Advertisement

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 12

                            ஆகிற்று.. இன்பன் சிபியிடம் பேசிவிட்டு சென்று இன்றுடன் மூன்று நாட்கள் முடிந்திருந்தது முழுதாக.. இதுவரையிலும் அவனுக்கு இணக்கமாக எந்த பதிலையும் சொல்லவில்லை சிபி. இந்த மூன்று நாட்களாக வீட்டை விட்டும்  பெரும்பாலும் வெளியே வருவதும் இல்லை..

                            ஆனால், தன்னை தானே கூட்டுக்குள் அடைத்துக் கொண்டவளால் இனியனை பிடித்து வைக்க முடியவில்லை.. இன்பன் அன்று பேசிவிட்டு சென்ற பிறகும் கூட வெகுநேரம் இனியன் வீடு வந்து சேர்ந்திருக்கவே இல்லை. இன்பனின் வார்த்தைகளை கொண்டு பயந்து போனவளாக அவள் இனியனை தேடி வர, ஒய்யாரமாக தந்தையின் மடியில் அமர்ந்து கொண்டு அவன் மீசையை பிடித்து இழுத்து விளையாடிக் கொண்டிருந்தான் அவன்..

                         இனியன் சட்டென அனைவரோடும் கலந்து விடுவான் என்பதால், அவனை கவர்வது இன்பானுக்கு எளிதாகவே இருந்தது.. இந்த மூன்று நாட்களில் உண்பதற்கும், உறங்குவதற்கு மட்டுமே பெரிதாக அவளை நாடினான் அவன்..

                         முதல் நாள் குழந்தைக்காக அவள் நிற்க, “நான் கொஞ்ச நேரம் வச்சிருக்கேன்.. நானே தூக்கிட்டு வந்து விடறேன்..” என்று சொன்னதோடு சரி…

                         சிபி தயங்கி கொண்டே நிற்க, அவள் பதட்டம் உணர்ந்து “இவனை மட்டும் தனியா எல்லாம் தூக்கிட்டு போற ஐடியா இல்ல.. தூக்கிட்டு போனாலும், உன்னையும் சேர்த்து தான் தூக்குவேன்…” என்று திட்டவட்டமாக பேசினான் அவன்.

                         அவனிடம் என்ன பேசுவது என்று புரியாமல், வெறும் முறைப்பை மட்டுமே அவனிடம் செலுத்தியவள் தன் வீட்டிற்கு வந்து விட்டாள். அன்று மதிய உணவுக்கு சரியாக இனியனை அவன் அழைத்து வந்துவிட, அப்போதுதான் சற்றே ஆசுவாசமாக உணர்ந்தாள் அவள்..

                        ஆனால், அதை நீட்டிக்க விடாமல் அடுத்த ஒரு மணி நேரத்தில் வந்தவன் இனியனை கையை சொடுக்கி அழைக்க, ஜெகன் உடன் இருக்கவும் தத்தி தாவி ஓடியது சின்ன வண்டு.. ஓடியவன் நேராக இன்பனிடமே சென்று நிற்க, இன்னும் அதிர்ந்தது மனம்..

                           தன் மகன், கணவனே என்றாலும், அவனிடம் அப்படி ஒட்டிக் கொண்டது ஏனோ உவப்பாக இல்லை அவளுக்கு.. என்ன செய்கிறான் இவன்?? என்று ஒவ்வொரு கணமும் அவளை பதட்டத்தின்  உச்சியிலே வைத்திருந்தான் அவன்…

                              அவனை எதுவும் செய்ய முடியாமல் அருகில் நின்றிருந்த ஜெகனை அவள் தீயாய் முறைக்க, அவள்  சந்திக்காதவன் தானும் இன்பனோடு சென்றுவிட்டான். கண்களில் கண்ணீர் சேர்ந்துவிட, செல்லும் அவர்களை முறைக்க கூட முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கொண்டாள் அவள்.

                                அன்று இரவுநேரம் வரை இனியன் அவர்களோடே சுற்றி கொண்டிருக்க, ராஜ கவனிப்பு தலைவருக்கு. எந்நேரமும் மூன்று தடியர்கள் அவன் பின்னால் ஓடி விளையாடவும், நினைத்த நேரம் காரில் ஏறி நான்கு பெரும் ஊர் சுற்றவும் செய்தால் அவனுக்கு அதை விட வேறென்ன வேண்டும்…

                                  முதல் நாள் ஜெகனின் வீட்டில் ஆட்டம் போட்டவர்கள் அடுத்த நாள் நந்தவனத்திற்கு சென்றுவிட, அங்கே இடைவிடாத ஆட்டம் தான்.. பசி நேரத்திற்கு மட்டுமே அன்னையை தேடுபவன் மற்ற நேரங்களில் அவர்களோடு அடிக் கொண்டு தான் இருந்தான்..

                                   க்ரெச்சில் விட்டு பழகியது அவளுக்கே இப்போது வினையாக முடிய, அந்த பழக்கத்திலேயே இப்போது இன்பனுடன் சமத்தாக ஒட்டிக் கொண்டான் மகன். இன்பன் வந்து சென்ற அடுத்தநாள் மாலை வேளையில் அவள் வேலை செய்து வந்த அந்த ஹோட்டலில் இருந்து அவளுக்கு அழைத்திருந்தனர்..

                                  நிர்வாகத்தினர் அவளிடம் சில விஷயங்களை தெளிவு படுத்திக் கொள்ள நினைப்பதாக தகவல் கொடுத்திருந்தனர். மேலும் அந்த ஜிஎம் க்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், அவளின் தேவை அவசியமாக இருந்ததால் அவளை நேரில் வந்து பார்க்க சொல்லி அழைத்திருந்தனர்..

                                 சிபி அவள் இருந்த மனநிலையில் அதை ஒரு விஷயமாகவே எடுக்கவில்லை. இப்போது இருக்கும் சூழ்நிலையில் இன்பன் அவளை இந்த ஊரில் இருக்க விடுவானா என்பதே சந்தேகமாக இருக்க, இதில் எங்கே அவள் வேலையை பற்றி சிந்திக்க???

                                இருப்பினும், அந்த உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் உடல் நலன் முக்கியம் என்று நினைத்தவள் அடுத்த நாள் நேரில் சென்று நிற்க, அந்த நிறுவனத்தின் அலுவலக மீட்டிங் அறைக்கு வர சொல்லி இருந்தனர் அவளை.. ஏற்கனவே அங்கு சென்றிருக்கிறாள் தான்.. அதோடு முக்கியமான அலுவலக விஷயங்கள் அங்குதான் பேசி முடிவெடுப்பது எப்போதுமே..

                               எனவே, பெரிதாக எதுவும் யோசிக்காமலே அந்த அறையினுள் நுழைந்தாள் சிபி.. அங்கே அந்த மீட்டிங் ஹாலில் இருந்த, எம்டி நாற்காலியில் நடுநாயகமாக அமர்ந்திருந்தது சாட்சாத் பேரின்பன் தான்.. அவனுக்கு இருபுறமும் ஜெகன், மற்றும் லாரன்ஸ்.. அவள் எதை எதிர்பார்த்து வந்தாலும் நிச்சயம் இதை நினைத்து பார்க்கவே இல்லை…

                              அவனை பார்க்க கூட முயற்சிக்கமாட்டேன் என்று சத்தியம் செய்துவிட்டு வந்தவள் அவள்.. ஆனால், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக அவனின் நிறுவனத்திலேயே வேலை செய்திருக்கிறாள்… எப்படி இது சாத்தியம்?? என்று ஒரு நிமிடம் யோசித்தவள் ஜெகனை நிமிர்ந்து பார்க்க, அப்போதும் அவளை பார்க்கவே இல்லை அவன்..

                       அவன் பார்க்கவில்லை என்றாலும் அவனை விடுவதாக இல்லை அவள்… தன் கையிலிருந்த அலைபேசியை   பற்றிக் கொண்டு தன்னை நிலைப்படுத்தியவள், அமைதியாக அவர்களின் முன்னே சென்று நின்றாள்..

                        இன்பன் அவளை ஆழ்ந்து பார்த்திருக்க,ஸ்கொஞ்சமும் அதை சட்டை செய்யாமல் “சொல்லுங்க சார்.. எதுக்காக என்னை வர சொன்னிங்க..” என்று அலுவலக தொனியிலேயே பேசினாள் அவள்.

                          “என்ன காரணத்துக்காக லீவ் எடுத்து இருக்கீங்க ன்னு தெரிஞ்சுக்கலாமா..” என்று அதே முறையிலேயே இன்பனும் கேள்வி எழுப்ப

                            “நான் லீவ்ல இல்ல சார்.. என் வேலையை நான் ரிசைன் பண்ணி ஒன் வீக் ஆகுது… “

                         “ஓஹ்.. ரியலி.. ரிசைன் பண்றதா யார்கிட்ட இன்பர்ம் பண்ணீங்க… ஏதாவது லெட்டர், மெயில்.. உங்களை ரிலீவ் பண்றதா நாங்க ஒத்துக்கிட்டோமா..”

                        “நான் இந்த கம்பெனியோட ஜிஎம் கிட்ட ரிசைன் பண்றதா, இன்பர்ம் பண்ணி இருக்கேன்.. அதோட எம்டி யாருன்னே தெரியாம, ஒளிஞ்சுக்கிட்டு இருந்தா யார்கிட்ட சொல்ல முடியும்…உங்களுக்கு எதுவும் கேட்க வேண்டி இருந்தா உங்க ஜிஎம் கிட்ட கேட்டுக்கோங்க…” என்று முடித்துவிட்டாள்..

                         “அதுவும் சரிதான்.. ஆனா, ஜிஎம் உங்க மேல ஆகியுசேஷன் வைக்கிறாரே.. நீங்க தரமில்லாத பொருட்களை குறைந்த விலையில வாங்கினதாவும், அதை அவர் கண்டுபிடிச்சிட்டதால நீங்க வேலையை விட்டே ஓடிட்டதாகவும் சொல்றாரே.. உண்மையா அது…” என்று இன்பன் கேள்வியாக நிறுத்த

                            கொதித்து போனாள் அவள்… “தைரியம் இருந்தா அவனை என் முன்னாடி பேச சொல்லுங்க… அவன் சொல்லட்டும்.. அடுத்து நான் பதில் சொல்றேன்..” என்று நிதானமாக அவள் உரைக்க

                          இன்பன் லாரன்ஸை ஒரு பார்வை பார்க்கவும், அவன் அந்த ஜிஎம்மை அங்கே வரவைத்து விட்டான்.. அவன் வந்து நிற்கவும்,  “சொல்லுங்க ஜேம்ஸ்.. இவங்க எதுக்காக வேலையை விட்டு ஓடினாங்க..” என்று இன்பன் அழுத்தமாக கேட்க

                        அந்த ஜேம்ஸ் இதை எதிர்பார்த்திருக்க வில்லை. எப்போதுமே நிறுவனத்தின் பக்கம் கூட எட்டி பார்த்திராத உரிமையாளரின் மகன் திடிரென்று வந்து நிற்பான், கேள்வி கேட்பான், என்று கனவா கண்டார் அவர்.. அவர் கேள்விபட்டிருந்த வரை அந்த நிறுவனத்தினர் சென்னையை விட்டு நகர்வதே இல்லை என்று தெரிய வர, அதை பயன்படுத்திக் கொள்ள நினைத்து தான் இந்த தகிடுதத்தம் எல்லாம்..

                           சிபி கேள்வி எழுப்ப அவளையும் வெளியே துரத்தி விட்டான்.. இனி யாரும் எதிர்க்க ஆளில்லை என்று அவன் நினைத்திருக்க, அவன் முன்னால் இன்பன் வந்து நின்றான். அவனும் வந்த முதல் நாளே அங்கிருந்தவர்களிடம் பேசி விஷயத்தை வாங்கிவிட, மொத குற்றத்தையும் சிபி மீது திருப்பி ஒரே அடியாக அடித்துவிட்டான் அவன்..

                              அதோடு முடிந்தது என்று நினைத்திருந்தால், இதோ அடுத்தகட்டமாக சிபியும் வந்து நிற்கிறாள்..  அவள் இல்லாத நேரம் அவள் மீது பழி போட்டவனால், இப்போது அவள் முகத்தை பார்த்து குற்றம் சுமத்த முடியவில்லை.. அவள் கண்கள் “சொல்லித்தான் பாரேன்..” என்று சவால் விட, திருதிரு வென விழித்தான் அவன்..

                          ஆனாலும், தான் செய்த தவறை ஒப்புக்கொள்ள மனம் வராமல், “சார்… ” என்று நெளிந்து கொண்டே “அதான் சொன்னேனே சார்.. இவங்க.. ஸ்டாக் எடுக்கிறது கொஞ்சம் காசு பார்த்து இருக்காங்க..” என்று அவன் முடித்திருக்க கூட இல்லை. அவன் கன்னத்திலே ஒன்று விட்டிருந்தாள் சிபி…

                           “நான் சரக்கு எடுக்கிறதுல காசு பார்த்தேனா… பணத்துக்காக தேதி முடிஞ்ச பொருளை எல்லாம் வாங்கி வச்சுட்டு என்மேல பழி போடறியா.. நான் வேலையை விட்டு ஒடினேனா.. சொல்லுடா..” என்று அவன் முகத்திற்கு நேராக பத்ரகாளியாக  அவள் நிற்க, ஜெகன் தானாக தன் கன்னத்தை பிடித்துக் கொண்டிருந்தான்..

                         அந்த ஜிஎம் அடி வாங்கிய அவமானத்தில் “ஏய்.. என்மேலேயாடி கையை வச்ச..” என்று கோபத்தோடு அவளை நெருங்க, லாரன்ஸ் அவன் முதுகில் பட்டென ஒன்று வைத்ததில் சிபியின் காலடியிலேயே விழுந்தான் அவன்… சிபி குறையாத ஆத்திரத்துடன் அவனை முறைக்க, “என்ன சார் பண்றிங்க.. உங்ககிட்ட வேலை பார்த்தா மேல கையை வைப்பிங்களா…” என்று லாரன்சிடம் அவன் சத்தமாக கத்த

                       “கையை வச்சா என்னடா பண்ணுவ…” என்று நிதானமாக கேட்டான் இன்பன்.. இதற்குள் இருக்கையை விட்டு எழுந்திருந்தவன் நிதானமாக அவனை நெருங்க

                       “நான் போலீஸ்ல உங்க அத்தனை பேர் மேலேயும் புகார் கொடுப்பேன்..” என்று வெட்டியாக அவன் வாயை விட

                       “நீ ஏன் கொடுக்கணும், நானே கொடுக்கறேன்.. என் ஹோட்டல் பேரையே கெடுக்க பார்த்து இருக்க நீ… காலாவதியான பொருளை எல்லாம் நீ வர்றவங்க தலையில கட்ட, என் ஹோட்டல் தான் கிடைச்சுதா… எத்தனை வருஷமா நாங்க இதை நடத்திட்டு வர்றோம் தெரியுமா உனக்கு..” என்றவன் அவன் சட்டையை கொத்தாக பிடித்துவிட, நடுங்கி போனான் அவன்..

Advertisement