Advertisement

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 23

                                         இன்பன் மற்றும் சிபியின் திருமணம் முடிந்து கிட்டத்தட்ட ஒருமாதம் முடிந்திருந்தது.. இப்போது சிபியின் வீட்டில் இல்லை இருவரும். ஜெகனுக்கு சொந்தமான பிளாட் ஒன்றில் இருவரையும் தங்க வைத்திருந்தான் அவன்.

                                       அந்த வீட்டில் சிபி அவள் அன்னையின் நினைவுகளை அசை போட்டுக் கொண்டே அமர்ந்திருப்பதால் இந்த முடிவு. வீடு மாறியதை தவிர பெரிதாக எந்த மாற்றமும் இல்லை அவர்கள் வாழ்வில். சிபிக்கும் அன்னையை மறந்து அவரை கடந்து வருவது கடினமான காரியமாகவே இருந்தது. ஆனால், அவளை சிந்திக்கவே விடாமல் ஏதோ ஒன்றை இன்பன் அவள் மீது திணித்துக் கொண்டே இருக்க, ஓரளவிற்கு தெளிந்து வரத் தொடங்கி இருந்தாள் சிபி.

                                 காலையில் ஏழு மணிக்கு அவளை எழுப்பி விடுபவன் அவளை அழைத்துக் கொண்டே ஜாகிங் கிளம்பிட, மறுக்க முடியாமல் கடற்கரையில் அவனுடன் மெல்ல நடந்து கொண்டிருப்பாள் அவள். இன்பன் காரை அவன் வீட்டிற்கே அனுப்பி வைத்திருக்க, ஒரு பல்சர் பைக் மட்டுமே இப்போது கையில்.

                                  கல்லூரி இப்போது விடுமுறையாக இருக்க, காலையில் ஒரு தியான வகுப்பில் சேர்த்து விட்டிருந்தான் அவளை. அதை முடித்து இருவரும் ஒன்பது மணிக்கு வீடு திரும்பினால், சிபி தன் டிபன் வேலையை கவனிப்பாள். பெரும்பாலும் இன்பன் டைனிங் டேபிளில் தன் லேப்டாப்புடன் அமர்ந்து கொண்டு அவளை கண்காணித்துக் கொண்டே இருப்பான்.

                                அதை முடித்தால் அடுத்த சில மணி நேரங்கள் கல்லூரி புத்தகங்களை கையில் கொடுத்து தன் அருகிலேயே அமர்த்திக் கொள்வான். மதிய உணவு எப்போதும் இன்பன் கைவண்ணம் தான். சிபி தானே செய்வதாக கூறினாலும் அவளை அனுமதிக்கமாட்டான். மதிய உணவு நேரம் முடிந்து டிவி, மொபைல் என்று சில மணி நேரங்கள் கழிந்தால், அடுத்ததாக குக்கரி க்ளாஸ், அதனுடன் கூடவே பேக்கிங் க்ளாஸ்..

                                இது எல்லாம் முடியவே எட்டு மணியாகிவிட, அங்கும் வாசலிலேயே காத்திருந்து அவளை அழைத்து வருவது இன்பன் தான். அவன் ஜெகனுடன் சேர்ந்து வேலை பார்க்க தொடங்கி இருக்க, இவன் வேலை பெரும்பாலும் கணினியில் தான் என்பதால் அவனால் முழுதாக சிபியை கவனிக்க முடிந்தது.

                            அவ்வபோது கோவில், வீட்டுக்கு அருகே இருக்கும் பார்க், தினமும் பீச் என்று வாழ்க்கை சற்று அமைதியாகவே சென்றது அவர்களுக்கு. சிபிக்கும் இன்பனின் மெனக்கெடல் புரிய, அவனுக்காகவே அவன் முகம் பார்த்தே தன் பொழுதுகளை கழிக்க தொடங்கி இருந்தாள்.

                             இன்பன் இந்த ஒரு மாத  வாழ்க்கையில் ஒருமுறை கூட, கணவனாக எந்த இடத்திலும் தன்னை உணர்த்தவே இல்லை சிபியிடம். அவனுக்கு இப்போதைக்கு சிபி மீண்டு வந்தாலே போதும் என்று இருக்க, அதற்குமேல் வாழ்க்கையை அதன் போக்கிலேயே எடுத்துக் கொள்ள முடிவெடுத்து இருந்தான் அவன்.

                          சிபி, குக்கரி வகுப்புகளுக்கு சென்று வருவதால், அங்கே கற்று கொண்ட பாடங்களை சமையலறையில் கொண்டு வருவதும் சில நேரங்களில் நடக்கும். இன்பனுக்கு கேக், புட்டிங் இதெல்லாம் கொள்ளைப்பிரியம் என்பதால், சிபிக்கும் தானாகவே அதில் ஈடுபாடு வந்திருந்தது.

                           இப்போதும் இன்பனுக்கு மிகவும் பிடித்தமான ரசமலாய் ப்ளாஸ்ட் தான் தயாராகி கொண்டிருந்தது சிபியின் சமையலறையில். எப்போதும் போலவே டைனிங் டேபிளில் இன்பன்.. மெல்லிய முணுமுணுப்பாக “உன் சமையலறையில்…” என்று பாடல் வேறு..

                           அந்த குட்டி அபார்ட்மெண்டில் அவனின் பாடல் எந்த பிரயத்தனமும் இல்லாமலே சிபிக்கு கேட்டுக் கொண்டிருக்க, முகத்தில் ஒரு நிறைந்த புன்னகை தான்.. இந்த ஒருமாத வாழ்வு இன்பனின் மீதான அவளின் காதலை பன்மடங்காக பெருக்கி கொடுத்திருக்க, அவன் மட்டுமே அவள் நினைவில்.

                         அவன் பாடலை ரசித்துக் கொண்டே தனது கேக் வேலைகளை முடித்து கேக்கை பிரிட்ஜில் வைத்து அவள் வெளியே வர, இரு கைகளையும் கன்னத்தில் ஊன்றி அவளை பார்த்து அமர்ந்திருந்தான் இன்பன். அந்த பார்வைக்கு எதிர்ப்பார்வை பார்க்க முடியாமல் வேறு பக்கம் பார்வையை செலுத்திக் கொண்டே அவள் நகர முற்பட, அவள் கையை பிடித்து நிறுத்தினான் இன்பன்.

                         சிபி மெல்ல அவனை ஏறிட்டு பார்க்க, “எங்கே ஓட பார்க்கிற… இன்னிக்கு புக்ஸ் எடுக்கவே இல்ல நீ… காலையிலே இருந்து கேக் செய்யறேன் என்று நேரத்தை ஒட்டியாச்சு…” என்று லேசான கண்டிப்புடன் அவன் குறைபாட

                        சற்று முன்னர் கண்ட அவனின் பார்வையை வலைவீசி தேடி கொண்டிருந்தாள் சிபி. ஆனால், அப்படி பார்க்கவே இல்லையே என்பது போல், வெகு இயல்பாக “புக்ஸ் எடுத்துட்டு வா ரசி..” என்று கூறிக் கொண்டிருந்தான் அவன்.

                       சிபிக்கு இப்போது சந்தேகமே வந்துவிட்டது தான் பார்த்தது உண்மையா என்று.. இன்பனுக்கு அவள் பார்வை புரிய, “இவ வேற மனுஷன் அவஸ்தை புரியாம..”என்று நொந்து கொண்டவன் “சோதிக்கிறாளே என்னைய..” என்று உள்ளுக்குள் புலம்பிக் கொண்டே அமர்ந்து இருந்தான்.

                       சிபி “எனக்கு படிக்கற மூட் இல்ல இப்போ.. நான் அப்புறம் படிக்கிறேன் விடுங்க..” என்று விட்டு நகர்ந்து சென்று சோஃபாவில் அமர்ந்து விட, அவளுக்கு தான் பார்த்தது உண்மையா, இல்லையா என்பதே பெரிய கவலை.

                      இன்பன் சற்று நேரம் வேலையில் ஆழ்ந்து விட்டவன் அதன் பிறகே அவளை கவனித்தான். “ரசிம்மா என்ன யோசிக்கிற..” என்று அவளை நெருங்க, தலையுயர்த்தி அவனை பார்த்திருந்தாள் சிபி. அன்னையின் நினைவில் வருத்திக் கொள்கிறாளோ என்று தோன்ற,அவள் எதிரில் மண்டியிட்டவன் “என்னடா சிபி.. என்னம்மா….” என்று பதட்டத்துடன் வினவ

                      “ஏன் அப்படி பார்த்தீங்க..” என்று கேட்டே விட்டாள்.

                         அப்போது தான் சற்று ஆசுவாசமாக உணர்ந்தான் இன்பன். பதட்டம் இருந்த இடத்தில இப்போது பரவசம் நிறைந்து விட, “எப்படி பார்த்தேன்…” என்று மண்டியிட்ட நிலையிலேயே விசாரணையை ஆரம்பிக்க, இப்போது அவளின் கால் முட்டியில் கைகளை ஊன்றி மீண்டும் தன் கன்னத்தில் கையை வைத்து இருந்தான்.

                       சிபி சோஃபாவில் பின்னால் சாய்ந்து விட, இப்போதும் அதே அர்த்தம் புரியாத பார்வை. “இதுதான்..” என்று தனக்குள்ளாக முணுமுணுத்து அவள் அமர்ந்திருக்க, தன் கால்களில் இருந்த அவன் கையை பார்த்தவள் “அப்பாவும் இப்படி தான் பார்த்தீங்க, நான் பார்க்கவும் படிக்க சொல்லியாச்சு.. இப்போவும்…” என்று சிணுங்களாக கூறி முடிக்க

                       “ஹேய் குட்டிப்பொண்ணு.. ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை குட்டி பொண்ணுன்னு நிரூபிச்சிட்டே இருக்கடா நீ… ” என்று அவள் நெற்றியில் சற்று எட்டி இதழ் பதித்தவன் எழுந்து அவள் அருகில் அமர்ந்து கொண்டான்.

                      “சொல்லுங்க.. ஏன் அப்படி பார்த்தீங்க..” என்று மீண்டும் அவள் அங்கேயே வந்து நிற்க

                    “இந்த குட்டி பொண்ணு, என் கண்ணனுக்கு கொஞ்சம் பெரிய பொண்ணா தெரிஞ்சா, லேசா சைட் அடிச்சேன்..” என்று அலட்டிக் கொள்ளாமல் அவன் கூற

                     “யாராவது பொண்டாட்டியை சைட் அடிப்பாங்களா…”

                     “இப்படி அழகா ஒரு பொம்மை பொண்டாட்டியா இருந்தா, கண்டிப்பா சைட் அடிக்கலாம்… ” என்று புருவங்களை ஏற்றி இறக்கினான் அவன்..

                     அவன் பதிலில் சற்றே வெட்கம் வர, சிவந்த முகத்துடனே “நன் பார்த்த உடனே, ஏன் திருப்பிக்கிட்டிங்க.. படிக்க வேற சொன்னிங்களே..”

                        “என்ன பண்றது குட்டிப்பொண்ணு என்ன நினைக்கிறா தெரியலையே.. அதோட படிப்பும் இருக்கேடா கண்ணம்மா…” என்று பொறுப்பான கணவனாகவே பதில் கொடுத்தான் அவன்.

                         சிபிக்கு அவன் நிலை புரிய, தானாகவே அவன் தோளில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள். இன்பன் அவள் முகம் நிமிர்த்தியவன் “ஹேய் தங்கப்பொண்ணே… படிக்கிற வேலையை மட்டும் பாரு நீ.. இதையெல்லாம் யோசிக்காத..” என்று கண்டிப்புடன் மீண்டும் அவன் வலியுறுத்த, சிபிக்கு அவரை விலகும் எண்ணமே இல்லை.

                      அவனை சுற்றி கைபோட்டு அணைத்திருந்தவள், அவன் நெஞ்சில் அழுத்தமாக புதைந்து கொள்ள, பூனைக்குட்டியாய் அவன் நெஞ்சில் உரசிக் கொண்டிருந்தாள். இன்பன் “ஹேய் இது சரிவராது.. எழுந்துக்கோ குட்டிம்மா… “என்றவன் “வெளியே எங்கேயும் போவோமா.. பீச் போகலாமா..” என்று கேட்க

                         அவனின் எண்ணம் புரிந்தவளாக தலையசைத்து அவனுடன் கிளம்பி இருந்தாள் சிபி. அன்றைய தினம் ஒரு ஞாயிற்று கிழமையாக இருக்க, சென்னை மெரினா கடற்கரை சற்றே பரபரப்பாக காணப்பட்டது. கூட்டம் குறைவான ஒரு இடத்தில் நின்று கொண்டு சூரிய அஸ்தமனத்தை கண்ணெடுக்காமல் பார்த்து நின்றனர் இருவரும்.

Advertisement