Advertisement

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 22

                        மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் ஜெயந்தி அனுமதிக்கப்பட்டு இருக்க, அவரின் நிலை கவலைக்கிடமாக இருந்தது. மருத்துவர்கள் எதையும் இன்னும் நம்பிக்கையாக சொல்லி இருக்கவில்லை. தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருக்க, அதிகப்படியான ரத்தப்போக்கு வேறு.. ஒரு நிமிடம் எதையும் யோசிக்காமல் யாதவ் செய்திருந்த செயல் ஜெயந்தியின் உயிரை மொத்தமாக குடித்துவிட நேரம் பார்த்துக் கொண்டு காத்திருந்தது.

                        ஜெயந்தி இப்போது வரை சுயநினைவே இல்லாமல் தான் இருந்தார். அந்த தீவிர சிகிச்சை பிரிவிற்கு வெளியே சிபியும், இன்பனும் அமர்ந்திருக்க, சிபியின் கண்களில் கண்ணீர் நிற்கவே இல்லை. அவள் அன்னையை ரத்த வெள்ளத்தில் கண்ட நொடி முதலாகவே அழுது கொண்டு தான் இருக்கிறாள். உடன் இன்பன் இருக்கவும், அவன் அனைத்தையும் கவனித்துக் கொள்ள, அவள் மொத்தமாக அன்னையை மட்டுமே நினைத்து கலங்கி கொண்டிருந்தாள்.

                        இன்பன் அவளை சமாதானம் செய்ய எவ்வளவோ முயற்சி செய்ய, அவளின் கண்ணீரை நிறுத்தவே முடியவில்லை அவனால். அவள் அருகில் சென்றாலே “அம்மாக்கு ஒன்னும் இல்லல்ல.. சரியாகிடுவாங்க இல்ல..” என்று அவள் கண்ணீருடன் கேட்க, அவளுக்கு என்ன பதில் சொல்ல முடியும் அவனால்.

                      மருத்துவர்கள் நேரம் கடத்துவதிலேயே அவனுக்கு நிலைமையின் தீவிரம் சற்றே புரிய ஆரம்பித்து இருந்தது.. அவனும் அவனுக்கு தெரிந்த அத்தனை தெய்வங்களிடமும் வேண்டிக் கொண்டு தான் இருக்கிறான், எப்படியாவது அவரை மீட்டுக் கொடுத்துவிடு என்று.. ஆனால், கடவுள் கண்ணை திறக்க வேண்டுமே…

                      இன்பன் சிபியை தூர நின்று பார்த்துக் கொண்டிருந்த நேரம் தான் அவன் நண்பன் ஜெகன் அந்த மருத்துவமனையை வந்தடைந்தான். அவன் தோழி எல்லாம் சென்னையில் தான் என்பதால் பெரும்பாலும் ஜாகை எல்லாம் சென்னையில் தான். இப்போதும் சென்னையில் இருந்தவன் நண்பன் அழைக்கவும் அந்த இரவு நேரத்தில் ஓடி வந்திருந்தான்.

                     இன்பன் ஜெகனை கண்ட நொடி அவனை அணைத்து கொள்ள, அந்த நிமிடம் முதல் நடந்த அத்தனை விஷயங்களுக்கும் அவனறியாமலே மௌன சாட்சியாக மாறிக் கொண்டிருந்தான் ஜெகன். கிட்டத்தட்ட நேரம் நள்ளிரவை நெருங்கி கொண்டிருக்க, அங்கிருக்கும் சூழ்நிலையின் கணம் குறையவே இல்லை.

                     சிபி இப்போது இன்பனின் தோளில் லேசாக சாய்ந்தபடியே உறக்கமா?? மயக்கமா?? என்று பிரித்தறிய முடியாத ஒரு நிலைக்கு சென்றிருக்க, ஜெகன் அவர்களை விட்டு சற்று தள்ளி அமர்ந்திருந்தான். அந்த நேரம் மருத்துவர்கள் சற்று பரபரப்பாக ஜெயந்தியின் அறைக்குள் நுழைய, இன்பனுக்கு உடல் வெளிப்படையாகவே நடுங்கி கொண்டிருந்தது.

                    தன் தோளில் சாய்ந்து உறக்கத்தில் இருந்தவளுக்கு என்ன பதில் சொல்வது என்பது தான் அவனின் முதல் கவலையாக இருந்தது. அவன் பயந்தது போலவே அடுத்த அரைமணி நேரத்தில் ஜெயந்தியை பார்க்க அவர்களை மருத்துவர்கள் அனுமதிக்க, லேசாக கண்களை திறந்து பார்த்தார் ஜெயந்தி.

                      அவரைக் கண்ட நிமிடம் சிபி, “அம்மா..” என்று கதறிக் கொண்டு அவர் அருகில் செல்ல, அந்த தாய்க்கு தன் முடிவு தெரிந்து விட்டதோ என்னவோ, வலியின் சாயல் தெரிந்ததே தவிர முகத்தில் பெரிதாக கவலையோ, கண்ணீரோ இல்லை.

                      தன் அருகில் நின்றிருந்த மகளையும், இன்பனையும் அவர் பார்த்துக் கொண்டே இருக்க, லேசாக கையை உயர்த்தி இன்பனை அருகில் அழைத்தார் அவர். இன்பன் அவர் முகத்திற்கு அருகில் வந்தவன் “சிபிக்கு நான் இருக்கேன்மா.. எப்பவும் அவளோட நான் இருப்பேன்..” என்று அவர் மனம் வேண்டியதை அவரிடம் கூற, அவர் கண்களில் இருந்து ஒரு துளியாக கண்ணீர் தலையணையில் வழிந்தது.

                         இன்பனின் கையை லேசாக பிடித்துக் கொண்டவர், சிபியை பார்க்க, இன்பன் சிபியை மெல்ல நிமிர்த்தவும், அவளின் கையை பிடித்து இன்பனிடம் கொடுத்ததோடு சரி.. தன் கடமை முடிந்தது என்று நினைத்திருப்பார் போலும், நிம்மதியாக கண்ணை மூடி விட்டார் ஜெயந்தி.

                        சிபி அதிர்ச்சியில் “அம்மா…” என்று பெருங்குரலில் கத்தி அழ, இன்பன் மௌனக்கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தான் அவ்வளவே வித்யாசம். ஆனால் ஓரிரு நொடிகளில் இன்பன் தன்னிலை உணர்ந்துவிட, அதன் பின்னான காரியங்கள் மொத்தத்தையும் தானே கையில் எடுத்துக் கொண்டான்.

                       தன் காவல்துறை நண்பனுக்கு அழைத்து விஷயத்தை தெரியப்படுத்தியது முதல், ஜெயந்தியின்  உடலை வீட்டிற்கு எடுத்து வந்தது, செய்ய வேண்டிய முறைகளை அவருக்கு மகனாக இருந்து செய்து முடித்தது அத்தனையும் அவன் தான். சிபியின் வீட்டிற்கு அருகில் இருந்தவர்களும், சிபியின் நிலை உணர்ந்து ஆதரவாகவே இருக்க, உறவுகளை விட மேம்பாட்டு நின்றனர் அந்த நட்புகள்.

                     ஞானமும், மேகலையும் ஜெயந்தியின் இறப்புக்கு இறுதிவரை வரவே இல்லை. காவல் நிலையத்தில் இருந்த மகனை வெளியில் எடுப்பதில் அவர்கள் மும்முரமாக இருக்க, இங்கே அணைத்து காரியங்களும் நல்லபடியாக முடிந்து போயிருந்தது.

                    ஒரே நாளில் சிபியின் வாழ்வு சூன்யமாய் மாறி இருக்க, அவளுக்கென்று இருந்த ஒரே உறவையும் கடவுள் பறித்துக் கொண்டதாகவே எண்ணினாள் அவள். எப்போதும் அழுகை, இல்லை ஒரு வெறித்த பார்வையுடனே அவள் அமர்ந்திருக்க, அவளைவிட்டு எங்கே நகர்வது அவன்.

                    அவன் வீட்டிலிருந்து கிளம்பி இரண்டாவது நாளும் முழுதாக முடிந்திருக்க, இன்னமும் சிபி தெளியவே இல்லை. அவளை தனித்து விடும் அளவுக்கு இன்பனுக்கு அவள்மீது நம்பிக்கை இல்லாமல் போக, அந்த சூழ்நிலையில் தான் அவளை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தான் அவன்.

                    ஜெகனிடம் கூறி அதற்கான ஏற்பாட்டை கவனிக்குமாறு கூற, ஜெகன் முடியவே முடியாது என்று நின்றான். மதுசூதனனிடம் சொல்லி விடுவோம் என்று அவன் வற்புறுத்த, “எப்போ இருந்தாலும் அவளைத்தான் கல்யாணம் பண்ணப்போறேன் ஜெகா.. அதை நாளைக்கே செஞ்சா என்ன ஆகிடும்.. நீ என்ன செய்யணுமோ செஞ்சிடு.. கோவில் எல்லாம் வேண்டாம், ரெஜிஸ்டர் பண்ணிடுவோம்…” என்று நிதானமாக இன்பன் கூறிவிட

                  “உன் அப்பாகிட்ட சொல்லிட்டே செய்வோமேடா… எப்படியும் தெரிய போறது தானே.. நீ ஒருமுறை கேட்டு பாரேன்..” என்று ஜெகன் அப்போதும் சொல்ல

                   “நிச்சயமா ஒத்துக்க மாட்டாரு ஜெகா.. கூடவே சிபியையும் காயப்படுத்திடுவாங்க.. ஏற்கனவே நொந்து போயிருக்கா…”

                 “நீ கல்யாணம் பண்ணிட்டு கூட்டிட்டு போனா, நோகடிக்க மாட்டாங்களா இன்பா…” என்று அப்போதும் அவன் வாதாட, “என் மனைவியை பேசுற தைரியம் யாருக்கு வரும்… சிபியை அவங்க பார்க்கும்போது அவ என் மனைவியா தான் இருக்கணும்…” என்று அழுத்தமாக கூறியவன் மேலும்,

                     “அப்பவே ஒத்துக்கிட்டாலும், பாட்டியும், கலையரசனும் விட மாட்டாங்க ஜெகா.. நான் எல்லாத்தையும் யோசிச்சு தான் சொல்றேன்.. அம்மாவையும், அப்பாவையும் எப்படி சரிபன்றது எனக்கு தெரியும்.. நீ நான் சொன்னதை செய்..” என்றுவிட, அதற்குமேல் யோசிக்காமல் ஜெகன் பதிவுத் திருமணத்திற்கு தேவையான ஏற்பாடுகளை கவனிக்க கிளம்பி இருந்தான்.

                     இன்பனின் அன்னை அவனுக்கு அழைத்துக் கொண்டே இருக்க, அவரிடம் நண்பர்களுடன் இருப்பதாக சொல்லி சமாளித்து இருந்தான். இப்போதும் அவரின் அழைப்பை ஏற்று பேசியவன் ஒரு குற்றவுணர்வுடனே அவருக்கு பதில் சொல்லிவிட்டு நாளை வருவதாக கூறி அழைப்பை துண்டித்து இருந்தான்.

                   பேசி முடித்து அவன் உள்ளே வர, ஒரு டேபிளில் வைக்கப்பட்டு இருந்த அன்னையின் புகைப்படத்தையே வெறித்துக் கொண்டு வெறும் தரையில் கண்ணீருடன் படுத்திருந்தாள் சிபி. இதுவரை இண்பனிடம் ஒரு வார்த்தை கூட பேசி இருக்கவில்லை… நேற்று அவள் அன்னையின் இறுதி காரியங்கள் முடிந்ததில் இருந்தே இதே நிலைதான்.

                   நேற்று முழுவதும் பிடிவாதமாக எதையும் சாப்பிடாமல் அவள் கழித்திருக்க, இன்றும் மதியம் மட்டுமே போராடி, கொஞ்சமாக உண்ண வைத்திருந்தான். இப்போதும் அவளுக்கென வாங்கி வந்திருந்த உணவு தூரத்தில் இருக்க, இன்பன் அதை எடுத்துக் கொண்டு அவளின் அருகில் வந்து அமர்ந்தான்.

                    “எழுந்து  உட்காரு ரசிம்மா.. சாப்பிட்டு படுத்துக்கோ..” என்று அவள் முகம் பார்க்க, அவன் பேசியது காதில் விழுந்ததாக கூட தெரியவில்லை. இன்பன் அவள் கையை பிடித்து எழுப்பி அமர்த்தி அவளின் முகம் பார்க்க, அப்படி ஒரு பார்வை பார்த்திருந்தாள் அவனை.

                  அவளின் பார்வையை தாங்காதவன் “ரசி என்னடா பண்ற.. ஏன் இப்படி இருக்க…” என்று அவளை அணைத்து கொள்ள, அவன் தோளில் முகத்தை புதைத்தவள் “அம்மா.. அம்மா..” என்று மீண்டும் சிறுபிள்ளையாய் அழுது கொண்டிருக்க, அவளின் கண்களை மென்மையாக துடைத்து அவளை எழுப்பி குளியலறைக்கு அழைத்து சென்றவன் அவள் முகத்தில் தண்ணீர் அடித்து கழுவிவிட, லேசாக விசும்பிக் கொண்டே வந்து அவன் காட்டிய இடத்தில அமர்ந்தாள்.

                    அவனே இட்லியை பிய்த்து ஊட்டிவிட, அவள் மறுப்பாக தலையசைக்கவும், “நேத்துல இருந்து சாப்பிடல ரசி… உடம்பு என்னது ஆகுறது.. நீ சாப்பிடறியா இல்ல நான் கிளம்பி போயிட்டே இருக்கவா..” என்று மிரட்ட, கண்ணீர் வடிந்தது கண்களில்.

Advertisement