Advertisement

                “நான் எங்கே போனேன்… வர்றதுக்கு.. நம்ம ஹோட்டல்ல தான் இருந்தேன்…” எனவும்

             “ஆஆ..” என்று வாயில் கையை வைத்துக் கொண்டாள் மனைவி… “சரியான வில்லன் தெரியுமா நீங்க…” என்று அவள் முறைக்க

               “பின்ன… மூணு வருஷத்துக்கு சேர்த்து அவரை கொஞ்சமாவது கதற விட வேண்டாம்… உன்னை எதிர்பார்த்திருக்கவே மாட்டார்..”

                “எதுக்கு இதெல்லாம்.. ஏற்கனவே நொந்து போய் தான் இருக்காரு.. சும்மா வீம்புக்கு பேசிட்டு இருந்தாலும், மொத்தமா நொடிஞ்சு போய்ட்டாரு… உங்க அத்தை அவரோட இல்லாததே பெரிய அடிதான் அவருக்கு.. நாமளும் ஏன் சீண்டிட்டே இருக்கனும்…

                 “அதோட.. இந்த மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் பதில் கொடுத்துட்டே இருந்தா நம்ம இயல்பு மாறி போய்டும்… இதோட அவர் விஷயத்தை விட்டுடனும் நீங்க.. நமக்கு இந்த பழிவாங்குற எண்ணமெல்லாம் வேண்டாம்…”

             ” என் புருஷன் பிள்ளையோட நான் நிம்மதியா வாழ்ந்தா போதும் எனக்கு.. முடிஞ்சதை முடிஞ்சதாவே விட்டுடுங்க… என் மகன் உங்களை போலவே உங்களை பார்த்தே வளரனும் இனி.. அவனுக்கு இதெல்லாம் வேண்டாம்… என் இனியனோட அத்தனை குணங்களும் அப்படியே அவன்கிட்ட இருக்கு…

                 “அப்படியே உங்களோட நகல் தான் உங்க பிள்ளை… அவனை நல்லபடியா வளர்க்கணும்…” என்று கண்களில் கனவுடன் அவள் பட்டியல் போட, “அவ்ளோதானா… உன் லிஸ்ட்ல புருஷன் எல்லாம் இல்லையா… என்னையெல்லாம் சேர்த்துக்கவே மாட்டியா ரசிம்மா..” என்று அவன் ஊடல் குரலில் கேட்க

                 “உங்களை என்ன சேர்த்துக்கணும்.. நான் என்று சொல்லிட்டாலே அதுல நீங்க வந்துடுவீங்க… இதுல தனியா வேற சொல்லனுமா…” என்றாள் காதலாக..

                  அவளின் பதிலில் மயங்கினாலும், “அதெல்லாம் செல்லாது.. எனக்கு ஒரு பொண்ணை பெத்து கொடு… அதுவும் என் ரசிகா குட்டி மாதிரியே…. நான் அவளை வளர்த்துக்கறேன்…” என்றான் வீம்புக்காக…

                  “நான் மாட்டேன்னு எப்போ சொன்னேன்.. “என்று அவளை திகைக்க வைத்தாள் சிபி.

                   “ஹேய் செல்லமா என்னடா.. வெட்கப்படுவ.. சிணுங்குவ ன்னு நினைச்சா, இப்படி தாக்குறியே…” என்று இன்பன் சத்தமாக சிரிக்க, நிஜமாகவே அப்போதுதான் வெட்கமாக போனது சிபிக்கு. இவன் ஒரு கையால் முகத்தை மறைத்துக் கொண்டு வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள் அவள்.

                   இன்பன் குனிந்து அவள் முகம் பார்க்க முயற்சிக்க, “சும்மா இருங்க இனி.. கோவில்ல இருக்கோம்..” என்று அவள் நினைவுபடுத்த

                   “அப்போ வீட்டுக்கு போவோமா குட்டிமா…” என்று அவன் கேட்டு வைத்ததில், அவனை முறைக்க முயற்சித்து அது முடியாமல் போகவும் அவன் கையை கிள்ளி வைத்தாள் அவள்.

                   அந்த நேரம் இதுபோலவே பேச்சும் சிரிப்புமாக இன்னும் சில நிமிடங்கள் தொடர, மீண்டும் ஒருமுறை  அம்மனை தரிசித்துவிட்டு அங்கிருந்து கிளம்பி இருந்தனர் இருவரும்…

                    இனியன் அவன் பாட்டி வீட்டில் இருக்க, நேராக இன்பனின் பெற்றோர் வீட்டிற்கு தான் சென்றனர் இருவரும். இதுவரை சிபியை அங்கே அழைத்து வந்ததில்லை இன்பன். இன்றும் ஒரு சோதனை முயற்சிதான்.. அவள் வாசலோடு நின்றுவிட்டாலும், திரும்பி அழைத்து வந்துவிட தயாராகத்தான் அழைத்து சென்றான்.

                   ஆனால், அவன் எதிர்பார்த்தது போல் இல்லாமல், காரின் சத்தம் கேட்ட நிமிடம் அபிராமி வெளியே எட்டி பார்க்க, அவரின் பின்னே கையில் குழந்தையுடன் மதுசூதனன்.. மகனை மட்டுமே எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு மருமகளின் இந்த வருகை எதிர்பாராத ஆனந்தம் தான்.

                அபிராமி திகைத்து நின்றதெல்லாம் ஒரு நொடிக்கும் குறைவான நேரம்தான். வேகமாக மருமகளிடம் வந்தவர் “வாம்மா.. உள்ளே வா…” என்று கைபிடித்து அவளை கிட்டத்தட்ட இழுத்து சென்றுவிட்டார்.. பின்னே மகனும், மருமகளும் வரவே மாட்டார்களோ என்று பயந்து போயிருந்தவர் அல்லவா… கிடைத்த வாய்ப்பை உபயோகித்துக் கொண்டார்…

                  சிபி கணவனை திரும்பி பார்த்துவிட்டு அவருடன் நடந்தாலும், வீட்டின் நிலைவாசலில் லேசாக தயங்க, “வாம்மா…” என்று மதுசூதனனும் அழைத்து விட்டார்.

                    அதற்குமேல் எங்கே தயங்கி நிற்க.. அமைதியாக எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மாமியார் வீடு சென்றாள் சிற்பிகா… மதுவுக்கும், அபிக்கும் எத்தனை மகிழ்ச்சி என்பது அவர்களின் முகத்திலேயே தெரிய, அபிராமி ஒரு குட்டி விருந்துக்கே ஏற்பாடு செய்து விட்டார்.

                    இனியன் காலையில் இருந்து தாயை காணாமல் தேடி இருந்தவன் அவளோடு ஒட்டி கொள்ள, மதுசூதனன் கூட கிட்டத்தட்ட தன் மகனுடன் ஒண்டிக் கொண்டு தான் இருந்தார். பின்னே.. வாராது வந்த மாமணியாய் ஒற்றை பிள்ளையை பெற்றெடுத்து அவனை அருமை பெருமையாய் வளர்த்து பாதியில் தொலைக்க இருந்தாரே….

                   இருவரின் ஒட்டுதல் எப்போதும் உள்ளது தான் என்றாலும், இந்த மூன்றுமாத பிரிவு முன்பைவிட கடினமாக தாக்கி இருந்தது மதுசூதனனை. அதுவும் மகன் மருமகள், பேரனுடன் தனிவீட்டிற்கு சென்று விடுவான் என்றெல்லாம் யோசித்ததே இல்லை அவர்.

                 அப்படிப்பட்ட மகன் இன்று அருகில் இருக்க, சற்றே நெகிழ்ந்த நிலை மதுசூதனனுடையது. அபிராமியும் அதே நிலையில் இருந்தாலும் அவர் சமையலறையில் தன்னை ஒளித்துக் கொண்டுவிட, இங்கே மது தடுமாறி நின்றிருந்தார்.

                  “அப்பா.. என்னப்பா… எங்கே இருந்தாலும் உங்க இன்பா தான்.. உங்களுக்கு தெரியாதா.. ஏன் இவ்ளோ ரியாக்ட் பண்றிங்க… பழசை எல்லாம் விட்டுடுங்க..” என்று இன்பன் அவரை கட்டிக் கொள்ள, மகனை ஆரத்தழுவி கொண்டவர் “மறந்துடறேன்ப்ப்பா… மனசு நிம்மதியா இருக்கு.. இனி பிசினஸ் எல்லாம் நீயும், மருமகளும் பார்த்துக்கோங்க…”

                    “நான் என் பேரனோட நிம்மதியா, சந்தோஷமா சுத்தி வரப்போறேன்..” என்று விட்டார் மதுசூதனன்.

                  “ரிட்டயர்டுமென்ட் கேட்கறீங்களா ப்பா…” என்று இன்பன் சிரிக்க

                   “நீ என்னடா கொடுக்க, நான் இனி கம்பெனிக்கு வர்றதா இல்ல..” என்றார் ஒரே முடிவாக

                  அவர் முடிவாகத்தான் சொல்கிறார் என்று உணர்ந்த இன்பன் “ப்பா.. என்னப்பா.. என்ன வயசாகிடுச்சு உங்களுக்கு… ஏன் இப்போ ரெஸ்ட்..” என்று கிண்டலாக கேட்க

                 “இல்ல இன்பா… பணம், பிசினஸ், பேர், அந்தஸ்து இதுக்காகவே உழைச்சு உழைச்சு மனுஷனா இருக்க மறந்துட்டேன்… இதெல்லாம் எனக்கு ஒரு போதையாவே மாறிடுச்சு இன்பா.. நான் கொஞ்சநாள் நிச்சயமா ஓய்வாதான் இருக்க போறேன்..” என்று முடிக்கும் நேரம்,

                  “உங்கப்பாவா இப்போதான் ஒரு நல்ல வார்த்தை சொல்லி இருக்காரு.. அவரை அப்படியே விடு… வீட்ல இருக்கட்டும்… “என்ற அபிராமி

                    “சாப்பிட வாங்க..” என்று அவர்களை அழைத்து செல்ல, அவர்களாகவே பரிமாறிக் கொள்ள, அபிராமி தன் பேரனுக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தார். உணவு நேரம் அமைதியான பேச்சு வார்த்தைகளுடன் கழிய, வெகு நாட்களுக்கு பிறகு மதுவுக்கும், அபிக்கும் நிம்மதியாக உணவு தொண்டையில் இறங்கியது அங்கே…

                      மகனும், மருமகளும் உண்டு முடிக்கவும் “கிளம்பிவிடுவார்களே..” என்று அபிராமி பேரனை கையில் வைத்துக் கொண்டே அமர்ந்து விட, இன்பன் உண்டு முடித்து அன்னையுடன் சோஃபாவில் வந்து அமர்ந்து கொண்டான்.

                   அபிராமியின் கைகள் பேரனை தடவி கொடுத்துக் கொண்டே இருக்க, சிபி அப்போதுதான் அந்த இடத்திற்கு வந்தாள். அபிராமியின் ஏக்கமான முகம் நிலைமையை உணர்த்த, உடனே கணவனிடம் தான் சென்றது சிபியின் பார்வை.

                   இன்பனும் அவளை பார்த்து வைக்க, அபிராமியை அவள் கண்ணால் சுட்டி காட்டவும், அபிராமி பேரனை மருமகள் கையில் கொடுக்கவும் சரியாக இருந்தது. இன்பன் “நீதான் பேசணும்.. பேசு..” என்பது போல் அமர்ந்து இருக்க, சிபி மகனை கையில் வாங்காமல் “நீங்களே வச்சுக்கோங்க அத்தை.. உங்களோடவே தூங்கட்டும்..” என்றுவிட்டாள்.

                   அபிராமி அதிர்ச்சியுடன் “சிபி.. பிள்ளை ராத்திரில உன்னை தேடுவான்மா…அதெப்படி தனியா இருப்பான்… நீ.. நீயே வச்சுக்கோ..நீ தூக்கிட்டு போ..” என்றுவிட,

                    “கண்டிப்பா போகணுமா… தூக்கிட்டு போய்டவா..” என்று தலையை சரித்து சின்னதாக ஒரு சிரிப்புடன் அவள் கேட்டு நிற்க, அந்த அவளின் சிரிப்பில் இன்பன்  தொலைந்து போனான் என்றால் அபிராமி அழுதே விட்டார்.

                 “சிபி… ” என்று அவர் அவள் கைகளை பிடித்துக் கொள்ள, இன்பன் தெளிந்தவனாக எழுந்து அன்னையை அணைத்து கொண்டான். ‘ம்மா.. என் பிள்ளையை பார்த்துக்க சொன்னதுக்காகவா இப்படி அழறீங்க.. நாங்க போறோம் போங்க…” என்று அவன் முறுக்கி கொள்ள

                  “டேய் கண்ணா…” என்று அவனை பிடித்துக் கொண்டவர் பேரனை தன்னோடு அணைத்து கொள்ள, அவரை சோஃபாவில் அமர்த்தி அருகில் அமர்ந்து கொண்டான் இன்பன். அவர்களை தனித்து விட்டு சிபி அமைதியாக வந்து வாசலில் இருந்த போர்டிகோவில் அமர்ந்து கொண்டாள்.

                 மனதில் ஏதோ ஒரு நிறைவு… அனைத்தும் அதனதன் இடத்தில் பொருந்திக் கொண்டது போல ஒரு திருப்தி. எப்போதுமே சுலபமாக தன்னிறைவு கொள்ளும் அவளின் மனம் அன்றும் அப்படியே உள்ளதை உள்ளபடியே ஏற்றுக் கொள்ள, சற்று நேரத்திற்கெல்லாம் அவளை தேடி வந்துவிட்டான் கணவன்.

                 சட்டென அவளின் தோள்களில் கையை போட்டுக் கொண்டு அவன் அருகில் அமர்ந்துவிட, சிபி திரும்பி பார்க்கவும், அவளின் இதழ்களை தீண்டி விடுவித்தவன் “சந்தோஷமா இருக்கேன் செல்லம்மா.. என் ரசிகா பெண்ணால தான்… எப்பவும் போலவே ரொம்ப அழகா தெரியுறடா நீ..” என்றவன் இன்னும் என்னென்னவோ காதல் போதையில் உளறி வைக்க

                  அவனும் தாய் தந்தையருக்காக ஏங்கி இருப்பது புரிந்தது சிபிக்கு… இருந்தும் தனக்காக அவர்களை ஒதுக்கி வைத்து, வார்த்தையில் மட்டும் இல்லாமல் முகத்தில் கூட அதை காட்டாமல் வலம் வந்தானே.. இவனை விட வேறென்ன வேண்டும்…இவனுக்கு காதலை தவிர வேறு என்ன தர முடியும் என்று தான் தோன்றியது சிபிக்கு.

                  இன்பன் ஒற்றை புருவம் உயர்த்தி “என்ன..” என்று கேட்க, தலையை இடவலமாக அசைத்தவள் சுற்றி ஒருமுறை பார்வையை சுழலவிட, தங்களை சுற்றி யாருமில்லாமல் போகவும், அழுத்தமாக அவன் இதழ்களை தனக்குள் எடுத்துக் கொண்டாள்.

                அவள் முத்தத்தின் சுவையில் முதல் சில நிமிடங்கள் ஆழ்ந்து போனவன், அவன் மூச்சுக்காற்றுக்காக விலகும் நேரம், வேலையை தான் கையிலெடுத்து கொண்டிருந்தான். நீண்ட அந்த முத்தத்திற்கு பின், இன்பன் சிபியை கையில் ஏந்திக் கொண்டு வீட்டிற்குள் நடக்க, “ஐயோ இறக்கி விடுங்க..” என்று அவள் பதறவும்

                 “எல்லாரும் தூங்க போயாச்சு கண்ணம்மா..” என்று இன்னும் அவளை தன்னோடு இறுக்கி கொண்டவன் அவளை தன்னறைக்கு தூக்கி சென்றுவிட்டான். அதன் பின்னான அந்த இரவு முழுவதுமே அவளை ஒரு நொடி கூட நீங்கவே இல்லை அவன்.

                  அவர்களின் இத்தனை ஆண்டு தவத்திற்கு வரம் போல் அவர்களின் வாழ்வு மலர்ந்து இருக்க, தன் கண்ணம்மாவை முழுக்க முழுக்க காதலால் மட்டுமே நிறைத்துக் கொண்டிருந்தான் காதலன்… அவளின் தயக்கங்கள் எல்லாம் அவனின் கண்ணம்மாவிலும், செல்லமாவிலும் கரைந்து கொண்டிருக்க, அவனின் பித்தம்  தெளியவே இல்லை….

                    அடுத்தநாள் காலை இன்பனுக்கும், சிபிக்கும் சற்று தாமதமாகவே விடிய, இனியன் சமத்து குட்டியாக தன் தாத்தாவுடன் சுற்றி கொண்டிருந்தான்… அபிராமி சமையல் அறையில் இருக்க, சிபி வேகமாகவே குளித்து கீழே இறங்கி இருந்தாள்..

                மருமகளின் முகம் அபிராமிக்கும் நிறைவாக இருக்க, “விளக்கேத்திட்டு வாடா..” என்று அவளை பூஜையறைக்கு அவர் அனுப்பிவைக்க, இன்பனும் குளித்து வந்தவன் மனைவியுடன் கடவுளை வணங்கி ஹாலில் வந்து அமர, இருவருக்கும் கையில் காஃபியை கொடுத்தார் அபிராமி.

Advertisement