மறு நாள் விடிந்ததும் வீரைய்யனை ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி விட்டு, கட்டம் கட்ட எந்த இடம் தேவை என்பதை எல்லாம் பார்த்து முடிவு செய்தவர்கள் அவர்களின் ஆசைக்காக இன்னும் இரண்டு நாட்கள் அங்கு தங்கி இருந்தனர்.
மலையை விட்டு இறங்கியவர்கள் வீடு வர, கேசரி மணம் வாசலுக்கே வந்தது. அருளும் காயத்ரியும் ஒருவர் முகம் ஒருவர் பார்க்க “என்ன… நெய் ஏலக்கா வாசனை வாசலுக்கே வருது!!” என்ற படி உள்ளே சென்றார் சண்முகம்.
கூடத்தில் அருணாச்சலம் இருக்க “வாங்க மாமா” என்றபடி சென்றான் சண்முகம்
“சண்முகம் எப்படி இருக்க?? பாத்து எவ்வளவு நாள் ஆச்சு” என்று அருணாச்சலம் அவனிடம் பேச, பின்னாலேயே வந்தனர் வசுமதியும் ராகுலும்.
வசுமதிக்கு அவரை யார் என்று தெரியவில்லை. சம்பிரதாயமாக “வாங்க” என்றவள் ராகுலுடன் உள்ளே போக சட்டென நின்றாள். வசுமதி திரும்பி பார்க்க அருணாச்சலம் அவளையே பார்த்து இருந்தார்.
அருள் வந்தவன் “வாங்க மாமா” என்றிட “வாங்கப்பா” என்று வந்தாள் காயத்ரி. “பூரணிம்மா எங்க??” என்று சமையல் அறைக்கு போக “அப்பா இங்க கண் முன்னால இருந்தாலும், இந்த பொண்ணுங்களுக்கு அம்மா எப்பவும் ஸ்பெசல் தான்” என்று காயத்ரியை பார்க்க.,
“அப்பா..” என்று அவர் அருகில் அமர்ந்தாள் காயத்ரி. “எப்படி நீங்க அப்படி சொல்லலாம்?? எனக்கு ரெண்டு பேரும் ஸ்பெசல் தான் உங்கள பாத்துட்டேன் அம்மா இங்க இல்லை அது தான் கேட்டேன் அது தப்பா??”
சமையல் அறையை எட்டி பார்த்தவள் “அப்பா வாசனை நல்லா இருக்கு நான் போய் பாக்கட்டா” என்று பாவாமாய் அவரை பார்க்க அருணாச்சலம் சிரித்தவர் “போ உனக்காக தான் சமையல் நடக்குது” என்றவுடன் சிட்டாய் பறந்துவிட்டாள்.
“பூரணிம்மா….” என்று பின்னிருந்து காயத்ரி கட்டி பிடிக்க, “வந்து பத்து நாள் ஆக போகுது இப்ப தான் பூரணிம்மா நியாபகம் வருதா!!” பூரணி கேட்க,
“நிச்சயமா இல்லை!!! இப்பவும் கேசரி வாசம் வந்ததால தான் நியாபகம் வந்தது இல்லையினா கொஞ்சம் சந்தேகம் தான்??” என்றவளை வாயில் அடித்தவர், “இந்தா சூடா சாப்பிடு” என்றவர் அவளுக்கு தட்டில் கேசரியை தந்தார்.
மற்றவர்களுக்கும் தட்டில் வைத்து கொண்டவள் “ஆமா க்யூட்டி எப்படி இருக்கா?? நீங்க இங்க வர்றதுக்கு அவ எப்படி ஒத்துகிட்டா?? அவர் நீங்க வர்றதா ஏன் சொல்லை??” என பூரணியை பேசவிடாமல் கேள்வியாய் கேட்க ஆரம்பித்தவளை….
“முதல்ல சாப்பிடு அப்பறம் பேசலாம்” என்று முடித்தார் பூரணி.
காயத்ரி வந்ததில் இருந்து அருணாச்சலத்தையும் பூரணியை மட்டும் பார்த்து இருத்தால் மற்ற எதையும் கவனிக்கவில்லை.
ராகுலுடன் அறைக்கு சென்ற வசுமதிக்கு என்ன செய்ய என தெரியவில்லை?? சண்முகம் “மாமா” என்றதில் அவர் அருணாச்சலமாக இருக்குமோ?? என்று மனது படபடத்து. ரேஸ்மாவின் நினைவு வர, அமைதியாக சிறிது நேரம் இருந்தவளுக்கு வெளியில் என்ன நடக்கின்றது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று இருந்தது.
அதிலும்… சண்முகத்தின் நிலை என்ன?? என்பதை தெரிந்து கொண்டே ஆக வேண்டும். அருளிடம் சண்முகத்தை விட்டு கொடுப்பதாக கூறினாலும் அவன் மனதில் தனக்கான இடம் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தலை வலி குடுக்க தண்ணீர் எடுப்பதை போல் வந்தாள் வசுமதி.
“கோயிலுக்கு போயிருக்காங்க” என்று பூரணி முடிக்கவும், “சித்தா” என்று ரேஸ்மா உள்ளே வரவும், வசுமதி அறையில் இருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது.
அருள், சண்முகம், ரேஸ்மா மூன்று பேரும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்க… இதில் அதிர்ந்து நின்றது சண்முகம் தான். ஜோதி அவரின் எதிரில் வந்து நின்றது போல் இருந்தது அவருக்கு.
அறையில் இருந்து வந்த வசுமதி “ரேஸ்மா” என்றிட, ரேஸ்மாவே “அப்பா” என்றிட சண்முகத்துக்கு மயக்கம் வரும் போல் இருந்தது. இதில் இவர்களை பார்த்து அதிகம் அதிர்ந்தது காயத்ரி தான்.
சண்முகம் பேச்சியின் முகத்தை பார்க்க “பட்டு அப்பாகிட்ட போ” என்றார் பேச்சி. அதில் மொத்தமும் உடைய அப்படியே அமர்ந்து விட்டார் சண்முகம்.
கண்கள் கலங்க அனைவரின் உருவமும் கலங்களாக தான் தெரிந்தது சண்முகத்துக்கு. கண்கள் இமைத்து நீரை தள்ளினாலும் ஏனோ பார்வை மறைத்தது.
ரேஸ்மா மெதுவாக சண்முகத்தின் அருகில் வந்தவள் “அப்பா” என்று அவன் தோள் தொட, அப்படியே அவள் கால்களை பிடித்துக்கொண்டான்.
வார்த்தைகள் தொண்டைகுழியில் சிக்கி சதிராட வார்த்தைகள் ஓசைகளாக மட்டுமே வந்து சண்முகத்திற்கு.
அனைவரும் சில நிமிடங்கள் அப்படியே நிற்க, சண்முகம் மகளை தொட்டு தடவி தான் உணர்வது நிஜமா என்று மூளையில் பதிய வைக்க நினைத்தாலும் அவனால் அது முடியவில்லை.
அவனின் அணைப்பு இறுக ஆரம்பிக்க ரேஸ்மா மூச்சுவிட திணற, அருள் தான் வந்தான். “கரிகால தண்ணீ எடுத்துட்டு வா” என்று. ரேஷ்மாவை சண்முகத்திடம் இருந்து பிரிக்க, அவனால் பிரிக்க முடியவில்லை. “சித்தா வலிக்குது” என்று ரேஸ்மா கத்த.,
“அண்ணா விடு அவளை” என்று சண்முகத்தை பிடித்து அருள் இழுக்க, கரிகாலன் அவன் முகத்தில் தண்ணீரை ஊற்றினான். தண்ணீர் பட்டதும் தான் சண்முகத்தின் நிலை திரும்பியது.
“அருள் என் பொண்ணுடா!! பெரியம்மா என் பொண்ணு!!” என்றவர் எழுந்து வேகமாக வாசலுக்கு ஓட, இதை எதிர் பார்த்து இருந்த அருள் அவரை இழுத்து அமர வைத்தான்.
“டேய் ஜோதி எங்க??” என்று கேட்க “நீ வா, நான் சொல்லுறேன்” என அருள் சண்முகத்தை அமர வைத்தவன், “இந்த தண்ணீ குடி” என்று நீரை குடிக்க வைத்தான்.
“காயத்ரி” என்று அவன் திரும்பி பார்க்க நடப்பது என்ன என புரியாமல் ஸ்தம்பித்து போய் நின்று இருந்தாள் காயத்ரி.
“அத்தை” என்று பூரணியை அருள் அழைத்தவன் “காயத்ரியை உள்ள கூட்டிக்கிட்டு போங்க” என்றான். அதற்குள் வசுமதி ரேஷ்மாவின் நனைந்த உடையை மாற்றி அழைத்து வந்தாள்.
சற்று தெளிந்து இருந்த சண்முகத்திடம் இப்போது ரேஸ்மா போக அவளை முகம் முழுதும் முத்தம் கொடுத்தவர் “அம்மா எங்கம்மா!!” என்று கேட்டான்.
தகப்பனின் தெடுகையில் அப்படி ஒரு இதம் அந்த சிட்டுக்கு. அமைதியாக அவன் மடியில் அமர்ந்து கொண்டாள் ரேஸ்மா.
சண்முகத்தின் கேள்வியில் ரேஸ்மா அருள் மற்றும் பேச்சியின் முகம் பார்க்க “அவ இல்லை’ சண்முகம் என்றார் பேச்சி.
சண்முகம் புரியாமல் பேச்சி முகம் பார்க்க, “ நீங்க கோயிலுக்கு போன அன்னிக்கு ஜோதி வழி தெரியாம ஊருக்கு வெளிய போயிருக்கு. திரும்பி வர்றப்ப எது மோதிச்சுன்னு தெரியல?? புள்ள அடிபட்டு கிடந்து இருக்கு”
‘யாரோ பாத்து ஆஸ்பத்திரியில சேத்து இருக்காங்க. பேச்சு புரியாததால அதுக்கு நம்மல பத்தி சொல்ல தெரியலை. அப்படியே நினைவு தப்பி போச்சாம். ஆஸ்பத்திரியில இருந்த யாருக்கும் தெரியலை. நம்ம சோமசுந்தரம் கண்ணுல தான் பட்டு இருக்கு கடைசியா”
“புள்ளைய பெத்து குடுத்துட்டு போயிட்டா!! அவ்வளவு தான் தம்பி நடந்தது. இதுல யார் மேல தப்பு சொல்ல எல்லாம் விதி” என்று முடிக்க, சண்முகம், காயத்ரி, ரேஸ்மா தவிர்த்து அனைவரும் அதிர்ந்து போய் நின்று இருந்தனர்.
அருள் பேச்சியின் பேச்சை மட்டும் கேட்டு இருந்தவன் எதுவும் பேசவில்லை. அவனுக்கு ரேஸ்மாவை இப்போது இங்கு வரவைத்து இருப்பதே ஆச்சர்யமாக தான் இருந்தது. சண்முகத்திடம் விபரம் சொல்லி பிறகு தான் அவளை அழைத்து வர நினைத்து இருந்தான்.
மூவருக்கும் விபரங்கள் ஏதும் தெரியாது… ஆனால் மற்றவர்களுக்கு தெரியுமே. அதிலும் வசுமதி தான் உள்ளுக்குள்ளேயே வெம்பி போனால் தன் உடன் பிறந்தவன் செய்கைக்காக.
‘இந்த சூழ்நிலையிலும் அய்யாவுவின் செய்கையை மறைத்து இவர்களால் பேச முடிந்தது என்று.’ தங்கம் ஒரு காரணம் என்று இருந்தாலும் அவர்கள் அய்யாவுவை மறைக்க முழு காரணம் வசுமதி மட்டுமே.
சண்முகத்திற்கு உண்மை தெரிந்தால் நிச்சயம் வசுமதியுடன் வாழ மாட்டான் யார் சொன்னாலும். அவளுக்கே தெரியாமல் அவளால் தான் ஜோதியின் உயிர் பிரிந்தது அது உண்மை தானே!!
சண்முகம் பேச்சியிடம் பேசியதில் வசுமதியின் கவனம் அவர்கள் புறம் திரும்பியது.
“அப்பறம் ஏன் பெரியம்மா என்கிட்ட சொல்லை?? அவ கூட வாழத்தான் எனக்கு குடுத்து வைக்கல… அவளேட காரியத்தையாவது பண்ணி இருப்பேன்ல… என் பொண்ணை என்கூடவே வச்சு வளத்து இருப்பேன்ல… எதுக்கு பெரியம்மா இப்படி செஞ்சீங்க?? என்னையும் இவளையும பிரிச்சு வைச்சு!!” என்று கேட்க
“அதுவும் உனக்காக தான் சண்முகம். என்ன வயசுடா ஆச்சு உனக்கு?? தனி மரமா இருக்க.. அவ கூட நிறைவா வாழ்ந்து இருந்தா கூட சொல்லி இருப்பேன். அதுவும் இல்லை. ஓரே பிடியா நீ மறு கல்யாணம் வேண்டான்னு நிக்கும் போது என்ன செய்ய நானு??”
“ரேஸ்மாவ பாத்துக்க நான் இருக்கேன். உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேணாமா?? அவ உயிர காப்பாத்த முடிஞ்சு இருந்த எப்படியும் உன் கிட்ட சொல்லி இருந்து இருப்பேன்”
“இல்லாதப்ப என்ன செய்ய?? நீ புள்ளைய வைச்சுகிட்டு எப்படி இருப்ப?? இவளுக்கும் உனக்கும் ஒரு துணை இருக்கனும் அப்படின்னு தோனுச்சு, இவ உன் கிட்ட இருந்தா நிச்சயம் நீ வேற வாழ்க்கைய நினைக்க மாட்ட. அது தான் உங்க பெரியப்பா பேச்சையும் மீறி நான் இதை உன் கிட்ட மறைச்சேன். உனக்கு உன் புள்ளை முக்கியம்னா எனக்கு என் பையன் முக்கியம்”
“நீ வெளி நாட்டுல இருந்தா இவள நான் என் கூட தான வைச்சு இருப்பேன். இப்பவும் அப்படி தான். இதோ அவளுக்குன்னு இந்த குடும்பமே இருக்கு. வேற என்ன வேணும். இப்ப உன் பொண்ண உன்கிட்ட கொடுத்துட்டேன். இனி நீ சொல்லுறதுக்கு நான் ஒத்துக்குறேன்” என்றவர் அருணாச்சலத்தையும் பூரணியையும் ஒரு பார்வை பார்த்து சென்றார்.
ரேஸ்மா சண்முகத்தின் மடியில் இருக்க உள்ளிருந்து வந்தான் ராகுல். சண்முகத்தின் மடியில் இருந்த ரேஸ்மாவை பார்த்தவன் “யாருப்பா இது??” என்றான்.
அதன் பிறகே சண்முகத்திற்கு வசுமதியின் நினைவு வர அவசரமாக அவளை பார்த்தான். வசு “ராகுல் இங்க வா” என்றாள்.
ராகுல் புருவம் நெரித்தவன் “என்னம்மா??” என்று வசுவின் அருகில் போக, “இது தான் ராகுலோட அக்கா ரேஸ்மா. ரெம்ப நாளா ராகுல் கேட்டையில எதுக்கு எனக்கு அக்காவே இல்லையின்னா தங்கையோ இல்லை?? அப்படின்னு. அதுக்கு தான் உனக்கு பிடிச்ச படி உங்க ஜோதிம்மா அக்காவை அனுப்பி வைச்சு இருக்காங்க” என்று அவன் முகம் பார்த்தாள்.
“அப்ப பெரியம்மா தான் அக்காவை அனுப்பி இருக்காங்களா!!” என்றவன் ஓடி சென்று கட்டிக்கொண்டான் ரேஸ்மாவை. சண்முகத்திற்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.
இதுவரை அவர் வீட்டில் ஜோதியை பற்றி பேசியது இல்லை. ஆனால் ராகுல் சொன்னதும் சண்முகம் வசுமதியை பார்க்க அருள் தான் பதில் தந்தான். “அண்ணா நான் தான் ஜோதி அண்ணி பேர்ல ராகுலுக்கு கிப்ட் அனுப்புவேன். அவனுக்கு நாளைக்கு விசயம் தெரிய வரும் போது அவன் அதை எப்படி எடுத்துக்கனு தெரியாம தவிக்க கூடாது இல்லையா அதுக்கு தான்” என்று
இது வசுமதிக்கே புதிது தான். ஜோதியை பற்றி ராகுலிடம் அருள் பேசும் போது எல்லாம் “நாளை உன் திருமணம் பற்றி ராகுலுக்கு தெரியும் போது கேள்வி வர கூடாது என்று ஜோதி பெயரில் பரிசை அனுப்புவதாக” கூறியதன் அர்த்தம் இப்பொழு தான் புரிந்தது அவளுக்கு.
சண்முகத்துக்கு தான் போதும் போதும் என்று ஆகிவிட்டது. தன்னை சுற்றி நடப்பது என்ன என்று தெரியாமலேயே இத்தனை காலம் வாழ்ந்து இருக்கிறோம் என்று. ரேஸ்மா சண்முகத்தின் முகம் பார்க்க “என்னம்மா” என்றான்.
“அப்பா, தம்பிக்கூட விளையாடவா??” என்று கேட்டதும் “சரி” என்று தலை அசைக்க ராகுலும் ரேஸ்மாவும் விளையாட போக அவர்கள் பின்னாலேயே சென்றனர் சண்முகமும் வசுமதியும்.
அருள், அருணாச்சலம், பூரணி மூவரும் பேச்சியின் அறைக்கு போக அங்கு ரங்கனின் படத்திற்கு முன்னால் அமர்ந்து இருந்தார் பேச்சி. அவரின் முக இறுக்கமே சொன்னது அவரின் மன நிலையை.
“எதுக்குக்கா அப்படி சொன்னீங்க??” அருணாச்சலம்.
பேச்சி அமைதியாக இருக்க “சொல்லுங்க அண்ணி எதுக்கு அய்யாவுவ பத்தி சண்முகத்துகிட்ட மறைச்சீங்க??”
“சொல்லி என்ன செய்ய பூரணி” என்று கேட்க, பதில் இல்லை அவரிடம். அருணாச்சலமும் அருளும் அவர் முகம் பார்த்து இருக்க.,
“சொல்லி இருந்த போய் அவனை வெட்டி இருப்பான். ஒருத்தி தாலி அறுப்பா, ஒருத்தி புருசன் இல்லாம இருப்பா, அந்த புள்ளைங்க நாலும் கொலைகாரன் புள்ளைங்களா தெருவுல நிக்கும்”
“அய்யாவுக்கு தண்டனை அது இல்லை. எதுக்காக ஒரு உசுர எடுத்தானோ அது இல்லையின்னு அவனுக்கு காட்டனும். வசு ரேஸ்மாவ வளக்கனும். அவனுக்கு முன்னாடி அவ வளந்து ஆளாகி நிக்கனும். எந்த ஜாதியும் பணமும் அவனை தூண்டிவிட்டதோ, அதே பணமும் ஜாதியும் அவனை அடிக்கனும் அது தான் அவனுக்கு தண்டனை”
“வசுமதி அதை கண்டிப்பா செய்வா. அது எனக்கு நல்லா தெரியும்” என்று அவர்களின் முகம் பார்த்து” ஜோதி வாழக்கூடதுன்னு தான அவளை கொன்னான். அவன் முன்னாடி ரேஸ்மா வாழ்ந்து காட்டனும். அது தான் அவனுக்கு நாம தர்ற தண்டனை. என் பேத்தி அதை செய்வா. அது தான் உங்க மாமாவேட விருப்பமும்” என்றவர் அமைதியாகி விட்டார்.
அனைவரும் வெளியில் வர பார்த்தது ராகுல் ரேஸ்மாவுடன் விளையாடி படி இருந்த சண்முகத்தை தான். வசு அவர்களை பார்த்து இருந்தாலும் அவளின் முகத்தில் சிந்தனை தான்.
“என்ன வசு??” என்ற படி அவள் அருகில் மற்றவர்கள் அமர, “சித்தி” என்று பூரணியின் கைகளை கண்களில் ஒற்றிக்கொண்டாள் வசுமதி. “ஏய் வசு என்ன பண்ணுற” என்று பூரணி பதற, “நீங்க செஞ்ச இந்த உதவிக்கு இந்த ஜென்மம் மட்டும் இல்லை இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்து நன்றி சொன்னாலும் பத்தாது. எப்படி இந்த கடனை நான் தீக்க போறேன் தெரியல சித்தி” என்றாள்
“என்னம்மா இது?? அக்கா எனக்கு செஞ்சதில ஒரு துளிகூட இது இல்லை” என்றதும், “அது தான் சித்தப்பா நானும் கேக்குறேன். எதுக்கு நீங்க எல்லாம் இதை செய்யனும். ஒருத்தனால எத்தனை பேருக்கு கஷ்டம். அவன் உயிரோட இருக்குறதால தான இத்தனையும்!!” என்றாள் முகம் சிவக்க.