Advertisement

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 11

                              சிபியின் வீட்டில் இருந்த ஒற்றை பாயில் படுத்திருந்தான் இன்பன், படுத்திருந்தான் என்பதைவிட படுக்க வைக்கப்பட்டு இருந்தான் என்பது பொருத்தமாக இருக்கும். ஆம்… லாரன்சும் ஜெகனும் சேர்ந்து தான் அவனை அங்கே கிடத்தி இருந்தனர்..

                            சிபியிடம் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் அவன் மொத்தமாக தன்னிலை இழந்திருக்க, மருத்துவர்கள் சொல்லி இருந்த அத்தனை அறிவுரைகளும் காற்றில் பறந்திருந்தது. அவன் உணர்வுகள் அவனை மூழ்கடிக்க, அவள் இடையை கட்டிக் கொண்டு முகம் புதைத்திருத்தவன், அப்படியே தன்னுணர்வை இழந்து மயங்கி இருந்தான்.

                             சிபியை அணைத்த வாக்கிலயே அவன் சரிய, சிபியும் அவனோடு சேர்ந்து சரிய தொடங்கினாள். சிபிக்கு கண்முன் நடப்பவை அனைத்தும் கனவாக இருக்குமோ என்ற எண்ணம் இன்னமும் விடவே இல்லை.. தான் அவனோடு கீழே விழப்போவதை உணர்ந்தவள் தன்னை நிலைப்படுத்தி கொள்ள முடியாமல் தடுமாற, அந்த நேரம் தான் ஜெகனும், லாரன்சும் உள்ளே வந்தனர்.

                            இதற்குள் சிபி கீழே காலை மடக்கி அமர்ந்த நிலையில் விழுந்திருக்க, அவளின் மேல் இன்பன். அந்த ஆறடி ஆண் மகனை சட்டென தாங்கி பிடிக்க முடியாமல் தடுமாறினாள் அவள். லாரன்ஸ் வேகமாக வந்தவன் இன்பனை தோளை பிடித்து தூக்கி தன் மீது சாய்த்துக் கொண்டான். ஜெகன் சிபி எழுவதற்காக கையை நீட்ட, உணரவே இல்லை அவள்.. பார்வை மொத்தமும் இன்பனின் மீது தான்..

                           லாரன்ஸ் “ரொம்ப எமோஷனல் ஆகிட்டா மயங்கிடுவான் சிஸ்டர்.. பயப்பட தேவை இல்ல..” என்று தன்மையாக கூறி இருந்தான். ஆனால் அவள் அதை உணரும் நிலையில் இருக்க வேண்டும் அல்லவா… அவள் கண்களில் துளிர்த்திருந்த நீரோடு வெறித்திருந்த பார்வையை மாற்றாமல் இருக்க, ஜெகன் அவள் அருகில் மண்டியிட்டவன் “சிபி… இன்பாடா…” என்று அவள் கையை பிடிக்க,

                      “ஜெகா.. ஜெகா இவரு.. இவரு..” என்று தடுமாறியவள் அதற்கு மேல் முடியாமல், கண்ணீர் விட, “உன் இன்பனே தான்…சிபி… உன்கிட்ட வந்துட்டான் பாரு..” என்று சந்தோஷத்தில் ஆர்பரித்தான் ஜெகன்..

                      ஆனால் சிபிக்கு அப்படி இல்லையே… அவனின் பேச்சும், பார்வையும் அவனை உணர்த்தவே இல்லையே.. கடந்து போன மணித்துளிகள் அவர்கள் காதலை உயிர்பிக்கவே இல்லையே…  கண்களில் கண்ணீரோடு அவனை ஏறிட்டவள் “என்ன ஆச்சு ஜெகா.. இவர் எப்படி இங்கே..” என்று  வேதனை மிகுந்த குரலில் கேட்டவள் “என்ன ஆச்சு இவருக்கு..” என்று தேம்ப

                      “ஒன்னும் இல்ல சிபி.. இன்பா நல்லா இருக்கான். சாதாரண மயக்கம் தான்..” என்று எடுத்து கூறியவன் அந்த வீட்டின் ஒரு மூலையில் இருந்த பாயை எடுத்து விரிக்க, இன்பனை அதில் கிடத்தி இருந்தனர் இருவரும். ஜெகன் அவனின் மயக்கத்தை பற்றி லாரன்ஸிடம் கேட்க, சற்று நேரத்தில் அவனே எழுந்து கொள்வான்.. இது கிட்டதட்ட உறக்கநிலை தான் என்று கூறினான் அவன்..

                       ஜெகன் அவனே அந்த வீட்டின் கிட்சனில் இருந்தா பாலை காய்ச்சி டீ போட்டுக் கொண்டுவர, சிபி இன்பனை பார்த்தபடி தான் அமர்ந்திருந்தாள் இன்னமும்..அறையில் உறங்கி கொண்டிருந்த இனியனும் எழுந்துவிட, அன்னையை காணாமல் அழுகையுடன் வெளியே வந்தான் அவன். ஜெகன் விரைந்து அவனை கைகளில் தூக்கி கொள்ள, ம்ஹும்.. சிபியிடம் கையை நீட்டிக் கொண்டு உச்ச ஸ்தாயில் கத்தல் தான் வந்தது..

                     சிபி மகனின் அழுகுரலில் முழுதாக வெளியில் வந்தவள் மகனை கையில் வாங்கி கொள்ள, இன்னமும் அவனுக்கு பாலை கூட காய்ச்சவில்லை என்பது அப்போது தான் நினைவுக்கு வந்தது.. அவனை கையில் வைத்துக் கொண்டே அவள் சமையலறைக்குள் நுழைய, ‘நான் பால் எடுத்துட்டு வரேன்.. நீ அவனை பாரு..” என்று சமையல் அறைக்குள் சென்றான் ஜெகன்..

                    அவள் இந்த வீட்டுக்கு குடி வந்த நாள் முதலாக வாசலோடு நின்று பேசிவிட்டு செல்பவன் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்து கூட கிடையாது… இனியனை கூட வெளியே நின்று தான் அழைப்பான்.. அப்படி இருக்க இன்று ஒரே நாளில் மொத்தமும் மாறிப்போக, சமையல் அறையில் பாலை காய்ச்சிக் கொண்டிருந்தான் அவன்.

                        சிபி இனியனோடு வெளியே வர, “இனியாம்மா அழக்கூடாதுடா.. அம்மாவை பாரு… என் சமத்துக் கண்ணா இல்ல.. அழக்கூடாது அம்மும்மா..” என்று  அவனை அவள் கொஞ்ச, அன்னையின் கவனம் தன்மீது திரும்பியதில் சற்றே அழுகை குறைந்தது.. அவள் அவனை கையிலேயே வைத்துக் கொண்டு அந்த இடத்தை சுற்றிவர, லாரன்ஸ் என்ன செய்வது என்று புரியாமல் இன்பனின் அருகில் அமர்ந்திருந்தான்..

                         ஜெகன் பாலை கொண்டு வந்து தரவும், மகனுக்கு புகட்டியவள் அவனை தூக்கி கொண்டு உள்ளே வர, இதற்குள் ஜெகனிடம் தாவி இருந்தான் இனியன்.. அன்னை கண் எதிரில் இருக்க, அதுவே போதுமானதாக இருந்தது அவனுக்கு… அவன் ஒருவழியாக அமைதியாகி விட, சிபியின் மனம் மீண்டும் சத்தமிட தொடங்கி இருந்தது..

                        அவள் மனதில் ஆயிரம் ஆயிரம் கேள்விகள் ஓடிக் கொண்டிருக்க, பதில் சொல்ல வேண்டியவன் அமைதியாக படுத்து இருந்தான்.. இவர்கள் இருவரிடமும் என்ன கேட்பது, என்ன சொல்வது என்று கூட தெரியவில்லை அவளுக்கு.. தடுமாறியவளாக அவள் நிற்க “ஏன் இப்டி இருக்கீங்க சிஸ்.. கொஞ்சம் சில் ஆகுங்க.. இன்பா இப்போ நார்மல் தான்…” என்று தானாகவே கூறினான் லாரன்ஸ்..

                      சிபி வந்ததிலிருந்து இப்போதுதான் அவனை முழுதாக கவனித்தாள். “நீங்க..” என்று அவள் கேள்வியாக இழுக்க

                       “இவனோட பிரெண்ட்.. கடைசி மூணு வருஷமா, உங்களுக்கு என்னை தெரியாது..” என்று புன்னகையுடன் தான் சொன்னான்..

                        “என்னாச்சு இவருக்கு…” என்று பரிதவிப்புடன் அவள் கேட்க

                       “அம்னீசியா… கிட்டத்தட்ட அவன் வாழ்க்கையோட கடைசி அஞ்சு வருஷம் மொத்தமா மறந்துடுச்சு.. அந்த அஞ்சு வருஷத்துல நடந்த எதுவுமே ஞாபகம் இல்ல அவனுக்கு…” என்று நிதானமாக அவளை நிலைகுலைய செய்தான் அவன்..

                        அவளின் வலது கை தானாகவே நெஞ்சை பிடித்துக் கொள்ள, வாய் “கடவுளே..” என்று முணுமுணுத்தது…

                      ஏனோ அவளின் வேதனை திருப்தியாக இருந்தது லாரன்ஸ்க்கு..  இன்பன் இனி அவன் தனிமையை உணரவே மாட்டான் என்ற எண்ணம் மெல்ல  அவனுள் ஸ்திரம் பெற்றது. அவள் கண்களில் தெரிந்த அந்த தவிப்பும், வேதனையும் தன் நண்பனுக்கானது என்பதில் துளி அளவும் சந்தேகமே இல்லை அவனுக்கு.. இன்பன் வாழ்வை இனி அவள் பார்த்துக் கொள்வாள் என்ற நினைப்பே அவனுக்கு நிம்மதியாக இருந்தது.

                      அந்த நிம்மதியுடனே அவன் அறிந்த வரை இன்பனின் வாழ்வில் நடந்தவைகளை முழுமையாக அவளிடம் விவரித்தான் அவன்.. அவன் கனவு முதல் கனவுப்பெண் வரை, அவன் லண்டன் வாசம் தொடங்கி இப்போது அவன் வால்பாறை வந்தது முடிய அத்தனையும் அவன் சொல்லி முடிக்க, அமைதியாக கண்களை மூடிக் கொண்டு அமர்ந்துவிட்டாள் அவள்..

                       “ஏன் எங்களுக்கு இத்தனை வேதனை இறைவா.. இன்னும் என்ன செய்ய நினைக்கிறாய்..??” என்று கேட்டுக் கொண்டிருக்க, மூடிய விழிகளின் வழியே மெல்லிய கோடாக கண்ணீர் இறங்கி கொண்டிருந்தது.. அடுத்து தான் என்ன செய்ய வேண்டும் என்பதும் புரியவே இல்லை.. இப்படியே இவனோடு சென்றுவிட வேண்டுமா??? முடியுமா என்னால்??? எங்களை வாழ விடுவார்களா ?? என்று ஏதேதோ எண்ணங்கள்…

                        முதலில் இவர் ஏற்றுக் கொள்வாரா??? இனியனின் காதல் இல்லாத அந்த வேற்று பார்வையை தன்னால் தாங்கி கொள்ள முடியுமா??? அவனின் சிற்பிகா என்ற அழுத்தமான அழைப்பை ஏற்க முடியுமா/??? என்று கேள்விகளின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்க, சரியாக ஒருமணிநேரம் கழித்து தூக்கத்தில் இருந்து எழுபவனை போல் எழுந்து அமர்ந்தான் இன்பன்.

                        அவனுக்கு எதிரில் லாரன்ஸ் அமர்ந்திருக்க, சற்று தள்ளி ஜெகனோடு இனியன் விளையாடிக் கொண்டிருந்தான். அவன் கையில் சில விளையாட்டு பொருட்கள்… பார்வை அந்த அறையை சுற்றி வர, இன்னும் அவள் கண்ணில் படவே இல்லை.. தான் மயங்கி விழுவதற்கு முன் நடந்து கொண்டவை எல்லாம் நினைவில் இருக்கிறதே…

                        தன்னை குறித்தே லேசான வெட்கமும் எழ, என்ன செய்து வைத்திருக்கிறேன் என்று தான் நினைத்தான்.. ஆனால் சம்மந்தப்பட்டவள் கண்ணிலேயே படாததும் உறுத்த, ஜெகனை கேள்வியாக பார்த்தான் அவன். ஜெகன் இவன் பார்வையை உணர்ந்தாலும் கண்டு கொள்ளாமல் இருக்க, “ஜெகா..” என்று தானாகவே இன்பன் அழைக்க

                         “மனுஷனாடா நீ… ஒரு பேச்சுக்காவது எங்களை எழுப்பி சொல்லிட்டு வந்திருக்கணும் இல்ல.. எங்களை விடு.. அவளுக்கு எப்படி இருக்கும்ன்னு யோசிச்சியா… கொஞ்சம் பொறுமையா இதை ஹாண்டில் பண்ண கூடாதா இன்பா..” என்று அவன் கடிய

                          “மூணு வருஷமா பொறுமையா தான் இருந்து இருக்கேன் ஜெகா.. பெத்த அம்மாவே என்கிட்டே பொய் சொல்லி ஏமாத்தி இருக்காங்க.. இதுக்கு மேல என்ன நடந்திடும்… ஏற்கனவே பிரிக்க நினைச்சு தான் இத்தனையும் இழுத்து வச்சிருக்காங்க… எப்படியோ விஷயம் தெரிஞ்சு மறுபடியும் யாரும் வந்து நிற்கிறதுக்குள்ள நான் என் வாழ்க்கையை தெரிஞ்சிக்கணும் ன்னு நினைச்சேன்… இதுல எதை நீ தப்பு சொல்லுவ..” என்று அவன் குமுற, அவனின் நியாயம் புரிந்தது ஜெகனுக்கு.

                          அந்த சிறிய அறைக்குள் அமர்ந்து இருந்தவளுக்கும் இன்பனின் குரல் கேட்டுக் கொண்டு தான் இருந்தது.. அவனின் குரலில் இருந்த அத்தனை உணர்வுகளும் அச்சுபிசகாமல் அவளை சென்றடைந்தது என்று கூறலாம். அந்த அளவு அவனை உள்வாங்கி கொண்டிருந்தாள் அவள்.

                          வெளியே இன்பன் “சிற்பிகா எங்கே..” என்று வினவுவதும் கேட்க, தானாக எழுந்து வெளியே செல்லும் எண்ணம் இல்லை.. அப்படியே அமர்ந்து இருந்தாள். அவனை எதிர்கொள்ளும் தைரியம் நிச்சயமாக வரவே இல்லை.

                        ஜெகன் “அவளை கொஞ்சம் யோசிக்க விடு இன்பா… ஏற்கனவே அதிர்ச்சில இருக்கா… அவளுக்கு கொஞ்சம் டைம் கொடு..” என்றவனின் பார்வை அவ்வபோது அந்த ஒற்றை அறையை தொட்டு மீள, இன்பன் புரிந்தவனாக எழுந்து கொண்டான்..

Advertisement