Advertisement

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 14

                                  இன்பன் சிபியிடம் கோபமாக பேசிவிட்டு சென்று வெகுநேரம் ஆகி இருக்க, இன்னமும் அவன் வீடு திரும்பி இருக்கவில்லை. சென்றவன் இனியனையும் அவனுடன் தூக்கி சென்று இருந்தான். ஜெகனும், லாரன்ஸும் அவனுக்காக காத்திருக்க அன்று மாலை வேளையில் தான் வீடு வந்து சேர்ந்தான் இன்பன்.

                                  அப்போதும் இனியனை விடாமல் தன் கையிலேயே வைத்திருந்தவன் இரவு உணவை ஜெகன் வீட்டிலேயே முடித்துக் கொள்ள, சிபிக்கும் அங்கிருந்து தான் உணவு சென்றது.. கையில் காயம் இருப்பதால் எதுவும் சமைக்க வேண்டாம் என்று அவளிடமும் ஏற்கனவே சொல்லி வைத்திருக்க, அவளும் பெரிதாக மறுக்கவில்லை..

                                  சந்திராம்மா அவளுக்கான உணவை எடுத்துவர, அவரிடம் இனியனை பற்றி கேட்டாள் சிபி.. அவரோ “இனியா, இன்பா தம்பிகிட்டயே சாப்டுட்டு இருக்கானே சிபிம்மா.. நீ எப்படி ஊட்ட முடியும் அவனுக்கு.. நீ பொறுமையா சாப்பிட்டு முடி.. அவன் அங்கேயே இருக்கட்டும்…” என்று கூறி அவளுக்கான உணவை வைத்துவிட்டு சென்றார்..

                            பசி இருந்தாலும், உணவின் மீது மனம் செல்லவே இல்லை… இனியனை காலையில் பார்த்தது தான்.. அதன்பின் நடந்த நிகழ்வுகளின் பலனால் மருத்துவமனை, வீடு என்று அலைந்ததில் அருகில் கூட விடவில்லை அவனை.. அதன்பின்பும் அவன் ஜெகனிடமே இருந்திருக்க, இப்போது கிட்டத்தட்ட நாள் முடியும் நேரத்தில் கூட, அவன் வீட்டிற்கு வராதது எரிச்சலாக இருந்தது அவளுக்கு..

                            அவனை அருகில் வைத்துக் கொண்டே சுழல்பவள், அவனில்லாமல் இந்த ஐந்து மணி நேரத்திற்குள்ளாகவே ஏக்கப்பட்டு போயிருந்தாள்.. இன்பனின் நிலையும் இப்போது தான் மெல்ல மெல்ல புரிய தொடங்கி இருந்தது அவளுக்கு..

                               அவன் சொன்ன “எப்படி என்னால தனியா இருக்க முடியும்..” என்ற வார்த்தைகள் முகத்தில் அறைய,, தனிமை எத்தனை கொடுமையானது என அனுபவித்து அறிந்து கொண்டிருந்தாள் அவள். அவள் இதே சிந்தனையில் அமர்ந்து இருக்க, கையில் இனியனோடு அந்த வீட்டிற்குள் நுழைந்து கொண்டிருந்தான் இன்பன்.

                                வந்தவன் இனியனை சிபியின் அருகில் இறக்கிவிட, அப்போது தான் “ம்மா.. மா..” என்று அருகில் சென்றான் அவன்.. சிபிக்கு “இப்போதான் அம்மா தெரியுறேனாடா உனக்கு..” என்று கடுப்பாகத்தான் வந்தது.. “சரியான ஆள்மயக்கி.. யார்கிட்ட வேணாலும் ஒட்டிக்கிறது,அப்புறம் சிரிச்சே மயக்க வேண்டியது… அப்பனுக்கு தப்பாம பிறந்து இருக்கடா நீ…” என்று மனதிற்குள் மகனை தாளித்து கொண்டு அவள் அமர்ந்திருக்க, மகனோ அவள் மடியில் அமர்ந்து கொண்டு அவள் சேலையை பிடித்து எழுந்து நிற்க முயற்சித்து கொண்டிருந்தான்..

                              அவளின் மார்பு சேலையை பிடித்து கையில் இழுத்துக் கொண்டே எழுந்து நின்றவன் சிபியின் தாடையில் முத்தம் வைக்கிறேன் என்று முகத்தை எச்சிலாக்க, அவன் ஈரத்தில் தான் மகனிடம் திரும்பினாள் சிபி.. மகனை செல்லமாக முறைத்தவள் “அதான் காலையில இருந்து ஊர் சுத்திட்டு வந்த இல்ல… இப்போ ஏன் இங்கே வர்ற.. போடா.. நீ உன் அப்பகூடவே போ…” என்று அவனை தன்னிடம் இருந்து பிரித்து நிறுத்த, மீண்டும் கையை நீட்டிக்கொண்டு அவளிடமே சென்றான் மகன்.

                              சிபி பொய்யாக முகத்தை திருப்பி கொள்ள, தன் சொப்பு கைகளால் அவள் முகத்தை தன்னை நோக்கி திருப்ப முயன்றவன் அவள் திரும்பாமல் போகவும், அவள் காதோரம் இருந்த முடியை கையில் பிடித்து இழுக்க, “ஆஆ…” என்று மெல்லிய சத்தத்துடன் திரும்பியவள் அவனை முறைக்க, அவனும் முறைப்புடன் தான் நின்றிருந்தான்..

                             “நீ தூக்குவியா, இல்லையா… ” என்பது போல் குட்டி இனியன் பார்வையிட, அவன் வலது கையை பிடித்தவள் அவன் விரல்களின் மேற்பகுதியில் லேசாக கடித்து விட, சத்தமாக கத்தினான் அவன். அதுவரை இவர்களை பார்வையிட்டுக் கொண்டிருந்த இன்பன் பதறியவனாக, “என்ன பண்ற சிபி நீ.. ஏன் அவனை அழ வைக்கிற..” என்று கேட்டுக் கொண்டே இனியனை கையில் தூக்கி கொண்டான்..

                         இனியனை பற்றி நன்கு அறிந்தவள் என்பதால் அமைதியாக இனியனை வேடிக்கை மட்டுமே பார்த்தாள் சிபி.. இனியன் இதற்குள் அழுகையை நிறுத்தி இருக்க, இன்பன் வெளியே அழைத்து செல்வானா மாட்டானா என்பது போல் தான் பார்த்திருந்தான் அவன்..

                           இன்பன் தான் “என்ன கேட்டுட்டு இருக்கேன்..அமைதியா இருக்க நீ..” என்று சிபியை கடிந்து கொள்ள, “உங்க பையன் இப்போ அழுதுட்டு இருக்கானா..” என்று நக்கலாக கேட்டாள் அவள்..

                           இன்பன் அப்போதுதான் அவன் அழுகையை நிறுத்தி விட்டதை உணர்ந்தவனாக, இனியனை திரும்பி பார்க்க “ப்பா.. போயாம்… ஸ்ஸ்ஸ்ஸ..” என்று அவன் கார் விட்டதில் எச்சில் தெறித்தது.. அவனின் சேட்டையில் இன்பனுக்கு சிரிப்பு பொங்க, மகனை கட்டி அணைத்து அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான் அவன். மகனும் தந்தையை போலவே செய்து காட்ட, நெகிழ்ந்து நின்றிருந்தான் இன்பன்…

                          மகனை கையில் வைத்திருந்தவன் சில நிமிடங்கள் கழித்தே இயல்புக்கு வர, மீண்டும் வெளியில் கையை காட்டினான் இனியன்.. “அடி வாங்குவ இனியாம்மா… வெளியே கறுப்பாகிடுச்சு பாரு.. ஊஊ வரும்.. அம்மாகிட்ட வா.. காலையில லைட் வந்ததும் வெளியே போவோம் வா…” என்று அவள் அதட்டலுடன் அழைக்க

                          ஊஊ..” என்று சத்ததுடன் அன்னையிடம் தாவினான் மகன்.. ஆனால் அதன் பின்பு தான் வினையே.. இன்பனையும் வெளியே செல்லவிடாமல் ஊஊ” என்று  அழ  ஆரம்பித்து இருந்தான்.. இன்பனுக்கும் ஏனோ அவர்களை விட்டு செல்ல மனதே இல்லை.. ஆனால் சிபி என்ன சொல்வாள் என்றும் இருந்தது…

                       இன்பன் இனியனை மீண்டும் கையில் தூக்கி கொண்டு அவனை சமாதானம் செய்ய பார்க்க, அவன் கழுத்தில் ஒட்டிக் கொண்டு அவனுக்கு கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்தான் மகன்.. சிபி இது ஆகாது என்ற பார்வையுடன் நிற்க, “நீ சாப்பிட்டு முடி.. நான் இவன் தூங்குறானா பார்க்கிறேன்..” என்று சொல்லியவன் மகனுடன் அந்த வீட்டின் வாசல் படியில் அமர்ந்து விட, அவர்களை பார்த்துக் கொண்டே உணவை மெல்ல விழுங்கினாள் சிபி..

                          சற்றுமுன் இருந்த நிலைக்கும், இப்போதைய அவளின் மனநிலைக்கும் ஏக வித்யாசங்கள்… இந்த காட்சி.. எத்தனையோ நாள் அவள் மனக்கண்ணில் வடித்து பார்த்தது தான்.. ஆனால், கனவாகவே போய் விடும் என்று அவள் கற்பனை செய்திருந்த காட்சி இன்று கண்முன் நனவாகி இருக்க, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தன்னவனுடன் இணைந்து விட மாட்டோமா என்ற எண்ணம் அதிகமாக எழுந்தது..

                          தன் மகனின் முகத்தில் இருந்த சிரிப்பும், அவனின் மழலை மொழிகளும் தன் இனியவனுக்கு இத்தனை இன்பம் பயக்குமென்றால், அவனுடன் செல்வதில் என தவறு என்று அவள் உள்ளமே அவளுக்கு எதிராக நின்று வாதிட, தன் மனம் மெல்ல மெல்ல தன்னை நகர்த்துவதை அவளுமே உணர்ந்து தான் இருந்தாள்.

                         இந்த நினைவுகளோடே அவள் உணவை முடித்து கொள்ள, இன்னமும் இன்பனின் தோளில் இருந்து இறங்கி இருக்கவில்லை இளையவர்…தூக்கமும் அவனை நெருங்குவதாகவே காணோம்.. சாதாரண நேரமாக இருந்தால் அவன் கையில் இருந்து வாங்கி தோளில் போட்டு பொத் பொத்தென்று நாலு தட்டு தட்டி தூங்க வைத்து விடுவாள்.

                             கையில் காயம் வேறு இருக்க, அவனை தூக்கி கொண்டு சமாளிக்க முடியுமா தன்னால் என்றும் சந்தேகமாக இருந்தது அவளுக்கு.. அறைக்கும் செல்லாமல், அமர்ந்திருப்பவனின் அருகிலும் செல்லாமல் அவள் நிற்க, அவளை பார்த்துவிட்டு எழுந்து நின்றான் இன்பன்..

                              இனியனும் அதே நேரம் “ப்பா…” என்று தலையை தூக்கி பார்க்க, சற்று சத்தமாகவே சிரித்து விட்டான் இன்பன். இனியனின் தலையில் லேசாக முட்டியவன் “நான் தூக்கிட்டு போகவா.. காலையில கூட்டிட்டு வரேன்..” என்று அவளிடம் இன்பன் கேட்டு நிற்க, வெளியில் லேசாக மழை வேறு தொடங்கி இருந்தது…

                              அதற்குள் மகன் “போயாம்..” என்று தயாராகி விட்டவன் “ம்மா பை..” என்று வேறு கையை அசைக்க, “டேய்… தூங்குறதுக்கு கூட நான் வேண்டாமாடா உனக்கு.. வெளியே கூட்டிட்டு போனா, என்னை விட்டுட்டு போவியா..” என்று மீண்டும் அவன் கையை அவள் கடித்து வைக்க

                           இந்த முறை கையை மட்டும் இன்பனின் சட்டையில் துடைத்து விட்டவன் பார்வையை வெளியேயே வைத்திருந்தான்… சிபி தானாகவே இன்பனிடம் “மழை தொடங்கிருச்சு.. எங்கே போக போறீங்க… இங்கேயே தூங்குங்க..” என்றுவிட

                             தன் காதில் சரியாக விழுந்ததா என்று சந்தேகம் தான் இன்பனுக்கு… அவன் சிபியை பார்த்து நிற்க “சரியாதான் கேட்டிங்க..” என்று சொல்லிக் கொண்டே, அவள் நடக்க

                             “இங்கே இருப்பிங்களா.. தூங்குறீங்களா ன்னு கேட்க மாட்டியா.. நீ பாட்டுக்கு தூங்குங்க ன்னு சொல்லிட்டு போற..” என்று வீம்புக்காகவேனும் அவன் கேட்டு நிற்க

                             “சரி உங்கபையனை தூக்கிட்டு கிளம்புங்க.. நாளைக்கு காலையில, இல்ல மதியத்துக்கே மேல வாங்க.. போதும்…” என்றவாறே அவள் பாயை விரித்து விட்டு சமையல் அறைக்குள் நுழைந்தாள்..

                             அவள் பேச்சில் சிரித்துக் கொண்டே அவன் பாயில் அமர்ந்து கொள்ள, இனியன் அப்போதுதான் தன் குட்டி படுக்கைக்கு தாவினான்.. ஆனால் அப்போதும் கூட, தனது குட்டி கால்களை இன்பனின் தொடை மீது தூக்கி போட்டபடி அவன் படுத்திருக்க, அந்த குட்டியின் அடாவடியில் மெல்ல மெல்ல கரைந்து கொண்டிருந்தான் அவன்..

                               அடுத்த சில நிமிடங்களில் சிபி கையில் பாலுடன் சமையல் அறையில் இருந்து வெளியே வர, இன்பனை கண்டவுடன் “இன்னும் கிளம்பலையா நீங்க..” என்று ஆச்சரியமாக வினவினாள்…

                              “கிளம்பிடுவேன் ன்னு தெரிஞ்சு தான் பால் கொண்டு வந்தியா..” என்று அவனும் ஆச்சரியமாக கேட்பது போல் காட்டிக் கொள்ள

                                 “நான் எனக்கு கொண்டு வந்தேன்…”

                              “ஓஹ்.. அப்படியா.. சரி குடிச்சுட்டு படு.. குட் நைட்..” என்றதோடு இன்பன் படுத்துவிட, கையில் இருந்த பாலை என்ன செய்ய என்று முழித்து நின்றிருந்தாள் சிபி.. அவன் சட்டென படுத்து விடுவான் என யார் கண்டது..

                               தன் தலையிலேயே அடித்து கொண்டவள் பாயில் அமர்ந்து இனியனிடம் அவன் சிப்பரை கொடுத்துவிட சமத்தாக வாங்கி கொண்டான் அவன்.. இன்பன் கண்களை மூடி படுத்திருக்க, “இந்த பாலை குடிச்சுட்டு தூங்குங்க …” என்று மொட்டையாக அவள் கூறிவிட

                              கண்களை திறக்கவே இல்லை அவன்… “இனியன்..” என்று மெல்லிய அழுத்தத்தோடு அழைக்க, இந்த முறை இனியன் சிப்பரை தூர வீசிவிட்டு அன்னையின் மடிமீது ஏறினான்.. “இவங்க ரெண்டு பேரையும்..” என்று கடுப்பானவள் அவன் கையில் சுள்ளென அடித்து விட, மெதுவாக கண்களை திறந்து பார்த்தான் இன்பன்..

                              அவனை கடுப்பாக பார்த்தவள் “பாலை குடிச்சுட்டு படுங்க…” என்று கூற

                          “நீ குடிக்கலையா சிபி…” என்று அப்பாவியாக அவன் கேட்டு வைக்க, அவனை சிபி முறைக்க தொடங்க “எனக்குதானே கொண்டு வந்த..” என்று அப்போதும் பாலை கையில் வாங்கி கொள்ளாமலே அவன் வளவளக்க

                    அவனை முறைக்க முயன்று அது முடியாமல் போகவே, பார்வையில் ஏறிய சிறு மையலுடன் அவனை முறைப்பதாக அவள் பேர் பண்ணி கொண்டிருக்க, மெல்ல கையை நீட்டி டம்ளரை வாங்கி கொண்டான் அவன்…

                     இதற்குள் குட்டி அவளின் மடியில் தலையை வைத்துக் கொண்டு இன்பனின் பக்கம் காலை நீட்டி பக்கவாட்டில் படுத்து விட்டிருக்க, கையில் சிப்பருடன் இன்பனை பார்வையிட்டுக் கொண்டிருந்தான் அவன்.. இன்பன் இப்படி ஒரு இரவு தன் வாழ்வில் வரும் என்று கனவில் கூட நினைத்து பார்த்ததே இல்லை எனலாம்…

                       கனவில் கூட முகம் காட்டாமல் இவளின் தரிசனம் மட்டும்தானே.. ஆனால் நிஜத்தில் இப்படி ஒரு அல்லிச்செண்டு, கைகால் முளைத்த குட்டி பூவை போல் “ப்பா.. ம்மா..” என்று மழலையுடன் அவனை சுற்றி வட்டமிட, உண்மையில் அவர்கள் இருவருடனும் தொலைந்து போகவே விரும்பினான் இன்பன்.

                        அன்னையும், மகனும் மட்டுமே இடம்பெறும் அவர்களின் அந்த குட்டியூண்டு உலகத்தில் இப்போது தனக்கும் ஒரு இடம் கிடைத்து விட்டதாகவே இறுமாந்து இருந்தது அவன் மனது.. அவனுக்கு தன் உடல்நிலையோ, மனநிலையோ எதை பற்றிய கவலையுமே இல்லை இந்த ஒரு வாரமாக..

                          முழுதாக அவன் நேரத்தை அன்னையும், மகனும் மட்டுமே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தனர்.. ஜெகன் அழைத்து இங்கேயே படுத்து கொள்வதாக கூறி வைத்தவன் தன் மகனுடன் படுத்துக் கொண்டான்… அந்த குட்டி அதுவரை அவனுடன் கும்மாளம் போட்டவன் தூக்கம் கண்களை சொருகவும், வலது கையின் கட்டை விரலை வாயில் சூப்பிக் கொண்டு அன்னையின் சேலை முந்தானையை தன் முகத்தில் மூடிக் கொண்டு உறங்க தொடங்கி இருந்தான்…

                         கையெட்டும் தூரத்தில் சொர்க்கம் என்பார்களே அதுபோலத்தான்.. எட்டி அணைத்து கொள்ளும் இடைவெளியில் தான் இருந்தனர் மனைவியும், மகனும்… ஆனால்.. எட்டி அணைக்க முற்படாமல் எட்டியே நின்றான் அப்போதைக்கு…

                       இன்னும் களைய வேண்டிய அவளின் காயங்கள் அப்படியே இருக்க, அவளிடம் எந்த உரிமையையும் எடுத்துக் கொள்ள அந்த நியாயஸ்தன் மனம் விரும்பவே இல்லை.. அவளை பற்றி அவன் கணித்தவரை தன் முகம் சுருங்கினால் அவள் தாங்கி கொள்வதில்லை என்பது புரிந்தே இருந்தது…

                       அவன் யோசனையின் நடுவே சட்டென ஏதோ கேள்வி பிறக்க “அதென்ன இவனையும் இனியா ன்னு கூப்பிடற.. என்னையும் இனியன் ன்னு கூப்பிடற..” என்று சற்று சத்தமாகவே கேட்டிருந்தான்..

                         அந்த வீட்டின் அமைதியில் பெரிதாக கேட்டது அவன் குரல். சட்டென அவன் பேசுவான் என்று எதிர்பார்க்காத சிபி அதிர்ந்து விழிக்க “சிபி..” என்று மீண்டும் அழைத்து அவளை தன் பக்கம் ஈர்த்தான் இன்பன்..

                        அவனின் சத்தத்தில் “ஷ்ஹ்ஸ்ஸ்ஸ்” என்று சத்தம் எழுப்பியவள் வாயின் மீது ஒருவிரலை வைத்து மிரட்ட, சட்டென தானும் அவளை போலவே வாயின் மீது விரலை வைத்துக் கொண்டு அவன் அமைதியாக சிபியின் புன்னகை தாராளமாகவே விரிந்தது..

                        கூடவே அவன் கேட்ட கேள்வியும் நினைவில் வர, “உங்களை தான் கூப்பிடுவேன்.. இவன் பிறந்தப்ப இனி உங்களை பார்ப்பேனா ன்னு கூட தெரியாது.. இவனுக்கு வேற எதுவும் பேர் வைக்கவும் தோணல .. அதனால இவன் குட்டி இனியன்…” என்று சொல்லிக் கொண்டே குட்டியின் உச்சியில் லேசாக முத்தமிட்டவள் அவன் முதுகை லேசாக வருடி கொடுக்க, அந்த நிமிடம் தான் அவன் இடத்தில இருக்கக்கூடாதா என்றுதான் ஏங்கியது இன்பனின் மனம்..

                       ஆனாலும் அவளை விட மனமில்லாமல் “அதென்ன இனியன்.. என் பேர் இன்பன் தானே…” என்று மீண்டும் அவன் கேட்க

                        “என் வாழ்க்கையை இனிமையா மாத்தி கொடுத்தவர் இல்லையா.. அதனால இனியன்… அதோட எல்லாருக்குமே இன்பன் தான்… நான் ஸ்பெஷல் இல்லையா.. அதான் இனியன்.. என்னோட இனியன்… எனக்கு மட்டுமே சொந்தமான என் இனியவர்..” என்று காதலோடு அவள் குரல் குழைய, ஏதோ கனவில் இருப்பவள் போல் இருந்தது அவளின் பேச்சு…

                   இன்பனுக்கும் அவள் பேச்சு இனிக்கவே செய்தாலும், அவளின் இந்த காதலுக்கு என்ன நியாயம் செய்தோம் என்றும் தோன்ற, இன்னுமின்னும் காதல் கூடியது அவளின் மீது… கூடவே இவளை என்ன சொல்லி அழைத்திருப்போம் என்ற கேள்வியும் எழ,  அன்று போலவே “நான் எப்படி கூப்பிடுவேன் உன்னை..” என்று மீண்டுமொருமுறை அவன் கேட்டிருக்க

                      அவன் புறம் திரும்பி லேசாக சிரித்தவள் “உங்களுக்கே ஞாபகம் வரட்டும்.. இப்போ நான் சொல்லி, நீங்க கூப்பிட்டாலும் அதுல ஒரு கம்ப்ளீட் பீல் இருக்காது… எனக்கு அது வேணும்.. காதலோட, ஆசையோட நீங்க கூப்பிடறப்போ தான்  முழுமையடையும்… அதுவரைக்கும் சிபி ஓகே தான்..” என்று முடிவாக சொன்னவள் கண்களை மூடி விட, இதற்குமேல் பேசமாட்டாள் என்று தெரிந்து போனது அவனுக்கு…

                                  அதுவரையில் நீடித்த அந்த இதமான மனநிலையே அவனுக்கும் போதுமானதாக இருக்க, முகத்தில் இருந்த சின்ன புன்னகை இன்னும் அழகனாக அடித்திருந்தது அவனை.. சில நிமிடங்கள் மகனை அனைத்திருந்த அவளையே பார்த்திருந்தவன் தன் இடத்தில கண்களை மூடி படுத்துவிட, அவன் படுத்த அடுத்த சில நொடிகளில் கண்ணை திறந்து அவனை பார்த்தவள் லேசாக சிரித்துவிட்டு மீண்டும் கண்மூடி கொண்டாள்.

                     அந்த சிறிய குடும்பத்தை பொறுத்தமட்டில் அந்த இரவு அவர்கள் வாழ்நாளின் இனிய விடியலாக அமைந்து விட்டிருக்க, அத்தனை நிம்மதியாக உறங்கி போயிருந்தனர் மூவரும்..

Advertisement