Advertisement

அருள் இங்கு வந்தால் அவனின் குரல் தவிர்த்து வீட்டில் வேறு எந்த சத்தமும் இருக்காது. குமரன் இருந்தால் மட்டுமே செல்வியிடம் மெதுவாக பேசுவான். இன்று மற்றவர்கள் பேச அவன் அமைதியாக தான் இருந்தான்.
குமரன் அவனை பார்த்தவர், சமையல் அறைக்கு சென்று தட்டில் அவனுக்கு சாப்பிட எடுத்தவர், அவன் அருகில் வந்து அமர்ந்தார்.  தன் வாய் அருகில் சாதம் வரவும் தான் கவனித்தான் அருள் அவரை.
“நீ பசியா இருந்த அவளுக்கு தாங்காதுடா!! கொஞ்சமாவது சாப்பிடு” என அவரே அவனுக்கு ஊட்டியும் விட அமைதியாக சாப்பிட்டான் அருள். சாப்பாட்டை முடித்தவன் குமரன் மடியில் தலை வைத்து படுக்க, அவன் தலையை கோதிவிட்டார் குமரன்.
ஏனோ குமரனுக்கு அவனை அந்த நிலையில் பார்க்க முடியவில்லை!! தான் தாயை இழந்து நின்ற போது இருந்த நிலை தான் இப்போது அருளை பார்க்கும் போது தோன்றியது.
செல்விக்காக இருவரும் சண்டை போட்டாலும், ஒரு நாளும் மரியாதை குறைவாக பேசியதும் இல்லை நடந்து கொண்டதும் இல்லை அருள். செல்வியிடம்  கூட அவரை பற்றி பேசியதாக தெரியவில்லை. 
எங்கு சென்றாலும் செல்விக்கு எப்படி செய்வானோ, அதை போலவே குமரனையும் பார்த்து கொள்ளவான். என்ன, பேச்சு வார்த்தை மட்டும் தான் இருக்காது. குமரனுக்கு அதுவும் ஒரு ஓரத்தில் இனிக்கதான் செய்யும். அப்படி இருப்பவன் இன்று செல்வியை பற்றி யாரிடமும் பேசாது இறுகி போய் அமர்ந்து இருப்பது குமரனை ஏதோ செய்ய தானாகவே வந்துவிட்டார் அருளிடம்.
சிறிது நேரத்தில் அருளிடம் எந்த சலனமும் இல்லாமல் போகவே குனிந்து பார்க்க தூங்கி போய் இருந்தான் அருள்.  திரும்பி பார்க்க பேச்சியும் கரிகாலனும் அவர்களை பார்த்து இருந்தனர்.
அவர்களுக்கே அது புதிதுதான். இதுவரை குமரன் அருளிடம் பேசி யாரும் பார்த்து இல்லை. குமரனிடம்  கோப பார்வை என்றால் அதற்கு பதிலாக நக்கலாக பார்ப்பான் அருள். பார்வை பறிமாற்றம் தவிர பேச்சு வார்த்தை இருந்தது இல்லை.
கரிகாலன் அவனுக்கு தலையணை எடுத்து வர அவன் பக்கத்திலேயே படுத்துக்கொண்டார் குமரன். அவரின் மறுபுறம் கரிகாலன் தூங்க இருவரையும் அணைத்தவாரு உறங்கி போனார் குமரன். 
அதை பார்த்து இருந்த பேச்சிக்கு தான் அழுகை பொங்கியது. ‘இப்படி இவங்கள சேக்கத்தான் நீ போயிட்டியா??’ என்று மனதோடு மகளிடம் பேசியவரே அமர்ந்துவிட்டார்.
காலையில் விளிப்பு வர முதலில் தான் எங்கு இருக்கிறோம் என்ற நினைவே இல்லை அருளுக்கு. பக்கத்தில் பார்க்க குமரனும் கரிகாலனும் நல்ல உறக்கத்தில் இருந்தனர். எட்டி பார்க்க பேச்சியுடன் காயத்ரி உறங்கி இருந்தாள்.
குமரனை சிறிது நேரம் பார்த்தவன் எழுந்து பின் பக்கம் போக அந்த சத்தத்தில் வீடு முழிக்க ஆரம்பித்து. கரிகாலன் அருளிடம் வந்தவன் “உனக்கு மாமாவ அவ்வளவு பிடிக்குமாண்ணா!!?”
“நா என்னிக்குடா அவரை பிடிக்கலைன்னு சொல்லி இருக்கேன்?” 
“அப்ப இத்தனை நாள் அவரை பாத்த பேசமாட்ட… அவர் இருக்குற இடத்துல கூட இருக்கமாட்டியே அதுக்கு என்ன அர்த்தம்?” கேட்டான் புரியாமல்.
“அதுக்கு அர்த்தம் பிடிக்கலை இல்ல மரியாதைன்னு வச்சுக்கலாம். அப்பா இருக்குற இடத்தில நாம என்னிக்காவது இருந்து இருக்கோமா?” என கேட்க, இல்லை என கரிகாலன் தலை ஆடியது. “அக்கா நமக்கு அம்மா போலன்னா இவரு நமக்கு அப்பா தான?  அப்பா நமக்கு தேவையான போது மட்டும் தான நமக்கு துணையா வந்து நிப்பாரு”
“இவரும் அப்படிதான். அது அக்காவே சொல்லி இருந்தாலும் அவரு நினைச்சதால தான வந்து நின்னாரு. இல்லைனா அக்கா சொன்னாலும் வந்து இருக்க மாட்டாரு இல்லையா? அத நான் எப்பவோ தெரிஞ்சு கிட்டேன். எனக்கு அக்கா வேற மாமா வேற இல்லை ரெண்டு பேரும் ஒன்னுதான்.” 
“நான் இன்னிக்கே திரும்ப டியூட்டியில ஜாயின் ஆகனும். நீ தான் இங்க இருந்து எல்லாத்தையும் பாத்துக்கனும். அவர ரொம்ப அழைய விடாத.. வெளி வேலைக்கு ஆள் வைச்சுடு. மத்ததை நீ பாத்துக்க, கணக்க மட்டும் அவரை பாக்க சொல்லு. எதுனாலும் என்கிட்ட சொல்லு நான் பாத்துக்குறேன்” என்றவன் ஊருக்கு போக தயாரானான்.
அவன் போகும் வரையிலுமே காயத்ரி தூக்கத்தில் இருந்து எழ வில்லை. குமரனிடம் வந்தவன் எதுவும் பேசாமல் தலையை மட்டும் அசைத்து சென்றான்.
காயத்ரி எழுந்து வரும் போது அனைவரும் ஹாலில் இருக்க அருளை மட்டும் காணவில்லை. பார்வையால் அவள் தேடுவதை உணர்ந்த பேச்சி, அவளிடம் அவன் ஊருக்கு போனதை சொல்ல, வந்த அழுகையை கட்டுப்படுத்த முடியமல் கண்ணீர் வழிய, பேச்சி அவள் கை பிடித்து இழுத்து போனார் அறைக்குள்.
“என்ன ஆச்சும்மா… எதுக்கு இந்த அழுகை?” என அவளை மடியில் கிடத்தி தலை கோதினார் பேச்சி. காயத்ரி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க
“யார் மேல தப்புன்னு எனக்கு தெரியாது? எதுவா இருந்தாலும் நீ கொஞ்சம் அனுசரிச்சி போ காயத்ரி” என்றதும் மறந்து இருந்த கோபம் தலை தூக்கியது. செல்வியின் மரணத்திற்கு தான் மட்டுமே காரணம் என்று நினைத்து இருந்தவள், அருள் வந்து தன்னிடம் பேசுவான் என்று எதிர்பார்த்து இருக்க, அவன் இவளை திரும்பியும் பார்க்க வில்லை. அது அவளின் பிடிவாதத்தை இன்னும் அதிகரிக்க, இன்று அவன் தன்னிடம் சொல்லாமல் சென்றதும்  சேர்ந்து விட்டது.
“எதுக்கு நான் அனுசரிக்கனும்!! வேண்டாம்… எனக்கு யாரும் வேணாம். நான் தனியாவே இருந்துக்குறேன்” என்றவள் பேச்சியை அறையைவிட்டு வெளியே அனுப்பி கதைவினை அடைத்துவிட்டாள், உடன் அவள் மனதையும்.
காயத்ரியின்  மனம்  சிறிது சமன் பட்டதும் பேசலாம் என பேச்சி நினைக்க, அதற்கு வாய்பே தரவில்லை காயத்ரி. மேற் படிப்புக்காக  சென்னை சென்றவள் இரண்டு வாரத்திற்கு முன் தான் ஊருக்கு வந்தாள். 
இடையில் கரிகாலனோ, பேச்சியோ யார் சென்றாலும் பார்க்க மறுத்துவிட்டவள், அவர்களுடன் பேசுவதையும் நிறுத்திவிட்டாள். இது எதுவும் குமரனுக்கும் தெரியாமல் பார்த்துக்கொண்டாள். அவரிடமே அவள் பேசினால் தானே??
காயத்ரி வந்ததும் முத்தழகி அவளின் கல்யாண பேச்சை ஆரம்பிக்க, குமரன் தான்  காயத்ரியிடம் பேசினார்.
“அம்மாடி இத்தனை நாள் படிப்புன்னு இருந்துட்ட இப்ப அத்தை வந்து கேக்குறா நான் என்ன பதில் சொல்ல?” 
காயத்ரி குமரனை பார்த்தவள் “என்னைய கேட்டா பரிச தட்டை மாத்துனீங்க?? உங்க இஷ்டத்துக்கு எல்லாம் செஞ்சுட்டு, இப்ப என் கிட்ட கேட்டா, நான் என்ன சொல்ல. எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லப்பா.. எனக்கு கல்யாணமே வேண்டாம்” என்று அழ ஆரம்பிக்க, அதிர்ந்து போனார் குமரன்.
இதுவரை அவள் இப்படி பேசியது இல்லை குமரனிடம். செல்வி இருந்தவரை நன்கு கலகலப்பாக இருந்தவள் தான், அவர் போன பிறகு அமைதியாகி விட்டாள் எனலாம். இல்லை அவள் யாரிடம் பேச விரும்பவில்லை எனலாம். இப்போது நினைத்தவர் தான் எங்கு அவளை தவற விட்டோம் என புரியாமல் தவித்தார்.
அவள் அழுவதை சகிக்காதவர் “இல்லடாம்மா உனக்கு விருப்பம் இல்லையின்னா நான் இந்த பேச்சை எடுக்கலை. விடு… உனக்கு எப்ப தோனுதோ சொல்லு அப்ப கல்யாணத்தை வச்சுக்கலாம்” என்றவரை கோபமாக பார்த்தவள். 
“நான் கல்யாணமே வேண்டான்னு சொல்லுறேன். நீங்க திரும்ப அதையே சொன்ன என்ன அர்த்தம்ப்பா?? இப்ப என்ன, நான் இருந்தா தான கல்யாணம் செய்வீங்க” என்றவள் அப்படியே கிளம்பிவிட்டாள் வீட்டில் இருந்து. 
கையில் எதுவும் இல்லை. நேராக வந்தாள் அவளின் பேராசிரியர் சாருமதியின் வீட்டுக்கு.
அவரிடம் பிரச்சனைகளை பற்றி கூறாமல், தான் இருக்க, தன்னை பற்றி தெரியாத, அவர்களுக்கு நம்பிக்கையான இடத்திற்கு அனுப்பி வைக்க கேட்டாள் காயத்ரி. அவர்களின் குடும்பம் பற்றி நன்கு தெரிந்ததால் அவளை சிறிது நேரம் காத்திருக்க சொன்னவர் அழைத்தது அருளுக்கு தான்.
அவள் கல்லூரியில் சேர்ந்ததில் இருந்து அவளுக்கு பாதுகாப்பாக இருக்கும் படி அருள், சாருமதியை தான் கேட்டுக்கொண்டான்.  அவன் தான் புனோயில் இருக்கும் அருணாச்சலத்திடம் அவளை அனுப்பச்சொன்னது. இது காயத்ரிக்கு தெரிய வேண்டாம் என்று சொன்னதால், அவரும் அவளிடம் அருணாச்சலத்தை தன் நண்பர் என்றே அவளை அங்கு அனுப்பி வைத்தார்.
தன் நினைவில் இருந்தவளை கலைத்தது அந்த ரிங்க்டோன்.  சுற்றி பார்த்தவள் மேஜை மேல் இருந்த பெட்டியை எடுத்து பிரிக்க உள்ளே சத்தம் எழுப்பிய படி இருந்தது அந்த மொபைல்.
அதை ஆன் செய்ய “என்ன பொண்டாட்டி கனவுல இருந்தையா?” என்றான் அருள். 
“ம்ம ஆமா… உங்கள கட்டுனதுல அது மட்டும் தான் குறை!!”
“என்னடி, நீ பேசுறத பாத்தா நான் நிறைய குறை வச்சு இருப்பேன் போல. அதை எல்லாம் இன்னிக்கு சரி பண்ணிடுறேன். இப்ப நீ போய் சாப்புடு நான் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்” என அந்த கொஞ்சலில் அழுத்தம் குடுத்து ஃபோனை கட் செய்தான்.
ஃபோன் கட் ஆன பிறகு தான் இருவரின் பேச்சின் அர்த்தம் இவளுக்கு புரிய. “இவன” என தலையில் அடித்து கொண்டவள், முழு சுவரையும் அலங்கரித்து இருந்த அவளின் திருமண ஓவியத்தை அலை பேசியில் பதிவு செய்துக்கொண்டாள்.
பூரணியுடன் பேசியவள் ரேஸ்மாவிடமும் பேச, அவளுக்கு அங்கு ஓரே அழுகை தானும் ஊருக்கு வருவதாக சொல்லி. அருள் வந்ததும் பேசி அவளை அழைத்து வருவதாக உறுதி தந்த பின்பே அவளின் அழுகை மட்டுப்பட்டது. 
பேசி முடித்தவள் சாப்பிட அமர  வெளியில் கார்களின் சத்தம் கேட்டது. வெளியே சென்று பார்க்க காரில் இருந்து இறங்கி நின்று இருந்தனர் முத்தழகி, குருபரண், ராஜமாணிக்கம் பின்னால் அவர்கள் ஆட்கள் சிலருடன்.
வீட்டிற்கு வந்தவர்களை வாங்க மாமா, அத்தை என காயத்ரி அழைக்கவும்  அருளின் கார் உள்ளே வரவும் சரியாக இருந்தது. 
காரில் இருந்து இறங்கிய குமரனும், அருளும் பார்த்தது காயத்ரி குருவை அடித்ததை தான்……. 
 
 

Advertisement