Advertisement

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 25

                                          அந்த ஐந்து நட்சத்திர விடுதியில் இருந்த தன் அலுவலக அறையில் அமர்ந்திருந்தான் இன்பன். எதிரில் அவன் தந்தை அமர்ந்திருக்க, அவன் நீட்டி இருந்த காகிதங்களில் ஒன்றுமே  பேசாமல் கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தார்.

                             மகனின் திட்டம் நிச்சயமாக பெரியது என்பது வரை புரிய, என்ன செய்து வைக்க போகிறானோ என்று உள்ளுக்குள் பதைத்துக் கொண்டே தான் இருந்தது. கலையரசனின் நடவடிக்கைகளும் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லாததால் யாருக்கு பேசுவது என்று புரியாமல் தடுமாறி தான் நின்றார் மனிதர்.

                      அவர் கையெழுத்து இட்டு முடிக்கும் நேரம் அவரின் மனைவி அந்த அறைக்குள் வர, அவரின் பின்னால் ஜெகன், லாரன்ஸ்.. மதுசூதனன் மகனை பார்க்க, அவன் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமல், அபிராமி மகனை நெருங்கியவர் “எங்கே கையெழுத்து போடணும் இன்பா..” என்று கேட்க

                        அவனது லாயர் கொடுத்திருந்த மற்றொரு கதை காகிதத்தை மகன் நீட்டவும், படித்து கூட பார்க்காமல் கையெழுத்திட்டு விட்டு கிளம்பினார் அவர். இப்போதெல்லாம் காலையில் மதுசூதனன் கிளம்பிய பிறகு அவர் கால்கள் வீட்டில் நிற்பதே இல்லை.

                      கணவர் கிளம்பிய அடுத்த அரைமணி நேரத்தில் இன்பனின் வீட்டுக்கு வந்துவிடுவார் அபிராமி. நாள் முழுவதும் இனியனுடன் கழிந்தாலும், வந்தவுடன் காஃபி அல்லது ஜூஸ், மதியம் நேரத்திற்கு உணவு, மாலை டீ, ஸ்னாக்ஸ் என்று மருமகள் கவனித்து கொள்ள, அதற்கு மேல் என்ன வேண்டும் அவருக்கு…

                      இப்போதும் நேரே மகன் வீட்டிற்கு தான் சென்று கொண்டிருந்தார் அவர். மது கையெழுத்திட்டு தன் கட்டுமான நிறுவனத்திற்கு வந்தவர், அங்கிருந்த வேலைகளை பார்த்துக் கொண்டு அமர்ந்துவிட, அவர் வந்து சரியாக அரைமணி நேரம் கழித்து, அவரை சந்திக்க வந்திருந்தார் கலையரசன்.

                     வந்தவரின் உடல் மொழியில் இருந்தே அவர் நல்லவிதமாக பேசப்போவதில்லை என்று புரிந்து போனது மதுசூதனனுக்கு. இருந்தாலும் தன்னிலையில் இருந்து குறையாமல் “வாங்க  மாப்பிளை..” என்று கூறி இருந்தார்.

                    கலையரசன் அவரை ஏளனமாக பார்த்தவர் “என்ன மச்சான்.. ஓடிப்போனவளை திரும்ப இழுத்துட்டு வந்து குடும்பம் நடத்த ஆரம்பிச்சிருக்கான் போல.. .உங்க மகன்.. “என்று நக்கலாக கேட்க

                      ‘ஓடிப்போனவ ன்னு எப்படி சொல்ல முடியும் கலை… துரத்தி விட்டதே நாமதான் இல்லையா.. கேட்பார் பேச்சை கேட்டு, கையில கிடைச்ச தங்கத்தை ஒருமுறை தொலைச்சிட்டேன்… இப்போ என் மகன் கண்டுபிடிச்சு கூட்டிட்டு வந்து இருக்கான்..”

                      “தங்கமா.. எப்போ இருந்து… அவ கையில இருக்க பிள்ளை உன் மகனுக்கு தான்..” என்று முடிக்கும் முன்பாகவே

                    “போதும் கலை…” என்று ஒற்றை விரல் நீட்டி மிரட்டி இருந்தார் மது…

                   “என் மருமகளை பத்தி பேச உனக்கு தகுதியே கிடையாது… அவ எங்க வீட்டு பொண்ணு… அதோட செத்தாலும் அவ இன்பனை தவிர வேற யோசிக்கமாட்டா… சில பேர் மாதிரி…” என்று எதுவோ சொல்ல வந்து நிறுத்திக் கொண்டவர்

                      “தங்கச்சி புருஷனா போகவும், உன்னை இதோட விடறேன்.. இனி என் குடும்பத்தை பத்தி ஒரு வார்த்தை கூட நீ பேச வேண்டாம்.. கிளம்பு..” என்று விட்டார். மதுசூதனன் கத்தவோ, சத்தம் போடவோ எதுவுமே செய்யவில்லை. ஆனால், அவரின் முகம் அத்தனை உக்கிரமாக இருந்தது.

                      இதுவரை மதுவின் இந்த கோப முகத்தை கண்டதே இல்லை கலையரசன். எப்போதுமே மாப்பிளை மாப்பிளை என்று தாங்கி மட்டுமே பார்த்திருக்கிறார்.. அப்படி இருக்க, இப்போது மதுவும் இப்படி பேசி வைக்க, தன்னை அவமானப்படுத்தியதாகவே தோன்றியது கலையரசனுக்கு.

                           “பார்த்துக்கறேண்டா உங்களை எல்லாம்..” என்று வன்மத்துடன் மதுவை முறைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறி இருந்தார் அவர். அவர் மனம் முழுவதும் இன்பனே நிறைந்திருக்க, அவனை முழுதாக ஒழித்து கட்ட, திட்டம் தீட்டிக் கொண்டிருந்தது அவர் மூளை.

                             “உன்னை விட்டு வச்சது தாண்டா தப்பு.. உன்னை முடிச்சுட்டு உன் அப்பனை கவனிக்கிறேன்..” என்று குமுறிக் கொண்டவர் தன் அலைபேசியில் இருந்து சில எண்களுக்கு அழைத்து பேசிக் கொண்டிருந்தார். அதன்பிறகே அவர் வீட்டுக்கு வர, மனைவி மட்டுமே இருந்தார் வீட்டில்.

                           மாதவி “என்னங்க.. அண்ணன் என்ன சொல்றாரு..” என்று கேட்க

                         “என்ன சொல்வான்.. அவனும் மகனோட சேர்ந்து, நம்மை ஒழிக்க திட்டம் போட்டுட்டு இருக்கான்.. இதுல அந்த ஒண்ணுமில்லாதவளை வேற திரும்ப கூட்டிட்டு வந்துட்டானுங்க.. ” என்று அவர் புலம்ப

                       மாதவி சட்டென பரபரப்பானார்..” என்ன சொல்றிங்க.. யாரு.. யாரை கூட்டிட்டு வந்திருக்காங்க..” என்று அவர் கணவரை பார்க்க

                       “இண்பனோட பொண்டாட்டியை கூட்டிட்டு வந்திருக்கான்… கூடவே ஒரு குட்டி குரங்கு வேற… எவனுக்கு பெத்தாளோ..” என்று அவர் தன் சாக்கடை புத்தியை காட்டிவிட, மாதவி மனம் நொந்து போனார் இந்த செய்தியில்.

                      என்றைக்கு இருந்தாலும், அண்ணன் வீட்டுக்கு தன் மகளை மருமகளாக அனுப்பிவிட வேண்டும் என்ற திட்டத்துடன் இருந்தவர் ஆகிற்றே.. அன்று அண்ணனின் வீட்டில் நடந்த சண்டைக்கு பிறகும் கூட அவருக்கு நம்பிக்கை இருந்தது.

                      அவரின் நம்பிக்கைக்கு ஒரு காரணம் அண்ணன் என்றால், அடுத்த காரணம் இன்பனின் உடல்நிலை.. என் மகளை விட்டால் இவனை யார் கட்டுவா ?? என்ற மிதப்பில் அவர் இருந்திருக்க, இன்று  உடமைப்பட்டவள் வந்து சேர்ந்துவிட்டாள் என்ற செய்தி சகிக்கவே இல்லை அவருக்கு.

                        நேற்றுவரை கணவரின் பேச்சுக்கு செவி கொடுக்காமல் இருந்தவர், இன்று தானாகவே தன் அண்ணனை எதிர்க்க துணிந்து விட்டார். அடுத்த அரைமணி நேரத்தில் அவர் அவரது வழக்கறிஞரிடம் பேசி வைக்க, அதன் விளைவு அடுத்த இரண்டாவது நாள் மதுசூதனனுக்கு தெரிய வந்தது.

                       அவர் எதிர்பார்த்தது போலவே வக்கீல் நோட்டீஸ் வ்வந்திருந்தது அவரின் அன்பு தங்கையிடம் இருந்து. இன்பனை அழைத்து அவர் விஷயத்தை சொல்ல, இன்பன் “அப்படியா..” என்பது போல கேட்டுக் கொண்டான் அவ்வளவே… அதற்கு மேல் எந்த உணர்ச்சியும் காட்டவில்லை அவன்.

                      அந்த நோட்டீஸ் கையில் கிடைத்த அடுத்த நாள், கலையரசன் பெயரில் பண மோசடி, பொய்கணக்கு காட்டி மற்ற பங்குதாரர்களை ஏமாற்றியது, கார்மெண்ட்ஸ் கணக்குகளில் கையாடல் செய்தது என்று வகைவகையாக ஆதாரத்துடன் புகார் கொடுத்திருந்தான் இன்பன்.

                      அவனுக்கு தெரிந்த சில காவல் துறை அதிகாரிகளிடமும் அவன் ஏற்கனவே பேசி வைத்திருக்க, கலையரசனின் மீதான புகார் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்திருக்க, அவரின் வழக்கறிஞர் உதவியுடன் அன்று மாலை ஜாமினில் வெளியே வந்திருந்தார் கலையரசன்.

                       ஆனால், நிலைமையின் தீவிரம் புரிந்தது அவருக்கு. இதோடு விட்டுவிட மாட்டான் இன்பன் என்று நிச்சயமாக உணர்ந்தார் கலையரசன். அதுவும் அவன் சேகரித்து வைத்திருந்த ஆதாரங்களை தான் அடியோடு அழித்து விட்ட பிறகும், இத்தனை தெளிவாக புகார் கொடுத்திருக்கிறான் என்றால், நிச்சயம் அவன் கை வலுவாகத்தான் இருக்கும் என்று புரிந்தது அவருக்கு.

                    அதே யோசனையிலேயே அவனின் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என்று அவர் யோசித்துக் கொண்டிருக்க, இன்பன் தன் அடுத்த அடிக்கான வேலையை தொடங்கி இருந்தான். அவன் எதிர்பார்த்தது போலவே, அடுத்த நாள் கலையரசன் தனக்கு சொந்தமான ஸ்பின்னிங் மில்லுக்கு செல்லும் வழியில் அவருக்கு பின்னால் வந்த ஆம்னி வேன் அவரின் காரை லேசாக இடித்ததில் உயிருக்கு எதுவும் சேதாரம் இல்லாமல் தப்பித்து இருந்தார் அவர்.

                      ஆனாலும், இன்பன் திருப்தியாகும் அளவிற்கு ஆங்காங்கே கீறியும், கிழித்தும் வைத்திருந்தான் பழனி… இடது கையில் லேசான எலும்பு முறிவும் இருக்க, இன்பனின் மனம் அப்போதும் சமாதானம் அடையவே இல்லை.. கலையரசனுக்கு தெளிவாக தெரியும்.. இது அத்தனையும் இன்பனின் கைங்கர்யம் தான் என்று..

                       ஆனால், எந்த வழியிலும் நிரூபிக்க முடியாதே.. அதோடு பொத்தாம் பொதுவாக, இன்பனை கைகாட்டி விடவும் முடியாது என்பதும் புரிந்து இருக்க, என்ன செய்வது என்று அவர் திணறிக் கொண்டிருந்த நேரத்தில் தான், இன்பனே அவருக்கு அழைத்தது.. அதுவும் அவன் எண்ணில் இல்லாமல் வேறு எண்ணில் இருந்து அழைத்திருக்க, அவர் அழைப்பை எடுக்கவும்

                        “என்ன மாமா… அடி ரொம்ப பலமோ…” என்று தான் ஆரம்பித்தான் அவன்..

                        கலை “டேய்.. என்னடா நக்கலா.. என்னை சீண்டி பார்க்கிறாயா.. உன் அப்பனுக்கு பிள்ளையே இல்லாம பண்றேண்டா..” என்று அவர் அப்போதும் ஆத்திரத்தோடு கத்த

                       “இப்போ நீ உயிரோட இருக்கிறதே.. நான் உன்னை விட்டு வச்சதால தான்… இதுல நீ என்னை இல்லாம பண்ணுவியா… அடங்கவே மாட்ட நீ…இன்னொரு கையும், வாயும் நல்லா இருக்கே அந்த திமிரா ??” என்றவன்

                  “ஒன்னும் பிரச்சனை இல்ல.. பழனி கிட்ட சொல்றேன்,..நாளைக்கே  முடிச்சிடுவான்…” என்று அமர்த்தலாக இன்பன் கூற

                   “என்னதான்டா வேணும் உனக்கு..” என்று வழிக்கு வந்தார் அவர்..

                    “என் அப்பா சொத்துல பங்கு கேட்ட போல..”

                   “ஹான்.. என் பொண்டாட்டியும் அந்த வீட்ல பொறந்தவ தான்… அவளுக்கு உரிமையானத அவ கேட்கிறா… இதுல நான் என்ன செய்ய..”

                     “உரிமையில தான் எங்க பணத்த வச்சு எங்களுக்கே ஆப்பு ரெடி பண்ணியா…நான் போலீஸ்ல கொடுத்து இருக்க கம்பிளைன்ட் எல்லாம் ஒண்ணுமே இல்ல.. அதைவிடவும் மேல சில விஷயங்கள் இருக்கு… உன் பொண்டாட்டி எங்க சொத்தை பத்தி இதுக்குமேல மூச்சே விடக்கூடாது…

                      “அவங்க சொத்தை பத்தி பேச பேச, உனக்கு அடி விழுந்துட்டே இருக்கும்… நீ எழுந்துக்கவே முடியாத அளவுக்கு அடிப்பேன்…”

                     “உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோடா.. என்னால எதுவும் செய்ய முடியாது.. என் பொண்டாட்டிக்கு அவ அப்பா சொத்து கிடைச்ச ஆகணும்..” என்றார் கலை.அந்த இடத்தில அவரின் உயிர் பயத்தையும் தாண்டி, அவரின் பணத்தாசை அவரை பேச வைத்தது..

                     “என்ன வேணாலும் செய்யவா… இப்போதைக்கு ஒரு சின்ன செய்கை… தாங்குவியா பார்க்கலாம்… உன் மொபைல் வாட்சப்பை போய் பாரு.. ஓடு..” என்றவன் அழைப்பை துண்டித்துவிட, அனிச்சையாக தன் மொபைலை இயக்கி பார்த்த கலையரசன் சகலமும் ஒடுங்கி போய் தான் நின்றுவிட்டார் ஒருநிமிடம்.

                   மீண்டும் அவரே இன்பனின் எண்ணுக்கு அழைக்க, எடுக்கவே இல்லை அவன். பலமுறை அவர் அழைத்தும் கூட அழைப்பை ஏற்காதவன் தன் மகனுடன் சோஃபாவின் பின்னால் ஒளிந்து விளையாடி, ஓடிக் கொண்டு இருக்க, “ப்பா..பா.. பிடி.. இனியா பிடி..” என்று சிரிப்புடன் ஓடிக் கொண்டிருந்தான் மகன்.

                  சிபி அப்போது தான் அங்கு வந்தவள் “மொபைல் ரிங்காகுதுங்க..” என்று இன்பனிடம் கூற

                 “தெரியும் ரசி.. அடிக்கட்டும் விடு… ஒன்னும் அவசரமில்லை..” என்றவன் அம்மகனை பிடிப்பதிலேயே கவனமாக இருந்தான். இப்போது மகன் சிபியின் கால்களை கட்டிக் கொண்டு அவளின் கால்களுக்கு இடையில் முகம் புதைத்து கொள்ள, சட்டென தூறலாக சில நினைவுகள் இன்பனின் மனதில்…

                   அவள் மடியில் முகத்தை புதைத்துக் கொள்வது இன்பனின் பழக்கம்.. இப்போது மகனும் அதையே செய்ய, அந்த கணம் ஆசை மகன், குட்டி வில்லனாக தான் தெரிந்தான் இன்பனுக்கு. அவன் மகனை பொறாமையாக பார்த்து நின்றுவிட, அவன் பார்வையில் சிரித்துவிட்ட சிபி, இனியனை கைகளில் தூக்கி கொண்டாள்.

                    இன்பன் ஒருமுறை இருவரையும் சேர்த்து அணைத்து விடுவிக்க, கீழே இருந்து வெளியே வந்த அபிராமியின் கண்களில் அந்த காட்சி பட்டுவிட, கண்கள் கலங்க மகனின் நல்வாழ்வுக்காக பிரார்தித்துக் கொண்டார் அவர்.

Advertisement