Advertisement

அபிராமி சிபியின் பக்கம் திரும்பினார்.. இதுவரை ஒரு வார்த்தை கூட பேசி இருக்காத மருமகள்.. மருமகள் என்று அவளுக்காக எதுவுமே செய்து இருக்காதவர் இன்று மகனுக்காக அவளிடம் வந்து நின்றார்.. இனியனை பற்றி இருந்த அவள் கையை பிடித்துக் கொண்டவர் ” எங்களை மன்னிச்சிடுடா… ” என்று அவளிடமும் மன்னிப்பு கேட்க

                       என்ன பதில் சொல்வது கூட என்று புரியாதவளாக கணவனின் முகம் பார்த்தாள் சிபி. அவன் அசையாமல் நிற்க, அவரிடம் இருந்து மெல்ல தன் கையை விடுவித்து கொண்டவள் “மன்னிப்பெல்லாம் கேட்காதீங்க…உங்களை மன்னிக்கிற அளவுக்கு நீங்க எந்த தப்பும் செய்யல… ஆனா, இவர்கிட்ட என்னால பேச முடியல…”

                   “உங்க மகன் தானே… நீங்க கூட்டிட்டு போங்க. இன்னும் வேணும் ன்னா உங்க பேரனையும் கூட கூட்டிட்டு போங்க.. நான் எப்பவுமே இவரோட வாழ்க்கைக்கு தடையா இருக்க மாட்டேன்…” என்று சிபி முடிக்கும் முன்னமே “சிபி..” என்று சத்தமாக அதட்டினான் இன்பன்..

                      ஆனால் இன்பனுக்கும் முன்பாக, “என்ன பேசறம்மா நீ.. எங்களை இன்னமும் பாவியாக்க பார்க்கிறியே..நான் அனுபவிக்கிறது பத்தாதா, இன்னமும் பெத்தவ கிட்டே இருந்து பிள்ளையை பிரிக்கின்ற பாவத்த வேற செய்ய சொல்றியா..” என்று அவர் தவித்து போனவராக வினவ

                       சிபிக்குமே கண்ணீர் தான் வந்தது.. “என்னால உங்க வீட்டுக்கு வர முடியாது.. என்னால அவங்க பேச்சை எல்லாம் மறக்கவே முடியல… நான் எப்படி அங்கே.. .என்னை விட்டுடுங்க.. ப்ளீஸ்..” என்றவள் அழுதே விட்டாள்.

                       அவள் மனதின் காயங்கள் அவளை வாட்டி கொண்டிருக்க, அவர்களின் வீட்டிற்கு செல்வது எல்லாம் நினைத்தே பார்க்க முடியவில்லை. அவளின் அழுகையில் அவள் கையில் இருந்த இனியனும் அழ, இன்பன் அவளின் அருகில் வந்தவன் பிள்ளையை கையில் வாங்கி கொண்டான்.

                     அபிராமிக்கு அந்த வெண்ணெய் உருண்டையை கையில் தூக்கி கொள்ள கைகள் பரபரத்தது… ஆனால், என்ன உரிமையில் அவனை தூக்கி கொள்வார் அவர்.. அவன் தாயை உறவே இல்லை என்று விரட்டிவிட்டு இன்று அவளுக்கு சொந்தமானவனை “பேரன் ” என்று உரிமை கொண்டாட முடியுமா?? என்று உள்ளம் சுட, ஏக்கத்தோடு அவனையே பார்த்திருந்தார் அபிராமி..

                     இன்பன் பிள்ளையை சமாதானம் செய்தவன், அபிராமியிடம் அவனை நீட்ட, கைகள் நடுங்க அவனை வாங்கி கொண்டவர் அவன் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட, சரிக்கு சரியாக அவரின் கண்ணீரும் அவனை முத்தமிட்டுக் கொண்டிருந்தது…

                    கண்ணீரோடு அவனை நெஞ்சோடு அணைத்து கொண்டவர் கட்டுப்படுத்த முடியாமல் அழ, “ம்மா..” என்று அவரை நெருங்கினான் மகன்.. இன்பனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டவர் “அம்மாவை மன்னிச்சிடுடா…” என்று மீண்டும் அழ,

                    “ம்மா.. போதும்மா..உங்க பேரன் அவன்.. நீங்க எப்போ வேணாலும் அவனை தூக்கிட்டு போங்க.. ஏன் உங்ககூடவே வச்சுக்கோங்க.. உங்க மருமக ரொம்ப தாராளம் தான்மா… பிள்ளையை எல்லாம் கேட்கவே மாட்டா… நீங்க வேணா இப்போவே கூட தூக்கிட்டு போங்க…” என்று அவரை சமாதானம் செய்வது போல் சிபிக்கு கொட்டு வைக்க

                     என்ன சொல்றான் இவன்.. என் பிள்ளை..” என்று பதறியது அவளுக்கு.. அவள் பதட்டத்தில் அவளை முறைத்தவன், தன் அன்னையிடம் “நான் இப்போ சொல்றது தான்மா.. கொஞ்ச நாளைக்கு தனியாவே இருக்கோம்.. உங்களுக்கு இனியனை பார்க்கணுமா?? கிளம்பி வந்திருங்க..”

                     “எல்லாமே கொஞ்சம் சரியாகட்டும்.. அதுக்குப்பிறகு என்ன செய்யலாம்ன்னு யோசிச்சு முடிவு எடுப்போம்..” என்று அவன் பொறுமையாக தன் அன்னையிடம் கூற, மனதுக்கு உவப்பாக இல்லை என்றாலும், வேறு வழியில்லை என்பதால் மகன் சொன்னதுக்கு சம்மதமாக தலையாட்டினார் அவர்..

                         அதன்பிறகு அங்கேயே சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவர் சிபியை பேச்சில் இழுக்க பார்க்க, அவளுக்குதான் சட்டென ஒட்ட முடியாமல் போனது.. அவர் கேட்கும் கேள்விகளுக்கு அவள் யோசித்து யோசித்தே ஆம், இல்லையென்று இருவரி பதில்கள் மட்டுமே கூறி வைக்க, அவளை விட்டுவிட்டவர் பேரனிடம் கவனமானார்..

                         இனியன் அவரின் நேரத்தை மொத்தமாக எடுத்துக் கொள்ள, உடன் வந்த கணவர் மறந்தே போயிருந்தார் அபிராமிக்கு.. ஜெகனும் வெளியே சென்று விட்டிருக்க, சிபி சமையல் அறையிலும், அபிராமி இனியன் மற்றும் இன்பனுடன் ஹாலிலும் அமர்ந்திருந்தனர்.

                         அபிராமி பேரனை கொஞ்சி கொண்டிருந்தவர் அவனை கணவரிடமும் காண்பித்து விடும் எண்ணத்தில் “இன்பா.. இவனை தூக்கிட்டு போகவா.. அப்பாகிட்ட காட்டிட்டு வரேண்டா… பார்த்தா ரொம்ப சந்தோஷப்படுவாரூ இன்பா..” என்று கெஞ்சலாக கேட்க

                              “ஏன்.. வீட்டுக்குள்ள வந்து பார்த்திருந்தா சந்தோஷப்பட்டிருக்க மாட்டாரா..??” என்று அவன் கேள்வி கேட்க

                              “அவருக்கும் சங்கடம்தான் இன்பா.. கேட்ககூடாதவங்க பேச்செல்லாம் கேட்டு ஆடிட்டு, இன்னிக்கு சின்னப்பொண்ணு முன்னாடி தலைகுனிஞ்சு நிற்கணுமே ன்னு மருகிட்டு இருக்காரு… நீ சொன்னது போல தான், கொஞ்ச  நாளைக்கு விடாம வேப்பிலை அடிச்சா சரி ஆகிடுவாரு. நான் இவனை தூக்கிட்டு போகவா..” என்று அவர் அதிலேயே நிற்க

                            “அவன் ஊரை சுத்தணும்ன்னா ரெடியா கிளம்பிடுவான்.. கூட்டிட்டு போங்க…” என்றவன் அவர் வெளியேறவும், மனைவியை தேடிச் சென்றான்.  சமையல் அறை திண்டில் கைகளை கட்டிக் கொண்டு கண்மூடி சாய்ந்திருந்தாள் அவள்…

                              

                              சற்றே சாய்ந்த வாக்கில் அவள் நின்றிருக்க, வெளியே பேசிய அத்தனை பேச்சுக்களும் அவள் காதிலும் விழுந்தே இருந்தது… மதுசூதனனை நினைக்கையில் மனதில் லேசாக ஒரு கசப்புணர்வு எழுவதை என்ன முயன்றும் இப்போதும் தவிர்க்கவே முடியவில்லை அவளால்..

                             இன்பன் சத்தமில்லாமல் அவளை நெருங்கியவன் அவளுக்கு வெகு அருகில் வந்து நிற்க, அவன் மூச்சுக்காற்றின் தீண்டலில் சட்டென கண்திறந்து பார்த்தாள் அவள்.. இன்பனின் பார்வையில் அவள் எதிர்பார்த்த எந்த உணர்வுமே இல்லை..

                              கண்டவுடன் நெஞ்சில் நின்றது அவனின் கோபப்பார்வைதான்.. அவனின் இந்த கோபம் எதனால் என்பதும் புரிய, மெல்லிய கோடாக ஒரு புன்னகை அவள் இதழ்களில்…

                          “சிரிக்காத சிபி..” என்று அவன் கடிந்து கொள்ள, இன்னும் சற்றே நீண்டது அவள் இதழ்கள்…

                       அதற்குமேல் அவளைவிட மனமில்லாதவன் அவள் இதழ்களை இரு விரல் கொண்டு அழுத்தமாக பற்ற, உறைந்த அவளின் பார்வை அவனை விட்டு எங்குமே அகலாமல் அவன் கண்ணிலேயே நின்றுவிட்டது.. அவன் கண்களில் தான் தொலைத்துவிட்ட பொக்கிஷத்திற்கான தேடலை அவள் தொடங்கிவிட, அங்கே அவள் எதிர்பார்த்த உணர்வுகள் நிச்சயம் இல்லை..

                          மாறாக அவன் முகம் முழுவதும் இயல்பான ஒரு தேடல் தான்.. கணவன் மனைவியிடம் தேடும் ஒரு சாதாரண தேடல் தான் இருந்தது அங்கே… அவனை மறுக்க மனமில்லாமல் அவள் தன் கண்களை மூடிவிட, அவளின் உணர்வுகள் புரிந்தவனாக அவளை விட்டு விலகி நின்றுவிட்டான் அவனும்…

                          அவளை இயல்பாக்க நினைத்தவன், தன் தலையை அழுத்தமாக கோதிக் கொண்டு “நீ நினைச்ச ஸீன் இல்ல இப்போ.. கண்ணை திறந்து பாரு..” என்று நக்கலாக கூறிவிட

                          முறைப்போடு கண்களை திறந்தவள் “என்ன எதிர்பார்த்தேன் நான்.. ரொம்ப தெரியுதா உங்களுக்கு..” என்று விட்டு “என் பிள்ளை எங்க..” என்று கேட்க

                           “அதான் தூக்கிட்டு போக சொன்னியே..விடு.. அவங்களே வச்சிக்கட்டும்.. அடுத்து சீக்கிரமே என்னையும் அனுப்பி வச்சிடு..” என்று சற்று கோபமாகவே அவன் உரைக்க, அவன் கோபம் நிச்சயம் ஆறுதல் தான் அந்த நேரம்…

                                          அந்த ஆறுதலில் அவள் மீண்டும் முல்லை பூவென இதழ் விரித்துவிட, அவளை  கைகொடுத்து தன்னிடம் இழுத்துக் கொண்டவன் “என்னை விட்டுட்டு இருந்துடுவியா சிபி..” என்று கேட்டு வைக்க, அவன் கண்களில் அத்தனை தவிப்பு..

                     அந்த நொடி அவன் தவிப்பை போக்கிவிட நினைத்தவள்

                      நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை உன்

                      நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை சிந்தனையில்லை…

                    காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை உன்னைக்

                      கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை

              

                                              என்று மெல்லிய குரலில் பாடி வைக்க, அவள் பாடலின் பொருள் உணர்ந்தாலும், “இதென்ன இவ்ளோ பழைய பாட்டு..” என்று கேட்டு நிற்க

                                       “எனக்கு பிடிக்கும்…” என்றதோடு அவள் முடித்துவிட, அவள் தோளில் முகம் புதைத்து கொண்டவன்

                          நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்….

                         என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்….

                             நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்

                            உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்….

                        

                                என்று தானும் பாடி முடித்தவன் முகத்தை நிமிர்த்தாமல் இருக்க, அவன் கையணைப்பில் நின்றவள் கண்ணீரோடு அவன் முகம் பார்க்க முற்பட, அழுத்தமாக அவளிடம் புதைந்தவன் “எனக்கு புரியுது சிபி.. இது என்னோட ஹாபிட்… ” என்றவனின் கண்ணீர் அவள் தோளை நனைத்துக் கொண்டிருந்தது…

Advertisement