Advertisement

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 13

                                             சிபியின் வலது  கையின் மேல்பகுதியில் காயமாகி இருக்க, கையை சுற்றி கட்டு  போட்டு இருந்தனர் மருத்துவமனையில்.. காயம் சற்றே ஆழமாக இருக்க, வலியும் அதிகமாகவே இருந்தது சிபிக்கு. இதற்கு இடையில் லாரன்ஸ் தான் துரத்தி சென்றவனை தவற விட்டிருக்க, சிபியின் பையும்  அவனுடனே சென்றிருந்தது.

                                  இன்பன், ஜெகன் இருவரும் சிபியை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதில் கவனமாகி விட,  அவர்கள் இருவருமே வந்தவனை கவனிக்கவே இல்லை. அவளை மருத்துவமனையில் அழைத்து வந்து விட்டிருக்க, ஜெகன், இன்பன் இருவருமே அவள் வீட்டில் தான் இருந்தனர்.

                                   சிபி நடந்த  விஷயத்தை  பற்றி எதுவும் பேசவில்லை என்றாலும் முற்றிலுமாக பயந்து போயிருந்தாள். வந்தவன்  யாரென்று இன்பனுக்கும்,ஜெகனுக்கும் தெரியாது ஆனால், அவள் அறிந்து இருந்தாளே.

                                  அவனை அன்று வால்பாறையில்  முதலே ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வில் அவள் தவித்து வந்திருக்க , அடுத்த சில தினங்களிலேயே இன்பன் வந்து நிற்கவும் அவனை  மறந்து விட்டிருந்தாள். மறந்து விட்டாள் என்பதை விட, சற்றே மெத்தனமாக இருந்துவிட்டாள் என்றும் கூறலாம். தான் வால்பாறையில் இருப்பது அவனுக்கு தெரிய வாய்ப்பில்லை என்று அழுத்தமாக நம்பி இருந்தாள் சிபி.

                               ஆனால் அவள் நினைப்பை பொய்யாக்கும் விதமாக, இன்று கண்முன் வந்து குதித்து இருந்தான்  யாதவ்.. அவனை கண்ட கணம் முதலாகவே இதயம் ஏனோ தாளம் தப்பி துடிப்பதை போல் இருந்தது அவளுக்கு. இதில் கையின் வலி எல்லாம் பெரிதாக தெரியவே இல்லை..

                              அவனின் நோக்கம் என்னவாக இருக்கும்?? இனியனை பற்றி தெரிந்திருக்குமா? இன்னும் இன்பன் இப்போது இருக்கும் நிலையோ, அவன் தன்னுடன் இருப்பதையோ அறிந்திருப்பானோ என்று என்னென்னவோ எண்ணங்கள் அவளை சோர்ந்து போக செய்ய, அவளை அளவிடுவதை போல் பார்த்து கொண்டே சற்று தள்ளி அமர்ந்திருந்தான் இன்பன்.

                          ஜெகன் இனியனோடு விளையாடிக் கொண்டு அவன் கவனத்தை தன்னிடம் வைத்திருக்க, இன்பனின் கவனம் முழுவதும் சிபியிடம் தான். அவள் எதையோ தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறாள் என்பது வரை விளங்க, அதற்குமேல் புரியவில்லை அவனுக்கு.

                          என்ன என்று தெரிந்து கொள்ளும் எண்ணம் இருந்தாலும், வாயை திறந்து சொல்வாளா என்பது சந்தேகமே.. அவளை பற்றி இந்த சில நாட்களில் தெரிந்து கொண்டதை வைத்து அவன் சிந்தையை செலுத்த, பயந்து விட்டாளோ என்றும் தோன்றியது.

                          தள்ளி அமர்ந்திருந்தவன் எழுந்து சென்று அவளின் எதிரில் அவளுக்கு சற்றே நெருக்கமாக அமர, நிமிர்ந்து அவனின் முகம் பார்த்தாள் சிபி. இன்பன் “என்ன யோசிச்சிட்டு இருக்க சிபி.. ” என்று மென்மையாகவே கேட்டான்.

                          அவன் குரலில் தெரிந்த இணக்கம் அந்த நிமிடம் எல்லையில்லாத ஆறுதலையும், நம்பிக்கையையும் ஒன்றாக ஒரே நேரத்தில் அள்ளித்தர, அவன் நெஞ்சில் ஒன்றி கொண்டு, லேசான விசும்பலோடு இந்த மூன்று ஆண்டுகளாக சந்தித்த அத்தனை மன உளைச்சல்களையும், அவமானங்களையும் கொட்டி தீர்த்து விட மாட்டோமா என்றுதான் இருந்தது அவளுக்கு..

                          ஆனால், அதன்பிறகு என்ன?? என்ற கேள்வி ஆளுக்கு முன்னால் தலையை நீட்ட, மனதை இறுக்கி பிடித்தவள் மௌனத்தை பதிலாக்கினாள் இன்பனுக்கு..

                           எதுவுமே பேசாமல் போனாலும், அவள் பார்வையில் இருந்த தவிப்பு எதிரில் இருந்தவனுக்கு சொல்லாமலே ஓரளவு புரிய, எதையோ சொல்ல தயங்குகிறாளோ என்று நினைத்தான் அவன்.. தான் நினைப்பதை விட, பெரிதாக எதுவும் இருக்கிறதோ என்று அந்த நிமிடம் தான் சந்தேகம் வேர்விட்டது இன்பனுக்கு.

                                அவளின் பயம் அப்பட்டமாக அவள் முகத்தில் தெரிய, கூடவே இன்பனை அவ்வபோது பார்க்கும் போது அவள் கண்களில் காதலும், நிராசையும் சரிக்கு சமமாக போட்டிக்கு நிற்க, இதில் இன்னும் ஏதோ இருக்கிறது என்று எப்போதும் தோன்றும் எண்ணம் இன்று இன்னும் வலுப்பட்டது.

                                  இப்போதும் தான் கேட்டதற்கு பதில் சொல்லாமல் அவள் அமர்ந்திருக்க, பார்வை எங்கோ வெறிப்பதை கண்டவன் முதல்முறையாக அவள் தோளை தொட, சட்டென அவனை திரும்பி பார்த்தாள் அவள். தோளில் இருந்த அவன் கரங்கள் லேசாக குறுகுறுக்க வைக்க, சட்டென தட்டி விடவும் முடியாமல் அவன் பார்வை கட்டி போட்டது பெண்ணவளை.

                               அந்த மோன நிலை எத்தனை நேரம் நீடித்ததோ, அதை கலைப்பவனாக “ஏன் இப்படி இருக்க சிபி… நடந்தது சாதாரண விஷயம் இல்லைதான்… ஆனால், எவ்ளோ நேரம் இப்படியே உக்காந்துட்டு இருக்க போற.. இதோட போச்சேன்னு விட்டுடேன்..” என்று கெஞ்சலான குரலில் அவளுக்கு பொறுமையாக அவன் எடுத்துரைக்க

                              சிபியின் தலை மறுப்பாக அசைந்தது.. “நிச்சயமா இது சாதாரண விஷயம் எல்லை..” என்று கூவியது அவள் மனம்..

                                இன்பனுக்கு அவளின் முகம் எதையோ உணர்த்த, “வந்தவனை உனக்கு தெரியுமா…பார்த்து இருக்கியா..” என்று விசாரணையில் இறங்க

                                ஆமோதிப்பாக தலையசைத்தாள் அவள்.. “யார் அவன்..” என்று மீண்டும் அவன் கேட்க

                                “யாதவ்…”

                             

                                “யார் அவன்.. எதுக்காக உன்னை இப்படி பண்ணனும்..”

                                “என்னோட மாமா பையன் அவன்.. மூணு வருஷத்துக்கு முன்னாடியே நிறைய பிரச்சனை பண்ணி இருக்கான்.. இப்போ எதுக்காக.. புரியல எனக்கு… அவன் உங்களையும் தேடித்தான் வந்திருப்பானோ ன்னு பயமா இருக்கு… “

                              “தயவு செய்து இங்கே இருந்து போய்டுங்களேன்… எனக்கு இதுக்குமேல போராட தம்பு இல்ல இனியன்.. நான் எங்கேயோ ஒரு மூலையில நிம்மதியா இருந்தேன்.. எங்கே இருந்தாலும், நீங்க நல்ல இருக்கீங்க ன்னு ஒரு நம்பிக்கையில என் உயிரை பிடிச்சு வச்சுப்பேன்.. இனியும் அப்படியே இருக்க என்னால முடியும்.. தயவு செய்து போய்டுங்க..” என்றவள் கண்களில் கண்ணீருடன் கையை கூப்பி கெஞ்ச

                               குவிந்திருந்த அவளின் கைகளை பிடித்துக் கொண்டவன் அவளை சுற்றி ஒரு கையால் லேசாக அணைக்க, அவள் அதிர்ந்து அவன் முகம் நோக்கினாள்.. இன்பனின் முகத்தில் லேசான ஒரு சிரிப்பு இருந்தது ஆனால் அதன் காரணம் சிபிக்கு அந்த நேரத்தில் புரியாமல் போக, அவள் கேள்வியாகவே அவனை பார்த்தாள்..

                            “நீ ரொம்ப சுலபமா சொல்லிட்ட சிபி.. உனக்கு துணைக்கு இந்த குட்டிப்பையன் இருக்கான்… ஆனா என்னோட நிலைமையை யோசிச்சு பாரு… நான் யாருன்னே எனக்கு தெரியல.. என்கூட பழகின, பேசின யாரும் என் ஞாபகத்துல இல்ல.. என் பிசினஸ் என் ஞாபகத்துல இல்ல.. என் பிரெண்ட்ஸ் பல பேர் என் ஞாபகத்துல இல்ல…

                               “இது எல்லாத்தையும் ஏதோ ஒரு விதத்துல சகிச்சு, இதுதான் நம்ம  வாழ்க்கை ன்னு நான் வாழ நினைக்கிற நேரத்துல, கனவுல தினம் ஒருத்தி வர்றா… அவளோட முகம் மட்டும் தான் எனக்கு தெரியலையே தவிர, மத்தபடி எல்லா விஷயமும் நடக்குது எங்களுக்குள்ள.. ஒரு கணவன் மனைவி போல கனவுல அவளோடவே குடும்பம் நடத்திட்டு இருக்கேன் நான்..”

                              “சில நேரங்கள்ல ஏன் இப்படி கனவு வருது ன்னு நொந்து போனாலும், பல நேரங்கள்ல அந்த கனவு மட்டும்தான் ஆறுதல்.. எதிர்ல இருக்கவங்களோட முகம் தெரியாம நான்  சங்கடப்பட்டு நிற்கிற பல நேரங்கள்ல அமைதியா படுத்து தூங்கிடுவேன்,, அந்த நேரங்கள்ல அவ ஒருத்தி தான் ஆறுதல்..

                            “எங்கே இதுவே வியாதியா மாறிடுமோ ன்னு கூட பயந்திருக்கேன்.. அம்மாகிட்ட இந்த கனவை பத்தி மேலோட்டமா கேட்டப்போ, அப்படியெல்லாம் யாருமே இல்ல இன்பான்னு சாதிச்சிட்டாங்க… என்னை பெத்தவங்க சிபி அவங்க.. அவங்களை எப்படி என்னால நம்பாம இருக்க முடியும்..

                            “ஆனா, என்னோட கனவும் விடாம துரத்துது என்னை.. இதை எல்லாம் யார்கிட்டேயும் சொல்லவும் முடியாம, என்ன  செய்யுறது ன்னும் புரியாம கலங்கி போய் தான் லண்டனுக்கு போனேன்.. இப்போ அம்மாவுக்கு உடம்பு முடியலை ன்னு இந்தியா வந்தா, இங்கே என் வாழ்க்கையில ஏற்கனவே ஒரு பொண்ணு இருக்கா ன்னு தெரிய வருது..

                            “அதுவும் என்ன மாதிரியான ஒரு சூழ்நிலையில தெரியுமா ?? அந்த நிமிஷம் இந்த உலகத்துல லாரன்ஸ் ஒருத்தனை தவிர யாருமே இல்ல எனக்கு.. நான் என்  வேதனையை எனக்குள்ள புதைச்சுட்டு தான் இங்கே கிளம்பி வந்தேன்… ஆனா, இங்கே இன்னொருத்தன் நான் வருவேனா, இல்லையா ன்னு கூட தெரியாம என் பொண்டாட்டி, பிள்ளையை காப்பாத்திட்டு வர்றான்…

                          “வாழ்க்கையில எந்த பிடிப்பும் இல்லாம தான் இந்த ஊருக்கு வந்தேன் சிபி… ஆனா, இங்கே வந்து உங்களை பார்த்ததுக்கு பிறகு, அதுவும் குறிப்பா இனியனை பார்த்தபிறகு உங்களை எப்படி என்னால தனியா விடமுடியும்.

                      “என்னோட நிலைமை எனக்கு மட்டுமே புரியும் சிபி.. காதல், கல்யாணம் இதெல்லாம் எதுவுமே ஞாபகம் இல்லாம, மனைவி ங்கிற ஒரே வார்த்தையை பிடிச்சுக்கிட்டு உன்கிட்ட கெஞ்சிட்டு இருக்கேன்.. என்னிக்கு  உன்னை பார்த்தேனோ, அன்னைக்கே என் கனவுலயும் நீயே வந்து நிற்கிற..

                     “மூணு வருஷமா நான் பார்க்க காத்திருந்த ஒரு முகம்.. நாந்தான்டா ன்னு என் கண்முன்னாடி வந்து நிற்குது… ஆனா நிஜத்துல நீ என்னை போக சொல்ற… நான் என்ன செய்யட்டும் சிபி… நீ எனக்கு ஒரு முடிவு சொல்லேன்…

                     “நான் என்ன செய்யணும்… இங்கே உனக்கு ஆபத்து இருக்கு ன்னு தெரிஞ்சும் நான் உன்னை விட்டு விலகி போகணுமா?? அதுதான் உனக்கு நிம்மதியா சிபி.. அப்போ என்னை பத்தி உனக்கு கவலையே இல்லையா??? ஒருவேளை உன்னை பிரிஞ்சு போனதுக்கு பிறகு, எனக்கு பைத்தியம் பிடிச்சுட்டா, ஒருவேளை உளைச்சல் தாங்காம என் உயிரே போய்ட்…” என்று அந்த வார்த்தையை அவன் முடிக்கும் முன்பாகவே அவன் வாயை கைக்கொண்டு அடைந்திருந்தாள் மனைவி…

                    அவன் பேச்சு அவன் நிலையை தெளிவாக எடுத்துக் கூறிவிட, என்ன பாடு பட்டிருப்பான் என்றுதான் துடித்துக் கொண்டிருந்தது  அவள் உள்ளம். இதில் அவன் இறப்பை பற்றி வேறு பேச, தன்னையறியாமல் அவன் வாயை மூடி இருந்தவள், கட்டுப்படுத்த முடியாமல் தன் இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டாள்..

                  அவள் உடல் அழுகையில் பலமாக குலுங்க, மூன்று வருட வேதனைக்கும் சேர்த்து அழுகிறாளோ என்று நினைப்பது போல் சற்றே சத்தமாக அழுது விட்டாள்.. இன்பன் அவள் அழுகையை தாங்க முடியாமல் சிபி  என்று அவள் தோளை தொட, எதிரில் அமர்ந்திருந்த அவன் மடியிலேயே முகத்தை புதைத்துக் கொண்டாள்.

                     ஜெகன் இவர்கள் பேச்சு வார்த்தை தொடங்கும் நேரத்திலேயே வெளியேறி இருக்க, அந்த சிறிய வீட்டில் அவர்கள் இருவரை தவிர வேறு யாரும் இல்லை.. அவன் மடியில் இருந்தவள் அழுகை வெகுநேரம் நீடிக்க, இன்பனும் சற்று கலங்கித்தான் போயிருந்தான்.. எதற்காக வென்றே தெரியாத அழுகை அல்லவா..

                       அழுது முடித்து என்ன சொல்வாளோ என்பது வேறு ஒரு புறம் இருக்க, அவனால் எதையுமே சிந்திக்க முடியவில்லை அந்நேரம்… அவளின் அழுகை மெல்ல குறைந்து விசும்பலாக மாற, இன்னமும் அவன் மடியில் தான் இருந்தாள். இன்பன் மெல்ல அவளை எழுப்பி, அணைத்த வாக்கில் பிடித்துக் கொண்டவன் அவள்  லேசாக தன் இதழை அழுத்தி எடுத்தான்..

                 கூடவே “குற்றவுணர்ச்சியா இருக்குடா சிபி.. இப்படி அழாதேயேன்.. ஏண்டா என்னை இப்படி  தனியா விட்ட ன்னு என் சட்டையை பிடிச்சுடு..ஆனா அழாத..” என்று அவனும் சற்றே கரகரத்த குரலில் கூறி முடிக்க, அவன் கண்களை பார்த்தவள் லேசாக சிரிக்க மட்டும் செய்ய

                           “உன்னோட கண்களை பார்த்தே நீ நினைக்கிறதை படிக்க எனக்கும் ஆசைதான்.. ஆனா இன்னும் அந்த அளவு முன்னேறலடா… சோ நீ என்ன நினைக்கிற ன்னு என்கிட்டே அப்பப்போ வாயை திறந்து சொல்லிடேன்..” என்றும் கேட்டுக் கொண்டான் கெஞ்சலாக..

                        அவனின் இந்த பேச்சுக்கும் சிரிப்பையே பதிலாக்கியவள் “நீங்க என்னை தனியா எல்லாம் விட்டுட்டு போகல.. நீங்க இல்லாம இருக்கமாட்டேன் ன்னு தெரிஞ்சு தானோ என்னவோ, வெறும் மூணு நாள் வாழ்க்கையிலேயே உங்க பையனை என்கிட்டே கொடுத்துட்டீங்க…”

                         என்னோட இந்த வாழ்க்கை நீங்க எனக்கு கொடுத்திருந்த தைரியம் தான்.. அன்னைக்கு ஹாஸ்பிடல்ல உங்களை விட்டுட்டு வந்ததும் கூட ஒருவகை தைரியம் தான்.. எப்படியும் என் இனியன் என்னை தேடி வருவார் ன்னு… அவங்களால உங்களை பிடிச்சு வைக்க முடியாது ன்னு நான் நினைச்சேன்…

                     “என் நம்பிக்கை இந்த நிமிஷம் வரைக்கும் வீண் போகலையே.. வந்து இருக்கீங்களே.. உங்களையே தெரியாதவர் என்னை தேடி வந்து இருக்கீங்களே.. இதுக்குமேல என்ன வேணும் எனக்கு… எதுக்கு நான் சட்டையை பிடிக்கணும்..” என்று அவனுக்காக அவனிடமே அவள் வாதிட, அயர்ந்து நின்றான் இன்பன்..

                    அவ்விடம் வார்த்தைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட, மௌனம் கேட்காமலே குடியேறி இருந்தது.. ஆனால் சிபிக்கு அது இதத்தை தராமல் போக, “எனக்கு உங்களோட நான் வாழ்ந்த அந்த வாழ்க்கையும், காதலும் மட்டுமே இன்னும் நூறு ஜென்மத்துக்கும் போதும்.. எனக்கு இப்போதைக்கு என் காதலை விட, நீங்களும், இனியனும் தான் முக்கியம்…”

                         “உங்களோட நான் வாழற வாழ்க்கையை நானே மறுக்கிறதை விட, பெரிய தண்டனை வேற எதுவும் இருக்க முடியாது… ஆனா, என்னால உங்களோட வரவும் முடியாது இனியன்… என் நிமைமையை புரிஞ்சிக்கோங்க… நான் உங்களோட இல்லாம இருக்கிறது தான், எல்லாருக்கும் நல்லது…” என்று அவள்

முடிக்க

                        “இந்தா ஆரம்பிச்சுட்டா இல்ல..” என்று நக்கல் பண்ணியது இன்பனின் உள்ளம்.. ஆனால் இவ்வளவுக்கு பிறகும் அவளை விட்டு விடுவானா அவன்…

                         “நீ சொல்ற எதையும் இனியும் நான் கேட்கிறதா இல்ல சிபி.. எனக்கான பதில் கிடைச்சுடுச்சு.. எனக்கு அது போதும்..  நீயும், இனியனும் இல்லாம, இங்கேயிருந்து எங்கேயும் போறதா இல்ல…நீ என்னோட வந்தே ஆகணும்.. யார் வருவாங்க, என்ன பண்ணிடுவாங்க ன்னு நான் பார்க்கிறேன்…” என்று ஒரு முடிவோடு அவளை விட்டு விலகி எழுந்தான் இன்பன்…

                        “என்னால இங்கேயிருந்து எங்கேயும் வர முடியாது.. முக்கியமா உங்களோட வீட்டுக்கு நான் வரமாட்டேன்.. என்னால போலியா வேஷம் போடற அவங்களை எப்பவுமே ஏத்துக்க முடியாது..” என்று அழுத்தம் திருத்தமாக அவள் கூறிவிட

                        “ஒன்னும் பிரச்சனை இல்ல.. நாம தனிக்குடித்தனம் போயிடுவோம்… அப்போ என்னோட வந்துடுவியா…” என்று அவளைவிட அழுத்தமாக இன்பன் வினவ

                         ஒன்றும் பேசாமல் முழித்து நின்றாள் அவள்.. “நான் என்ன செஞ்சாலும் நீ என்னோட வர தயாரா இல்ல.. சோ இல்லாத காரணத்தை எல்லாம் சொல்லி சப்பைக்கட்டு கட்டிட்டு இருக்காத சிபி… எனக்கு தெரியும், நான் இன்னும் மூணு வருஷம் இங்கேயே இருந்தாலும் நீயா என்னோட வரமாட்ட.. உன்கிட்ட பொறுமையா பேசுறது  வேஸ்ட்..

                        “இதுல நீ சொல்ற எல்லாத்தையும் தாண்டி, இன்னும் பெருசா ஏதோ விஷயம் இருக்கு.. அது என்னன்னு நான் கண்டுபிடிக்கிறேன்.. இனி நீ எதுவுமே சொல்ல வேண்டாம்.. உன் திங்க்ஸ் எல்லாம் எடுத்து வச்சுட்டு ரெடியா இரு…”  என்றவன் முன்னே நடக்க

                        “என்னோட உணர்வுகளுக்கும், சுய மரியதைக்கும் மதிப்பே இல்லையா இனியன்.. நான் சொல்றதுல நிச்சயம் நியாயமான ஏதோ ஒரு காரணம் இருக்கும் ன்னு கூட யோசிக்க மாட்டிங்களா…”

                       “நீ யாரு??.. என் பொண்டாட்டிதானே… என் வீட்ல வந்து இரு.. உன்னோட உணர்வுகள், சுய மரியாதை, கௌரவம், இன்னும் என்னென்ன இருக்கோ அது அத்தனையையும் நான் புரிஞ்சுக்கிறேன்.. நீ சொல்ற அத்தனையையும் மறுபேச்சு பேசாம கேட்டுக்கறேன்…ஆனா, நீ என்னோட இருந்தாகணும்..” என்றவன் அழுத்தமாக அவள் கையை பற்றி, காயம் பட்டிருந்த இடத்தை சுட்டி காட்டினான்..

                        “இதுக்கு அப்புறமும் உங்களை நான் தனியா விடுவேன் ன்னு நீ எப்படி என்கிட்டே எதிர்பார்க்கிற ன்னு எனக்கு புரியவே இல்ல சிபி… இது அத்தனைக்கும், அத்தனை பேருக்கும் நான் பதில் கொடுக்கறேன்… ” என்று ஒற்றை விரல் நீட்டி எச்சரித்துவிட்டு விடுவிடுவென வெளியேறி இருந்தான் இன்பன்.

                         அவனின் உறுதியை பற்றி அவனை விட நன்றாக தெரிந்தவள் என்ற வகையில், அதற்குமேல் நடக்க போவது எதுவும் தன் கையில் இல்லை என்பது தெளிவாக புரிந்தது சிபிக்கு…

                      

Advertisement