Advertisement

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 27-2

                           இன்பன் சிபியை அவள் எதிர்பாராத வகையில் அந்த இருக்கையில் அமர்த்தி விடவும், அவள் அதிர்ச்சியாக பார்த்தது எல்லாம் வெறும் இரண்டு வினாடி நேரம் தான். அந்த இரண்டு வினாடிகளில் தன்னை இயல்பாக்கி கொண்டவள் இன்பனை பார்த்து ஒரு மெல்லியதாக சிரித்துக் கொண்டே அங்கிருந்து எழுந்து கொண்டாள்.

                            இன்பன் ஏன் என்று கண்களால் கேட்டுக் கொண்டு நிற்க, “நிச்சயமா என்னால முடியாது… எனக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்.. என்னை ஏன் இதில் இழுத்துவிட பார்க்கிறிங்க..? என்று சிரிப்புடன் அவள் சொல்லிவிட

                           “சரி.. இதுக்கும், உனக்கும் சம்பந்தம் இல்ல.. அப்போ வேற என்ன செய்ய போற..வீட்ல இருந்து இனியனை கவனிச்சுட்டு, சாப்பாடு செஞ்சு வச்சிட்டே காலத்தை ஓட்டிடுவியா…” என்றான் இன்பன். அவன் குரலில் ஏகத்திற்கும் அதட்டலும், கண்டிப்பும் மிகுந்து இருந்தாலும், இது தன் மீதான அக்கறை என்று சரியாகவே புரிந்து கொண்டாள் சிபி.

                            அவனுக்கு பதில் சொல்லும் விதமாக “இனியனை கவனிக்கிறதும், சாப்பாடு செய்றதும் அவ்ளோ ஈஸியா தோணுதா உங்களுக்கு..”என்றவள் மீண்டும் சிரிக்க

                          “ரசிகா… இனியனை கவனிக்கறது எல்லாம் வேலை லிஸ்ட்ல சேராது.. உனக்கு என்று ஒரு பிடிப்பு இருக்கணும் இல்லையா… உனக்கு என்று ஒரு வேலை, பொறுப்பு, உனக்கான வருமானம் இதெல்லாம் இருக்கணும்.. “

                         “ஏன்?? நீங்க சம்பாதிச்சு என்ன செய்ய போறீங்க.. என்கிட்டே தானே கொடுப்பிங்க… எனக்கு அது போதும்.. இந்த வேலை, பொறுப்பு எதுவும் வேண்டாம்..” என்று காதலோடு அவள் அவன் முகம் பார்க்க

                          “நான் சம்பாதிக்கிறது அத்தனையும் உனக்கும், இனியனுக்கும் தான்.. அதுல மாற்றமே இல்ல.. நான் பேசுறது நீ சம்பாதிக்கிறதை பத்தி..” என்று அழுத்தமாக இன்பன் கூற

                         “எனக்கு சம்பாதிக்க எல்லாம் வேண்டாம்… அதுவும் இங்கே இந்த வேலை எல்லாம் வேண்டவே வேண்டாம்…” என்று அவள் தலையை இடவலமாக ஆட்ட

                        “அப்போ என்ன செய்ய போற… வேற எதுவும் பிசினஸ் ஐடியா வச்சுருக்கியா… இல்ல என்னோட ஹோட்டலுக்கு வர்றியா…”

                           “நீங்க ஏன் இதை பத்தியே பேசறீங்க..இன்னும் கொஞ்சநாள் போகட்டுமே… இனியேனும் கொஞ்சம் வளர்ந்திடுவான்.. நான் அதுக்கு அப்புறம் என்ன செய்யலாம் ன்னு பார்க்கிறேனே…” என்று அவள் கதை தயாரிக்க

                         “இனியன் வளர்றதுக்கும் நீ வேலை செய்யுறதுக்கும் சம்பந்தமே இல்ல.. இனியனை அம்மா பார்த்துப்பாங்க… நீ உன்னை பத்தி மட்டும் பேசு… என்ன செய்ய போற..” என்று அவன் கையை கட்டி கொண்டு, ஆசிரியனை போல் கேள்வி கேட்க

                        எந்த பதிலும் இல்லை அவளிடம்… மீண்டும் அவனே “காலேஜ் சேர்த்து விடவா.. படிக்கிறியா..” என்று கேட்டு பார்க்க, தலை இடவலமாக வேகமாக அசைந்தது..

                        “ஏன் படிச்சா என்ன… வேலை செய்ய பிடிக்கல.. அட்லீஸ்ட் உனக்கு பிடிச்ச படிப்பையாவது படிக்கலாம் இல்ல.. நம்ம காலேஜ் வேண்டாம் ன்னா வேற ஏதாச்சும் காலேஜ்ல சீட் வாங்கவா.. மறுபடியும் படிக்கிறியா ரசி..” என்றான் மீண்டும் கொஞ்சலுக்கு திரும்பிவிட்ட குரலுடன்.

                         “நான் என்ன படிச்சேன் ன்னே எனக்கு ஞாபகம் இல்ல.. இதுல காலேஜ்க்கு எங்கே போறது…என்ஜினீரியங் எல்லாம் எங்கேயோ போய்டுச்சு.. அதுவும் இப்போ ஒரு குழந்தைக்கு அம்மா நான்.. நான் எப்படி காலேஜ் போய், என்னை விட சின்ன பசங்களோட… என்னால முடியாது..” என்று முகத்தை சுருக்கி கொண்டு அவள் கூறிட

                         தன்னையே நொந்து கொள்ளும் நிலையில் தான் இருந்தான் இன்பன். அவளின் இந்த நிலைக்கு தானும், தன்னுடைய காதலும் தான் முற்று முதலான காரணம் என்று அவனை குறை கூறியது அவன் மனசாட்சி.. அவன் காதல் மட்டும் இல்லையென்றால் அடுத்த மூன்று ஆண்டுகளில் படிப்பை முடித்துவிட்டு, எங்கேயோ ஒரு நல்ல வேலை, குடும்பம் என்று இருந்திருப்பாள்.. அவள் அன்னையும் உயிருடன் இருந்திருப்பார் என்று வருத்தம் கொண்டவன், மொத்த குற்றத்திற்கும் தன்னையே குற்றவாளியாக்க தயாராக இருந்தான்.

                       எப்படியாவது அவளை சுயமாக நிற்க வைத்துவிட வேண்டும் என்ற முனைப்பும் கூட, அவனை கொண்டு தான்.. ஏற்கனவே ஒருமுறை தனித்து நின்று அவள் அனுபவித்த வேதனைகளை மீண்டும் ஒருமுறை அவள் படக்கூடாது… தானே இல்லையென்றாலும் கூட, அவள் தனித்து சிறப்பாக இயங்குவதற்கான தைரியத்தையும், தன்னபிக்கையையும் அவளுள் புகுத்தி விட வேண்டும் என்ற எண்ணம் தான் இன்பனுக்கு. அவளின் படிப்போ, வேலையோ நிச்சயம் அவளுக்கான தன்னம்பிக்கையை கொடுக்கும் என்றுதான் நினைத்தான் அவன்.

                       அதைக் கொண்டே அவனின் இந்த வாதங்களும். அவள் எதற்கும் ஒத்து வராமல் முரண்டு நிற்க, அவளை எப்படியும் வழிக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்ற தீவிரத்தில் இருந்தான் அவன். அதன் பொருட்டே

                        “நீ ஏதாவது செஞ்சே ஆகணும் ரசி.. உனக்காக நீ என்ன செய்ய போற…” என்றவன் அவள் முகம் பார்க்க

                     “எனக்காக நீங்க இருக்கீங்க.. எனக்கு அது போதும்…” என்று நொடிப்புடன் அவள் பதில் சொல்லிவிட, சற்றே கடுமையாக எட்டி அவளின் முழங்கைக்கு மேலாக பற்றி இருந்தான் இன்பன்.

                       “நான் இருந்தும் தானே மூணு வருஷம் இத்தனை வேதனைப்பட்டு இருக்க.. இன்னமும் புத்தி வரலையா சிபி உனக்கு..எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா என்ன பண்ணுவ… யார் இருந்தாலும், இல்லனாலும் நீ உன் கால்ல நிற்க வேண்டாமா…  நான் சொல்றது புரியுதா இல்லையா உனக்கு???” என்று சற்றே கோபத்துடன் அவன் இரைய

                       கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது பெண்ணுக்கு.. ஏற்கனவே கடந்து சென்ற காலங்களில் தான் பட்ட துன்பங்கள் நினைவிலாட, மீண்டும் இப்படி பேசி நிற்பவனிடம் என்ன பேசுவாள் அவள். அவள் அமைதியாக அவன் கையை விலக்கி விட முற்பட, அவள் கைகளை விடாமல் இன்னும் அழுத்தமாக பற்றியவன் “எனக்கு பதில் சொல்லு சிபி..” என்று கேட்டது தான் தாமதம்..

                  தனக்கு முன்னால் இருந்த அவன் சட்டையின் காலர் இரண்டையும் எட்டி, இருகைகளாலும் பிடித்து விட்டாள் சிபி.”என்ன சொல்லணும்… என்ன பதில் வேணும் உங்களுக்கு… நான் கொஞ்சநாள் சந்தோஷமா இருந்தேன் அது பிடிக்கலையா உங்களுக்கு…  ஏற்கனவே ஒருமுறை நீங்க இல்லாம நான் பட்டது அத்தனையும் போதாதா… மறுபடியும் என்னை தனியா விட போறிங்களா…”

                     “ஓஹ்… உங்களை பிரிஞ்சும் நான் இத்தனை நாள் உயிரோட இருந்த தைரியத்துல பேசறீங்களா… எனக்கு இனியன் முக்கியமா இருந்தான். அவனை உங்ககிட்ட சேர்க்கணும் ன்னு நினைச்சேன்… அவ்ளோதான்… இனி என்னை பிடிச்சு வைக்க எதுவும் இல்ல.. அதை நியாபகத்துல வச்சுக்கோங்க…”

                    “நீங்க செய்யுறது அத்தனையும் அமைதியா பார்த்துட்டு இருக்கேன்ன்னா, நீங்க உங்களை பார்த்துப்பிங்கன்ற நம்பிக்கையில் தான். அதுக்கு நீங்க இல்லாம வாழ முடியும் ன்னு அர்த்தம் இல்ல..” என்று கத்தியவள் அவன் சுதாரிக்க கூட நேரம் கொடுக்காமல், சட்டென அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.

                    அந்த அலுவலகத்தை விட்டும் அதே வேகத்தில் அவள் வெளியே வந்துவிட, அவர்கள் வந்த கார் கீழே நிற்க, அவள் வெளியே வருவதை பார்த்த கம்பெனி டிரைவர் அவளிடம் வந்து நின்றார்.

                    “எங்கேயாவது போகணுமா அம்மா…” என்று அவர் கேட்க, எதுவுமே சொல்லாமல் அவள் முழித்து நிற்கும்போதே, இன்பன் அங்கு வந்து சேர்ந்திருந்தான்.

                      அந்த டிரைவரை செல்லுமாறு கூறி விட்டவன், முன்பக்க கதவை சிபிக்காக திறந்து விட்டு மறுபுறம் சென்று ஓட்டுநர் இருக்கையில் அமர, அமைதியாகவே காரில் ஏறி அமர்ந்தாள் அவள்.

                      முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அவள் அமர்ந்திருக்க, அவன் அறிந்து அவர்களுக்கு இடையேயான முதல் பிணக்கு… இதுவரை அவன் சொல்லியது அனைத்துக்கும் தலையாட்டும் ரசியை மட்டுமே பார்த்திருந்தவனுக்கு இந்த பட்டாசு புதுசு..

                       தான் பேசிய விஷயம் தான் அவளை பாதித்து இருக்கிறது என்று புரிந்தாலும், அதற்காக அவளை அப்படியே விட்டு விடவும் தயார் இல்லை அவன். அவள் கண்ணீரை கண்டவனுக்கு அதற்கு மேல் அந்த நேரம் வாதாட முடியாமல் போக, சற்றே மௌனித்துக் கொண்டான். ஆனால் அவன் மறக்கவே இல்லை.

                       இப்போதும் அவள் அமைதியாக கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து இருக்க, அவளிடம் பேச்சு கொடுக்காமல், காரை செலுத்திக் கொண்டிருந்தான் இன்பன். தங்களுக்கு சொந்தமான ஹோட்டலின் முன்னால்  காரை நிறுத்தியவன் சிபியை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைய, எதிர்பட்டவர்கள் அத்தனை பேரும் அவனுக்கு வணக்கம் வைத்து நகர்ந்து கொண்டிருக்க, தலையசைப்புடன் அவர்களை கடந்து தனது அறைக்கு வந்து சேர்ந்தான் அவன்.

                                அந்த அறையே அத்தனை பிரம்மாண்டமாக இருக்க, கிட்டத்தட்ட வீட்டை போலவே, ஏன் அதை காட்டிலும் கூட கொஞ்சம் ஆடம்பரமாகவே இருந்தது அந்த அறை. மெல்லிய திரைசீலைக்கு பின்னால் இருந்த கட்டிலை காட்டியவன் “படுத்து தூங்கு கொஞ்சநேரம்.. எனக்கு வேலை இருக்கு.. ஏதாவது வேணும்ன்னா எனக்கு போன் பண்ணு..” என்று கூறிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான்.

                    சிபிக்கு அவன் கோபமாக இருப்பது புரிந்தாலும், அவனை சமாதானம் செய்யும் எண்ணம் வரவே இல்லை. “போங்களேன்..” என்றே இருந்து கொண்டாள்.

                   இன்பன் தன்னுடைய அறைக்கு வரவும் அவனை வேலைகள் இழுத்துக் கொள்ள, இதில் நூறாவது முறையாக கலையரசன் வேறு அழைத்துக் கொண்டிருந்தார். நேற்று மலையிலிருந்து இவன் அழைப்பை எடுக்காமல் ஆட்டம் காட்டிக் கொண்டிருக்க, இன்று காலையில் மாதவி கேஸை வாபஸ் வாங்கி இருந்ததும் அவன் காதுக்கு வந்துவிட்டிருந்தது.

                    ஆனாலும் கூட, அவரின் அழைப்பை ஏற்காமல் ஆட்டம் காட்டிக் கொண்டே இருந்தவன், இப்போது சற்றே மனமிரங்கி அவரின் அழைப்பை ஏற்றான். எதிர்முனையில் கலையரசன் “இன்பா… ” என்று பதட்டமாகவே அழைத்தவர் “மாதவி கேசை வாபஸ் வாங்கிட்டா.. நீ சொன்னதை நான் முடிச்சிட்டேன்.. அந்த வீடியோ என் கைக்கு வந்தாகணும்…” என்று மிரட்டல் குரலில் பேசி வைக்க

                     நக்கலாக சிரித்தவன் “நீ இன்னும் அடங்கலையே…. வீடியோ என்கிட்டே இருக்கறதை மறந்துட்டியா கலை…” என்று பாசமாக கேட்டு வைக்க, அந்த குரலில் கலையரசனுக்கு தான் கிலி பிடித்தது..

                   அவர் அமைதியாகவும் “குட்.. இப்படித்தான் எல்லாத்தையும் மூடிக்கிட்டு அமைதியா இருக்கணும்… கேஸை வாபஸ் வாங்க சொன்னேன்.. ஆனா விடியோவை கொடுக்கறதா சொல்லவே இல்லையே நான்.. ஆனானப்பட்ட கலையரசனோட அந்தரங்க லீலைகள் என்கையில இருக்கு… இதை வச்சு நான் ஒரு ஆட்டம் ஆட வேண்டாம்…” என்று நிதானமாகவும், அழுத்தமாகவும் அவன் பேசி வைக்க

                  கலையரசனுக்கு வியர்த்து வடிந்தது அங்கே.. இன்னும் என்ன செய்ய காத்திருக்கிறானோ?? என்று அவர் பதற, அவர் பதறியதை போலவே, “அடுத்தது என்னன்னா… என் அப்பா காசுல நீ ரன் பண்ணிட்டு இருக்க ஸ்பின்னிங் மில்.. எனக்கு அது வேணும்… இன்னும் மூணு நாள் உனக்கு டைம்…அதுக்குள்ள மொத்த யூனிட்டும் என் கைக்கு வந்து ஆகணும். ” என்று நிதானம் தவறாமல் அவன் கூறி முடிக்க

                  அடுத்த நொடி கலையரசன் கொதித்து எழுந்திருந்தார்..”என்னை என்ன நினைச்ச இன்பா… நீ சொல்றதுக்கெல்லாம் தலையாட்டிட்டு இருப்பேனா… உன் அத்தையை விடவும், என்னோட மில் எனக்கு முக்கியம்.. என் அப்பாவோட சொத்து அது… நீ உன்னால முடிஞ்சதை பாரு… உன்கிட்ட இருக்க விடியோவை உன் அத்தைக்கு அனுப்ப போறியா… தாராளமா செய்…” என்று அவர் அழைப்பை துண்டித்து விட்டிருந்தார்…

Advertisement