Advertisement

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 30

                             முழுவதும் தீக்கிரையாகி இருந்த தன் ஸ்பின்னிங் மில்லின் அலுவல அறையில் இருந்தார் கலையரசன். அவர் முற்று முதலாக நம்பி இருந்த அவரது மனைவி அவரை கைவிட்டு இருக்க, அப்போதுகூட பெரிதாக கலங்கவே இல்லை அவர். தன் நிறுவனத்திற்கான காப்பீடு தொகை கைக்கு வரட்டும்.. அதன் பின் இவளை பார்த்து கொள்கிறேன் என்று வன்மமாக தான் எண்ணமிட்டு இருந்தார்.

                      ஆனால், அவரின் ஆணவத்திற்கும், சுயநலத்திற்கும் மிகப்பெரிய தண்டனை என்றுதான் சொல்ல வேண்டும். இதுவரை தான் செய்த குற்றங்களுக்காக கடுகளவு கூட மனம் வருந்தாதவர் இன்று செய்யாத ஒரு குற்றத்திற்காக இரண்டு நாட்கள் காவல் நிலையத்தில் கழித்து விட்டு வந்திருந்தார். அதுவும் அவரின் மில்லை அவரே திட்டம் போட்டு எரித்ததாக வழக்கு. சாட்சி சொன்னது அவரின் ஆஸ்தான அடியாள் ஒருவன்.

                      வழக்கு அதனைக்கொண்டே சூடு பிடித்திருக்க, அவரின் நண்பர் ஒருவரின் துணையால் இன்று காலையில் தான் வெளியே வந்திருந்தார் கலையரசன். அதுவும் வெறும் பிணையில் மட்டுமே.. காப்பீட்டு பணம் வராது என்று அந்த காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் தெளிவாக விளக்கி விட்டிருக்க, அவர் மீது நிலுவையில் இருக்கும் வழக்கில் ஒன்று கூடி போனது தான் மிச்சம்.

                       வெகுநேரம் தன்னை குறித்த சுய ஆலோசனையில் இருந்தவர் பின்மதிய நேரத்தில் ஒருவாறாக தெளிந்து எழ, இன்பனை சந்தித்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் வலுப்பட்டு இருந்தது. இன்றைய நிலையில் தன்னால் அவனை எதிர்க்கவே முடியாது என்று தெரிந்தாலும், வார்த்தைகள் கொண்டேனும் அவனை வதைத்து விட முடிவு செய்தவர் தனது காரை எடுத்துக் கொண்டு கிளம்பி இருந்தார்.

                       சென்னையின் முக்கியமான ஐந்து நட்சத்திர விடுதிகளில் ஒன்றான அந்த உயரமான கட்டிடத்தை காணவும், தன் இழப்பின் அளவு பெரியதாக தெரிந்தது அவருக்கு. அதுவும் ஏதோ அவரின் பரம்பரை சொத்து கையை விட்டு போனது போல், இது தனக்கானது என்றும், இன்பன் தன்னை ஏய்த்து தன்னிடம் இருந்து பிடுங்கி கொண்டதாகவும் தான் புத்தி அலைந்து கொண்டிருந்தது.

                       தன்னை சமன்படுத்திக் கொண்டு அவர் உள்ளே நுழைய, அங்கிருந்த ஊழியர்களிடம் வழக்கமான பரபரப்போ, கலையரசனை  கண்டதும் அவர்கள் பார்வையில் ஏற்படும் மரியாதையோ எதுவுமே தென்படவில்லை.  மாறாக, யாருமே அவரை கண்டுகொள்ளாமல் அவரவர் வேலையை பார்க்க, கொதித்துக் கொண்டே தான் இன்பனின் அறைக்குள் நுழைய போனார் அவர்.

                     எங்கிருந்தோ வந்த ஒரு பணியாள் அவரை தடுக்க, அவனை சட்டையை பிடித்து, மூர்க்கத்துடன் தள்ளி விட்டவர் அந்த அறைக்குள் நுழைய, அங்கே இன்பனுக்கு பதிலாக அவனது இருக்கையில் அமர்ந்திருந்தது சிபி.

                      அறை வாசலில் நின்றவரை கவனித்தே இருக்கவில்லை அவள். அவள் இடத்தில் இருந்து வேலை பார்த்து கொண்டிருந்தவளிடம் இன்பன் சில தகவல்களை கேட்டு இருந்தான். அந்த விவரங்கள் அவனின் கணினியில் இருக்கவும் அவன் இடத்தில் அமர்ந்து அதை பார்வையிட்டுக் கொண்டிருந்தாள் சிபி. அந்த நேரம் தான் கலையரசனும் உள்ளே வந்திருக்க, அவருக்கு தானாகவே அன்று அந்த இருக்கையில் அமர்ந்ததற்காக இன்பன் தன்னிடம் நடந்து கொண்ட விதம் நினைவில் ஆடியது.

                      அவரின் முகம் கறுத்து போக, அவரின் பின்னால் உள்ளே நுழைந்திருந்த ஹோட்டல் ஊழியர் “நான் சொன்னதை கேட்காம உள்ள வந்துட்டார் மேடம்..” எனவும், அவரின் குரலில் தான் கவனம் கலைந்தாள் சிபி. கலையரசனை பார்த்தவள் எழுந்து நிற்க, அதிகாரமாக அவளின் முன்னால் வந்து அமர்ந்தார் கலையரசன்.

                          “என்னம்மா பழசெல்லாம் சீக்கிரமே மறந்துட்ட போல….நானும், என் அத்தையும் அவ்ளோ எடுத்து சொல்லியும் நீ திரும்ப இங்கே வந்து தப்பு பண்ணி இருக்க சிற்பிகா…. என்ன இன்பன் கூட இருக்க தைரியமா?? நான் நினைச்சா இந்த நிமிஷமே உங்க ரெண்டு பேரையும்…” என்று நிறுத்தியவர் “யாதவ் கூட இப்போ வெளியே தான் இருக்கான் தெரியுமா.. அவனை ஜாமீன்ல எடுத்ததே நாந்தான்…எனக்காக என்ன வேணாலும் செய்வான் அவனும்…

                        “ஏற்கனவே உன் அம்மாவை கொன்னுட்டு உள்ளே போயிட்டு வந்தவன்தான்… இன்னொருகொலை  பெரிய விஷயமே இல்ல… அதுவும் உன்னை மாதிரி ஒருத்திக்காக பத்து கொலை செஞ்சாலும் கூட…” என்றவர் தன் வயதையும் மீறி தன் தரத்தை தானாகவே இறக்கி கொள்ள,

                                             சிபி அவரின் வார்த்தைகளில் இறுகிப் போனவளாக அழுத்தமாக இன்பனின் இருக்கையில் அமர்ந்து கொண்டாள். இது இன்பனின் இடம் என்ற திடம் தானாகவே வந்து ஒட்டி கொள்ள, இந்த முறை எதிரில் இருப்பவரை பார்த்து அச்சப்படவே இல்லை அவள்.

             மாறாக, என்றோ ஒருநாள் அவரிடம் வாங்கி கொண்டதை இன்று வகையாக திருப்பி கொடுத்துவிடும் வேகம் தான் இருந்தது அவளிடம். அதுவும் அவர் யாதவனை பற்றி பேசவும் இன்னுமின்னும் அவளின் ஆத்திரம் எல்லை கடந்தது.தன் அன்னையை கொன்றவனை இவர் வெளியில் எடுப்பாரா?? என்று நெஞ்சம் கொதிக்க

               “என்ன மிரட்டி பார்க்கிறீர்களா… என்ன சொன்னிங்க… பத்து கொலையா …. அதுக்கு அவன் வெளியே இருக்கணும் இல்லையா…” என்று ஒரு இடைவெளி விட்டவள்

                 “ஓஹ்.. நீங்க ரெண்டு நாள் உள்ளே இருந்துட்டு வந்து இருக்கீங்களே… அதான் தெரியல போல…நீங்க உள்ளே போறதுக்கு ரெண்டு நாள் முன்னாடியே அவன் திரும்பவும் உள்ளே போய்ட்டான்… எந்த சாட்சியும் இல்லாம நீங்க முடிச்சு வச்ச என் அம்மாவோட கேஸ் இல்ல.. கஞ்சா வித்ததுக்கும், செயின் பறிச்சதுக்கும் தூக்கி உள்ளே வச்சிருக்காங்க…”

                  “ஆனா, இந்த நிமிஷம் அவனால உங்களுக்கு எந்த பிரயோஜனமும் இருக்காது. ஜெயில்ல தற்கொலைக்கு முயற்சி பண்ணதுல, அரைகுறை உயிரோட கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்காங்க போல.. என் புருஷன் சொன்னாரு….” என்று முடித்தவளின் முகம் தீக்கு நிகராக ஜொலித்தது அந்த நிமிடம்.

                யாதவின் நிலை புரிந்துவிட, கலையரசன் முற்றிலுமாக ஓய்ந்து போகும் நிலையில் தான் இருந்தார். ஆனால் இவளை இப்படியே விட்டு செல்வதா… என்று ஆத்திரம் மிக, வார்த்தைகளில் அவரின் கவனம் குறைந்து போயிருந்தது…

                   “என்ன.. உன் புருஷன் கூட இருக்க தைரியமா?? மூணு வருஷத்துக்கு முன்ன, உன் புருஷனை ஒண்ணுமே இல்லாம ஜடமா முடக்கி வச்சது நான்.. மறந்து போச்சா… இல்ல அனாதையா ஊரைவிட்டே ஓடி போனத மறந்துட்டியா…” என்று எகத்தாளத்துடன் அவர் கேட்க

                    “நிச்சயமா என் புருஷன் என்னோட இருக்க தைரியம் தான்… மாதவிம்மா முகத்துக்காக உங்களை உயிரோட விட்டு வச்சிருக்கார்… நீங்க இங்கே வந்து இப்படி எல்லாம் பேசுனது தெரிஞ்சதோ…. உங்களை கடவுளால் கூட காப்பாத்த முடியாது… ஓடி போய்டுங்க.. இனி அவர் கண்ணுல பட்டுடாதீங்க..” என்று பாவம் போல் கூறினாள் சிபி.

                   அவர் ஆத்திரமாக எதையோ பேச வாயை திறக்கும் வேளையில், இன்பன் அதிகாரமாக அந்த அறைக்குள் நுழைந்து கொண்டிருந்தான்.. நிதானமாக அவன் உள்ளே வர, சிபி “என்ன செய்ய போகிறானோ..” என்று கலக்கத்துடன் தான் பார்த்திருந்தாள் அவனை.

                ஆனால், இன்பன் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் டேபிளில் சாய்ந்து நின்று கொண்டவன் “என்ன மாமா… இந்தப்பக்கம்??” என்று கேள்வியாக இழுக்க

                 “வேண்டாம் இன்பா.. நீ ஏற்கனவே நிறைய விளையாடிட்ட..” என்று எச்சரித்தார் கலை.

                 “நீங்க என் வாழ்க்கையில விளையாடினதை விடவா.. என் பொண்டாட்டி, பிள்ளையை அனாதையா எங்கேயோ ஒரு மூலையில கண் காணாம வாழற நிலைக்கு தள்ளி இருக்கீங்களே… அதுக்கு பதில் சொல்லாம போனா, நான் என்ன புருஷன்??? நான் என்ன அப்பன்..???….

                  “என் மொத்த சொத்துக்கும் ஒரே வாரிசு அவன்.. அவனை வயித்துல சுமந்துட்டு சமையல் வேலை பார்த்திருக்கா என் பொண்டாட்டி.. நான் இவங்க ஞாபகமே இல்லாம இருந்து இருக்கேன்… ஆனா, அத்தனையும் செஞ்சிட்டு நீங்க சொகுசா இருப்பிங்களா… “

                 “நீ இதையெல்லாம் அனுபவிக்க வேண்டாம்… ஏற்கனவே பொண்டாட்டி பிள்ளைங்க மதிக்கவே மாட்டாங்க… இப்போ மொத்தமா என் அத்தை துரத்தி விட்டுட்டாங்க… உன் கம்பெனியும் தேறாது இனி… கடன் கொடுத்தவன் எல்லாம் உன் கம்பெனி வாசல்ல வந்து நிற்க போறாங்க.. போ… போய் அதுக்கு என்ன வழி பாரு.. கிளம்புய்யா இங்கே இருந்து…” என்று அலட்சியமாக துரத்தி விட்டவனை ஒரு கையாலாகாத தனத்துடன் முறைத்து விட்டு கிளம்பி இருந்தார் கலையரசன்.

                    இன்பன் அவர் சென்றதும் சிபியிடம் திரும்ப, அந்த நொடிக்காக காத்திருந்தவளும் அட்டையாக அவனை ஒட்டிக் கொண்டாள். அவன் நெஞ்சில் முகத்தை அழுத்தமாக புதைத்தவள் அதைவிட அழுத்தமாக அவன் இதயப்பகுதியில் முத்தமிட, “பார்த்துடி என் ரசிக்கு வலிக்க போகுது..” என்றான் சிரிப்புடன்.

                அவனின் அந்த வார்த்தைகளின் அர்த்தம் உணர்ந்தவள் இதழ்கள் லேசாக விரிய, அவன் கைகளின் இறுக்கம் இன்னும் கூடிப்போனது.

                                 எப்போதும் அலுவலகத்தில் இருக்கும் நேரங்களில் அவன் லேசாக நெருங்கினால் கூட, சட்டென பதட்டத்தோடு விலகி கொள்பவள் இன்று அவளாகவே அணைத்து நிற்க, அவளின் உணர்வுகள் புரிந்தது இன்பனுக்கு.

                அவர்களின் அந்த தனிமை மேலும் சில நிமிடங்கள் நீடிக்க, மௌனமே ஆட்சி செய்தது இருவரையும். ஒருவரின் கையில் மற்றவர் இருந்த அந்த நிலை இந்த ஜென்மத்திற்கும் போதும் என்றே தோன்றியது இருவருக்கும்.

              கிட்டத்தட்ட பத்து நிமிடத்திற்கு பின், இன்பன் “எங்கேயாவது வெளியே போவோமா ரசி…” என்று கேட்க, ஆர்வமாக தலையசைத்தாள் சிபி.

               “எங்கே போகலாம்…” என்றவன் அவள் முகம் பார்க்க, “நீங்களே கூட்டிட்டு போங்க..”என்று அவன் முகம் பார்த்து சிரித்தாள் மனைவி.

                “வா..” என்று முன்னே நடந்தவன் அவளை அழைத்து சென்ற இடம் சிபியை அவன் முதன்முதலில் பார்த்த கோவில். சிபி அதிசயமாக அவனை பார்க்க “இப்படி பார்க்காத செல்லம்மா… காரை திருப்பி வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட போறேன்…” என்று கொஞ்சினான் இன்பன். அவன் கொஞ்சலில் சிபியின் முகம் லேசாக சிவந்து போக,

          மலர்ந்த முகத்துடனே இருவரும் கோவிலுக்குள் சென்றனர். சிபிக்கு அலையலையாக தன் அன்னையின் நினைவுகள் மேல் எழ, அந்த கோவிலின் ஒவ்வொரு இடத்தையும்,ஆழ்ந்து பார்த்துக் கொண்டே வந்தவள் உடன் வந்த இன்பனை கூட பெரிதாக கவனிக்கவே இல்லை…

                ஜெயந்தியின் நினைவுகள் அவளை அலைக்கழிக்க, இறுதியாக தாயுடன் அந்த கோவிலுக்கு வந்த தினம் தான் கண்ணில் தெரிந்தது. ஜெயந்தியின்  முகம் நினைவிலாடவும், கண்களில் கண்ணீர் நிறைந்து விட்டது சிபிக்கு.

                  இன்பன் அவளின் அத்தனை உணர்வுகளையும் அமைதியாக அனுமதித்துக் கொண்டே வந்தவன் அவளின் இந்த கண்ணீரை மட்டும் அனுமதிக்க முடியாது என்பது போல், அவள் வலது கையை அழுத்தமாக பற்ற, தன் இரண்டு கைகளாலும் அவனின் முழங்கையை பிடித்துக் கொண்டவள் தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள்.

                அந்த கோவிலின் மண்டபத்தில் அவளை அமர்த்தியவன் தானும் அருகில் அமர்ந்து, “என்னடா கண்ணம்மா.. நீ ரொம்ப லோவா இருக்க என்றுதான் இங்கே கூட்டிட்டு வந்தேன்… இங்கேயும் வந்து அழுதா எப்படி… ஆனானப்பட்ட கலையரசனையே மிரட்டிட்டு வந்திருக்க… இப்படி அழலாமா…” என்றவன் அவள் முகம் பார்க்க

                சந்தேகமான பார்வையுடன் “நீங்க எப்படி சரியான நேரத்துக்கு அங்கே வந்திங்க..” என்றாள் சிபி..

Advertisement