Advertisement

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 16

                         பேரின்பன், சிபி மற்றும் இனியன் மூவரும் ஒரு காரில் தங்கள் பயணத்தை தொடங்கி இருக்க, அவர்களுக்கு சற்றே பின்னால் ஜெகன் மற்றும் லாரன்ஸ் அவர்களை தொடர்ந்து கொண்டிருந்தனர்.. இன்பனை பொறுத்தவரை நீண்டு கொண்டே இருக்காதா?? என்று ஏக்கம் ஏற்படுத்தும் பயணம்…

                       அவன் டிரைவர் இருக்கையில் அமர்ந்திருக்க, அவனுக்கு அருகில் சிபி.. அவளின் மடியில் அவர்களின் இனியன்…  இன்பன் மனம் துள்ளி குதித்துக் கொண்டிருக்க, அவனுக்கு நேர்மாறாக ஒரு சின்ன பதட்டத்துடனே அமர்ந்திருந்தாள் சிபி.. அவளுக்கு இப்போதும் தன் முடிவு சரியா?? இல்லையா?? என்ற குழப்பம் இருந்து கொண்டே இருக்கிறது..

                         இன்பனின் வார்த்தையை மீற முடியாமல், அவனுடன் கிளம்பி விட்டாலும் மனதின் சில அலைப்புறுதல்களை அவளால் அடக்க முடியாமல் போனது… இன்பன் சாலையில் கவனம் வைத்திருந்தவன் மெல்ல சிபியின் பக்கம் திரும்ப அவள் கண்களில் தெரிந்த குழப்பத்தில் தானாகவே அவள் கையை பற்றிக் கொண்டான்…

                           சிபி அவனை திரும்பி பார்த்தவள் அவனை லேசாக முறைத்துவிட்டு பார்வையை வெளியில் திருப்பிக் கொள்ள, “அவனை பின்னாடி படுக்க வச்சிடுவோமா.. எவ்ளோ நேரம் கையிலேயே வச்சிருப்ப..??” என்று அக்கறையாக இன்பன் கேட்க

                         அவனை நெஞ்சில் போட்டு தட்டிக் கொண்டிருந்தவள் “வேண்டாம்…” என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டாள்.. இன்பன் அவள் பேச்சை கேட்காமல் காரை ஓரமாக நிறுத்தி, அவளிடம் இருந்த இனியனை  தூக்க முற்பட, வீலென்ற சத்தத்துடன் அவன் அழுததில் மீண்டும் சிபியிடமே விட்டுவிட்டான்..

                          அவள் “ஒண்ணுமில்லடா.. ஒண்ணுமில்ல இனியாம்மா… நீ தூங்குடா…” என்று அவனை தட்டி கொடுக்க, சமத்தாக மீண்டும் உறங்கிவிட்டது குட்டி வாண்டு…

                       இன்பன் “என்னடா நடக்குது இங்கே..” என்பது போல் ஒரு லுக்கை கொடுக்க,

                      “ஏதாவது சொன்னா கேட்கணும்.. எதையுமே கேட்கமாட்டேன் ன்னு அடம்பிடிச்சா இப்படித்தான் ஆகும்…” என்று சற்றே கோபத்துடன் அவள் பார்க்க

                       “ஏதாவது சொன்னா கேட்கலாம்.. எப்பவுமே வரமாட்டேன் ன்னு சொல்றவகிட்ட என்ன கேட்கிறது… எதுவும் கேட்க தேவையில்லை..” என்று நேரடியாகவே அவன் பதில் கொடுத்து விட்டான்…

                          அபிராமியும், மதுசூதனனும் வால்பாறையில் இருந்து ஊருக்கு கிளம்பிய அடுத்த நாளே சென்னை செல்லும் பேச்சை தொடங்கிவிட்டான் இன்பன். இந்த இடைப்பட்ட நாட்களில் ஜெகனின் உதவியோடு சென்னையில் ஒரு வீட்டையும் பார்த்து விட்டிருக்க, மனைவியையும், மகனையும் சென்னைக்கு கடத்தி செல்லும் வேலையில் தீவிரமாக இறங்கிவிட்டான்..

                        சிபி முடியவே முடியாது என்று நிற்க, “உனக்கு நானும், இனியனும் வேணுமா? வேண்டாமா???… நான் என் மகனோட இருக்கணும் ன்னு ஆசைப்படறேன் சிபி… இதுக்குமேல உன் விருப்பம்..” என்று முடித்து கொண்டிருந்தான்..

                  சிபியும் அதற்குமேல் எதுவும் மறுத்து பேசாமல் அவனுடன் கிளம்பி இருந்தாள்.. ஆனால் இப்படி கத்தி நுனியில் வைத்து அழைத்து செல்வதை போல, அடுத்த நாளே கிளம்ப சொல்வான் என்று துளியும் எதிர்பார்த்திருக்கவே இல்லை…

                    மனதளவில் நான் தயாராகி கொள்ள கூட, சிறிது அவகாசம் கொடுக்க மாட்டானா?? என்று அவள் மனம் கொதிக்க, “இவளை யோசிக்க விடறதே தப்பு…” என்ற எண்ணத்தில் தான் அந்த அவகாசத்தை மறுத்து அவளை தூக்கி இருந்தான் இன்பன்.

                   சிபி அவனின் இந்த அவசரத்தில் முகத்தை திருப்பி கொள்ள, அவளை சரிகட்டத்தான் முயற்சித்து கொண்டிருந்தான் இன்பன்.. இவர்களின் கார் வால்பாறையில் இருந்து வெளியே வந்திருக்க, கோயம்பத்தூர் வரை காரிலும், அங்கிருந்து சென்னைக்கு விமானத்திலும் வருவது தான் திட்டம்..

                    ஆனால், இவர்கள் வழியிலேயே காரை ஓரமாக நிறுத்தி தங்கள் பஞ்சாயத்தை பார்த்துக் கொண்டிருக்க, இவர்களுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த ஜெகனும், லாரன்ஸும் காரின் ஹாரனை அடித்து இன்பனை அழைக்க, அவர்களை செல்லுமாறு சைகை காட்டிவிட்டு தானும் மெதுவாக வண்டியை கிளப்பினான்…

                         சிபி இன்னமும் அவனை திரும்பி பார்க்காமல், பார்வையை வெளிப்புறமே வைத்திருக்க, “இப்போ என்ன பண்ணிட்டேன்னு முகத்தை இப்படி வச்சிருக்க…” என்று ஆதங்கமாகவே கேட்டுவிட்டான்..

                       கூடவே “உனக்கு விருப்பம் இல்லன்னா, கூட்டிட்டு போய் வால்பாறையிலேயே விட்டுடவா சிபி…” என்றும் கேட்டு வைக்க

                      “நீங்கதான.. எப்படி கூட்டிட்டு போய் விடுவீங்க பாருங்க…” என்று நக்கலாக சொன்னவள் மீண்டும் வெளிப்புறம் திரும்பி கொள்ள

                            நீ கவிதைகளா

கனவுகளா கயல்விழியே

நான் நிகழ்வதுவா கடந்ததுவா

பதில் மொழியா

உன்னோடு

நெஞ்சம் உறவாடும்

வேளை தண்ணீர்

கமலம் தானா

முகம் காட்டு

நீ முழு வெண்பனி

ஓடாதே நீ ஏன்

எல்லையே

இதழோரமாய்

சிறு புன்னகை நீ

காட்டடி என்

முல்லையே…

                               என்று மெல்லிய வீணையின் இசையை போல் அவன் வரிகளை கோர்க்க, நிச்சயம் பலன் இருந்தது…. சிபி அவன் புறம் திரும்பி இருந்தவள் சற்றே மையலாக அவனை பார்த்து வைக்க, எப்படி என்பது போல் அவன் புருவம் உயர்த்த, தலையை மறுப்பாக அசைத்தவள் உதட்டை பிதுக்கி காட்டிவிட

     தாவும் கொடி மேலே

ஒளிர் தங்கக்குடம் போலே

தாவும் கொடி மேலே

ஒளிர் தங்கக்குடம் போலே

பாவை உன் பேரெழிலே

எந்தன் ஆவலைத் தூண்டுதடி

பாவை உன் பேரெழிலே

எந்தன் ஆவலைத் தூண்டுதடி ஈ..ஈ..

சித்திரம் பேசுதடி

எந்தன் சிந்தை மயங்குதடி.ஈஈ..

சித்திரம் பேசுதடி…..

                              என்று மீண்டும் அவன் பாட்டிசைக்க, கண்களில் லேசாக நீர்த்திரையிட்டது சிபிக்கு…அந்த நொடி தங்களை சூழ்ந்திருந்த அத்தனை சங்கடங்களும் விலகி நின்று, தாங்கள் வாழ வழி விடுவதை போல் ஒரு எண்ணம் அவளுக்குள்..

                           அந்த எண்ணம் தந்த இனிமையுடன் முகத்தில் விரவிய புன்னகையுடன் அவள் இன்பனை பார்த்து வைக்க, அவள் பார்வையில் ஒரு கையில் ஸ்டேரிங்கை பிடித்திருந்தவன் மறுகையால் லேசாக தன் மீசையின் நுனியை திருகிவிட்டு தன் வலது கையின் ஆட்காட்டி விரலால் மெல்ல அதை நீவிவிட, அங்கேயே அந்த நிமிடமே விழுந்து விட்டாள் அவள்…

                          அவனுக்கு பழைய நினைவுகள்  திரும்பினாலும், இல்லையென்றாலும் இப்படியான சில நொடிகள் மட்டுமே போதும் தங்கள் வாழ்க்கைக்கு என்று தோன்ற, பார்வையை மாற்றவே இல்லை அவள்,… இன்பன்தான் “ரொம்ப சைட் அடிக்கிற சிபி..” என்று  அவளை கலைக்க

                         “எங்கே குறைஞ்சிட்டிங்க…” என்று உடனே வந்தது முறைப்பு…

                        “எங்கேயும் இல்லையே.. சொல்லப்போனா, இப்போதான் முழுமையடையறேன்… நீ பாரும்மா..” என்று அவன் சற்றே திரும்பி அமர்ந்ததில், வெட்கம் வேறு வந்து ஒட்டிக் கொள்ள,

                        “ரோடை பார்த்து ஓட்டுங்க..” என்றவள் மீண்டும் வெளிப்புறம் திரும்பிக் கொண்டாள்.. ஆனால், இந்தமுறை அவளின் முகத்தில் கலக்கம் எதுவுமில்லாமல், முழுவதும் நாணமும், இன்பன் மீதான காதலும் மட்டுமே மீதுரி  இருந்தது…

                       அவளின் அந்த வெட்கத்தை ரசித்துக் கொண்டே காரை அவன் செலுத்திக் கொண்டிருக்க, அவர்கள் கார் பொள்ளாச்சியை நெருங்கி இருந்தது… இப்போதும் ஜெகனும், லாரன்ஸும் பின்னால் வந்து கொண்டிருக்க, முன்னால் இன்பனின் கார்..

                        கார் வழக்கத்தைவிட மெதுவாகவே அவன் கைகளில் பயணித்துக் கொண்டிருக்க, முழுதாக ரசித்து ஒரு பயணம்.. நல்லபடியாக இவர்கள் சென்று கொண்டிருந்த நேரத்தில் தான், இவர்கள் காரின் பின்னால் வெகு வேகத்தில் வந்து கொண்டிருந்தது அந்த தனியார் பேருந்து…

                        வழக்கமாகவே நெடுஞ்சாலைகளில் அதிக வேகமாக தான் செல்வார்கள் என்றாலும், அந்த  பேருந்தின் வேகம் அச்சமூட்டுவதாகவே இருந்தது…

                      பின்னால் வந்து கொண்டிருந்த பேருந்து சத்தம் எழுப்பிக் கொண்டே இருக்க, அவனின் விடாத தொல்லையில் இன்பன் லேசாக சாலையின் ஓரம் ஒதுங்கி அவர்களுக்கு வழிவிட, அதே வேகத்தில் இன்பனின் காரை தாண்டி முன்னால் சென்று இருந்தது…

                      இன்பன் கொஞ்சம் அசந்து இருந்தாலும், அந்த பேருந்து வந்த வேகத்திற்கு அவனை தட்டி விட்டு சென்றிருக்க, வாய்ப்புகள் அதிகம்… இன்பன் கொஞ்சம் கவனமாக இருக்கவும், லாவகமாக காரை ஒதுக்கி விட்டான்..

                       “அறிவு கெட்டவன்.. வண்டி ஓட்டுறான் பாரு..” என்று அவனை மனதிற்குள் அர்ச்சித்து கொண்டே அவன் வண்டியை செலுத்த, அவன் காரை தாண்டி முன்னால் சென்றது ஒரு இருசக்கர வாகனம்.. அந்த வண்டியில் ஆணும், பெண்ணுமாக இரண்டு பேர் இருக்க, சற்றே வேகமாக தான் பறந்து கொண்டிருந்தனர் அவர்களும்…

                         பார்க்க காதலர்கள் போல் காட்சி அளிக்க, அந்த பேருந்தின் வேகம் பற்றி கவலை கொள்ளாமல்  அதை முந்திவிட அந்த இளைஞன் முயன்று கொண்டிருக்க, அவர்களுக்கு சற்றே தொலைவில் அவர்களை தொடர்ந்து கொண்டிருந்தான் இன்பன்..

                       அந்த இளைஞன் வண்டியை செலுத்தும் விதம், இன்பனை சற்றே பதைக்க வைக்க, “என்ன பண்றான் இவன்…”என்று அவன் பதட்டமடையும் போதே, அந்த பேருந்து லேசாக உரசியதில், அந்த இருசக்கர வாகனம் அந்த பேருந்தின் அடியிலேயே சிக்கி இருந்தது…

                           கண் மூடி திறக்கும் நேரம் கூட இல்லாமல், கண்ணெதிரே அந்த வண்டியில் இருந்த பெண் தூக்கி வீசப்பட்டு இருக்க, அந்த இளைஞனின் இடைப்பகுதியில் ஏறி இறங்கி இருந்தது அந்த பேருந்து.. சட்டென வேகத்தை குறைக்க முடியாமல் அந்த பேருந்தின் ஓட்டுனரும் தடுமாறி இருக்க, பேருந்தும் சாலையின் ஓரத்தில் இருந்த மீடியனில் மோதி தான் நின்றிருந்தது…

                        அந்த நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த வாகனங்கள் தங்கள் வாகனத்தை ஓரம்கட்டி நிறுத்திவிட்டு, அந்த பேருந்தை நோக்கி ஓட, இன்பன் தனது காரை சாலையோரம் நிறுத்தி இருந்தான் அவ்வளவே..

                       அவனால் அதற்குமேல் எதுவும் யோசிக்கக்கூட முடியாமல் அவனின் நினைவுகள் அவனை மொய்த்துக் கொள்ள, கண்கள் சட்டென கருமையடைந்து சுற்றி நடப்பது அத்தனையும் சுழல்வதை போல் இருக்க, கண்மூடி ஸ்டெரிங்கிலேயே சாய்ந்து விட்டிருந்தான்… மெல்ல தன்னை இயல்புக்கு கொண்டு வர அவன் போராடி கொண்டிருக்க, சிபியின் நிலை அவனை விட மோசமாக இருந்தது…

                           கண்ணெதிரில் கண்ட காட்சி, முந்தைய எதையோ நினைவு படுத்திவிட, பிள்ளையை கையில் வைத்திருந்தவள் அவனை இறுக்கி கொண்டு கண்களை மூடி அந்த இருக்கையிலேயே ஒடுங்கி கொண்டிருந்தாள்.. அவள் இன்பனை நிமிர்ந்து கூட பார்த்திருக்கவில்லை.. அவளின் உள்ளம் நடுங்கி போயிருக்க, அத்தனை இறுக்கமாக கண்களை மூடிக் கொண்டிருந்தாள் அவள்…

                       இன்பன் சில நிமிடங்கள் கழித்தே தன் அருகில் இருந்தவளை திரும்பி பார்க்க, அவளின் ஒடுங்கிய நிலையில் தன்னை மறந்தவனாக அவளை அணைத்து கொண்டான்.. அவனும் ஒருவித அதிர்ச்சியில் இருக்க, வாய் பேச்சுக்கள் எதற்கும் வழியில்லாமல் போக, தன் அணைப்பினால் தன்னை, தன் அருகாமையை பாதுகாப்பை உணர வைக்க முயன்றான் இன்பன்..

                       ஆனால், அவளோ எதையும் உணரும் நிலையில் இல்லாமல் போக, பயத்தில் நடுங்கியவளாக தன் கையில் இருந்த பிள்ளையின் மேல் மொத்த அழுத்தத்தையும் இறக்கி கொண்டிருந்தாள்… அவள் இறுக்கியதில் இனியன் சத்தமாக அழ ஆரம்பிக்க, இன்பன் அவள் சுயத்திற்கு வருவதாக இல்லை என்று புரிந்தவன் போல், அவள் கையின் மேல் பட்டென்று ஒன்று வைத்தான்…

                        அவள் திடுக்கிட்டு கையை லேசாக நழுவவிட, பிள்ளையை கையில் வாங்கி கொண்டவன் அவனை தன் வலதுகையில் பிடித்துக் கொள்ள, சிபி தானாகவே இண்பனிடம் ஒண்டிக் கொண்டிருந்தாள்…

                           அந்த நிமிடம் தன் இணையின் பயமும், பதட்டமும் எதனால் என்பது இன்பனுக்கு புரிய, அவளை தன்னோடு சேர்த்து அழுத்தமாக அணைத்திருந்தவன் மெல்ல அவள் தலையில் முத்தமிட்டு, தானும் இயல்பாக முயன்று கொண்டிருந்தான்… அந்த நிமிடம் அவர்கள் இருவருமே ஒருவரிடம் மற்றொருவர் ஆறுதல் தேட, அங்கே வேலையாட்களுக்கு வேலையே இல்லை..

                        இவர்கள் வாகனத்தின் பின்னால் வந்த லாரன்ஸும், ஜெகனும் விபத்து நடந்த இடத்தை நோக்கி ஓடியிருக்க, இவர்களை கவனிக்கவில்லை அவர்கள்..

                        இவர்கள் கார் நின்றிருந்த இடத்தில இருந்து சற்று  விபத்து நடந்திருக்க, இன்பன் காரை சரியாக நிறுத்தியதையும் லாரன்ஸ் பார்த்திருந்ததால், அங்கே விபத்தில் சிக்கி இருந்தவர்களை மீட்க உதவிக் கொண்டிருந்தனர் அவர்கள்…

                      நடந்து முடிந்திருந்த விபத்தே கவனத்தில் இருக்க, இன்பனிடம் தோன்றி இருந்த மாற்றங்களை யாருமே கவனிக்கவில்லை அங்கே.. கவனிக்க வேண்டியவள் தானே மொத்தமாக அவனிடம் சரணடைந்து இருக்க, அவள் எங்கே அவனை கவனிப்பது…

                     வெகுநேரம் கழித்தே ஜெகனும், லாரன்ஸும் இன்பனின் கார் அருகில் வர, இதற்குள் மொத்தமாக சுதாரித்து இருந்தான் இன்பன்… இனியனை மடியில் அமர்த்தி இருக்க, அவன் ஸ்டேரிங் வீலுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்க, பெரிய குழந்தை இன்னமும் அவன் நெஞ்சில் துஞ்சிக் கொண்டிருந்தது…

                     அவன் மனம் வெகு உரிமையாக “போதுண்டி பொண்ணே… ” என்று கொஞ்சிக் கொள்ள, எதையும் உணரும் நிலையில் இல்லை அவன்கிளி.. இன்பனுக்கு இந்த நிமிடம் சத்தமிட்டு அவளை அழைக்கத்தான் தோன்றியது… ஆனால், இன்னமும் ஏதோ உள்ளுக்குள் உறுத்த, அந்த நிமிடம் மௌனியாகி போனான் அவன்..

                            இதற்குள் ஜெகன் காரின் கண்ணாடி கதவை லேசாக தட்ட, சிபியை விலக்கி அமரவைத்து இவன் கண்ணாடியை இறக்க, “என்னடா ஆச்சு.. அடி ஏதாவது பட்டுடுச்சா..” என்று அவன் கேட்க

                      “அதெல்லாம் எதுவும் இல்லடா… இவதான் பயந்துட்டா…” என்றவன் சிபியை கண்காட்ட, ஜெகனுக்கு அவளின் நிலைமை புரிந்தது..

                      லாரன்ஸ் அவள் பயத்தை போக்கும்விதமாக “பெருசா எதுவும் இல்ல சிஸ்டர்.. அங்கே எல்லாமே ஓகே… யாருக்கும் உயிருக்கு ஆபத்து இல்லை..” என்று பொய்யுரைக்க, மெல்ல தலையை மட்டும் அசைத்துக் கொண்டாள் அவள்..

                     அதன்பின்னான பேச்சுக்கள் எதுவுமே அவளின் கவனத்தில் பதியவில்லை.. இன்பன் அவள் இருக்கையை தளர்த்தி விட்டவன் “கண்ணை மூடி படு… நான் கொஞ்ச நேரம் கழிச்சு எழுப்பறேன்…” என்றுவிட, தூக்கம் வரவில்லை என்றாலும் நினைவுகளின் கனம் தாங்காமல் கண்களை மூடிக் கொண்டாள் அவள்…

                      இதற்குள் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் வேறு ஏற்பட்டிருக்க,  “முதல்ல இங்கே இருந்து கிளம்புவோம்டா.. கோயம்பத்தூர் போயிடுவோம்..” என்றவன் அவர்களையும் காருக்கு அனுப்ப, லாரன்ஸ் இனியன் விழித்திருக்கவும், தான் வைத்துக் கொள்வதாக சொல்ல, கேட்கவே இல்லை இன்பன்..

                     “அவ எழுந்தா முதல்ல இவனைத்தான் கேட்பா லா.. கூட இருக்கட்டும்.. அப்போதான் கொஞ்சம் நார்மல் ஆவா..” என்று மனைவியை பற்றி தெரிந்தவனாக சொல்ல

                       “அப்போ நீங்க மூணு பேரும் பின்னாடி உட்காருங்க… நான் கார் எடுக்கிறேன்..” என்று நின்றான் அவன்…

                      “நான் நல்லா இருக்கேண்டா… நானே ஓட்டிடுவேன்.. இன்னும் கொஞ்சதூரம் தானே.. அங்கே போயிட்டு டிரைவர் போட்டுக்கலாம்..” என்று இன்பன் முடிவாக கூறிவிட

                    அவன் சொன்னபடியே கோவை வரை காரை அவர்களே செலுத்திக் கொண்டு வர, கோவையிலிருந்து சென்னை வரை ஒரு ஓட்டுனரை ஏற்பாடு செய்து கொண்டனர்… இவர்களின் விமானத்திற்கான நேரம் கடந்த பின்பே அவர்கள் கோவையை அடைந்திருக்க, அதன்பொருட்டே இந்த கார் பயணம்..

                     இப்போதும் இரண்டு காரிலேயே பயணமாக, இன்பனின் தோள் வளைவில் தூக்க மாத்திரையின் விளைவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் சிபி… இனியன் இன்பனின் மடியில் உறங்கி கொண்டிருந்தான்…

                   அவளுக்கு இருந்த தீராத உளைச்சல் பெரும் தலைவலியை இழுத்து விட்டிருக்க, ஜெகன் உதவியோடு அவளை சாப்பிட வைத்து, அந்த மாத்திரையும் கொடுத்து உறங்க வைத்திருந்தான் இன்பன்…நேரமும் மதியத்தை தாண்டி கொண்டிருக்க, மீண்டும் சென்னையை நோக்கி ஒரு சீரான பயணம்…

Advertisement