Advertisement

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 18

                            தன் அறையில், தனது இருக்கையில் திமிரான பார்வையுடன் அமர்ந்திருந்த கலையரசனை அத்தனை அனலுடன் பார்த்து நின்றான் இன்பன்… அவன் இந்த விடுதிக்கு பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதலாக மதுசூதனன் கூட அந்த இருக்கையில் அமரமாட்டார்… அப்படியிருக்க, இன்று கலையரசன் அமர்ந்திருப்பதும், அவரின் தோரணையும் அவனை எரிச்சலூட்டியது..

                           கண்களில் சினத்துடன் அவன் நிதானமாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க, அவனுக்கு இருபுறமும் ஜெகனும், லாரன்ஸும் வேறு.. கலையரசன் உள்ளுக்குள் பயம் இருந்தாலும், வெளியில் தைரியமாக காட்டிக் கொண்டே அமர்ந்திருந்தார் சட்டமாக…

                          உன்னால் என்னை என்ன செய்து விட முடியும் என்பது போன்ற தோரணை தான் அவரிடம். இன்பன் நிதானமாக அங்கிருந்த டேபிளின் மேல் ஏறி அமர்ந்தவன் மேனேஜரிடம் “இவர் ஏன் இங்கே இருக்காரு…” என்று தெரியாதவன் போல் கேட்டு வைக்க

                           “அவர்கிட்ட ஏன் மாப்பிள்ளை கேட்டுட்டு இருக்கீங்க.. என்கிட்டே கேட்டா பதில் சொல்லிட்டு போறேன்… உங்களுக்கு மூணு வருஷத்துக்கு முன்னாடி அடிபட்டுச்சே, அப்போ இருந்தே நாந்தான் இந்த ஹோட்டலை பார்த்துட்டு இருக்கேன்.. என்ன இருந்தாலும் என் பொண்டாட்டிக்கும் இதுல பங்கு இருக்கு பாருங்க,, நான்தானே பார்க்கணும்….” என்று துடுக்குத்தனமாக அவர் கூறிவிட

                            இன்பன் நக்கலாக பார்த்தவன் “செகியூரிட்டியை கூப்பிடுங்க.. இந்த ஆளை தூக்கி வெளியே போட சொல்லுங்க.. கூடவே இந்த சேரும்… இதையும் குப்பையிலே போட சொல்லுங்க…” என்று ஆணையாக கூறிவிட்டான்.

                             மேனேஜர் “சார்..” என்று அதிர்ந்து போனவராக பார்க்க, கலையரசனும் “இன்பா..” என்ற அதட்டலுடன் இருக்கையிலிருந்து எழுந்து விட்டார்…

                             இன்பன் அவரை கண்டுகொள்ளாமல் “நீங்க சரியாதான் கேட்டிங்க பிரகாஷ்… செகியூரிட்டியை கூப்பிடுங்க…” என்று அழுத்தமாக கூறிவிட, “எஸ் சார்..” என்று அவர் அலைபேசியை கையில் எடுக்க

                             கலையரசன் “என்னடா  நினைச்சுட்டு இருக்க நீ.. என்னை செகியூரிட்டியை வச்சு வெளியே தள்ளுவியா.. உன்னை உயிரோட விட்டாதானே….ஏற்கனவே பாதி நேரம் பைத்தியமா தான்.. “என்றவர் வார்த்தையை முடிக்க கூட விடாமல், லாரன்ஸ் அவரது செவி கலங்கி போகும் அளவுக்கு அறை அறைந்துவிட்டிருந்தான்…

                             அவனது அந்த ஒரு அடியில் அவர் சுருண்டு கீழே விழுந்திருக்க, இன்பன் அமர்ந்த இடத்திலிருந்து அசையவே இல்லை… லாரன்ஸ் கொதிப்புடன் நின்றவன் “அன்னைக்கே கொடுத்திருக்கணும்.. நீ எஸ்கேப் ஆகிட்ட…” என்றவன் மீண்டும் அவரை அடிக்க பாய்ந்துவிட

                            ஜெகன் ஒருவழியாக அவனை பிடித்து நிறுத்தியவன் “ஏண்டா நீ வேற.. வயசான காலத்துல செத்து கித்து போய்ட போறான்… அப்புறம் அதுக்கு வேற போலீஸ், கேஸ் ன்னு அலையனும்.. ” என்று நக்கலாக சிரிக்க,

                             “இவனை செத்தா தானே போலீஸ் வரும்.. கையை காலை தனியா கழட்டி வைக்கிறேன் விடுடா… என் முன்னாடியே என் இன்பாவை… எவ்ளோ தைரியம் இவனுக்கு…” என்று அவன் மீண்டும் அவன் முன்னேற

                                “அடேய்.. வெள்ளைக்காக்கா… கொஞ்சம் பொறுமையா இருடா.. நீயாவது சொல்லேண்டா..” என்று ஜெகன் இன்பனை துணைக்கு அழைக்க

                              இன்பன் நிதானமாக “லா சில்… இவனுக்கு அவ்ளோ சீன் எல்லாம் இல்லை…”என்றவன் அதே நிதானத்துடன் கலையரசனின் அருகில் வந்து நிற்க, இதற்குள் கீழே விழுந்தவர் எழுந்து நின்றிருந்தார்…

                          “என்னடா இந்த தடியனுங்களை வச்சு என்னை மிரட்டுறியா… உன்னை என்ன செய்யுறேன் பாரு… நீயே என்னை தேடி வர மாதிரி செய்றேன்…” என்று சவால் விட்டவர் சும்மா இருக்காமல் “என் மேலயா கையை வச்ச.. நீ எப்படி உயிரோட இந்த ஊரை விட்டு போற ன்னு பார்க்கிறேண்டா…” என்று லாரன்சிடம் வாயை விட

                         இந்த முறை இன்பன் ஒன்று வைத்திருந்தான்… அவர் அதிர்ந்து விழிக்கும் போதே, “நீ எல்லாம் ஒரு ஆளு.. உன்னை மிரட்ட நாங்க மூணு பேர்… நான் முடிக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டா, முடிச்சிடுவேன்… உனக்கு நல்லா தெரியுமே மாமா…”

                        “உன் நேரம் நல்லா இருந்து இருக்கு.. அதான் மூணு வருஷம் ஜாலியா இருந்துட்ட… இனி உனக்கு ஏழரை தான்… அதுவும் இன்பனோட ரூபத்துல தான் வரும்…

                        “அவன் ஊரைவிட்டு போகாம பண்ணுவியா நீ… உன்னை இந்த ஊரையே  காலி பண்ணிட்டு ஓட வைக்கிறேன் நான்.. உன்னால முடிஞ்சதை பாரு… போயா வெளியே..” என்று அவன் அழுத்தம் திருத்தமாக, அவன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நிற்க, அத்தனை அவமானமாக இருந்தது கலையரசனுக்கு…

                         அவர் பார்த்து வளர்ந்த சின்ன பையன், என்னவெல்லாம் பேசி விட்டான் என்று அவர் கொதித்து போக, “உன்னை எங்கே பார்த்துக்கணுமோ அங்கே பார்த்துக்கறேண்டா… இனி உனக்கு நாந்தான் முதல் எதிரி… ஒருத்தனையும் விட மாட்டேண்டா..” என்று அவர் கத்த

                         “விடாம, இடுப்புல தூக்கி உட்கார வச்சுப்பியா மாமா..” என்று ஜெகன் நக்கல் செய்ய

                         “எல்லாம் உன்னால வந்ததுடா நாயே.. மூணு வருஷத்துக்கு முன்னாடியே உன்னை முடிச்சு விட்ருக்கணும்..” என்று அவர் ஜெகனிடம் திரும்ப

                         “முடிச்சு வைக்கிறியா நீயா.. உன்னை இத்தனை நாள் விட்டு வச்சதே என் நண்பன் உன்னை மொத்தமா முடிக்கணும் ன்னு தான்.. .நீ என்னை முடிப்பியா…. நீ இங்கே இருந்து கிளம்பி உன் வீட்டுக்கு போய் சேர்றதுக்குள்ள உன்னை மொத்தமா நான் முடிச்சு வைக்கிறேன்… பார்க்கலாமா…” என்று அவனும் பேச, சரியாக அவன் பேசுவதை கேட்டுக் கொண்டே தான் உள்ளே வந்தார் மதுசூதனன்..

                          வரும்போதே “ஜெகன்.. என்ன பேசுற நீ.. என் தங்கச்சி வீட்டுக்காரன் அவன்.. அவன்கிட்டே இப்படி பேசுவியா நீ…” என்று அவர் அதட்ட

                           ஜெகன் அப்பட்டமாக அவரை முறைத்து கொண்டு நின்றான்… “இதுக்கெல்லாம் காரணமே நீங்கதான்..” என்பது போல் அவன் பார்வை இருக்க, மதுசூதனன் கண்டனத்துடன் தான் பார்த்தார்..

                          “இந்தாளு என்ன சொன்னாருன்னே கேட்காம, சூப்பரா சொல்றிங்க நீங்க..” என்று நக்கலாக தந்தையிடம் சொன்னவன் “பிரகாஷ்.. அஞ்சு நிமிஷம் டைம்.. இந்த ஆள் கேட்டுக்கு வெளியே இருக்கணும்…” என்று ஆணையாக கூறிவிட, அந்த பிரகாஷ் ஓரமாக நின்றிருந்த செகியூரிட்டியிடம் கண்ணை காட்ட,  அவர்கள் கலையரசனை நெருங்கினர்..

                      மதுசூதனன் தான் இதில் தவித்து போனது.. மகனுக்காக பார்ப்பாரா.. அல்லது தனது ஒரே தங்கையின் கணவர் அவர்… அவருக்காக பார்ப்பாரா… அவர் ஒன்றும் செய்ய முடியாமல் நிற்க, தன்னை பிடிக்க வந்த செகியூரிட்டியை தள்ளிவிட்ட கலையரசன் “உன் மகனை பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறியா… நான் யாரு ன்னு உங்கள் எல்லாருக்கும் காட்டறேண்டா… இந்த ஹோட்டல் யாரோடது ன்னு நன் காட்றேன்..” என்று சவால் விட்டுக் கொண்டே வெளியேற, இன்னமும் அந்த இருக்கையில் அமராமல் ஜன்னல் வழியாக வெளியே வெறித்துக் கொண்டிருந்தான் இன்பன்.

                         மதுசூதனன் அவனை நெருங்கியவர் “இன்பா.. இது அத்தனையும் என்னால தான்.. உனக்கு முடியாம போகவும், நாந்தான் அவன்கிட்டே ஹோட்டலை பார்த்துக்க சொன்னேன்.. நீ இங்கே வரப்போறதா சொல்லி இருந்தா, நானே அவன்கிட்ட பேசி அனுப்பி இருப்பேனே… எதுக்கு இதெல்லாம்..” என்று அவனுக்கு  சமாதானம் சொல்ல முற்பட

                     “என் இடத்துக்கு நான் வர, அவன்கிட்ட நான் அனுமதி கேட்கணுமா… என்ன சொல்ல வர்றிங்க நீங்க… ” என்று  இன்பன் பேச

                      “இன்பா நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு.. எனக்கும் அவன்மேல் கோபம் இருக்கு தான்.. ஆனா அது எல்லாத்துக்கும் மேல அவன் என்னோட தங்கச்சி வீட்டுக்காரன்..”

                         “அதுக்காக… என்ன பண்ணலாம், நான் வேணா அவர் கால்ல விழுந்து செஞ்சது தப்பு னு சொல்லி அவரை கூட்டிட்டு வந்து இங்கே உட்கார வைக்கவா…” என்று  கேட்டுவிட

                          மதுசூதனனுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை… “இனி நம்ம பிசினஸ் எதுலயும் அந்த ஆள் இருக்கக்கூடாது.. அவனுக்கும் என் பிசினஸ் க்கும் என்ன சம்பந்தம்… உங்களால முடியலைன்னா வீட்ல உட்காருங்க… நான் பார்க்கிறேன் எல்லாத்தையும்…”

                            “எண்ணி ஒரே வாரம்… உங்க தங்கச்சி வீட்டுக்காரரோட அத்தனை ரகசியத்தையும் நான் வெளியே கொண்டு வர்றேன்.. இங்கே அவர் வேலையை காட்டி இருக்கட்டும்.. கடவுளால் கூட காப்பாத்த முடியாதபடி செய்றேன்…” என்று ஆத்திரமாக அவன் உரைக்க, ஏன் இத்தனை காரம் ?? என்று புரியவே இல்லை மதுசூதனனுக்கு..

Advertisement