Advertisement

உறைகின்ற நினைவில் உயிராய் நீ – 17

                                  இன்பன் தன் குடும்பத்துடன் சென்னையை அடைய நேரம் நள்ளிரவை கடந்து இருந்தது.. நேராக ஜெகன் அவர்களுக்காக பார்த்திருந்த அந்த புதிய வீட்டிற்கே வந்துவிட, அந்த வீட்டின் ஹாலில் இவர்களுக்காக காத்திருந்தார் அபிராமி…

                               அந்த நேரத்தில் அவரை நிச்சயம் அங்கே எதிர்பார்க்கவில்லை இன்பன்.. அவனின் இப்போதைய மனநிலையில் அன்னையின் மீது தீராக் கோபம் எழுந்தாலும், இது காட்டிக் கொள்ளும் நேரம் இல்லை என்று மௌனமாகவே கடந்து விட நினைத்தான்..

                                ஆனால், அபிராமி அப்படி நினைக்காமல் ஆரத்தி ஒன்றை ஏற்பாடு செய்துவிட்டிருக்க, தட்டை தூக்கி தூர எறிந்து விடத்தான் கைகள் பரபரத்தது அவனுக்கு…

                                “அன்றைக்கும் இதே மருமகள் தானே.. வயிற்றுப்பிள்ளையோட துரத்தி விட்டப்போ, இந்த அக்கறை எல்லாம் எங்கே போச்சு.. அப்படி என்ன புருஷனை எதிர்த்து பேசாம, மாமியார் பேச்சுக்கு மறுவார்த்தை பேசாம இருக்கணும் இவங்க..” என்று கனன்றது அவன் மனம்…

                               தன்னை அமைதியாக காட்டிக் கொண்டு மனைவியை ஒருபுறம் அணைத்து கொண்டு, பிள்ளையை ஒரு கையில் வைத்துக் கொண்டு அவன் நிற்க, மூவருக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்தார் அபிராமி…

                               காரில் நிறைய நேரம் தூங்கி விட்டதால் இனியன் கொட்ட கொட்ட விழித்திருக்க, அவனுக்கு நேர்மாறாக சோர்ந்து போயிருந்தாள் சிபி.. அவள் மனது மதியம் கண்டிருந்த அந்த விபத்தை குறித்தே சிந்திக்க, அவளின் மனசோர்வு உடலையும் சோர்வாக்கி இருந்தது.. லேசாக காய்ச்சல் வேறு தொடங்கி இருக்க, இனியன் இன்பனிடம் தான் இருந்தான்..

                              இன்பன் மனைவியின் முகத்தை வைத்தே அவளின் நிலையை உணர்ந்து விட, இனியனை ஜெகனிடம் கொடுத்துவிட்டு மனைவியை அழைத்து சென்று அறையில் விட்டான்.. வீடு ஜெகனின் நண்பனுக்கு சொந்தமானதாக இருக்க, தேவையான பொருட்களையும் ஜெகன் அவன் மூலமாகவே ஏற்கனவே தருவித்து இருக்க, அந்த வீடு அவர்கள் வருகைக்கு தயாராகவே இருந்தது…

                             சிபி தூங்காமல் கண்களை மூடிக் கொண்டு அமைதியாக படுத்துவிட, அவளின் கண்ணின் கருவிழிகள் அலைபாய்ந்து கொண்டே தான் இருந்தது… இன்பன் “ஹேய் சிபிம்மா.. அமைதியா தூங்குடா… எதுவும் ஆகாது.. நான் உன்கூடவே இருக்கேன்ல…”என்று மெல்ல அவள் தலையை தடவிக் கொண்டே ஆதுரமாக கூற,

                             “பயமாயிருக்கு இனியன்..என்னால கண்ணை மூடவே முடியல… உங்களுக்கு தெரியுமா.. நமக்கும் இதேபோல…” என்று அவள் தொடங்கும் போதே

                             “ரொம்ப சோர்ந்து போயிருக்கடா… கொஞ்ச நேரம் தூங்கிடேன்.. இதெல்லாம் யோசிக்காத சிபி.. நான் உன்கூட இருக்கேன்ல… இனி என்னை மீறி எதுவும் நடக்காது.. அதை மட்டும் மனசுல வச்சுக்கோ.. நல்ல பொண்ணு இல்ல… தூங்கிடு பொண்ணே…” என்று அவன் கொஞ்சிக் கொண்டே செல்ல

                              அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது. அவள் கண்ணீரை துடைத்து விட்டவன் “நான் உன்கூடவே இருக்கேன்ல சிபி..வா.. என்கிட்டே வா…” என்று அவளை மடியில் கிடத்திக் கொண்டவன் மெல்ல அவள் தலையை அழுத்தி விட, அவன் வாய் மெல்ல ஏதோ பாடலை முணுமுணுக்க தொடங்கியது..

                        “நீரோடும் வைகையிலே, நின்றாடும் மீனே

                          நெய்யூரும் கானகத்தில், கைகாட்டும் மானே

                           தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே

                          தெம்மாங்கு பூந்தமிழே, தென்னாடன் குலமகளே…” என்று பாடலை அவன் தொடர, மெல்ல மெல்ல அலைப்புறுதல்கள் அடங்கி போயிருந்தது அவளிடம்…

                          இன்பன் மெல்ல அவளை குனிந்து பார்க்க, உறங்கி போயிருந்தாள் சிபி.. அவள் உறங்கட்டும் என்று தலையணைக்கு மாற்றி படுக்க வைத்தவன், கீழே இறங்கி வர லாரென்ஸுடன் சேர்ந்து ரயில் விட்டு கொண்டிருந்தான் இனியன்… அவன் கண்களில் மருந்துக்கும் தூக்கமில்லை..

                          இவனை காரில் தூங்கவிட்டது தவறோ?? என்று இப்போது சிந்தனை வந்தது இன்பனுக்கு.. ஜெகன் அலுப்பில் ஸோஃபாவிலேயே உறங்கி போயிருக்க, லாரன்ஸ் இனியனுக்கு ஈடு கொடுத்து கொண்டிருந்தான்.. இவன் படிகளில் இறங்கி வந்த நேரம் அபிராமி சமையல் அறையில் இருந்து வெளியே வர, அவர் கையில் பால் சிப்பர் இருந்தது.

                             வந்து சோபாவில் அமர்ந்து கொண்டவன் பால் சிப்பரை தான் வாங்கி கொண்டு இனியனை கைகளில் அள்ளி கொள்ள, “ப்பா.. பூ… பூ…” என்று வாயிலேயே அவன் ரயில் விட, இன்பனின் முகத்தில் தெறித்தது அவனின் எச்சில் துளிகள்…

                            “போதுண்டா..குடிச்சுட்டு விளையாடுவோம் வா…” என்று அவனை பால் குடிக்க வைக்க முற்பட, சிப்பரை சமத்தாக கையில் வாங்கி கொண்டவன் லாரன்ஸை பார்த்தவுடன் மீண்டும், “பூ..பூ..” என்று ரயில் விட, பால் கழுத்து, நெஞ்சு என்று உடலெல்லாம் வழிந்தது…

                               அபிராமிக்கு பேரனின் சுட்டி தனத்தில் முகம் கொள்ளாத சிரிப்புதான்… இன்பனுக்கும் அவனின் குறும்புத்தனம் சிரிப்பை கொடுக்க, தூங்கி கொண்டிருந்த ஜெகனின் மீது கிடத்தினான் அவனை. ஜெகனை அடித்து எழுப்பி விட்டவன் அவனிடமும் “பூ..பூ..” என்று ரயில் விட்டு காட்ட, தூக்கம் போனதை பற்றி எல்லாம் கவலையே படாமல் அவனுடன் விளையாட தொடங்கினான் அவன்..

                             இன்பனுக்கு தூக்கம் கண்களை சுழற்ற, லாரன்ஸ் “நீ தூங்கு இன்பா.. வி வில் டேக் கேர் ஆப் ஹிம்..” என்று அவனை எழுப்பிவிட, அன்னையும் இருப்பதால் அவனும் உறங்க சென்றுவிட்டான்.. அவனுக்கும் நிதானமாக யோசிக்க வேண்டி இருந்தது…

                              அவனின் கடந்த காலம் அவனை அள்ளிக்கொள்ள காத்திருக்க, அறைக்கு வந்து அமர்ந்தவனுக்கு தூங்கி கொண்டிருந்த சிபியை கண்டதும் அத்தனை கோபம் வந்தது.. இவளுக்கு மட்டும் ஏதாவது ஒன்றென்றால் என்ன ஆகி இருப்பேன் நான்.. கடவுளே… என்று தலையை பிடித்துக் கொண்டவன், தன் தந்தையையும், தன் குடும்பத்தையும் நினைத்து கறுவி கொண்டிருந்தான் அந்த நேரம்..

                              அதிலும் கலையரசன்… அவரின் தில்லு முல்லுகளை எல்லாம் இன்பன் ஏற்கனவே ஓரளவு கணித்து வைத்திருந்தான் என்றாலும், சிபியின் விஷயத்தில் நிச்சயம் அவர் கையும் இருக்கும் என்பது திண்ணமாக தெரிந்தது அவனுக்கு… இல்லாவிட்டால் எல்லாம் மறந்து போய் நின்றவனை அத்தனை வசரமாக மகளுக்கு மணம் பேச துடிப்பாரா???? என்று நினைத்தவன் அடுத்து என்னென்ன செய்ய வேண்டும் என்று மனதில் வகுத்துக் கொண்டான்..

                            தனது திட்டத்தை முழுமையாக வடிவமைத்தவர் அதன்பிறகே  நேரத்தை பார்க்க, இரண்டு மணி என்றது கடிகாரம்.. கையில் இருந்த அலைபேசியில் அலாரம் வைத்து அருகில் இருந்த டேபிளில் வைத்தவன் சிபியுடன் சென்று படுத்துக் கொண்டான்…

                           தூங்கி கொண்டிருந்தவள் நெற்றியில் மென்மையாக ஓர் முத்தம் வைத்து, “சீக்கிரமே எல்லாத்தையும் சரி பண்றேன் ரசிம்மா…” என்று மெல்லிய குரலில் கூறிவிட்டு உறங்க தொடங்கினான்…

                               அடுத்த நாள் காலை அவன் எழுந்து கொள்ளும்போதே மணி எட்டுக்கு மேல் ஆகி இருக்க, அருகில் சிபி இல்லை.. வேகமாக குளித்து முடித்து அவன் வெளியே வர, கையில் காஃபியுடன் அறைக்குள் நுழைந்தாள் சிபி.. அவளின் பின்னால் இனியனும் தளிர் நடையிட்டு வர, அந்த காலைப்பொழுது அற்புதமானதாக மாறிப்போனது இன்பனுக்கு..

                      இன்பனுக்கு யாரோ அவன் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கான மந்திரக்கோலை சுழற்றி விட்டது போல் தோன்றியது அந்த நிமிடம்.. இனியனை கையில் தூக்கி கொண்டவன் மனைவி கையில் இருந்த காபியை கையை நீட்டி வாங்கி கொண்டான்… மனைவி மற்றும் மகனுடன் அந்த காலை நேரம் இனிமையாக கழிய, கிட்டத்தட்ட ஒருமணி நேரம் கழித்து அலுவலக உடையில் தயாராகி கீழிறங்கினான் இன்பன்.

                      சிபி அவன் எங்கே கிளம்பிவிட்டான் என்று பார்த்து நிற்க, இனியன் ஓடிச்சென்று அவன் காலை கட்டி கொண்டிருந்தான்…

                        ஜெகன் சமையலுக்கும் ஒரு ஆளிடம் சொல்லி வைத்திருக்க, அவரும் வந்து விட்டிருந்தார்…  அந்த பெண்மணி சமைத்து வைத்திருந்ததை அனைவரும் உண்டு முடிக்க, அபிராமியை கேள்வியாக பார்த்தவன் “என்னோட வர்றிங்களா.. வீட்ல விட்டுடறேன்…” என்று கேட்க

                          அவரும் தலையசைத்து மகனுடன் கிளம்பினார். என்னவோ மகனின் நடை, அவனின் பேச்சு எல்லாம் சற்றே வித்யாசமாக இருந்தது அவருக்கு… இப்போது அவன் அழைத்து செல்வதாக கூறினாலும், அவன் ‘அம்மா’ என்று அழைக்காததை குறித்துக் கொண்டவர் மனதில் ஏறியிருந்த பரத்துடன் மருமகளிடம் விடை பெற்றுக் கொண்டிருந்தார்..

                          சிபி பெரிதாக முகத்தில் ஒன்றையும் காட்டி கொள்ளவில்லை.. அவர் கிளம்புவதாக சொன்னதும் மெல்ல தலை அசைத்தது மட்டுமே… அபிராமிக்கும் அவளிடம் அதற்குமேல் பேசத் தோன்றாமல் போக, கிளம்பி இருந்தார்..

                        இன்பன் லாரென்ஸ் மற்றும் ஜெகனை தன்னுடன் வரச்சொல்லி இருக்க, அவர்கள் இருவரும் ஜெகனின் காரில் பின்னால் வர, இன்பனும் அவன் அன்னையும் ஒரு காரில் இருந்தனர்.. கார் இன்பனின் வீட்டை அடைய, உள்ளே வரமாட்டான் என்று நினைத்தார் அபிராமி..

                        ஆனால், மகன் ஜெகனிடம் உள்ளே வருமாறு கையசைத்தவன் அன்னைக்கு முன்னால் வீட்டிற்குள் சென்று இருந்தான்.. அவன் நேராக மேலே இருந்த அவன் அறையை நோக்கி நடக்க, ஜெகனும், லாரன்ஸும் அவன் பின்னால்..

                        அபிராமிக்கு மகனின் செயல்கள் புரியாமல் போனாலும், அவன் வீட்டிற்குள் வந்து விட்டதே அத்தனை நிம்மதியாக இருந்தது.. அவரும் அவர்களின் பின்னால் செல்ல நினைத்தவர், ஏதோ தோன்றவும் சமையல் அறைக்குள் நுழைந்து விட்டார்…

                        இங்கே இன்பன் தன்னறைக்கு வந்தவன், தன் அறையின் ஒருபக்கம் இருந்த அலுவலக அறைக்குள் நுழைய, அந்த அறையின் அலமாரியில் வெளியே சாதாரணமாக தெரியாத வகையில் லாக்கர் ஒன்று இருக்க, அந்த லாக்கரை தன் கைவிரல் கொண்டு திறந்தவன், உள்ளே பார்க்க, அவன் தேடி வந்த விஷயம் உள்ளே இல்லை…

                        வந்த கோபத்திற்கு அந்த மர அலமாரியின் கதவில் அவன் ஓங்கி ஒன்று வைக்க, அந்த சத்தம் அந்த அறையின் பக்கவாட்டு சுவர்களில் பட்டு எதிரொலித்தது.. ஜெகன் பதறிபோனவனாக அவன் கையை பிடிக்க லாரன்ஸ் “என்ன பண்ற மேன் நீ… ஆர் யூ மேட்..” என்று கத்த ஆரம்பித்து இருந்தான்…

                          அவனால் கோபத்தை என்ன முயன்றும் அடக்க முடியாமல் போக,  தடதடவென படிகளில் இறங்கியவன் நேராக அன்னையிடம் வந்து நின்றான்.. அபிராமி அவன் முகத்தில் இருந்த கோபத்தை கண்டவர் “என்ன இன்பா… என்னமா ஏன் இப்படி இருக்க..” என்று பதற

                              “என் லாக்கரை யார் ஓபன் பண்ணது…” என்று கண்களில் பெருகிய கனலுடன் அவன் வினவ,

                             “யாரும் திறக்கல இன்பா.. உன் அறைக்குள்ள யார் வருவா.. அம்மா யாரையும் விடவே இல்லடா… “என்று அப்பாவியாக அவர் கூற

                               “ம்மா… என்னோட முக்கியமான ஒரு பைலை காணும்… அங்கேதான் வச்சிருந்தேன்.. யாரோ திறந்து இருக்காங்க..” என்று அவன் கத்த

                               “அந்த அறைக்குள்ள உன் அப்பாவை கூட விடமாட்டேன் இன்பா.. யாரும் உள்ளேபோக எல்லாம்  இல்லடா..” என்று அவர் அழுத்தி சொல்ல, ஜெகனும் இன்பனின் கையை பிடித்து அவனை அமைதியாக்க முயற்சித்து கொண்டிருந்தான்..

                              இன்பன் தன் கைவிரல்களை மடக்கி, தன் நெற்றியில் குத்திக் கொண்டவன் வேகமாக அந்த வீட்டை விட்டு வெளியேறி இருந்தான்… அங்கிருந்து கிளம்பியவன் நேராக சென்று நின்றது அவர்களுக்கு சொந்தமான அந்த நட்சத்திர விடுதியின் முன்பு தான்…

                            அவன் தந்தை அவர்களின் வேறொரு அலுவலகத்தில் இருக்க, மகன் இங்கு வந்திருந்தான்.. மூன்று ஆண்டுகள் கழித்து அங்கு வரும் இன்பனை நிறைய பேருக்கு அடையாளமே தெரியவில்லை.. அவர்களின் மானேஜர் பழைய ஆள் என்பதால் அவர் இன்பனுக்கு வணக்கம் வைத்தவர் அவனுடன் கூடவே வந்து அவன் அறையை காட்ட, அவனின் அறையில் அவனின் நாற்காலியில் சொகுசாக அமர்ந்து கொண்டிருந்தார் கலையரசன்…

                               அவனுக்கு தன் தந்தை தன்னை தோளோடு அணைத்து விடுவித்து தன் தோள்களை பற்றி தன்னை அந்த இருக்கையில் அமர்த்தியது நினைவு வர, கலையரசனை சுட்டு பொசுக்கி விடுவதை போலத்தான் பார்த்தான் அவன்…

                  அதிலும் அன்று வீட்டில் நடந்த பிரச்சனைக்கு பிறகும் இவர் இத்தனை உரிமையாக இங்கே வந்து அமர்ந்திருப்பது யார் கொடுத்த தைரியம்?? என்று கொதித்து போனவனாக அவன் முறைக்க, அவனை கண்டதும் அன்றைய சம்பவத்தின் நினைவே இல்லாதவர் போல், “வாங்க மாப்பிளை..” என்று வரவேற்றார் கலையரசன்…

                     இன்னமும் இருக்கையில் இருந்து எழவே இல்லை.. அந்த அறையின் இருக்கைக்கு பின்னால் எப்போதும் இருக்கும் பாட்டியின் புகைப்படம் இல்லாதிருக்க, அதற்கு மாறாக அங்கே வெங்கடாச்சலபதி பெரிதாக சிரித்துக் கொண்டிருந்தார்…

                     இதற்குள் மதுசூதனனுக்கும் தகவல் போயிருக்க, அவசர அவசரமாக தனது அலுவலகத்திலிருந்து கிளம்பி இருந்தார் அவர்.

Advertisement