Advertisement

அவர்கள் குடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தான் ஆர்ப்பாட்டமாக அந்த வீட்டிற்குள் நுழைந்தாள் லிண்டா…. வந்தவள் கண்களில் அங்கே அமர்ந்திருந்த இன்பன் விழ, “ஹேய் இன்பா…”என்ற கூச்சலுடன் ஓடி வந்தவள் அவனை அணைத்து விடுவித்து அவன் கன்னத்தில் ஒரு முத்தம் வேறு வைத்துவிட, சிபிக்கு கொதித்துக் கொண்டு வந்தது…

                   ஆனால், அவள் வெடிப்பதற்குள் அபிராமி வெடித்துவிட்டார்.. “ஏய்.. அதென்ன பார்த்ததும் கட்டிப்பிடிக்கிற பழக்கம்.. தள்ளி நில்லு..” என்று அவளை பிரிக்க, அவரையும் கட்டிக் கொண்டவள் அவர் கன்னத்திலும் முத்தமிட்ட பிறகே விலகினாள்..

                      “என்னடி பண்ணி வைக்கிற.. எங்கே அந்த வளர்ந்தவன்… உன்னை தனியா விட்டுட்டு எங்கே போய் தொலைஞ்சான்..” என்று அவர் லாரன்ஸை வசைபாட

                     கோபமாக இன்பனிடம் திரும்பியவள் “இன்பா… லாரன்ஸ் எங்கே.. போன் கூட பண்றது இல்ல எனக்கு… என்ன நினைச்சுட்டு இருக்கீங்க… இங்கே யாரவது பொண்ணை பார்த்துட்டானா..” என்று ஆங்கிலத்தில் அவள் பொரிய தொடங்கினாள்.

                     இன்பன் அவளை ஒருவழியாக மலை இறக்கி, அவள் வந்த விவரங்களை கேட்க, லாரன்சிடம் கூட சொல்லாமல் அவள்வந்து இறங்கி இருப்பது தெரியவும், லாரன்ஸுக்கு அழைத்து வீட்டிற்கு வர சொன்னான் இன்பன்.

                    சிபியை அவளிடம் அறிமுகம் செய்து வைக்க, அவளையும் கட்டிக்கொண்டு முத்தமிட்டு விலகியவள் “எப்படி இப்படி ஒரு லவ்… ” என்று அதிசயிக்க, சிபி வாயை திறக்காமல் புன்னகையே பதிலாக கொடுக்க

                  “லவ்லி ஸ்மைல்..” என்றவள் மீண்டும் அவள் கன்னத்தில் முத்தம் வைக்க, இப்போது இன்பனுக்கு எரிந்தது… அவர்களையே அவன் பார்த்து இருக்க, அதற்குள் இனியனிடம் சென்று இருந்தாள் லிண்டா…. அவனை கைகளில் தூக்கி கொண்டு அவனுக்காக வாங்கி வந்திருந்த விளையாட்டு பொருட்களை அவள் கடைவிரிக்க, இனியன் அவளது விசிறியாக மாறி இருந்தான்.

                   அவள் வாங்கி வந்திருந்த பொருட்கள் அத்தனையும் இனியனுக்காகவே இருக்க, அவளின் அன்பில் சிபிக்கு நெகிழ்வாக இருந்தது…

                          அவளின் இந்த அன்பு இன்பாவின் மகனுக்கானது  புரிய, தன் கணவனை நினைத்து கொஞ்சம் பெருமிதமாகவே உணர்ந்தாள் சிபி. அந்த உணர்வுடனே அவள் இன்பனை திரும்பி பார்க்க, அவள் பார்வையை உணர்ந்தவன் லேசாக கண்ணை சிமிட்டி சிரிக்கவும், பதட்டத்துடன் சுற்றிலும் பார்த்தவள் பார்வையை திருப்பிக் கொள்ள அதற்கும் ஒரு விரிந்த புன்னகை தான் இன்பனிடம்.

                              அதன் பின்னான நேரங்களில் இன்பன் பக்கம் திரும்பாமல் அவள் சுற்றிவர, அபிராமி காலை உணவை தயார் செய்து விட்டிருந்தார். சிபி பரிமாற, இவர்கள் காலை உணவை முடித்து அமரவும், லாரன்ஸ் அரக்கபரக்க வீட்டிற்குள் நுழைந்தான்.

                                இன்னும் ஒருவாரத்தில் ஜெகன் திருமணம் இருக்க, அதற்கான வேலையில் இருந்தவனை இன்பன் உடனே அழைக்கவும் ஓடி வந்திருந்தான் அவன்.

                    ஹாலில் அமர்ந்திருந்த தன் நிலவை காணவும், அவன் “லீ..” என்று ஆர்பரிப்புடன் அவளிடம் செல்ல, கையில் வைத்திருந்த இனியனின் பொம்மையை அவன் முகத்திலேயே தூக்கி எறிந்தாள் லிண்டா… லாரன்ஸ் “சாரி.. சாரிடா..” என்று அவளிடம் கெஞ்ச

                   “மரியாதையா ஓடிடு.. உன்னை டிவோர்ஸ் பண்ணப்போறேன் நான்..” என்று அவள் ஆங்கிலத்தில் கத்த, “பேபி.. நோ… நான் உன்னோட லாரன்ஸ் இல்லையா..” என்று கேட்டுக் கொண்டே லாரன்ஸ் அவள் பின்னால் அலைய, இனியனும் அவர்கள் இருவரின் பின்னால் சுற்றிக் கொண்டிருக்க, கவிதையாக இருந்தது அந்தக்காட்சி…

                                அவன் எத்தனை சரிகட்டியும் லிண்டா அசைந்து கொடுக்காமல் அவனை தன் பின்னே அலையவிட, அவன் வந்த அடுத்த அரைமணி நேரத்தில் ஜெகனும், மதுவை அழைத்துக் கொண்டு அங்கே வந்து சேர்ந்திருந்தான்.

                       ஜெகன் வந்த வேகத்தில் “எங்கேடா அவன்.. உன் போன் வரவும், என்ன ன்னு கூட சொல்லாம கிளம்பி வந்துட்டான்.. வெள்ளை காக்கா… இவனை தேடி பின்னால அலையுறாதே என்  பொழப்பா போச்சு..” என்று புலம்ப

                      “இவர் பொய் சொல்றாரு மாமா…என்னை கூட்டிட்டு வெளியே போறதா பிளான்.. லாரன்ஸ் கிளம்பிடவும், இவர் பிளான் சொதப்பிடுச்சு… அதான் கடுப்பா இருக்கார்… இப்போ சார் ஆபிஸ் போகணும் இல்ல..” என்று மதுவர்ஷினி சிரித்தாள்.

                        இன்பன் ஜெகனை கிண்டலாக பார்க்கவும், “அட நீ வேறஏண்டா…என் கல்யாணத்துக்கு இருக்கறதா சரியா நாலு நாள் தான்.. இந்த கேப்ல கூட என்னை லவ் பண்ண விடமாட்டிங்களாடா… ” என்று அவன் அழுவது போல மூக்கை உறிஞ்சினான்..

                      மது நக்கலாக சிரித்தவள் “மூணு  வருஷத்தை மொத்தமா வேஸ்ட் பண்ணிட்டு, இப்போ  நாலு நாள் பத்தி கவலைப்படுறாரு ஜெகன் சார்… பாவம் இல்ல சிபி…” என்று சிபியை துணைக்கு அழைக்க

                      “நிஜமாவே பாவம் தான் மது… அன்னைக்கு நிலைமையில எனக்கு என்ன வேணா நடந்து இருக்கலாம்… நான் அப்படிதான் இருந்தேன்.. ஜெகன் மட்டும் வராம போயிருந்தா, அடுத்து என்ன செய்திருப்பேன் கூட தெரியல எனக்கு…

                      “அந்த நிமிஷம் என்னை காப்பாத்தி உயிரோட  பிடிச்சு வைக்கிறது ஒண்ணுதான் ஜெகனோட மனசுல இருந்து இருக்கும்.. அதுக்கு பிறகும் கூட, இனியன் எனக்குள்ள இருக்கறது தெரியவும், இன்னும் மொத்தமா என்மேல கவனம் செலுத்த ஆரம்பிச்சுட்டான்..

                     “உன்னை தவிர்த்ததுக்கு கூட, நிச்சயம் நான் தான் காரணமா இருப்பேன்.. நான் இங்கே யாரோட பார்வையிலேயும் படறதை நானே விரும்பல.. அதோட உங்க அப்பாவும் என்னை விடறதா இல்ல.. சோ என்னோட பாதுகாப்பை பத்தி யோசிச்சு இருப்பாங்க…”

                     “எனக்கு கூட பிறந்தவங்க யாருமே இல்ல ன்னு அம்மாவுக்கு நிறைய வருத்தம்..ரொம்ப புலம்புவாங்க… ஆனா, இப்போ எனக்கு அப்படி தோணவே இல்ல… எனக்கு ஒரு அண்ணன் இருந்தா, இவனை மாதிரி தான் இருந்து இருப்பான் போல…”

                      “ஆனா, நாந்தான் சரியா இல்ல.. எனக்கு என் அண்ணனோட காதலும் தெரியல, நான் அவன் வாழ்க்கையை பத்தியும் யோசிக்கவே இல்லை… ஏன் நான் இவரையும் யோசிக்கவே இல்லையே… என் மகன் மட்டும் போதும் ன்னு ரொம்ப சுயநலமா இருந்துட்டேன்….” என்றவளுக்கு கண்கள் கலங்கிவிட,

                       இன்பனும், ஜெகனும் எழுந்துவிட்டனர்… “ஹேய் சிபி என்னடா.. நான் சொல்லி இருந்தா தானே உனக்கு தெரியும்… இதுல நீ என்ன தப்பு பண்ண.. நாந்தான் இன்பா கிட்ட கூட சொல்லலையே.. என்னை திட்டு.. ஏண்டா சொல்லல ன்னு சண்டை போடு.. நீ அழாத சிபி…” என்று ஜெகன் கெஞ்சலில் இறங்க, அவனை அத்தனை காதலுடன் பார்த்தாள் மதுவர்ஷினி…

                      சிபியின் மீதான ஜெகனின் பாசத்தை கண்டு ஆரம்பத்தில் லேசான புகைச்சல் இருந்தாலும், இந்த இடைப்பட்ட நாட்களில் இந்த இருவரையும் நினைத்து அவள் அதிசயிக்காத நாளே இல்லை என்று கூறலாம். சிபியின் குணமும் மெல்ல மெல்ல அவளுக்கு பிடிபட்டு பிடித்து போக, கணவனுக்கு ஈடாக சிபியிடம் பாசம் காட்டவே நினைத்தாள் மதுவர்ஷினி…

                     சிபி லேசாக கண்ணை கசக்கிகொண்டே இருக்க, ஜெகன் பாவமாக அவள் முகத்தை பார்த்து  அமர்ந்து இருக்கவும், இன்பன் அவன் முதுகிலேயே ஒன்று போட்டவன், சிபியின் அருகில் அமர்ந்து “ஏண்டா சொல்லல ன்னு அவன்கிட்ட கேட்காம, இப்படிதான் அழுவியா ரசிம்மா…அவன் சட்டையை பிடிச்சு ரெண்டு அடி போட்டிருக்க வேண்டாம் இந்நேரம்…” என்று எடுத்து கொடுக்க

                    “ஏன் என்கிட்டே சொல்லவே இல்ல..” என்று சிறுகுழந்தை போல, அவள் முகத்தை சுருக்கி கொண்டு ஜெகனிடம் கேட்க,

                   “சொல்லக்கூடாது எல்லாம் இல்ல சிபி… எனக்கே ஒரு கிளாரிட்டி இல்லையே.. இவளும் மூணு வருஷமா என்னை தேடி எல்லாம் வரலையே… மறந்துட்டா போல என்று நினைச்சுட்டேன்..” என்று அவன் முடிப்பதற்குள் அவன் தலைமுடியை இருகையாலும் பிடித்து ஆட்டி விட்டிருந்தாள் மது.

               கூடவே “எரும எரும…என் முன்னாடி வரவே வராத ன்னு அப்படி கடத்திட்டு இப்போ என்னையே குறை சொல்றியா..” என்று இன்னமும் அடிக்க

                “ஹேய் வலிக்குது வர்ஷி.. விடுடி..” என்று கத்தினான் ஜெகன்.

                   லிண்டா  லாரன்ஸுடன் ராசியாகி இருக்க, அவர்கள் உள்ளே நுழையும் நேரம் தான் ஜெகனை மொத்திக் கொண்டிருந்தாள் மது. லாரன்ஸுக்கு ஜெகன் அடி வாங்குவது குஷியாக இருக்க, அவன் இனியனை கையில் வைத்துக் கொண்டு சிரிக்க, இனியன் லாரன்சிடம் இருந்து நழுவி இறங்கியவன் தன் சித்தப்பனுக்கு அரணாக சென்று நின்று கொண்டான்.

                    இன்னும் அந்த பிஞ்சு விரல்களை நீட்டி மடக்கி, ஒற்றை விரலால் மதுவை அவன் மிரட்ட, “என் தளபதிடா… இப்போ வாங்கடா..” என்று அவனை கையில் தூக்கி கொண்டே ஜெகன் வாய்ச்சவடால் விட, ஜெகனின் தோளில் ஏறி அமர்ந்து இருந்தவனை, செல்லமாக முறைத்து கொண்டிருந்தாள் மது..

                  “ஹேய் குட்டி.. நீ சித்திகிட்ட வா… அவன்கூட சேராத…” என்று மது அழைக்க, அவன் ஜெகனுடன் சேர்ந்து கொண்டு கைதட்டி சிரிக்கவும் உதட்டை பிதுக்கி அழுவது போல் நின்றுவிட்டாள் மது.

                  “நீ என்ன வேணா செய்..” என்பதுபோல் அந்த குட்டியும் அசராமல் ஜெகனிடமே ஒட்டிக் கொண்டிருக்க, பார்த்தவர்கள் அத்தனை பேரின் முகத்திலும் சிரிப்பு தான்.

                 அன்று மதியம் வரை இவர்களின் அரட்டையிலேயே கழிய, மதிய உணவையும் அங்கேயே முடித்துக் கொண்டு ஜெகனும், மதுவும் கிளம்பிவிட, லாரன்ஸ் லிண்டாவுக்கு சென்னையை சுற்றி காட்டுவதாக கூறி அழைத்து சென்று இருந்தான்.

                 தான் போட்டிருந்த திட்டத்தை அவன் செயல்படுத்திக் கொண்டிருப்பதை ஜெகன் பொறாமையோடு பார்க்க,லாரன்ஸ் வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தான்… இன்பன் இவர்களை சிரிப்போடு பார்த்திருந்துவிட்டு உள்ளே வர, அவனின் சின்ன கண்ணன் கண்ணில் தூக்கம் சொக்க, சோஃபாவில் அமர்ந்திருந்தான்…

                  “இவனை தனியா விட்டுட்டு எங்கே போனா..” என்று அவன் சிபியை தேட, “அவனுக்கு டிரஸ் எடுக்கத்தான் ரூமுக்கு போனா இன்பா.. தூக்கிட்டு போ.. கொஞ்ச நேரம் படுங்க..” என்று அவனையும் அனுப்பிவைத்தார் அபி.

                     சிபி இனியனுக்கான உடைகளுடன் வெளியே வர, இன்பன் கையில் இனியனுடன் உள்ளே நுழைந்து கொண்டிருந்தான். சிபியிடம் மகனை கொடுத்தவன் புன்னகையோடு வந்து கட்டிலில் விட, இனியன் உடையை மற்ற விடாமல் தந்தையை காட்டி அடம் பிடிக்க தொடங்கினான்.

                    சிபி கடுப்பாகி, அவனை இன்பனின் நெஞ்சில் அமர்த்திவிட்டு உடையையும் அவர்களிடம் வீசிவிட்டு நகர, இன்பன் விட்டால்தானே…. அவளின் கையை அழுத்தமாக பற்றி இருந்தவன் அவளை இழுத்து கட்டிலில் அமர்த்தி தன் தலையை அவள் மடியில் வைத்துக் கொள்ள, இனியன் அவன் நெஞ்சில் இருந்து இறங்கியவன் தானும் தந்தையை போலவே தாயின் மடியில் படுத்துக்க கொண்டு சிரிக்கவும், இன்பானுக்கு சிபி சொன்ன வார்த்தைகள் நினைவு வந்தது…

                 சிரிப்புடன் மனைவியை அவன் பார்க்க, அவள் இன்பனை பார்க்கவும் “இவன் என்னடி என்கூடவே போட்டிக்கு வர்றான்…” என்று கவலையாக இன்பன் கேட்டவிதத்தில் சத்தமாக சிரித்துவிட்டாள் சிபி…

                   “உங்க பையன் தானே.. அதான் உங்களை போலவே இருக்கான்…” என்று குறைபட்டு கொண்டவள் முகத்தில் மருந்துக்கும் வருத்தமில்லை… மாறாக காதலும், கனிவும் தான் போட்டி போட்டது விழிகளில்… இன்பனும் அதே காதலோடு அவள் பார்வையை எதிர்கொள்ள, இனியன் பொறுமையில்லாமல் இப்போது தந்தையின் மீது தாவி ஏற, மனைவியை ஒருபுறமும், மகனை ஒருபுறமும் தாங்கி கொண்டு அமர்ந்திருந்தான் பேரின்பன்…

                   அவனின் நினைவுகளை சில காலம் எடுத்துக் கொண்டிருந்தாலும், நிகழ்வுகளை நீரோடை போல அழகாகவே அமைத்து கொடுத்து விட்டிருந்தார் கடவுள்… பெயரை போலவே பேரின்பத்துடன் அவன் மையலாக சிரித்துக் கொண்டே இருக்க, அவன் மீசையை லேசாக இழுத்தாள் மனைவி..

                   அவன் என்ன என்பது போல் பார்க்கவும், அவன் நெஞ்சில் உறங்கிவிட்ட மகனை அவள் காண்பிக்க, அவனை தலையணைக்கு மாற்றியவன் அடுத்து மனைவியை நெருங்கி இருந்தான். சிபி தன் கைகளால் அவன் கழுத்துக்கு மாலை சூட, மாலையிட்டவளை மயக்க தொடங்கி இருந்தான் அவன்… அவனின் உறைந்த நினைவுகள் உயிர்ப்புடன் சிலிர்த்து எழுந்தது அங்கே….

Advertisement