Advertisement

ஜெகன் சட்டென எழுந்தவன் “இன்பா நான் சொல்றதைக் கொஞ்சம் கேளேன்..” என்று அதட்ட,

                         “நீ மொதல்ல நான் சொல்றதை கேளு ஜெகா.. என் நிலைமையை புரிஞ்சிக்கோ…. எனக்கு பேசியே ஆகணும்… ” என்று அவன் நிற்க

                         லாரன்ஸ் அவன் தோளை மென்மையாக தட்டி கொடுத்தவன் “அவன் பேசட்டும் ஜெகன்.. நிச்சயமா இன்பா அவளை ஹர்ட் பண்ணமாட்டான்.. அவங்க பேசட்டும்.. நாம உன் வீட்டுக்கு போவோம்..” என்று  தன்மையாகவே ஜெகனிடம் கூற, அப்போதும் மறுப்பாகவே பார்த்தான் அவன்.

                         லாரன்ஸ் “ஜெகன்.. ஷி வில் மேனேஜ்.. நீ வா..” என்று அவனை அழைத்துக் கொண்டு வம்படியாக வெளியேறிவிட, இனியனையும் தூக்கி சென்றிருந்தனர் அவர்கள்… அத்தனையும் மௌன சிலையாக உள்ளே அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தாள் சிபி

                          இன்பனின் காலடி தன்னை நெருங்குவது கேட்க, இதயம் மெல்லியதாக தடதடத்தது… இப்போது என்னவோ என்று பயந்தவளாக அவள் அமர்ந்திருக்க, அவளின் தோற்றமே ஓய்ந்து போனவளாக காட்டியது அவளை.. இன்பன் அவள் முகம் பார்க்க இன்னமும் கண்களை மூடிக் கொண்டு தான் அமர்ந்திருந்தாள்..

                       இப்போது லேசான எரிச்சல் கூட அவனுக்கு.. என்ன பெண் இவள்.. நான் நெருங்குவது தெரியாதா?? கண்களை திறக்க கூடாதா?? என்று அவன் மனம் சட்டென சுணங்கி கொள்ள, “அடங்குடா..” என்று தலையில் தட்டியது மனசாட்சி.

                     வீரமாக அவளை நெருங்கி விட்டாலும் என்ன பேசுவது என்று தெரியாமல் போக, அவளுக்கு அருகில் சற்று இடைவெளி விட்டு கால்களை நீட்டி அமர்ந்து கொண்டான்..சற்றே கனமான மௌனம் அங்கே வியாபித்து இருக்க, எப்படி அதை உடைப்பது என்று நிச்சயமாக தெரியவில்லை அவனுக்கு.

                      பத்து நிமிடங்களுக்கு மேலாக இதே நிலை நீட்டிக்க, அவனின் அருகாமையை உணர்ந்தவள் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவளாக “என்ன தெரிஞ்சிக்கணும் உங்களுக்கு…” என்று கேட்டிருந்தாள் தன் மௌனத்தை கைவிட்டு..

                      அவளின் குரலில் அவன் திரும்பி அவள் முகத்தை பார்க்க, கண்களை திறந்து அவனைத்தான் பார்த்து அமர்ந்திருந்தாள் அவள்.. கண்களில் காலையில் கண்ட தடுமாற்றம் எள்ளளவும் இல்லை.. மாறாக ஒரு நிமிர்வு அங்கே தென்பட, அதை மீறியும் இன்னமும் ஏதோ ஒன்று..

                                                  “உனக்கு என்கிட்டே என்ன சொல்லணும்.” என்று இன்பனும் கேள்வியாகவே நிறுத்த

                   “புரியல எனக்கு.. என்ன சொல்லணும்..” என்று அவள் விழிக்க

                  “என்னை பத்தி, என் பேரண்ட்ஸை பத்தி, உனக்கு அவங்க செஞ்சதை பத்தி, இல்ல நான் உன்னோட வாழ்ந்த வாழ்க்கையை பத்தி… உனக்கு சொல்ல ஏதாவது இருக்கும் இல்ல…” என்று அவன் நிறுத்த

                  “உங்களை பத்தி…. எனக்கு இன்னிக்கு நாள் போதாது…அதை விட்டுடுவோம்… உங்க பேரண்ட்ஸை பத்தியோ, அவங்க செஞ்சதை பத்தியோ பேச எனக்கு துளி கூட விருப்பம் இல்ல.. என்னை பொறுத்தவரைக்கும் அவங்க எனக்கு தப்பா எதுவும் செய்யல..

                     “உங்களை காப்பாத்த முடியாத நிலையில நான் இருந்தப்ப, அவங்கதான் உங்களை காப்பாத்தி  கொடுத்தாங்க… அதுக்கு விலையா உங்களையே கேட்டாங்க… என்ன செய்ய முடியும்… கொடுத்துட்டேன்… இதுல எனக்கு தெரியாமலோ, என்னை ஏமாத்தியோ அவங்க எதுவுமே செய்யல..அத்தனையும் என் விருப்பத்தோட நடந்தது தானே… இதுல அவங்களை குறை சொல்ல எனக்கு என்ன தகுதி இருக்கு…” என்று அவள் நிறுத்த அவளை கண்ணெடுக்காமல் பார்த்திருந்தான் அவன்..

                       அவன் பார்வையை கண்டுகொள்ளாமல் “உங்களோட நான் வாழ்ந்த வாழ்க்கை.. அந்த ஒரு மாத வாழ்க்கை எனக்கு மட்டுமே சொந்தமான பொக்கிஷம்.. அதை படம் போட்டு காட்டி உங்களுக்கு விளக்கவும் என்னால முடியாது… என்னை மன்னிச்சிடுங்க..” என்று அவள் முடித்துவிட, அவளின் நுண்ணுணர்வுகள் சற்றே புரிந்தது அவனுக்கு..

                      அவளிடம் அடுத்து என்ன பேச வேண்டும் என்பதும் புரியாமல் போக, மீண்டும் ஒரு தொய்வு அவனிடம்.. அவள் தலையை குனிந்து கொண்டு அமர்ந்திருக்க, “நாம கல்யாணம் பண்ணி இருந்தோமா??? ” என்று அபத்தமாக ஒரு கேள்வியை அவன் எழுப்பிவிட

                      அவன் கேள்வியின் காரணம் உணர்ந்தவள்  “என் கழுத்துல தாலின்னு ஒன்னு நீங்க கட்டவே இல்லை…” என்று விட்டு  தன் கழுத்தில் இருந்த அந்த தடித்த சங்கிலியை வெளியே எடுத்து காட்ட, அதை அடையாளம் தெரிந்தது அவனுக்கு..  அவனுடையது தான் அது. அவன் பாட்டியின் பிறந்தநாள் பரிசு… அந்த சங்கிலியின் டாலரில் இன்பா என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கும்..

                      மெல்ல அவன் கையை நீட்டி அந்த சங்கிலியை தொட, தன் கைகளை விலக்கி கொண்டாள்.. எதிரில் இருப்பவள் இந்த கணம் என்ன பாடு பட்டுக் கொண்டிருப்பாள் என்பது அவளின் முகத்தில் தெரிய, தன்னையறியாமல் ‘சாரி” என்று முணுமுணுத்தான் அவன்..

                     கூடவே “நான் என்ன செய்யட்டும்..” என்று மீண்டும் அவளிடமே கேட்க, அவள் புரியாமல் விழிக்க

                      “உன்னையும், இனியனையும் பொறுத்த வரைக்கும் நான் என்ன செய்யட்டும்..” என்று மீண்டும் நிதானமாக அவன் கேட்க

                        “இப்படியே விட்டுடுங்க… நான் நிம்மதியா இருக்கேன்.. மூணு வருஷத்துக்கு முன்னாடியே நான் உங்க வாழ்க்கையில குறுக்கிட்டு இருக்க கூடாதோ ன்னு நினைச்சிருக்கேன்.. இப்போ அந்த எண்ணம் அதிகம் தான் ஆகி இருக்கு.. என்னால இந்த பணம், பேர், சமூக அந்தஸ்து இந்த வரையறைக்குள்ள எல்லாம் வாழ முடியாது..

                       “அப்போ இருந்த சிபியும் இப்போ இல்ல.. தனியா வாழ்ந்திட பழகிட்டேன்… இப்படியே எங்களை கடந்திடுங்க… நிச்சயமா நானும், என் மகனும் எப்போதும் உங்க வாழ்க்கையில குறுக்கிடவே மாட்டோம்.. கடவுளுக்கே இதுல விருப்பம் இல்ல போல.. அதனால தான் மூணு வருஷம் கழிச்சு உங்களை பார்த்தும் கூட என்னோட காதல் மட்டும் கிடைக்கவே இல்ல எனக்கு…

                        “இது இப்படியே முடிஞ்சு போகட்டும்.. நீங்க உங்க வாழ்க்கையை பாருங்க..” என்றவள் “நான் என்ன சொல்லணுமோ அதை எல்லாம் சொல்லிட்டேன்..” என்ற பாவனையை முகத்தில் காட்ட

                        “உன் வாழ்க்கையை பத்தி நீ எடுத்த முடிவு ஓகே.. ஆனா, இனியன்… அவனுக்கும் சேர்த்து நீ எப்படி முடிவெடுக்கலாம்.. அவன் எனக்கும் மகனாச்சே..” என்று அழுத்தத்துடன் இன்பனின் குரல் வெளிவர

                        “நான் இல்லன்னு சொல்லவே இல்லையே.. நிச்சயமா அவன் உங்களோட மகன் தான்.. ஆனா உங்களைவிட எனக்கு உரிமையும், உணர்வுகளும் அதிகம்.. அவனை விட்டுடுங்க இன்பன்.. நாங்க இருக்கறது தெரியாமலே போயிருந்தா என்ன செஞ்சு இருப்பிங்க.. அப்படியே நினைச்சுக்கோங்க..”

                         “தெரியாம போயிருந்தா என்ன கதையோ, ஆனா தெரிஞ்சும் என் மகனை என்னால விட்டுட்டு போக முடியாது… எனக்கு என் மகன் வேணும்…” என்று ஆணித்தரமாக அவன் உரைக்க

                        என்ன செய்வது என்று புரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள் அவள்.. ஒரு இனம் புரியாத உணர்வு கழுத்தை நெறிக்க, அவனை பரிதவிப்புடன் ஏறிட்டாள் பெண்…

                        அவள் பார்வையில் சற்றே இறங்கியவன் “நீ என்னோட மனைவி தானே.. இத்தனை நாள் எப்படியோ, ஆனா இன்னிக்கு நானே உன்னை தேடி வந்திருக்கேன்.. என்னோட வாழறதுல என்ன பிரச்சனை உனக்கு… என் அப்பா, அம்மாவை நினைச்சு பயப்படறியா…” என்று அவன் நிறுத்த

                        உன் உயிரை நினைத்து அச்சப்படுகிறேன் என்றா சொல்ல முடியும் அவனிடத்தில்… கண்களை இறுக மூடி தன்னை நிலைப்படுத்தியவள் “என்னால உங்க குடும்பத்தை ஒருநாளும் என் குடும்பமா ஏற்க முடியாது.. நிச்சயமா ஒரு துளி எனக்கு யார் மேலயும் கோபம் இல்ல.. ஆனா, அவங்களோட ஒரு இயல்பான உறவும் என்னால ஏற்படுத்திக்க முடியாது… இது எல்லாம் காலத்துக்கும் சரிப்பட்டு வராது..”

                          “ஒன்னும் பிரச்சனை இல்லை.. நானே இப்போ அவங்களோட இல்ல, உனக்கு பிடிக்கல ன்னா நாம லண்டன் போயிடுவோம்.. இப்போ என்னோட பிசினஸ் கூட அங்கேதான்… நாம அங்கேயே செட்டில் ஆகிடுவோம்…” என்று இலகுவாக அவன் வழி சொல்ல, அயர்ந்து தான் போனாள் பெண்..

                             அவனின் சில குணங்கள் அவனறியாமலே வெளிப்பட, அவனை ரசிக்க தொடங்கிய மனதை தலையில் தட்டி அடக்கியவள், பதிலேதும் சொல்லாமல் ஒரு வேற்று பார்வை பார்த்து வைத்தாள் அவனை.

                                இன்பன் “என்ன.. பேசு…” என்று எதிர்பார்ப்பாக அவளை பார்க்க

                             “என்னால எங்கேயும் வர முடியாது… நீங்களும் இங்கே இருந்து கிளம்பிடுங்க… என்னால இனி ஒருமுறை எதையும் தாங்க முடியாது..” என்று அவள் கலங்க

                              “சோ..  இன்னும் ஏதோ விஷயம் இருக்கு.. நீயே சொல்லு..” என்று அவன் சிபியின் முகத்தை பார்க்க,

                              “என்ன.. என்ன விஷயம்.. எதுவுமே இல்லை… எனக்கு உங்க குடும்பத்தோட உறவே வேண்டாம் ன்னு நான் நினைக்கிறது மட்டும் தான் காரணம்..” என்று முடிவாக கூறியவள் தொடர்ந்து “நீங்க நினைக்கிற மாதிரி நீங்க காதலிச்சு எல்லாம் என்னை கல்யாணம் செய்யல.. என் அம்மாவோட கடைசி நிமிஷங்கள்ல தான் இந்த செயினை என் கழுத்துல போட்டிங்க… அதுக்குமேல எதுவுமே இல்ல… எனக்காக நீங்க கவலைப்பட வேண்டாம்..” என்றும் சேர்த்து சொல்ல, இன்பனுக்கு தான் கோபம் தலைக்கேறியது…

                             தான் இங்கே எதற்காக வந்தோம்?? என்ன செய்து கொண்டிருக்கிறோம்??? என்று நினைத்தவனுக்கு அலுப்பாக இருந்தது.. அவளிடம் அவன் வாழ்வை பற்றி தெரிந்து கொள்ள வந்தவன் அவள் சொல்ல முடியாது என்று மறுத்த பின்பும், தன்னோட வாழ சொல்லி கெஞ்சி கொண்டு நிற்கிறோம் என்ற நினைப்பே கசப்பாக இருந்தது.

                            ஆனால் கண்முன் அவள் கழுத்தில் ஆடி கொண்டிருந்த அந்த சங்கிலியும், ஜெகன் தூக்கி சென்றிருந்த மகனும் நினைவு வர இவளை விடுவதில்லை என்று முடிவெடுத்துக் கொண்டான் அவன்..

                               இப்படி பொறுமையாக அவளிடம் பேசிக் கொண்டு இருப்பதும் பிடிக்காமல் போக, “நான் எப்படி உன்னை கல்யாணம் பண்ணி இருந்தாலும் எனக்கு கவலை இல்ல.. எனக்கு என் மனைவியும், மகனும் வேணும்… இனி நீ என்ன காரணம் சொன்னாலும், உன்னை தனியா எல்லாம் விடமாட்டேன்.. புரியுதா?? இனி எப்பவும் நீயும், இனியனும் என்கூடத்தான்… தயாராகிக்கோ….” என்று கட்டளையாக அவன் மொழிய

                              “என்னால இந்த காதல் இல்லாத கண்களை சந்திக்க முடியல இனியன்… உங்களோட இந்த அந்நிய பார்வையை நிச்சயமா என்னால தாங்கிக்க முடியல…. ” என்று கண்ணீர் குரலில் அவள் சொல்லிவிட்டாள்.

                              ஆனால், இன்னும் ஏதோ என்று இன்னமும் மனம் உரைக்க, “என்னோட காதலை நீ ஏன் வெளிக்கொண்டு வரக்கூடாது சிற்பிகா… நீ என்னோட காதலி தானே.. மூணு வருஷம் ஆனா, எல்லாம் மறந்திடுமா என்ன… காதலில்லாம இனியன் வர வாய்ப்பே இல்ல… ” என்னை எனக்கு தெரியும் என்ற அழுத்தத்துடன் வந்தது அவன் வார்த்தைகள்..

                         அவள் வாயைக் கூட மூடாமல் அவனை பார்த்திருக்க, “எனக்கு இனியன் வேணும்.. நீயும் வேணும்… சோ, நீ என்னோட காதலை எனக்கு புரிய வை… எனக்கும் கனவுல மட்டுமே காதலிச்சு, கடுப்பா இருக்கு.. நீதான் நிஜத்துலயே கூட இருக்கியே… எனக்கு கனவு வராம பார்த்துக்கோ..” என்றவனின் வார்த்தைகளில் விக்கித்து நின்றாள் அவள்…

Advertisement