Advertisement

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 09

                      சிபி இனியனை தேடி வந்தவள் உள்ளே செல்லாமல் வாசலிலேயே நின்று குரல் கொடுக்க, தாயின் குரலை கேட்டதும், நெளிந்து வளைந்து இன்பனின் கையில் இருந்து குதிக்க பார்த்தான் இனியன். இன்பன் “என்னடா கண்ணா….” என்று அவனை சரியாக அமர வைக்க முற்பட,

                   “இனி நீ என்ன செஞ்சாலும் இங்கே இருக்கமாட்டான்.. அவன் அம்மா வந்துட்டா..” என்று சொல்லிக் கொண்டே அவனை தூக்கி கொண்டு வாசலுக்கு வந்தான் ஜெகன். சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தாலும் அவன் இதயம் மத்தளம் போல துடித்தது அவனுக்கு மட்டுமே தெரியும்.

                     “வந்தவ உள்ளே வர வேண்டியது தானே.. என்று ஒரு மனம் நினைத்தாலும், இவ வெளியே நின்னது நல்லதுதான் என்றது இன்னொரு மனது.. பின்னே எதுவுமே நினைவில் இல்லாத நிலையில் இன்பனின் அறிமுகமற்ற பார்வையை அவள் தாங்கி கொள்வாளா?? முடியுமா அவளால்?? என்று கேள்வி எழுப்பிக் கொண்டவன் முடியாது என்று தானே பதிலும் உரைத்து கொண்டான்.

                           இதற்குள் குழந்தையோடு அவன் சிபியிடம் வந்திருக்க, இனியனை கையில் வாங்கி கொண்டு அவள் வீட்டை நோக்கி நடக்க தொடங்கினாள் சிபி. ஜெகன் நிம்மதி பெருமூச்சு ஒன்றுடன் வீட்டிற்குள் வர, இனியனை பற்றிய கேள்வியோடே அவனை எதிர்கொண்டான் இன்பன்.

                            “அந்த குழந்தை ரொம்ப ஸ்வீட் ஜெகா.. செம சுட்டி..” என்று அவனாகவே கூறியவன் “என்ன வயசிருக்கும்டா..” என்று விசாரிக்க

                            “ரெண்டரை வயசு ஆகுதுடா..”

                            “ஓஹ்.. ஆனா பார்க்க கொஞ்சம் மெச்சூர்டா தெரியுறான்..” என்று இன்பன் விடாமல் இனியனை தொடர

                           “இதுக்கு முன்ன அவனை பார்த்தியா..” என்று சந்தேகமாக கேள்வி எழுப்பினான் ஜெகன்.

                           “ஆமாடா.. கோவில்ல வச்சு பார்த்தோம்.. அவனோட அம்மா போல, ஒரு பொண்ணோட வந்திருந்தான்… ஒரு பந்தை கையில வச்சுட்டு, சரியான ஆட்டம்..” என்று அவன் தொடர, ஜெகனுக்கு தான் மூச்சு நின்றுவிடும் போல் இருந்தது…

                           “ம்ம்ம்.. அவன் அம்மாகூட தான் கோவிலுக்கு போய் இருந்தான். சிபி இன்னிக்கு வீட்ல இருந்தா இல்லையா.. அவதான் தூக்கிட்டு போயிருந்தா ஜெகா..” என்றார் ரங்கராஜன்.

                           நேரம் எட்டு மணியை தாண்டவும், இன்பன் “வீட்டுக்கு கிளம்புறேண்டா..” என்று எழுந்து கொள்ள, லாரன்ஸ்ம் அவனுடனே எழுந்தான்.. ஜெகா இதுவரை அவனை பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்தவன் “யாருடா இவன்.. வெள்ளைக்காக்கா மாதிரி.. பாடிகார்டா..” என்று நக்கலாக கேட்க

                            வாயை பொத்தி சிரிப்பை அடக்கினான் இன்பன்.. லாரன்ஸ் இப்போது ஜெகனை முறைக்க, ஜெகன் அவன் முறைப்பிற்கான காரணம் புரியாமல் பார்க்க, “நான் இன்பா பிரெண்ட் லாரன்ஸ்… வெள்ளைக்காக்கா இல்ல லாரன்ஸ்…” என்று அழுத்தமான உச்சரிப்புடன் வந்து விழுந்தன வார்த்தைகள்.

                         ஜெகன் வாய் மூடாமல் அவனை பார்க்க, “எப்படிடா என் ட்ரைனிங்..ரெண்டரை வருஷத்துல இவனை தமிழ் புலவனா மாத்தி இருக்கேன் பாரு…” என்று காலரை தூக்கி விட்டான் இன்பன்.

                         “இவன் புலமையில தீயை வைக்க… ஏண்டா ஒரு முடிவோடவே வந்து இருக்கீங்களாடா..” என்று வெளிப்படையாகவே அலுத்து கொண்டான் ஜெகன்.. கூடவே

                         “டேய் வெள்ளைக்காக்கா.. உனக்கு தமிழ் தெரியுமுன்னு நான் என்ன கனவா கண்டேன்.. மன்னிச்சுக்கோடா…” என்று லாரன்ஸிடம் மன்னிப்பும் கேட்க

                          “டோன்ட் கால் மீ வெள்ளைக்காக்கா…” என்று முறைத்தான் அவன்.

                         ஜெகன் “எனக்கு அதுதான் ஈஸியா இருக்கு… உன் பேரை மாத்திக்கோ..” என்று தானும் முறைத்து நிற்க

                         “இன்பா,… வாட் இஸ் திஸ்… இந்த முட்டாள் என்ன பேசுறான்..” என்று பொரிந்தவன் இன்பனை துணைக்கு அழைக்க

                       “ஜெகா..” என்று அதட்டினான் இன்பன். ஜெகன் சிரிப்புடன் லாரன்ஸை பார்க்க, அவனை முறைத்து கொண்டு நின்றான் லாரன்ஸ்..

                         “லா.. அவன் சும்மா விளையாடறான்டா..” என்று அவனை சமாதானம் செய்தவன் “கிளம்புறோம்டா..” என்று ஜெகனிடம் விடைபெற

                           “இங்கேயே இரு இன்பா..” என்று உரிமையோடு வற்புறுத்தினான் ஜெகன்.

                         “இல்லடா.. டேப்லேட்ஸ் எல்லாம் அங்கே இருக்கு.. கூடவே இவன் வேற இருக்கான்.. நாங்க அங்கேயே இருக்கோம்.. நாளைக்கு வரேன்.. நாம சேர்ந்து எங்கேயாவது போவோம்…” என்று கூறி கிளம்பினான் இன்பன்.

                          அப்போதும் விடாமல், அவனை சாப்பிட வைத்தே அங்கிருந்து அனுப்பி வைத்தான் ஜெகன். அவன் கூடவே சென்று வழியனுப்பி வைத்தவன் மீண்டும் வீட்டிற்குள் வர அவனுக்காக காத்திருந்தார் ரங்கராஜன்.

                          ஜெகன் உற்சாக மிகுதியில் தன் தந்தையை கட்டி கொள்ள, மகனின் முதுகில் தட்டி கொடுத்து நின்றார் அவர். மூன்று ஆண்டுகளாக மகனின் போராட்டத்தை அறிந்தவர் அல்லவா.. அதிலும் இங்கு வந்த புதிதில் கண்களில் உயிர்ப்பே இல்லாமல் சுற்றி வரும் சிபியும், அவள் பின்னால் அலைவதே முழுநேர வேலையாக கொண்டிருந்த மகனும் நினைவில் வர, ஜெகனின் மனம் எப்படி நெகிழ்ந்து போயிருக்கும் என்பதை உணர முடிந்தது அவரால்.

                       “எல்லாம் சரியாகிடும் ஜெகா.. உன் சிபி சீக்கிரமே உன் நண்பனோட சந்தோஷமா வாழ் போறா பாரு.. எல்லாம் இனி நல்லதாவே நடக்கும்டா.. அழாம அடுத்து என்ன செய்யுறது ன்னு யோசி…” என்று அவர் பெரியவராக அறிவுரை கூற, மெல்ல தலையசைத்துக் கொண்டு தன் அறைக்கு சென்றான் அவன்.

                       நிச்சயம் அந்த நாள் அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு வகையில் இனிமையான நாளாக கடந்திருந்தது. ஏன்  என்றே அறியாமல் இனியனை நெருக்கமாக நினைக்க தொடங்கி இருந்தது இன்பனின் உள்ளம். தன் அறையில் படுத்திருந்தவன் ம்முகத்தில் நிறைந்த புன்னகையோடு இனியனை பற்றிய  இருக்க, லாரன்ஸ் அவனுடன் இருந்தான்.

                      அவனுக்கும் இனியனை பார்த்தவுடனே பிடித்தது என்றாலும், இன்பன் அளவுக்கு பைத்தியம் ஆகவில்லை இன்னும்.. ஆனால் நண்பனின் சிரிப்புக்கு காரணமான அந்த இனியனை இன்னமும் கொஞ்சம் நெருங்க நினைத்தான் அவன்.

                     இப்படி பல கலவையான உணர்வுகளுடன் அந்த நாள் கடந்துவிட, புத்துணர்ச்சியுடன் புலர்ந்தது அடுத்த நாள் காலை. இவர்கள் எழுந்து குளித்து முடிக்கும் நேரம் கையில் உணவு கூடையுடன் அவர்களை தேடி வந்துவிட்டான் ஜெகன். லாரன்ஸ் மற்றும் இன்பனுக்கு உணவு எடுத்து வந்திருந்தவன் தானும் அவர்களுடனே உண்டு முடிக்க, உண்டு முடிக்கும் நேரம் தான் அந்த ரசமலாய் கேக்கை அவனிடம் நீட்டினான் ஜெகன்.

                இன்பன் அந்த கேக்கை வாங்கி லேசாக சுவைக்க, ஏனோ அந்த சுவை புதிதாக தெரியவில்லை அவனுக்கு. ஏற்கனவே நன்கு பரீட்சையமானது போல் இருக்க, கேள்வியாக ஜெகனை பார்த்தான் அவன். ஜெகன் “என்னடா..” என்று கேட்க

                  “இந்த கேக் ஏற்கனவே சாப்பிட்டு இருக்கேன்டா… எனக்கு ரொம்ப பிடிச்ச பிளேவர் இது.. இங்கே எப்படி கிடைச்சது..” என்று அவன் வியப்பாக கேட்க

                 “இனியனோட அம்மா செஞ்சதுடா.. அவனுக்கும் இந்த பிளேவர் ரொம்ப இஷ்டம்.. இன்னிக்கு லீவு தானே.. அதான் காலையிலேயே செஞ்சிட்டாங்க..” என்பதோடு முடித்துக் கொண்டான்.

                   லாரன்ஸ் ஜெகனுடனான தனிமை எப்போது கிடைக்கும் என்பது போல் பார்த்து நின்றான் இவர்களை. அவனுக்கு ஜெகனிடம் கேட்கவும், தெரிந்து கொள்ளவும் சில விஷயங்கள் இருந்தது..

                               அவனுக்கு தெரிந்த வகையில் இன்பனுக்கு நினைவில் இருக்கும் ஒரே கடந்தகால நண்பன் ஜெகன் தான். இன்பனின் காதலை பற்றி அவனுக்கு ஏதாவது தெரிந்து இருக்குமோ என்று சிறு சந்தேகம் இருந்தது அவனுக்கு.

                   அதே நேரம் இன்பனும் ஜெகனிடம் பேச வேண்டும் என்று தான் நினைத்திருந்தான். இன்பன் அறியாத அவனின் கடந்த காலத்தை, ஜெகன் அறிந்திருக்க மாட்டானா என்ற ஆவல் அவனுக்கும் இருந்தாலும், எப்படி கேட்பது என ஏதோ ஒரு தயக்கம் இருந்தது அவனுள்.

                    இருவருமே யார் முதலில் என்று யோசித்து நிற்க, ஜெகன் அவர்களுக்கான அன்றைய திட்டத்தை பற்றி கூற தொடங்கினான். அவன் திட்டப்படி மூவரும் அன்று வெளியில் செல்வதாக முடிவாக, யாரும் எதிர்பார்க்காதபடியாக இனியனையும் அழைத்து வர சொன்னான் இன்பன்.

                   ஜெகன் “டேய் அவன் குழந்தைடா..” என்று புரியவைக்க பார்க்க, “ப்ளீஸ்டா.. கொன்ஜம் கேட்டுபாரேன்.. எனக்காக.. நாம அவனை நல்லா பார்த்துக்குவோம்டா.. அவன் முன்னாடி இருந்தா என் மைண்ட் கொஞ்சம் பிரீயா இருக்கு ஜெகா.. ப்ளீஸ்..” என்று கெஞ்சலாக இன்பன் கேட்க, அதற்குமேல் மறுக்க முடியுமா ஜெகனால்.

                         சிபியிடம் போராடி இனியனையும் உடன் அழைத்துக் கொண்டு அவர்கள் வெளியே கிளம்ப, அத்தனை குதூகலமாக இருந்தான் இனியன். அவர்கள் எஸ்டேடிலிருந்து சற்றே தள்ளி அமைந்திருந்த கூழாங்கல் ஆற்றின் கரையோரம் தாங்கள் கொண்டு வந்திருந்த பெட்ஷீட்டை விரித்து இனியனை அமர்த்தியதும்,  லாரன்ஸ் மற்றும் ஜெகன் ஆற்றை நோக்கி நடக்க, இன்பன் இனியனுடன் தான் இருந்தான்.

                      ஜெகன் வந்து அடுத்த சில நிமிடங்களில் அவனையும் அழைக்க,கையில் குழந்தையை தூக்கி கொண்டு எழுந்தான் இன்பன். ஜெகன் இனியனை கையில் வாங்கி கொள்ள, அன்று மதியநேரம் கடக்கும் வரை நீரில் ஆடியவர்கள் இனியனையும் முழுதாக நனைத்து விட்டிருந்தனர்.

                      நான்கு பேரும் களைத்து போனவர்களாக வீடு திரும்ப, ஏற்கனவே சொல்லி இருந்தது போல, தன் வீட்டிற்கு அவர்களை அழைத்து வந்துவிட்டான் ஜெகன். சந்திராம்மா அவர்களுக்கான உணவை தயாரித்து வைத்திருக்க, மேலே இருந்த ஜெகனின் அறைக்கு இருவரையும் அனுப்பியவன் இனியனை தூக்கி கொண்டு சிபியிடம் வந்தான்.

                        வாசலில் அமர்ந்திருந்தவள் இனியனை கண்டதும் கையை நீட்டி வாங்கி கொள்ள, அவள் தோளில் முகத்தை புதைத்து அப்படியும், இப்படியுமாக திருப்பினான் அவன்.

                               “என்ன சரியான ஆட்டமா..” என்று அவள் கேட்க

                        “ம்ம்ம்.. ஆமா.. தண்ணியில நிறைய விளையாடி இருக்கான் சிபி.. ஏதாவது கஷாயம் கொடு.. சளி பிடிச்சுக்காம பார்த்துக்கோ..” என்று அக்கறையாக அவன் கூற

                        “தண்ணியில ஆட்டம் போட விட்டுட்டு என்கிட்டயே சொல்ல வேற செய்ற.. நல்லவன் ஜெகா நீ… ” என்று அவள் சிரிக்க

                         “ஹேய் சிபி.. சொன்னேன்ல என் பிரெண்ட் கொஞ்சம் ஸ்ட்ரெஸ்ல இருக்கான் ன்னு.. இவனை பார்க்கவும் தான் கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருந்தான்.. இனியனை ரொம்ப பிடிக்குது அவனுக்கு..” என்று பேச்சுவாக்கில் ஜெகன் போட்டு வைக்க

                       அவன் எதிர்பார்த்தது போலவே, ஜெகனின் நண்பன் என்ற வார்த்தையில் லேசான மற்றம் பெண்ணின் முகத்தில். திருப்தியாக குறித்துக் கொண்டவன் தன் வீட்டை நோக்கி நடக்க, மகனை எப்படியோ பிடித்து இழுத்து அமர்த்தி உணவை ஊட்டியவளுக்கு, தானும் உண்ணவேண்டும் என்பது நினைவில் இல்லை.

Advertisement