Advertisement

ஆனால், அதுவே தனக்கு வினையாக முடிய போகிறது என்று அப்போது தெரியாது இன்பனுக்கு. கலையரசன் அந்த அரசியல் வாரிசை வைத்து ஏதேதோ திட்டம் போட்டிருக்க,அந்த நேரத்தில் தான், இன்பன் அந்த அரசியல் பிரமுகரை சந்தித்த விஷயம் அவரின் காதுக்கு சென்றது.

                      முதலில் பெரிதாக எடுக்கவில்லை அவர்.ஆனால், இன்பனை பழிவாங்க சரியான நேரம் பார்த்து காத்துக் கொண்டே தான் இருந்தார். இந்த நிலையில் அவன் அவரை சந்தித்து வந்த அடுத்த இரண்டே நாட்களில், தன் மகள் கர்ப்பமாக இருக்கும் விஷயம் அவருக்கு தெரியவர, இன்னுமின்னும் தன் கை வலுவானது போல ஒரு எண்ணம்.

                       தன்னை யாரும் அசைக்க முடியாது.. என்பது போல ஒரு கர்வம் கூட.. மகள் விஷயம் அறிந்தும் கூட அவளை பெரிதாக கண்டிக்காதவர், அவளுடன் சுற்றும் அந்த பையனிடமும் இதை தெரிவிக்க வேண்டாம் என்று கூறிவிட, மகளும் தந்தையின் சொல்லை தட்டாதவளாக அமைதியாகவே இருந்து விட்டாள்.

                      ஆனால், இவர்களின் திட்டம் அத்தனையையும் முறியடிப்பது போல, அடுத்த நான்காவது நாள் அந்த அரசியல்வாதி மஞ்சரியை தூக்கி இருக்க, செய்வதறியாமல் பதறிப்போய் தான் நின்றார் கலையரசன். அப்போதும் மதுசூதனன் குடும்பத்திடம் இதை பற்றி எதுவும் தெரிவிக்காமல், தானே அந்த அரசியல்வாதியை சென்று சந்திக்க, மஞ்சரியின் கருவை கலைக்க மருத்துவமனையில் அவளை அனுமதித்து இருந்தார் அவர்.

                    அவர் மகனையும் வலுக்கட்டாயமாக வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்திருக்க, கலையரசனை நன்றாக கவனித்தவர், கலையரசனை சாட்சியாக வைத்துக் கொண்டே நகரின் பெரிய மருத்துவமனையில் அவர் மகளுக்கு அபார்ஷன் செய்து முடித்து இருந்தார். அதோடு நிறுத்தாமல், “இனி என் மகனின் வாழ்வில் தலையிட்டால் குடும்பத்தையே இல்லாமல் செய்து விடுவேன்.” என்றும் மிரட்டி அனுப்பி இருக்க, அவரின் அத்தனை வன்மமும் கண்மண் தெரியாமல் இன்பனின் மீது திரும்பி இருந்தது.

                      தன் அத்தனை ஆத்திரத்திற்கும் இன்பனையே அவர் காரணகர்த்தாவாக்கி விட, அவன் அந்த அரசியல் வாதியை சென்று சந்தித்ததே வருக்கு போதுமானதாக இருந்தது. தன் மகளை மருத்துவமனையில் யாருக்கும் தெரியாமல் மனைவியை மட்டும் அருகில் வைத்துக் கொண்டு கவனித்து அவர் வீட்டிற்கு அழைத்து வந்து இருந்தார்.

                         இது அனைத்தும் பழனியின் மூலமாக தெரிந்தாலும், தன் தந்தைக்கான பாதுகாப்பை அதிகப்படுத்திவிட்டு தன் வேலையை மட்டுமே பார்த்தான் இன்பன். “சொன்னாலும் அந்தாளுக்கு புரியாது.. இதெல்லாம் தேவைதான் இவங்களுக்கு” என்பது மட்டும்தான் அவன் எண்ணம்.

                      அதற்குமேல் அவர்களை யோசிக்கும் அளவுக்கு அவனுக்கு நேரம் கொடுக்கவே இல்லை அவன் மனைவி. அவனின் மொத்த நேரத்தையும் சிபி முழுதாக தன் வசம் எடுத்துக் கொள்ள, சொர்க்கம் கைகளில் என்பது போன்ற ஒரு கனவுலக வாழ்வு தான் இருவருக்கும்.

                      அத்தனைக்கும் நான் துணை என்றவன் அவளை “தங்கப்பொண்ணே, செல்லப்பொண்ணே, ரசிம்மா, குட்டிப்பொண்ணே..” என்று கொஞ்சி கொஞ்சியே காரியம் சாதித்துக் கொள்வான். அவளை கொஞ்சி கொஞ்சியே அவளை வளரவே விடாமல் தன் கையணைப்பிலேயே அவளை அவன் பழக்கிவிட, அது எத்தனை பெரிய தவறென்று அவன் உணரவே இல்லை அந்த நாட்களில்.

                      அதே போலவே ஒரு மாலை வேளையில் சிபி வெளியில் அழைத்து செல்ல சொல்லி அடம்பிடிக்க, அவளின் குக்கரி வகுப்பு முடிந்ததும் அழைத்து செல்வதாக கூறியவன், சொன்னது போலவே வகுப்பு முடியும் நேரம் அவளுக்காக அங்கே காத்திருந்தான்.

                      அவளும் எப்போதும் போலவே வகுப்பு முடிந்து ஆவலாக வெளியே வந்தவள் அங்கே நின்றிருந்த இன்பனை கண்டதும் தன் பெரிய கண்களை இன்னும் பெரிதாக்கி, தன் துள்ளலை கண்களில் காட்டிவிட, அதற்காக தானே அவன் காத்திருந்ததும்.

                    தன்  கிளியை கொஞ்சிக் கொண்டு அவன் வண்டியில் அமர்ந்திருக்க, முகம் கொள்ளாத புன்னகையுடன் அவனை நெருங்கினாள் அவள். அருகில் வந்து  கையை பிடித்து அவன் தன்னருகே இழுக்க, “ரோட்ல இருக்கோம் இனி.. விடுங்க..” என்று கொஞ்சலாகவே கூறி, அவன் பின்னால் ஏறி அமர்ந்தாள்.

                   அவன் வயிற்றில் கைபோட்டு அணைத்த நிலையில் ஒரு பக்கமாக அவள் அமர்ந்து கொள்ள,அவள் கையை இன்னும் அழுத்தமாக, தன்னுடன் ஒட்ட வைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர் இருவரும்.

                    அவர்களின் வழக்கமாக கடற்கரை சாலையில் ஒரு நீண்ட பயணம்… காசிமேடு கடற்கரை  அருகில் வண்டியை போட்டுவிட்டு அங்கிருந்து கடலுக்கு அருகில் அவளை அழைத்து சென்றவன் அங்கே கடலின் அருகில் நின்றிருந்த பழனியிடம் சென்று நிற்க, “வாங்க அண்ணி.. ” என்று அவளை வரவேற்றான் அவன்..

                    சிபி இன்பனை பார்க்க, “என்னோட பிரெண்ட் சிபி.. ” என்று அவனை அறிமுகப்படுத்தி வைத்தான் இன்பன். அவன் பேசிக் கொண்டே இருவரையும் சற்றே தள்ளி இருந்த ஒரு கடைக்கு அழைத்து செல்ல ராஜ கவனிப்பு இன்பனுக்கும், சிபிக்கும்.. அங்கிருந்தவர்கள் அவனிடம் அத்தனை அன்பை பொழிய, ஆச்சரியமாக அவர்களை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் சிபி.

                 அங்கிருந்த ஒரு வயது முதிர்ந்த பெண்மணி, “நல்லா இருக்கணும் ராசா நீ… சீக்கிரமே நாலைஞ்சு பிள்ளைகளை பெத்துக்கோ… உன் மனசுக்கு நீ ராசாவா இருப்பையா..” என்று அவனை வாழ்த்தி சொல்ல, சிபிக்கும் கணவனை நினைத்து பெருமைதான்.

                அங்கேயே அன்று உணவை முடித்துக் கொண்டு இருவரும் கிளம்புவதற்காக எழ, அவர்களை தடுத்து “ண்ணா.. கடலுக்கு போகலாம்ண்ணா..” என்று அந்த பழனி என்பவன் அழைக்க,

                  “நேரமாச்சுடா.. வீட்டுக்கு கிளம்புறேன்.. இன்னொருநாள் மொத்தமா இங்கேயே இருக்க மாதிரி வர்றேன்..” என்று கூறிவிட்டு இன்பன் நடக்க, அவனின் கையை பிடித்துக் கொண்டு சிபி, அவர்களுடன் பைக் நிறுத்தும் இடம்வரை வந்து விடை கொடுத்தான் பழனி.

                     இருவரும் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி சரியாக பத்து நிமிடங்கள் இருக்கும். இருவரும் கடற்கரை சாலையின் போக்குவரத்தில் இணைந்திருக்க, இவர்களின் வண்டி லைட் ஹவுஸை தாண்டி அந்த நான்கு வழி சாலையின் வலது புறம் இருந்த,  காவல்துறை இயக்குனர் அலுவலகத்தை கடக்க முற்படும் நேரம்தான், சிக்னலை அலட்சியம் செய்து முன்னேறியது அந்த டூரிஸ்ட் பஸ்..

                   இவன் வலதுபுறம் திரும்ப பார்க்க, அவன் இவனுக்கு எதிர்புறம் இருந்து வந்தவன் சரியாக, இன்பனின் இடது பக்கத்தில் மோதி இருக்க, இருவரும் வண்டியோடு தூர விழுந்திருந்தனர்.. சிபி சாலையில் விழுந்திருக்க, முதுகில் நல்ல அடி. ஆனால் சுயநினைவில் தான் இருந்தாள் அவள்.

                    ஆனால் இன்பன் வண்டியை விடாமல் பிடித்திருந்ததில் வண்டியோடு தேய்ந்து கொண்டே விழுந்து வைத்திருக்க, சாலையோர பிளாட்பாரத்தில் அவன் தலை பலமாக மோதி இருந்தது. பின்னந்தலையில் ரத்தம் கொட்டியது அவனுக்கு.

                  சிபிஐக்கு இருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும் அவனை அந்த நிலையில் கண்டதும் பறந்துவிட, “இனியா…” என்று அவள் அருகில் செல்லும் நேரம், “ரசி..” என்ற முனகலுடனே தன் நினைவை இழந்திருந்தான் இன்பன்..

                   அதன்பிறகு நடந்த எதையும் அறிய வாய்ப்பில்லாமல் முதல் ஒரு மாதம் சுயநினைவே இல்லாமல் தான் கிடந்தான் அவன். அதன்பிறகும் கடவுள் அவன் நினைவுகளை அழித்து விளையாடி இருக்க, அவர் விளையாட்டில் அவன் கிளி மொத்தமாக தன்னை இழந்திருந்தது.

                           அவனின் நினைவுகளை பறித்து கொண்ட அதே கடவுள், அவனின் மறு உருவமாக இனியனை சிபியிடம் கொடுத்திருந்தார். அந்த கோர விபத்திலும் கூட, எந்த பாதிப்பும் இல்லாமல் அவன் பிழைத்த வந்தது அவன் அன்னையை உயிர்ப்பிக்கத்தானோ என்னவோ…

                           இன்பன் கலங்கி இருந்த தன் கண்களை புறங்கையால் துடைத்துக் கொண்டே அதே கையை தன் முகத்தின் மீது வைத்து மறைத்துக் கொள்ள, கடந்த காலம் இன்னும் என்னென்ன கசப்புகளை தர காத்திருக்கிறதோ என்று தான் பயந்து கொண்டிருந்தான் அவன்.

                          ஏற்கனவே அன்னையும், தந்தையும் குற்றவாளிகளாக நிற்க, அவர்களை வெறுக்கும் நிலைக்கு என்னை தள்ளி விடாதே இறைவா..” என்று வேண்டி கொண்டவன், தன் மனைவியை சற்றே அழுத்தமாக அணைத்து கொண்டான்..

                         வால்பாறையில் அவன் பார்த்த சிபி அல்ல அவள்… அவனின் கொஞ்சும் கிளி நிச்சயமாக தொலைந்து போயிருந்தது… இப்போதும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு முன்பாக, தான் உண்மையை சொல்லுவரை தன்னிடமே முகமூடியோடு நின்றாளே…

                         அவன் பார்த்த, ரசித்த அந்த குழந்தைக்கு அவ்வளவு விவரம் எல்லாம் போதாது… குமரியாக இருந்தாலும்,பல நேரங்களில் உன் மூத்த சிசு நான்.. என்ற எண்ணத்தை அவனுக்கு கொடுத்தவள்… இன்று அனைத்தும் தொலைந்து வளர்ந்து நிற்கிறாள்… பூரித்து போக வேண்டிய நான்.. பெற்றவர்களை எண்ணி குற்றவுணர்வில் சிக்கி தவிக்கிறேன்… என்று குமைந்து கொண்டிருந்தான் அவன்…

                          அவன் கைவிரல்கள் மனைவியின் முதுகை மெல்ல வருடிக் கொடுக்க, அவன் வருடலில் எந்த கவலையும் இன்றி சுகமாக கண்ணயர்ந்திருந்தாள் அவள். அவள் முகத்தை பார்த்தவன் அருகில் இருந்த மகனையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டான்…

                      “இனி விடவே மாட்டேன்” என்ற உறுதி மொழியோ, இல்லை “மன்னித்து விடுங்கள்..” என்ற யாசிப்பா அவனை தவிர யாரும் அறியார்…

Advertisement