Advertisement

                     அமைதியாக கையை கழுவிக் கொண்டு மகனை உறங்க வைத்தவள் அவன் உறங்கவும், தன் மொபைலை கையில் எடுத்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள். கைகள் தானாக அவளின் பிளே லிஸ்டை நோக்கி செல்ல அவள் சுட்டவும் மெல்லிய குரலில் இசைக்க தொடங்கியது அலைபேசி..

                           பாலோடு
பழம் யாவும்
உனக்காக வேண்டும்
பாவை உன்
முகம் பார்த்து
பசியாற வேண்டும்
மனதாலும்
நினைவாலும் தாயாக
வேண்டும் நானாக
வேண்டும்
மடி மீது
விளையாடும்
சேயாக வேண்டும்
நீயாக வேண்டும்
ம்ம்ம் ம்ம்ம்
நான் பேச
நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும்

                                           என்று பாடல் தொடர அதில் வரும் ஆண்குரலும், பெண்குரலும் காதலில் மொத்தமாக மயங்கி போய் இருந்தது.. எப்போதுமே அசலை விட நகல் இன்னும் தெளிவாக இருக்குமே அப்படிதான் உணர்ச்சிகள் கொட்டி கிடந்தது அந்த பாடலில்..

                                         கண்களில் நிறைந்து விட்ட கண்ணீர் துளிகளுடன் தன் நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருந்தாள் சிபி.. அந்த பாடலில் வரும் பெண்குரல் அவளுடையது.. பின்னணியில் வரும் ம் காரம் அவள் இன்பனுடையது…

                             எப்போதுமே பழைய பாடல்களில் அலாதி இன்பம் இன்பனுக்கு. ஒலிக்கவிட்டு அமைதியாக கேட்டுக் கொண்டே கண்களை மூடி படுத்து விடுவான்.. அவனின் அந்த ரசனை தெரிந்த நாளாக பழைய பாடல்களை தானும் ரசிக்க தொடங்கியவள் அவனின் பின்னணிக்கு ரசிகையாகி போக, அவன் பாடுவதை அவனே அறியாமல் சில நேரங்களில் சேமித்து வைப்பதும் உண்டு..

                          சில நேரங்களில் இருவரும் சேர்ந்து கச்சேரி நடத்துவதும் கூட நடக்கும்.. அதுபோன்ற ஒரு தருணத்தில் இருவரும் ஒருவரில் ஒருவர் பின்னி பிணைந்து அமர்ந்து கொண்டு ரசித்து பாடிய பாடல் தான் அது …

             சொல் என்றும்
மொழி என்றும் பொருள்
என்றும் இல்லை பொருள்
என்றும் இல்லை
சொல்லாத
சொல்லுக்கு விலை
ஏதும் இல்லை விலை
ஏதும் இல்லை
ஒன்றோடு
ஒன்றாக உயிர் சேர்ந்த
பின்னே உயிர் சேர்ந்த
பின்னே
உலகங்கள்
நமையன்றி வேறேதும்
இல்லை வேறேதும்
இல்லை

                                 நிச்சயம் அவர்களின் உலகம் அப்படிப்பட்டது தான். அவர்கள் இருவரன்றி யாருமே இருந்தது இல்லை அவர்களின் உலகில்.. அதீத அன்பு, அதீத மகிழ்ச்சி, அபரிமிதமான காதல் என்று அனைத்துமே இருந்தது அவர்களின் வாழ்வில்..

                                     இன்பனின் பார்வைகள் போதும் அவளை உயிர்ப்பிக்க, அவனின் மீது வைத்திருந்த நம்பிக்கையின் பேரில் தான் விலகி வந்ததும் கூட.. அப்படி இருக்க, தன்னை தேடி அவர் வரவே இல்லையே என்ற எண்ணம் அவளை முழுவதமாகவே அவ்வபோது உடைத்து விடும்..

                                 இதுவும் அதுபோன்ற தருணங்களில் ஒன்றாகிவிட, அவனின் குரல் மருந்தானது…

                                                 உறங்கி கொண்டிருந்த இனியன் கண்ணில்பட, தன் இனியவனின் நினைப்பு கேட்காமலே வந்து சேர்ந்தது..  இனியவன் அது அவளுக்கு மட்டுமேயான அழைப்பு.. எப்படி அவன் ரசிப்புத்தன்மைக்கு அவள் ரசிகையோ, அப்படிதான் அவளுக்கும் அவன் இனியவன்..

                            கண்களில் வழிந்த நீரோடு, காற்றில் கையை நீட்டி அவனை தேடி கொண்டிருந்தாள் பெண்.. அவனை தேடி  சென்று விட, ஒரு  நொடி போதும்.. ஆனால் செய்து கொடுத்திருந்த சத்தியம் அவளை கட்டிவைக்க, சத்தியத்தை வாங்கி கொண்டவரே உயிருடன் இல்லை என்பதை இன்றுவரை அறிந்திருக்கவே இல்லை அந்த பேதைப்பெண்.

                           இனியன் எழுந்து அவளை கலைக்கும் வரை தன்னவனின் நினைவில் மூழ்கி போனவளாக அவள் அமர்ந்துவிட, எழுந்த இனியன் அவள் மீது ஏறவும் தான் நிகழ்காலத்திற்கு வந்து சேர்ந்தாள்.. அவனுக்கு முகம் கழுவி உடையை மாற்றியவள் இரவு உணவுக்கானதை பார்க்க அவளின் நேரம் அப்படியே கழிந்தது..

                           அன்று இரவு ஜெகன் இன்பனின் வீட்டில் தங்கி கொள்வதாக முடிவாக, நண்பர்கள் மூவரும் இன்பனின் வீட்டு பால்கனியில் அமர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். இன்பன் உறங்க வேண்டும் என்பதால் லாரன்ஸ் அவனுக்கான மாத்திரைகளை எடுத்து கொடுக்க, போட்டுக் கொண்டவன் மீண்டும் ஆட்டத்தில் கலந்தான்..

                         ஆனால் உறக்கம் கண்களை சுழற்ற, எழுந்து கொண்டவன் சென்று படுத்துவிட, லாரன்சும் ஜெகனும் மட்டுமே.. லாரன்ஸ் சில நிமிடங்கள் அமைதியாக ஜெகனை பார்க்க “என்ன கேட்கணும் வெள்ளைக்காக்கா…” என்று அவனை பார்த்தான் ஜெகன்..

                          “உனக்கு இன்பாவை எவ்ளோ நாளா தெரியும் ஜெகன்..” என்று தன் அழுத்தமான உச்சரிப்புடன் கேட்டான் லாரன்ஸ்..

                           “ஹான்.. நாங்க ரெண்டு பேரும் குவா குவா பிரெண்ட்ஸ்.. அவன் பொறந்ததுல இருந்து தெரியும் எனக்கு.. ” என்று பெருமையாக கலரை தூக்கி விட்டு கொண்டான் ஜெகன்.

                           “அதான்.. மூணு வருஷமா அவனை எட்டி கூட பார்க்காம இருந்தியா…” என்று லாரன்ஸ் நக்கலாக கேட்க

                          “உனக்கு என்னடா தெரியும்.. நானா அவனை பார்க்கல.. அவன் எங்கே இருக்கான் ன்னு கூட தெரியாத அளவுக்கு பண்ணிட்டு, இப்போ எதுக்கு இங்கே அனுப்பி வச்சிருக்கானாம்,… கேட்க வேண்டியது தானே.. அவன் அப்பன்கிட்ட..” என்று கொந்தளித்தான் அவன்..

                          “என்ன சொல்ல வர நீ.. உன்னை ஏன் அங்கிள் தடுக்கணும்.. நீ இன்பாவை பார்க்கிறதுல அவருக்கு என்ன ப்ராப்ளம்..” என்று மீண்டும் அவன் கேட்க

                          “என்ன பிரச்சனை.. அந்தாளோட ஈகோ தான் பிரச்சனை.. பணத்திமிர்ல யாரும் இல்லாத ஒரு அப்பாவி பொண்ணை துரத்தி விட்டார் இல்லையா.. எங்கே அவளை பத்தி இன்பாகிட்ட சொல்லிடுவேனோ ன்னு பயம்..” என்று தீராத ஆத்திரத்தோடு அவன் கூற

                          “உனக்கு தெரியுமா..” என்று லாரன்ஸ் மொட்டையாக கேட்டு வைக்க

                          “என்ன தெரியுமா.. என்ன கேட்கிற..”

                          “அதுதான் இன்பா லவ்வர்.. உனக்கு தெரியுமா அவளை.. ” என்று ஆவலோடு அவன் கேட்க

                         “ஏன்.. தெரிஞ்சா ஒரேடியா அவளை கொன்னுட சொல்லி இருக்காரா உன் அங்கிள்..” என்று கண்கள் சிவக்க

                         “ம்ச்.. ஜெகா.. நான் உனக்கு எல்லாமே சொல்றேன்.. நீ சொல்லு.. உனக்கு அந்த பொண்ணை தெரியுமா.. எங்கே இருக்கா அவ?” என்று அடுத்தடுத்து அவன் ஆர்ப்பரிக்க

                          “எனக்கு தெரியாது.. தெரிஞ்சாலும் சொல்ல முடியாது.. அவ எங்கேயோ நிம்மதியா இருக்கட்டும்..” என்று ஜெகன் முடிக்க, அவன் சட்டையை பிடித்து விட்டான் லாரன்ஸ்..

                           “மரியாதையா சொல்லிடு இன்பா.. அவரால அவளுக்கு எந்த பிரச்னையும் வராது.. அதுக்கு நான் பொறுப்பு.. அந்த பொண்ணு எங்கே இருக்கா.. சொல்லு..” என்று அவன் அழுத்தமாக கேட்க

                            “நீ என்னை கொன்னே போட்டாலும் சொல்லமாட்டேன் லாரன்ஸ்… எனக்கு அவளோட நிம்மதி ரொம்ப முக்கியம்..” என்று ஒரே பிடியாக ஜெகன் நிற்க

                            “புல்ஷிட்.. நிம்மதி… என்ன பொண்ணுடா அவ.. என்ன பிரச்சனை இருக்கட்டும்.. அதுக்காக லவ்வரை இப்படி ஒரு நிலைமைல விட்டுட்டு போவாளா.. அவன் எப்படி இருக்கான் ன்னு பார்க்கணும் இல்ல.. அதை கூட செய்யாம என்னடா நிம்மதி.. எப்படி அவளால நிம்மதியா இருக்க முடியும்…” என்று தன் பங்கிற்கு லாரன்ஸ் கத்த

                            “அவளை குறை சொல்ல எல்லாம் யாருக்கும் தகுதியே இல்லடா.. அவளை பத்தி இன்னும் ஒரு வார்த்தை பேசின உன் பல்லை உடைச்சு கையில் கொடுத்திடுவேன்… யாருக்கு தெரியும்.. அன்னிக்கு அவ விட்டுப்போக சம்மதிக்கலன்னா இன்பனை ஒரேடியா கொன்னே போட்டிருப்பாங்க உன் அங்கிளும் அந்த கிழவியும்… அவளால தான் இன்னிக்கு இன்பன்..

                           “இப்பவும் அவனுக்கு நினைவு திரும்புற வரைக்கும் தான் இவங்க ஆட்டம் எல்லாம்.. அவனுக்கு எப்போ எல்லாம் நினைவு வருதோ அன்னிக்கு அவன் ரசிகாவோட இனியன் தான்… உங்க யாராலயும் ஒரு…. முடியாது..” என்று அவன் கூற

                                            “முட்டாள்.. இன்பனுக்கு இப்போவே கொஞ்சநஞ்சம் நினைவுல இருக்கறது அவ ஒருத்தி தான்.. ” என்று கத்தி இருந்தான் லாரன்ஸ்..

                   ஜெகன் அவனை அதிர்ச்சியாக பார்க்க, அவனுக்கு வரும் கனவு பற்றியும், அவன் அன்னை, தந்தையுடன்  ஏற்பட்ட வாக்குவாதம் குறித்தும் முழுதாக சொல்லி முடித்தான் லாரன்ஸ்.. ஜெகனுக்கு என்ன மாதிரியான காதல் இவர்களுடையது என்று தான் தோன்றியது..

                    சிறிது நேரம் அங்கே மௌனம் மட்டுமே மொழி பேச, இருவரும் எதிரெதிர் சோஃபாவில் அமர்ந்து விட்டிருந்தனர்… ஜெகன் இருக்கையின் விரல்களையும் கோர்த்துக் கொண்டவன் நெற்றி பொட்டில் அழுத்திக் கொண்டு அமர்ந்திருக்க

                    “இப்போவாவது சொல்லு ப்ளீஸ்.. அந்த பொண்ணு எங்கே இருக்கா… அவ வந்தா ஒருவேளை இன்பா சரியாகவும் சான்ஸ் இருக்கு ஜெகா.. சொல்லு..” என்று லாரன்ஸ் கெஞ்சுதலாக கேட்க

                      அப்போதும் ஜெகன் கொஞ்சம் சந்தேகத்துடன் லாரன்ஸை பார்த்து வைக்க “இன்னும் என்னடா.” என்று ஆத்திரமாக எழுந்தவன் “என்ன ஆனாலும் என்னை மீறி இன்பாவை யாரும் தொட முடியாது.. அதேதான் அவன் லவ்வருக்கும்.. அவங்க ரெண்டு பெரும் என் பொறுப்பு.. உனக்கு இன்பா மேல அக்கறை இருந்தா, என்ன தெரியுமோ அதை சொல்லி தொல..” என்று கத்தியவன் எழுந்து நின்றுவிட்டான்..

                     ஜெகன் “இனியன் இன்பனோட பையன்…” என்று நிதானமாக வார்த்தைகளை வீச, அவன் வார்த்தைகளின் அர்த்தம் உணர்ந்தவன் மீண்டும் தொப்பென்று அமர்ந்துவிட்டான் சோஃபாவில்..

                     அவன் அதிர்ச்சியாக ஜெகனை பார்க்க, ஆம் என்பது போல் தலையை அசைத்தவன் “ரெண்டு பெரும் என் வீட்ல தான் இருக்காங்க.. மூணு வருஷமா..” என்று அதே நிதானத்துடன் சொல்லி முடித்தான்..

                    லாரன்ஸ் உணர்ச்சிவச பட்டவனாக ஜெகனை கட்டி கொள்ள, அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிய, ஜெகனும் நெகிழ்ந்து தான் போயிருந்தான்.. நண்பனின் வாழ்வை காக்க ஏதோ ஒருவகையில் இதுநாள்வரை போராடி வந்த இருவரும் ஒரே புள்ளியில் வந்து நிற்க, அவர்களின் நட்பு இன்னமும் பலமானது அந்த நிமிடம்..

               இவர்கள் இருவரும் இவர்கள் கதையில் மூழ்கி இருக்க, சம்பந்தப்பட்ட முதல்வன் இவர்கள் கதையை முழுதாக கேட்டு விட்டதை உணரவே இல்லை இவர்கள்..

                       நாளை சிபியின் வாழ்வை மீண்டும் ஒருமுறை புரட்டிப்போட, தனிமையில் திட்டம் வகுத்துக்  கொண்டிருந்தான் அவன்.. கண்ணீரோடு நிற்பவளிடம் மீண்டும் ஒருமுறை பணயம் வைத்து பேரம் பேச தயாராகி கொண்டிருந்தான் அவன்..

Advertisement