Advertisement

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 24

                               வெகு நாட்களுக்கு பிறகான அழகான விடியல் சிபியின் வாழ்வில். லேசாக அசைந்து, திரும்பக் கூட முடியாத அளவுக்கு இறுக்கமாக அவளை அணைத்திருந்தான் இன்பன்.. இது போன்ற காட்சிகள் எல்லாம் வெறும் கனவு மட்டும்தான் இனி என்று நினைத்தே தன்னையே ஒடுக்கி கொண்ட வாழ்வு அவளுடையது..

                            ஆனால், அத்தனையும் ஒரே நாளில் மாறிப் போயிருந்தது அவன் அருகாமையில். மகனை மட்டுமே ஆதாரமாக இதுநாள் வரை பற்றிக் கொண்டிருந்தவள் அவனையும் மறந்து இன்று தானே குழந்தையாக தன்னவனுடன் ஒண்டிக் கொண்டு படுத்திருக்க, மகனுக்கு பொறுக்கவில்லை.

                                 அவன் விழித்து எழுந்ததை பார்த்தாலும், அசையவே முடியவில்லை சிபியால். அவள் இன்பனுக்கு இந்த பக்கம் இருக்க, அவனது மறுபக்கம் இனியன் இருந்தான். சிபி இன்பனின் கையை மெல்ல எடுத்துவிட பார்க்க, அதற்குள் இனியன் இன்பனின் வாயிலேயே ஒரு அடி வைத்திருந்தான்.

                                இன்னும் சிபியையும் அங்கே பார்த்துவிட, தூக்க சொல்லி கையை நீட்டிக் கொண்டு, கண்ணீரே வராமல் ஒரு அழுகை வேறு. இன்பன் மகனின் சத்தத்தில் விழித்து எழ, சிபி சட்டென அவனிடம் இருந்து விலகி  மகனை கைகளில் தூக்கி கொண்டாள்.

                                அதன்பிறகே அவன் அழுகை நிற்க, இன்பன் தன் இரு குழந்தைகளையும் வேடிக்கை பார்த்தே அமர்ந்திருந்தான்.. சிபி இனியனை கையில் தூக்கி வைத்துக் கொண்டே எழுந்து கொள்ள, இன்பன் குழந்தையை தான் வாங்கி கொண்டவன், அவளின் கன்னத்தை மென்மையாக தீண்டி “குட் மார்னிங்” என, இனியன் தந்தையை போலவே அவளின் மறுகன்னத்தை ஈரமாக்கினான். கூடவே “குத் மாநி..” வேறு..

                             சிபி கண்களில் நீரும், உதட்டில் புன்னகையுமாக தன் வாழ்வின் அர்த்தமான அந்த இரண்டு ஆண் மகன்களையும் பார்த்து நிற்க, “ஹேய் குட்டிப்பொண்ணு.. சைட் அடிச்சது போதும்.. காஃபி வேணும்..” என்றான் இன்பன்.

                              அவனுக்கு பதில் சொல்லாமல் வெட்கம் சுமந்த முகத்துடனே அவள் கீழே வர, ஜாகிங் முடித்து உள்ளே நுழைந்து கொண்டிருந்தனர் ஜெகனும், லாரன்ஸும்..சிபி அவர்களை பார்த்து சிரித்துவிட்டு சமையல் அறைக்குள் நுழைந்துவிட்டாள். அவள் காஃபி போட்டு எடுத்துக் கொண்டு வெளியே வருவதற்குள் நான்கு பேரும் ஹாலில் இருந்த சோஃபாவில் ஆஜராகி விட்டிருக்க,  இனியனிடம் அவன் சிப்பரை கொடுத்தவள் மற்றவர்களிடம் காஃபியை நீட்டி இருந்தாள்.

                              இன்பன் தன் காஃபியை குடித்து முடித்தவன் “ரசி.. கிளம்பு.. ஜாகிங் போவோம்..” என்று அவளை அழைக்க, இப்போது ஜெகன் விசித்திரமாக பார்த்தான் அவனை.

                               சிபியும் இன்பனை பார்க்க, தலையசைத்து “டிரஸ் மாத்திட்டு கிளம்பு..” என்றான் மீண்டும்…

                            சிபி தான் கட்டி இருந்த சேலையை பார்த்தவள் எதுவும் பேசாமல் தன் அறைக்கு வந்துவிட்டாள். சேலையை மாற்றிக் கொண்டு ஒரு காட்டன் டாப்பும், பட்டியாலா பேண்டும் அணிந்து கொண்டவள் கண்ணாடி முன் நின்று தன் தலையை ஒதுங்க வைக்கும் நேரம், அவள் பின்னால் வந்து நின்றான் இன்பன். அவளின் கவனம் இப்போது அவனிடம் பதிய, அவனின் கரங்களும் சற்று அழுத்தமாகவே பதிந்தது அவள் இடையில்.

                  சிபி அவள் செய்யும் கேக்கை போலவே உருகி நிற்க, “கொஞ்சம் கூட எக்ஸ்ட்ரா சதையே  இல்ல எங்கேயும்.. இனியனோட அம்மா ன்னு சத்தியம் பண்ணாலும் நம்ப மாட்டாங்க போல.. “என்றவன் கண்ணாடி வழியே தங்களின் பொருத்தத்தை ஆராய

                    அவனும் அவளுக்கு சற்றும் குறையாமல் தான் இருந்தான். இடையில் லண்டன் வாசம் வேறு. நிறமும் சற்று கூடி இருக்க, கண்களில் பழைய குறும்பும், புத்துணர்வும் போட்டி போட நின்று கொண்டிருந்தவனும் சிபியை களவாடிக் கொண்டு தான் இருந்தான்.

                சிபி மௌனமாக அவன் பிடியில் இருந்து விலகப் பார்க்க, அவளை வயிற்றில் கைகொடுத்து தன்னிடம் இழுத்துக் கொண்டவன், பின்னிருந்து அவளை அணைத்து கொள்ள, கண்ணாடியில் தெரியும் அவள் முகத்தை பார்த்துக் கொண்டே அவளின் கழுத்தில் மெல்ல இதழ் பதிக்க, உடல் முழுவதும் சிலிர்த்து போனது சிபிக்கு.

                 அவன் தீண்டலை காட்டிலும், அவனின் அந்த பார்வை அதீத வெட்கத்தை கொடுக்க, முயன்று அவனிடம் இருந்து விலகியவள் ஒரே ஓட்டமாக அறையை விட்டு ஓடி இருந்தாள். இன்பனும் சிரித்துக் கொண்டே பின்னால் நடந்து வர, இனியனை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை அவனின் சித்தப்பாக்களிடம் கொடுத்து இருந்ததால், ஹாலில் யாருமே இல்லை.

                       தனிமையின் தைரியத்தில் சிபியின் தோளில் கைபோட்டு கொண்டவன் அப்படியே அவளை அழைத்துக் கொண்டு வாசலுக்கு வர, அங்கே நின்றிருந்த காரில் அவளை ஏற்றிக் கொண்டு அவன் வந்து சேர்ந்த இடம் மெரீனா கடற்கரை தான்.

                    சிபி பழைய நினைவுகளில் உறைந்தவளாக அமைதியாக அமர்ந்து விட, காரை விட்டு கீழே இறங்கி மறுபுறம் வந்து அவளையும் கையை பிடித்து கீழே இறங்க வைத்தவன் அவளின் கையை விடாமல் கடலின் அருகே அழைத்து சென்று நிறுத்த, பொட்டாக ஒரு துளி கண்ணீருடன் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் சிபி.

                    அலைகளின் ஈரம் அவள் கால்களை மெல்ல நனைத்து கொண்டிருக்க, அவள் மனமும், உடலும் ஒருங்கே குளிர்ந்து கொண்டிருந்தது அங்கே. வேறு எந்த சிந்தனையும் இல்லாமல், “இன்பன் என்னோடு இருக்கிறான்..” என்று உருபோட்டுக் கொண்டே நின்றிருந்தாள் அவள்.

                    இன்பன் மெல்லிய குரலில் “சிபி..” என்றழைக்க,

                    “பேசாதீங்க..” என்றுவிட்டாள் சட்டென… அவளுக்கு மௌனம் தேவையாய் இருந்தது.. சில நேரங்களில் வார்த்தைகளை விட, மௌனங்கள் சத்தமாக பேசும்… சிபியின் மனமும் மௌனத்தோடு தான் உறவாடிக் கொண்டிருந்தது அந்த நேரம்.. அவளுக்கு ஜதியாக அலைகளின் ஓசை வேறு..

                      இன்பன் அவளின் நிலை உணர்ந்து தன் அணைப்பை மட்டும் சற்றே இறுக்கி, பார்வையை தூரமாக தெரிந்த தோடு வானத்தில் நிலைக்கவிட, இருவருமே உணர்ச்சிவசப்பட்டு தான் போயிருந்தனர். எத்த்னை நேரம் அப்படியே கடந்ததோ.. இன்பன் “கிளம்புவோம் ரசி..” என்று அவள் கையை பிடித்து நகர்த்த மறுப்பேதும் இல்லாமல் அவன் வழியில்அவள்.

                       காரில் அவளை அமர வைத்தவன் அவளின் பிடித்தமான கரும்புச்சாறு ஒன்றை வாங்கி வந்து கையில் கொடுக்க, புன்னகையுடன் வாங்கி கொண்டாள்.

                      ஒரு வாய் குடித்த பிறகே “உங்களுக்கு..” என்று கேள்வியாக இழுக்க

                    “ஒரு ஜூஸ் வாங்கதான் காசு இருந்தது மேடம்.. ஏன் நீங்க கொடுக்கமாட்டீங்களா..” என்றான் கேலியாக

                      சிபி அவன் கூற்றில் சிரித்துக் கொண்டே அந்த கோப்பையை அவனிடம் நீட்டிவிட, மெல்ல அருந்தி கப்பை குப்பை கூடையில் வீசியவன் அங்கேயிருந்து கிளம்பினான். லைட் ஹவுஸ் சிக்னலை தொடாமல், கண்ணகி சிலையின் அருகிலேயே அவன் வலதுபுறம் திரும்பிவிட, சிபி அவன் கையை பிடித்துக் கொண்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். இன்பனும் அப்போதைக்கு வேறு எதுவும் பேசவில்லை.

                        இவர்கள் இருவரும் நிதானமாக வீடு வந்து சேர, வீட்டில் இவர்களுக்கு முன்பாகவே வந்து காத்திருந்தனர் மதுசூதனனும், அபிராமியும்.. சிபி அவர்களை பார்த்து தயங்கினாலும், தயக்கத்தோடே அபிராமியை “வாங்க..” என்று அழைத்து விட்டாள் எப்படியோ.. ஆனால் மதுசூதனனின் பக்கம் அவள் பார்வை உயரவே இல்லை.

                               அமைதியாக அவள் அவர்களை கடந்துவிட, மதுசூதனனின் முகத்தில் இருந்தே விஷயம் பெரிது என்று தோன்றியது இன்பனுக்கு. அபிராமிக்கு அப்படி எதுவும் இல்லை போலும். அவர் தன் மருமகளின் பின்னே சென்று இருந்தார்.

                       இன்பன் தந்தைக்கு எதிரில் இருந்த ஒற்றை சோஃபாவில் அமர, மகனை இயலாமையுடன் பார்த்தார் மதுசூதனன். இன்பன் வாயை திறக்காமல் அமர்ந்திருக்க, அவராகவே “கலை.. லாயரை போய் பார்த்திருக்கான் இன்பா.. மாதவி பேர்ல சொத்துல பங்கு கேட்டு கேஸ் பைல் பண்ற ஐடியால இருக்கான் போல…” என்று அவர் தகவலாக சொல்ல

                       “பண்ணட்டும்.. ” என்று ஒரு வார்த்தையில் அவன் முடித்துக் கொள்ள

                      “இன்பா.. உனக்கு புரியுதா.. அவன் கோர்ட், கேஸ் ன்னு போனா, நம்ம பேர்தான் கெடும்… வீட்டு பெண்ணுக்கு சொத்தை கொடுக்காம ஏமாத்துறோம் ன்னு பேசுவாங்க… இது நம்ம குடும்பத்துக்கு எத்தனை பெரிய அவமானம்.. புரியலையா உனக்கு..” என்று அவர் பொங்கி கொண்டிருக்க

                       “சரி.. நீங்க சொல்லுங்க.. என்ன பண்ணலாம்..” என்றவன் நிதானமாக தந்தையை ஏறிட

                         “இன்பா..” என்று தயங்கியவர் “மாதவிக்கு எப்போ இருந்தாலும், ஏதாவது கொடுக்கத்தானே போறோம்.. ” என்று முடிக்க கூட இல்லை..

                       “யார் சொன்னது..” என்று கேட்டிருந்தான் இன்பன்…

                         “இன்பா..” என்று அதிர்ச்சியாக மது பார்க்க

                          “இதென்ன வாரிசில்லாத சொத்தா..கண்டவனும் வந்து உரிமை கொண்டாட… இது முழுக்க, முழுக்க என்னோடது… எனக்காக என் அப்பா உருவாக்கினது.. இதை கண்டவங்களுக்கும் தூக்கி கொடுக்க நான் தயாரா இல்ல..” என்று அழுத்தத்துடன் அவன் கூற

                          “அப்படி சொல்லாத இன்பா.. மாதவி கண்டவ இல்ல.. என்னோட கூடப் பிறந்த தங்கச்சி… கலைக்காக இல்லேன்னாலும் மாதவியை நாம பார்க்கணும் இல்லையா…” என்று அவர் தன் தகுதியே இல்லாத தங்கைக்காக போராடி கொண்டிருந்தார் இன்பனிடம்..

                         “நான் யாரையும் பார்க்கிறதா இல்ல.. இது மொத்தமும் எனக்கானது.. எனக்கு இதுல உரிமை இல்ல ன்னு சொல்லிடுங்க.. நான் அடுத்து எதுவும் பேசமாட்டேன்… உங்க கம்பனி பக்கம்கூட திரும்பி பார்க்கமாட்டேன்…” என்று இன்பன் மதுவை வளைத்து பிடிக்க

                          “என்ன பேசற இன்பா… உன்னைவிட எனக்கு எதுவுமே முக்கியம் இல்ல.. உனக்கு தெரியாதா..”

                         “அப்படி நினைச்சு தான் ஏற்கனவே ஒருமுறை பெருசா அடிபட்டு நிற்கிறேன் நான்… இந்த முறை உங்களுக்கு நான் முக்கியம் ன்னு நீங்கதான் நிரூபிக்கணும்… என்ன செய்ய போறீங்க.. யோசிச்சுக்கோங்க..” என்றவன் எழுந்து கொள்ள

                          “நீ சொல்றது போலவே, மாதவியும் சொல்லலாம் இன்பா.. அவளுக்கும் இது அவ அப்பாவோட சொத்து இல்லையா..” என்று அவர் கடைசி முறையாக வாதிட

                          இன்பன் நின்று நிதானமாக தந்தையை பார்த்தவன் “சோ.. என்ன நடந்தாலும் உங்க தங்கையை விட்டு கொடுக்கவே மாட்டிங்க இல்லையா நீங்க..” என்று கூர்மையான பார்வையை செலுத்தினான்.

                        “இன்பா.. கொஞ்சம் புரிஞ்சிக்கோ.. அவளுக்கு நியாயமா என்ன கொடுக்கணுமோ, அதை மட்டும் கொடுத்திடுவோமே..ஏன் அவள் கலங்கி நிற்கணும்..”

                        “நியாயத்தை பத்தி நீங்க பேசறீங்களா… என் பொண்டாட்டிக்கு என்ன நியாயம் செஞ்சீங்க ன்னு மறந்துட்டீங்களாப்பா… அவ கலங்கி நின்னது உங்க கண்ல படவே இல்லையா..” என்று கண்கள் சிவக்க, அவன் கத்தவும் தான், இது எதற்கான எதிர்வினை என்றே புரிந்தது அவருக்கு..

                        மது அதிர்ச்சியில் அப்படியே நிற்க, இன்பன் அவரை விடுவதாக இல்லை போல.. “உங்களுக்கு தெரியுமா ?? எங்க கல்யாணதுக்கு ரெண்டு நாள் முன்னாடி தான் அவ அம்மா இறந்து போனாங்க.. அவளை தனியா விடவே முடியாது ன்னு தெரிஞ்சு தான் கல்யாணம் பண்ணேன்…

                           “எண்ணி ஒரே மாசம் தான் அவளோட வாழ்ந்தேன் நான்.. எத்தனை நம்பி இருப்பா என்னை??.. ஆனா, நான் விழுந்த அடுத்த நிமிஷம் அவளை ஒண்ணுமே இல்லாம ஆக்கிட்டீங்களே.. அப்போ எங்கே போச்சுப்பா உங்க நியாயம்…

                           “அவளோட நிலைமை என்னன்னு கூட தெரிஞ்சிக்காம, இனியன் யாருப்பா?? எனக்கு மகன் ன்னா உங்களுக்கு யாரு அவன்?? சிபி தான் வேண்டாம்.. என் மகனும் வேண்டாம் ன்னு முடிவு பண்ணிட்டிங்களா… அவ இருந்த மனநிலையில ஒருவேளை அவ தப்பா ஏதும் முடிவு எடுத்திருந்தா??” என்று கலங்கிய கண்களுடன் நியாயம் கேட்டு நிற்கும் மகனிடம் என்ன பேசுவது என்று புரியவில்லை மதுவுக்கு.

                        “இன்பா.. அப்பாக்கு தெரியாதுடா.. நீ இந்த அளவுக்கு அந்த பொண்ணுமேல பாசமா இருப்பேன்னு நினைக்கல நான்.. அதுவும் அந்த பொண்ணு, நம்ம வீட்டு வாரிசை சுமந்துட்டு இருந்தது சத்தியமா எனக்கு தெரியாதுடா…”

                         “தெரிஞ்சு இருந்தா.. தெரிஞ்சு இருந்தா என்ன பண்ணி இருப்பிங்கப்பா.. என் குழந்தையை பிடுங்கிட்டு துரத்தி இருப்பிங்க.. இல்லையா அவ கருவை கலைச்சுட்டு துரத்தி விட்டு இருப்பிங்க…”

                         “அப்படி சொல்லாத இன்பா… உனக்கு என்னை தெரியாதா..”

                          “உங்களை தெரிஞ்சதால தான், அத்தனை நம்பிக்கையோட கல்யாணம் பண்ணேன். என்ன ஆனாலும், என் அப்பா என்னோட இருப்பார் ன்னு நினைச்சேன்..ஆனா,நீங்க என் நம்பிக்கையை ஒண்ணுமே இல்லாம பண்ணிடிங்கப்பா…” என்று கூறியவன் குரலில் மிதமிஞ்சி நின்றது வேதனையும், வருத்தமும் மட்டுமே..

                        “இன்பா..” என்று மதுசூதனன் மகனை நெருங்க, “எனக்கு தெரியும்ப்பா.. உங்களால இந்த அளவுக்கெல்லாம் யோசிக்க முடியாது.. உங்களுக்கு பிசினஸ்ல கூட குறுக்குவழி எல்லாம் வராது.. அதனால தான், இதுக்கெல்லாம் யார் காரணமோ, அவங்களை வச்சு ஆடறது ன்னு முடிவு பண்ணிட்டேன்..” என்று அவன் நிறுத்த

                     “இன்பா.. ” என்றவர் அப்போதும் எதுவோ சொல்ல வர

                      “நான் ஏற்கனவே சொன்னதுதான்ப்பா.. நான் உங்ககூட இருக்கணும் ன்னு எண்ணம் இருந்தா, எனக்கும், கலையரசனுக்கும் இடையில வராதீங்க…இல்ல உங்க தங்கச்சி தான் முக்கியம்ன்னு நினைச்சா, இந்த நிமிஷமே அதையும் சொல்லிடுங்க.. நான் என் பொண்டாட்டி, பிள்ளையை கூட்டிட்டு லண்டனுக்கு கிளம்புறேன்…” என்று அவன் முடித்த நிமிடம்

                      “இன்பா..” என்ற அதட்டலுடன் வெளியே வந்தார் அபிராமி… இத்தனை நேரம் பேசிய அத்தனையும் மருமகளின் கையை பிடித்துக் கொண்டு கேட்டுக் கொண்டு நின்றவர் மருமகளிடமும் ஒரு இறைஞ்சும் பார்வையில் மன்னிப்பை வேண்டி இருந்தார்.

                       ஆனால், இப்போது மகன் மீண்டும் லண்டன் செல்வத்திகா கூற, அதற்குமேல் முடியாமல் வெளியே வந்துவிட்டார். 

                        இன்பன் நின்ற இடத்தில் அசையாமல் நிற்க, “உன் வீம்பை எல்லாம் உன் அப்பாவோட நிறுத்திக்கணும்.. என்னால என் மருமகளையும், பேரனையும் இனி எதுக்காகவும் விட்டு கொடுக்க முடியாது. லண்டன் போறதானாலும், நீ மட்டும் கிளம்பு.. என் மருமக என்னோட இருக்கட்டும்..” என்று ஒரே போடாக அவர் போட, இன்பனுக்கு சிரிப்பு வந்தது.

                      “என்னையே சொல்லுங்க.. என்கிட்டே மட்டும் தான் வாய் வரும் உங்களுக்கு.. ஏன் உங்க புருஷன் இவ்ளோ வக்காலத்து வாங்கினாரே, அவரை எதுவும் பேசுங்களேன்..” என்று நக்கலாக அவன் பார்க்க

                     “ஏன் சொல்லாம.. அதான் தங்கச்சி மேல இத்தனை பாசம் இருக்கு இல்ல. அந்த தங்கச்சி கூடவே போய் இருக்கட்டும்.. எத்தனை நாள் பார்த்துக்கறா ன்னு நானும் பார்க்கிறேன்..” என்று கணவனை அவர் முறைத்து நிற்க

                       மதுசூதனன் “அபி.. நீயும்..” என்று ஆரம்பிக்கவே, கையை நீட்டி தடுத்து விட்டவர் “உங்க தங்கச்சிக்கு போதும் போதும் ன்னு சொல்ற அளவுக்கு ஏற்கனவே நிறைய செஞ்சாச்சு.. இதுல உங்க அம்மா நமக்கு தெரியாம ஒளிச்சு மறைச்சு வேற பொண்ணுக்கு சேர்த்துட்டு தான் போயிருக்காங்க..”

                      “எத்தனை பவுன் நகை போட்டு அவளுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தீங்க.. அத்தை இறந்து போனதும் அவ எடுத்துட்டு போன நகைகளோட மதிப்பு என்ன?? உங்க மச்சானுக்கு தொழில் வைக்க எத்தனை முறை பணம் கொடுத்து இருக்கீங்க.. எல்லாத்தையும் கணக்கு போட்டு பாருங்க…”

                      “என் மகன் சொல்றது சரிதான்.. அவன் முடிவுக்கு விடுங்க அவனை…இனி ஒருமுறை என் மகன் எதுக்காவது சங்கடப்பட்டு நின்றால், என்னையும் நீங்க மறந்துட்டு வேண்டியது தான்..” என்று அவரும் மதுசூதனனை போட்டு இறுக்க, அதற்குமேல் வாதிட முடியாமல் தளர்ந்து அமர்ந்து விட்டார் மனிதர்.

                     இன்பன் அவரின் அருகில் அமர்ந்தவன் “உங்க தங்கச்சியை நடுதெருவுல நிற்க வைக்கிற எண்ணம் எல்லாம் எனக்கு இல்ல டாடி.. எனக்கு பகை கலையரசனோட தான்… அவனை நான் ஒண்ணுமே இல்லாம ஆக்கணும்.. அவ்ளோதான்..” என்று ஆத்திரமாக அவன் கூறி முடிக்க, ஏன் கலையரசன் மேல் இத்தனை கோபம் என்று புரியவே இல்லை மதுவுக்கு.

                    ஆனால், இத்தனைக்கு பிறகும் மகனிடம் கேள்வி கேட்க மனம் வராமல் அமைதியாக தலையை மட்டுமே அசைத்துவிட்டு அமர்ந்திருந்தார் அவர்.

                               ஆனால், இன்பன் அத்துடன் திருப்தி அடையவில்லை..அவனுக்கு இது மட்டும் போதுமாக இல்லை.

                   அமைதியாக தந்தையை பார்த்தவன் “லாயர்கிட்ட பேசுங்கப்பா.. காலேஜ், ஹோட்டல், நம்ம கம்பெனி, தாத்தாவோட கார்மெண்ட்ஸ்… இது அத்தனையிலேயும் உங்க பேர்ல எவ்ளோ ஷேர்ஸ் இருக்கோ, அது அப்படியே என் பேருக்கு மாத்தணும்.. கூடவே அம்மா பேர்ல இருக்கறதும்…”

                      “பாட்டி உங்களுக்கு கொடுத்த ஷேர்ஸும் எனக்கு வேணும்… மாத்திக் கொடுங்க” என்று சாதாரணமாக கேட்டு நிற்க, அவனை வாயை பிளந்து பார்த்து நின்றார் மதுசூதனன்.

Advertisement