Advertisement

                  ஓம் நமச்சிவாய
அத்தியாயம் 12
சிவநாதன் மதுரத்தின் மகன் சண்முகம். செல்விக்கு அடுத்து பிறந்தவன்.  அவனுக்கு அடுத்தவள் தான்  தங்கம்.
சண்முகம் கல்லூரி முடித்து மேற்படிப்பு படிக்க சென்ற இடத்தில் சந்தித்தவர் தான் ஜோதி. வடநாட்டு பெண் வீட்டு வேலைக்காக பாட்டியுடன் வந்து இருந்தார்.
பார்க்க நல்ல அழகான பெண் மிகவும் வெகுளியும் கூட. சண்முகம் தங்கி இருந்த இடத்திற்கு பக்கத்தில் இருந்த சேரியில் தான் இருந்தனர் பாட்டியும் பேத்தியும். 
ஜோதியின் பாட்டி இங்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் நன்கு தமிழ் பேசுவார். ஆனால்… ஜோதி இங்கு வந்து சில மாதங்கள் தான் அதனால் பாஷை தெரியாது, சொன்னாலும் புரியாது அதனால் அனைத்தும் கை சைகையே. 
சண்முகம் இருந்த வீட்டினில் பாத்திரம் கழுவி வீட்டை கூட்டி துடைப்பது தான் பாட்டியின் வேலை. இன்று அவருக்கு உடல் நிலை சரியில்லாததால் ஜோதியை   அனுப்பி வைத்திருந்தார் அவர். 
வழக்கமாக  சண்முகம் சென்ற பிறகே வீட்டிற்கு வந்து வேலை செய்வது வழக்கம். வீட்டின் சாவி பக்கத்து வீட்டில் இருக்கும் அவர் வாங்கி வேலையை முடித்து பின் அவர்களிடமே கொடுத்து செல்வார். நம்பிக்கை மிகுதியால் இது வழக்கமே அங்கு. 
ஜோதி வந்தவர், அவர்களிடம் சாவி கேட்க சண்முகம் வீட்டில் இருப்பதால் அங்கேயே போக சொல்ல உள்ளே வந்தவர் பார்த்தது வேட்டி துண்டுடன் ஹாலில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்த சண்முகத்தை தான். 
ஜோதி வரவும் சண்முகத்துக்கு ஜோதியை யார் என்று தெரியவில்லை. “யாரும்மா நீ??” என்று கேட்க  அது ஜோதிக்கு புரியவில்லை. சண்முகத்தையே பார்த்து இருக்க மீண்டும் “யார்ம்மா நீ என்ன வேணும்??” என கேட்டார். 
ஒரு வார்த்தையே புரியாத நிலையில் அவர் இத்தனை வார்த்தை பேச அவளுக்கு சுத்தமாக புரியவில்லை. 
அவர் கேட்டும் பதில் சொல்லாமல் ஜோதி அவரையே பார்த்து இருக்க கோபம் தான் வந்தது சண்முகத்துக்கு. “கேக்குறேன் பதில் சொல்லாம முகத்தை பாத்த என்ன அர்த்தம் சொல்லு யார் நீ?? எதுக்கு வந்து இருக்குற??” என்று கத்த ஜோதிக்கு கண்களில் இருந்து கண்ணீர் வர ஆரம்பித்து.
சண்முகத்தின் குரல் கட்டை குரல். அவர் சாதாரணமாக பேசினாலேயே கத்துவது போல தான் இருக்கும் இப்போது நிஜமாகவே கத்தி பேச, பயந்து போனால் ஜோதி. பாஷையும் தெரியாமல், அவன் சொல்வதும் புரியாமல், அதற்கு எப்படி பதில் செல்வது என தெரியாமல் அழுது கொண்டு இருந்தவருக்கு துணைக்கு வந்தார் சண்முகம் சாவி கொடுத்து சொல்லும் வீட்டுகாரர்.
“என்ன சண்முகம் என்ன சத்தம் இங்க??” என்ற படி
“யாருன்னே தெரியலையக்கா?? வீட்டுகுள்ள நின்னுட்டு இருக்கு கேட்டா பதிலும் சொல்ல மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்குது” என்றதும் அவர் சிரித்து விட்டார். “என்னக்கா!!” என்றார் சண்முகம்.
“ஐய்யோ சண்முகம்…. அது நம்ம வேலைகாரம்மா பேத்தி. அதுக்கு நம்ம பாஷை தெரியாது!! நமக்கு ஹிந்தி தெரியாது!! அதனால அபிநயம் மட்டும் தான்” என்றவர், அவளுக்கு, அவன் யார்… அவள் என்ன செய்ய வேண்டும் என்பதை சைகையில் சொல்லி செல்ல அவர் சொன்ன அனைத்தையும் செய்து முடித்தாள் ஜோதி. 
அடுத்த ஒரு வாரமும் அவளே வர சண்முகம் தான் இல்லை வீட்டில். கல்லூரியில் இருந்து திரும்பி வரும் சண்முகத்துக்கு வீடு முழுதும் ஜோதியின் வாசனை தான். இரண்டு நாட்களில் வீட்டை அப்படியே மாற்றி வைத்து இருந்தாள் ஜோதி.
“பாட்டி செய்றதுக்கும் பேத்தி செய்றதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கே!!” என அவளை பற்றியே நினைக்க வைத்தாள் அவள். அவள் வரும் நேரம் அவன் இருக்க மாட்டான். ஆனால்….. அவன் இருக்கும் நேரங்களில் அவள் வந்தாள் அவள் கவனம் முழுதும் அவன் கையில் வைத்து இருக்கும் புத்தகத்தின் மீதே இருக்கும். 
அதை ஒரு நாள் கவனித்து சண்முகம் கேட்க,  சைகையில் கேட்டாள் “அது என்ன புத்தகம்??” என்று. 
அவன் “அதை பற்றி சொல்ல ஆரம்பிக்க” அதன் பின் அவர்களின் பேச்சும் சைகையும் தொடர, எங்கு சண்முகம் அவளின் வசம் ஆனார் என்பதே அவருக்கு தெரியவில்லை!! 
ஜோதிதான் வாழ்க்கை என்று ஆசையுடன் ஊருக்கு அழைத்து சொல்ல அங்கு வந்தது எல்லாம் எதிர்ப்பு மட்டுமே.  ரங்கனும் பேச்சியும் தான் சண்முகத்துக்கு ஆதரவாக பேசினார்கள். 
“இது அவன் வாழ்க்கை…. அவனுக்கு அந்த பொண்ணு புடிச்சி இருக்குனா கட்டி வைக்குறதுல என்ன இருக்கு?? நாம பாக்குற பொண்ணா இருந்தாலும் அவனுக்கு புடிச்சா மட்டும் தான முடிப்போம். அதனால…. அவனுக்கு அந்த பொண்ணையே கட்டி வைக்கலாம்”  என ரங்கன் சொல்ல அனைவரும் ஒத்துக்கொண்டனர்.
தங்கத்தின் கணவன் அய்யாவுக்கு மட்டும் தான் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை.  அய்யாவுக்கு ஜோதியை  கண்டதில் இருந்தே பிடிக்கவில்லை.  தன் தங்கை வசுமதியை சண்முகத்துக்கு முடிக்க நினைத்து இருக்க, ஜோதியை சண்முகம் அழைத்து வந்தது அப்படி ஒரு கோபம் அவருக்கு. 
அதுவும் இல்லாமல் அவர் கட்சியிலும் இருந்ததால் சாதி பிரச்சனை என்பதும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது. 
தங்கத்தை வீட்டுக்கு அனுப்பி விடுவதாக மிரட்டியும் சண்முகம் அதை கண்டு கொள்ள வில்லை. அதில் இன்னும் ஆத்திரம் தலைக்கு ஏற சரியான நேரத்திற்காக காத்திருந்தார் அய்யாவு.
 
திருமணம் முடிந்த பின் சிவநாதன் தங்கத்திற்காக சண்முகத்தை வீட்டில் சேர்க்க மறுக்க,  ரங்கன் தான் தன் உடனே வைத்துக்கொண்டார். சிவநாதன் சொன்னதற்கும் “அவன் எனக்கும் புள்ளை தான் நீ போ… நான் பாத்துகுறேன்” என்று விட்டார்.
அங்கு வந்த சில நாட்களிலேயே ஜோதிக்கு புரிந்துவிட்டது ரங்கனும் பேச்சியும் தான் தனக்கு எல்லாம் என்று. ஜோதியின் வெகுளித்தனம் அங்கு இருந்தவர்களை வசியப்படுத்த, ஜோதிக்கு பல காலம் வாழ்ந்த உணர்வு அந்த வீட்டில். அருள், கரிகாலனின் அண்ணி என்ற அழைப்பு, செல்வியின் பாசம் என தன் உலகம் என்ற கூட்டுக்குள் அடைந்து கொண்டார்.  
ஜோதி வந்ததில் இருந்து வீட்டை விட்டு எங்கும் போனது இல்லை. யாரையும் தெரியாது என்பதை விட அய்யாவுவின் மேல் இருந்த சந்தேகத்தால் அவளை எங்கும் அனுப்பவில்லை ரங்கன். 
அன்று விவசாய மாநாடு என்று அவர் வெளியூர் போக, பேச்சி தான் சண்முகத்தை ஜோதியை அழைத்து கொண்டு கோவிலுக்கு போக சொன்னார். அவரின் நம்பிக்கை சண்முகம் இருக்கும் போது என்ன நடந்து விடும் என்பது.
சாமி தரிசனம் முடிந்து திரும்பும் வழியில் சண்முகத்தின் கல்லூரி கால நட்புகள் கிடைக்க அவர்களுடன் பேசியதில் ஜோதியை கவனிக்கவில்லை சண்முகம்.
பேச்சு முடிந்து பார்க்க ஜோதி அங்கு இல்லை. வீட்டிற்கு சென்று இருப்பார் என்று இங்கு வந்தாலும் இல்லை.  ஊர் முழுதும் தேடியும் கிடைக்கவில்லை ஜோதி. 
“நான் தான் சொன்னோன் நீங்க யாரும் நம்மபளை. யாரோ?? எவரோ?? ஊர் பேர் தெரியாதவளை வீட்டுக்குள்ள விட்டு இப்ப இருந்த அத்தனை நகையையும் எடுத்துகிட்டு ஓடிட்ட… எப்படா நேரம் கிடைக்கும்ன்னு பார்த்து இருந்த இதோ இப்ப கிடைச்சது ஓடிட்டா??” என்று அய்யாவு வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத அளவு திட்ட,  சண்முகத்தால் அவரை அடக்கவே முடியவில்லை.
வீடு இப்படி பரபரப்பாக இருக்க ரங்கன் அப்போது தான் வந்தார். வரும் போதே முகம் இறுக்கமாக இருக்க நடந்தது அவருக்கு தெரிந்து விட்டது என்று யாரும் அவரிடம் பேசவில்லை. 
அய்யாவு பேச்சை ஆரம்பிக்க “மாப்பிள்ளை நடந்து முடிஞ்ச எதை பத்தியும் இந்த வீட்டுல யாரும் பேச கூடாது” என்ற தொனி இதுவரை யாரும் கேட்டு இருந்தது இல்லை. 
அவரின் சத்தத்தில் அய்யாவு முனுமுனுத்து கொண்டே தங்கத்தை அழைத்து கொண்டு போய்விட்டார். 
சண்முகத்தை தூங்கவைத்து விட்டு பேச்சி ரங்கனிடம் போக, விட்டத்தை பார்த்து அமர்ந்து இருந்தார் அவர். 
பேச்சி “என்னங்க” என்று அழைக்க,  நடந்த அனைத்தையும் சொல்லி விட்டார் ரங்கன் பேச்சியிடம். 
சண்முகம் நண்பர்களுடன் பேசிகொண்டு இருக்க ஜோதி வேடிக்கை பார்த்த படியே வயலில் இறங்கிவிட்டார். நடந்து கொஞ்ச தூரம் வந்தவருக்கு திரும்பி போக வழி தெரியவில்லை!! மாலை நேரம் ஆனதால் வேலை செய்பவர்களும் அங்கு இல்லை.
அவர் தனியாக வரும் நேரத்துக்காக காத்து இருந்த அய்யாவு, இதுதான் சமயம் என்று தூக்கிவிட்டார் ஜோதியை ஆட்கள் வைத்து. 
மலைக்கு கீழே ஊர் என்பதால் மலைக்கு போக அங்கு இருந்து குறுக்கு வழிகள் உண்டு. மலைவாழ் மக்கள் வந்து செல்ல பயன் படுத்தும் பாதை அது. நன்கு தெரிந்தவர்கள் மட்டுமே போய் வர முடியும். 
அதனால் ஜோதியை அவர்கள் அங்கு கொண்டு சென்றது யாருக்கும் தெரியவில்லை. ஜோதியை கொண்டு சென்றவர்கள் மலை மேல் இருந்து உருட்டிவிட அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தார் ஜோதி.
இரவு நேரத்தில் சரியாக தெரியாததால் அவர் உருண்டு விட்டதாக வந்தவர்கள் சென்று விட, பள்ளத்தில் இருந்து எழுந்தவர் எப்படியே தடுமாறி  சாலைக்கு வர அப்போது தான் ரங்கன் மாநாட்டில் இருந்து திரும்பி வந்து கொண்டு இருந்தார்.
யாரோ பெண் கீழே விழுந்து இருப்பதாக நினைத்து அவர் பக்கத்தில் போக அங்கு இருந்தது ஜோதி. பதறி போனவர் பக்கத்தில் இருந்த ஆஸ்பத்திரியில் சேர்க்க, நடந்ததை எப்படி சொல்ல என ஜோதிக்கு தெரியவில்லை!! 
அங்கு இருந்த ஹிந்தி தெரிந்த ஒருவர் மூலம் நடந்தது தெரியவர அழைத்துவிட்டார் ரங்கன் சோமசுந்தரத்தை.
அதற்குள் ஜோதியின் சிகிச்சை ஆரம்பிக்க, அப்போது தான் தெரிந்தது அவர் கர்பமாய் இருப்பது. பின் தலையில் அடிபட்டு இருப்பதால் மேல் சிகிச்சைக்காக அவரை மதுரைக்கு அனுப்பி வைத்தனர். 
ரங்கன்,  சுந்தரத்திடம் இது பற்றி யாருக்கும் இப்போது தெரியவேண்டாம்  என்றும், சுந்தரத்தை ஜோதியுடன் மதுரைக்கு போகசொல்லி வீடு வந்தவர் பேச்சியிடம்  கேட்டார் “இப்ப என்ன செய்யுறது பேச்சி??”
“அந்த புள்ள இங்கன்னு இல்லை எங்க இருந்தாலும் கண்ணம் வைச்சு இருப்பான் அய்யாவு. என்ன பண்ண!! தங்கத்தோட வாழ்க்கையையும் பாக்கனும் இல்லை. ரெண்டு பசங்களுக்கு அப்பன் கொலைகாரன்னு தெரிஞ்ச என்ன ஆகுறது??”
“அதுக்குன்னு விட முடியுமாங்க?? அவ நம்ம வீட்டுக்கு வாழ வந்த பொண்ணுங்க. நம்மல நம்பி வந்த பொண்ணு. இதே தங்கத்துக்கோ, செல்விக்கோ இப்படி நடந்து இருந்த சும்மா இருப்போமா??” என்று கேட்க ரங்கனிடம் பதில் இல்லை. இரு பெண்கள் சம்பந்த பட்டது அவசர முடிவுகள் எடுக்க முடியாததால் சிறிது நேரம்  அமைதியாக இருந்தார்.
“பேச்சி நாளைக்கு மதுரைக்கு போயிட்டு டாக்டர் என்ன செல்லுறாருன்னு கேட்டு முடிவு செய்யலாம். சுந்தரத்தையும் அங்கன பாத்துக்க சொல்லி இருக்குறேன். மொத பஸ்சுக்கு போகனும்” என்றவர் கண்மூடினார்.
காலையில் ரங்கனும் பேச்சியும் மதுரைக்கு  போக, அங்கு ஜோதியின் நினைவு தப்பி போய் இருந்தது. டாக்டர்கள் “கோமா நிலை” என்று சொல்ல “நினைவு திரும்புமா??” என்று கேட்டதற்கும் “தெரியவில்லை” என்று விட்டனர்.
“இப்ப என்ன மாமா செய்ய?? அய்யாவு மேல கேஸ் போடவா??” என சுந்தரம் கேட்டதற்கு “வேண்டாம்” என்று விட்டார் ரங்கன். 
“ஏன் மாமா??”
“போலீசு நீயே இப்படி கேட்டா… என்ன சொல்ல?? என்ன ஆதாரம் இருக்கு நம்ம கிட்ட?? தூக்குன பசங்கள கழுத்தறுத்தாலும்  வாய் தொறக்க மாட்டானுங்க… வழக்கு போட்டு அது நிருபணம் ஆகலையின்னா தங்கம் வாழ்க்கை என்ன ஆகும் சொல்லு??”
“நம்ம பொண்ணு வாழ்கையையும் பாக்கனும் சுந்தரம். இப்ப மருமக இருக்குற நிலையில முதல்ல அவ மீண்டு வர்றத மட்டும் பாப்போம். அது வரைக்கு விசயம் வெளிய தெரிய வேணாம். அவ வந்ததுக்கு அப்பறம் தான் மத்த பேச்சு” 
“அப்ப சண்முகத்துக்கு மாமா??” சுந்தரம் கேட்க, “அவனுக்கும் அதே தான்” என்று விட்டார் ரங்கன். 
ஆனால்… விதி ஜோதியின் நினைவு திரும்பாமலே பிரசவத்தில் உயிர் பிரிந்து விட்டது. அழகானா பெண் குழந்தை. அப்படியே ஜோதியை போல். ரங்கனுக்கும் பேச்சிக்கு பேத்தியை பார்க்க அப்படி இருந்தது. அவளுக்கு நியாம் செய்யவில்லை என்ற உறுத்தலில்.!!!
பேச்சி குழந்தையை வாங்கியவர் அப்படியே அமர்ந்துவிட்டார்.  சிறிய முத்து முகம் கெள்ளை அழகோடு செப்பு வாய் திறந்து மூட “எப்படி இத விட்டு போக உனக்கு மனசு வந்தது?? இருக்குறவங்க பாத்துப்பாங்க அப்படின்னு போயிட்டியா!!” என்று குழந்தைக்கு பால் தர,  உடல் முறுக்கி அது சப்பு கொட்டிய அழகில் அவருக்கு அழுகை தாங்க முடியவில்லை”
ஜோதிக்கு மட்டும் நினைவு திரும்பி இருந்தால் ரங்கன் ஒரு வழி செய்து இருப்பார் அய்யாவுவை. ஆனால்…. நிலைமை இப்படி இருக்க அவரால் தன் குடும்ப வாரிசை காப்பாற்ற மட்டுமே முடிந்தது.
குழந்தையையும் சண்முகத்தையும் பற்றி நினைத்தவர், ஜோதியை செய்தது போல குழந்தையை கொல்ல எத்தனை நேரம்?? அதனால் குழந்தையை அருணாச்சலத்திடம் கொடுத்துவிட்டார்.  
சண்முகத்தை பொருத்தவரை ஜோதி எங்கோ காணாமல் போய்விட்டார்!! அது அப்படியே இருக்கட்டும் என்று விட்டார். இந்த எட்டு மாத்தில் இப்போது தான் சற்று தெளிந்து இருக்கிறார் சண்முகம். இனி அவர் வாழ்க்கையையும் பார்க்க வேண்டும் என்பதற்காவே ரங்கன் இதை செய்தார். 
மீண்டும்  சண்முகத்தின் திருமணப்பேச்சை வீட்டில் எடுக்க ஒரேடியாக மறுத்துவிட்டார் சண்முகம். “எனக்கு என் ஜோதிய பத்தி நல்லா தெரியும் அவ எங்கையோ இருக்கா நிச்சயம் என்னைய தேடி வருவா” என்று விட்டார். 
அய்யாவுக்கு தான்  அப்படி இருந்தது. “பாத்தீங்களா மாமா… அவன் பேசுறதை ஓடி போனவளுக்காக இவன் இங்க தவம் கிட்டப்பானாமா??” என்று ஆரம்பிக்க, “மாப்பிள்ளை இது எங்க வீட்டு விசயம்” என்று நாசூக்காக முடித்தார் ரங்கன்.
அய்யாவு உள்ளுக்குள் கருவிக்கொண்டார் ‘என்ன உங்க வீட்டு விசயமா?? பாத்துட்டே இருங்க எப்படி என் தங்கச்சிய இந்த வீட்டு மருமகள் ஆக்குறேன்னு.’
உறவினர் திருமணத்திற்கு அனைவரும் சென்று இருக்க, தங்கம் தான் ஓடிவந்தார் ரங்கன் வீட்டிற்கு. 
சண்முகம் பார்த்தவர் “என்ன தங்கம் எதுக்கு இப்படி ஓடி வர்ற!!” 
“அண்ணே” என்று அழுதவர் “வசுமதி பேச்சு மூச்சு இல்லாம இருக்குறாண்ணே” என்று சொல்ல, அடித்து பிடித்துக்கொண்டு ஓடினார் தங்கத்தின் வீட்டுக்கு. ஊரே கூடி நிற்க அய்யாவு தான் “உள்ள வராதடா” என்றார் சண்முகத்தை பார்த்து.
சண்முகம் அதிர்ந்து போய் நிற்க “உன்னால தான் என் தங்கச்சி இன்னிக்கு இப்படி இருக்கா… அவ சாகட்டும்… உன்னைய நினைச்சத தவிற வேற என்னடா பாவம் செஞ்சா??” என்று பேச சண்முகமும் தங்கமும்  விக்கித்து போய் நின்றார்.
“என்ன வசுமதி என்னைய விரும்புனாளா??” என்று சண்முகம் நின்று இருந்தார்.
தங்கமோ, வசுமதிக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை. அவர் சண்முகத்தை எப்போதும் அப்படி பார்த்தோ இல்லை என்பது  நன்கு தெரியும். தங்கம் ஏதோ சொல்ல வர,
“பேசாதடி நீ…. அப்படியே போயிடு உங்க அண்ணன் கூட” என்று அவர் வாயை அடைத்தவர் அங்கு இருந்த யாரையும் பேச விடவில்லை. 
ஊரார் அனைவரும் சண்முகத்தை குற்றவாளி போல் பேச,  அவருக்கு மிகவும் தர்மசங்கடமான நிலை. அவர் சார்பாக பேச யாரும் இல்லை ரங்கனோ பேச்சியோ இருந்து இருந்தால் நிலைமை விபரீதம் ஆகாமல் இருந்து இருக்கும். இப்போது கையறு நிலை சண்முகத்துக்கு.
ஊரார் அய்யாவிடம் “அய்யாவு அந்த புள்ளை பொழைக்கனும் வழி விடு ஆஸ்பத்திரியில சேத்துட்டு அப்பறம் உங்க பஞ்சாயத்தை பாக்கலாம்” என்றனர்.
“முடியாது அவ பொழச்சி என்ன பண்ண போற?? திரும்பவும் அவ இந்த முடிவுக்கு தான் போவா” 
“அதை நீயா எப்படிப்பா சொல்ல முடியும்??” ஊரார் கேட்க.,
“நா சொல்லாமா… யாருய்யா சொல்வா?? இத்தனை நாள் நான் தான அவளை பாதுகாத்து வச்சு இருக்கேன் எனக்கு தெரியாதா?? திரும்பி வந்து அவ சாகுறதுக்கு அவ இப்பயே சாகட்டும்” என்று விட்டார். 
“சரிப்பா இப்ப அவ பொழைக்க என்ன வழி??” என்று கேட்க. 
“என்னைய கேட்டா?? அதே நிக்குறாறே அவறை கேளுங்க…” என்று சண்முகத்தை நோக்கி கை நீட்டினார் அய்யாவு.
ஊரார் அனைவரும் சண்முகத்தை பார்க்க, அவருக்கு தோன்றியது இது மட்டும் தான். தன்னால் ஒரு உயிர் போக கூடாது அவ்வளவே!! அதற்கு எதையும் செய்யும் நிலையில் இருந்தார் அவர். 
“நான் என்ன செய்ய??” என்று அவர் அய்யாவுவை கேட்க, 
“என் தங்கச்சி கழுத்துல தாலி கட்டு!!” என்று அனைவரின் முன்னாலும் தாலி கட்ட வைத்து விட்டார் அய்யாவு…………..

Advertisement