Advertisement

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 27

இன்பன் கூறிய வார்த்தைகளின் அர்த்தத்தை கிரஹித்துக் கொள்ளவே சிறிது நேரம் தேவைப்பட்டது அபிராமிக்கும், மதுசூதனனுக்கும். என் மகனை அழிக்க பார்த்தார்களா?? என்று தாயாய் அபிராமியின் மனம் கொதிக்க, தன் கணவரின் குடும்பத்தின் மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு வெறுப்பு வந்தது.

மதுசூதனனுக்குமே இது அதிர்ச்சி தான். கலையரசன் கொஞ்சம் பணத்தாசை பிடித்தவர் என்று மட்டுமே தெரியும் மதுவுக்கு. அவ்வபோது அவரின் குளறுபடிகளும், அவர் அடிக்கும் சில சில்லறை கொள்ளைகளும் காதில் விழுந்தாலும், இதுவரையில் பெரிதாக எடுத்துக் கொண்டது கிடையாது. தங்கையின் கணவர் என்ற ஒரே காரணத்திற்காக, பல இடங்களில் அவரை கண்டும் காணாமல் கடந்து சென்றிருக்கிறார் மதுசூதனன்.

ஆனால், தன் மகனையே அழிக்கும் அளவுக்கு திட்டமிடும் துணிச்சல் எங்கிருந்து வந்தது.. எப்படி இதை அனுமதித்தேன் நான்?? என்று சுய அலசலில் இருந்தார் அவர்.

தங்கை கணவர் என்று இத்தனை காலம் மதித்தவர் பொய்த்து போனதை நம்பவே முடியவில்லை மதுசூதனனால். இன்பனால் தந்தையின் வேதனையை ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது. தந்தையின் தோற்றம் இன்பனுக்கும் வேதனையே கொடுக்க, தன் தந்தையின் அருகில் சென்று அமர்ந்தான்.

மது அவனை ஏறிட்டு பார்த்தவர், “உனக்கு எப்படி தெரியும் இன்பா… அப்போ உனக்கு நடந்த விபத்து… ஆனா, நான் அப்பவே தெளிவா விசாரிச்சேனே.. எப்படி இன்பா..” என்று அவர் திணற

அவரின் இடது கையை பிடித்துக் கொண்டு அவரின் கையின் மேல் தட்டிக் கொடுத்தவன் “ப்பா.. டென்சன் ஆகாதிங்க… நீங்க கஷ்டப்படகூடாது என்றுதான் இன்னிக்கு வரைக்கும் உங்ககிட்ட சொல்லவே இல்ல நான்..

“ஆனா, எத்தனை நாளைக்கு என்னால மறைக்க முடியும். அதுவும் திட்டம் போட்டு அத்தனையும் நடத்திட்டு, இப்போ எனக்கு எல்லாம் மறந்து போகவும் என்னை மாப்பிள்ளையாக்க நினைச்சிருக்காரு.. பின்னாடி எல்லாம் தெரிய வந்தாலும், எதுவும் செய்ய முடியாது இல்லையா..”

“அவர் இதோட மட்டும் நிறுத்தலப்பா… ஏற்கனவே அதாவது மூணு வருஷத்துக்கு முன்னாடியே நம்ம கார்மெண்ட்ஸ்ல ஏகப்பட்ட பணம் கணக்கே இல்லாம வெளியே போயிருக்கு.. அத்தனையும் சொத்தா மாத்தி அவர் பேரே வெளியே வராத அளவுக்கு என்ன செய்யணுமோ அத்தனையும் செஞ்சிட்டாரு..

“ஆனா, அவரோட கெட்ட நேரம் நான் பொறுப்பெடுத்தது. ஏதோ தப்பா இருக்கு என்று செக் பண்ண ஆரம்பிச்சு, கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் ஆச்சு.. அவரோட தில்லாலங்கடி எல்லாம் கண்டுபிடிக்க… அத்தனையும் ஆதாரத்தோட உங்ககிட்ட கொடுக்கத்தான் நேரம் பார்த்திட்டு இருந்தேன்.

“அந்த சமயத்துல சிபியோட பிரச்சனை.. அவ அம்மா தவறிடவும், அவளை தனியா விட நான் பயந்ததுக்கு முதல் காரணமே கலையரசன் தான்.. சொத்து மேல இருக்க வெறில, அவளை எதுவும் செய்ய துணிஞ்சிடுவாரோ ன்னு பயந்தேன்.. அதுக்காக தான் அவசர அவசரமா கல்யாணம் பண்ணிட்டோம்.

“நான் நினைச்சது போலவே,அவரும் சும்மா இருக்க முடியாம, என்னென்னவோ செஞ்சாரு… ஏன் எனக்கு நெருக்கமானவன் ன்னு தெரியாம, பழனிகிட்டேயே வேற ஆளை வச்சு பேசி இருக்காரு.. அவன் முடியாதுன்னு சொன்னவன் போன் போட்டு விஷயத்தை என்கிட்டேயும் சொல்லிட்டான்…”

“நானும் கவனமா தான் இருந்தேன்.. என்ன சிபியை தூக்க பிளான் பண்ணுவாங்க ன்னு நினைச்சு, அவளை பார்த்துக்கறதுலேயே இருந்துட்டேன்.. நான் அசந்த நேரத்துல இவர் ஆளுங்க என்னை தட்டிட்டாங்க… அதோட முடிஞ்சிடும் ன்னு நினைச்சிருப்பாரு…

“ஆனா, ஆண்டவன் என்னை காப்பாத்தி விடவும், மறுபடியும் அவர் வேலையை உங்க மூலமா ஆரம்பிச்சிட்டாரு.. சிபியை துரத்தி விட்டுட்டா, அவர் மகளை கட்டி வச்சிடலாம் ன்னு அவளையும் உங்களை வச்சே துரத்தி விட்டுட்டாரு… எத்தனை வேஷம்.. எத்தனை நாடகம்…

“இத்தனையும் செஞ்சிட்டு, மூணு வருஷம் கழிச்சு நான் என் இடத்துக்கு திரும்பி வந்தா, அங்கே ஒய்யாரமா இவர் உக்காந்திட்டு இருக்காரு… எப்படி இருக்கும் எனக்கு.. அந்தாளுக்கு இன்பன் யாரு ன்னு நான் காட்ட வேண்டாமா… அவர் குடும்பம், பணம், மானம் மரியாதை எதுவுமே இல்லாம ஊரை விட்டே ஓடணும்… நான் விரட்டுவேன்…” என்று ஆத்திரத்துடன் மகன் கூறி முடிக்க, மதுசூதனனுக்கு தன்னை நினைத்தே வெட்கமாக இருந்தது..

எத்தனை தொழில் செய்து, எத்தனை லாபம் பார்த்து என்ன பிரயோஜனம்… சொந்த வாழ்வில் கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக ஒருவன் தன்னை மச்சான் என்ற பெயரில் ஏமாற்றி வந்திருக்க, தானும் ஏமாளியாக இருந்திருக்கிறோம் என்ற நினைவே அவரை குன்றி போக செய்தது…

அபிராமிக்கு அவரின் வேதனை புரிய, கணவரை நெருங்கி அவரின் தோளை தொட்டவர், மெதுவாக ஒரு அழுத்தம் கொடுக்க, “அபி..” என்று அடிபட்டவர் போல் மனைவியை பார்த்தார் மதுசூதனன்… “நான் அவனை வேறயா நினைக்கவே இலையே அபி.. என் தங்கச்சியையும் அவனையும் ஒரே மாதிரி தானே பார்த்தேன்…” என்று அவர் கலங்கிய குரலில் பேச

“நீங்க இத்தனை தூரம் கலங்கி நிற்க எல்லாம் தேவையே இல்லப்பா.. உங்களுக்கு சந்தேகமே வராத அளவுக்கு தான் அவரும் நடிச்சிட்டு இருந்தாரு.. அதோட உங்க தங்கச்சி அவங்களும் லேசுப்பட்டவங்க இல்ல.. அவங்க உங்களுக்கு உண்மையா இருக்கணும் ன்னு நினைச்சு இருந்தா, மஞ்சரி விஷயத்தை மறைச்சு என்கூட கல்யாணத்துக்கு பேசி இருப்பாங்களா..??” என்றான் இன்பன்.

“அவ மட்டுமா?? உன் பாட்டியை விட்டுட்டியே இன்பா.. மஞ்சரி விஷயம் எனக்கெப்படி தெரியும் ன்னு நினைக்கிற.. உன் பாட்டி கப்போர்ட்ல தான் அவளோட மெடிக்கல் ரிப்போர்ட் எனக்கு கிடைச்சது.. அதுக்கு என்ன அர்த்தம்.. என்ன நினைச்சிட்டாங்க இவங்க அத்தனை பேரும்… என் மகன் வாழ்க்கையை நாசம் பண்ணது போதாது ன்னு அவனையே இல்லாம செய்யுற அளவுக்கு திட்டம் போட்டு இருக்காங்க..அப்படி என்ன பணத்தாசை இவங்களுக்கெல்லாம்..” என்று அபிராமி வேறு கண்ணீர் விட, இன்பனுக்கு இதையெல்லாம் இவர்களிடம் சொன்னது தவறோ என்று தோன்றிவிட்டது..

ஒருவழியாக இருவரையும் சமாளித்தவன், சிபியிடம் அவர்களுக்கு காஃபி எடுத்து வருமாறு கூற, நேரத்தை காட்டியவள் மூவரையும் சாப்பிட அழைத்தாள்… ஜெகனையும், லாரன்ஸையும் இன்பா ஏதோ வேலையாக வெளியே அனுப்பி இருக்க, வீட்டில் அவர்கள் மட்டுமே…

சிபி பரிமாற, மூவரும் உண்டு முடிக்கவும், மதுசூதனனன் கிளம்புவதாக சொல்ல, இன்பானுக்கு அவரை தனியே விட மனமில்லை. “இங்கேயே இருங்கப்பா.. காலையில போகலாம்..” என்று விட்டான்.

மதுசூதனுக்கும் மகன் வீடும், மருமகளின் கரிசனமும் மனதிற்கு இதமாக இருக்க, மனைவியுடன் அங்கேயே தங்கி கொண்டார் அவர்.. அவர்கள் உறங்குவதற்காக அறைக்கு செல்ல, இன்பன் இனியனை தூக்கி தன் அன்னையின் கையில் கொடுத்தவன் “இவனை கூட வச்சுகோங்கம்மா…” என்று கூறிவிட்டு படிகளில் ஏறி இருந்தான்.

சிபி அனைத்தையும் பார்த்தாலும் எதுவும் மறுப்பாக கூறவே இல்லை.. அபிராமி பேரனை கையில் வாங்கி கொண்டாலும், அனுமதிக்காக மருமகளின் முகத்தை பார்த்து நிற்க, சிபி புன்னகையுடன் பால் இருந்த பிளாஸ்க்கை அவரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.

அபிராமிக்கு மருமகளின் குணங்கள் மெல்ல பிடிபட ஆரம்பித்து இருந்தது இந்த இடைப்பட்ட நாட்களில்.. அவளின் ஆர்ப்பாட்டம் இல்லாத அந்த அமைதியான அழகும், அவளின் குறை காண முடியாத குணமும் தங்களின் தவறுகளை பெரிதாக காட்டியது அவருக்கு. ஏற்கனவே குற்றவுணர்வு தான்.  அதிலும் இன்று கலையரசனின் செயல்களும் தெரிய வந்திருக்க, நன்றாக இருந்திருக்க வேண்டிய மகனின் வாழ்வை தாங்களே கெடுக்க பார்த்தோமே.. என்று எண்ணி எண்ணியே நொந்து போனார் அவர்.

மஞ்சரி மகன் வாழ்வில் வந்து இருந்தாலும் கூட, மகனின் வாழ்வு இத்தனை நிறைவாக இருந்திருக்காது என்றே தோன்றியது அபிராமிக்கு.. அதே எண்ணத்துடன் அவர் பேரனை கையில் தூக்கி கொண்டு அறைக்குள் வர, இனியனை கட்டிலின் நடுவில் போட்டுவிட்டு தாத்தா, பாட்டி இருவரும் அவனுக்கு இருபுறமும் காவல் இருந்தனர்…

இங்கே சிபி தங்களது அறைக்கு வர, அந்த அறையில் இருந்த பால்கனியில், அந்த ஒற்றை இருக்கையில் அமர்ந்திருந்தான் சிபி. தன் கையில் இருந்த பால் டம்ளரை அங்கே கட்டிலின் அருகில் வைத்தவள் குளியலறைக்கு சென்று உடைமாற்றி வர, அப்போதும் அசையவே இல்லை அவன்.

சிபி இப்போது அவனை நெருங்க, இன்பனும் அப்போது தான் அவளை பார்த்தான். கத்தரிப்பூ நிற இரவு உடை அவளுக்காகவே தைத்தது போல் இருக்க, கழுத்தில் என்றும் போலவே அவன் அணிவித்த அந்த ஒற்றை சங்கிலி.. அப்போது தான் லேசாக முகம் கழுவி இருப்பாள் போலும்.

அதையும் அரைகுறையாக துடைத்து இருக்க, முன் உச்சி குங்குமம், நெற்றியில் இடம்மாற துடித்துக் கொண்டிருந்தது. அவளை பார்த்த அந்த நிமிடம் இன்பன் முழுதாக அவள் வசமாகிவிட, கையை நீட்டி தன் அழகு புதுமையை அருகில் இழுத்துக் கொண்டான்.

சிபி இன்னுமே அவனுக்கு நெருக்கமாக, அவளை தனக்கு முன்னால் இருந்த டீபாயின் மீது அமர்த்தியவன் அவள் முகத்தையே பார்த்திருக்க, அன்று மாலையில் பார்த்த அதே பார்வை. சிபிக்கு இப்போதும் அவன் கண்களை சந்திக்க முடியாமல் போக, மெல்ல அவள் தலையை குனிந்து கொண்டாள்.

அவளின் தாடையை தொட்டு முகத்தை நிமிர்த்தியவன், “இன்பா அவ்ளோ நல்லவனா ரசிம்மா…” என்று கேட்க, என்ன பதில் சொல்வது என்று புரியாமல் அவனையே பார்த்திருந்தாள் சிபி.

இன்பன் மீண்டும் “எப்படி நான் செஞ்சிருக்க மாட்டேன் ன்னு சொன்ன..” என்று அதிலேயே நிற்க

“நிச்சயமா செஞ்சு இருக்க மாட்டீங்க…” என்று அழுத்தி சொன்னாள் மனைவி.

அந்த நம்பிக்கை “பார் என்னவள் இவள்..” என்ற கர்வத்தை கொடுத்ததோ என்னவோ.. யோசிக்கவே இல்லை இன்பன். டீபாயில் இருந்தவளை ஒரே இழுப்பில் இழுத்து தன் மடியில் அமர்த்திவிட்டான். சிபி என்ன நடந்தது என்று புரியாமல், அதிர்ச்சியாகி பார்க்க, அவளின் இடையில் கையை கொடுத்து தன்னோடு இன்னும் இறுக்கினான் அவன்..

சிபி, அவனின் இந்த செயல்களில் நெளிந்தவள் அவன் கையை அசையவிடாமல் பிடிக்க,அவளை குறும்பாக பார்த்தவன் மற்றொரு கையால் அவளை கழுத்தோடு வளைத்து அவள் முகத்தை நெருங்க, அவன் வாயின் மீது கை வைத்து தடுத்தவள் “உள்ளே போவோம்..” என்று எழுந்து கொள்ள பார்க்க, அவளை விடவே இல்லை அவன்.

“ஒன்னும் பண்ணலடா.. இங்கேயே இரு..” என்று அவளை சரியாக அமர்த்தி அவள் கழுத்தில் கையை போட்டு அணைத்து கொண்டான். சிறிது நேரம் மௌனத்தில் கழிய, சிபி அவன் முகம் பார்ப்பதும், பின் வெளியே பார்ப்பதும் என்று நேரத்தை கடத்த “உனக்கு இப்பவும் என்ன நடந்தது ன்னு சொல்ல தோணலையா சிபி.. என்கிட்டே எப்போ தான் சொல்லுவ…” என்று மெதுவாக இன்பன் கேட்க

அவன் கண்களை பார்த்தவள் ” எனக்கு இந்த நிமிஷம் போதும்… கடந்து போன விஷயங்கள நான் நினைச்சு கூட பார்க்கதறதா இல்ல.. இந்த நிமிஷம் நீங்க என்னோட இருக்கீங்களே.. அது போதாதா..” என்று காதலாக சிபி கேட்டாலும்,

அது எப்படி என்று சுணங்கியது இன்பனின் மனம். “இப்பவும் நானா உன்னை தேடி வரவும் உன்னோட இருக்கேன்.. நீ என்னை தேடி வரல.. வந்திருக்கவும் மாட்ட..” என்று அவன் கோபப்பட

“நிச்சயமா நானா வந்திருக்க மாட்டேன்.. ஆனா, நீங்க வருவீங்க ன்னு நம்பினேன்.. அது வீண் ஆகலையே.. வந்திட்டிங்களே..” என்று மென்மையாக அவள் எடுத்து கூற

“அப்படி என்ன அவங்களை காப்பாத்த நினைக்கிற.. என்னைவிட அவங்க அவ்ளோ முக்கியமா போய்ட்டாங்களா..” என்று அவன் கத்தவும், சிரித்து விட்டாள் அவள்.

“இந்த கேள்விக்கு பதில் உங்களுக்கு தெரியாதா… அத்தனை பேரும் என் இனியனோட உறவுகள்… உங்களுக்கே ஏதோ தெரியப்போய் தானே எல்லாரையும் தள்ளி நிறுத்திட்டு இருக்கீங்க,.. இதுல நான் வேற புகார்  சொல்லனுமா… நிச்சயமா சொல்லமாட்டேன்…”

“என்ன நடந்து இருந்தாலும் அப்படியே போகட்டும்… நீங்களும் அதையெல்லாம் மறந்து போக பாருங்க.. இத்தனை கோபமும், ஆவேசமும் நமக்கு வேண்டாம் இனியன்..” என்று பொறுமையாக அவள் கூற

“என் பொம்மை ரொம்பவே வளர்ந்துட்டா… ச்சு.. நான் அவளை ரொம்பவே மிஸ் பண்றேன் ரசிம்மா.” என்று ஏக்கமாக கூறியவன் “ஆனா… இதுதான் அழகா இருக்கு.. என்னை இப்படி மிரட்டி, அதட்டி நிற்க வைக்கிற இந்த பொண்ணை ரொம்பவே பிடிக்குது..” என்று இன்பன் முடிக்க, புன்னகையோடு அவன் தோளில் சாய்ந்தாள் சிபி.

அவளை கைகளில் தூக்கி கொண்டு எழுதுன்ஹவன் தன் அறையில் இருந்த கட்டிலுக்கு வர, லேசாக ஒரு படபடப்பு அவளிடம். மூன்று ஆண்டுகளுக்கு பிறகான கணவனின் நெருக்கமும் நெருக்கமும், அவனின் இந்த பார்வைகளும் அவளை உறைந்து போக செய்ய, பனிக்கட்டியாய் உருகிவிட தயாரகத்தான் இருந்தாள் அவளும்.

இன்பன் மெல்ல அவளை நெருங்கியவன் அவளின் நெற்றி குங்குமத்தில் தன் இதழை பதித்து நிமிர, அவனையே பார்த்திருந்தாள் அவள். அவன் அடுத்ததாக அவள் இதழை நெருங்கவும், சட்டென கண்களை மூடிக் கொண்டாள்.

இன்பன் சிரித்துக் கொண்டே “ஒண்ணுமே பண்ணலடா இன்னும்.. இதுக்கே கண்ணை மூடிடுவியா…” என்று கேட்க

இன்னும் இறுக்கமாக கண்களை அவள் இறுக்கி கொள்ள, அவளின் கீழ்த்தாடையில் கடித்து பின் முத்தமிட்டான். கூடவே “ஹேய் குட்டிப்பொண்ணு… கண்ணை திறந்து பாருடி… ” என்று கெஞ்சலாக ஒரு கொஞ்சல் வேறு…

அவன் பேசப்பேச ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் வெட்கம் சூழ்ந்து கொண்டது அவளை. அவன் வாய்க்கு இணையாக அவன் கைகளும் அவள் மேனியில் கதை படித்துக் கொண்டிருக்க, எங்கே பேசுவது அவள்..

அந்த இரவு அவர்களின் மூன்றாண்டு தவத்திற்கு வரமாக கிடைக்க, இன்பன் ஒருநொடிக்கூட தன் மனையாளை பிரிவதாக இல்லை போலும்.. தன் கையணைவிலேயே அவளை வைத்திருந்தவன் அடுத்த நாளும் அதையே தொடர்ந்தது தான் வினையாகி போனது.

காலையில் முதலில் எழுந்தவன் விரைவாகவே குளித்து தயாராகி, சிபியையும் எழுப்பி விட்டான்.. சிபி அழகாக அயர்ந்து போயிருக்க, அந்த கணம் மீண்டும் அவளை முத்தமிட்டு, அவளின் போர்வைக்குள் தானும் நுழைந்து கொண்டான்.. அதன் பிறகு இருவரும் அந்த அறையை விட்டு வெளியே வரும்போது நேரம் மேலும் ஒருமணி நேரம் கடந்திருந்தது.

இனியன் அன்னையை தேடாமல், தன் பாட்டியுடன் விளையாடிக் கொண்டிருக்க, இப்போது சிபியை காணவும், ஓடிவந்து அவளின் கால்களை கட்டிக் கொண்டான். சிபி புன்னகையுடன் அவனை தூக்கி கொள்ள, அதன் பிறகான அவளின் நேரங்கள் அவனுடன் கழிந்தது.

மதுசூதனன் கிளம்புவதாக சொல்லவும் அவர்களை அனுப்பி வைத்தவன் கூடவே இனியனையும் அவர்களோடு அனுப்பிவிட, சிபி இப்போது சற்றே அதிர்ந்து தான் பார்த்தாள் கணவனை.. இனியனுக்கு அப்படி இல்லை போலும்..

“டாட்டா..” என்று கிளம்பிவிட்டான்.. சிபி தன் மகனையே பார்த்து நிற்க, இன்பன் அவளை கூடவே அழைத்து சென்று தன் காரில் ஏற்றி இருந்தான். சிபி “எங்கே போறோம்..” என்று கேள்வியாக அவனை பார்க்க, எதுவும் சொல்லாமல் அவளை அழைத்து வந்தவன் தங்கள் கார்மெண்ட்ஸின் அலுவலக அறைக்குள் நுழைய, சிபி புரியாமல் பார்க்கும் போதே, அவளை அங்கிருந்த உரிமையாளர் இருக்கையில் அமர்த்தி இருந்தான்.

Advertisement