Advertisement

இது அத்தனை பேச்சுக்கும் இன்பன் அதே இருக்கையில் தான் அமர்ந்திருந்தான். சிபி அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்ததாக கூட, அவனுக்கு நினைவு இல்லை.. அந்த கண்ணீர் குரலும், விழியோரம் ஒட்டிக் கொண்டிருந்த ஒரு துளி நீரும் அவனை இன்னுமே இம்சிக்க, தன்னால் தானே என்று நொந்து கொண்டான்..

                    அவர்கள் வெளியேறவும், நரேந்திரன் இன்பனின் பக்கம் திரும்பியவர் “நல்ல பசங்க இன்பா.. நிச்சயமா பெருசா வருவாங்க.. அதிலும் சிபி.. நம்ம காலேஜ்க்கு கிடைச்ச பெஸ்ட் ஸ்டுடென்ட்…” என்று பேசிக் கொண்டே இருக்க, அமைதியான தலையசைப்புடன் கேட்டுக் கொண்டவன் எழுந்து வெளியே வந்துவிட்டான்..

         

                      இன்பன் முதல்வரின் அறைக்கு எதிரில் நிறுத்தி இருந்த தன் காரின் அருகில் செல்ல, அந்த காருக்கு அந்த பக்கம் இருந்த ஒரு கல் இருக்கையில் சிபி மற்றும் அவளின் தோழிகள் அமர்ந்திருக்க, சுற்றி அந்த மாணவர்கள் நின்றிருந்தனர்..

                    சிபி அப்போதும் சோகமாகவே அமர்ந்திருக்க, அந்த மகேஷ் அவளை திட்டிக் கொண்டிருந்தான். “அதான் அவரே எதுவும் சொல்லாம அனுப்பிட்டார் இல்ல.. நீ ஏன் இப்படி சோகப்பாட்டா பாடிட்டு இருக்க..”

                   “மரியாதையா ஓடிடு.. உன்னாலதான் எல்லாம்..” என்று அவள் முறைக்க

                 “என்னாலையா.. ஒரு ஐடி கார்டை பத்திரமா வச்சுக்க முடியல.. அதை கொண்டு வந்து எவனோ போட்டுக் கொடுத்துட்டான்.. உன்னாலதான்…” என்று அவன் குறை கூற

                   “ஆமா.. என்னாலதான்.. சாரி… என்னை கூட்டிட்டு போகாத இனிமே..” என்றவள் எழுந்து கொள்ள

                 “ஹே… சிபி.. ஏண்டா இப்படி.. அதான் அந்த சிங்கம்புலியே கடிக்காம விட்ருச்சே.. நாம ஏன் ஒருத்தரை ஒருத்தர் கடிச்சிக்கணும்.. நாம சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்குடா.. நம்ம லெவலுக்கு இதுக்கெல்லாம் அழலாமா..” என்று அந்த மகேஷ் அவளின் அருகில் அமர்ந்து சமாதானம் செய்ய

                 “எது நம்ம லெவல்.. டிசி கொடுத்து வீட்டுக்கு துரத்தி விடறதா…” என்று அவள் கடுப்பாக கேட்க

                       “ஏன்… நல்லாதானே போயிட்டு இருக்கு..” என்று வடிவேலு குரலில் அவன் நக்கலடிக்க

                        “உன்கூட சேர்ந்து சுத்திட்டு இருந்தா, கடைசியில அது தான் நடக்க போகுது..  நேத்து கிளம்பும்போதே வரலன்னு சொன்னேன் இல்லடா… எரும.. என் அம்மாவுக்கு தெரிஞ்சா அவ்ளோதான்..” என்று மீண்டும் முகத்தை சுருக்கி கொண்டு அவள் முகாரி இசைக்க

                       “போதும் சிபி.. அதுதான் எதுவும் நடக்கலையே.. ஏன் இப்படி பயந்துக்கற.. விடு.. கிளாஸ்க்கு போவோம் வா..” என்று அவளை அழைத்துக் கொண்டு சென்றாள் நித்யா.. மற்றவர்களும் அவர்களுடன் செல்ல அந்த மாநாடு அத்துடன் கலைந்து போனது.

                       இன்பன்  அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை சிறு சிரிப்புடன் பார்த்திருந்தவன் அந்த சிரிப்புடன் கிளம்பி சென்றிருந்தான். புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டிருந்த அவர்களின் நிறுவன வேலைகள் தலைக்கு மேல் இருக்க, சிபியை மனதின் ஓரம் இருத்திக் கொண்டு வேலைகளில் கவனமானான்.

                     அடுத்த ஒரு வாரமும் அவன் தொழில் அவனை ஈர்த்துக் கொள்ள, சிபியை நிச்சயமாக மறந்தே போயிருந்தான். ஏன் சென்னையிலேயே இல்லை அவன்.. அவனின் தொழில் தொடர்பாக மும்பை, கொச்சின் என்று பறந்து கொண்டே இருந்தவன் அன்று தான் சற்றே ஓய்வாக வீட்டில் இருக்க, காலை விடிந்தது கூட தெரியாமல் உறங்கி கொண்டிருந்தான்.

                        அப்போதும் உறக்கத்தில் கனவாகவே வந்து நின்றாள் அவள். மெல்ல அவன் கன்னத்தை வருடுவதும், அவன் காதை திருகுவதுமாக அவள் போக்கு காட்ட, அவளை எட்டி பிடிக்கும் எண்ணத்தில் எழுந்து விட்டவன் அதன் பிறகே சுற்றம் உணர்ந்தான்.

                         தன்னவளை குறித்த ஒரு செல்ல புன்னகையுடன் அவன் காலைப்பொழுது அழகாக மாறிவிட, இன்று எப்படியேனும் அவளை சந்தித்தே ஆக வேண்டும் என்று கூறிக் கொண்டே குளிக்க சென்றான் அவன். ஆனால் அன்று காலை அவன் கலந்து கொள்ள வேண்டிய மீட்டிங் ஒன்று இருக்க, அதை தவிர்க்க முடியாமல் பதினோரு மணிபோல் வீட்டில் இருந்து அலுவலகம் கிளம்பி இருந்தான்.

                        மீட்டிங் அதனை தொடர்ந்த லன்ச் என்று நேரம் ஓட, நேரம் மதியம் மூன்றை தொடவும், காரை எடுத்துக் கொண்டு கிளம்பி இருந்தான். அவர்களின் கல்லூரிக்கு வெளியே சற்று தள்ளி காரில் அவன் காத்திருக்க, அவன் எதிர்பார்த்தது போலவே அவனை ஏமாற்றாமல்  வெளியே வந்தாள் சிபி..

                      அவள் எதிர்புறம் இருந்த பேருந்து நிலையத்திற்கு சென்று நிற்க, அவளுடன் இன்னும் இரண்டு பெண்கள்… இன்பன் அவள் வந்தது முதல் அவளை பார்வையால் தொடர்ந்து கொண்டு காரில் அமர்ந்திருக்க, அவள் அன்று போலவே இன்றும் சுற்றி இருந்த யாரையும் பெரிதாக கவனிக்கவே இல்லை.

                      தானுண்டு தன் வேலையுண்டு என்பது போல் தான் இருந்தாள் இப்போதும். ஆனால், இன்பனுக்கு தான் அது சற்றும் பிடிக்காமல் போனது. வயதுப்பெண்.. தன்னை சுற்றி என்ன நடக்கிறது?? யார் இருக்கிறார்கள்?? என்று கவனித்துக் கொள்ள வேண்டாமா? எப்போதும் ஒரு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டாமா?? என்று கடிந்து கொண்டான் அவன்..

                      இவன் யோசித்துக் கொண்டே அமர்ந்திருக்கும் நேரத்தில் தான் அந்த பேருந்து நிலையத்தில் பைக்கில் வந்து நின்றான்  அவன். அவனும் பார்க்க கல்லூரி மாணவன் போலவே இருந்தாலும், ஏனோ சரியாகப்படவில்லை இன்பனுக்கு.

                        இவன் யோசனையுடன் காரிலிருந்து இறங்க, அங்கே அவன் சிபியிடம் ஏதோ பேசத் தொடங்கி இருந்தான். சிபி மறுப்பது போல் தலையசைக்க, அவனும் விடாமல் அவளிடம் பேச்சை வளர்த்துக் கொண்டிருக்க, அதற்கு மேல் தாமதிக்காமல் இன்பன் சாலையை கடந்து விட, இவன் சிபியை நெருங்கும் நேரம் சிபியின் கையை பிடித்திருந்தான் அவன். அவன் யாதவ்…

                        இன்பன் சட்டென்று அவர்களை நெருங்கியவன் “என்ன நடக்குது இங்கே..” என்று குறிப்பாக யாதவின் பிடியிலிருந்த சிபியின் கையை பார்த்துக் கொண்டே வினவ

                       “கரஸ் பையன்டி..” என்று மெல்ல முணுமுணுத்தாள் நித்யா.. சிபி பயந்த பார்வையை அவன் மீது செலுத்த, யாதவ் “நீ யாரா இருந்த எனக்கென்ன??” என்பது போல் தான் பார்த்து நின்றான்.

                      இன்பன் சிபியின் பார்வையில் “இவனை தெரியுமா உனக்கு??” என்று அதட்ட, தெரியாது என்றா சொல்வாள் அவள். பதில் பேச முடியாமல் அவள் நிற்க, “என் அத்தை பொண்ணு இவ…” என்று நக்கலாக கூறினான் யாதவ்.

                      இன்பன் அப்போதும் சிபியை பார்க்க “என்னோட மாமா பையன் சார்..” என்று அப்போதும் ஒருவித பயத்தோடு அவள் கூற

                       “அதுக்காக காலேஜ் வாசல்ல இப்படி கையை பிடிச்சுட்டு நிற்க சொல்லி இருக்கா..” என்று முறைப்புடன் இன்பன் பார்க்க

                         “ப்ளீஸ் யாதவ்.. கையை விடு..” என்று கெஞ்சலாக  அவள் யாதவின் முகம் பார்க்க

                          “ஏய்.. நீ யாருடா.. நாங்க எப்படி இருந்தா உனக்கு என்ன..??” என்று யாதவ் ஏக வசனத்தில் ஆரம்பிக்க

                          அவன் வாயிலேயே ஒன்று போட்டிருந்தான் இன்பன். வாயின் ஒரு ஓரம் லேசாக ரத்தம் கசிய, “ஏய்.. என்மேலேயா கையை வச்ச.. ” என்று யாதவ் அவனை நெருங்கவும் மீண்டும் ஒன்று கொடுத்தவன் அவன் கையை மடக்கி பிடித்துக் கொண்டு

                         “அத்தைபொண்ணு,மாமாப்பையன் எல்லாம் வீட்டோட… இது என் காலேஜ்.. இங்கே காலேஜ் பேர் கேட்டு போற மாதிரி எதையும் அலோவ் பண்ண முடியாது.. அதோட இங்கே மரியாதையா பேசி பழகணும்.. இல்லேன்னா இப்படி தான் மரியாதை சொல்லி கொடுக்க வேண்டி இருக்கும்..” என்றவன் சிபியிடம் திரும்பினான்.

                        சிபி சற்று நிம்மதியாக அவனை பார்த்து நிற்க, ” உனக்கு வாய் இல்லையா.. சொந்தக்காரன் ன்னா எல்லாத்துக்கும் அமைதியா இருக்கணுமா.. பிடிக்கலன்ன்னா பிடிக்கல ன்னு சொல்லி பழகணும்..” என்று அவளையும் சேர்த்தே திட்ட

                         “நீ யாருடா இதெல்லாம் கேட்க… காலேஜ்க்கு வெளியே அவ கையை பிடிச்சதுக்கு நீ என்னை அடிப்பியா.. அவளை கூட்டிட்டு போகத்தான் நான் வந்ததே..” என்று அவன் மீண்டும் பேச

                        “உன்னை வாயை திறக்கவே கூடாது ன்னு சொன்னேன்ல..” என்று மீண்டும் ஒன்று வைத்தவன் சிபியிடம் “இவனோட தான் வீட்டுக்கு போகணுமா..” என்று கேட்க

                             வேகமாக மறுத்தாள் அவள்.. “இல்லை சார்… நான் யாரோடவும் போக மாட்டேன்.. பஸ்க்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம். இவன் இன்னிக்கு தான் இப்படி..” என்றவள் அதற்குமேல் சொல்லாமல் விட

              

                           “அதான் சொல்லிட்டா இல்ல.. கிளம்பு.. உன் பஞ்சாயத்தை எல்லாம் வீட்டுக்கு போய் பெரியவங்களோட பேசிக்கோ.. இப்போ கிளம்பு..” என்று ஒரே பிடியாக நின்று யாதவை இன்பன் துரத்த பார்க்க

                          “நான் ஏன் போகணும்.. அவ என்னோட வந்தாகனும்..” என்று கூறிக் கொண்டே அவன் மீண்டும் முன்னேற, அவன் சட்டை காலரை பிடித்து இழுத்து கீழே தரையில் தள்ளியவன் “ஓங்கி மிதிச்சேன்.. செத்தே போய்டுவ..” என்று காலை தூக்க

                      “சார் ப்ளீஸ்..” என்று குறுக்கே வந்தாள் சிபி. இன்பன் கோபத்தோடு அவளை பார்க்க, அவளோ யாதவிடம் “ப்ளீஸ் யாதவ்.. கிளம்பு.. என் காலேஜ் போர்ட் மெம்பர் அவங்க.. ப்ளீஸ்.. என்னை படிக்கவிடு.. இங்கே இருந்து கிளம்பு..” என்று அவனிடம் கையை கூப்பிவிட

                        வாயில் வழிந்த ரத்தத்தை ஒரு கையால் துடைத்துக் கொண்டே கோபத்துடன் எழுந்தவன் இன்பனை தீயாக முறைத்து விட்டு அங்கிருந்து நகர, “ஏய்.. இனி உன்னை இந்த காலேஜ் பக்கமே பார்க்கக்கூடாது…” என்று மிரட்டி அனுப்பினான் இன்பன்.

                       இன்பன் யாரென்று தெரிந்ததுமே அங்கிருந்து கிளம்புவது தான் சரியென்று பட்டது யாதவுக்கு. மேலும் அவனிடம் வம்பு வைத்துக் கொண்டால் சரியாக படாததால் அமைதியாக அங்கிருந்து கிளம்பினான் அவன். ஆனால், சிபியை இதோடு விடும் எண்ணமும் இல்லை.

                        அவன் அங்கிருந்து கிளம்பிய நொடி, சிபி மீண்டும் “சாரி சார்..” என்று இன்பனிடம் மன்னிப்பை வேண்ட,

                     “எதுக்காக இந்த சாரி.. நீ என்ன தப்பு செஞ்ச..” என்று கையை கட்டிக் கொண்டு அவன் கேட்டு நிற்க, அவனை கேள்வியாக பார்த்தாள் சிபி.

                        “தப்பு செய்யாம யார்கிட்டயும் சாரி சொல்லக்கூடாது. இங்கே நடந்த விஷயத்துக்கும் உனக்கும் என்ன சம்பந்தம். நீ ஏன் மன்னிப்பு கேட்கிற..” என்று கேட்டு நிற்க

                         சிபியிடம் பதில் இல்லை. “இவனுக்கெல்லாம் இவ்ளோ பயப்பட வேண்டிய அவசியம் இல்ல.. அவன் இனிமே ஏதாவது பிரச்சனை பண்ணா, என்கிட்டே சொல்லு.. இப்போ நடந்ததையும் வீட்ல சொல்லி வை..” என்று கட்டளையாக கூற, சரி என்பது போல் தலையசைத்தாள் அவள்.

                      அவளின் பாவனையில் கொள்ளை போக துடித்த மனதை இழுத்து பிடித்தவன் அந்த வழியாக சென்ற ஒரு ஆட்டோவை பிடித்து அவளையும், உடன் இருந்த அவள் தோழியையும் அனுப்பி வைத்து அதன் பின்பே அவன் கிளம்பினான்..

                        சிபியை பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைத்த ஒரு உணர்வுடனே அவன் அங்கிருந்து கிளம்ப, சிபி எத்தனை பெரிய இன்னல்களை சந்திக்க இருக்கிறாள் என்று அப்போது அவனுக்கு தெரியாது…

Advertisement