Advertisement

இதற்குள் சுதாரித்து கொண்டவள் “ம்ம்ம்..” மட்டுமே சொல்ல

                          “என்ன நினைக்கிற சிபிம்மா நீ.. இப்படி அழுதா என்ன நினைக்கட்டும் நான்.. எதுக்காக அழற.. என்ன பண்ணுது உனக்கு.. உடம்பு எதுவும் முடியலையா.. இல்ல.. அந்த உன் மாமப்பையன் எதுவும் பிரச்சனை பண்றானா?? இல்ல வேற எதுவும் பிரச்சனையா..” என்று அவளை பேசவே விடாமல் அவன் கேள்விகளாக அவள் முன் அடுக்கி வைக்க

                         “இல்.. ஒண்ணுமில்ல..” என்று இரெண்டே வார்த்தை தான் பதில்..

                         “அப்புறம் ஏண்டாம்மா அழற…” என்று அவன் மீண்டும் கொஞ்ச

                          “தெரியலையே…” என்றவளுக்கு மீண்டும் அழுகை வரும்போல் இருந்தது. அவனின் இந்த குரலும், கொஞ்சலும் தான் தன்னை பலவீனமாக்குகிறது என்று எப்படி சொல்வாள் அவள்.. அவனின் உருக்கமான அந்த வார்த்தைகளிலும், வார்த்தைகளுக்கிடையேயான அந்த சொல்லப்படாத அக்கறையிலும் நிச்சயமாக உருகித்தான் போயிருந்தாள் அவள்.

                            மீண்டும் மென்குரலாக அவளின் விசிப்புசத்தம் இன்பனின் செவியை நிறைக்க, ” சும்மா அழக்கூடாது சிபி… நீ வெளியே வா… நான் காலேஜ் வெளியே வெயிட் பண்றேன்.. வா..” என்று கூறி அவன் அழைப்பை துண்டிக்க போக

                             “இல்ல… வேண்டாம்…” என்று அவசரமாக தடுத்தவள் “என்னால வரமுடியாது ப்ளீஸ்..” என்றுவிட

                            “அப்போ அழாத.. அழாம பேசு என்கிட்டே..” என்று கட்டளையிட்டான் அவன்.

                           “என்ன.. என்ன பேசணும்..” என்று அவள் திக்கி திணற

                            “என்ன செய்யுது உனக்கு.. உடம்பு ஏதாவது முடியலையா..”

                           “இல்ல.. நல்லா தான் இருக்கேன்..” என்று சிறுபிள்ளையாய் முறுக்கி கொண்ட குரலில் அவள் பேசிக் கொண்டிருக்க

                          “நல்லா இருந்தா எப்படி மயக்கம் வரும்..”

                          “காலையில சாப்பிடல.. அதனால இருக்கும்..” என்று கடமையாக அவள் பதில் கூறிவிட

                       “சரி.. ஆனா, அழுகை எதுக்கு வருது…” என்று மீண்டும் துருவ

                       “எனக்கு தெரியலைங்க.. அங்கே உங்களை பார்த்ததும்.. தெரியல, அழுதுட்டேன்..” என்றவள் அதற்குமேல் சொல்லாமல் விட

                         “உன்னை ரொம்ப தொந்தரவு பண்றேனா சிபி..பிடிக்கலையா…” என்று வேண்டுமென்றே அவன் பாவமாக கேட்க, நிச்சயம் பலன் இருந்தது..

                          “இல்ல.. அப்படி இல்ல…” என்றுவிட்டவள் “எனக்கு எப்படி சொல்றது தெரியல…” என்று அவள் நிறுத்திக் கொள்ள

                             “என்னை தேடறியா சிபிம்மா..” என்றவனின் குரலில் இப்போது லேசாக உற்சாகம் எட்டிப்பார்க்க

                            “ம்ம்ம்… அதெல்லாம் இல்ல..” என்று அவசரமாக சொன்னவள் அதே வேகத்தில் மௌனமாகி விட, இன்பனின் சிரிப்பு சத்தம் மட்டுமே கேட்டது அங்கே..

                              “சிபிம்மா…” என்று அவன் அழைக்க

                             “நீங்க என்னை மறந்துட்டீங்க தானே…” என்று மெல்லிய குரலாக அவள் கேட்டு வைக்க

                             “உன்னையா.. என்னால முடியும்ன்னு தோணுதா உனக்கு…” என்று சட்டென அவன் கேட்க, அவளிடம் பதிலில்லை.

                               “என்னை தேடிட்டே இருந்தியா பொண்ணே..” என்று மீண்டும் அவன் கேட்க

                              “இல்ல..” என்று திடமாகி அவள் கூற

                              “இல்லையே.. நீ ரொம்ப தேடினதா கேள்விப்பட்டேனே…”

                               “அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல.. யார் சொன்னது உங்களுக்கு..”

                               “யாரும் சொல்ல வேண்டாம்.. நீ சொல்லு.. ரெண்டு நாளா  எவ்ளோ நேரம் ஆன்லைன்ல இருந்த .. எத்தனை தடவை மெசேஜ் வந்திருக்கா செக் பண்ண..” என்று அவன் சரியாக கேட்க, சட்டென பொய்யுரைக்க வரவில்லை சிபிக்கு. அவளின் அந்த மௌனமே இன்பனுக்கு தேவையான விடையை கொடுத்துவிட, அவன் முகத்தில் உயிரோட்டமான ஒரு புன்னகை குடிகொண்டது.

                                சிபி அவன் கண்டுகொண்டதில் எப்படி உணர்ந்தாள் என்று புரியாத நிலையில் ஒரு பிரம்மையில் தான் இருந்தாள். அடுத்து என்ன என்று மனம் வேறு கேட்டு கொண்டே இருக்க, இன்பனின் நினைவை ஒதுக்கி வைக்கவும் முடியவில்லை அவளால்.

                              இப்படி கையும் களவுமாக பிடித்ததை போல் தன்னை கண்டு கொள்வான் என்று எதிர்பார்த்து இருக்காததால் அவள் மௌனமாகவே இருக்க, “சிபி.” என்று அழைத்தவன் அவள் மோனத்தில்

                           “சிபிம்மா..” என்று மீண்டும் உருக

                           “வீடியோ கால் பண்ணவா..” என்றான் மறுநிமிடம்…

                        சிபிக்கு அவன் முகம் பார்க்கும் அளவு தைரியம் இல்லாமல் போக, “வேண்டாம்..வேண்டாம்..” என்றுவிட்டாள்.

                         “ஹேய் கண்ணம்மா.. இதுக்கு மட்டும் ரொம்ப வேகமா பதில் வருதே டா..” என்று சிரித்தவன் “சரியா ரெண்டே நிமிஷம்.. உன் முகத்தை மட்டும் பார்க்கணும் எனக்கு.. நீ அழுததே ஞாபகத்துல இருக்குடா ப்ளீஸ்..” என்று அவன் கெஞ்ச, சற்று பயத்துடனே தான் ஒப்புக் கொண்டாள் சிபி…

                       அடுத்த நிமிடம் அழைப்பை துண்டித்து அவன் வீடியோ காலில் அழைக்க, அழைப்பை ஏற்றவளுக்கு அவன் முகத்தை பார்க்கவே அத்தனை தயக்கமாக இருந்தது…இன்பனுக்கு அப்படி எதுவும் இல்லாததால், அவள் முகத்தை ஆற அமர பார்த்து ரசித்தவன், தன் பார்வைக்கே சிவந்து போய்விட்ட அவளின் முகத்தை அத்தனை ஆதுரமாக பார்த்திருந்தான்.

                         அவன் மௌனத்தில் அவள் சற்றே நிமிர்ந்து பார்த்த கணம் “நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா… தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்…” என்றுசிரிப்புடன் அவன் பாட, சட்டென பார்வையை தழைத்துக் கொண்டாள் அவள்.

                       அவளை மேலும் சீண்டி பார்க்கும் ஆவல் ஏற்பட,

                               “ஞாயிறு என்பது கண்ணாக, திங்கள் என்பது பெண்ணாக, 

                                   செவ்வாய் கோவை பழமாக, சேர்ந்தே நடந்தது அழகாக..” என்று அடுத்தும் அவன் பாடிட, அவனை நிமிர்ந்து பார்க்க முடியாத அளவுக்கு ஒரு வெட்கம் அவளிடம்.

                             இதற்கும் மேல் தங்கமாட்டாள் என்பது புரிந்தவனாக “ரசி.. நிமிர்ந்து பாருடா…” என்று மெல்லிய குரலில் அவன் கூறவும், அவன் அழைப்பில் இருந்த வித்தியாசத்தில் கேள்வியாக அவள் நிமிர்ந்து பார்க்க,

                               “நீதான் ரசி… என்னோட ரசிகை ஆகிட்டே இல்ல.. நானும் உன்னை ரசிக்க தொடங்கிட்டேனே அதான் சிபிம்மா, ரசிம்மா ஆகிட்டா…” என்று அவன் விளக்கம் கொடுக்க

                              பிடித்திருந்தாலும் “நீங்களே நினைச்சுப்பிங்களா.. நான் உங்களை ரசிக்கிறதா..” என்று தயங்கி கொண்டே அவள் கேட்டுவிட

                           மெல்லியதாக விசில் எழுப்பியவன் “பேச்சும் வருதே என் செல்ல பொண்ணுக்கு…” என்று மீண்டும் தொடங்க

                         எங்கோ ஒளிந்திருந்த பயப்பந்து மீண்டும் அவள் தொண்டைகுழியில் வந்து நிற்க “இப்படியெல்லாம் பேசாதிங்களேன்.. சத்தியமா பயமா இருக்கு எனக்கு.. ஏதோ தப்பு பண்றது போல, என் அம்மா முகத்தை கூட என்னால பார்க்கவே முடியல… இதுல நான் எப்படி..” என்று அவள் கண்கள் கலங்கியவளாக உரைக்க, அவளின் நிலையை புரிந்து கொள்ள முடிந்தது இன்பனால்.

                            “எனக்கு புரியுது சிபி.. நான் என்ன செய்யட்டும் சொல்லு.. உன் அம்மாகிட்ட பேசவா.. இந்த தங்கப்பொண்ணை எனக்கு கொடுத்திடுங்க னு ப்ரீபுக்கிங் போட்டுடவா… இல்ல என்  அப்பாவை பேச சொல்லவா…” என்று விளையாட்டாக அவன் கேட்க

                           “எனக்கு என்ன சொல்றது தெரியல.. ஆனா, மனசு முழுக்க பயம்தான் இருக்கு..” என்று தன் நிலையை மறைக்காமல் அவள் கூறிவிட

                          “நாம எந்த தப்பும் பண்ணல ரசிம்மா.. நீ இப்படி பயப்பட எதுவுமே இல்ல.. யார் கேட்டாலும் தைரியமா என்னை கைகாட்டு.. இன்பன் எப்பவும் உன்னோட தான்.. இன்பனுக்கு வாழ்க்கை ன்னு ஒன்னு இருந்தா அது எப்பவும் என் சிற்பத்தோட தான்.. யாராலயும் அதை மாற்ற முடியாது…புரியுதா..” என்று மென்குரலில் கொஞ்சம் அழுத்தமாக அவன் உறுதி கொடுக்க

                        மெல்ல தலையசைத்தாள் அவள். “உன் அம்மாகிட்ட வந்து பேசவா..” என்று மீண்டும் ஒருமுறையும் அவன் கேட்க, இதற்கு மேல் எதுவும் சொன்னால், அவனை நம்பாதது போல் ஆகி விடுமோ என்று மறுப்பாக தலையசைத்தாள் சிபி.

                          “இந்த குட்டி மண்டைக்குள்ள இருந்த எல்லா டென்ஷனும் போய்டுச்சா.. இனிமே இந்த குட்டிப்பாப்பா அழாம இருக்குமா..” என்று அவளை ரசனையாக நோக்கி கொண்டே அவன் கேட்க

                        அதற்கும் தலையசைப்பு மட்டுமே பதிலாக வந்தது அவன் சிற்பத்திடம்… அன்று தொடங்கிய அவர்களின் காதல் அதன் பின்னான நேரங்களில் பொங்கி பெருகி புதுவெள்ளமாய் இருவரையும் அடித்துக் கொண்டு சென்றது என்றுதான் சொல்லவேண்டும்.

                          இன்பன், சிபியின் காதல் யாருக்கும் சொல்லப்படாத ரகசியமாகவே அமைந்துவிட்டது. இருவருமே பெரிதாக எந்த முயற்சியும் எடுக்காமலே அவர்களின் காதல் ரகசியத்தில் சேர்ந்து விட்டது. இன்பன் பெரும்பாலும் சிபியை அழைப்பது காலை வேளைகளில் தான்.

                          அவளின் நேரத்திற்கு ஏற்றபடி தானும் கிளம்பிவிடுபவன் காரில் ஏறிய நிமிடம் அவளுக்கு அழைத்து விடுவான். அந்த நேரம் சிபியும் கல்லூரிக்கு வந்து விடுவாள் என்றாலும், பெரிதாக அவள் வகுப்பில் யாரும் இருக்க மாட்டார்கள் என்பது அவளுக்கு வசதியாக போனது.

                           அடுத்த ஆறு மாதங்கள் அத்தனை இனிமையாக கழிய,  இவர்களின் காதல் யாரின் இடையூறும் இல்லாமல் வேர்விட்ட கொடியாக தன்னை வளர்த்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் இன்பனின் பிறந்த நாள் வந்தது. என்றும் இல்லாத திருநாளாக அவளை வெளியே வரச்சொல்லி அவன் நச்சரிக்க, முதலில் மறுத்து பார்த்தவள் அவனின் முகவாட்டத்தை பொறுக்க முடியாமல் அவனுடன் வர சம்மதித்து இருந்தாள்.

                           அவள் அன்னையிடம் கெஞ்சி, வகுப்பில் உள்ள விடுதி தோழிக்கு பிறந்தநாள் என்று சொல்லி, அவரை குளோப் ஜாமுன் செய்ய வைத்தவள் அதை எடுத்துக் கொண்டு புறப்பட்டு இருந்தாள்.

                                                      அன்றைய கல்லூரி நேரம் முடியவும், நண்பர்களிடம் வீட்டில் வேலையிருப்பதாக கூறி விட்டு வெளியே வந்தவள் பேருந்து நிலையத்தை அடைய, அடுத்த நிமிடம் தன் காரை அவள் முன் கொண்டு வந்து நிறுத்தி இருந்தான் இன்பன்.

                        முகம் நிறைந்த சிரிப்புடன் அவன் கார்கதவை திறந்துவிட, அவனுக்கு சற்றும் குறையாத புன்னகையுடன் அவன் அருகில் ஏறி அமர்ந்தாள் சிபி. காரை வேகமாக கிளப்பியவன் அடுத்த பதினைந்து நிமிடத்தில் அவளை பீச்சிற்கு அழைத்து வந்திருக்க, மதிய நேரம் என்பதால் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது.

                         இன்பன் காரை நிறுத்தியவன் காரில் இருந்து இறங்காமல், தன் கைகளை நீட்டி சிபியை தன்னருகே இழுத்துக் கொள்ள அவர்களின் முதல் நெருக்கம், சிபிக்கு அதற்கே உடல் எல்லாம் நடுங்கி போக, மெல்ல அவளை விடுவித்தவன் அவளின் முகத்தை பார்த்ததும் சத்தமாகவே சிரித்து விட்டான்.

                        “என்ன பண்ணிட்டேன் இப்போ.. இந்த ரியாக்க்ஷன் கொடுக்கிற ரசி..” என்றவன் அவள் உணரும் முன்பாகவே அவளின் வலது உள்ளங்கையில் தன் இதழை அழுத்தமாக பதித்து இருந்தான்… “இதுதான் பெஸ்ட் கிப்ட்..” என்று சிரிக்க, வெட்கத்துடன் கைகளை இழுத்துக் கொண்டவள் தன் கைப்பையில் இருந்த ஜாமூனை அவனுக்கு கொடுக்க, அவளை ஊட்டிவிட சொல்லவும், வெட்கத்துடன் ஸ்பூனில் ஊட்டிவிட்டாள் அவள்.

Advertisement