Advertisement

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 28

                             இன்பன் காலையில் சிபியை விட்டு சென்றவன் இன்னும் அறைக்கு திரும்பாமல் இருக்க, கிட்டத்தட்ட நேரம் இரவை நெருங்கி கொண்டிருந்தது.. இனியன் வேறு சிணுங்கி கொண்டே இருக்க, எப்படியோ அவனை சமாளித்து கொஞ்சம் பால் மட்டும் புகட்டி உறங்கவைத்து இருந்தாள்.

                          ஓரிடத்தில் நிற்காமல் எப்போதும் துறுதுறு வென ஓடிக் கொண்டே இருப்பவனை காலையிலிருந்தது ஒரே அறையில் அடைத்து வைத்து போல் வைத்திருந்தால் அவனும் என்ன தான் செய்வான். அவன் பங்குக்கு சிபியை எரிச்சல் படுத்திவிட்டு இனியன் தூங்கி போயிருந்தான்.

                         சிபிக்கு இன்பனின் இந்த கோபம் எதற்காக என்று புரிந்தாலும் தங்கி கொள்ளவே முடியவில்லை. அதுவும் நேற்று உணர்ச்சி வசத்தில் அவன் சட்டையை பிடித்ததெல்லாம் இப்போது மிகப்பெரிய தப்பாக தெரிய, அதனால் தான் கோவித்துக் கொண்டிருக்கிறானோ?? என்று தவித்து போனது மனம்.

                        இதுவரை இன்பன் இப்படி அவளை தவிர்த்ததோ அல்லது தவிக்க விட்டதோ நடந்ததே இல்லை.. எப்போதுமே கண்ணுக்குள் வைத்து என்பார்களே அதுபோலத்தான் காத்து வந்திருக்கிறான். அவர்களின் இந்த மூன்றரை ஆண்டு காதலில் முதல் ஊடல்..

                      அதுவும் தவறு முழுவதும் தன்மீதே இருப்பதாக அவள் மனமே குற்றம் சாட்ட தொடங்கி இருக்க, அதுக்காக பேசவே மாட்டாரா?? என்னை பார்க்க வேண்டாம் ன்னு இங்கேயே விட்டுட்டு போய்ட்டாரோ?? என்னை வீட்டுக்கே கொண்டு போய் விட்ருக்கலாம் இல்ல… எதுக்கு இப்படி இந்த ரூம்ல அடைச்சு வைக்கணும்??

                           அவ்ளோதான் சிபி… நீ சண்டை போட்டா இப்படி ஜெயில்ல போட்ட மாதிரி, விட்டுட்டு போய்டுவாரு.. நீதான் பைத்தியம் மாதிரி தனியாக பேசிட்டு இருக்கணும். நான் வேண்டாம்ன்னு சொன்னா ஏன் ன்னு கூட கேட்கல.. நான் முக்கியமே இல்ல உங்களுக்கு… என்று இன்பந் எதிரில் இருப்பதாக நினைத்து அவனிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள் பெண்.

                        நல்லவேளை அது தனியறையாக இருக்க, இனியனும் ஏற்கனவே உறங்கி போயிருந்ததால் யாரும் இவளை பைத்தியம் என்று நினைக்காமல் தப்பித்தாள் சிபி.

                         அவள் தனக்குள் புலம்பிக் கொண்டே அமர்ந்து இருக்க, எத்தனை நேரம் அப்படியே கழிந்ததோ கதவு திறக்கும் ஓசையில் தான் சட்டென அந்த அறையின் வாயிலை பார்த்தாள் அவள். இன்பன் தான்…. அந்த அறையின் வாசலில் ஒருநொடி நின்று அவளை கூர்ந்தவன், நிதானமாக அந்த அறைக்குள் நுழைய அவனையே பார்த்திருந்தாள் சிபி.

                     அவளின் பார்வையை கண்டு கொண்டாலும், எதுவும் பேசாமல் கப்போர்டில்இருந்து ஒரு ஷார்ட்ஸை எடுத்துக் கொண்டு அவன் குளியலறைக்குள் நுழைந்து கொள்ள, அவன் முதுகை முறைத்து கொண்டிருந்தவள் முகத்தை வேறு புறமாக திருப்பிக் கொண்டு அமர்ந்து விட்டாள்.

                      அவன் குளித்து முடித்து வரும் வரையிலும் அவள் அதே இடத்தில அமர்ந்திருக்க, இன்பன் அவளை கண்டுகொள்ளவே இல்லை. குளித்து வந்தவன் அவளுக்கு எதிரில் இருந்த சோஃபாவில் வந்து அமர்ந்து அறையில் இருந்த தொலைபேசியை எடுத்து காஃபிக்கு சொல்லிவிட, என்ன முயன்றும் வார்த்தை வந்துவிட்டது அவளுக்கு.

                    “எனக்கு வீட்டுக்கு போகணும்.. கூட்டிட்டு போய் விடுங்க..” என்று அவன் புறம் திரும்பாமல் சுவற்றை பார்த்துக் கொண்டே அவள் சொல்லி வைக்க, பதிலே இல்லை அவனிடம்..

                  அவன் பேசாமல் இருக்கவும், அவள் திரும்பி இன்பனை பார்க்க, கையிலிருந்த மொபைலை அவன் கவனமாக பார்த்துக் கொண்டிருக்க, அதில் இன்னும் கடுப்பாகி அவன் கையிலிருந்த மொபைலை பிடுங்கி விட்டாள் சிபி.

                   இன்பன் அப்போதும் பொறுமையாகவே அவளை நிமிர்ந்து பார்க்க, அவனின் பொறுமையில் பற்றிக் கொண்டு வர, இப்போது அவன் முகம் பார்த்து நேராகவே “என்னை கூட்டிட்டு போய் வீட்ல விடுங்க… எனக்கு இங்கே பிடிக்கவே இல்ல..” என்று முகத்தை சுருக்கி கொண்டு கூறி முடித்தாள் அவள்.

                  அவளையே இரு வினாடிகள் அமைதியாக பார்த்தவன் “ஏன் இங்கே இருக்கறதுல என்ன பிரச்சனை… இனியனும் கூட இருக்கான்.. வேற என்ன வேணும்.. வீட்ல முக்கியமா எதுவும் வேலை இருக்கா என்ன?? இங்கேயே இருப்போம்..” என்று விட

                   “நீங்க இங்கேயே இருங்க.. என்னை அனுப்பி வைங்க…எனக்கு இங்கே இருக்கவேண்டாம்..”

                    “ஏன் வேண்டாம்… வீட்டுக்கு போய் என்ன செய்ய போற… இனியனை கவனிச்சுட்டு, சமைச்சுட்டு, சாப்பிட்டுட்டு, தூங்கிட்டு இதைத்தானே செய்யப்போற… இங்கே உனக்கு அந்த வேலையும் இல்ல.. அவன்கூட விளையாடிட்டு, அவன் தூங்குற நேரம் நீயும் தூங்கு..” என்று முடித்து விட்டான் அவன்.

                    அவன் பேச்சு வலி கொடுக்க, கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் இப்படியும் இன்பன் பேசுவானா என்றுதான் பார்த்திருந்தாள் சிபி. இன்பனை பார்க்காத நேரம் எல்லாம் சரியாக யோசித்தவள் அவனை கண்டதும் மீண்டும் வேதாளமாக மாறிவிட, இன்பனும் வழக்கத்திற்கு மாறாக அவளை அலையவிட்டுக் கொண்டிருந்தான்.

                    அவனையே பார்த்தவள் அதற்குமேல் எதுவும் பேசாமல் சென்று இனியன் அருகில் படுத்துக் கொள்ள,  அறையின் வெளிச்சத்தில் அவள் அழுவது தெரிந்தது இன்பனுக்கு. இதற்குள் காஃபி வர, அதை வாங்கி வைத்தவனுக்கு குடிக்க மனமில்லை. அவள் அப்படி அழுது கொண்டிருக்க, எப்படி தொண்டையில் இறங்கும் என்று நினைத்துக் கொண்டு எழுந்து அவள் அருகில் சென்று நின்றான் இன்பன்.

                   சிபி அவனை கண்டதுமே கண்களை உறங்குவதை போல் மூடிக் கொள்ள, “அழுதது போதும் எழுந்துக்கோ..” என்றான் மொட்டையாக…

                   சிபி சட்டையே செய்யாமல் படுத்து இருக்க, அப்படியே குனிந்து அவளை கைகளில் அவன் தூக்கி கொண்டான் இன்பன். “விடுங்க, விடுங்க என்னை…” என்று அவள் துள்ள, “அடங்கு ரசிகா… இனியன் எழுந்தா நீ தான் சமாளிக்கணும்… அமைதியா இரு..” என்று மெல்லியதாக அதட்டியவன் அவளை தூக்கி வந்து சோஃபாவில் போட்டுவிட்டு மீண்டும் பழையபடி எதிர்ஸோஃபாவில் அமர்ந்துவிட்டான்.

                  சிபி அவன் செயலில் மீண்டும் சிலிர்த்தெழுந்து எதுவோ பேச வர, “எப்போ இருந்து இப்படி அடம்பிடிக்க ஆரம்பிச்ச சிபி.. சொல்றது எதையும் கேட்கவே கூடாது ன்னு முடிவு பண்ணிட்டியா… காலையில் இருந்து சாப்பிடல.. ஒரு காஃபி குடிக்க கூட விடமாட்டியா.. ” என்று அவன் இஷ்டத்திற்கு பேசிவிட, அப்படியே அமைதியாக அமர்ந்துவிட்டாள் அவள்.

                      மற்ற எதையும் விட, அவன் சிபி என்று அழைத்ததில் மனம் வெகுவாக அடிபட்டு போயிருந்தது. வால்பாறையில் இருந்து வலுக்கட்டாயமாக அவன் அழைத்து வந்தபோது கூட, மனம் இத்தனை வலியை சுமக்கவில்லை… இப்போது அவனின் இந்த கடுமையும், அதட்டலும் முதல்முறையாக அனுபவிப்பவளுக்கு எதிர்கொள்ள கடினமாகவே இருந்தது.

                       அவள் அமைதியாக அமர்ந்துவிடவும், தன் கையில் இருந்த அரைகோப்பை காஃபியை அவன் நீட்ட, ம்ஹூம்.. அசையவே இல்லை..”குடிச்சு முடி.. வீட்டுக்கு போவோம்..” என்று மீண்டும் அதட்ட

                    சிபி மெல்ல தன் கையை நீட்டி அந்த கோப்பையை கையில் வாங்க, அதற்கு முன்னதாகவே கண்கள் கலங்கி போனது மீண்டும்.. கைகளும் லேசாக நடுக்கம் கொடுக்க, உதட்டோடு மெல்ல அந்த கோப்பையை அவள் அழுத்திக் கொண்டாளே ஒழிய, ஒரு வாய் கூட குடிக்கவில்லை.

                      இன்பன் அவள் குடிக்க போவதில்லை என்று உணர்ந்தவன் எழுந்து அவள் அருகில் அமர்ந்து அவள் கையில் இருந்த கோப்பையை வாங்கி டீபாயில் வைத்துவிட, அதற்கும் அமைதியே பதிலானது…

                       அவள் தோள்களை சுற்றி அணைத்து கொண்டவன் அவள் தலையை தன்மீது சாய்த்து கொள்ள, சிபி இளகவே இல்லை.. அமைதியாக அவன் செயல்களுக்கு உடன்பட்டுக் கொண்டிருந்தாலும், அவள் உடல் தளரவே இல்லை என்பதை புரிந்து கொண்டவன், தன்னிடமிருந்து அவளை தள்ளி அமர்த்தி விட்டான்.

                       “எனக்கு புரியவே இல்லை சிபி… என்னை பொறுத்த வரைக்கும் உன்னை வேலை பார்க்க சொன்னது ரொம்ப சின்ன விஷயம்.. உன்னால முடியாததும் கிடையாது.. ஆனா, அதுக்காக நேத்துல இருந்து என்னவெல்லாம் செஞ்சிட்டு இருக்க நீ…

                         “நான் பேச்சு வாக்குல சொன்ன ஒரு வார்த்தையை பெரிசாக்கி, சட்டையை பிடிச்சு சண்டை போட்டு, இப்போ வரைக்கும் நான் தப்பு பண்ண பீல் கொடுத்துட்டு இருக்க..” என்று அவன் முடிக்கும் போது சிபி இடையில் வாயைத் திறக்க, அவள் இதழில் ஒரு விரலை வைத்து அவளை அமைதியாக்கியவன்

                         “நான் பேசி முடிகிற வரைக்கும் நீ வாயே திறக்க கூடாது.. நீ பேச வேண்டியது எல்லாம் பேசிட்ட… ” என்று ஒரு சிறு இடைவெளி விட, சிபி மௌனமாகி விட்டாள்.

                   “என்ன நினைக்கிற சிபி நீ… என்ன ஓடிட்டு இருக்கு உன் மனசுல…நிச்சயமா உனக்குள்ள ஒரு உறுத்தல் இருக்கு.. என்னால உன்னை புரிஞ்சிக்க முடியுது.. உன்னை வேண்டவே வேண்டாம் ன்னு துரத்தி விட்ட குடும்பம் என்னோடது… எங்களோட கம்பெனிக்கு வர நீ தயங்குறது ஓகே தான்..”

                      “ஆனா, படிக்கலாம் இல்லையா… அதுல என்ன பிரச்சனை.. உன்னோட எண்ணப்படி யோசிச்சாலும், இந்த சொத்து எதுவுமே இல்லாம போனாலும், உன்னை படிக்க வைக்கிற அளவுக்கு என்கிட்டே காசிருக்கு.. ஆனா, எதுவுமே வேண்டாம் ன்னு சொல்றது எந்த வகையில நியாயம்..

                      “இல்ல.. இந்த சொத்தே வேண்டாம், கிளம்பி என்னோட வந்திடு ன்னு சொல்றியா.. அதையாச்சும் நேரா சொல்லு… இந்த நிமிஷமே உன்கூட வர தயாரா தான் இருக்கேன்… என் அப்பாவும், அம்மாவும் தப்பு பண்ணவங்க தானே.. தண்டனையை அனுபவிச்சுதான் ஆகணும்…” என்று அவன் பேசிக் கொண்டே போக

                     “என்னை கொஞ்சம் பேச விடறீங்களா..” என்று கொதிப்புடன் அவனை முறைத்தாள் சிபி…

Advertisement