Advertisement

இன்பனுக்கு சிபியின் மனம் புரிந்தே இருக்க, அவளை இலகுவாக்கவே இங்கு அழைத்து வந்திருந்தான். வெகுநேரம் கையை கோர்த்துக் கொண்டு அலையில் நின்றவர்கள் அமைதியாக வந்து மணலில் அமர்ந்து கொண்டனர்.

                    இரவு ஏறி வெகுநேரம் கழித்தே இருவரும் அங்கிருந்து வீட்டிற்கு கிளம்ப, உணவு நேரமும் மௌனமாகவே கழிந்தது.. சிபி பிரிட்ஜில் இருந்த ரசமலாய் ப்ளாஸ்ட் எடுத்து வந்து அவனிடம் நீட்ட, “பாருடா..” என்பது போல ஒற்றை புருவ தூக்கல் தான் அவனிடம்.

                    “பெரிய பேக்கர் ஆகிட்டீங்க..” என்று சொல்லிக் கொண்டே கேக்கை பிட்டு வாயில் வைத்தவன் “சூப்பரா இருக்குடா… எனக்கு ரசமலாய் என்று வேற எதையோ கொடுத்து ஏமாத்தி இருக்கானுங்க தங்கம்மா..” என்று சிலாகித்துக் கொண்டே அவன் முழுவதும் உண்டு முடிக்க, இப்போது மதியம் அவன் பார்த்தது போலவே ஒற்றைக்கையை கன்னத்தில் ஊன்றிக் கொண்டு அவனை பார்த்திருந்தாள் சிபி.

                    அவன் அந்த கிண்ணத்தை காலி செய்யவும் மீண்டும் எடுத்து வந்து கொடுக்க, ரசித்து உள்ளே தள்ளிக் கொண்டிருந்தான் இன்பன். சிபியின் பார்வையை சற்று நேரம் கழித்தே அவன் உணர, அவளின் பார்வை நிச்சயம் அந்த ஆண் மகனை என்னவோ செய்தது…

                     ஏன்.. ஆண்களுக்கு வெட்கம் கூடாதா?? என்று கேள்வி கேட்கும் வகையில் சரளாக அவள் அவனை நனைத்துக் கொண்டிருக்க, முதல் முறையாக “என்னடா.” என்று உரிமையாக வந்தது கேள்வி.

                      சிபி பார்வையை மாற்றாமல் இருக்க, இன்பன் எழுந்து அவளை நெருங்கவும் அவனை அமர்ந்த நிலையிலேயே வயிற்றோடு கட்டிக் கொள்ள, “ஹேய் பைத்தியம் ரசி..” என்று குழைந்தது அவன் குரல்..

                       சிபி அவன் நெஞ்சுக்கும், வயிற்றுக்கும் நடுவில் முகத்தை புதைத்துக் கொண்டிருந்தவள் “ப்ளீஸ்…” என்று விட “ஹேய் ரசி..” என்று அவளை நிமிர்த்த முற்பட்டான் அவன்.

                       சிபி அசைந்து கொடுக்கவே இல்லை. இன்னுமின்னும் அழுத்தமாக அவனுள் புதைந்து கொள்ள, “ஹேய் பொண்ணே.. புரிஞ்சிக்கோடா.. இன்னைக்கோட முடியாது… நான் உன்னை தொந்தரவு பண்ணிட்டே இருப்பேன்.. ஒருமுறை உன்னை உணர்ந்துட்டா என்னால என்னை கட்டுப்படுத்திக்க முடியாது ரசி.. அதுக்கு தான் சொல்றேன்..” என்று சிறு பிள்ளைக்கு சொல்வது போல் அவன் அறிவுறுத்த, அவன் கிளிக்கு புரியாதா?? அவனின் ஏக்கப்பார்வைகளும், தடுமாற்றங்களும்…

                    இசைந்து கொடுக்கவே இல்லை அவள்..”நான் படிச்சுப்பேன்..” என்பது மட்டுமே அவள் வாயிலிருந்து வந்த வார்த்தைகள்.. அதற்கு மேலாக எதுவும் பேசமாட்டேன் என்பது போல முகத்தை அவன் மார்பில் மூடிக் கொண்டிருக்க, அவளின் பிடிவாதமும், அதன் காரணமும் அறிந்தவனுக்கு புன்னகை தான்.

                     அவன் மனமும் கூட “என்னடா ரொம்ப பண்ற..கொஞ்சம் கவனமா இருந்தா போதாதா..” என்று இடித்துரைக்க, அதற்குமேல் அங்கே தடை என்ன… சிபியின் முகத்தை மீண்டும் ஒருமுறை நிமிர்த்த முயற்சித்து தோற்று போனவன், “முதல்ல என் முகத்தை பாரு பொண்ணே..” என்று அழுத்தமாக அவன் கூற, சிபி மெல்ல நிமிர்ந்து அவன் கண்களை பார்க்க, அவன் கண்களோடு கலந்தவன், மெல்ல அவளை தன் கைகளில் தூக்கி கொண்டான்.

                      அந்த ஒற்றை படுக்கையறையில் அவளை விட்டவன் பிரிட்ஜில் இருந்த, ரசமலாய் ப்ளாஸ்ட் மொத்தத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு, தங்களின் படுக்கையறைக்குள் நுழைய, சிபி அவனை பார்க்கவே முடியாமல் தலையை குனிந்து கொண்டே நிற்க, அவளையே பார்த்துக் கொண்டு கதவை தாளிட்டு அவளை நெருங்கி இருந்தான் இன்பன்.

                        அத்தனை ரசனையாக அவன் காமத்தை கற்பிக்க, ஒவ்வொரு இடத்திலும் தன் கிளியின் முகம் பார்த்தே அவளின் சங்கடங்களையும், சங்கோஜங்களையும் முத்தங்களால் முழுதாக விலக்கி, அவளின் பிடித்தங்களை உணர்ந்து அவளை தன்னவளாக்கி கொண்டான் மீண்டும் ஒருமுறை.

                          அந்த இரவு ஏன்தான் விடிகிறதோ என்று தான் தோன்றியது அவர்களுக்கு. அதன்பின்னான நாட்களும் கூட, காதலோடும், களிப்போடும் இனிமைக்கு குறைவில்லாமலே நகர, சிபிக்கு மனம் முழுவதும் ஒரு பெருமிதம் தான். அவளுக்கு இன்பனை தவிர்த்து வேறு எண்ணமே இருந்ததில்லை அந்த நாட்களில்.

                       இன்பனின் குடும்பம் குறித்த பயமோ, யாதவை குறித்த பயமோ எதுவுமே இல்லை அவளிடம். எது வந்தாலும் என்னவன் பார்த்துக் கொள்வான் என்பது போல ஒரு நிலை தான். முழுவதுமாக அவனையே சார்ந்து இருந்தாள் அந்த நாட்களில்… ஆனால், இன்பன் அத்தனைக்கும் ஈடு செய்யும் வகையில் அத்தனை பேரையும் தன் கண்பார்வையில் தான் வைத்திருந்தான்.

                      அவன் எப்போதும் சிபியுடன் இருப்பது போலவே இருந்தாலும், அவன் குடும்பத்தை, அவன் தந்தையை எப்போதும் கவனித்துக் கொண்டே தான் இருந்தான். என்னை மீறி தான் என் தந்தையை தொட வேண்டும் என்று உணர்த்துவது போலத்தான் இருந்தது அவன் செய்கைகள்.

                       கலையரசனை குறித்து அவன் ஏற்கனவே சேகரித்த விவரங்கள் அவன் வீட்டில் அவன் அறையில் இருக்க, அதைப்பற்றிய கவலை இல்லை. ஆனால், அவரின் தற்போதைய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்தான் அவன்.

                       கலையரசன் ஹோட்டல் நிர்வாக விஷயங்களிலும், கல்லூரி நிர்வாகத்திலும் தலையிடுவதை அவன் உணர்ந்தே இருக்க, அதற்கான தடைகளையும் மற்ற ஷேர் ஹோல்டர்ஸ் மூலமாக விதித்து இருந்தான். கல்லூரி நிர்வாகத்தில் பெரும்பான்மையான பங்குகள் அவன் பேரில் இருக்க, அந்த வகையில் கொஞ்சம் நிம்மதி தான்.

                      இவர்கள் வாழ்வு ஆரம்பித்த அதே நேரத்தில் தான் கலையரசன் மகள் மஞ்சரியும் தன் வாழ்வை தொடங்கி இருந்தாள். அதுவும் காதலில்லாமல், திருமணம் எந்த பந்தமும் இல்லாமல், வெறும் பணத்தை மட்டுமே அளவுகோலாக வைத்து இன்பனை விட சிறந்தவன் என்று முடிவு செய்து ஒரு அரசியல் பிரபலத்தின் வாரிசை தன் வலையில் விழ வைத்திருந்தாள் அவள்.

                     அவனும் அவளின் பார்லர் அழகுக்கும், அவளின் கிள்ளை மொழிக்கும் மயங்கி போய்விட, அவனிடம் சற்று தாராளமாகவே நடக்க பழகி இருந்தாள் மஞ்சரி.அவளின் தந்தைக்கும் இது தெரிந்தே இருக்க, இன்பன் கைவிட்டு போன ஆத்திரத்தில் இருந்தவர் மகளின் செயலை மறைமுகமாக ஆதரித்தே வந்தார்… கண்டும் காணாமல் என்பார்களே அதுபோலத்தான் நடந்து கொண்டார் அவர்.

                      இந்த விஷயமும், பழனியின் மூலம் தகவலாக இன்பனின் காதுக்கு வந்து சேர, தன் பாட்டியை நினைத்து தான் கவலை கொண்டான். மஞ்சரியின் மீதான அவரின் பாசத்தை நன்கு அறிந்தவன் என்பதால், எப்படி தாங்கி கொள்ள போகிறாரோ என்று தான் பயந்து கொண்டிருந்தான் அவன்.

                      அதிலும் அவள் கை வைத்திருக்கும் அரசியல் பிரமுகரையும் நன்கு அறிந்தவன் என்பதால், மஞ்சரியை குறித்தும் சற்று கவலைதான். அவர்களின் குணம் அறிந்தவனாக, மஞ்சரியை ஒருமுறை நேரில் சந்தித்தும் அவன் எச்சரிக்க, கொஞ்சம் கூட மதிக்காமல் அவனை அலட்சியப்படுத்தி இருந்தாள் அவள். கூடவே அவளுடன் சுற்றும் அந்த அரசியல் வாதியின் மகனும் இருக்க, சற்று எல்லைமீறித்தான் பேசி இருந்தனர் இருவரும்.

                    அத்தோடு இது உங்கள் பாடு என்பது போல விலகி கொண்டிருந்தான் அவன். அதே சமயம்.. காவல் துறையில் இருந்த தன் நண்பர்கள் மூலம் யாதவ் வெளியே வரமுடியாத அளவுக்கு அவன் மீதான வழக்கை வலுவாக்கி வைத்திருந்தான்.. இடையில் ஒருமுறை மேகலையும், ஞானமும் வீடு தேடி வந்து கெஞ்சி இருந்தனர். மகன் மீதான வழக்கை திரும்ப பெறும்படி..

                     அவர்களை வாசலோடு நிறுத்தி சிபியின் முகத்தை கூட பார்க்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி இருந்தான். “ஜெயந்தி அத்தையோட சாவுக்கு வந்து இருந்திங்களா.. நீங்க யாருன்னே தெரியலையே எனக்கு..” என்று கேட்டே விரட்டி விட்டிருந்தான்.

                      நின்ற இடத்தில் இருந்தே இப்படி அத்தனை பேரையும் இப்படி தன் விருப்பத்திற்கு அவன் ஆட்டிவைத்து ஆடிக் கொண்டிருக்க, அவன் எதிர்பார்த்த நாளும் வந்திருந்தது. மஞ்சரியின் காதல் அந்த அரசியல் வாதிக்கு தெரியவர, முதலில் இன்பனை தான் அழைத்து பேசினார் அவர்.

                      மரியாதை நிமித்தமாக அவரை நேரில் சந்தித்தவன், தனக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தன் தந்தையின் பெயரை எக்காரணம் கொண்டும் இதில் இழுக்க கூடாது என்று கண்டிப்பாக கூறிவிட, அதற்குமேல் தான் பார்த்துக் கொள்வதாக கூறி முடித்துக் கொண்டார் அவர். வெளியில் இருந்தாலும், அவன்தான் எல்லாமே என்று அவருக்கு புரிந்திருந்தது போலும். மதுசூதனனை நாடாமல் இன்பனை அழைத்து பேசி இருந்தார்.

Advertisement