Advertisement

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 15

                                            சிபியின் அந்த சிறிய வீட்டில் இன்பனின் முதல் நாள் அத்தனை அழகாக விடிந்து இருந்தது.. காலையில் முகத்தில் அடித்து எழுப்பிவிட்ட இனியன், மனைவி கொடுத்த ஏலக்காய் டீ, அடுத்ததாக இஞ்சி, மிளகு மணக்க மணக்க அவள் செய்திருந்த வெண்பொங்கல், வெண்மை நிற சட்னி… என்று  நிமிடமும் அருகில் இருந்த இனியனுடன் அழகாக நகர்ந்து கொண்டிருந்தது அவனுக்கு..

                                            நேற்று இரவு இங்கு வந்தது முதலாக லாரன்ஸை பற்றி கூட யோசிக்காமல் அவன் அழகாக அவன் குடும்பத்துடன் ஒட்டிக் கொண்டிருக்க, காலை உணவை முடித்து கையில் தன் மொபைலை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான் இன்பன்..

                                        அவன் மடியில் இனியன் அமர்ந்திருக்க, இன்பனின் கையில் இருந்த மொபைலை பிடுங்குவதற்கு தான் முயற்சி செய்து கொண்டிருந்தான் அவன்… ஜெகனும், லாரன்ஸும் இன்பனை காண வந்தவர்கள் இந்த காட்சியை கண்டு அப்படியே நின்றுவிட, அவர்களின் பார்வை மகனை விழியெடுக்காமல் ஆதுரமாக நோக்கி கொண்டிருந்த இன்பனின் மீதே இருந்தது..

                                 இவர்கள் நண்பனை மகிழ்ச்சியோடு நோக்கி கொண்டிருந்த அந்த நேரம் தான் தன் மனைவியுடன் வந்து நின்றார் மதுசூதனன்… காரை தங்கள் வீட்டிலேயே நிறுத்திவிட்டு வந்திருக்க, அவர்கள் வந்ததை கவனிக்கவே இல்லை யாரும்..

                               அவர்களுக்கும் மகனின் முகத்தில் நிறைந்திருந்த புன்னகை மகிழ்ச்சியை கொடுக்க, அதற்குமேல் என்ன வேண்டும் என்றுதான் தோன்றியது அந்த நிமிடம். அவர்கள் மகனையே பார்த்துக் கொண்டு நின்றுவிட, அபிராமியின் கண்களில் கண்ணீர் துடைக்க துடைக்க பெருகி கொண்டே இருந்தது.

                          ஒரு நிலைக்கு மேல் அவர் மெல்ல விசும்பி விட, அந்த அரவத்தில் தான் அவர்களை நிமிர்ந்து பார்த்தான் இன்பன். அவர்களை நிச்சயம் அங்கே எதிர்பார்த்தே இருக்கவில்லை அவன்.

                          லாரன்ஸ் சிபியை பற்றியும், இனியனை பற்றியும் அவர்களிடம் தெரிவித்து இருக்க, அதற்குமேல் அவர்களால் சென்னையில் இருக்க முடியாமல் போனது.. அதிலும் அபிராமியின் கண்ணீரும், நச்சரிப்பும் தாங்க முடியாமல் அழைத்துக் கொண்டு வந்து விட்டிருந்தார் மதுசூதனன்..

                          இன்பன் இவர்களை கண்டவன் எதுவுமே பேச முற்படாமல் எழுந்து வீட்டிற்குள் சென்று விட்டான். ஜெகனும், லாரன்ஸும் அவனை அதிர்ச்சியாக பார்க்க, உள்ளே குளியலறையில் அன்றைய துணிகளை அலசி கொண்டிருந்தாள் சிபி.. அவளுக்கு வெளியில் என்ன நடக்கிறது என்று தெரிய வாய்ப்பில்லாமல் போக, இன்பன் வந்தவன் சிபியை அழைத்து இனியனை அவள் கையில் திணித்துவிட்டான்..

                      சிபி என்ன என்பது போல் பார்க்க, “வெளியே என்னோட அம்மா, அப்பா வந்திருக்காங்க…” என்று நிதானமாக அவன் கூற,சிபியின் கைகள் மகனை இறுக்கி கொண்டது இப்போது. கூடவே அந்த கண்களில் கலக்கமும் கூடிப் போக, இன்பன் தான் தவித்து போனான்..

                    அவளை இயல்பாக்கும் பொருட்டு “இவன் உன்னோட மகன் சிபி… அவங்க இவனை பார்க்கணுமா??? வேண்டாமா ன்னு நீதான் முடிவு பண்ணனும்… இவனும் வேண்டாம்ன்னு தான துரத்தி விட்டாங்க.. இப்போ  இவனை அவங்க கண்ல கூட காட்ட வேண்டாம் ன்னு நீ நினைச்சாலும் சரிதான்.. உன்னோட முடிவு தான்…” என்றவன்

                      “நான் அங்கே வீட்டுக்கு கிளம்புறேன்.. நான் இங்கேயே இருந்தா, நிச்சயம் அவங்களும் கிளம்ப மாட்டாங்க…” என்று முடித்துவிட்டு இனியனின் கன்னத்தில் முத்தமிட, அவனின் மூச்சுக்காற்று சிபியை முத்தமிட்டு மீண்டது..

                       அதற்கு மேல் இனியன் அழுவதையும் பொருட்படுத்தாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டான் இன்பன்.. சிபிக்கு மீண்டும் முடிவு தெரியாத ஒரு சுழலில் சிக்குவது போன்ற உணர்வு தான்.. கால்கள் வேரோடிவிட்டது போல் அதே இடத்திலேயே அவள் சமைந்து விட்டிருக்க, ஜெகன் அவளை தேடி வந்தான் இப்போது..

                      “அவங்க வெளியே இருக்காங்க சிபி..” என்றவன் குரலில் என்ன இருந்தது என்று புரியவே இல்லை அவளுக்கு… நிச்சயம் அவன் கண்களில் வருத்தம் எதுவும் இல்லை…  அவர்களை குறித்த ஒரு ஏளனம் தான்..

                       ஆனால், சிபியால் அவர்கள் வருகையை மகிழ்ச்சியாக கொண்டாடவோ, இல்லை அவர்களை ஏளனம் செய்யவோ எதுவுமே தோன்றவில்லை.. நிச்சயம் அவர்களுக்கு திருப்பி கொடுக்க வேண்டியது ஏராளம் தான்.. மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக அவள் வாழ்வை விலை பேசிய உத்தமர்கள் அல்லவா..

                      பணத்தை மட்டுமே அளவீடாக வைத்து அவள் காதலை தரம் பிரித்தவர்கள்.. அவர்கள் சோதனையின் முடிவில் அவள் சாகசக்காரி என்று பெயரிடப்பட்டு வயிற்று பிள்ளையோடு துரத்தப்பட்டிருக்க, பிள்ளை இருக்கிறது என்று அவர்களுக்கு தெரியாமல் போனது ஏதோ ஒரு விதத்தில் நல்லதாகவே தோன்றும் சிபிக்கு.

                  இல்லையென்றால் அவனையும் அதே மருத்துவமனையில் கலைத்து விட்டு செல்ல கூட ஆணை இட்டு இருப்பார்கள் என்ற நினைவே, அவர்களிடம் அவளை நெருங்க விடவில்லை..

                   சட்டமாக தரையில் அமர்ந்து கொண்டவள் இனியனை கையில் பிடித்துக் கொண்டாள்.. “இவன் எங்கள் மகன்.. பணக்கார மதுசூதனின் குடும்ப வாரிசு இல்லை இவன்….” என்ற எண்ணம் அழுத்தம் பெற, கூடவே இன்பனின் நினைவும்..

                  தன்னிடம் அவன் பேசிவிட்டு சென்ற கணம், கண்முன் வர, அவன் முகத்தில் எத்தனை வேதனை மண்டி இருந்தது அந்த நேரத்தில் என்பது தான் அவளுக்கும் நரகமாக இருந்தது..

                  நிச்சயம் அவளை தனித்து விட்டு அவன் செல்லமாட்டான் என்ற நிலையில், அவன் தினம் தினம் இந்த வேதனையை அனுபவிக்க வேண்டி வருமே.. பெற்றவர்களை பார்ப்பானா?? இல்லை எனக்காகவா..??? அவனுக்கு தினம் தினம் இந்த வேதனை தேவை தானா..??? என்று உள்ளம் துடிக்க, கண்களை துடைத்துக் கொண்டு கொண்டாள்…

                           இவன் என் மகன் என்ற எண்ணம் வலுப்பெற, யாரால் எங்களை என்ன செய்துவிட முடியும் என்றும் தோன்ற, திட்டமாகவே அவர்களை எதிர்கொள்ள துணிந்தாள் அவள்… இவர்கள் என்னிடமிருந்து என் மகனை பிரித்துவிட முடியுமா?? அப்படியே பிரிக்க நினைத்தாலும் என் இனியன் வேடிக்கை பார்ப்பாரா?? என்ற அழுத்தமும் சேர்ந்துவிட்டது…

                       இதற்குள் அபிராமி அந்த வீட்டின் வாசலுக்கே வந்து விட்டு இருந்தார். ஜெகன் சிபிக்கு துணையாக அருகிலேயே இருக்க, மிகுந்த தயக்கத்துடன் “நான் உள்ளே வரட்டுமா??” என்று கேட்டு நின்றார் அபிராமி…

                      சிறுவயதில் இருந்தே ஊறி விட்டிருந்த குணத்தில் தானாகவே அவள் எழுந்து நின்றுவிட, மகன் இன்னமும் அவள் கையில் தான்… இன்பனின் அலைபேசி இனியனிடம் இருக்க, சுற்றி நடப்பதை குறித்த எந்த கவலையும் இல்லை அவனிடம்…

                      சிபி வாசலில் இருந்தவரை வெறித்த பார்வை பார்க்க, அவள் அனுமதிக்காக காத்திருக்காமல் உள்ளே நுழைந்தார் அபிராமி… சிபி தன் பார்வையை மாற்றாமல் நின்ற இடத்தில நிற்க, “எங்களை மன்னிச்சிடுமா..” என்று கைகூப்பி அவர் நிற்க, கூனி குறுகி போயிருந்தார் அவ்விடத்தில்…

                      சரியாக அதே நேரம் இன்பனும் அந்த வீட்டிற்குள் நுழைய, “ம்மா.. என்னம்மா பண்ணிட்டு இருக்கீங்க..” என்று அவர் கையை பிடித்து இறக்கிவிட்டிருந்தான் அவன்..

                     ஜெகனின் வீட்டு வாசல்வரை சென்றவன் பெற்றவர்கள் தன் பின்னால் வராமல் போகவும், திரும்பி வந்திருக்க, அபிராமி மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தார்… எத்தனை கோபம் இருந்தாலும், அவர் அப்படி கூனி குறுகி நிற்பதை மகனாக தாங்கி கொள்ளவே முடியவில்லை அவனால்..

                       அபிராமி அழுது கொண்டே நிற்க, “ஏன்மா இப்படி சங்கடபட வைக்கிறிங்க… நீங்க கேட்கிற மன்னிப்பு எதை மாற்றிட போகுது… அதான் எல்லா பாவத்தையும் ஏற்கனவே அனுபவிச்சிட்டு இருக்கோமே.. இன்னும் இன்னும் ஏன்மா இப்படி நோக வைக்கிறிங்க..” என்று கண்டனத்தோடு அவன் பேச

                      “இன்பா… ” என்று அழுகையோடு அபிராமி அவனை நெருங்க, தள்ளி நின்றிருந்தான்.. அபிராமி அதிர்ச்சியாக அவனை பார்க்க, “உங்களை காணோமே ன்னு திரும்பி வந்தேன்… வேற எதுவும் இல்ல.. தயவு செஞ்சு இங்கே இருந்து கிளம்பிடுங்கம்மா…” என்று அவன் முடிவாக கூற

                        அபிராமி “இன்பா.. அம்மாவை மன்னிக்கவே மாட்டியா… எங்களை இப்படியே ஒதுக்கிட போறியா… எங்களுக்கு இவ்ளோ பெரிய தண்டனை எல்லாம் கொடுத்திடாத இன்பா….” என்று கண்ணீர் விட

                       “நான் இவளுக்கு இதுவரைக்கும் எந்த நியாயமும் செய்யலம்மா.. பூசி மெழுகாம சொல்லணும்ன்னா இவளுக்கு இந்த குழந்தையை கொடுத்ததை தவிர, வேற எதுவுமே செய்யல நான்… ஆனா, நான் இங்கே வந்து இத்தனை நாள்ல ஒருமுறை கூட அவ அதை பத்தி ஒரு வார்த்தை கூட பேசினதே இல்ல…

                     “ஏன் இப்பவும் உங்களை என்ன வேணாலும் செய்யலாம் ன்னு சொல்லிட்டு தான் வெளியே போனேன்.. ஆனா, இந்த நிமிஷம் வரைக்கும் வாயைக் கூட திறக்காம அமைதியா நிற்கிறாளே.. அவளோட அன்புக்கு நான் என்ன மரியாதை செய்யட்டும்ம்மா…சொல்லுங்க… நீங்க இவளுக்கு செஞ்ச பாவத்தை நான் எப்படி சரி செய்யட்டும்..” என்று மகன்  கேட்க

                       “நான் மன்னிப்பு கேட்கிறேன் இன்பா.. செஞ்சது அத்தனைக்கும் நான் மன்னிப்பு கேட்டு என் மருமகளை என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்.. என் பேரனும், மருமகளும் நம்ம வீட்டுக்கு வரட்டும்டா.. உங்களை கூட்டிட்டு போகத்தான் நாங்க வந்தோம் இன்பா..”

                         “அப்படியா… ரொம்ப நல்லதுமா… இப்போ அவ என்ன செய்யணும்.. நீங்க செஞ்ச எல்லாத்தையும் மறந்துட்டு உங்களோட வீட்டுக்கு வந்திடணுமா… அப்படி வந்துட்டா இயல்பா அவளால அந்த வீட்ல இருக்க முடியுமாம்மா.. அந்த வீட்ல நடக்கும்போது, நிற்கும்போது, சாப்பிடும் போது ன்னு ஒவ்வொரு நேரமும் நீங்க பேசின வார்த்தைகள் அவளுக்கு ஞாபகம் வராதா… அதுக்கு என்ன செய்யலாம்மா..”

                            “இன்பா.. இன்பா.. தெரியாம பண்ணிட்டோம் இன்பா.. அவங்க பேசினது அத்தனையும் தப்புதான்.. நாந்தான் அவ கால்ல விழக்கூட தயாரா இருக்கேனே.. என்னை வேற என்னடா செய்ய சொல்ற..”

                      “இப்போகூட, உங்க வீட்டுக்காரர் பேசினதுக்கும், உங்க மாமியார் பேசினதுக்கும் நீங்க மன்னிப்பு கேட்க தயாரா இருக்கீங்க இல்லம்மா.. அப்பா மேல வச்ச பாசத்துக்காக தானே, அவரை வெளியே நிறுத்திட்டு நீங்க பேசிட்டு இருக்கீங்க… அதுல பாதியாவது நானும் என் பொண்டாட்டி பிள்ளை மேல வைக்கணும் இல்லையா… நீங்க கிளம்புங்க…” என்றவன் முடிவாக முடித்து கொள்ள

Advertisement