Advertisement

தொடர்ந்து அழைப்பு வரவும், சிபியும் அதற்குமேல் யோசிக்காமல் அழைப்பை ஏற்று “ஹலோ” என்று ஒற்றை வார்த்தை உரைத்து காத்திருக்க, எதற்காக அழைத்தோம் என்பதே மறந்து விட்டது இன்பனுக்கு.

                       சிபி எதிர்முனையில் இன்னமும் இரண்டு மூன்று முறை ஹலோ..ஹலோ.. என்று கத்தி இருக்க, “சிபி..” என்று ஆழ்ந்த குரலில் மென்மையாக அவளை தீண்டிய அந்த குரல் அவளை ஏதோ செய்தாலும் கூட, நிச்சயம் குரலுக்கு உரியவனை ஊகிக்கவே முடியவில்லை அவளால்.

                     தனது வழக்கமான குரலில் “ம்ம்.. சொல்லுங்க.. யாரு..” என்று அவள் அப்போதும் கேள்வியாக நிறுத்த

                     “பாப்பாவே தாண்டி.. எப்படி கொஞ்சுறா போலவே கேட்கிறா பாரு..” என்று சீராட்டிக் கொண்டவன் முயன்று தன்னை இயல்பாக்கி கொண்டு இம்முறை சற்று அழுத்தமாக “சிபி..” என்று அழைக்க

                     “இன்பா சார்…” என்று அப்போதும் ஒரு சந்தேகத்தோடு கேட்டு நின்றாள் பெண்..

                       “சார் இல்ல.. இன்பா தான்..” என்று இன்னும் அழுத்தமாக இன்பன் உரைக்க

                       அவன் கூறியதை காதில் வாங்காமல் “சொல்லுங்க சார்…” என்று பவ்யமாக கல்லூரி ஆசிரியரிடம் பேசுவது போல் மரியாதையாகவே அவள் கேட்க

                         “ஐயோ.. செல்லம்மா.. கொஞ்சமே கொஞ்சம் வளர்ந்துடேண்டி.. ” என்று செல்லமாக சலித்து கொண்டவன் “சிபி… சார் சொல்லாத..” என்றான்..

                       சிபி “இதை சொல்லவா கால் பண்ணான்..” என்பது போல் தன் அலைபேசியை காதிலிருந்து எடுத்து பார்த்தவள், இம்முறை வெறுமே “சொல்லுங்க..” என்று விட

                      “இன்பா சொல்லமாட்டியா சிபி..” என்று ஏக்கத்துடன் அவன் குரல் ஒலிக்க, இந்த முறை அவன் குரலின் பேதம் மெல்ல பிடிபட்டது பெண்ணுக்கு… குழந்தையாகவே இருந்தாலும், இயல்பான சுதாரித்து பெண் குழந்தைகளுக்கே உரித்தானது தானே.. அந்த வகையில் இந்த குழந்தையும் மெல்ல, அவனை உணர்ந்து கொள்ள தொடங்கியது அப்போது தான்..

                   இன்பனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவள் மௌனம் சாதிக்க, “பேசு சிபி..” என்று மீண்டும் ஒலித்தது இன்பனின் குரல்..

                  “என்ன பேசணும் சார்..நீங்க எதுக்காக கூப்பிட்டிங்க சொல்லவே இல்லையே…” என்று எட்டி நிறுத்தும் ஒரு பாவனையில் அவள் பேச்சை தொடர

                  “இந்த சாரை விடவே மாட்டியா..” என்று அலுத்து கொண்டான் அவன்.

                 “நீங்க என்னோட காலேஜ் போர்டு மெம்பெர்.. கிட்டத்தட்ட என் காலேஜ் ஓனர்.. நான் வேற எப்படி உங்களை கூப்பிட முடியும்…” என்று தெளிவாக அவள் பதில் கொடுக்க, ஒரே நிமிடத்தில் வளர்ந்து விட்டாளே என்று அதிசயமாக தான் இருந்தது அவனுக்கு…

                   ஆனாலும், “என்னோட பேர் பேரின்பன் சிபி.. என் வீட்ல இன்பா ன்னு கூப்பிடுவாங்க.. நீ உன் இஷ்டம் போல கூப்பிடலாம்.. ஆனா, சார் மட்டும் போடாத.. ப்ளீஸ்…” என்று கெஞ்சியவனின் குரலை முழுதாக நிறைத்திருந்தது கொஞ்சல் மட்டுமே…

                  சிபிக்கு இன்பனின் இந்த குரலும், அவனின் கெஞ்சலும் சரியாகவே படவில்லை. “என்ன விஷயம் ன்னு நீங்க சொல்லவே இல்லை இன்னும்..” என்று அவனுக்கு நினைவூட்ட

                   “உன்னை இன்பா ன்னு கூப்பிட வைக்கத்தான் கூப்பிட்டேன் ன்னு நினைச்சுக்கோயேன்.. இன்பா சொல்லு சிபி..” என்று அவன் பிடிவாதமாக அவன் நிற்க

                   “எனக்கு வீட்டுக்கு கிளம்பனும்.. டைம் ஆச்சு..” என்றாள் அவள்..

                   “சிபி… இது நீ லைப்ரரில இருக்க நேரம் தானே.. வீட்டுக்கு கிளம்ப இன்னும் நேரமிருக்கே..” என்று கேள்வியாக அவன் கேட்டு வைக்க, “இன்னும் இவனுக்கு என்னென்னலாம் தெரியும்..” என்று முழித்துக் கொண்டிருந்தாள் அவள்..

                      பதில் வராததால் இன்பன் மீண்டும் “சிபி..” என்றுவிட

                      “ஹான்..”என்று விட்டவள் அதன் பிறகே “என்ன வேணும் உங்களுக்கு.. எதுக்காக இப்படி பண்றிங்க.. நான் போனை வச்சுடறேன் ப்ளீஸ்..” என்று சற்று பயத்துடனே சொல்லிவிட்டாள்.

                      அவள் குரலில் இருந்த பயம் எதிரில் இருந்தவனுக்கு புரிய, “ஹேய் சிபிம்மா.. ஏன் இத்தனை பயம்..” என்று ஆதுரமாகவே அவன் கேட்டாலும், அது இன்னுமின்னும் அச்சத்தையே கொடுத்தது அவளுக்கு…

                      அவள் அமைதியாக அமர்ந்து விட, அவளின் அமைதியில் “சிபிம்மா.. “என்று மீண்டும் அழைத்தவன் “சிபி.. நான் சொல்றதை கேட்கறியா..” என்று மீண்டும் தன் அழுத்தமான குரலில் வினவ

                        “ம்ம்” என்பது மட்டுமே பதிலாக வந்தது..

                        ‘சிபி.. உன்னை தொந்தரவு செய்யறது என்னோட விருப்பம் இல்லைடா… கொஞ்சம் புரிஞ்சிக்கோயேன்… உன்கிட்ட பேசிட்டே இருக்கணும் போல ஒரு எண்ணம்.. அதான் சட்டு ன்னு கூப்பிட்டுட்டேன்.. நீ என்ன நினைச்சு பயப்படறியோ அது சரி தான் சிபி..” என்று சின்னதாக ஒரு இடைவெளி விட, இதற்குள்ளாகவே கண்களில் கண்ணீர் நிறைந்து விட்டது அவளுக்கு..

                        இன்பன் தொடர்ந்து “சொல்லு சிபி… என்ன செய்யலாம்..” என்று அழுத்தத்தை கைவிட்டு மென்மையான குரலில் கேட்க

                        “எதுவுமே செய்ய வேண்டாம் சார்.. என்னை  படிக்க விடுங்க.. அதுபோதும்..” என்று அவள் கண்களை துடைத்துக் கொண்டு மெல்லிய குரலில் கூற

                        “அப்போ படிச்சு முடிச்சிட்டா, என்னை லவ் பண்ணுவியா.. வெயிட் பண்ணவா..” என்று புரியாதது போல அவன் வம்பு வளர்க்க

                       “உங்களுக்கு புரியுது சார்.. நான் படிக்கிறதே உங்க குடும்பத்தால் தான்.. உங்க பாட்டி ட்ரஸ்ட் மூலமா கொடுக்கிற பணத்துல தான் என்னோட படிப்பே… அப்படி இருக்க நான் உங்களை எப்படி தப்பா பார்க்க முடியும்.. நீங்களும், உங்க குடும்பமும் நிச்சயம் எங்களுக்கு கடவுள் போலத்தான்… நீங்க அந்த ஸ்தானத்துலேயே இருங்க…போதும்…”

                       “கடவுள் ன்னு சொல்லிட்ட.. ஆனா, கடவுளே வரம் கேட்டாலும் கொடுக்க மனசு வரலையே உனக்கு .. என்ன பண்ணலாம்..”

                       “உங்க தகுதிக்கு இது சரியில்ல சார்… இனி எனக்கு கூப்பிடாதிங்க… ப்ளீஸ்..”

                    “நிச்சயமா கூப்பிடுவேன் சிபி… எனக்கு என் மேல நம்பிக்கை இருக்கு..நிச்சயமா நான் என்னை உனக்கு புரிய வைப்பேன்…”

                     “பிரயோஜனம் இல்ல சார்.. நான் என் தகுதிக்கு மீறிய எதையும் நினைச்சு கூட பார்க்கிறது இல்ல.. நீங்களும் அப்படித்தான்.. என்னால வேற மாதிரி எப்பவும் யோசிக்க முடியாது… நீங்களும் இதோட என்னை விட்டுடுங்க..” என்று அவள் முடிவாக முடித்தவள் அழைப்பை துண்டித்து விட

                  “உன்னை எப்பவும் விடமாட்டேன் சிபிம்மா.. எனக்கு என் பொம்மை வேணும்..” என்று தன் அலைபேசியை பார்த்து பேசிக் கொண்டிருந்தான் இன்பன்.

                    சிபிக்கு நிச்சயம் அவன் காதலின் மேல் பெரிதாக நம்பிக்கையில்லை. வேண்டியது அனைத்தும் கிடைத்தே பழக்கப்பட்ட இருக்கப்பட்டவன்… தன்னையும் அப்படியே நினைத்து விட்டிருப்பான்.. கனவு தெளிந்ததும் இந்த பணமும், அந்தஸ்தும், அவன் குடும்பமும் நினைவை புரியவைத்து விடும் என்று எண்ணிக் கொண்டாள் அவள்..

                        அவளுக்கு அவன் காதலின் அளவோ, அதன் தீவிரமோ எதுவுமே அப்போது தெரியவில்லை. அதன்பிறகு அவன் அழைக்கவே இல்லை எனவும், தொல்லை விட்டது என்ற எண்ணத்தில் தான் இருந்தாள் அவள். ஆனால், இரவு அவள் உறங்கும் நேரம் அவளின் அலைபேசி லேசாக இசைத்து அடங்க, கையில் எடுத்து பார்த்தாள்.

                      வாட்சப்பில் ஏதோ மெசேஜ் வந்திருக்க, இன்பனின் எண் தான்… பார்ப்போமா?? வேண்டாமா?? என்று யோசித்து நின்றவள் மெல்ல அதை  திறந்து பார்க்க

                       உறக்கம் கெடுத்து என் உயிரோடு உறவாடும்

                      மெல்லிய பூங்காற்றே…!!!

                      நீ கவிதையாய் மாறி என் தலை கோதும் நாளை எண்ணி ஏங்குகிறேன்…

                              காத்திருப்பின் கணம் அறிந்தவன்…..

                                                        -கனவுக் காதலன்!!!…

                                                        என்று முடித்திருந்தான். “இவன் விடமாட்டானோ..” என்ற எண்ணம் தான் சிபிக்கு. அவனின் தீவிரமும் லேசாக உரைத்தது அந்த நிமிடத்தில் தான்.

Advertisement