Advertisement

                             அவனிடம் அதற்குமேல் எது பேசினாலும், இன்னும் இன்னும் ஏறிக் கொண்டே தான் இருப்பான் என்று புரிய, தலையை தொங்க போட்டுக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார் மதுசூதனன்.. தந்தை அப்படி செல்வதை அவன் திருப்தியாக பார்த்து நிற்க, ஜெகனும், லாரன்ஸும் இன்னமும் அவனுடன் தான்..

                           அந்த அறையில் இருந்தவர்களை எப்போதோ ஜெகன் வெளியேற்றி விட்டிருக்க, இப்போது மூவர் மட்டுமே அங்கே.. ஜெகன் மெல்ல அவன் தோளை தொட்டவன் “என்னடா..” என்று மெதுவாக கேட்க

                          லாரன்ஸ் அவன் உட்காருவதற்காக ஒரு சேரை இழுத்து போட்டான்… அந்த இருக்கையில் அமர்ந்து விட்டாலும், அவன் இன்னும் இயல்பாகவில்லை என்பது இருவருக்கும் புரிய, அவனே பேசட்டும் என்று அமைதியாகி நின்றிருந்தனர் அவர்கள்..

                        இன்பன் தன் இரு கைகளாலும் முகத்தை அழுத்தமாக துடைத்து கொண்டவன் “எனக்கு நடந்த ஆக்சிடென்ட் பத்தி கொஞ்சம் விசாரிக்கணும் ஜெகா…நீ நம்ம பழனியை வர சொல்லு.. இல்ல… இங்கே எங்கேயும் வேண்டாம்.. நான் வரேன் ன்னு சொல்லு.. எனக்கு அவன்கிட்ட முக்கியமா சில விஷயங்கள் பேசணும்…” என்று கூற, ஜெகன் அதிர்ச்சியாக அவனை பார்த்தான்..

                       லாரன்ஸ் அவன் பேசுவதை கவனித்தானே தவிர, அவனுக்கு பெரிதாக ஒன்றும் புரியவில்லை..                         

                             ஆனால், ஜெகன் அப்படி இல்லையே.. இவனுக்கு பழனியை நினைவில் இருக்கிறதா?? என்று ஆச்சர்யமாக அவன் பார்க்க, இன்பன் மீண்டும் “என்னை பொறுமையா பார்த்துக்கலாம்.. முதல்ல அவனுக்கு போன் போடு… எங்கே இருக்கான் கேளு…” என்று வரிசையாக அடுக்கி கொண்டிருந்தான்..

                         ஜெகன் “இன்பா.. உனக்கு பழனியை..” என்று ஜெகன் தொடங்கும் போதே

                         “அவன் மட்டும் இல்ல.. எல்லாமே..” என்று மண்டையை தட்டி காட்டியவன் “ரெண்டு நாள் ஆகுது..” என்று நிதானமாக கூற, ஜெகனுக்கு மகிழ்ச்சியில் கண்கள் கலங்கி போனது..

                          “இன்பா..” என்று வேகமாக அவனை நெருங்கியவன் அவனை எழுப்பி அணைத்து கொள்ள, லாரன்ஸும் சேர்ந்து கொண்டான் அவர்களுடன்… அந்த  நிமிடம் மூவருமே முழுதாக உணர்ச்சி வசப்பட்டு இருக்க, கண்ணீர் தான் முதன்மையாக இருந்தது அங்கே..

                            ஜெகன் “ஏண்டா அன்னிக்கே சொல்லல..” என்று கோபமாக கேட்க

                             “இப்போதைக்கு யாருக்கும் தெரிய வேண்டாம்ன்னு நினைச்சேன்டா..ஆனா, உங்ககிட்ட மறைக்க முடியாது இல்லையா.. அதான் சொல்லிட்டேன்…”

                             “என்னடா நினைக்கிற நீ… உனக்கு பழசெல்லாம் நியாபகம் வந்தது தெரிஞ்சிட்டா, எல்லாரும் எவ்ளோ சந்தோஷப்படுவாங்க.. ஏன் சொல்லாம இருக்கணும்..” என்று லாரன்ஸ் கோபத்தோடு இடையிட

                            “கண்டிப்பா கொஞ்ச நாளைக்கு இப்படித்தான் இருக்கணும் லா.. எனக்கு பழசு எதுவும் நியாபகத்துல இல்ல ன்னு கலையரசன் தைரியமா ஆடணும்.. எங்களுக்கு நடந்த விஷயத்துல அவன் பங்கு என்னன்னு முழுசா எனக்கு தெரியணும்.. அதுவரைக்கும் இப்படி இருக்கறது தான் சரி..” என்று இன்பன் முடிவாக கூற

                               “என்னடா பேசுற நீ.. சிபியை பத்தி யோசிக்கவே மாட்டியா.. அவ எவ்ளோ வேதனைப்படுவா ன்னு உனக்கு புரியலையா.” என ஜெகன் வேகமாக கேட்க

                               “ஏன் யோசிக்கணும்… இத்தனை நடந்து இருக்கு.. இப்போகூட இவங்களால தான் ன்னு உன் தங்கச்சி என்கிட்டே சொல்லல.. அப்போ என்ன நினைக்கிறா என்னை.. அப்படியென்ன பயம் அவளுக்கு.. இத்தனை நாள் விட்டுட்டாலும், இப்போ கூடவே தானே இருக்கேன்.. என்கிட்டே சொல்ல என்னடா.. தியாகியா இவ.. ” என்று தானும் சற்று கோபத்துடன் வினவினான் இன்பன்.

                                “நீ தப்பு பண்ற இன்பா.. சிபி பயப்படுறது அவளை பொறுத்தவரைக்கும் சரி.. அவ அத்தனை அனுபவிச்சு இருக்காடா…”

                                  “இன்னும் கொஞ்ச நாள் ஜெகா.. அதோட என்னாலயும் எத்தனை நாளைக்கு அவகிட்ட மறைக்க முடியும்.. உன் தங்கச்சி ஈஸியா கண்டுபிடிச்சுடுவா… விடு.. இப்போதைக்கு நீ அவகிட்டே எதுவும் சொல்லாத..” என்று ஜெகனை தெரிந்தவனாக அவன் எச்சரிக்க

                              “நான் அவகிட்ட பொய் சொல்ல மாட்டேன்..” என்று விறைப்போடு அவன் முறுக்கி கொள்ள

                          “போய் சொல்லு. என்னை எதுவும் செய்யக்கூடாது ன்னு சொல்லிட்டு அவளும் பயந்துகிட்டே இருப்பா… போ.. போய் சொல்லுடா..” என்று இன்பன் சொல்ல, ஜெகனுக்கும் சிபி அப்படி செய்பவள் தான் என்றே தோன்றியது.. அங்கேயே சிபியிடம் சொல்வதில்லை என்று முடிவு செய்து கொண்டு அவர்கள் மூவரும் கிளம்ப, அடுத்ததாக அவர்களின் கட்டுமான   நிறுவனத்திற்கு கிளம்பினான் இன்பன்.

                         அன்று முழுவதும் சென்னையில் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள தங்களின் நிறுவன அலுவலகங்களை அமைதியாக சுற்றி வந்தவன், அன்று மாலை அந்த பழனி என்பவனை சந்திக்க கிளம்பினான். இப்போதும் ஜெகனும், லாரன்ஸும் அவனுடன் தான்..

                         அந்த பழனி என்பவனிடம் தனக்கு சந்தேகமாக இருந்த சில விஷயங்களை பகிர்ந்து கொண்டவன், மேலும் விசாரிக்க வேண்டிய நபர்கள் பற்றியும் தெளிவாக கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினான். அவன் அறிந்த வரையில் பழனி கச்சிதமாக காரியத்தை முடித்து விடுவான்.. அதுவே அவனுக்கு நம்பிக்கையை கொடுக்க, அடுத்து அடுத்து என்று சிந்தித்துக் கொண்டே இருந்தது அவன் மனது…

                             அதே சிந்தனைகளோடே அவன் வீட்டிற்கு வர, இரவு உணவு நேரம் ஆகி இருந்தது.. சிபி அவர்களுக்கான உணவை எடுத்து வைக்க மூவரும் குளித்துவிட்டு வந்தனர். இனியன் இதற்குள் உறங்கியே போயிருக்க, அவனை அறையில் கிடத்தி இருந்தாள்.

                         மூவரும் தொழில் குறித்த பேச்சுவார்தைகளுடன் உணவை முடிக்க, சிபியின் மௌனம் யாருக்கு புரிந்ததோ இல்லையோ, இன்பனுக்கு தெளிவாக புரிந்தது… கோபமாக இருக்கிறாளோ என்றும் தோன்ற, பார்த்துக்கலாம் என்று மேலும் சிறிது நேரம் அவன் நண்பர்களோடு பேசிக் கொண்டு அமர்ந்திருக்க, கிட்சனை ஒதுக்கி வைத்துவிட்டு அறைக்கு சென்று விட்டாள் அவள்.

                           இன்பன் அதன்பிறகும் சிறிது நேரம் கழித்தே அறைக்கு செல்ல, மகனின் அருகில் அவனையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். இங்கு வந்த முதல் நாளே இன்பன் இப்படி தனியாக விட்டு சென்றது நிச்சயம் வருத்தம் தான்.. ஆனால் வெளிப்படையாக அவனிடம்  கேட்கவும், தயக்கமாக இருந்தது அவளுக்கு..

                          இப்போது என்று இல்லாமல் மூன்று ஆண்டுகளுக்கு முன்பான அவர்களின் காதலிலும் சரி, ஒரு மாத திருமண வாழ்விலும் சரி. அவளாக இன்பனிடம் எதையும் கேட்டதோ, சண்டையிட்டதோ நடந்ததே இல்லை எனலாம்.. அவளின் முகத்தை வைத்து இன்பனாக கணித்து கொள்வது தான்..

                          அவள் அன்னையை இழந்த துக்கத்தையே அவன் அருகாமையில் தான் மறக்க கற்றிருந்தாள் அவள்.. இன்பன் என்ற ஒருவன் உடனிருந்தால் மட்டும் போதும் என்ற நிலைதான் அந்த நேரங்களில்..அனைத்தையும் அவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையிலேயே அவள் எதையும் இதுவரை கேட்டதே இல்லை..

                           இதோ இப்போதும் அந்த நம்பிக்கை மலையளவு அவன் மீது இருந்தாலும், இப்படி முதல் நாளே விட்டு செல்வான் என்று எதிர்பார்க்கவில்லை.. அதுவும் அத்தனை பிடிவாதமாக அழைத்து வந்துவிட்டு, இப்படி தனிமையில் விட்டது வருத்தம் தான்.. ஆனாலும் அவனிடம் நேரிடையாக கேட்க மனமில்லை..

                           இதே சிந்தனையாக அவள் அமர்ந்திருந்த நேரம் தான் இன்பன் அந்த அறைக்குள் நுழைந்தது.. மனைவியின் முகத்தை வைத்தே அவள் மன ஓட்டத்தை ஓரளவு கணித்து கொண்டவன் கட்டிலில் வந்து அமர, சட்டென நகரக்கூட முடியாமல் போனது சிபியால்..

                         கட்டிலின் ஒரு ஓரம் இனியனை கிடத்தி இருக்க, நடுவில் அவள் அமர்ந்திருந்தாள்.. இப்போது இன்பன் மறுபுறம் அவளுக்கு அணைவாக வந்து அமர்ந்து கொள்ள, திரும்பினால் அவன் மீது உரசித்தான் எழ முடியும் என்ற நிலை.. இன்பன் கையில் அலைபேசியை வைத்துக் கொண்டு அமர்ந்து விட, எத்தனை நேரம் அப்படியே அமர்ந்திருக்க முடியும் அவளால்..

                       கட்டிலில் இருந்து இறங்க  நினைத்தவள் சற்றே முன்னால் வர, சரியாக அதே நேரம் கால்களை நீட்டமாக நீட்டி கொண்டான் அவன்.. அவனை தாண்டி தான் இறங்க முடியும் அவளால்.. ஏன் இப்படி பண்றான்?? என்று லேசாக பயந்தவன் அவன் முகம் பார்க்க, அப்போதும் அவன் கவனம் அலைபேசியில் தான் இருந்தது..

                       பொறுத்து பார்த்தவள் அவன் நிமிராமல் போகவும், “கொஞ்சம் வழி விடுங்க.. ” என்று அவனிடமே கூற

                      “ஏன்.. எங்கே போகணும்..” என அப்போதும் நிமிராமல் கேள்வி மட்டும் வந்தது…

                      “நான் தூங்க வேண்டாமா…” சற்றே கோபமாக அவளது குரல் வர

                      “தூங்கு.. யார் வேண்டாம் ன்னு சொன்னது..” என்றவன் சற்றே நகர்ந்து நடுவில் அவளுக்கு இடம் விட, சட்டென மூச்சடைத்தது அவளுக்கு..

Advertisement