Advertisement

பட்டென அவன் சட்டையை விட்டுவிட்ட இன்பன் “ஜெகா.. போலீசுக்கு போனை போடு.. இந்த நாயை வந்து அள்ளிக்கிட்டு போக சொல்லு..” என்றவாறே ஜேம்ஸ்ன் பக்கம் திரும்பினான்.

                      அவன் பட்டென சட்டையை விட்டதில் சற்றே தடுமாறி அவன் நிற்க, அவன் மூக்கிலேயே ஒரு குத்து குத்தியவன், அவன் என்ன நடந்தது என்று உணரும் முன்பாகவே அவன் வாயையும் உடைத்து வைத்திருந்தான்.. “எதுக்குடா இப்படி அடிக்கிறீங்க…” என்று கேட்கும் நிலையில் தான் இருந்தான் அந்த ஜிஎம்..

                       இன்பன் அதற்கும் பதில் கொடுப்பவனாக “என் முன்னாடியே என் பொண்டாட்டியை டி போட்டு பேசுவியா… இந்த வாய் தானே… ” என்று அவன் கழுத்தை பிடித்துக் கொண்டு மீண்டும் அவன் வாயிலேயே ரெண்டு போட, அவன் காலிலேயே விழுந்து விட்டான்..

                          “தெரியாம பண்ணிட்டேன் சார்.. விட்டுடுங்க சார்…” என்று அவன் கதற,

                          “இனி, இந்த ஊர்ல எங்கேயும் நீ இருக்கக்கூடாது.. எங்கேயாவது பார்த்தேன்… பார்க்கிற நேரமெல்லாம் அடிதான் வாங்குவ… ஓடு..” என்று அவனை அடித்து விரட்டி விட்டான் இன்பன்.

                          அவன் விட்டால் போதும் என்று  அங்கிருந்து ஓடிவிட, நிதானமாக சிபியை நெருங்கினான் இன்பன். இத்தனை கலவரத்திற்கும் அவள் அசராமல் நிற்க, சற்றே பெருமிதம் அவள் தன் மனைவி என்பதில்.. ஆனாலும் இப்படி சொல்லிக்கொள்ளாமல், எந்தவித அறிவிப்பும் இல்லாமல் வேலையை விடுவார்களா என்றும் கோபம் வர “அறிவிருக்கா உனக்கு..” என்று அமைதியான குரலில் அவளிடம் கேட்டிருந்தான் இன்பன்.

                                அவன் கேட்ட விதம்  என்னமோ “டீ சாப்பிட்டாயா..” என்பது போல் அத்தனை சாதாரணமாக இருக்க, ஆனால் வார்த்தைகள்… எனக்கு அறிவில்லையா என்று நினைத்தவளுக்கு கட்டுக்கடங்காமல் கோபம் வர,

                    “நிச்சயமா அறிவில்ல எனக்கு.. இல்ல இவனை எல்லாம் பிரெண்ட்ன்னு நம்பி இவனோட வந்திருக்கவே மாட்டேன்..உங்களை பார்க்க கூட முயற்சி பண்ணமாட்டேன் ன்னு சொல்லி அத்தனை ரோஷமா சொல்லிட்டு வந்தேன்… ஆனா, ரெண்டு வருஷமா உங்ககிட்டேயே வேலை பார்த்திருக்கேன்.. எத்தனை பெரிய முட்டாளா இருக்கணும் நான்…”

                        “எல்லாரும் சேர்ந்து ட்ராமா போடுறிங்களா… என்னை பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கெல்லாம்..” என்று அவள் சத்தமாக பேசிக்கொண்டே அழ தொடங்க, ஜெகன் “சிபி.. நான்..” என்று இடையில் வர

                          “ஏதாவது பேசின.. உன் கழுத்தை நெரிச்சுடுவேன் ஜெகா.. இனி ஒரு வார்த்தை கூட நீ பேசக்கூடாது…. எப்பவும் என் முன்னாடி வராத நீ… ” என்று கத்தியவள், அங்கே நிற்காமல் விடுவிடுவென நடந்து விட்டாள்..

                             இன்பன் அந்த அறையின் ஜன்னல் வழியாக கீழே பார்க்க, அவள் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்புவது தெரிந்தது. “கிளம்புவோம்டா.. ” என்று இருவரிடமும் பொதுவாக சொன்னவன் நடக்க தொடங்க, லாரன்ஸ் மட்டுமே உடன் வந்தான்..

                            ஜெகன் அசையாமல் அதே இடத்திலேயே நிற்க, அவனை நெருங்கியவன் அவன்  தோளில் கையை போட்டுக் கொண்டு “டேய்.. அவ பேசினதை எல்லாம் பெருசா எடுத்துப்பியாடா… அவ சொல்லிட்டா நீ அவளை பார்க்கவே மாட்டியா.. வாடா..” என்று அவனை தேற்ற

                               “உனக்கு புரியாது இன்பா.. உன் பேமிலி அவளுக்கு கொஞ்சம் நஞ்சமா பண்ணல.. அவ உன்னோட வரமாட்டேன் ன்னு சொல்றது கூட அவங்களை மனசுல வச்சுதான்… அவ வேலைக்கோ, படிக்கவோ கூட முயற்சி செய்ய முடியாத படி அவளோட செர்டிபிகேட்ஸ் கூட கொடுக்கல உன் வீட்டு ஆளுங்க…”

                           “அவ இடத்துல இருந்து பார்த்தா, அவ பேசினது எதுவுமே தப்பு இல்ல.. அவ இந்த ஊருக்கு வந்த ஆரம்ப காலங்கள்ல என்னோட உதவியை ஏத்துக்கவே அவ்ளோ யோசிச்சா.. அவளை சமாளிக்க எத்தனை கஷ்டப்பட்டேன் ன்னு எனக்கு தான் தெரியும் இன்பா.. தெரிஞ்சும் நான் இப்படி பண்ணி இருக்க கூடாது..”

                   “ஆனா, ஏதோ ஒரு  வகையில அவளை பிடிச்சு வைக்கணும் ன்னு நினைச்சேன்டா… உங்களை விட முடியல.. அதனலாதான் அவளை இங்கே சேர்த்துவிட்டேன்.. ஆனா.. தப்புன்னு இப்போ தோணுதுடா…” என்று உண்மையாகவே வருந்தினான் அவன்..

                     இன்பனுக்கு அவன் சொன்ன, செர்டிபிகேட்ஸ் கொடுக்கல என்பதிலேயே நின்றுவிட்டது மனது.. இன்னும் இன்னும் கசப்பு கூடிக் கொண்டே போனது பெற்றவர்களின் மீது.. காதலித்தது இத்தனை பெரிய குற்றமா??? என்று அவன் மனம் கேள்வி கேட்க, தன் தந்தையை எதுவும் செய்ய முடியாமல் தன்னையே நொந்து கொண்டான் அந்த நிமிடம்…

                          மேலும் சிறிது நேரம் அங்கேயே அவன் அமர்ந்துவிட, வெகுநேரம்  கழித்தே மூவரும் அங்கிருந்து கிளம்பினர்.

                                இவர்கள் வீடு வந்த நேரம் சிபியின் வண்டி அவளது வீட்டிற்கு முன்னால் நிற்க, இன்பன் யோசிக்கவே இல்லை. சட்டென அவளின் வீட்டுக்குள் நுழைந்திருந்தான்..  இவன் சென்ற நேரம் அடுப்பில் எதையோ கிண்டி கொண்டிருந்தாள் அவள்.. கீழே இனியன் தரையில் அமர்ந்திருக்க, அவனிடம் ஒரு கலரிங் புக்கும், சில ஸ்கெட்ச் பேனாக்களும்..

                                 அந்த புத்தகத்தில் அவன் கைவரிசையை காட்டிக் கொண்டிருக்க, அவனுக்கு மதிய உணவு தயாரித்துக் கொண்டிருந்தாள் அவள்.. எதுவும் பேசாமல் உள்ளே நுழைந்தவன் இனியனுடன் “என்னடா பண்ற..” என்று கேட்டுக் கொண்டே அமர்ந்துவிட,

                                         அதிர்ந்து போனவளாக திரும்பி பார்த்தாள் அவள்.

                        அவன் பார்வையை சந்தித்ததும் “என்னை நிம்மதியாவே விட மாட்டிங்களா..” என்பது போல் பார்த்து வைக்க, அந்த பார்வையின் பொருள் உணர்ந்தவனாக, “நான் இவனை கூட்டிட்டு போறேன்..” என்றுவிட்டு குழந்தையை அவன் கைகளில் தூக்கி கொள்ள

                            “அவன் இன்னும் சாப்பிடவே இல்ல.. விடுங்க அவனை..” என்று அவள் கையை நீட்டி, இனியனை வாங்க முற்பட, சட்டென இன்பனின் தோளில் முகம் புதைத்து முகத்தை திருப்பிக் கொண்டான் இனியன். அவ்வளவுதான்… அன்னைக்கு சரசரவென கண்களில் இருந்து கண்ணீர் இறங்கி விட்டது…

                             அவன் முன்னால் அழ மனமற்றவளாக, “போங்க.. தூக்கிட்டு போங்க..” என்று தடுமாற்றமாக சொன்னவள் அடுப்பின் பக்கம் திரும்பி கொண்டாள்.. சாதாரண நிகழ்வு அது…

                              அன்னை அடுப்பில் வேலையாக இருக்க, அவள் நகரமாட்டாள் என்று தெரிந்தவன் இன்பன் வந்து தூக்கவும் வெளியே செல்ல தயாராகி விட்டான்..அவள் கையை நீட்டவும், அவன் முகம் புதைத்ததும் எப்போதும் நடப்பது தான். எப்போதும் ஜெகனிடம் ஒட்டி கொள்பவன் இன்று இன்பனிடம் ஒட்டி கொண்டான்.

                              அவ்வளவே தான் விஷயம்.. ஆனால் பெற்றவளுக்கு காலையிலிருந்து நடந்த சம்பவங்களின் அழுத்தம் சற்று அதிகமாகவே இருக்க, மகனுக்கும் தான் முக்கியமில்லையா என்று தோன்றிவிட்டது சட்டென.. அவனும் இன்பனின் கையில் ஒட்டி கொள்ள, சட்டென தனியாக நின்றுவிட்ட உணர்வு…

                              அவள் தலையசைத்தால் அனைத்துமாக இருக்க நினைப்பவன் எதிரிலேயே நிற்க, அவள் தன் தனிமையை நினைத்து கலங்கி கொண்டிருந்தாள்..  வேடிக்கை தான்..

                             இன்பனுக்கு அவளின் அழுகை உவப்பானதாக இல்லை.. ஏற்கனவே ஜெகன் பேசியதில் குற்றவுணர்வில் இருந்தவன், இப்போது அவள் அழவும் இதற்கும் தான் தானே காரணம் என்று தன்னையே குற்றவாளி ஆக்கி கொண்டான்..

                              “சிபி..” என்று மெல்லிய குரலில் அவன் அழைக்க

                             “ப்ளீஸ்.. அவனை கூட்டிட்டு போங்க… என்னை கொஞ்சம் தனியா விடுங்க…” என்றுவிட்டாள் விசும்பலோடு..

                              இன்பன் யோசிக்காமல் இனியனை கீழே இறக்கி விட்டவன், விறுவிறுவென வாசலை நோக்கி நடந்துவிட்டான். அவன் செல்லவும் இனியன் அழுது ஊரை கூட்ட, அப்போதுதான் திரும்பி பார்த்தாள் சிபி.. இன்பனின் முதுகு மட்டுமே தெரிய, ஏனோ தன் சொர்க்கம் தன்னை விட்டு விலகி செல்வதை போல ஒரு பிம்பம் அவள் முன் நிழலாடியது…

                            கீழே அழுது கொண்டிருந்த இனியன் அன்னையின் சேலையை பிடித்து இழுக்க, அவனை கைகளில் தூக்கி கொண்டவள், தன் மார்போடு அணைத்து கொண்டாள்… அதோடு அன்று மாலை இனியனை அழைத்து செல்ல லாரன்ஸ் தான் வந்தான்…

                                               இன்றும் அதுபோலவே லாரன்ஸ் வந்து நிற்க, “அவன் ஸ்கூலுக்கு போகணும்..டைம் ஆச்சு..” என்றவள் அவன் பேச வாய்ப்பே கொடுக்காமல் பிள்ளையை முன்னால் இருத்தி கொண்டு கிளம்பிவிட, அந்த கேடியும் அன்னை வண்டியில் கிளம்புவதால் சமத்தாக “பை…” என்று கையசைத்துவிட்டு குஷியாக கிளம்பி சென்று விட்டது…

                     லாரன்ஸ் செல்லும் அவர்களை பார்த்து  நின்றவன், இன்பனிடம்  நடந்ததை கூற, “ஆமா.. கலெக்டருக்கு படிக்கிறான்… என்கிட்டே விடக்கூடாது ன்னே அனுப்பி வச்சிருப்பா…” என்று புலம்பி தள்ளினான் அவன்..

                     வீட்டில் இருக்கவும் பிடிக்காமல், ஜெகனின் அலுவலகத்திற்கு கிளம்பி விட்டனர் நண்பர்கள்… ஜெகனையும் வேலையை பார்க்க விடாமல் இவர்கள் இருவரும் செய்த அலப்பறையில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவன் அலுவலகத்தில் இருந்து கிளம்பிவிட, மூவரும் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த நேரம் தான் எதிரில் வண்டியில் வந்து கொண்டிருந்தாள் சிபி…

                      அவள் இவர்களை கடந்து செல்ல, இன்பனுக்கு அதற்கு மேல் வீட்டிற்கு செல்லும் எண்ணம் இல்லை.. அவளை அவன் பின்தொடர, “டேய்.. இனியாவை கூட்டிட்டு வரப்போறாடா.. வீட்டுக்குத்தான் வருவா.. வீட்டுக்கு போடா..” என்று ஜெகன் புலம்ப, அவனை கண்டு கொள்ளாமல் அவளின் பின்னால் சென்றான் இன்பன்.

                   அவனுக்கு இனியன் படிக்கும் பள்ளியை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாக இருந்தது.. அந்த பள்ளியின் வாசலில் வண்டியை நிறுத்தியவள் நேரத்தை பார்த்துவிட்டு வண்டியில் இருந்து இறங்கி நடக்க, சரியாக எங்கிருந்தோ அவளை நோக்கி ஓடி வந்தான் ஒருவன்..

                    என்ன நடந்தது என்று கிரகிக்கும் நேரம் கூட இல்லாமல் தான் வைத்திருந்த சிறிய கத்தியால் அவளின் கையை அவன் கிழித்து விட, வலி தாங்காமல் கையிலிருந்த கைப்பையை அவள் தவற விடவும், அதை கையில் எடுத்துக் கொண்டவன் அவளை பார்த்து வன்மமாக சிரித்துவிட்டு அங்கிருந்து ஓட தொடங்கி இருந்தான்..

                   இன்பன் பயந்து போனவனாக காரிலிருந்து இறங்கியவன் “சிபி..” என்ற கூச்சலுடன் அவளை நெருங்க, லாரன்ஸ் அவனை துரத்தி சென்றிருந்தான்…

Advertisement