Advertisement

                         ஓம்  நமச்சிவாய 
அத்தியாயம் 14
அய்யாவுவின் மடியில் ராகுல் அமர்ந்து இருக்க “யோவ் பாத்து மெதுவ எடு. பையன் தலையில சின்ன கீறல் விழுந்தா கூட உன் கை உடம்புள்ள இருக்காது… நல்லா வழ வழன்னு இருக்கனும் சொல்லிட்டேன்” என்று மொட்டை போடுபவரை படுத்திக்கொண்டு இருந்தார் அய்யாவு.
அனைவரும் அமைதியாக இருக்க காயத்ரி தான் அவருடன் பேசிக்கொண்டு இருந்தாள்.
“சித்தப்பா சும்மா இருங்க… அவர் எடுத்தாலும் ஒழுங்க எடுப்பாரு இப்ப பாருங்க நீங்க பேசியே அவர் கைய நடுங்க வைச்சிட்டீங்க” என்று. அதன் பிறகு அவரை வாயை திறக்க விட்டால் தானே காயத்ரி. 
பேச்சி வீட்டிலேயே சொல்லி இருந்தார் அனைவரிடமும் யாரும் அவரிடம் வம்பு வளர்க்க கூடாது என்று. அதனால் அய்யாவுவிடம் பேசுவதை தனதாக்கினால் காயத்ரி.  
காது குத்த பேச்சி கம்மலை எடுக்க “இருங்க அத்தை” என்றவர் அவனுக்கு என்று வாங்கிய வைர கம்மலை எடுத்து கொடுத்தார். சண்முகம் பேசும் முன் “சித்தப்பா இது போல தானா நீங்க எனக்கு போட அப்பாகிட்ட சொன்னீங்க!! இப்ப இந்த டிசைன்ன தம்பிக்கு எடுத்துடீங்களா?? நல்லா இருக்கு” என பேசிய படியே அதை அவன் காதுகளில் குத்த  வைக்கவும் செய்தாள்    காயத்ரி.                                 
பொங்கலை காயத்ரியை வைக்க பேச்சி சொல்ல, “பெரியம்மா அவ வைச்சா சாமி நம்ம கால்லா விழுந்து கேக்கும் என்னைய விட்டுங்கடான்னு!! எதுக்கு வீணா சாமிய அழ வைக்கனும்… வசுமதி வைக்கட்டும் காயத்ரி அவ கூட இருக்கட்டும்” என்றார் தங்கம். 
“சித்தி என்ன?? அம்மா வீட்டுக்கு வந்ததும் பேச்சு எல்லாம் பட்டு பட்டுன்னு வருது சித்தப்பா பயம் விட்டு போச்சா!!” என்றாள் காயத்ரி. 
 
“உங்க சித்தப்பாவ சமாளிக்க என் மருமகன் ஒருத்தன் போதும். நீ போடி வேலைய பாத்துக்கிட்டு!!” என்று தங்கம் சொல்ல வசுமதியும் காயத்ரியும் ஆவென பார்த்து இருந்தனர் தங்கத்தை. 
பிறகு அவர் பேசுவதே அபூர்வம். அதுவும், கிண்டல் பேச்சு எல்லாம் வரவே வராது. அப்படி பட்டவர் இன்று பேசுவது அவரின் சந்தோசத்தை காட்ட, இருவரும் சரிதான் என்ற படி பொங்கல் வைக்க சென்று இருந்தனர்.
தங்கம் பேச்சியுடன்  பொங்கலுக்கு தேவையானதை செய்ய செல்ல, அங்கு ராகுலோ அய்யாவுவை கேள்வி மேல் கேள்வி என திணறடித்து கொண்டு இருந்தான். 
“எதுக்கு இந்த ஆட்டை வெட்டுறீங்க??” ராகுல் 
“அது சாமிக்கு நாம நேந்து விட்டது அதனால தான்” 
“அப்ப அதுக்கு வலிக்காதா??” 
“வலிக்காதுப்பா” 
“அப்ப அது வெட்டும் போது கத்த கூடதுல. ஆனா அது கத்து தான?? பின்ன எப்படி நீங்க அதுக்கு வலிக்கலைன்னு சொல்லுறீங்க?? அதோட அப்பா அம்மா கிட்ட இருந்து கூட்டிட்டு வந்துட்டீங்கள, அதோட அப்பா அம்மா தேடாதா??” என்று கேட்க பாவம் அவருக்கு கண்களை கட்டிக்கொண்டு வந்து விட்டது ஆட்டின் அப்பா அம்மாவை எங்கு சென்று தேடுவது என.
“டேய் ஊருகுள்ள ஒத்தை பையன் என்ன எதுத்து பேச பய படுவான். நீ… என்னைய இத்தனை கேள்வி கேக்கிற??” என்று அவனை  தோளில் அமர வைத்தவர்  “இத எல்லா நீ பாக்க வேண்டாம். வா… அப்படி ஊரை சுத்திட்டு வரலாம்” என்றார்.
குல சாமி கோயில் பூஜை முடிந்து, மறுநாள் ஐய்யனார் கோவிலிலும் பூஜை அனைத்தும் முடிந்து பெரியவர்கள் ஊருக்கு திரும்ப, சிறியவர்கள் மலைக்கு சென்றனர்.
ராகுலை ஒட்டிக்கொண்டே அய்யாவு இருக்க சண்முகத்துக்கு தான் கோபம் உச்சியில் இருந்தது.  அருளிடம் தான் பொங்கி கொண்டு இருந்தான். தங்கம் பார்த்தவர் இவர்களுடன்  தான் மலைக்கு சென்றால் அய்யாவும் உடன் வருவார் என்பதால் பேச்சியுடன் வீட்டுக்கு திரும்பி விட்டாள்.
“பூங்கவனம்” ரங்கன் காயத்ரிக்காக கட்டிய சிறு வீடு. அவள் மலைக்கு போக வேண்டும் என்று அடிக்கடி கேட்பதால் அவளுக்காவே மலையில் சிறிய வீட்டை கட்டி இருந்தார் அவர் .
அருள் வந்தது தெரிந்து ஊர் பெரியவர்கள் வந்திருந்தனர். 
வீட்டிற்கு அருகிலேயே அருவியில் இருந்து வரும் தண்ணீர் சிறு ஓடை போல் ஓட, ராகுலுடன் கரிகாலனும் சண்முகமும்  வசுமதியும் குளிக்க சென்றனர். 
“அருள் தம்பி எப்படி இருக்கீங்க?? வந்து எவ்வளவு நாள் ஆச்சு??” என்று அவர்களை நலம் விசாரித்தவர்கள், அவர்கள் இருக்கும் நாள் வரை தங்களின் வீட்டுகளில் தான் விருந்து எனவும் புதுமண தம்பதிகளுக்கு தங்கள் முறை படி சில சடங்குகள் நடத்த விரும்புவதாக சொல்ல அனைத்துக்கும் “சரி” என்றான் அருள். 
ஊர் மக்கள் செல்ல அறைக்கு சென்று பாத்தவன் கண்களில் தெரிந்தது நல்ல உறக்கத்தில் இருந்த காயத்ரி தான்.
“போன பிறவியில கும்பகர்ணன் குடும்பத்துல பொறந்து இருப்பானு நினைக்குறேன் இப்படி தூங்குறா!!” என்றவன் நன்கு போர்த்திவிட்டு சென்றான் ஓடையில் குளிக்க.
ராகுல், சண்முகம் ஓடையில் குளிக்க கரிகாலன் பக்கத்தில் ஓடை மீனை பிடித்து சுட்டு கொண்டு இருந்தான்.  வசுமதி தூரமாக அமர்ந்து அவர்களை பார்த்த படி இருந்தாள்.
“என்ன வசு நீ போகலையா குளிக்க??” என்றபடி வந்து அமர்ந்தான் அருள். 
“இல்லை மாமா… வெயில் தான் சுள்ளுன்னு அடிக்குது. ஆனா…. தண்ணி அப்படியே ஐஸ் போல இருக்குது என்னால முடியாதுப்பா!! வேணாம் சளி பிடிச்சா கஷ்டமா இருக்கும்” 
“அதெல்லம் ஒன்னும் பண்ணாது. இது மூலிகை தண்ணி தான் அப்படியே சளி பிடிச்சாலும் இவங்க வைக்குற ரசத்தை குடிச்சுட்டா போதும் சளி காய்ச்சல் எல்லாம் ஓடி போயிடும் நீ போய் குளி.”
“இல்ல வேண்டாம் காயத்ரி வரட்டும் அப்பறமா குளிக்குறேனே…” என்று அவள் சங்கடம் பட  “சரி அப்பறமா குளிங்க ரெண்டு பேரும்” என்றவன் வசுமதி முகம் பார்க்க “என்ன மாமா” என்றாள்.
“வசு  நீ சந்தோசமா இருக்குறியா?? அண்ணா உன்ன நல்லா பாத்துகுறாரா??”  அருள். 
“என்ன மாமா… திடீர்னு இந்த கேள்வி??  என்னைய பாத்த துக்கமா இருக்குற மாதிரி தெரியுதா??” என்றவள் முகம் இப்போது மாறி போனது.
“நான் சந்தோசமா தான் இருக்குறேன். ஆனா… மாமா தான் மனசுக்குள்ள எதையே வச்சிக்கிட்டு இன்னும் மருகுறாரு… அது என்னன்னு தான் தெரியலை?? இன்னும் ஜோதி அக்காவ நினைச்சு இருக்காறா அப்படின்னு தெரியலை?? ஆனா, அவங்களோட இந்த நிலைமைக்கு அவர் தான் காரணம் அப்படின்னு மட்டும் நல்லா பதிச்சுகிட்டாரு அந்த நினைப்பை மட்டும் என்னால மாத்த முடியல??”
“இங்க வந்துக்கு அப்பறம் தான் அவர் முகத்துல இத்தனை சிரிப்பை பாக்குறேன். இப்ப என் ஆசை எல்லாம் திரும்ப ஊருக்கு போகமா இப்படியே இருந்துடலாம் அப்படின்னு தோனுது. அவரு இப்படியே சந்தோசமா இருப்பாருன்னா…. நான் என்ன வேணுனாலும் செய்யவேன் மாமா” என்ற அவளின் குரலில் அத்தனை தீவிரம்.
அருள் அமைதியாக இருக்க “என்ன மாமா அமைதியாயிட்டீங்க??” 
அருள் “வசு  இப்ப ஜோதி அண்ணி வந்தா என்ன செய்வ??” என்றதும் வசுவின் இதயம் நின்று துடித்தது.  அவன்  முகத்தை பார்த்தாள். 
“என்ன வசு இப்ப தான் சொன்ன எது வேணுனாலும் செய்வேன்னு?? இப்ப பதில் சொல்லாம இருக்குற.” 
“நிச்சயம் அவரை குடுத்துட்டு போயிடுவேன் மாமா… ஜோதி அக்கா தான் அவரு சந்தோசம் அப்படின்னா அதை தடுக்க நான் யார்?? சொல்ல போனா இப்ப ஜோதி அக்கா இடத்துல தான நான் இருக்கேன்!!” 
“அதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லை மாமா. எங்க அண்ணால அவரோட நிம்மதி மொத்தமா போச்சு இப்ப அதை திரும்ப தர எனக்கு ஒரு சந்தர்ப்பம்” என்றவள் அமைதியானால். 
“சந்தர்ப்பம், அது வந்தா!! நீ அதை ஏத்துக்குவிய வசு??” என்று அருள் கேட்க. “மாமா நிஜமாவே அக்கா உயிரோட தான் இருக்காங்களா!!??” என்றாள் உடல் நடுங்க. 
அருள் “இல்லை” என தலையாட்ட, வசு புரியமல் “என்ன மாமா இது… அக்காவும் இல்லை, ஆனா… எனக்கு சந்தர்ப்பம் இருக்குன்னு சொல்லுறீங்க எனக்கு புரியலை!!”
அருள் வசுமதியை பார்த்தவன் “அண்ணி இல்லை. ஆனா… அவ அண்ணனுக்காக ஒரு உறவ விட்டுட்டு தான் போயிருக்காங்க” என்றதும் வசுமதியின் இதயம் நிஜமாகவே நின்று தான் போனது சில வினாடிகளுக்கு.
“என்ன மாமா சொல்லுறீங்க??” என்றவள் சண்முகம் விளையாடுவதை பார்க்க அவன் அங்கிருந்து அழைத்தான் இருவரையும்.  அருள் “அப்பறம் வர்றேம்” என்றவன் “அண்ணி குழந்தை பிறத பிறகு தான் செத்தாங்க” என்று அன்றிலிருந்து இன்று வரை நடந்த அனைத்தையும் சொல்ல, வசுமதிக்கு அய்யாவுவை நினைத்து ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
“இப்படி ஒருத்தன் கூடவா நான் பொறந்து இருக்கேன். ஒன்னும் தெரியாத அந்த அப்பாவிய கொல்ல அவனுக்கு எப்படி மனசு வந்தது.”
“நிச்சயம் அவன் மனுசனே இல்லை!! எப்படி நீங்க இதை எல்லாம் தெரிஞ்சும் சும்மா இருக்கீங்க??  அவனை  அப்படியே ஓட விட்டு சுட்டு தள்ளனும். இல்ல நானே என் கையால அவன கொல்லனும்!! அது தான் அவனுக்கு சரியான தண்டனை…”
“எனக்காக தான அந்த அப்பாவிய கொன்னான். அப்ப நான் தான் அவனுக்கு தண்டனை தரணும்…” என வேக வேகமாக பேச, “வசுமதி என்ன இது… இப்ப அவனுக்கு தண்டனை தந்து நீ என்ன சாதிக்க போற??” 
“என்ன மாமா நீங்க பேசுறீங்க?? தப்பு செஞ்ச அவன் ஊருக்குள்ள நட மாடுறான், எதுவும் தெரியதா அப்பாவிங்க தண்டனை அனுபவிக்கனுமா??”
“நான் அப்படி சொல்லலை வசு. நீ சொல்லுறது மனசாட்சிக்கு சரி. ஆனா…. சட்டத்துக்கு சாட்சி வேணும்!! அது இல்லாம ஒன்னும் செய்ய முடியாது!! ஆனா.. நீ நினைச்சா செய்யலாம்!!” 
வசுமதி அருளை பார்க்க… 
“ரேஸ்மாவுக்கு அம்மாவா இருப்பியா??” கேட்டான் அவளிடம்.
அருளை பார்த்தவள் கண்களில் அத்தனை வலி “மாமா என்ன சொல்லுறீங்க!! நானா நான் அந்த கொலைகாரனேட தங்கச்சி??”
“ஹூஹூம் சண்முகத்தோட பொண்டாட்டி. அந்த உரிமையில தான் கேக்குறேன். நீ அவளுக்கு அம்மாவா இருப்பியா??  இதை எல்லாம் சொல்லாம நான் அவளை உன்கிட்ட விட்டு இருக்கலாம். ஆனா… அவளை பத்தின எல்லா விசயமும்  அண்ணனை விட உனக்கு தான் தெரிஞ்சு இருக்கனும்!!” 

Advertisement