Advertisement

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 29

                         இன்பன் தனது நட்சத்திர விடுதியின் அலுவலக அறையில் அமர்ந்திருக்க, அந்த அறையின் ஒரு பகுதியில் சிபிக்கும்  இடம் ஓதுக்கப்பட்டு இருந்தது. ஒரு டேபிளும், சேரும் போடப்பட்டு, புதிதாக ஒரு கணினியும் அங்கே இடம்பெற்று இருக்க, தனக்கு முன்னால் இருந்த கணினியில் கவனமாக இருந்தாள் சிபி.

                       இன்பன் அவளிடம் சில வேலைகளை ஒப்படைத்து இருக்க, அதை முடித்துவிடும் தீவிரம் மட்டுமே அவளிடம். இன்பனுக்கும் அன்று மாலை ஒரு மீட்டிங் இருந்ததால், அவனும் வெகு கவனமாகவே வேளையில் மூழ்கி இருந்த சமயம் அது. அந்த நேரத்தில் தான் லாரன்ஸ் அந்த அறைக்குள் நுழைந்தது.

                        சிபி அவனை கவனிக்காமல் தன் பாட்டிற்கு வேலையை பார்க்க, இன்பன் நிமிர்ந்து பார்த்தவன் “ஹே லா கம்.. ஜெகா எங்கே..” என்று சிரித்த முகமாக கேட்க

                         “அவனை பத்தி பேசாத இன்பா..” என்று கண்களில் சிவப்புடன் வெடித்தான் அவன்.

                      அவனின் வெள்ளை நிறத்திற்கு அவன் முகமே கோபத்தில் சிவந்து விட்டிருக்க, தக்காளி பழம் போலத்தான் இருந்தான். இன்பனுக்கு அப்போதும் அவனைக்கண்டு சிரிப்புதான் வந்தது.

                       அவன் முகத்தில் இருந்த கோபத்தின் தீவிரம் புரிந்தாலும், வழக்கம் போல் ஜெகன் ஏதாவது வம்புக்கு இழுத்திருப்பான்  என்றே நினைத்தான். அதனைக் கொண்டே “வாட் ஹாப்பேன் லா.. ஜெகா எங்கே.. நீ சென்னை வர்றத பத்தி என்கிட்டே சொல்லவே இல்லையே..” என்று பொறுமையுடன் வினவ

                       “இன்பா.. ஜெகனை நம்பாத… ஹி ஈஸ் எ லையர்..” என்று சற்றே சத்தமாக கத்தினான் லா.

                      இன்பன் நிதானமாகவே “லா.. என்ன நடந்துச்சு.. என்ன சண்டை உங்களுக்குள்ள..” என்று அவனை பார்க்க

                      “இத்தனை நாள் நம்மை ஏமாத்தி இருக்கான் இன்பா… அவனுக்கு கலையோட க்ளோஸ் ரிலேஷன்ஷிப்  இருக்கு..” என்று உறுதியுடன் லா பேச, அவன் கண்களை வைத்தே அவன் பொய் சொல்லவோ, விளையாடவோ இல்லை என்பதை கண்டுகொண்டான் இன்பன்.

                    சிபி ஏற்கனவே இவர்களை கவனிக்க தொடங்கி இருக்க, லா பேசியதில் கோபம்தான் அவளுக்கு. தன் இருக்கையில் இருந்து அவள் எழுந்து வர, இன்பன் வேண்டாம் என்பதாக தலையசைக்கவும், அவனை முறைத்து கொண்டு அமர்ந்துவிட்டாள்.

                  அவள் அமர்ந்த நிமிடம் லா விடம் விசாரணையை தொடங்கி இருந்தான் இன்பன்..”என்ன பார்த்த நீ.. எதை வச்சு சொல்ற.. ஜெகா என்ன செஞ்சான்..பொறுமையா சொல்லு லா..” என்று இன்பன் தன்மையாக கேட்கவும், நேற்று தான் பார்த்ததை அப்படியே இண்பனிடம் கூற ஆரம்பித்தான் லா.

                   நேற்றைய தினம் ஆரம்பித்ததெல்லாம் நன்றாகவே இருக்க, ஜெகனும், லாரன்ஸும் ஒன்றாகத்தான் அலுவலகம் சென்றிருந்தனர். அன்று மாலை இருவரும் கிளம்பும் சமயம் ஜெகனுக்கு இரண்டு மூன்று முறை தொடர்ந்து அழைப்பு வந்து கொண்டே இருக்க, லா அருகில் இருந்ததால் அவனும் துண்டித்துக் கொண்டே தான் வந்தான்.

                     லா அதை கவனித்தாலும் கூட, அதுகுறித்து எதுவும் பேசிக் கொள்ளவில்லை ஜெகனிடம். ஆனால் அவனின் அலைப்புறுதலும், அவன் எதற்காகவோ தவித்துக் போவதும் புரிந்தது லா வுக்கு. அவங்க சொன்னால் சொல்லட்டும் என்ற எண்ணத்தில் அவன் அமைதியாகி வெளியே வேடிக்கை பார்க்க, ஜெகன் மொபைலை பார்த்து இருந்தவன் சட்டென வண்டியை நிறுத்த சொல்லி இறங்கி கொண்டான்.

                     லா அவனை கேள்வியாக பார்த்தபோதும், “நீ வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு லா…  எனக்கு வெளியே கொஞ்சம் வேலை இருக்கு.. முடிச்சுட்டு வீட்டுக்கு வந்துடறேன்..” என்றபோது தன் சந்தேகத்தை வெளியிடாமல் தான் அவனை பார்த்திருந்தான் லா… அவன் சொன்னதற்கும் தலையசைத்து சம்மதம் சொல்ல, அவர்கள் வந்த பாதையிலேயே திரும்பி நடக்க தொடங்கி இருந்தான்.

                       லாரன்ஸ் அவன் நடவடிக்கைகளை கவனித்து எதுவோ சரியில்லை என்ற எண்ணத்துடனே, காரை நிறுத்த சொல்லி தானும் இறங்கி இருந்தான்… அந்த பக்கமாக வந்த ஒரு ஆட்டோவை மறித்து அதில் ஏறி கொண்டவன் ஜெகனை அவன் அறியாமல் தொடர்ந்து சென்றான்.

                      ஜெகன் நடந்து சென்றதால், அவனை விரைவாகவே கண்டுவிட்டவன் ஆடிவில் இருந்து இறங்கி கொண்டு அவனை தொடர, இன்னும் சற்று தூரம் நடந்தவன் சென்று நின்ற இடம் அந்த மலைக்கோயில். அங்கு ஏற்கனவே இன்பனுடன் வந்து இருந்ததால் லா வுக்கு அடையாளம் தெரிய, அவன் பின்னோடே தானும் கோவிலுக்குள் நுழைந்திருந்தான் லா.

                      ஜெகன் அந்த கோவிலின் பின்பகுதிக்கு சென்று  நிற்க, அவனுக்கு முன்னால் யாரோ நிற்பது மட்டுமே தெரிந்தது லாரன்ஸ்க்கு. யாரிடம் பேசுகிறான்?? என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் அவனை நெருங்க, ஜெகனின் அருகில் நின்றிருந்தது மதுவர்ஷினி… மஞ்சரியின் தங்கை…

                    கண்களில் கலவரத்துடன் ஜெகனின் முகத்தை பார்த்து அவள் நிற்க, ஒரு இணக்கமான பாவத்துடனே நின்றிருந்தான் ஜெகன். லாரன்ஸுக்கு அவள் முகம் நன்றாக நினைவிருந்தது. அவளின் பெயர் தெரியாமல் போனாலும், அவள் கலையரசனின் மகள் என்பதுவரை நினைவு இருந்தது அவனுக்கு.

                  அதற்குமேல் பொறுமையில்லாமல் அவன் ஜெகனை நெருங்க, “எப்படி இருக்க ஜே.. சுத்தமா மறந்துட்ட இல்ல…” என்று சிரித்த மதுவர்ஷினி

                    “எனக்குதான் மறக்கவே முடியல… நான் நிச்சயமா உன்னோட கண்ல எனக்கான காதலை பார்த்திருக்கேன்.. ஆனா, இல்லவே இல்லைன்னு மறுக்கிற உன்கிட்ட கெஞ்சிகிட்டா இருக்க முடியும்… என்னால முடியாது..” எனும்போதே தனது கண்களை  அத்தனை நளினமாக சுண்டிவிட்டாள் அவள்.

                   “இப்போ எதுக்குடி வந்திருக்கே ன்னு கேட்கலாம் இல்ல…” என்று இடைவெளி விட்டவள் “நீ கேட்க வேண்டாம் நான் சொல்றேன்… என் அப்பா எனக்கு மாப்பிளை பார்த்து இருக்காராம்… பையன் மல்டி மில்லியனர் … இன்பா மாமாகிட்ட விட்டதை அவன்கிட்ட இருந்து பிடிக்க முடிவு பண்ணிட்டார் போல…

                  “மஞ்சரி சரியா வரமாட்டா இல்லையா… சோ, என்னை சூஸ் பண்ணிட்டாரு… இன்னும் டூ வீக்ஸ்ல எங்கேஜ்மென்ட்… உனக்கு ஓகே வா.. பிடிச்சிருக்கா.. எந்த கேள்வியும் இல்ல இதுவரைக்கும்… வெறும் தகவல் மட்டும்தான்… உனக்கும் நான் தகவல் மட்டும்தான் சொல்றேன்…”

                    “இன்னிக்கு இருந்து நாலாவது நாள் எனக்கு கனடாக்கு பிளைட்..சத்தியமா திரும்பி வர ஐடியா எல்லாம் இல்ல… எல்லாமே செட் பண்ணிட்டேன் அங்கே… ஜாப், ஷெல்டர், எல்லாமே ரெடி.. ஆனாலும், எங்கேயோ ஒரு மூலையில மனசு அடிச்சுட்டே இருக்கு… நீ ஒத்துக்க மாட்டியா ன்னு…”

                  “ஒருவேளை நான் கேட்டு, நீ சரி சொல்லிட்டா, நான் மிஸ் பண்ணிடகூடாதில்ல…” பேசியவளுக்கு தொண்டை அடைத்தது.. ஆனால், அவளின் கமறலை  சட்டை செய்யாமல் நிற்க

                  தன்னை தானே தேற்றிக் கொண்டவள் தன் வலதுகையால் தொண்டையை நீவிக் கொண்டு “எனக்கு வருத்தம் எல்லாம் இல்ல.. பட் ட்ரை பண்ணி பார்க்கணும் இல்லையா… அதான் வந்தேன்… ஓகே.. பைனல்லி கனடா போறேன்… யாருக்கு தெரியும், அங்கேயே யாரவது வெள்ளைக்காரனை பிடிச்சா கூட, ஓகே பண்ணிக்கறேன்… பை…”

                  “கண்டிப்பா உன் கல்யாணத்துக்கு கூப்பிடு… எங்கே இருந்தாலும் வருவேன்… ” என்று சிரித்தவள் “ஓகே.. இதை சொல்லத்தான் கூப்பிட்டேன்… உனக்கு வேலை இருக்கும்.. கிளம்பு ஜே…” என்று அவள் முடித்தபோதும் ஜெகன் எதுவுமே பேசாமல் நிற்க, அவனையே பார்த்தவள் “ஓகே நான் கிளம்புறேன்.. வெளியே டாக்ஸி வெயிட் பண்ணிட்டு இருக்கு.. ” என்று மீண்டும் சிரித்தவள் வேகமாக நடந்து விட்டாள்.

                   லா “இது என்னடா புதுக்கதை” என்பது போல் பார்த்திருக்க, ஜெகன் அவன் நின்றிருந்த இடத்திற்கு அருகில் இருந்த மேடை போன்ற இடத்தில அமர்ந்து விட்டான். தூரத்தே தெரிந்த மலைமுகடுகளை அவன் பார்வை வெறிக்க, கண்கள் கலங்குவதை கட்டுப்படுத்த முடியாமல் அமர்ந்திருந்தான் அவன்.

                 லா சில நிமிடங்கள் அவனை பார்த்துக் கொண்டு நின்றவன், அமைதியாக அங்கிருந்து கிளம்பிவிட்டான். அன்று இரவே ஏதோ காரணங்கள் கூறி ஓட்டுனருடன் கிளம்பிவிட்டவன் இதோ இன்று விடியலில் இன்பனின் முன்னால் அமர்ந்திருந்தான்..

                  இன்பனுக்கு முற்றிலும் அதிர்ச்சிதான் ஜெகனின் இந்த காதல் கதை. மதுவர்ஷினி அவன் அறிந்தவரையில் சற்று மாடர்னான பெண்.. தைரியம், தன்னம்பிக்கை, எல்லாமே கொஞ்சம் தூக்கல்தான்… அளவுக்கு அதிகமாகவே பெண்ணியம் பேசி, சுதந்திரமாக சுற்றிவரும் நவீன யுவதி…

                   அவளுக்கு காதல்.. அதுவும் ஜெகனின் மேல்.. நம்பவே முடியவில்லை இன்பனால். சற்று தள்ளி அமர்ந்திருந்த சிபிக்கும் அதே நிலை தான் என்பது அவள் பார்வையிலேயே புரிந்தது. ஆனால், எதிரில் ஒருவன் இருக்கிறானே..

                “இதுல கலையரசன் எங்கே இருந்து வந்தாரு லா… அதான் ஜெகன் ஒத்துக்கவே இல்லையே.. அப்புறம் என்ன..” என்று அவன் தன்னை சமாளித்து கேட்க

                   “அந்தாளு ஏன் வரணும்.. இவன்தான் மருமகனாக போறானே..” என்றான் லா.

                  இன்பன் முறைக்கவும், “நிஜம் இன்பா.. ஹி இஸ் இன் லவ் வித் ஹேர்… எனக்கு தெரிஞ்சுது… நீ கேளு அவன்கிட்ட..” என்று ஒரேபிடியில் நின்றான் லா…

                     இன்பன் “அவன் யாரை காதலிச்சாலும், என்னை விட்டு கொடுக்கமாட்டான் லா. எனக்கு ஜெகாவை பத்தி தெரியும்.. உனக்கு தெரியும்..”

                     “தெரியும் மேன்… அவனுக்கு அந்த பொண்ணை பிடிச்சிருக்கு இன்பா.. நீ பேசு.. அவன் அழுதான்…. நீ பேசு.. நாம அந்த பொண்ணை தூக்குவோம்..” என்று அவனின் தமிழில் அவன் கூறிவிட

                     “எது தூக்குறதா..” என்று சிரிப்புதான் வந்தது இன்பனுக்கு.

Advertisement