தன் தங்கை பிரபாவதியின் கைகளிலிருந்தபடியே மழலை குரலில் மிழற்றிய இரண்டே வயதான குழந்தை வைஷ்ணவியைப் பார்த்து சிரித்தபடியே மாடிப்படியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தான் அந்த வீட்டின் மூத்த மகன் சத்யா என்ற சத்யநாதன்.
“குட்மார்னிங் செல்லக்குட்டி…”
அருகில் கண்டதும் தன்னை நோக்கி பாய்ந்த மழலையை தன்னிரு கைகளில் அள்ளிக்கொண்டே சொல்லியவன், அதன் குட்டி மூக்கோடு தன் மூக்கை உரசி, குண்டு கன்னத்தில் ஆதூரமாக முத்தம் ஒன்றை பதித்து,
“என் செல்லம்மா சாப்டாங்களா?” கேட்டபடியே டைனிங் ரூமில் கிடந்த சிறிய டைனிங் டேபிள் முன் குழந்தையை மடியில் வைத்து கொண்டு உட்கார்ந்தான்.
“அவ இப்பதான் ப்பா முழிச்சு பால் குடிச்சிட்டு உட்கார்ந்திருக்கா. சாப்பிடணும்னா இன்னும் நேரமாகும். நீ சாப்பிடுப்பா”
சொல்லியபடியே மகனுக்கு முன்னால் தட்டு வைத்து சுடச்சுட இட்லியை பரிமாற ஆரம்பித்த அவனின் அம்மா தனலட்சுமி,
“ஏன்டி? உனக்கு வேற நான் தனியா பரிமாறணுமா? வா… வந்து உட்கார்ந்து சாப்பிடு” மகளைப் பார்த்து அதட்டினார்.
“இதோ வர்றேன் ம்மா” பதில் சொல்லியபடியே அவசர அவசரமாக தன் கைபேசியில் ஏதோ மெசேஜை தட்டிவிட்டு வந்து உட்கார்ந்த மகளைப் பார்த்து,
“வீட்டுல குனிஞ்சு நிமிந்து ஒரு வேலை பாக்குறது கிடையாது. ஆனால் லீவ் நாள் கூட வீட்டுல தங்காமல் ஏதோ வெளியே சேவை பண்ணுறேன்னு கிளம்பி போயிடுறது.”
“போறதுதான் போறா… சும்மா போறாளா? எனக்கு அத்தனை பார்ச்சல் சாம்பார் சாதம் பண்ணிக்குடு, இத்தனை பார்சல் லெமன் ரைஸ் பண்ணிக்குடுன்னு, என் உயிரையெல்லாம் எடுக்குறா” அலுத்துக் கொண்டவர், கிச்சன் இருக்கும் பக்கம் திரும்பி,
“ரேவதி! அடுப்பில இருக்குற இட்லி வெந்துடிச்சான்னு பாத்து அடுப்பை ஆஃப் பண்ணு” என்று அங்கே நின்ற மருமகளுக்கும் உத்தரவு ஒன்றைக் கடத்தினார்.
“அண்ணியும், நீங்களும் இருக்கும் போது எனக்கு இங்க என்னம்மா வேலை இருக்கு செய்ய?” சொல்லியபடியே சாப்பிட ஆரம்பித்த தங்கையிடம் ,
“இன்னைக்கு பட்டினப்பாக்கம் குடிசைமாற்று வாரியம் போறோம் ண்ணா… நீங்க நம்ம கடை வரைக்கும் கூட்டிட்டு போனீங்கன்னா, அங்கிருந்து ரேஷ்மி அவ வண்டியில என்னை கூட்டிட்டு போய்டுவா” என்று சொல்ல,
“எப்பவும் அந்த ஏரியை சுத்தபடுத்துனோம், இந்த குளத்தை தூர்வாரினோம்னு தான பீட்டர் விடுவ! இன்னைக்கு என்ன குடிசைமாற்று வாரியம் பக்கமா உங்க காத்து வீசுது?”
கிண்டலாகக் கேட்டபடியே தங்கையின் அருகில் கிடந்த நாற்காலியில் வந்தமர்ந்த அந்த வீட்டின் இரண்டாவது வாரிசு முரளிதரன்,
“என் செல்ல கண்ணம்மா இட்லி சாப்புடுறாங்களா?” என்றபடியே அண்ணன் மடியிலிருந்த தன் மகளின் பிஞ்சுக் கன்னத்தை லேசாக தட்ட, அது தகப்பனைக் கண்டு தன் பொக்கைவாய் திறந்து சிரித்தது.
“உன்னை மாதிரி சமூக பொறுப்பில்லாதவங்களுக்கு நாங்க சொல்லுறது, செய்றது எல்லாம் பீட்டர் உடுறமாதிரி தான் இருக்கும்.”
“ஆனால் எங்ககிட்ட டியூசன் படிக்குறதுக்காக அங்க ஒரு பசங்க கூட்டமே காத்துட்டு இருக்கு தெரியுமா உனக்கு?” ஜம்பமாகச் சொல்லியபடி தன் சுடிதாரில் இல்லாத காலரை பிரபா தூக்கிவிட்டுக் கொண்டாள்.
தங்கையின் பேச்சில்,”என்னது? நீங்க ட்யூசன் சொல்லிக் குடுக்கப் போறீங்களா? என்னடா இது இந்தியாவுக்கு வந்த சோதனை!” போலியாக அலறிய முரளி,
“ஏய்… அந்த காதுல கடுக்கணும், கலர்கலரா முடியும், கிழிஞ்சு போன ஜீன்ஸ்ஸுமா ஒருத்தன் உங்ககூட வருவானே… அவனை மட்டும் அங்க கூட்டிட்டு போய்டாத பிரபா… பாவம் அங்க உள்ள பசங்க, பூச்சாண்டி ன்னு நினைச்சு பயந்துடப் போறாங்க” சொல்லியபடியே அட்டகாசமாக சிரித்தான்.
தன் நண்பனின் தோற்றத்தை தன் உடன்பிறந்தவன் கிண்டலடிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல்,
“டோண்ட் ஜட்ஜ் அ புக் பை இட்ஸ் கவர் ண்ணா…” பல்லைக் கடித்தபடி கத்தினாள் பிரபா.
“பரவால்ல ண்ணா… நீ செலவழிக்கிற காசுக்கு வஞ்சமில்லாமல் உன் தங்கச்சி இங்கிலிபீஷ்ல எல்லாம் பிச்சு உதர்றா ண்ணா” தங்கையின் கத்தலுக்கும் அடங்காமல் கிண்டலடித்த தம்பியின் வார்த்தைகளில் லேசாக சிரித்த சத்யா,
“போதும்… அடங்குடா” என்றபடியே
“அப்பாவை எங்கம்மா இன்னும் காணோம்?” என்று தாயிடம் கேட்டான்.
“இதோ, அப்பா வந்துட்டேன் ப்பா… இன்னைக்கு அப்படியே நம்ம வீடு இருக்கிற தெரு வரைக்கும் நடந்துட்டேன். அதான் நேரமாகிடிச்சி.”
சொல்லியபடியே வந்த, அந்த வீட்டின் தலைவர் சண்முகம், ஒரு முப்பது வருடங்களுக்கு முன்னால் தன் மூத்த மகனைப் போலவே இருந்திருப்பார் போன்ற தோற்றத்தில் இருந்தார்.
அவரின் பதிலில் அனைவருடைய முகமும் நிமிடத்தில் கலக்கத்தை தத்தெடுக்க,”நானோ, முரளியோ இல்லாமல் அங்கெல்லாம் எதுக்குப்பா தனியா போறீங்க?” லேசாக கண்டித்தபடியே, சாப்பிட்டு முடித்த சத்யா எழும்ப முயன்றான்.
அந்நேரம்,”கொஞ்சம் இரு சத்யா! பெரியம்மா பொங்கல் கொண்டு வந்திருக்கேன். அதையும் கொஞ்சம் சாப்பிட்டுட்டு எழும்பு” குரல் கொடுத்தபடியே வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தார் தவமணி.
பெரியம்மா என்றால் தனலட்சுமியின் கூடப்பிறந்த அக்கா இல்லை. தூரத்து சொந்தம் தான். ஆனால் நெருங்கிய சொந்தங்களை விட நேர்மையானவர்.
இங்கு குடிவந்த புதிதில் பேசிப்பழகியதில் சொந்தம் என்று தெரிய அப்படியே தனலட்சுமி குடும்பத்தோடு ஒட்டிக்கொண்டார்.
ம்ம்… குடிவந்த புதிதில் தான்…
இத்தனை நபர்களையும் உறுப்பினர்களாக கொண்ட இந்த வீடு இருப்பது சிங்கார சென்னையின் வேளச்சேரியில் நடுத்தர வகுப்பு மக்கள் நிறைந்த ஒரு குடியிருப்புப் பகுதியில்.
ஆனால் சொந்த வீடல்ல. லீஸ்ஸுக்கு எடுத்த வீடே … கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக இங்கே தான் குடியிருக்கிறார்கள். அதாவது சத்யாவின் இருபத்திமூன்று வயதிலிருந்து… அவ்வப்போது வீட்டுக்காரரோடு தங்கள் ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொண்டு இங்கேயே இருக்கிறார்கள்.
அதற்கு முன் அவர்கள் இருந்தது அவர்களின் சொந்த வீட்டில் தான். ஆனால் எதிர்பாராத ஒரு வஞ்சனையில் வீழ்ந்து, குடியிருக்கும் வீட்டை இழந்து, வேறு வழியில்லாமல் வீட்டை காலி செய்து வெளியேறியவர்களுக்கு, தங்கள் வீடு இருக்கும் ஏரியாவைவிட்டு வெளியே செல்ல மனமின்றி அங்கேயே வீடெடுத்து தங்கிவிட்டார்கள்.
அவர்கள் சொந்த வீடும் இதே வேளச்சேரியில் ஐந்தாறு தெரு தள்ளியிருக்கிறது. வீடென்று பார்த்தால் பெரிய வீடு கிடையாது. ஆனால் வீட்டோடு சேர்ந்த மனை பெரிதே.
அதோடு அவர்களின் தொழிலும் வேளச்சேரியிலேயே இருப்பதால், வஞ்சத்தையும் தாங்கிக்கொண்டு அங்கேயே குடியிருக்கிறார்கள்.
நடந்த வஞ்சத்தின் வலி தாங்காமல் பித்தனைப் போல இருந்த தந்தைக்கு டாக்டரின் அறிவுரைப்படி ஓய்வு கொடுப்பதற்காக அவரின் தொழிலை சத்யா கையிலெடுக்கும் போது அவனுக்கு வயது இருபத்தி மூன்று. அப்போது அவன் எம் காம் இறுதி செமஸ்டரில் இருந்தான்.
தன் தந்தை நடத்திய ஃபர்னிச்சர் கடையை, ஃபர்னிச்சரோடு பெரிய அளவில் ஹோம் அப்ளையன்ஸஸ் கிடைக்கும் கடையாக விரிவுபடுத்தி இருந்தான்.
வளர்ந்து வந்த அந்த பகுதியில் இருந்த சத்யாவின் கடையும் அசுரவேகத்தில் வளர்ச்சியடைந்தது.
சமீபத்தில் ஒரு வருடத்திற்கு முன்னால் தான், அதே வேளச்சேரியில் தங்கள் ஃபர்னிச்சர் கடை இருக்கும் இரண்டு தெரு தள்ளி ஒரு சூப்பர் மார்க்கெட் ஒன்றை திறந்து தம்பியின் வசம் ஒப்படைத்திருக்கிறான் சத்யா.
அந்த காலத்திலேயே வேளச்சேரியில் ஏதோ இந்த இரண்டு இடங்களையும் தன் சம்பாத்தியத்தில் சண்முகம் வாங்கிப் போட்டிருந்ததால் இப்போது மகன்களுக்கு தொழில் வைப்பதற்கு இடம் ஏதுவாகப் போனது.
முரளியும் அண்ணனைப் போல எம் காம் பட்டதாரியே. அவர்கள் இருவரின் செல்லதங்கை பிரபாவதி இப்போதுதான் எம் ஏ இரண்டாம் வருடம்.
உரிமையாக தான் கொண்டு வந்த பொங்கலை பிள்ளைகளின் பாத்திரத்தில் பரிமாறிய தவமணியிடம்,”கேஸ் விஷயமா பெரியப்பா என்ன சொல்லுறாங்க பெரியம்மா?” என்று கேட்டான் சத்யா.
“அதெல்லாம் நமக்கு சாதகமாக தான் தீர்ப்பு வரும்னு சொல்லுறார்ப்பா உன் பெரியப்பா. நீ ஒன்னும் கவலப்படாத, நம்ம சொத்து நம்மதில்லன்னு போய்டுமா என்ன?” பொங்கலோடு சேர்த்து ஆதரவான வார்த்தைகளையும் அந்த பெண்மணி பரிமாறினார்.
“உங்களுக்கும் பெரியப்பாவுக்கும் எப்படி நன்றி சொல்லுறதுன்னே தெரியலை பெரியம்மா. நீங்க மட்டும் இல்லைன்னா நாங்க இத்தனை வருஷத்துல என்ன ஆகியிருப்போம்னு எங்களுக்கே தெரியாது?” ஆத்மார்த்தமாக உணர்ந்து சொன்னான் சத்யா.
உண்மையும் அதுதான். துரோகத்தில் வீழ்ந்து அடுத்து என்ன என்று யோசிக்க கூட முடியாத மனநிலையில் இங்கு வந்து அடைந்து கிடந்தவர்களிடம் பேச்சுக் கொடுத்து அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வந்த தவமணி, தன் கணவர் மூலம் அவர்கள் இழந்த சொத்தை மீட்பதற்கான முயற்சியில் அவர்களுக்கு உதவினார்.
ஆம்… தவமணியின் கணவர் துரை ஒரு வக்கீல். அவர்தான் இவர்களுக்காக இந்த தர்மயுத்தத்தில் சாரதியாக மாறி அவர்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.
கூடவே சிறிய அளவில் இருந்த கடையை விஸ்தீகரிக்கச் சொல்லி ஐடியாவும் தந்து, தன் சுயஜாமீனில் வியாபாரக் கடன் ஏற்பாடு செய்து தந்து சத்யாவை முன்னேற்றப் பாதையில் உந்திதள்ளியவரும் அவர் தான்.
உதவிக்கு நீண்ட கையைப் பற்றிக் கொண்டு சரசரவென்று முன்னேறிவிட்டான் சத்யாவும்.
சத்யாவின் ஆத்மார்த்தமான வார்த்தைகளில், “இதெல்லாம் மனுஷனுக்கு மனுஷன் செய்யுற ஒரு சின்ன உதவி தான். அதைப்போய் பெரிசா பேசாத சத்யா” என்ற தவமணி
“வாங்கடி செல்லக்குட்டி…” என்று அவன் மடியில் இருந்த குழந்தை வைஷ்ணவிக்கு கைநீட்ட, அதுவோ தலையை ஆட்டி வரமறுத்தது.
“பாட்டிகிட்ட போங்க வைஷு… ” என்றவாறே குழந்தையை தூக்கிக் கொடுக்க சத்யா முயல, அவனோடு தொங்கிக்கொண்டது குழந்தை.
“எல்லாம் சரியா நடந்திருந்தா அவனுக்கே இப்போ ஒன்னோ இரண்டோ பிள்ளைங்க கைல இருந்திருக்கும். ம்ஹூம்… அந்த படுபாவியால நான் வீடிழந்து தெருவுல நிக்குறேன். எம்புள்ள, அவ வயித்துல பிறந்த பிள்ளையால இப்படி தனியா நிக்குறான்”
எத்தனை முயன்றும் கட்டுப்படுத்த முயலாமல் தனலட்சுமி வார்த்தைகளை விட்டு விட, சத்யா உடல் இறுக அதிர்ந்து போய் அன்னையை பார்த்தானென்றால்,
சண்முகமோ,”பைத்தியக்காரத்தனமா உளறாத தனம்!” கிட்டத்தட்ட கர்ஜித்திருந்தார்.
தாத்தாவின் சத்தத்தில் பெரியப்பாவின் கையிலிருந்த வைஷ்ணவி லேசாக உதடுபிதுக்கி அழத்தயாராக, கிட்சனிலிருந்து வேகமாக வந்த ரேவதி சத்யாவின் கையிலிருந்த தன் குழந்தையை கிட்டத்தட்ட பிடுங்கிக் கொண்டு, அங்கு நின்ற தன் கணவன் முரளியை ஒரு முறை முறைத்து விட்டு தங்களறைக்குள் சென்று நுழைந்து கொண்டாள்.
“அதானே… இத்தனைக்கப்புறமும் பாசம் இன்னமும்
ஊசலாடத்தானே செய்யுது. எல்லாம் அவங்கவங்க வாங்கிட்டு வந்த வரம் அப்படி” கணவனைப் பார்த்து அலுத்துக் கொண்டவரை
“ப்ச்ச்… என்ன பேசுற தனம்? நடந்ததையேப் பேசி என்ன சாதிக்கப் போறோம் சொல்லு?” என்று தவமணி உரிமையாக அதட்ட,
“பெரிசா ஒன்னும் எனக்கு வேணாம் க்கா… எம்புள்ள முப்பது வயசாகியும் கல்யாணம் காட்சின்னு இல்லாமல் இப்படி தனி மரமா நிக்குறானே, அப்படி இல்லாமல் அவனை ஒரு கல்யாணத்தை பண்ணிக்கச் சொல்லுங்க. எனக்கு அது மட்டும் போதும்.”
கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் தனலட்சுமி சொல்லிவிட்டு மகனின் முகத்தைப் பார்த்தார்.
“இங்க யாரும், யாரையும் நினைச்சு ஏங்கி கல்யாணம் வேண்டாம்னு சொல்லலை பெரியம்மா. எனக்கு கேஸ்ல ஜெயிச்சு நம்ம வீடு நம்ம கைக்கு வரணும். அதுக்கப்புறம் தான் கல்யாணம் பண்ணனும்னு தோணிச்சு. அதான் பண்ணலை”
“கேஸ் முடிந்து தீர்ப்பு நமக்கு சாதகமா வரட்டும், மறுநாள் வேணும்னாலும் நான் கல்யாணம் பண்ணிக்கறேன். அவங்களையே பொண்ணு பார்க்க சொல்லுங்க பெரியம்மா. ஆனால், அதுக்கு முன்னாடி என்னை தொந்தரவு பண்ணக்கூடாதுன்னும் சொல்லிடுங்க”
பெரியம்மாவை நடுநாயகமாக வைத்து அவனும் தனது பதிலைச் சொல்லிவிட, ஏதோ நாளைக்கே மகன் திருமணம் நடக்கப்போவது போன்ற மகிழ்ச்சியில் அந்த தாயின் முகம் பூரித்துப் போனது.
சத்யாவிற்கும், முரளிதரனுக்கும் ஒருவயது தான் வித்தியாசம். மூன்று வருடங்களுக்கு முன்னர் தங்கள் கடையில் வேலைசெய்யும் ராசப்பன் அவர்கள் மகளான ரேவதியோடு காதல் என்று சொல்லிக் கொண்டு முரளி தன்னிடம் வந்து நின்ற போது, இருவீட்டிலும் பேசி திருமணத்தை நடத்தி வைத்ததே சத்யா தான்.
“தம்பி கல்யாணத்திற்கு முன்னால நீ ஒரு கல்யாணத்தை பண்ணிக்கோடா” என்று எவ்வளவோ தனலட்சுமி கெஞ்சிய பிறகும் சத்யா கல்யாணத்திற்கு மறுத்துவிடவே, ஏதேதோ எண்ணங்கள் வந்து நெஞ்சில் அலைமோத, அதனால் தான் மகன் திருமணத்திற்கு மறுக்கிறானோ? என்ற எண்ணமே மேலெழுந்து நின்றது தனலட்சுமியின் மனதில்.
உண்மையைச் சொல்லப்போனால், அந்த நினைப்பு அவர் மனதிற்கு அத்தனை உவப்பாக இருக்கவில்லை. ஆனால், இன்று மகன் அப்படியெல்லாம் எதுவும் இல்லை எனச் சொல்லவும் ஆகாசத்திலேயே கோட்டை கட்ட ஆரம்பித்து விட்டார் தனலட்சுமி.
ஆனால் மகனின் பதிலில் வீட்டுத் தலைவரின் முகம் ஏனோ கொஞ்சம் சோர்ந்தாற்போல இருந்தது. மகனும் அதை கவனிக்கத் தான் செய்தான்.
ஆனாலும் ஏதோ ஒரு வீம்பு வந்து மனதில் உட்கார்ந்து கொள்ள, அதை கவனிக்காதவன் போல, கையை கழுவி விட்டு வந்தவன்,”நான் கிளம்பியாச்சு நீ எங்கூட வர்றியா இல்லையா பிரபா?” என்று தங்கையிடம் கேட்க
நடந்த அனைத்தையும் விழிமூடாது ஆவென்று பார்த்துக் கொண்டிருந்த பிரபா,”இதோ… இதோ… வர்றேன்ணா” என்றபடியே, தாயின் கையில் காலில் விழுந்து தயார் செய்து வாங்கி வைத்திருந்த சாப்பாடு அடங்கிய பையை தூக்கிக்கொண்டு தமையனின் பின்னோடு ஓடினாள்.
“ஹேய்… சோத்துமூட்ட… கொஞ்சம் நில்லுடி…” என்றபடியே அவள் பின்னால் ஓடிய முரளி தன் சட்டைப்பையிலிருந்து பணத்தை எடுத்து அவள் கைகளில் திணித்தவாறே ஏதோ சொல்ல வாயெடுக்க,
“பணம் இருக்கேன்னு கண்டபடி செலவழிக்கக் கூடாது. பத்திரமா கைல வச்சிருக்கணும்… இதைத்தானே ண்ணா சொல்லவர்றே… கேட்டுக் கேட்டு எனக்கு மனசுல பதிஞ்சு போச்சு. அநாவசியமா நீ சொல்லி உன் எனர்ஜியை வேஸ்ட் பண்ணாத.”
சொல்லிக்கொண்டே அண்ணனின் பின்னால் பைக்கில் ஏறி உட்கார்ந்த தங்கையின் தலையில் லேசாக தட்டிய முரளி, அவர்கள் இருவருக்கும் கையாட்டியபடி வீட்டுக்குள் நுழைந்தான்.
தன் பிள்ளைகள் மூவரின் ஒற்றுமையையும், ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பாசத்தையும் கண்குளிர பார்த்துக் கொண்டிருந்த தனலட்சுமி,”மூனு பேரும் கடைசிவரை இப்படியே ஒற்றுமையா சந்தோஷமா இருக்கணும் க்கா” என்று சொல்ல,
“அதெல்லாம் இருப்பாங்க… உண்மையான பாசம் என்னைக்குமே மாறாது, வீணா நீ மனசை போட்டு குழப்பிக்காத.”
‘அது என்னவோ உண்மைதான், அதுக்கு தான் வாழும் சாட்சியா இந்த வீட்டுலயே ஆள் இருக்காங்களே’ நினைத்துக் கொண்டவரின் கண்கள் இப்போது கணவனைப் பார்த்தது.
வீட்டுக்குள் வந்த முரளி,”ரேவதி…” என்றழைத்துக்கொண்டே தங்கள் அறைக்குள் நுழைந்த சிறிது நேரத்திலேயே ஏதோ கீழே விழும் சத்தம் கேட்க, பின்னாலேயே வைஷ்ணவி அழும் சத்தமும் கேட்டது.
வெளியே இருந்த சகோதரிகள் இருவரும் அர்த்தபுஷ்டியோடு ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள,”அப்போ நான் பிறகு வரேன் தனம்” என்றவாறே தவமணி கிளம்பினார்.
“ஏய் முரளி! அங்க என்னடா சத்தம்? பிள்ளை எதுக்குடா அழுவுறா? வெளியே கொண்டு வா அவளை” வெளியே இருந்து சத்தம் போட்டவரின் மனதில்,’சரித்திரம் திரும்புகின்றதோ?’ என்ற எண்ணம் தோன்றாமலில்லை.
‘சின்னது காலேஜ் முடிச்சதும் சட்டுபுட்டுன்னு கல்யாணத்தை முடிச்சு குடுத்துடணும். இந்த ரேவதி நடந்துக்குற விதம் கொஞ்சநாளா சரியில்லை’ நினைத்துக் கொண்டவர்,
அந்த சிறிய ஹாலில் கிடந்த சோஃபாவில் கண்களை மூடி சாய்ந்து உட்கார்ந்திருந்த கணவனை,”குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம்” என்றழைத்தார்.
மனைவியின் குரலில் ஏதோ கனவுலகிலிருந்து நேரடியாக தரையிறங்கியவரைப் போலக் காணப்பட்ட மனிதர், லேசாக தலையை ஆட்டியபடியே எழும்ப, சரியாக வீட்டு வாசலில் வந்து நின்றது ஒரு கார்.
அந்த காரைக் கண்டதுமே உடம்பில் ஒரு பரபரப்பு தொற்றிக் கொள்ள வெளியே உற்றுப் பார்த்தார் சண்முகம். அவருடைய எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் அதிலிருந்து இறங்கிய நபர் இவர்கள் வீட்டு கேட்டை திறக்க,
சிறுவனைப் போன்ற உற்சாகத்தோடு விரைந்து சென்று “வாங்க… நாராயணன்… வாங்க…” என்று முகமெல்லாம் மகிழ்ச்சியோடு அந்த மனிதரை வரவேற்றார் சண்முகம்.
வந்தவரோ இருகரம் கூப்பி வணக்கம் வைத்து,”ஐயா! சின்ன அம்மணி வயசுக்கு வந்துடுச்சிங்க, உங்க தங்கச்சி தகவல் சொல்லிட்டு வரச்சொன்னாங்க” என்றார்.