Advertisement

“இன்னும்கூட என்னல்லாமோ சொன்னிங்க… பார்த்திருக்கவே மாட்டேன்… கஷ்டப்படுத்திட்டேன்ன்னு…” என்று அவனைப்போலவே அவள் ஒற்றைப்புருவம் உயர்த்த

                     அவள் புருவங்களை மெல்ல நீவிவிட்டவன் “எல்லாமே அப்படியே தான் இருக்கு.. ஆனா, நான் உன்கூடவே தானே இருக்கேன்.. அதுபோதும்… என்ன கஷ்டம் வந்தாலும், ஒண்ணுமில்லாம பண்ணிடுவோம்..” என்றதும், சிபி அவன் தாடையை  பற்றியவள் அவன் முகத்தை இப்படியும், அப்படியுமாக திருப்பி பார்க்க

                    “என்னடி.. என்ன தெரியுது என் முகத்துல..” என்று இன்பன் சிரிப்புடன் பார்க்க

                     “பேய் எதுவும் அடிச்சிருக்கா ன்னு பார்த்தேன்…”

                      “தெரிஞ்சிடுச்சா…”

                    “ம்ம்.. நல்லாவே.. பேய் எல்லாம் அடிக்கல.. புத்தி தான் கொஞ்சம்…. லூசாகிருச்சு போல… அதான் கிறுக்குத்தனமா என்னென்ன யோசிக்க முடியுமோ அத்தனையும் யோசிக்கிறீங்க…” என்று அவள் குற்றம் சொல்ல

                   “மொத்தத்துல எனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு ன்னு சொல்ற..” என்று அவன் புருவம் உயர்த்த, அவன்மீதே அமர்ந்து கொண்டு சட்டமாக “ஆமாம்…” என்றாள்..

                      “பைத்தியம் என்ன பண்ணும் தெரியுமா..” என்று அவள் முகத்தை நெருங்கியவன் அடுத்த சில நிமிடங்கள் நிமிராமலே இருக்க, அவன் தலைமுடியை பிடித்து இழுத்து அவனை விலக்கியவள் அவன் வாயிலேயே ஒரு அடி வைத்தாள்.

                      இன்பன் பாவமாக பார்த்து வைக்க, “இப்படி மூஞ்சை வச்சு உங்க பையனை மாதிரி ஏமாத்த பார்க்காதீங்க… நேத்துல இருந்து என்னை என்ன பாடு படுத்தி வச்சிருக்கீங்க… இதுல என்னை பார்த்திருக்கவேமாட்டேன் ன்னு வேற சொல்லிட்டீங்க..”

                      “எப்படி உங்களால முடியுது… கற்பனை என்றாலும் கூட, எப்படி முடியும்… என்னை வேறொருத்தரோட…” என்றதுமே இன்பன் அவள் வாயை பொத்திவிட, அவன் கையை தட்டிவிட்டவள்

                     “என் வாயை ஏன் மூடுறீங்க… நீங்கதானே சொன்னிங்க.. உங்க வாயை மூடுங்க.. இன்னும் சொன்னா உங்க வாயிலேயே ரெண்டு வச்சா க்கூட தப்பில்ல..” என்று கோபமாக முறைக்க

                     அவள் முகத்திற்கு நேராக தன் இதழ்களை கொண்டு வந்தவன் “வச்சுக்கோடா கண்ணம்மா.. உனக்கு இல்லாததா..” என்று வசனம் பேச, சிபி புரியாமல் பார்க்கவும்

                    “ரெண்டு வைக்கிறதா சொன்னியேடா..” என்றான் இதழ்களை குவித்து… சிபி வந்த கோபத்தில் அவன் மீசையை இரண்டு கைகளாலும் பிடித்தவள் “பேசுவீங்களா.. பேசுவீங்களா..” என்று இழுக்க, அவனுக்கு வலிக்கவே இல்லை.

                 அவள் இழுப்புக்கு வந்தவன் அவள் முகத்தை தன் இரு கைகளாலும் பிடித்து தனக்கு நெருக்கமாக்க, சிபி சுதாரிக்கும் முன்பே அவளை தன் வசம் எடுத்திருந்தான்…

                        நீண்ட நேரம் அவள் இதழ்களில் இளைப்பாறியவன் ஒருவழியாக தாகம் தீர்ந்து, நிமிர்ந்து அவள் முகம் பார்க்க, இன்னும் கூட முறுக்கி கொண்டே நின்றாள் சண்டைக்கோழியாக…

                       அவள் பார்வையில் சிரிப்புவர, “உனக்கு முறைக்க கூட வரல ரசிம்மா..” என்று சிரிப்புடன் மீண்டும் அவளை அணைத்து கொண்டான் இன்பன்.  நேற்றிலிருந்து தேடிய ஏதோ ஒன்று அந்தக்கணம் கைசேர்ந்ததை போல இருந்தது சிபிக்கு..

                      ஆனாலும், அவன் தவிப்பாக உரைத்த வார்த்தைகளின் கணம் இன்னமும் பெண்ணுக்குள் இருக்க, அவன் நெஞ்சில் இருந்தபடியே பேச தொடங்கி இருந்தாள்..

                                 “ஏன் இப்படி உங்களையே வருத்திக்கிறீங்க இனியாம்மா… உங்களுக்கு உங்க ரசியை நல்லாவே தெரியும்.. அப்புறம் ஏன் இந்த தேவையில்லாத சஞ்சலம் எல்லாம்… என் இன்பா என்னோட இல்லாம போயிருந்தா, நிச்சயமா என்னை புதைச்ச இடத்துல புல் முளைச்சு இருக்கும் இந்நேரம்…”

                  “ஒருவேளை நீங்க சொல்றபடி, நீங்க என்னோட வாழ்க்கையில வராம போயிருந்தா, அந்த யாதவ் என்னை என்ன வேணா பண்ணி இருப்பான் இனியா.. நீங்க இல்லேன்னாலும், அம்மா அவனுக்கு என்னை கட்டி கொடுத்திருக்கமாட்டாங்க.. அம்மாவோட இறப்பு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒண்ணாதான் எனக்கு தோணுது….”

                  “அந்த ராட்சசன் கிட்ட இருந்து என்னை காப்பாத்த அவங்க உயிர் தான் விலையா இருந்திருக்கு போல..” என்றவள் கண்களில் துளிர்த்த நீரை துடைத்துக் கொள்ள, இன்பன் தன் அணைப்பில் இன்னும் அழுத்தத்தை கூட்டினான்.

                    “ஆனா.. ஒரு விஷயம் தெரியுமா.. அன்னிக்கு அம்மாவுக்கு அவ்ளோ சந்தோஷம் நம்மை நெனச்சு.. என்னை நினைச்சு ரொம்ப பயந்து இருக்காங்க இனியா.. உங்ககிட்ட பேசி முடிக்கவும், அவங்க முகத்துல அப்படி ஒரு நிம்மதி… “

                    “அவங்க முகத்துல அப்படி ஒரு தெளிவை நான் பார்த்ததே இல்ல அதுக்குமுன்னாடி… அந்த யாதவ் கிட்ட இருந்து நீங்க என்னை பாதுகாப்பிங்க ன்னு நிச்சயமா அம்மா நம்புனாங்க.. இப்போவாரைக்கும் நீங்க அந்த நம்பிக்கையை  காப்பாத்திட்டு இருக்கீங்களே.. அது போதாதா..

                  “உங்களை தவிர யாராலயும் என் அம்மாவை அத்தனை நிம்மதியா அனுப்பி வச்சிருக்க முடியாது இனியா… அதுக்குப்பிறகும் கூட, நீங்க என்னோட இல்லாம போயிருந்தா, நினைச்சு பார்க்கவே பயமா இருக்கு…”

                    “இந்த இடைப்பட்ட மூணு வருஷம் கூட, உங்க தைரியத்துல தான்… உங்க பாட்டி என்ன பேச்சு பேசினாங்க தெரியுமா??? அவங்க பேசின பேச்சுக்கு அடுத்த இரண்டாவது மாசமே உங்களுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வச்சிருப்பாங்க.. அந்த முடிவுல தான் இருந்தாங்க…”

                     “ஆனா, இந்த நிமிஷம் வரைக்கும் நீங்க என்னோட இனியனாவே இருக்கீங்களே… இதைவிட வேற என்ன கொடுத்திட முடியும்… உங்க பாட்டியும் கெட்டவங்க எல்லாம் இல்ல.. அவங்களுக்கு அவங்களோட பேரன் தங்கக்கட்டி, நான் அவனை திருடிட்டு போனதை தாங்கவே முடியல..”

                     “நீங்க திருப்பி கிடைக்க ஒரு வாய்ப்பிருக்கவும், யூஸ் பண்ணிட்டாங்க.. அவங்க அத்தனை பேசியும் எனக்கு அவங்கமேல எந்த கோபமும் வரல.. ஏன் தெரியுமா?? அவங்க கண்ல நான் பார்த்தது, உங்கமேல இருந்த பாசம்தான்.. அந்த பாசம் தான் அவங்களை அப்படி நடந்துக்க வச்சது…

                      “நீங்க எனக்கு கொடுத்த நம்பிக்கை தான், அவங்களை எதிர்த்து நிற்க வச்சது.. உங்க பாட்டி அன்னைக்கு நிலையில, நான் எத்தனை கோடி கேட்டு இருந்தாலும் கொடுத்திருப்பாங்க.. ஆனா, ஒரே ஒரு பைசா கூட வேண்டாம் ன்னு மறுத்துட்டு வெளியே வந்தப்போ எனக்கு இருந்த ஒரே ஆதாரம் நீங்கதான்..

                      “உங்களை பார்க்கவே முடியாது என்ற நிலையில் கூட, நான் கலங்கவே இல்லை. ஆனா, இன்னிக்கு உங்ககூடவே இருக்கேன்..நீங்க இப்படி கண்ணீர் விட்டு கதறிட்டு இருக்கீங்க.” என்றபோது அவளின் குறும்புத்தனம் மீண்டிருந்தது அவள் குரலில்..

                    கூடவே ” ஒருவேளை என்னை கூடவே வச்சு சமாளிக்கணுமே ன்னு பயந்து அழறீங்களா..” என்று மேலும் அவள் வாயடிக்க

                      இவ முன்னாடி போய் அழுது வச்சோமே என்று சிரித்துக் கொண்டவன் “நான் அழுததை நீ பார்த்தியா… ” என்று முறைக்க

                        “அப்போ கண்ணுல வேர்த்துச்சா..” என்று அதற்கும் பேச

                      “இங்கே வா.. எப்படி வேர்க்கும் ன்னு சொல்றேன்..” என்றவன் அவளை அருகில் இழுக்க, அவன் பிடிக்கு உடன்பட்டவள் “நான் கண்டிப்பா ஆபிஸ் வரணுமா..” என்று முதல்முறையாக கேட்க

                       அவள் கழுத்தை சுற்றி வளைத்துக் கொண்டே, “நான் என்ன சொல்லட்டும்…” என்று அவளையே கேட்டான் இன்பன்.

                     “உங்களுக்கு என்ன தோணுதோ அதை சொல்லுங்க… நேத்து மாதிரி உளறக்கூடாது..” என்றாள் கண்டிப்புடன்..

                     இன்பன் இந்தமுறை அவள் கண்களை நேராக பார்த்து, “எனக்கு என் குட்டிப்பொண்ணு வீட்டோட முடங்கி போறதுல இஷ்டம் இல்ல… என் ரசிகா எது செஞ்சாலும் அதுல ஒரு நேர்த்தி இருக்கும்…அவ படிப்பு, அவளோட குடும்பம், நம்மோட இனியனை வளர்த்த விதம் இப்படி எல்லாத்துலேயும் அவ பெஸ்ட்.. “

                 “எனக்கு என் ரசிகா எப்படி பிசினஸ் பண்ணுவா ன்னு பார்க்க ரொம்ப ஆசையா இருக்குடா… எனக்காக ன்னு வச்சுக்கோயேன்… என்கூட ஆபிஸ் வா.. ஜஸ்ட் ஒரே மாசம்… பிடிக்கலைன்னா விட்டுடலாம்… நான் காது கொடுக்கிறேன் ரசிம்மா..” என்று கொஞ்சலாக சிபியின் தாடையை பிடித்து இன்பன் கெஞ்ச

                “இதை நேத்தே பண்ணி இருக்கலாம் இல்ல…தேவையில்லாம 24 ஹவர்ஸ் என்னை அலைய விட்டு இருக்கீங்க… இதுக்காகவே ஒத்துக்க கூடாது தோணுது…” என்றவள் யோசனையாக கன்னத்தில் ஒரு விரலை வைத்து தட்டிக் கொண்டே மேலே பார்க்க, இன்பன் கடுப்பாகி அவளது விரலை பற்றி கடித்து வைத்தான்…

                  “ரொம்ப பண்ற ரசி நீ..” என்றவன் அவளின் சேலை மறைக்காத வயிற்றுப்பகுதியில் அழுத்தமாக கிள்ளி வைக்க,”ஆஆ..” என்று அலறினாள் அவள்.

                   அவளை சத்தம் போட விடாமல், அவள் இதழ்களை தனக்கு தெரிந்த வகையில் மூடியவன் அன்று இரவே ஹோட்டல் அறையை காலி செய்து மனைவி, மகனோடு வீட்டிற்கு வந்துவிட்டான். அடுத்து இரண்டு நாட்கள் சிபி ஆபிஸ் செல்வது பற்றி வாய் திறக்காமல் இருந்தவன், மூன்றாம் நாள் அன்னையை வரவழைத்து விட்டான்.

                  சிபியும் சிறு முறைப்புடன் அவனை பார்த்தாலும், எதுவும் மறுத்து பேசாமல் சமத்தாக அவனுடன் கிளம்பி இருந்தாள். இதுவரை வாழ்வில் துணை நின்றவள் இனி தொழிலிலும் துணையாக முடிவு கொண்டாளோ….

                    இவர்கள் சண்டையை முடித்து சமாதானமாகி ஒருவழியாய் கரை சேர்ந்து இருக்க, ஜெகன் வால்பாறைக்கு சென்றிருந்தான் தொழில் விஷயமாக.. அவனுடனே லாரன்ஸும் சென்றிருக்க, நான்கு நாட்களில் லாரன்ஸ் மட்டுமே திரும்பி வந்திருந்தான் இன்பனிடம்..

                    கூடவே “ஜெகனை நம்பக்கூடாது இன்பா.. அவன் கலையோட ஆள்..” என்று தகவல் வேறு இன்பனுக்கு….

Advertisement