Advertisement

உப்புக் காற்று 

அத்தியாயம் 13

பவித்ராவின் திருமணத்திற்கு இன்னும் மூன்று மாதங்களே இருந்த நிலையில், ரேஷ்மாவிற்கும் வரன் பார்த்து இருந்தனர். மாப்பிள்ளை வீட்டினர் திருமணத்திற்கு அவசரப்படுத்த, ரேஷ்மாவின் பெற்றோரும், இப்போது நிச்சயத்தை முடித்துவிட்டால், மாதவன் பவித்ரா திருமணம் முடிந்தவுடன், இவர்கள் திருமணத்தையும் வைத்து விடலாம் என நினைத்தனர். 

மாதவனும் தங்கையின் திருமணத்தை முடித்துவிட்டு அமெரிக்கா சென்றால்… நல்லது தானே என்ற எண்ணம். 

அப்போதே அருள் சொன்னான். “ஏன் கல்யாணத்தை இப்படி அவசரமா வைக்கிறீங்க. மாதவன் வந்த பிறகு நிச்சம் பண்ணுவோம். அப்புறம் ஒரு ஆறு மாசம் கழிச்சுக் கல்யாணம் பண்ணலாம். உங்களுக்கு என்ன பணத்துக்கா குறைச்சல், இல்லை தங்கை கல்யாணத்துக்கு மாதவன் வர மாட்டேன்னு சொல்லிடுவாரா.” என்றதற்கு, 

“அதுக்கு இல்லை டா, பையனுக்கு ஜாதகத்தில இன்னும் ஆறு மாசத்துக்குள்ள கல்யாணம் பண்ணனுமாம். அதோட மாதவன் வந்திருக்கும்போதே கல்யாணத்தை வச்சிடலாம்ன்னு நினைச்சோம் வேற ஒன்னும் இல்லை.” என்றார் புவனா. 

இந்தப் பேச்சு வார்த்தை நடக்கும்போது ரேஷ்மா அங்குதான் இருந்தாள். அப்போது அவளுக்குமே இவன் ஏன் இதில் எல்லாம் தலையிடுகிறான் என்று எரிச்சலாக இருந்தது. 

பெண் பார்த்துவிட்டுச் சென்றதில் இருந்தே மாப்பிள்ளை சுதர்ஷன், தினமும் ரேஷ்மாவை கைப்பேசியில் அழைத்து விடுவான். “நீ எப்ப எங்க வீட்டுக்கு வருவேன்னு எங்க குடும்பமே ஆவலா இருக்கு. மஹாலக்ஷ்மியே மருமகளாக வரப் போகிறான்னு எங்க அம்மா சந்தோஷத்தில இருக்காங்க” என இது போல எதாவது பேசி, திருமணத்திற்குப் பிறகு தான் எதோ சொர்கத்தில் இருக்கப் போகிறோம் என ரேஷ்மாவிற்குத் தோன்றும் அளவு செய்திருந்தான். 

மஹாலட்சுமி என அவன் குறிப்பிட்டது பணத்தை. ஆனால் இவள் தன் அழகை சொல்கிறான் என நினைத்துக் கொண்டாள். 

“என் மேல என்ன பொறாமை உங்களுக்கு? உங்களுக்குப் பொண்ணு பார்த்து ஒன்னும் அமையலை… அந்தக் கோபமா?” என ரேஷ்மா நக்கலடிக்க…. 

“என்னது எனக்குப் பொண்ணு பார்க்கிறாங்களா? இது என்ன புதுக் கதை.” என் அருள் புரியாமல் பார்க்க… கலை முகம் வாடினார். 

“உனக்குச் சொல்லாம நாங்களே பொண்ணு பார்த்தோம் பரத். ஆனா இப்ப இருக்கிற பொண்ணுங்க எல்லாம் நல்லா படிச்சிருக்கங்களா… படிச்ச பையனைத் தான் கேட்கிறாங்க. கொஞ்சம் வசதி குறைவான வீட்ல கூடப் பையன் படிச்சிருக்கணும் சொல்றாங்க.” என்றார் கவலையாக. 

“உங்களை யாரு பாட்டி எனக்குப் பொண்ணெல்லாம் பார்க்க சொன்னது. நான் பவித்ரா கல்யாணம் முடியுற வரை கண்டிப்பா இங்க இருக்கணும் நினைக்கிறேன். என்னை இங்க இருந்து போக வச்சிடாதீங்க பாட்டி.” எனச் சற்று காட்டமாகவே சொல்லிவிட்டு அருள் சென்றான். 

அவன் சொன்ன காரணமே தான். அவனை இங்கே பிடித்து வைக்கவே, அவனுக்கும் பெண் பார்க்கப்பட்டது. 

கலை தன் கணவரை கவலையாகப் பார்க்க… “அவன் தொழிலை முதல்ல முழுசா கத்துகிட்டு, அவன் கால்ல நிக்கட்டும், அப்புறம் அவனுக்குத் தானா பொண்ணு அமையும்.” 

“முதல்ல பவித்ரா, ரேஷ்மா கல்யாணத்தை முடிப்போம். பரத்துக்கு ஒரு வருஷம் போகட்டும், அதுக்குள்ள அவனும் நல்ல நிலைமைக்கு வந்திடுவான். அவனுக்கு நல்ல திறமை இருக்கு… அதோட முன்னுக்கு வரணும்ன்னு ஆர்வம் இருக்கு. கண்டிப்பா நல்லா வருவான்.” என்றார் சாரதி நம்பிக்கையாக.
அப்படியே நடக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன், புவனாவும் கலையும் கலைந்து சென்றனர். 

மறுவாரம் சொந்தங்களை அழைத்து ஒரு ஹோட்டல் ஹாலில் ரேஷ்மா சுதர்சன் நிச்ச்யதர்த்தம் நடந்தது. மாப்பிள்ளை வீட்டினர் வெகு விமர்சையாகவே செய்தனர். 

அய்யர் வைத்து சடங்கு சம்பரதயங்கள் செய்யப்பட… மேடையில் மனையில் ரேஷ்மா மாலையுடன் அமரவைக்கப் பட்டாள். 

நிச்சயத்திற்கு வந்த உறவினர் ஒருவர் ஸ்ரீனிவாசனை தனியாக அழைத்து சென்று பேசினார்.
“பொண்ணுக்கு என்ன செய்றேன்னு சொல்லிட்டியா?” எனக் கேட்டதற்கு, 
“அப்படி ஒன்றும் பேசவில்லை. நீங்க உங்க பொண்ணுக்கு செய்றதை செய்ங்கன்னு சொல்லிட்டாங்க.” என்றார். 

“எதுக்கும் நிச்சயத்துக்கு முன்னாடியே பேசிடு. ஏன்னா இவங்க மூத்த பையனுக்குப் பெண் எடுத்த வீட்ல இருந்து எல்லாத்தையும் உருவிட்டதா கேள்விபட்டேன். இவங்கதான் மாப்பிள்ளை வீடுன்னு முன்னாடியே எனக்குத் தெரியாது. இல்லைனா… நான் உனக்கு முன்னாடியே இந்த இடம் வேண்டாம்ன்னு சொல்லி இருப்பேன்.” 

“நீ நிச்சயத்துக்கு முன்னாடியே… என்ன செய்வேன்னு தெளிவா சொல்லிடு… இல்லைனா பின்னாடி உன் பொண்ணு தான் கஷ்ட்டப்படுவா.” என்றார். 

ஸ்ரீனிவாசனுக்கு ஒரே கவலையாகப் போய்விட்டது. இவர்கள் திருமணத்திற்கு அவசரப்பட்ட போதே, தான் யோசித்திருக்க வேண்டுமோ என இப்போது நினைத்தார். 

இரு வீட்டாரும் மேடையில் நிச்சய்ததாம்புலம் மாற்ற அழைக்கப்பட… தட்டை மாற்றுவதற்கு முன், “நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்க சொல்லிடுங்க. எல்லாத்தையும் இங்க வச்சு சபையில பேசிடலாம்.” என ஸ்ரீநிவாசன் அழுத்தம் திருத்தமாகக் கேட்க, மாப்பிள்ளையின் பெற்றோர் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார். 

முதலில் சுதர்சனின அம்மா ஆரம்பித்தார். “நகை எப்படியும் நிறையச் செய்வீங்க. சொத்தும் உங்க பையனுக்குச் சமமா பெண்ணுக்கும் கொடுப்பீங்க இல்ல….” என, அவர் கணவரோ, “உங்க பையன் வெளிநாட்டில இருக்கான். அதனால உங்க கார்மென்ட் பாக்டரியை நம்ம பையன் பொறுப்புள விட்டுடுங்க. நாங்க வேற ஒன்னும் எதிர்ப்பார்க்கலை…” என்றார். 

“உங்ககிட்ட பாக்டரியை கொடுத்திட்டு, நானும் என் பொண்டாட்டியும் சோத்துக்கு உங்க வீட்டுக்கு வர்றதா…” என ஸ்ரீனிவாசன் நறுக்கென்று கேட்க, அங்கே இரு பக்கமும் பேச்சு முற்றியது. 

“என்னோட தொழில் என் பையனுக்குத்தான். அவன் இப்ப வெளிநாட்டில இருந்தாலும், கொஞ்ச வருஷம் கழிச்சு என் தொழிலை தான் எடுத்து நடத்துவான்.” எனச் சுதர்சன் முடிவாகச் சொல்லிவிட… 
பெண் வீட்டினர் சுதாரித்துவிட்டதை உணர்ந்த மாப்பிள்ளை வீட்டினர். அப்போ எங்களுக்கு இந்தச் சம்பந்தம் வேண்டாம் என்றனர். 

“நீங்க என்ன சொல்றது நாங்களே சொல்றோம், இந்தக் நிச்சயம் நடக்காது.” என்றார் ஸ்ரீனிவாசன். 

“நீங்களே இங்க என்ன செலவோ பார்த்துக்கோங்க. நாங்க கிளம்புறோம்.” என மாப்பிள்ளை வீட்டினர் அங்கிருந்து உடனே சென்றுவிட…. ரேஷ்மா இன்னும் மனையில் கழுத்தில் மாலையுடன் உட்கார்ந்து இருந்தாள். நிச்சயம் நின்றதால் மற்ற உறவினர்களும் கிளம்பி விட… 

“ஏன் இப்படி அவசரப்பட்டுப் பேசினீங்க?” எனப் புவனா தன் கணவரிடம் கேட்க, அவர் நடந்த அனைத்தையும் விளக்கினார். 

“இவங்க குடும்பத்தில செய்திட்டு, கல்யாணத்துக்குப் பிறகு நாம எல்லோரும் கஷ்ட்டபடுறதுக்கு, இப்ப நிச்சயத்தோட நின்னது பரவாயில்லை.” என்றார். 

“நான் ஒரு யோசனை சொல்றேன் கேட்கிறீங்களா? நாம வெளிய தெரியாத ஆளுக்குக் கொடுக்கிறதுக்கு. நம்ம பரத்துக்குக் கொடுக்கலாமே… நம்ம பொண்ணு நம்ம கண்ணுக்கு முன்னாடி இருப்பா… பெண்ணயும் நல்லா பார்த்துப்பான்.” எனப் புவானா சொல்லும்போதே, ரேஷ்மா எழுந்து அங்கிருந்த அறைக்குள் சென்றுவிட…. 

“ரேஷ்மாவுக்குச் சம்மதம்ன்னா எனக்குச் சம்மதம்.” என்றார் ஸ்ரீனிவாஸ் தொழிலை வேறு யாருக்கோ கொடுப்பதற்கு, பரத் தங்கள் தொழிலை பார்த்துக்கொள்வது அவருக்குப் பரவாயில்லை எனத் தோன்றியது. 

“இன்னைக்கே நம்ம பொண்ணு நிச்சயம் நடக்கணும். நான் அவகிட்ட பேசுறேன்.” எனச் சொல்லிவிட்டு புவனா உள்ளே சென்றார். 

ரேஷ்மாவின் சம்மதம் முக்கியம் என நினைத்தனரே தவிர, அருளிடம் சம்மதம் கேட்க வேண்டும் என யாரும் நினைக்கவில்லை. 

“கடவுள் கண் திறந்திட்டார். நம்ம பரத்தை பத்தி இனி கவலை இல்லை. படிக்கலைன்னு பொண்ணு கொடுக்க மாட்டேன்னு சொன்னாங்க இல்ல…. அவங்க முன்னாடி இவங்க கல்யாணம் ஜாம்ஜாம்ன்னு நடக்கணும்.” என்றார் கலை கண்கள் கலங்கியபடி. 

அருளுக்கு என்ன டா இது சோதனை என்றாகிவிட்டது. ஒருத்தராவது வந்து அவனிடம் பேசுவார்கள் எனப் பார்த்தால் யாருமே உனக்கு இந்தத் திருமணத்தில் உனக்கு விருப்பமா எனக் கேட்கவில்லை. ஏன் பவித்ராவே கேட்கவில்லை. 

அண்ணனும் இதே குடும்பத்திற்குள் வந்திவிட்டால்… தான் என்றும் அவனுடன் ஒட்டுதலுடன் இருக்கலாம் என நினைத்து மகிழ்ந்தாள். அவனுக்கும் ஒரு ஆசை இருக்கும், தன் திருமணத்தைக் குறித்துக் கனவு இருக்கும் என எண்ண மறந்தாள். 

அதற்கு மேல் ரேஷ்மா… எதோ இவன் அவள் கழுத்தில் தாலி கட்ட தவம் கிடப்பது போல… கிடைத்த சந்தர்ப்பத்தில் இவனிடம் வந்து, “உனக்கு எல்லாம் இப்படிக் கல்யாணம் நடந்தால் தான் உண்டு. நல்லா இங்கையே செட்டில் ஆகிடலாம்ன்னு சந்தோஷமா இருக்கியா?” எனக் கேட்டுவிட்டு சென்றாள். 

எல்லோரும் ஆளாளுக்குச் சென்று ரேஷ்மாவை சரிகட்ட முனைய… தன் விருப்பத்தைப் பற்றி இங்கே ஒருவருக்கும் அக்கறை இல்லை என நினைத்த அருள், தன் சித்தப்பா மகனிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான். 

“என்னமோ பண்ணித் தொலைங்க. நான் அவனையே கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனா அவன் அந்தக் குப்புத்துக்கு எல்லாம் இனி போகக் கூடாது. நம்ம வீட்டோட மாப்பிள்ளையா இருக்கிறதுன்னா ஓகே.” என ரேஷ்மா போனால் போகிறது எனச் சம்மதிக்க… அதன்பிறகே அருளை தேடினர். அவன் தான் அப்போதே சென்று விட்டானே. 

“அண்ணன் அப்பவே பாக்டரிக்கு போயிட்டாங்களே….” 

“என்னது பாக்டரிக்கு போயிட்டானா?” 

“ஆமாம், உங்களை எல்லாம் சாப்டிட்டு வீட்டுக்குப் போகச் சொன்னாங்க.” என அவன் சொன்னதையும் ராஜீவ் சொல்ல… அவனுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என அவன் சொல்லாமல் சொல்லிவிட்டுச் சென்றது எல்லோருக்கும் புரிந்தது. 

தான் அப்படிப் பேசியதால் தான் போய் விட்டானோ என ரேஷ்மா நினைக்க… 

“பெரிசா உன் அண்ணன் பையனுக்குப் பொண்ணு கொடுக்க அப்படித் துடிச்ச… அவன் பாரு நம்மை எல்லாம் அவமானப்படுத்திட்டு போயிட்டான்.” என்றார் ஸ்ரீனிவாஸ். 

“ஒன்னும் இல்லாத வெறும் பய அவன், அவனுக்கே இவ்வளவு இருக்குன்னா, எனக்கு எவ்வளவு இருக்கும்.” என அவர் மேலும் சேர்த்து சொல்ல…தன் அண்ணனை அப்படிச் சொன்னதும் பவித்ராவுக்கு அழுகை வர… புவனா என்ன சொல்வது எனத் தெரியாமல் திகைத்து போய் நின்றார். 

“மாப்பிள்ளை கொஞ்சம் பார்த்து பேசுங்க. அவங்க அப்பா அம்மா ஒன்னும் அவனைச் சும்மா விட்டுட்டு போகலை. அதோட திடிர்ன்னு ரேஷ்மாவை கல்யாணம் பண்ணிக்கச் சொன்னதும், அவனுக்கு என்ன செய்றதுன்னு தெரிஞ்சிருக்காது.” 

“நாங்க அவனுக்குப் பேசி புரிய வைக்கிறோம். நீங்க அப்படி அவன் வேண்டாம்ன்னு நினைச்சாலும் சரிதான். ரேஷ்மாவுக்கு வேற நல்ல இடம் பார்க்கலாம்.” என்றார் சாரதி. அதோடு அங்கேயே சாப்பிட்டு எல்லோரும் அவரவர் வீட்டுக்கு சென்றனர். 
அருள் இரவுதான் வீட்டிற்கு வந்தான். பவித்ரா உட்பட அவனிடம் யாருமே பேசவில்லை. ராஜீவ் அங்கே ஹோட்டலில் ரேஷ்மா பேசியதில் இருந்து, ஸ்ரீனிவாஸ் பேசியது வரை எல்லாவற்றையும் அருளிடம் பிட்டுபிட்டு வைத்தான். 

ராஜீவ்வுக்கு அருளை மிகவும் பிடிக்கும். அருளுடைய கம்பீரத்திலும், தான் என்ன கேட்டாலும் பொறுமையாக விளக்கும் பாங்கிலும் மிகவும் கவரப்பட்டு விட்டான். மதுமலர் கூட முதலில் அவனிடம் ஒட்டாமல் இருந்தாள். ஆனால் அவள் தனியாக வெளியே கிளம்பினால்… “எங்கப் போற? எப்ப திரும்ப வருவ?” என அருள் கேட்டே அனுப்புவான். அவள் பெற்றோர் கூட அதெல்லாம் கேட்க மாட்டார்கள். தேவிக்குப் பிடிக்காது என்று கலையும் அதில் எல்லாம் தலையிட மாட்டார். 

ஒருமுறை தோழிகளுடன் படத்துக்குப் போகிறேன் என அவள் சொன்னதற்கு, என்ன படம் எனக் கேட்டவன், “அந்தப் படம் இன்னைக்குத் தான் ரீலிஸ் ஆகுது. தியேட்டர்ல பசங்க எப்படி ஆடுவாங்க தெரியுமா… அந்தப் படத்துக்குப் போகப்போறியா…” 

“நீ அப்படி ஒன்னும் படம் பார்த்திட வேண்டாம். ஒழுங்கா உள்ள போ…” எனச் சொல்லி சென்றுவிட்டான். மதுவுக்குக் கோபம் தான். ஆனால் அண்ணனை மீறி படம் பார்க்கவும் செல்லவில்லை. 

மறுவாரம் அவனே அவளுக்கும் அவள் தோழிகளுக்கும் டிக்கெட் போட்டுக் கொடுத்து படத்துக்கு அனுப்பி வைத்தான். அன்றிலிருந்து அருள் சொன்னால் தன் நல்லதுக்கு என மலருக்கு புரிந்து இருந்ததால்… இப்போது எல்லாம் அவனிடம் சரளமாகப் பேச ஆரம்பித்து இருந்தாள். 

இரண்டு நாட்கள் கழித்து ரேஷ்மாவுடன் வந்த புவனா முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அருளிடம் பேசாமல் இருந்தார். அருளும் கண்டுகொள்ளாமல் இருந்தான். பிறகு அவரே பேச்சை ஆரம்பித்தார். 

“அன்னைக்கு ஏன் டா அப்படிப் பண்ண?” 

“நீங்க கல்யாண விஷயத்துல எப்பவுமே அவசரபடுறீங்க அத்தை. எனக்கு அதெல்லாம் ஒத்து வராது. நான் வேற ஒன்னும் இல்லாத வெறும் பய…” என அவன் ஸ்ரீனிவாஸ் சொன்னதையே சொல்ல… 

“டேய், அவர் எதோ கோபத்தில சொன்னார். இந்த வரன் வர்றதுக்கு முன்னாடியே, நான் உனக்கு ரேஷ்மாவை கல்யாணம் பண்ணி வச்சா நல்லா இருக்கும்ன்னு சொன்னதுக்கு, அவரும் பண்ணலாம்ன்னு தான் சொன்னார். ஆனா ரேஷ்மாவுக்காகத்தான் யோசிச்சோம்.” 

“இப்பவும் ரேஷ்மாவுக்காக யோசிச்சு, அவளுக்குப் பெருத்தமான நல்ல பையனா பாருங்க.” என அருள் முடித்துக் கொண்டான். 

“டேய் ! ஏன் டா இப்படிப் பண்ற? என் அண்ணன் பசங்க ரெண்டும் என் வீட்டுக்கு வந்தா எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும்.” என்றதும், 

“நான் இப்பவே ஒன்னு சொல்லிடுறேன். எக்காரணம் கொண்டும், என் கல்யாணத்தையும், பவித்ரா கல்யாணத்தையும் சேர்த்தது முடிச்சு போடக்கூடாது.” 

“என்னை வச்சு நாளைக்கு அவளுக்கு ஒரு கஷ்ட்டம் வந்தா, நான் பார்த்திட்டு சும்மா இருக்க மாட்டேன்.” 

“எங்களுக்குப் பவித்ரா மேல இல்லாத அக்கறைதான் உனக்கு இருக்கு பாரு…. உனக்கும் ரேஷ்மாவுக்கும் கல்யாணம் நடந்தா தான், பவித்ரா மாதவன் கல்யாணம் நடக்கும்ன்னு சொன்னா என்ன டா பண்ணுவ?” 

“என் தங்கச்சிக்கு ஒரு குறையும் இல்லை. வேற நல்ல இடம் பார்த்திட்டு போயிடுவேன்.” என்றான் அருள் அசராமல். 

“இவன்கிட்ட பேச முடியாது மா… நாம இவன் நல்லதுக்குதான் சொல்றோம்ன்னு புரியலை பாரு…” என்றார் புவனா ஆதங்கத்துடன். 

“அண்ணா உன் நல்லதுக்குத்தானே சொல்றாங்க. கேட்டா என்ன?” என்றாள் பவித்ராவும். 

நீயுமா எனத் தங்கையை ஒரு பார்வை பார்த்துவிட்டு அருள் சென்றுவிட்டான். அந்தப் பார்வையில் என்ன இருந்தது எனப் பவித்ராவுக்குப் புரியவில்லை. 

இப்போது ரோஜாவைப் பற்றிச் சொன்னால்… தனது திருமணத்தை ரேஷ்மாவுடன் இல்லையென்றாலும், வேறு யாருடனோ முடிக்கத் தீவிரமாகச் செயல்படுவார்கள் என அருள் ரோஜாவைப் பற்றிச் சொல்லக் கூடாது என்ற முடிவுக்கு வந்திருந்தான். 

“விடும்மா நீ ஏன் அவசரப்படுற? பவித்ரா கல்யாணம் முடியட்டும், அதுக்குள்ள அவனுக்கும் ஒரு வழி பண்ணிட்டு, அப்புறம் இவங்க கல்யாணத்தைப் பற்றி  பேசலாம்.” என்றார் சாரதி. தொழிலில் அருளை தன்னோடு சேர்த்துக்கொள்ளச் செல்வம் விரும்பவில்லை என அவருக்குப் புரிந்திருந்தது. 

என்ன பேசினாலும், மிரட்டினாலும் தன்னை வேண்டாம் எனச் சொல்லும் அருளின் மீது ரேஷ்மாவுக்கு ஒரு ஆர்வம் வந்திருந்தது. தன்னைத் திருமணம் செய்துகொள்ள, அருள் மறுக்கக் கூடும் என்றெல்லாம் அவள் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. 

இப்போதும் தான் அன்று அப்படிப் பேசியதால் தான்… திருமணத்திற்கு மறுக்கிறான் என நினைத்துக் கொண்டு இருந்தாள். அவன் வேறு ஒரு பெண்ணை விரும்பலாம் என அவளும் நினைக்கவில்லை. அப்படி யோசித்தது மதுமலர் மட்டுமே…. 

அண்ணன் இவ்வளவு தீவிரமாகத் திருமணத்திற்கு மறுக்க, கண்டிப்பாக வேறு யாரோ காரணமாக இருக்கலாம் எனத் தோன்றியது. 

தனியாக இருந்த அண்ணனிடம் சென்றவள், “நீங்க வேற யாரையோ லவ் பண்றீங்களா அண்ணா?” எனக் கேட்க… 

வேறு எதோ யோசனையில் இருந்த அருளுக்குப் புரியவே கொஞ்ச நேரம் ஆனது. யோசனையோடு அவளைப் பார்த்தவன், “நீ யாரை லவ் பண்ற?” எனத் திருப்பிக் கேட்க, மதுமலர் மாட்டிக் கொண்டு முழித்தாள். 

இதுதான் பாம்பின் கால் பாம்பறியும் என்பது.

Advertisement