாக வந்தது. 

“வேலைக்குப் போறது தப்பா?” 

“வேலைக்குப் போறது தப்பு இல்லை. அது ஹோட்டல் மாதிரி, அங்க கல்யாணம் ஆகாத பொண்ணுங்க போறது சரி இல்லைன்னு சொல்றேன்.” 

“நிறைய வாலிப பசங்க, தண்ணி அடிக்கிறவங்கதான் அங்க வந்து தங்கிறாங்க. அது உனக்குப் பாதுகாப்பு இல்லை.” 

“அப்படிச் சொல்லுங்க. அதை விட்டு ஏன் தேவை இல்லாதது எல்லாம் பேசுறீங்க?” 

“சரி பேசலை… ஆமாம் நான் உன்னைப் பகல்ல நைட்டி போடக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன் இல்ல… 

“நான் வீட்டுக்குள்ள தான போட்டிருக்கேன். நீங்க இங்க வந்திட்டு என்னைத் தப்பு சொல்றீங்களா?” 

“இந்த நைட்டியை எவன் கண்டு பிடிச்சான் தெரியலை…ஆளாளுக்கு இதை போட்டுட்டு தான் சுத்துறாங்க.” 

“ஒரு புடவை வாங்கிற காசுல, மூன்னு நைட்டி வாங்கிடலாம் அதுக்குத்தான்.” என்றாள். 

அப்போது ஒரு பையன் இட்லி கொண்டு வர… அருளுக்குச் சூடாகத் தட்டில் எடுத்து வைத்தவள், மீதம் இருந்ததை வேறு பாத்திரத்திற்கு மாற்றிவிட்டு, புவனாவின் பாத்திரங்களை கழுவி, அந்தப் பையனிடமே கொடுத்துவிட்டு வந்து அமர்ந்தாள். 

“உனக்குத் தனியா சொல்லனுமா… சாப்பிடு.” என்ற அருள் சாப்பிடுவதில் கவனமாக. 

அவனைப் பார்வையால் வருடிக்கொண்டு ரோஜா சாப்பிட…. சாப்பிடுவதில் கவனமாக இருந்தவன், அவள் பார்வையை உணர்ந்ததும், உண்பதை நிறுத்திவிட்டு, அவளைப் பார்த்துப் புருவத்தை உயர்த்த… ரோஜா முகம் சிவக்க, தலையைக் குனிந்து கொண்டாள். 

“நீ இப்படிப் பார்த்தே நாளை ஓட்டிடுவ போல… எனக்கு இந்தப் பார்வை எல்லாம் பத்தாது. சீக்கிரம் உங்க அப்பாவை கல்யாணத்துக்குச் சம்மதிக்க வை.” என்றவன், வேகமாக உண்டு கைகழுவி விட்டு எழுந்து செல்ல… 

அவன் இல்லாத நேரம்தான், அவன் வீட்டிற்குச் செல்வது எல்லாம். அவன் இருக்கும்போது, அந்தப் பக்கமே செல்ல மாட்டாள். 

“மதியம் அப்பா வந்ததும், மீன் குழம்பு வச்சு கொடுத்து விடுறேன். நீங்க சாப்பாடு மட்டும் வச்சுக்கோங்க.” ரோஜா சொல்ல, 

“இல்லை வேண்டாம். நான் இன்னைக்கு டவுனுக்குப் போறேன். வெளிய சாப்பிட்டுகிறேன். உனக்கு நான் வரும் போது பிரியாணி வாங்கிட்டு வரேன்.” எனச் சொல்லிவிட்டுச் சென்றான். 

அங்கே கடலில் தான் கொண்டு வந்த உணவை எடுத்து வைத்து மரியதாஸ் சாப்பிட்டவர், மீண்டும் மீன் பிடிப்பதில் கவனம் செலுத்தினார். அன்று எதுவம் சரியாகக் கிடைக்கவில்லை. மதியம் வரை பார்த்துவிட்டு கரைக்குத் திரும்பினர். 

கொண்டு வந்த மீன், படகின் வாடகைக்குக் கூடக் கட்டுப்படி ஆகவில்லை. அன்று அவருக்கு ஒரு வருமானமும் இல்லை. 

ஒரு பக்கம் நிழலில் உட்கார்ந்து, வலையைத் தைத்துக் கொண்டிருந்த மணியிடம் சென்றவர், “மணி, ஒரு அம்பது ருபாய் இருந்தா கொடு. நாளைக்குக் கொடுக்கிறேன். வீட்டுக்கு அரிசி வாங்கணும். ரோஜா காலையில் சாப்பிட்டுச்சான்னு கூடத் தெரியலை.” என்றார். 

மணி உடனே ஐம்பது ருபாய் எடுத்து கொடுக்க… அதை வாங்கிக் கொண்டு கடைப்பக்கம் சென்றார். 

அவர் சென்றதும், தனக்குப் பின்னே இருந்த பாறையில் படுத்து இருந்த அருளைப் பார்த்த மணி, “நீ சொன்னேன்னு தான் அவருக்குக் கேட்கிற நேரம் எல்லாம் பணம் கொடுக்கிறேன்.” என்றார். 

“அது தான் அவரு திருப்பிக் கொடுக்கிறார் இல்ல… அப்படி அவரால கொடுக்க முடியலைன்னா, நான் கொடுப்பேன். நீ அவரு கேட்கும் போது, இல்லைன்னு சொல்லாம பணம் கொடு.” என்றான். 

“பார் டா மாமனாருக்கு பரிஞ்சு பேசுறதை.” என ஜோசப் கிண்டல் செய்ய… 

“வெட்டி வீராப்பு பார்காம அவரு பெண்ணைக் கட்டிக் கொடுத்திட்டு போகலாம்.” என மணி சொல்ல… அருள் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான். 

மரியதாஸ் அரிசியோடு வீட்டுக்கு சென்றவர், மகளிடம் கொடுக்க, அதை வாங்கி உலை வைத்த ரோஜா, தூக்குவாலியில் இருந்த மீனை எடுத்துக் குழம்பு வைக்க ஆயுத்தமானாள். 

“என்ன மா முடிவு பண்ண? ஸ்டெல்லா உன்னை வேலைக்குக் கூப்பிட்டதே.” 

“இல்லைப்பா நான் போகலை. ராஜாத்தி அக்காகிட்ட தையல் கிளாஸ் போறேன் இல்ல.. கொஞ்ச நாள்ல மெஷின் வாங்கி வீட்லையே துணி தைக்கலாம்ன்னு பார்க்கிறேன்.” 

“இந்த முடிவு நீயா எடுத்தியா.. இல்லைனா அந்த அனாதை பயல் உன்னை வேலைக்குப் போகக் கூடாதுன்னு சொன்னானா? இப்ப எல்லாம் நீ அவன் பேச்சைத்தான் கேட்கிற.” 

“அங்க பாதுகாப்பு இல்லைன்னு சொல்றாங்க.” 

“அது தானே பார்த்தேன். அவன்தான் எதாவது சொல்லி இருப்பான். நீ வெளிய வேலைக்குன்னு போய், வேற நல்ல வாழ்க்கை உனக்கு அமைஞ்சிடுமோன்னு அவனுக்குப் பயம். அதுதான் சும்மா எதோ ஒரு காரணம் சொல்றான்.” 

“அவுக எனக்காகத்தான் பார்க்கிறாங்க. கொஞ்ச நாள் போகட்டும், அப்புறம் ஸ்டெல்லா சொல்றதை வச்சு முடிவு பண்ணிக்கலாம்.” என்றவள், சமையலை கவனிக்க ஆரம்பித்தாள். 

குழம்பு வைத்து முடித்ததும், தந்தைக்கு உணவு பரிமாறி, தானும் உண்டுவிட்டு, தையல் வகுப்பில் சொல்லிக் கொடுத்தது போல… ஒரு துணியை எடுத்து வைத்துக் கொண்டு கை தையல் பழகினாள். 

இரவு எட்டு மணி போல வேலை முடிந்து வீட்டிற்கு வந்த ஸ்டெல்லாவிடம், மரியதாஸ் அவள் வேலையைப் பற்றி விசாரித்தார். 

“ரொம்பக் கஷ்ட்டமான வேலை இல்லை மாமா. கண்ணாடி தட்டு டம்ளர் எல்லாம் கழுவி இருக்கும். அதை நல்லா துடைச்சிட்டு, அழகா அடுக்கி வைக்கணும். அப்புறம் ஒவ்வொரு டேபிளையும் தட்டு டம்ளர் ஸ்பூன் எல்லாம் அழகா அடுக்கி வைக்கணும்.” 

“சாப்பாடு எல்லாம் அவங்களே எடுத்து சாப்பிடுற மாதிரி இருக்கும். ஆனா அவங்க எதாவது கேட்டா, அதை டேபிளுக்குக் கொண்டு போய்க் கொடுக்கணும்.” 

“அங்க வேலைக்குப் போறவங்களுக்கு, அவங்களே ஒரே மாதிரி டிரஸ் கொடுத்திடுறாங்க.” 

“இது தானா…” என ஸ்டெல்லா அணிந்து இருந்த புடவையைக் காட்டி மரியதாஸ் கேட்க, “ஆமாம் மாமா.” என்றாள். 

“நல்லா இருக்கு. எவ்வளவு மா சம்பளம்.” 

“ஆறாயிரம் மாமா.” 

“ஆறாயிரமா? நல்ல சம்பளமா இருக்கே.” எனக் கண்கள் பளபளக்க கூறியவர், ரோஜாவை பார்க்க, அவள் ஆர்வம் இல்லாமல் கேட்டுக் கொண்டு இருந்தாள். 

“நிரந்தர வருமானம் இல்லாத இந்தக் கடலை நம்பி இருக்கிறதுக்கு… உன்னை மாதிரி மாத சம்பளத்துக்கு வேலைக்குப் போய்டலாம்.” 

“இந்தப் பொண்ணு சொன்னா கேட்க மாட்டேங்குது.” என்றவர், எழுந்து வெளியே சென்றுவிட்டார். 

“நீயும் வரலாம் இல்ல…” 

“நான் அங்க வேலைக்குப் போறது அருளுக்குப் பிடிக்கலை… நீ கொஞ்ச நாள் போ.. நான் அப்புறம் அவுககிட்ட கேட்டுப் பார்கிறேன்.” 

“ம்ம்… சரி, இந்தா அருள் அண்ணன் இதை உன்கிட்ட கொடுக்கச் சொல்லுச்சு, அதுதான் வந்தேன்.” என்றவள், ஒரு பையைக் கொடுத்துவிட்டு சென்றாள். 

தந்தைக்கு உணவு எடுத்து வைத்து அவர் சாப்பிட்டதும், ரோஜா நிதானமாக அருள் கொடுத்திருந்த பையைப் பிரித்துப் பார்க்க… அதில் அவளுக்குப் பிரியாணியும், ஒரு புடவையும் இருந்தது. 

நீல நிறத்தில் பஞ்சு போல மென்மையான ஷிபான் புடவையைக் கையில் வைத்து வருடிக் கொடுத்தவள், சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்து இருந்துவிட்டு, பிறகு பிரியாணியைப் பிரித்துச் சாப்பிட்டாள். 

மரியதாஸ் கொடுக்கும் பணம் வீட்டுச் செலவுக்குத்தான் சரியாக இருக்கும். எப்போதாவது தான் உடைகள் எடுப்பாள். அருள் தான் அவளுக்கு நிறைய உடைகள் எடுத்துக் கொடுத்திருக்கிறான். வேண்டாம் என்று சொன்னாலும் கேட்க மாட்டான். 

“நான் கடலுக்குப் போனா சமைச்சு கொடுக்கிற, கடல்ல இருந்து திரும்பி வரும் போதும், வீட்டை சுத்தம் செஞ்சு சமைச்சு வைக்கிற… இதெல்லாம் நீ எந்த உரிமையில செய்யிற? அதே உரிமையில நானும் வாங்கிக் கொடுக்கக் கூடாதா?” என்றவன் தொடர்ந்து, 

“உன்னைவிட்டா எனக்கு வேற யாரு இருக்கா? நான் இது மாதிரி எடுத்து கொடுக்க… நான் சம்பாதிக்கிறேன் ஆனா அது யாருக்காகன்னு சில நேரம் மனசுல கேள்வி வருது. எதுக்கு இப்படிக் கஷ்ட்டப்பட்டுச் சம்பாதிக்கனும்ன்னு ஒரு சலிப்பு வருது. நீ இருக்கேன்னு சொல்லித்தான் மனசை தேத்திக்கிறேன்.” என்றான். 

அதிலிருந்துதான் அவன் கொடுப்பதை வாங்கிக்கொள்ள ஆரம்பித்தாள். ஆனால் அதற்காக அடிக்கடி எடுத்து கொடுக்கவும் விடமாட்டாள். 

சேலையை வெளியே வைத்துவிட்டே உறங்கிப் போனாள். மறுநாள் காலை வீட்டிற்குள் வந்த மரியதாஸ், அந்தப் புடவையைப் பார்த்துவிட்டு, ஏது என்று கேட்க, ரோஜா பதில் சொல்லாமல் தயங்கியதிலேயே அவருக்குப் புரிந்து விட… புடவையைக் கையில் எடுத்துக் கொண்டு கோபமாக அருளை தேடி சென்றார். 

அருள் வீட்டில் இல்லை. கடற்கரையில் நண்பர்களோடு கைப் பந்து விளையாடிக் கொண்டு இருந்தான். 

அவன் எதிரே சென்று நின்றவர், புடவையைத் தூக்கி அவன் முன் போட்டு, “நீ யாருடா என் பொண்ணுக்கு புடவை எடுத்துக் கொடுக்கிறதுக்கு?” எனச் சண்டையிட… 

“இதைக் கேட்கிறதுக்கு இவ்வளவு தூரம் வந்தீங்களா? அதை உங்க பொண்ணுகிட்டயே கேட்க வேண்டியது தானே…” என்றான் அருள் கிண்டலாக. 

“அவளை என்ன கேட்கிறது? நான் சொல்றேன், உன் கனவு ஒருநாளும் பலிக்காது. உன்னைப் போல அனாதைக்கும், வெறும் பயலுக்கும், நான் என் பெண்ணைக் கொடுக்க மாட்டேன். இனி என் பெண்ணைச் சுத்தி வர்ற வேலையை வச்சுக்காத.” 

மரியதாஸ் பேசியது அருளின் மனதை கீறி விட… பதிலுக்கு அவருக்கும் வலிக்கும்படி திருப்பிக் கொடுத்தான். 

“எனக்குப் பொண்ணு கொடுக்காம வேற யாருக்கு கொடுப்ப? நேத்து சோறு கூட அந்தப் பிள்ளைக்கு நீ கடன் வாங்கித்தான் போட்ட… இவரு என்னவோ ராஜ பரம்பரை மாதிரி பேச்சைப் பாரு.” 

“உன்னை விட உன் பெண்ணை நான் நல்லா வச்சுப்பேன். எங்க அப்பா சம்மதம் இல்லாம கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு உன் பொண்ணு சொன்ன வார்த்தைக்காகத்தான், இவ்வளவு நாள் பொறுத்து போனேன். இல்லைனா உன் பெண்ணைத் தூக்கிட்டுப் போய்த் தாலி கட்ட முடியாம இல்லை.” 

அருள் பேசியதில் மரியதாஸ் வாய் அடைத்து போய் நின்று விட… 
“ஆமாம் நீங்க தூக்கிட்டுப் போய்க் கல்யாணம் பண்ற வரை என் கை பூ பறிக்கும் பாருங்க.” எனச் சீறிக் கொண்டு வந்தது ரோஜாவே தான். 

“எங்க அப்பா சம்மதம் கொடுக்கிற வரை காத்திருக்கக் முடிஞ்சா காத்திருங்க… இல்லைனா வேற யாரையாவது கல்யாணம் பண்ணிட்டு போங்க…” 

“எங்க அப்பா எனக்குச் சோறு போடலைன்னு நான் உன்கிட்ட சொன்னேனா?” 

“என்ன இருந்தாலும் அவர் பெரியவர் தானே… அவர் பேசினா நீங்களும் பதிலுக்கு மரியாதை இல்லாம பேசுவீங்களா?” என அருளிடம் கத்தியவள், அவள் அப்பாவை அழைத்துக் கொண்டு சென்றாள். 

அருளுக்குக் கோபம் உச்சியில் இருந்தது. சிறிது தூரம் சென்றவள், திரும்ப வந்து, கீழே கிடந்த புடவையை எடுத்துக் கொண்டு சென்றாள். 

இவள் தன்னை வாழவும் விட மாட்டாள், சாகவும் விட மாட்டாள் என நினைத்தவன், அவள் சென்ற திசையையே முறைத்து பார்த்துக் கொண்டு இருந்தான்.

 

Advertisement