Advertisement

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 26

                           தன் கையிலிருந்த அலைபேசியை வெறித்துக் கொண்டே அமர்ந்திருந்தார் கலையரசன். அந்த அலைபேசியில் வீடியோ ஒன்று தொடர்ந்து பிளே ஆகிக்கொண்டே இருக்க, அதை பார்த்தவருக்கு உள்ளுக்குள் தடதடத்துக் கொண்டிருந்தது.

                          இன்பனுக்கு சொந்தமான நட்சத்திர விடுதியின் அலுவலக அறையில் அவர் அமர்ந்திருக்க, அவரின் மடியில் அதே விடுதியில் சூப்பர் வைசராக பணியாற்றும் லேகா அமர்ந்திருந்தாள்.. கலையரசன் தோளை சுற்றி கைகளை போட்டிருந்தவள் இன்னும் அவரை நெருங்க, அடுத்த பத்து நிமிடத்திற்கு தொடர்ந்து ஓடியது அந்த வீடியோ.

                            கலையரசனின் லீலைகள் இதுவரை வெளியில் யாருக்கும் தெரியவே தெரியாது என்பதை விட தெரியவிட்டதே இல்லை அவர். அவரின் மச்சான் மதுசூதனனுக்கோ, மனைவிக்கோ கூட தெரியாது.. அப்படி இருக்க, இன்பனிடம் எப்படி சிக்கினோம் என்று அதிலேயே நின்றுவிட்டார் அவர்.

                           நேற்று இரவில் இருந்தே இன்னமும் வீட்டிற்கு சென்றிருக்க வில்லை அவர். அவரின் ஸ்பின்னிங் மில்லில் தான் தவம் கிடக்கிறார். இதுவரை பத்து முறைக்கும் மேலாக மனைவி அழைத்து விட்டிருக்க, ஒரு அழைப்பை கூட ஏற்று இருக்கவில்லை.

                           இந்தவிஷயம் மாதவியின் கவனத்திற்கு சென்றால், அடுத்த நிமிடம் அவரின் வாழ்வு ஒன்றுமே இல்லாமல் ஆகிவிடும் என்பதில் துளியும் ஐயமில்லை அவருக்கு. அவர் மனைவி அவரை நடுத்தெருவில் நிறுத்தவும் தயங்கமாட்டார். இந்த ஸ்பின்னிங் மில் ஒன்று மட்டும் தான் அவரின் தந்தைவழி சொத்து கலையரசனுக்கு.

                        இதை தவிர்த்து அவர்களிடம் இருந்த நிலங்கள், கடைகள், வீடுகள், கார், நகை என்று அத்தனையும் வசந்தா தன் மகளுக்காக அள்ளிக் கொடுத்தது. கலையரசனின் இன்றைய பகட்டு வாழ்க்கைக்கு முழு முதற்காரணம் வசந்தா கொடுத்த சொத்துகள் தான். என்ன ஒன்று அத்தனையும் வசந்தா தன் மகள் பெயரில் பதிந்து இருக்க, அந்த நேரம் மாமியாரிடம் தனக்கு இருந்த செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ள, எதுவுமே பேசாமல் மௌனம் சாதித்து இருந்தார் கலையரசன்.

                   இப்போது யோசிக்கையில் அத்தனையும் தனக்கே ஆபத்தாகி இருப்பது புரிய, இன்பன் எதற்கும் தயங்கமாட்டான் என்பதும் தெரிந்தே இருக்க, அவரின் நிலை மத்தளம் தான். அதுவும் மனைவியிடம் இப்போது வழக்கை திரும்ப பெற சொன்னால், ஏன் எதற்கு என்று ஆயிரம் கேள்விகள் வரும். அத்தனைக்கும் பிறகாவது மாதவி வழக்கை திரும்ப பெறுவாரா என்றும் தெரியாது..

                        அவர் வழக்கை திரும்ப பெறவில்லை என்றால், இன்பன் தன்னை மொத்தமாக முடித்து விடுவான். என்ன செய்வது?? என்ன செய்வது??  என்று அதிலேயே அவர் மொத்தமும் ஓய்ந்து போனவராக அமர்ந்து விட்டிருக்க, அவரின் மேனேஜர் கதவை அவசரமாக தட்டிவிட்டு அந்த அறைக்குள் நுழைந்தார்.

                       கலையரசன் என்ன என்று பார்க்க, “சார்.. அம்மா வர்றாங்க சார்..” என்று பதட்டமாக கூற, சட்டென தனக்குள் கணக்கு போட்ட கலையரசன் தன் முன் இருந்த மதுபான பாட்டிலை மீண்டும் கையில் எடுத்துக் கொண்டு சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு அமர்ந்துவிட்டார்.

                      மேனேஜர் அவரை அதிர்ச்சியாக பார்க்க, “நீ மாதவியை உள்ளே போகாதீங்க மேடம்ன்னு தடுக்கணும்.. ஆனா, உன்னையும் மீறி அவ இந்த ரூம்க்கு வரணும் சேகர் பார்த்துக்கோ..” என்று மட்டும் கூறி அனுப்பி வைத்தார் கலையரசன்.

                      மேனேஜரும் அவர் சொன்னபடியே மாதவியை தடுப்பது போல் தடுக்க, அவரை பார்வையால் விலக்கி விட்டு  கணவரின் அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார் மாதவி. அங்கே கையில் மதுவுடன் கணவர் அமர்ந்திருப்பதை கண்டதும், அதிரிச்சியாகி அவர் நின்றுவிட, கலையரசன் தன் நாடகத்தை அரங்கேற்ற தொடங்கினார்.

                      மாத்வியை அங்கே எதிர்பாராதவர் போல் அவரும் உச்சக்கட்ட அதிர்ச்சியை தன் முகத்தில் காட்டியவர் “நீ ஏன் மாதும்மா இங்கே வந்த.. உன் முகத்தை பார்க்க தைரியம் இல்லாம தானே நான் இங்கேயே அடைஞ்சு கிடக்கிறேன்..” என்று புலம்ப

                      “என்ன சொல்றிங்க நீங்க.. ஏன் நீங்க இங்கே அடைஞ்சு கிடக்கணும்.. என்ன நடந்துச்சு.. ஏன் இப்படி ஆபிஸ்ல உட்கார்ந்து குடிச்சுட்டு இருக்கீங்க.. இதுல காவலுக்கு அந்த நாய் வேற..” என்று மாதவி முறைத்து நிற்க

                  “நான் என்ன செய்வேன் மாதவி… என்னால தாங்கவே முடியலையே… இந்த இன்பா இவ்ளோ கேவலமா நடந்துப்பான் என்று நான் நினைச்சு கூடபார்க்கலையே..” என்று அவர் கண்ணீரோடு கூற, மாதவியின் மனம் இன்பன் என்ற வார்த்தையிலே நின்றுவிட்டது.

                      சில நொடி அதிர்ச்சிக்கு பிறகு “இன்பா என்ன செஞ்சான்..” என்று கேள்வியாக மாதவி தன் கணவனை பார்க்க

                       “நாம கேஸை வாபஸ் வாங்கணுமாம்.. அவனுக்கு எதிரா எதையும் செய்ய கூடாதாம்.. மீறி செஞ்சா…” என்று அத்துடன் நிறுத்தி மனைவியை பார்த்தார் கலையரசன்.

                     “ஏன் முழுங்குறீங்க.. வாயத் திறந்து சொல்லுங்க.. மீறி செஞ்சா.. என்ன பண்ணிடுவானாம்..” என்று நக்கலாக கேட்டு தான் வசந்தாவின் மகள் என்பதை அந்த கணம் நிரூபித்தார் மாதவி…

                     “அவன்..அவன் ரொம்ப அதிகமா பேசிட்டான் மாதவி.. நம்ம மஞ்சரி விஷயத்தை வெளியே சொல்லிடுவேன் ன்னு கிட்டத்தட்ட மிரட்டல் தான்.. எல்லா நியூஸ் சேனல், பத்திரிக்கை ன்னு எல்லாத்துக்கும் கொடுத்திடுவேன் ன்னு மிரட்றான் என்னை..

                    “நம்ம மகள் தாங்குவாளா இதையெல்லாம்…இல்ல நானும் தான் வெளியே தலை காட்ட முடியுமா.. ஏற்கனவே இன்பன் உள்ளே வந்ததுல இருந்து தொழில்ல ஒருத்தனும் என்னை மதிக்கிறதே இல்ல.. இது இதுவும் வெளியே தெரிஞ்சுட்டா… நான் எல்லாம் உயிரோடவே இருக்க கூடாது மாதவி…” என்று கலையரசன் நீலிக்கண்ணீர் வடிக்க, அப்படியே தன் கணவரை நம்பினார் மாதவி.

                      அழுது கொண்டிருந்த அவரை நெருங்கி அவரின் கையை ஆறுதலாக தட்டி கொடுத்தவர், “இப்போ ஏன் அழறீங்க… என்ன செய்யுறது ன்னு நான் பார்த்துக்கறேன்.. நீங்க இதையெல்லாம் யோசிச்சு உங்க உடம்பை கெடுத்து வைக்காதிங்க.. வாங்க வீட்டுக்கு போகலாம்…” என்று அவரை அழைத்து கொண்டு வீடு வந்து சேர்ந்திருந்தார் மாதவி.

                     வீட்டிற்கு வந்துவிட்டாலும், மனம் முழுவதும் இன்பனின் எண்ணம் தான்.. தன் அண்ணன் மகன் தன்னை இப்படி ஒரு நிலையில் நிறுத்தி வேடிக்கை பார்ப்பான் என்று நினைக்கவே இல்லை அவர். தான் தூக்கி வளர்த்தவன் என்ற எண்ணம் அப்போதுதான் வர,இந்த நிலைக்கு காரணமான தன் மகள் மீதும் ஆத்திரமாக வந்தது..

                      இப்போது இருக்கும் நிலையில் இன்பனை எதிர்த்து எதுவுமே செய்ய முடியாது என்பது புரிய, அடுத்த இலக்காக தன் அண்ணனை நாடினார் மாதவி. மதுசூதனனை நேரில் சென்று சந்தித்தவர் தங்கள் நிலைமையை அப்படியே எடுத்து கூறி இன்பன் செயலுக்கு நியாயம் கேட்க, மகன் இந்த அளவுக்கு கீழிறங்குவான் என்று எதிர்பார்த்திருக்கவில்லை மதுசூதனன்.

                          

                       அவர் சிந்தனையில் அப்படியே அமர்ந்துவிட, மாதவி அவரை அப்படியே விடுவதாக இல்லை போலும்.. “எனக்கு பதில் சொல்லுங்க அண்ணா… இன்பா இப்படி செய்யலாமா..” என்று கண்ணீருடன் கேட்க

                        “என்ன என்ன செய்ய சொல்ற மாதவி.. இன்பா நான் சொல்லி கேட்கிற நிலைமையில இல்ல.. அதோட உன் புருஷன் அவன்கிட்டே ஏதோ வம்பிழுத்து வச்சிருக்கான்.. அதுக்குதான் அவனும் இப்படி பண்ணிட்டு இருக்கான்.. நீ மட்டும் என்ன.. உன் புருஷன் பேச்சை கேட்டுதான எனக்கெதிரா கேஸ் போட்ட.. இப்போ இன்பன் உங்களை ஒரே அடியா அடிக்கவும் நீ என்னை தேடி வந்திருக்க… இல்லேன்னா நான் உன் நியாபகத்துக்கே வந்திருக்க மாட்டேனே…”

                       “எனக்கு அதெல்லாம் தெரியாது அண்ணா.. நீ எனக்கு ஒரு வழி சொல்லு.. எனக்கு சொந்தமான சொத்தை கேட்டுதான நான் கேஸ் போட்டேன்.. அதுல தப்பு எதுவும் இருக்கறதா எனக்கு தெரியல.. அப்படி நான் கேஸ் போடக்கூடாது என்றால் என் பங்கை எனக்கு கொடுத்திடுங்க… நான் கேஸை வாபஸ் வாங்கிடறேன்..” என்று மாதவி அண்ணனிடம் வியாபாரம் பேச

                       “என்கிட்டே எதுவுமே இல்ல மாதவி… எல்லாமே இன்பன் சொல்றபடி தான்.. நீ எதுவா இருந்தாலும் அவன்கிட்டேயே பேசிக்கோ..” என்று அவர் முடிக்க

                          “ஏன் உன்கிட்ட எதுவும் இல்ல.. பிசினஸ் இருக்கு இல்ல.. உன்னோட பேர்ல இருக்க ஷேர்ஸ் என் பேர்ல மாத்திக் கொடுண்ணா.. நான் அதோட அவன் வழிக்கே வரமாட்டேன்…” என்று மாதவி வழி கூற

                           மதுசூதனனுக்கு பாடம் கற்றதை போல் இருந்தது… தன் தங்கையின் உண்மையான முகத்தை வலியுடன் உள்வாங்கி கொண்டிருந்தார் அவர். இன்பன் தன் பெயரில் இருந்த பங்குகளை விடாபிடியாக எழுதி வாங்கி கொண்டதற்கான காரணமும் இப்போது புரிய, முழுதாக வெறுத்துவிட்டார்.

                        “இந்த நிமிஷம் என் பேர்ல எந்த பங்கும் இல்ல.. எல்லாமே என் மகன் பேருக்கு எழுதி கொடுத்துட்டேன்… நீ என்கிட்டே பேசிட்டு இருக்கறது வேஸ்ட்…” என்று அவர் முடித்துவிட, மொத்தமாக அதிர்ந்து போனார் மாதவி.

                       அத்தனையிலும் முக்கிய பங்குதாரர் மதுசூதனன் தான்.. அவர் அத்தனையும் மகனுக்கு கொடுத்து விட்டார் என்றால், அத்தனையும் இன்பனின் கைக்கு சென்று விட்டதா?? என்று அதிர்ச்சியில் உறைந்து விட்டவருக்கு வார்த்தையே வரவில்லை..

                        தன்னை சுதாரித்துக் கொண்டவர் “நீ எப்படி இப்படி செய்யலாம்???” என்று மதுசூதனனிடம் கேள்வி கேட்க

                        “நீ யார் என்னை கேள்வி கேட்க.. என்னோட சொத்து.. நான் என் மகனுக்கு கொடுக்கறேன்.. இதுல நான் யாரை கேட்கணும்.” என்று பொட்டில் அறைந்தது போல் அவர் கூறிவிட, அவமானமாக  போனது மாதவிக்கு. அத்தனையும் அவர் மீது திருப்பியவர் “திட்டம் போட்டு என்னை ஒண்ணுமில்லாம செஞ்சிட்டிங்க இல்ல… நீங்க எல்லாம் நல்லாவே இருக்கமாட்டிங்க” என்று மனதார சாபம் கொடுத்துவிட்டு சென்று விட, தன் இருக்கையில் சோர்ந்து அமர்ந்துவிட்டார் மதுசூதனன்.

                     அவருக்கு உடனே மகனை பார்க்கவேண்டும் போல் இருக்க, மகன் எங்கே இருக்கிறான் என்று விசாரித்துக் கொண்டவர் நேராக இன்பனின் வீட்டிற்கு வந்து சேர, அங்கு நடு ஹாலில், தரையில் அமர்ந்து கொண்டு தன் கையில் இருந்த கிண்ணத்தில் இருந்த ஐஸ்கிரீம் மொத்தத்தையும் கையிலும், உடம் முழுவதும் பூசிக் கொண்டு இனியன் அமர்ந்திருக்க, அதுவரை இருந்த மொத்த கவலையும் பறந்து போனது மதுசூதனனுக்கு.

                 தன் பேரனை பார்த்துக் கொண்டே அவர் நின்றுவிட, அவருக்கு பக்கவாட்டில் வீட்டின் உள்பக்கம் நின்று மகனை முறைத்துக் கொண்டிருந்தாள் சிபி.. அப்போது தான் கழுவி துடைத்து உடையை மாற்றி விட்டிருக்க, அவன் நின்ற கோலத்தை பார்த்தவளுக்கு கோபம் தலைக்கேறியது..

                    இனியன் யாரையும் கண்டு கொள்ளாமல் தந்தை நீட்டி இருந்த ஐஸ்கிரீமை சுவைத்து கொண்டிருக்க, அதே கோபத்தோடு அவனை நெருங்கியவள் அவன் முதுகில் பொத்தென்று ஒரு அடி வைக்க, மதுசூதனனுக்கு சட்டென ஏதோ ஒரு உரிமை உணர்வு..

                  “ஏம்மா.. ஏன் குழந்தையை அடிக்கிற..என்ன தெரியும் அவனுக்கு..” என்று அதட்டிவிட்டார் அவளை.

                சிபி விழியெடுக்காமல் அவரை பயந்து போய் பார்க்க, வேகமாக வீட்டிற்குள் வந்தவர் தன் பேரனை கையில் தூக்கி கொண்டார். அவன் கையில் இருந்த அந்த ஐஸ்கிரீம் அவர் மீது ஒட்டிக் கொண்டதை எல்லாம் சட்டையே செய்யவில்லை அவர்.

                    பேரனை ஒரு கையில் பிடித்துக் கொண்ட பிறகே மருமகளை பார்த்தவர் “சின்ன குழந்தை தானேம்மா… நீ எதுக்கு அடிக்கிற ன்னு கூட புரியாது அவனுக்கு… டிரஸ் அழுக்கான வேற மாத்திட்டு போ, அதுக்காக குழந்தையை அடிக்கணுமா..” என்று கேட்டவர் பேரனை தூக்கி கொண்டு வெளியே நடந்துவிட, அவரையே பார்த்துக் கொண்டு நின்றுவிட்டாள் மருமகள்..

                 இன்பன் மீண்டும் அவள் வாழ்வில் வந்த நாள் முதலாக ஒருமுறை கூட அவளை ஏறெடுத்தும் பார்த்து இராத மாமனார், இன்று தன் மகனை கையில் தூக்கி கொண்டு, தன்னை உரிமையாக அதட்டிவிட்டு சென்றால் அவளும்தான் என்ன செய்வாள்…

                    அவள் அப்படியே நிற்க, இன்பன் குளித்து முடித்து அறையிலிருந்து வெளியே வந்தவன் ஹாலில் நின்றிருந்த சிபியை பார்த்து “ஹேய் ரசி.. இனியன் எங்கே..” என்று அவள் தோளை தொட

                   “மாமா.. மாமா தூக்கிட்டு போய்ட்டாங்க..” என்றவள் வாசலையே பார்க்க, இன்பன் அவள் சொன்னதை கேட்டு சற்றே ஆச்சரியமாக வாசலுக்கு வர, அங்கே அந்த வீட்டின் போர்டிகோவுக்கு அருகில் இருந்த தோட்டத்தில் பேரனை கையில் வைத்துக் கொண்டு நின்றிருந்தார் மதுசூதனன். முகத்தில் அத்தனை மகிழ்ச்சி..

                   இன்பனுக்கும் தந்தையை அங்கே பார்த்ததில் மகிழ்ச்சி தான்.. அதே மகிழ்வுடன் அவரை நெருங்கியவன் பின்னால் இருந்து அவரை அணைத்து கொண்டான். மது மகனை உணர்ந்தாலும், அவனிடம் எதுவும் பேசாமல் மீண்டும் வீட்டிற்குள் சென்று சோஃபாவில் அமர்ந்துவிட, சிபி அவர் தலையை கண்டதுமே தயாரித்த காஃபியை அவரிடம் கொண்டு வந்து கொடுக்க, அப்போது தான் அறையில் உறங்கி கொண்டிருந்த அபிராமி விழித்து எழுந்து வந்தார்.

                    தன் கணவர் மருமகளின் கையில் காஃபி வாங்கி குடிப்பதை அதிசயமாக பார்த்துக் கொண்டே அவர் வந்து தன் மகனின் அருகே நிற்க, சிபி மீண்டும் உள்ளே செல்ல திரும்பினாள். மதுசூதனன் “கொஞ்சம் இரும்மா..” என்று அவளை நிறுத்த

                    தன்னிடமா இவர் பேசுகிறார்?? என்று மீண்டும் அதிர்ச்சியுடன் தான் சிபி பார்த்தது.. மதுசூதனன் அவள் அதிர்ச்சியை அதிகரிக்கும் விதமாக, “இங்கே உட்காரு.” என்று தன்னெதிரில் இருந்த இருக்கையை காட்ட, சிபி அனிச்சை செயலாக இன்பனை பார்க்க, “அவனை பார்க்காதம்மா.. இங்கே உட்காரு..” என்று அவளை  அமர வைத்தவர்

                       “உனக்கு நானும் என் குடும்பமும் செஞ்சது மன்னிக்க முடியாத பாவம் தான்.. அதை எங்கேயும் நான் மறுத்ததே இல்ல… அதுக்காக உன்கிட்ட மன்னிப்பு கேட்க சொன்னாலும்..” என்று அவர் பேசும்போதே இடையிட்டவள்

                     “எனக்கு பழசை பேச விருப்பமே இல்லை மாமா.. நான் எல்லாத்தையும் மறந்துட்டேன் என்னை பொறுத்தவரைக்கும்… அவரோட இருக்க இந்த நிமிஷம் போதும்.. நீங்களும் அதை எல்லாம் மறந்திடுங்க… அதை பத்தி பேச வேண்டாம்..” என்றவள் எழுந்து கொள்ள பார்க்க,

                       “இரும்மா…” என்று அவளை இருத்தியவர் “நீ நினைக்கிற மாதிரி உன் புருஷன் நினைக்கலையே மா.. இன்னமும் அந்த கலையரசனை பழிவாங்க துடிச்சுட்டு இருக்கானே..அதைக்கூட விட்டுட்டேன் நான்.. என்னோட சொத்து மொத்தத்தையும் இவன் கேட்டப்போ கூட, ஏன் எதுக்கு என்று ஒரு வார்த்தை கூட கேட்காமல் நான் இவன் பேருக்கு எல்லாத்தையும் மாத்தி கொடுத்துட்டேனே..”

                       “மாதவி சொத்துல பங்கு கேட்டதுமே கொடுத்துட்டு போய்டலாம் ன்னு சொன்னேன்.. என் பேச்சை யாருமே கேட்கல.. சரி அதோட முடிஞ்சுது.. கோர்ட்ல பேசிப்போம் என்று நினைச்சா, அவளை மிரட்டிட்டு வந்திருக்கான் உன் புருஷன்..

                      “அதுவும் எப்படி.. கேட்கவே காது கூசுற மாதிரி அவ பொண்ணோட ஒழுக்கத்தை வச்சு அவளை மிரட்டிட்டு வந்திருக்கான்.. இது எல்லாம் இவன் தகுதிக்கு சரியா… நம்ம நிலையை விட்டு நாமளும் இந்த அளவுக்கு தரம் இறங்கி போகணுமா???” என்றுஅவர் ஆற்றாமையாக மருமகளிடம் நியாயம் கேட்க

                      சிபி யோசிக்கவே இல்லை.. அவர் முடித்த அடுத்த நிமிடம் “நீங்க எதையோ தப்பா புரிஞ்சிட்டு இருக்கீங்க மாமா.. அவர் நிச்சயம் இப்படி பண்ணி இருக்க மாட்டார்.. நீங்க அவர்கிட்டேயே பொறுமையா கேட்டு பாருங்களேன்…” என்றவள் தன் கணவனை பார்க்க, தன் மனைவியை பெருமிதமாய் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் இன்பன்.

                                        அவன் பார்வையை தாங்கி கொள்ள முடியாமல் “நீங்க பேசிட்டு இருங்க.” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டாள் சிபி. அவள் அவளுடைய அறைக்கு சென்று அமர்ந்துவிட, இனபனின் பார்வை இப்போதும் மூச்சடைத்தது.

                 கீழே தன் தந்தையின் முன் நின்றிருந்தவனோ தன் தந்தையை மிதப்பாக ஒரு பார்வை பார்த்து வைத்தான்… அவன் பார்வையை சரியாக புரிந்து கொண்டவர் “வேற என்னதான்டா பண்ணி வச்ச…” என்று கத்த

                 “உங்க தங்கச்சி என்ன சொன்னாங்க..” என்று நிதானமாகவே கேட்டான் இன்பன்.

                 “அதுதான் சொன்னேனே.. நீ மஞ்சரியை வச்சு மிரட்டுறதா சொல்லி, அவ வந்து அவ பங்குக்கு கத்திட்டு போனா… “

               “நான் கலையரசனை தான் மிரட்டினேன்.. அதுவும் மஞ்சரியை எல்லாம் இழுக்கவே இல்ல… நான் அந்தாளை லாக் பண்ணேன் .. அவர் உங்க தங்கச்சி எதை சொன்னா அடங்குவாங்களோ, அதை சொல்லி இருக்காரு…இதுக்கு நான் எதுவும்செய்ய முடியாது..” என்று விட்டேற்றியாக வந்தது பதில்..

                     “அப்படி என்னதான்டா சொல்லி வச்ச அவன்கிட்ட..” என்று அவர் கேட்டுவைக்க

                    “அதெல்லாம் உங்ககிட்ட சொல்ல முடியாது.. நான் நினைச்சபடி எல்லாம் முடியட்டும்.. மொத்தமா சொல்றேன்…” என்று அவன் முடித்துக் கொள்ள

                    “இந்த அளவுக்கு அவனை ஒரேடியா முடிக்க நினைக்கிற அளவுக்கு என்னடா பண்ணான் அவன்??? என்னதான் பஞ்சாயத்து உங்களுக்குள்ள..”

                    “அவன் நினைச்சதை சரியா நடத்தி முடிச்சு இருந்தா, இன்னிக்கு உங்கமுன்னாடி இப்படி நின்று பேசிட்டு இருக்க நான் இருந்திருக்க மாட்டேன்.. “என்று நிதானமாக கூறி முடித்தான் அவன்.

                   

                      

              

                 

Advertisement