Advertisement

                      ஓம் நமச்சிவாய
அத்தியாயம் 9
“யாரு கைய யார் பிடிக்குறது. அருள் மொழி வர்மன் பொண்டாட்டிடா!!” என்று அவனை பார்க்க, அந்த பார்வையிலேயே குருவின் கைகள் தன்னால் விட்டது காயத்ரியின் கைகளை. 
வீட்டிற்கு வந்தவர்களை மரியாதைக்காக தான் காயத்ரி அழைத்தாள். ராஜமாணிக்கமோ “காயத்ரியை இழுத்து வர சொல்லி குருவிடம் சொல்ல” தனக்கு பரிசம் இட்டவள் என்ற நினைவில், குரு அவளின் கைகளை பிடிக்க அடித்து விட்டாள் காயத்ரி. 
அவள் குருவை அடித்ததை விட அவள் சொன்ன “அருளின் மனைவி!!” என்பதே அங்கு இருந்த அனைவரும் அதிர்ச்சி ஆகி நிற்க காரணம்.
குமரன் அதிர்ந்து போய் அருளை பார்க்க, அவன் முகத்தில் தெரிந்த இறுக்கம் அவரால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை.
மற்றவர்கள் நடப்பதை வேடிக்கை பார்க்க, ராஜமாணிக்கம் தான் முன்னால் வந்தார் இப்போது. “ஊருக்கு தெரியாம கல்யாணம் மட்டும் தான் பண்ணிக்கிட்டையா?? இல்லை….” என்று முகம் சுளிக்கும் வார்த்தைகளை பேச ஆரம்பிக்க….
குமரனுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. இதுவரை ராஜமாணிக்கம் இப்படி பேசி அவர் பார்த்ததே இல்லை. செல்வி, குமரனிடம் “ராஜமாணிக்கத்தை பிடிக்கவில்லை, அவர் குணம் சரியில்லை, அவரை விட்டு தள்ளி நில்லுங்க” என்று சொன்ன போது  எல்லாம் சண்டை போட்டவர், இன்று அவரின் உண்மை முகம் தெரிந்து அருவறுத்து தான் போனார். 
இப்போது குமரன் தான் அவருக்கு பதில் கொடுக்க வேண்டும். அவர் தானே அக்காவிற்காக மகளை பணயம் வைத்தது, என நினைத்து அனைவரும் அவரையே பார்த்து இருந்தனர்.
“மாமா” என குமரன் வந்தார். “யார் கிட்ட என்ன பேசுறோம்னு பாத்து பேசுங்க!!” 
“என்னடா பாத்து பேசுறது?? நீ ஊரை கூட்டி பரிசம் போடுவ, உம்மக வேற ஒருத்தன் கூட குடும்பம் நடத்துவாளா?? நல்லா இருக்குடா உங்க லட்ச்சணம்??”
“எங்க லட்ச்சணத்துக்கு என்ன குறை ராஜமாணிக்கம்??” என்ற கம்பீர குரல் உள்ளிருந்து வர, அனைவரும் திரும்பி பார்த்தனர். 
பேச்சி தான் கரிகாலனுடன் வந்து நின்றார். காயத்ரி அவரை முழித்து பார்க்க, அவர் அவளை கண்டு கொண்டதாக தெரியவில்லை.
‘இந்த அம்மாச்சி என்ன இவ்வளவு நல்லா நடந்து வருது?? இன்னிக்கு காலை கூட கண் திறக்காம தான இருந்தது, நிஜமாவே நாம டாக்டருக்கு தான் படிச்சு இருக்கோமா??’ என்ற சந்தேகம் வந்து விட்டது அவளுக்கு.
அவள் விழிப்பதை பார்த்த கரிகாலனுக்கு தான் பாவமாய் இருந்தது அவளை பார்த்து. பேச்சியை விட்டு அவளிடம் சென்றவன் “குட்டி நீ டாக்டருக்கு படிச்சது உண்மை தான். ஆனா உன்னைய இப்படி சுத்தல்ல விட்டது உன் வீட்டுக்காரன்!! எதுனாலும் அவன் கிட்ட கேளு?? எங்களுக்கு ஒன்னும் தெரியாது ஸ்கிரிப்ட், அவனுது டையலாக் அவனுது, நாங்க வெறும் ஆக்டிங்க் தான். போலீஸ்காரன் அடிம்மா தாங்காது. ஏதோ பாத்து செய்!!” என்று தள்ளி நின்று கொண்டான். 
இப்போது பார்வை பேச்சியை விட்டு அருளிடம் தாவ, அவன் முகத்தில் தெரிந்த உக்கிரத்தில், கரிகாலன் சொன்னது மறந்து அடுத்து அங்கு என்ன நடக்குமோ?? என்று இருந்தது.
“சொல்லு ராஜமாணிக்கம்…  அவரு தான் அக்கா பாசத்துல பச்சை மண்ணுக்கு சம்பந்தம் பேசுனா, உனக்கு எங்க போச்சு புத்தி?? இது தப்பு தாய் மாமன் முறைக்கு அவங்க வந்து இருக்கும் போது நீ இப்படி செய்யுறது சரியில்லைன்னு சொல்லி இருந்தா?? இப்ப நீ பேசுறது நியாம். அப்ப பேசாம அவங்க சொத்து வேணுன்னு தட்டை மாத்தி பரிசம் போட்டுட்டு, இப்ப யார் வீட்டு முன்னால நின்னு, யார் வீட்டு பொண்ண பத்தி பேசிகிட்டு இருக்குற??”
“ஏன் முத்தழகு உனக்கு கூட தெரியலையா?? இல்லை உன் புருசன் பண்ணுற எல்லாத்துக்கும் நீ உடந்தையா??” என்று பேச்சி கேட்க அவர் எதுவும் பேசாமல் தலை குனிந்து நின்றார்
“எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க. என் பையன் யாருக்கும் தெரியாம என் பேத்திய கட்டிகலை. எல்லார் சம்மத்தோட  ஆசிர்வாததோட தான் இந்த கல்யாணம் நடந்துச்சி” 
“இதுக்கு மேல எங்க வீட்டு விசயத்தையோ, பொண்ணையோ விமர்சனம் பண்ணுறது உங்க யாருக்கும் நல்லது இல்லை. வந்துட்டீங்க இன்னிக்கு என் மகன், பேத்தி கல்யாணத்துக்கு விருந்து வைச்சு இருக்கோம். இருந்து சாப்பிட்டு போங்க” என்றதும்
ராஜமாணிக்கத்துக்கு முகம் கருக்க என்ன பேச என தெரியவில்லை. ஊர் மொத்தமும் அவர்களின் ஆட்கள். அதிலும் அருள் இருக்கும் பதவியோ வாய்விட்டு சொல்லும் முன்னமே எட்டி நிற்க வேண்டும் தவறு செய்தவர்கள்.
அப்படியும் அவர் துணிந்து வந்தது குமரன் இருக்கும் தைரியத்தில் தான். இங்கு நிலைமை தலைகீழ். காயத்ரிக்கும் அருளுக்கும்  திருமணம் முடிந்து விட்டது என தெரிந்ததும் இத்தனை நாள் மனத்தில் இருந்த வக்கிரம் வார்த்தையில் வெளிவந்து விட்டது.
இப்போது எதுவும் பேச முடியாத நிலை. மீறி பேசினால் அருள் எடுக்கும் நடவடிக்கை வேறு விதமாய் இருக்கும் என்பதால்,  அனைவரையும் ஒரு முறை பார்த்தவர் குருவை இழுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.
முத்தழகி குமரனிடம் வந்தவர் “என்னைய மன்னிச்சுடு குமரா. நான் என் பொறந்த வீடு வேணுன்னு தான் காயத்ரிய கேட்டேன். ஆனா உங்க மாமா மனசுல இப்படி ஒரு வக்கிரம் இருக்குன்னு எனக்கு தெரிஞ்சதுல இருந்து நானும் கல்யாணத்தை பத்தி பேசாம தான் இருந்தேன்”
“இருந்தாலும் ஒரு அல்ப ஆசை. அவரு திருந்தி இருந்தா, என் தம்பி மகளே என் வீட்டுக்கு வர மாட்டாளான்னு. அது தான் அவரு கல்யாணத்தை பேச போலன்னு சொன்னதும், நானும் எதபத்தியும் யோசிக்காம வந்துட்டேன்” என மன்னிப்பு கேட்டார்
“விடுக்கா… நீ என்ன தெரிஞ்சா பண்ணுன!! அவர பத்தி எனக்கு தான் தெரியலை. ஆனா!! செல்விக்கு தெரிஞ்சு இருக்கு. அது தான் அவ அந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கவே இல்லை” என்றார் ஆதங்கமாக
குமரன் பேசவும் தலை குனிந்து நின்றவர் காயத்ரியை அழைத்தார். நான் உன்னைய மருமகளா பாக்கதான் ஆசை பட்டேன், நிச்சயம் கெடுக்க இல்லடா தங்கம். நான் தெரியாம தப்பு பண்ணி இருந்தா இந்த அத்தைய மன்னிச்சுடு” என்றவர், அவர் கழுத்தில் இருந்த செயினை கலட்டி அவளுக்கு போட, காயத்ரி மறுத்து விட்டாள்.
“இல்லை வேணாம் அத்த” என்றிட அவர் அருளை பார்த்தார்.  காயத்ரியின் அருகில் வந்தவன் “அத்தாச்சி எங்களுக்கு உங்க ஆசிர்வாதம் தான் வேணும்” என்று அவளுடன் காலில் விழ  “நூறு வருசம் குழந்தை குட்டியோட நல்லா இருப்பீங்க” என மனப்பூர்வமாக ஆசிர்வாதம் செய்ய, காரில் அமர்ந்து பார்த்து இருந்த ராஜமாணிக்கத்துக்கு தான் உள்ளே பற்றி எரிந்தது.
ஒரு தலை அசைப்புடன் முத்தழகி விடை பெற, கார்கள் அனைத்தும் வந்த வழியே திரும்பியது. 
அவர்கள் சென்றதும்  அனைவரும் வீட்டிற்குள் போக திரும்ப, மற்றெரு கார் வந்து நின்றது. பார்த்ததும் தெரிந்து விட்டது அது சோமசுந்தரத்தின் கார் என்று.
மனைவியுடன் அவர் வந்து நிற்க “வாங்க மாமா” என்று அருள் அழைக்க, மற்றவர்களும் அவனை தொடர்ந்து கூப்பிட, அனைவரும் உள்ளே சென்றனர்.
குமரன் மட்டும் வராமல் வெளியே நின்று இருக்க, அருள் அவரை சென்று அழைத்தான் “வாங்க மாமா உள்ள”
குமரன் அவனை பார்க்க, தலை குனிந்தவன் “எதுனாலும் வீட்டுக்கு உள்ள போயி பேசலாம் மாமா வாங்க” என அழைக்க, பின்னாலேயே வந்த பேச்சியும், சோமசுந்தரமும் “உள்ள வாங்க அப்பு, வா குமரா நடந்ததை சொல்லுறோம்” என்று அவரை உள்ளே அழைத்து சென்றனர்.
கூடத்தில் அனைவரும் அமர்ந்து இருக்க, சோமசுந்தரத்தின் மனைவி  வசந்தி  அனைவருக்கும் குடிக்க தண்ணீர்  தந்தார். குமரன் அதை தொடக்கூட இல்லை.
“இப்ப என்ன ஆச்சு குமரா… எதுக்கு இப்படி இருக்குற?? தண்ணிய குடி” சோமசுந்தரம்.
“இன்னும் என்ன ஆகனும் ண்ணா?? பெத்த பொண்ணுக்கு கல்யாணம் நடந்தது எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கு, வீட்டுலயே இருந்து இருக்கேன் ஆனா, எனக்கு தெரியலை பாருங்க!!” என்னும் போதே அவரின் குரல் கமறியது.
“அது அப்படி இல்லை குமரா. எங்களுக்கும் நடந்த விசயத்துல பிடித்தம் இல்லை தான். ஆனா அந்த சூழ்நிலையில செல்விய அமைதி படுத்த முடியலை!! எப்படியாவது அவளை சரி கட்டி வீட்டுல விட்டாலும், அடுத்து அவ என்ன செய்வான்னு தெரியாத நிலை??”
“ரெண்டு பேர் வாழ்க்கைய கேள்வி குறி ஆக்கி என்ன பண்ண சொல்லு?? அது தான் இப்படி ஒரு முடிவ எடுக்க வேண்டியாதா போச்சு எங்களுக்கு. உன்கிட்ட சொல்ல சரியான சந்தர்ப்பம்  வாய்கவே இல்லை. ஏதோ ஒரு தடங்கல் மாமா போனது, அப்பறம் செல்வி  போனதுன்னு உன்கிட்ட சொல்லவே முடியலை எங்களால”
“இப்பவும்  அருள் பிடிவாதமா காயத்ரிய கூப்பிட்டு வரலையின்னா…. இன்னும் எத்தனை நாள் போயிருக்கும் அப்படின்னு தெரியாது. இதுல யாரையும் தப்பு சொல்ல முடியாது குமரா”
“இந்த கல்யாணத்துக்கு காரணமா இருந்த செல்வி இப்ப இல்லை. எதுக்காக அவ அவ்வளவு பிடிவாதமா இருந்து இதை நடத்துனா?? அப்படின்னு இப்ப வரைக்கும் எனக்கு புரியலை குமரா. இப்ப சொல்லு இதுல அருள் தப்போ இல்லை அக்கா மாமா தப்பு ஏதாவது இருக்கா??” என்று முடிவை குமரனிடம் விட்டார்  சோமசுந்தரம்.
 
அமைதியாக இருந்த குமரன் முகத்தில் இருந்து எதையும் கிரகிக்க முடியவில்லை. ஆனால் அவரின் மனதில் ஓடியது இது தான் ‘அவ அவளோட தம்பிய யாருக்கும் விட்டு கொடுக்க முடியாம தான், உயிர பணயம் வச்சு தன்னோட வச்சுகிட்டா’ என்று. ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்க குமரன் தான் அழைத்தார் சோமசுந்தரத்தின் மனைவியை.
“அத்தாச்சி போய் மஞ்சள் அரிசி எடுத்துட்டு வாங்க” என்றதும், அனைவருக்கும் மகிழ்ச்சியே. அவர் அட்சதையை எடுத்து வர அருளும், காயத்ரியும் தம்பதியாய் காலில், விழ அட்சதை தூவி ஆசிர்வாதம் செய்தார் குமரன்.
அதன் பிறகு யாரிடமும் பேச்சு இல்லை. ஏனோ அந்த அமைதி அனைவருக்கும் தேவைபட்டது. ஊர் விருந்துக்கு சொல்லி இருக்க அனைவரும் வர ஆரம்பித்தனர். 
விருந்து தடபுடலாக நடக்க வந்த சொந்தங்கள் அனைத்தும் கேட்டது ஒன்று தான். “ஏன் அருளு எங்களுக்கு சொல்லாம கல்யாணம் கட்டிக்கிட்ட?? செலவு ஜாஸ்தி ஆகிடும்ன்னு பயந்தா?? இல்லை உன் பொண்டாட்டிய யாராவது கொத்திக்கிட்டு போயிடுவாங்கனு நினச்சா!!” என்று அவனை இடித்து பேச.
“அது என் அக்கா மகளை நினைச்சு இல்லை அத்தை. என் தம்பிய யாரும் கொத்திக்கிட்டு போயிட கூடாதுன்னு தான் எங்க அக்க யாருக்கும் தெரியாம முடிச்சு இருக்கும். என்ன அருளு நான் சொன்னது சரிதான??!!” என்று வந்து நின்றார் சண்முகம்.
“அண்ணா!!” என்று அருள் அழைத்தவன். “எப்ப வந்தீங்க?? ஃபோன் பண்ணலை. வசுவும் ராகுலும் எங்க!!” என்றவன் அவரை கட்டிக்கொண்டான்.
“ம்ம்… வந்து இருக்காங்க” சண்முகம் சொல்ல, அனைவரையும் அழைத்துக்கொண்டு உள்ளே போனான் அருள்.
அவன் சண்முகம். அருளின் சிற்றப்பா சிவநாதனின் மகன். ரங்கன் அவரை தன் மகனாகவே வளர்த்தார்.  திருமணம் முடிந்து வெளிநாடு போனவர் இப்போது தான் வருகிறார்.
வந்தவர்களிடம் அனைவரும் நலம் விசாரிக்க, பேச்சி மட்டும் எதுவும் பேசாமல் இருந்தார். 
“என்ன பெரியம்மா, எதுவும் பேச மாட்டீங்களா, எம்மேல கோவமா ??” என்று பேச்சியின் காலடியில் அமர்ந்தான் சண்முகம்.
“உன்னைய கோவிச்சுகிட்டு நான் என்னடா பண்ண போறேன்?? இத்தனை நாள் சென்டு நீ ஊருக்கு வந்ததே பெரிய விசயம்” என்றதும்  அவர் முகம் சுருங்கி விட்டது. பேச்சி அதை கவனித்தவர் “டேய்… போ, போய் குளிச்சுட்டு வா.” வசுமதியை பார்த்தவர் “போம்மா நீயும் போ,  பேரனையும் அழைச்சுகிட்டு போ” என்றவர் காயத்ரியை அவர்களுடன் அனுப்பினார்.
வெகு நாட்களுக்கு பிறகான சொந்தங்களின் சத்தம் அந்த வீட்டில். ரங்கன் இருக்கும் போது தேர், திருவிழா என்று ஏதாவது காரணம் சொல்லி உறவுகளின் படையெடுப்பு இருக்கும் அந்த வீட்டில்.
அவர் போனதும் அனைத்தும் குறைந்து போனது. அதிலும் செல்வி போன பிறகு அனைத்தையும்  நிறுத்தியே விட்டார் பேச்சி. இன்று திடீர் என்று அனைத்து சொந்தங்களும் வர அவருக்கு என்ன பேச!! என தெரியவில்லை. 
அதிலும் காயத்ரியும் அருளுடன் வர, அதை குமரன் ஏற்றுக்கொண்டது, இன்னும் இன்னும் அவருக்கு சந்தோசம் தர, பேச்சின்றி ரங்கனின் படத்தையே பார்த்து இருந்தார் பேச்சி.
“என்ன அத்தாச்சி, அண்ணே படத்த பாத்து  என்ன யோசனை??” என்று வந்தார் வசந்தி.
“எனக்கு என்ன யோசனை புள்ள. எல்லாம் இவங்கள பத்தி தான். இதுக வாழுற வாழ்க்கைய பாக்காம போய் சேந்துட்டாங்க அப்பாவும், பொண்ணும். இதுக்கு தான் அந்த பாவிமக கல்யாணத்தை நடத்த அத்தனை வீம்பு பண்ணுனாலான்னு தெரியல!!” என்று பெரு மூச்சினை விட்டார் பேச்சி.
“நீங்க ஒன்னும் வெசன படாதீங்க… அப்பாவும், பொண்ணும் நம்ப வீட்டுல தான் திரும்ப வந்து பொறப்பாங்க பாருங்க” என்று வசந்தி சொன்னதும், “அப்படியே உன் வாயில சக்கரைய அள்ளி போட்டுக்க புள்ள, வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்” என்றார் பேச்சி சிரித்தவாரே.
“ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சா, நேரம் போறது தெரியாதா என்ன??” என்றபடி வந்தார் சோமசுந்தரம்.
“ஏண்டா?? நீயும் தான் இப்படி உக்காரு.  நீயும் வேலைன்னு போயிடுற, புள்ளைங்களும் போயிடுதுங்க. அங்க இவ மட்டும் தான வெறுக்குனு இருக்கா. இங்க வந்தா தான் கொஞ்சம் பேச இருக்கா. அது பொறுக்கலையா உனக்கு??”
“அத வீட்டுக்கு வந்தவங்க போனதுக்கு பொறவு பேசுங்க.  இப்ப நீ போயி விருந்த கவனி” என்று வசந்தியை பந்தி நடக்கும் இடத்திற்கு அனுப்பினார் சோமசுந்தரம்.
“என்ன சுந்தரம் இது!!  ரொம்ப கலைச்சு போய் தெரியுறப்பா. வேலை பாத்தது போதும். இப்படி ஊரோட வந்துடுய்யா!!” என்றதும் பேச்சியின் பரிவில் உருகிதான் போனார் சுந்தரம்.
அவரும் அருணாச்சலத்தை போல தான். ஆனால்… சிவநாதன் மனைவியின் தம்பி. உறவுகள் இல்லாத பேச்சிக்கு அவர் அருணாச்சலமாகவே மாறிப்போனார்.
சிவநாதனை விட ரங்கனிடமும் பேச்சியிடமும் தான் பற்று அதிகம் சுந்தரத்திற்கு. தன் அக்காள், மாமன் இறந்து விட்ட பின்பும் அவரின் உறவு தொடர காரணமே பேச்சி ரங்கனின் அன்புதான்.
சோமசுந்தரம் சிந்தனையில் இருக்க “என்னப்பா யோசனையா இருக்க??” கேட்டார் பேச்சி.
“எல்லாம் இந்த சண்முகத்தை பத்தி தான்க்கா…”
“எனக்கும் அதே யேசனை தான் சுந்தரம். இத்தன நாள் சென்டு வந்து இருக்குற புள்ளைய நிம்மதிய இருக்க வைக்கனும். ஆனா… இந்த அய்யாவு செஞ்ச காரியத்தால என்ன பண்ணன்னு எனக்கும் புரியலை!?”
“நம்ம புள்ள வாழ்கைய நினைச்சு அன்னிக்கு விட்டது தப்பா போச்சுக்கா. அன்னிக்கே ஒரு வழி செஞ்சு இருக்கனும். என்ன பண்ண!! மாமா என்னைய தடுக்காம இருந்து இருந்த, இந்நேரம் கதைய முடிச்சு இருப்பேன்…” 
“ஐயா, கோப படாத. அன்னிக்கு நீயும், உங்க மாமாவும் இல்லையின்னா இன்னிக்கு நம்ம வீட்டு வாரிச இழந்துட்டுல நின்னு இருந்திருப்போம்” 
“எனக்கு இப்ப இவன நினைச்சு தான் கவலையா இருக்கு… அய்யாவுவ பாத்த என்ன நடக்கும் அப்படின்னு தெரியலையே!!” என்று வருத்தப்பட்டார் பேச்சி.
“அப்படி ஒன்னும் நடக்காதுக்கா. அவன் இன்னும் சின்ன பையன் இல்லை. புரிஞ்சி நடந்துப்பான்” என்று சோமசுந்தரம் முடிக்கவும், “பெரியம்மா” என்று தங்கமும், அய்யாவுவும் வரவும் சரியாக இருந்தது.
“வா தங்கம், வாங்க அப்பு” என்று பேச்சி இருவரையும் வரவேற்க, சோமசுந்தரமும் தலை அசைத்து அழைத்தார்.
“மாமா எப்படி இருக்கீங்க?? அத்தை, பசங்க எல்லாம் எங்க?” என்று கேட்டாலும், அவளின் கண்கள் மட்டும் யாரையோ தேடியது!!
“என்னடி?? அவன் வாரதே அவன் வந்து நின்ன பின்ன தான் எனக்கே தெரிஞ்சது. நீ என்ன வந்ததும் தேடுற??” கேட்டார் பேச்சி.
“அது தான் என் அண்ணன் வாசமும், தம்பி வாசமும் ஊர் முழுசும் மணத்து கிடக்குதே தனியா நான் எதுக்கு தேடனும்??!!” என்றாள் கழுத்தை வெட்டிய படி தங்கம்.
பேச்சி, “போ  மாடில தான் இருக்கான். போய் பாரு” என்றிட “பெரியம்மா நான் பேசுனா அண்ணா என் கிட்ட பேசுமா??” கேட்டாள் தங்கம்.
“நீ என்னடி தப்பு பண்ணனுன??  தப்பு பண்ணுனவங்களே தைரியமா இருக்கும் போது, உனக்கு எதுக்கு பயம்” என அய்யாவுவை பார்த்து சொன்னவர், “போ போய் பேசு, பேசலையா சட்டைய புடிச்சு கேளு” என்று சொல்ல, “வந்ததும் திரும்ப சண்டை போடனுமா, போ பெரியம்மா உனக்கு வேற வேலை இல்லை” என்றவள் மீண்டும் தயங்கி நிற்க, “இப்ப என்னடி!!” என்றார் பேச்சி.
“வசுமதியும் வந்து இருக்கா??” தங்கம்
“ஏண்டி, வந்தவன் பொண்டாட்டிய விட்டுட்டா வந்து இருப்பான்?? போ ரெண்டு பேரும் பையனோட தான் வந்து இருக்காங்க” என்றதும் குடுகுடுவென  மாடிக்கு ஓடினார் தங்கம்…………
 

Advertisement